Tuesday, November 21, 2006

வலைப்பதிவாளர்கள் சந்திப்பு-ஒரு பார்வை

சென்னையில் கடந்த ஞாயிறு அன்று நடந்த தமிழ் வலைப்பதிவாளர்கள் சந்திப்பு சில விளைவுகளை உருவாக்கியிருக்கிறது. நியூட்டனின் இயக்கவியல் விதியின் படி இந்த சந்திப்பில் பல நல்ல விடயங்களும், சில எதிர்விளைவுகளும் எழுந்திருக்கிறது. வழக்கமான சந்திப்புகளிலிருந்து இந்த முறை முக்கியத்துவம் பெற பல காரணங்கள் அமைந்திருக்கிறது.

அருமையாக நடந்து முடிந்திருக்கிற வலைப்பதிவாளர் சந்திப்பில் சில முக்கியமான விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை.

  1. இரு குழுக்களாக கூடி வந்த பதிவாளர்கள், ஒரே இடத்தில் கூடிய முதல் நிகழ்வு இந்த சந்திப்பு. இயல்பாகவே இருந்தாலும் 'எல்லோரும்' இணைந்த கூடல் என்பது இதுவே முதல் முறை. முதல் முறையாக ஒருவரை ஒருவர் அறிய, சந்தேகங்கள், அச்சங்கள் விலக வாய்ப்புகளை உருவாக்கி தந்திருக்கிறது. Dialogue is the basis for understanding!
  2. தமிழீழ மக்களின் அவலங்கள் மற்றும் பிற பிரச்சனைகள் பற்றி பேச, அறிய வாய்ப்பை தந்திருக்கிறது இந்த பொது ஒன்றுகூடல். இதுவரை வலைப்பூவில் சந்தித்து வருகிற ஒரு 'குறிப்பிட்ட' பிரச்சனையை பற்றி அதிகமாக பேசப்பட்டு வந்த ஒரு தளம், மக்கள் பிரச்சனைகளை பேச ஆரம்பித்திருப்பது நல்ல வளர்ச்சி.
  3. தமிழ் வலைப்பதிவாளர்கள் அமைப்பு உருக்குதல் பற்றி ஏற்கனவே இருந்த வாதங்களை இன்னும் சிந்திக்க தூண்டியிருக்கிறது.
  4. ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ள, நட்பை இன்னும் உறுதியாக்க, புரிந்து கொள்ளவும் உதவியிருக்கலாம்.
  5. தொழில்நுட்ப உதவிக்காக என பதிவாளர்கள் இணைந்து குழுவை உருவாக்கி இருப்பது, புதிய பதிவாளர்களுக்கு வழிக்காட்ட கையேடு என நல்ல பல முயற்சிகளின் உருவாக்கம்.

இப்படியான நல்ல விடயங்களிலிருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்வது இன்றைய காலத்தின் தேவை. தமிழ் வலைப்பூ பதிவுகள் தரமுள்ள பதிவுகளாக சமூக அக்கறையுடன் வளர இந்த சந்திப்புகளின் வடிவங்களும், முறைகளும் உதவுவது அவசியம்.

தமிழீழ நாட்டின் வலைப்பதிவாளர் அகிலன் அவர்கள் தமிழீழ மக்களின் அவலங்களை சந்திப்பில் உணர்வு பொங்க பகிர்ந்திருக்கிறார். அகிலன் வழியாக அந்த மக்களின் துயரத்தை தெரிந்துகொண்ட பின்னர் வலைப்பூக்களில் என்ன விளைவு ஏற்பட்டது? அந்த மக்களின் பிரச்சனை பற்றிய விவாதங்களை எழுப்ப, அதற்கான செயலில் ஈடுபட வலைப்பதிவாளர்கள் கவனம் செலுத்துகிறோமா?

அதற்கு பதிலாக சந்திப்பு தொடர்பாக/பின்னர் சில விளைவுகள் வலைப்பதிவாளர்களை ஆக்கிரமித்து வைத்திருக்கிறது.

சந்திப்பு நடந்து கொண்டிருந்த போதே அதன் படங்கள்"இட்லிவடை" பதிவில் வெளியாகியிருந்தது. அனுமதியின்றி வெளியிடப்பட்ட இந்த படங்கள் குழப்பத்தை உருவாக்கியது. எதிர்ப்பின் பின்னர் அந்த படங்கள் நீக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட படங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.

அடுத்ததாக படம் எடுக்க தயங்கியவர்களது கருத்தின் நேர்மை பற்றி ஜயராமன் என்கிற பதிவர் தனது பின்னூட்டம் வழி எழுப்பிய கேள்வி அடுத்த பிரச்சனையை உருவாக்கியிருக்கிறது. ஜயராமனும் தனது போட்டோவை 21, நவம்பரில் தான் பதிந்திருக்கிறார் என்பதை கவனத்தில் கொள்வது அவசியம். இது பற்றி பாலபாரதியின் பதிவில் விவாதம் தொடர்கிறது.

இந்த பிரச்சனைகளால் எடுக்கப்பட்ட நல்ல முயற்சிகள் சிதைந்துவிடக்கூடாது. வலைப்பதிவாளர்கள் சந்திப்புகளில் கலந்து கொண்டவர்கள் இவற்றை கவனத்தில் கொள்வது அவசியம்.

வருங்கால சந்திப்புகளில் கவனிக்கப்பட சில விடயங்கள்:

கலந்துரையாடலை நெறிப்படுத்த யாராவது முனைந்தார்களா என தெரியவில்லை. வலைப்பூவில் சாதீயம் பற்றிய கட்டுரையை பாலா படிக்கிற வேளை கதம்பமாக அனைவரும் உரையாடியதாக தெரிகிறது. இப்படிப்பட்ட கூட்டங்களுக்கு நெறியாளர் (moderator) ஒருவர் இருப்பது நல்லது. (நமக்கு பிடித்தது இது :)). ஒருவருடைய கருத்துக்களை பேச அனுமதிப்பதும் அதன் பின்னர் சந்தேகங்களை, எதிர்கருத்துக்களை பதிவதும் நல்ல கலந்துரையாடலுக்கு அவசியம். கட்டுரை வாசிப்பவரை வாசிக்க விடாத அளவு தான் நமது கேட்கும் திறனென்றால் வழக்கமான அரசியல் கூத்து நம்மையும் தாக்கியிருக்கிறதன் வெளிப்பாடு இது. இதை முறையாக எதிர்கால வலைப்பதிவாளர்கள் சந்திப்புகளில் அணுகுவது அவசியம்.

கூட்டத்தின் இருக்கை அமைப்பிலும் மாற்றம் அவசியம். பெண் வலைப்பதிவாளர்கள் பின் வரிசையில் இருந்தது படங்களில் பார்க்க முடிந்தது. கூட்ட இருக்கைமுறையை மாற்றி வட்ட வடிவமாக அமைத்திருந்தால் கலந்துரையாடலுக்கு உதவும். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து உரையாட வசதியாக அமையும். இந்த வடிவத்தில் கலந்தூரையாடலாக அமைந்து பார்வையாளர், உரையாளர் என்ற வேறுபாடுகள் இல்லாமல் அமையும்.

பெண் வலைப்பதிவாளர்கள் மட்டும் சந்தித்து பெண்ணியம் பற்றிய கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளும் நிலை உருவாக எதாவது திட்டங்கள் இருக்கிறதா என தெரியவில்லை. :)

பின்குறிப்பு: இது என் பார்வையிலான ஒரு திறனாய்வு! சில விடயங்களை சொல்லாமல் தவிர்த்திருக்கிறேன் என்பதையும் கவனத்தில் கொள்க. இந்த பதிவிற்கு முதலில் வைத்த தலைப்பு "தமிழ் நண்டும், வலைப்பதிவாளர்களும்" :))

38 பின்னூட்டங்கள்:

G.Muthukumar said...

அடுத்த முறை இப்படி ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறும் போது எனக்கும் ஒரு மின்னஞ்சல் இடுங்கள்.. கலந்துகொள்ள ஆர்வமாய் இருக்கிறேன்.. இன்னும் சில நண்பர்களும் உண்டு.

Sivabalan said...

திரு

எனக்கு இன்னும் இது போன்று சந்தித்து உரையாடுவதில் உடன்பாடு எட்டவில்லை. காரனம், நிறைய உள்ளது... ம்ம்ம்ம்..

சில பேர்களை சந்திக்காமல் இருப்பதே மகிழ்ச்சி..

கோவி.கண்ணன் [GK] said...
This comment has been removed by a blog administrator.
கோவி.கண்ணன் [GK] said...

//அருமையாக நடந்து முடிந்திருக்கிற வலைப்பதிவாளர் சந்திப்பில் சில முக்கியமான விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. இரு குழுக்களாக கூடி வந்த பதிவாளர்கள், ஒரே இடத்தில் கூடிய முதல் நிகழ்வு இந்த சந்திப்பு. //

குழுக்களை 'அடையாளம்' காண்பதில் யாரும் சிரமப்பட்டு இருக்க மாட்டார்கள். 'கோடு' (வேர்டு ?) இருந்திருக்குமே !
:)))

Vajra said...

//
ஜயராமனும் தனது போட்டோவை 21, நவம்பரில் தான் பதிந்திருக்கிறார் என்பதை கவனத்தில் கொள்வது அவசியம்.
//

திரு அவர்களே, ஜெயராமன் அவர்கள் ஏற்கனவே தனது போட்டோவை வலைப்பதிவில் ஏற்றியிருந்தார். போலி அந்தப் படத்தைவைத்து மஞ்சள் நாடா கதை எழுதிவைத்தான் என்பதையும் கவனித்தில் கொள்வது அவசியம்.

அப்புறம் அதை அகற்றி புதிய படத்தை ஏற்றியிருக்கலாம் என்பது என் எண்ணம்.

என் நிலையும் அதே, முதலில் படத்துடன் தான் பதித்தேன்.

பின், போலி என் படத்தைவைத்து என்னிடம் பேட்டி கண்டதாக எழுதியிருந்தான், கால்கரிசிவா அவர்களுக்கும் அதே போல் பேட்டி கண்டதாக எழுதியிருந்தான்.

இது போல் தனி நபர் abuse செய்பவர்களை வைத்திருந்தால் படத்தைப் போட முடியாது.

We The People said...

//இந்த பிரச்சனைகளால் எடுக்கப்பட்ட நல்ல முயற்சிகள் சிதைந்துவிடக்கூடாது.//

இதே கவலை தான் எனக்கு இப்போது :(

அடுத்தமுறை இன்னும் Organisedஆக செய்யவேண்டும் என்று மட்டும் உணர்கிறேன். உங்கள் கருந்துக்கள் அந்த சமயத்தில் நிச்சயமாக சொல்லவும் ப்ளீஸ்.

நன்றி திரு.

ஜயராமன் said...

திரு அவர்களே,

அறியாமல் எழுதியிருக்கிறீர்கள்.

நான் இணையத்தில் வந்த நாள் முதல் போட்டோ இருக்கிறது.

நான் கலந்துகொள்ளும் எல்லா சந்திப்புகளிலும் நானே கேமராவை தூக்கிக்கொண்டு படமெடுத்து அதை வலைகளில் போட்டுத்தந்தேன்.

உன் போட்டோவில என்ன கோட்டும் சூட்டும் என்று இங்கு நன்கு அறிமுகமானவர்களே என்னை கேலி பேசினார்கள். பின்னூட்டங்கள் இன்னும் இருக்கின்றன.

அதனால், ஏதோ ஒரு உந்தலில் நான் பழைய படத்தை எடுத்து புதிதாக பதிய பார்த்தேன். சொதப்பி விட்டது.

ஆனாலும், என்றும் என் படம் கூகூள் ஆண்டவரிடம் உண்டு.

நான் பெயர், விலாசம் வெளிப்படையாக சொன்னவன். இஸ்லாத்தை விமர்சித்து எழுதியதில் பல மிரட்டல்கள் வந்தன. ஆனால், நான் ஒன்றும் பொருட்படுத்தவில்லை. என்னை வலேயேற்றி ஆபாச பதிவுகளும் வந்ததாக தெரியும்.

இன்று விவகாரம் பெரிதாகி பின்னர் டோண்டு சாரின் நேரடி டெலிபோன் guidance ல் போட்டோ மாற்ற முடிந்தது.

ஆராயாமல் எழுதவேண்டாம்.

நன்றி

sivagnanamji(#16342789) said...

உங்கள் கருத்துடன் உடன் படுகின்றேன்.

டோண்டு, பாலபாரதியின் பதிவுகளுக்கு
நான் இட்ட பின்னூட்டங்களைப் பார்க்கவும்.

நிகழ்ச்சி நன்கு நடைபெற்றது சிலருக்குப் பிடிக்கவில்லையோ என்னவோ!

ஜயராமன் said...

திரு அவர்களே,

////

அடுத்ததாக படம் எடுக்க தயங்கியவர்களது கருத்தின் நேர்மை பற்றி ஜயராமன் என்கிற பதிவர் தனது பின்னூட்டம் வழி எழுப்பிய கேள்வி ////

படம் போட்டுக்கொள்வதோ இல்லையோ பிரச்சனையில்லை. இதை ஏற்கனவே நான் பாலபாரதி பதிவில் தெளிவுபடுத்தியிருக்கிறேன்.

போட்டோ போட வேண்டும் என்று ஜயராமன் சொன்னான் என்று சொல்லி என் கருத்தை கொச்சைப்படுத்தி அதை நிராகரிக்க எளிதாக்கவேண்டாம்.

தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு - புனைப்பெயராக இருந்தால் நிஜப்பெயரை சொல்லிக்கொண்டு - பதிவிடுவதே சிறந்தது என்பதே என் கருத்து.

நன்றி

நாமக்கல் சிபி said...

//தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு - புனைப்பெயராக இருந்தால் நிஜப்பெயரை சொல்லிக்கொண்டு - பதிவிடுவதே சிறந்தது என்பதே என் கருத்து.
//

ஜயராமன் அவர்களே!
புனைப்பெயர்களாகவே இருந்தால்தான் என்ன கெட்டுவிட்டது? எவருக்கும் தொல்லை தராவண்ணம், தனக்குத் தோன்றியதை எழுதினோமா, இன்னபிற பதிவுகளை வாசித்தோமா, தமது கருத்துக்களை சொன்னோமா என்று இருப்பவர்கள் சொந்தப் பெயரில் எழுதினால் என்ன? புனைப் பெயரில் எழுதினால் என்ன?

நிஜப்பெயரை தெரிந்துகொண்டு (அப்படி) என்ன(தான்) செய்யப்போகிறீர்கள்?

நாமக்கல் சிபி said...

//தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு - புனைப்பெயராக இருந்தால் நிஜப்பெயரை சொல்லிக்கொண்டு - பதிவிடுவதே சிறந்தது என்பதே என் கருத்து.
//

மாயவரத்தான், முகமூடி, போன்றோரல்லாம் உண்மைப்பெயரை சொல்லிவிட்டா எழுதிக் கொண்டிருக்கின்றனர்.

அவரவர்களுக்குத் தெரியும் யாராரிடம் நிஜப்பெயரை வெளிப்படுத்தலாம், யாராரிடம் வெளிப்படுத்தத் தேவையில்லை என்று! அது அவரவர் விருப்பமும் கூட!

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

அழகான கவனிப்ப்பு! நல்ல பதிவு!!
தங்களின் கருத்தை பதிந்தமைக்கு நன்றி!!!

பொன்ஸ்~~Poorna said...

திரு,
நல்ல பதிவு. :))

திரு said...

// G.Muthukumar said...
அடுத்த முறை இப்படி ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறும் போது எனக்கும் ஒரு மின்னஞ்சல் இடுங்கள்.. கலந்துகொள்ள ஆர்வமாய் இருக்கிறேன்.. இன்னும் சில நண்பர்களும் உண்டு. //

வலைப்பதிவுகளில் அறிவிப்பு வெளிவரும் நண்பரே! கட்டாயமாக கலந்து கொள்ளுங்கள்!

திரு said...

//Sivabalan said...
திரு

எனக்கு இன்னும் இது போன்று சந்தித்து உரையாடுவதில் உடன்பாடு எட்டவில்லை. காரனம், நிறைய உள்ளது... ம்ம்ம்ம்..

சில பேர்களை சந்திக்காமல் இருப்பதே மகிழ்ச்சி..//

:) நானும் இருக்கேனா இந்த சிலரில்? சிக்காகோ வந்து சந்திக்கப்போறேன் :)

திரு said...

//கோவி.கண்ணன் [GK] said...
//அருமையாக நடந்து முடிந்திருக்கிற வலைப்பதிவாளர் சந்திப்பில் சில முக்கியமான விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. இரு குழுக்களாக கூடி வந்த பதிவாளர்கள், ஒரே இடத்தில் கூடிய முதல் நிகழ்வு இந்த சந்திப்பு. //

குழுக்களை 'அடையாளம்' காண்பதில் யாரும் சிரமப்பட்டு இருக்க மாட்டார்கள். 'கோடு' (வேர்டு ?) இருந்திருக்குமே !
:))) //

இதுக்கு எதுக்கு கோடு? வேர்டு? :))

திரு said...

//Vajra said...

திரு அவர்களே, ஜெயராமன் அவர்கள் ஏற்கனவே தனது போட்டோவை வலைப்பதிவில் ஏற்றியிருந்தார். போலி அந்தப் படத்தைவைத்து மஞ்சள் நாடா கதை எழுதிவைத்தான் என்பதையும் கவனித்தில் கொள்வது அவசியம்.

அப்புறம் அதை அகற்றி புதிய படத்தை ஏற்றியிருக்கலாம் என்பது என் எண்ணம்.

என் நிலையும் அதே, முதலில் படத்துடன் தான் பதித்தேன்.

பின், போலி என் படத்தைவைத்து என்னிடம் பேட்டி கண்டதாக எழுதியிருந்தான், கால்கரிசிவா அவர்களுக்கும் அதே போல் பேட்டி கண்டதாக எழுதியிருந்தான்.

இது போல் தனி நபர் abuse செய்பவர்களை வைத்திருந்தால் படத்தைப் போட முடியாது.//

படத்தை வெளியிட்டு நீங்கள் இருவரும் சந்தித்த 'அனுபவங்கள்' மற்ற வலைப்பதிவாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை உணர்வை தந்திருக்கும் என்பதை நாம் உணர்தல் அவசியம் வஜ்ரா!

திரு said...

// We The People said...
//இந்த பிரச்சனைகளால் எடுக்கப்பட்ட நல்ல முயற்சிகள் சிதைந்துவிடக்கூடாது.//

இதே கவலை தான் எனக்கு இப்போது :(

அடுத்தமுறை இன்னும் Organisedஆக செய்யவேண்டும் என்று மட்டும் உணர்கிறேன். உங்கள் கருந்துக்கள் அந்த சமயத்தில் நிச்சயமாக சொல்லவும் ப்ளீஸ். நன்றி திரு. //

நிச்சயம் சொல்வேன். சமூகத்தின் வளர்ச்சிக்காக எனில் என்னால் இயன்ற பங்களிப்பையும் செய்ய தயார்.

நன்றி நண்பரே!

திரு said...

//ஜயராமன் said...
திரு அவர்களே,

அறியாமல் எழுதியிருக்கிறீர்கள்.

நான் இணையத்தில் வந்த நாள் முதல் போட்டோ இருக்கிறது.

நான் கலந்துகொள்ளும் எல்லா சந்திப்புகளிலும் நானே கேமராவை தூக்கிக்கொண்டு படமெடுத்து அதை வலைகளில் போட்டுத்தந்தேன்.

உன் போட்டோவில என்ன கோட்டும் சூட்டும் என்று இங்கு நன்கு அறிமுகமானவர்களே என்னை கேலி பேசினார்கள். பின்னூட்டங்கள் இன்னும் இருக்கின்றன.

அதனால், ஏதோ ஒரு உந்தலில் நான் பழைய படத்தை எடுத்து புதிதாக பதிய பார்த்தேன். சொதப்பி விட்டது.

ஆனாலும், என்றும் என் படம் கூகூள் ஆண்டவரிடம் உண்டு.

நான் பெயர், விலாசம் வெளிப்படையாக சொன்னவன். இஸ்லாத்தை விமர்சித்து எழுதியதில் பல மிரட்டல்கள் வந்தன. ஆனால், நான் ஒன்றும் பொருட்படுத்தவில்லை. என்னை வலேயேற்றி ஆபாச பதிவுகளும் வந்ததாக தெரியும்.

இன்று விவகாரம் பெரிதாகி பின்னர் டோண்டு சாரின் நேரடி டெலிபோன் guidance ல் போட்டோ மாற்ற முடிந்தது.

ஆராயாமல் எழுதவேண்டாம்.

நன்றி//

விளக்கத்திற்கு நன்றி! பழைய வரலாறு தெரியாதது தவறி தான். சமீப காலங்களில் நான் உங்கள் பதிவை பார்த்து வருகிற போது படத்தை காணவில்லை என்பதை குறிப்பிட்டாக வேண்டும். உங்களுக்கு தனிப்பட்ட விதத்தில் இதனால் பாதிப்பு இருப்பீன் பொறுத்தருள்க!

திரு said...

//sivagnanamji(#16342789) said...
உங்கள் கருத்துடன் உடன் படுகின்றேன்.

டோண்டு, பாலபாரதியின் பதிவுகளுக்கு
நான் இட்ட பின்னூட்டங்களைப் பார்க்கவும்.

நிகழ்ச்சி நன்கு நடைபெற்றது சிலருக்குப் பிடிக்கவில்லையோ என்னவோ!//

உங்கள் பின்னூட்டங்களை படித்தேன் அய்யா!

கல்யாண நிகழ்ச்சிக்கு வற உறவும், ஊரும் பாயாசத்துல 'உப்பு' குறைவு. ஊறுகாயில 'சர்க்கரை' குறைவுன்னு சொல்லுற மாதிரி இத நெனச்சிகிட்டே போகவேண்டியது தான் அய்யா! :)

திரு said...

//ஜயராமன் said...
திரு அவர்களே,

படம் போட்டுக்கொள்வதோ இல்லையோ பிரச்சனையில்லை. இதை ஏற்கனவே நான் பாலபாரதி பதிவில் தெளிவுபடுத்தியிருக்கிறேன்.

போட்டோ போட வேண்டும் என்று ஜயராமன் சொன்னான் என்று சொல்லி என் கருத்தை கொச்சைப்படுத்தி அதை நிராகரிக்க எளிதாக்கவேண்டாம்.//

பிறரது அடையாளங்களை தேடுவது உங்கள் கருத்து எனில் அவற்றை நிராகரிக்கவும், மறுக்கவும், புறந்தள்ளவும் மற்றவர்களுக்கும் உரிமையுண்டு நண்பரே! :)

//தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு - புனைப்பெயராக இருந்தால் நிஜப்பெயரை சொல்லிக்கொண்டு - பதிவிடுவதே சிறந்தது என்பதே என் கருத்து.நன்றி//

நிஜப்பெயரை வெளியிடும் சூழலில் ஒருவர் இருந்தால் எதற்கு புனைபெயரில் எழுதுவார்? பெயரில் அல்ல புனிதம்! செயலில் தான் நண்பரே. கருத்துக்களை பாருங்கள், கருத்து சொல்பவனின் வரலாறு நமக்கு அவசியமில்லை. நிஜ அடையாளத்துடன் குழப்பங்களையும், வசைபாடலையும் உமிழ்வதை விட புனைபெயரில் எழுதி சமூகத்தை வெளிச்சம் போட்டு காட்டுவது மேலானது.

நன்றி ஜயராமன்!

திரு said...

// நாமக்கல் சிபி @15516963 said...
ஜயராமன் அவர்களே!
புனைப்பெயர்களாகவே இருந்தால்தான் என்ன கெட்டுவிட்டது? எவருக்கும் தொல்லை தராவண்ணம், தனக்குத் தோன்றியதை எழுதினோமா, இன்னபிற பதிவுகளை வாசித்தோமா, தமது கருத்துக்களை சொன்னோமா என்று இருப்பவர்கள் சொந்தப் பெயரில் எழுதினால் என்ன? புனைப் பெயரில் எழுதினால் என்ன?

நிஜப்பெயரை தெரிந்துகொண்டு (அப்படி) என்ன(தான்) செய்யப்போகிறீர்கள்? //

//நாமக்கல் சிபி @15516963 said...
மாயவரத்தான், முகமூடி, போன்றோரல்லாம் உண்மைப்பெயரை சொல்லிவிட்டா எழுதிக் கொண்டிருக்கின்றனர்.

அவரவர்களுக்குத் தெரியும் யாராரிடம் நிஜப்பெயரை வெளிப்படுத்தலாம், யாராரிடம் வெளிப்படுத்தத் தேவையில்லை என்று! அது அவரவர் விருப்பமும் கூட! //

சிபி சகா, உங்க கருத்துல முழுதும் உடன்படுகிறேன். :)

திரு said...

//யெஸ்.பாலபாரதி said...
அழகான கவனிப்ப்பு! நல்ல பதிவு!!
தங்களின் கருத்தை பதிந்தமைக்கு நன்றி!!!//

நன்றி பாலா!

SWOT analysisல வேலை செய்து பழக்கமா. அதான் இப்படி ஒரு பதிவு! ஆனா முழுசா ஆய்வு செய்ய தகவல்களில் சிக்கல்.

தளராது நீங்கள் எடுத்த முயற்சி இமயம் போன்றது. அதில் வெற்றியும் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து முன்னெடுத்து செல்வோம் பாலா!

திரு said...

//பொன்ஸ் said...
திரு,
நல்ல பதிவு. :))//

நன்றி பொன்ஸ்! உங்க படம் நல்லாயிருக்கு! நான் யானை படத்த தான் சொன்னேன் :)

உங்களுக்காக இந்த முறை நிறைய யானை படம் எடுக்கணும். :)

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

பதிவுக்கு நன்றி திரு!
ஆனால் இனியெரு கூட்டம் நடத்த நான் தலைப்பட போவதில்லை. அதையும் அறிவித்து விட்டேன். கூட்டங்கள் கூட்டித்தான் செயல்படா வேண்டுமா என்ன? நான் செயல்படுபவன். எப்போதும் நண்பர்களின் துணையோடு என் (எங்கள்) கனவுகளை நினைவாக்குவேன்.

Hariharan # 26491540 said...

//இரு குழுக்களாக கூடி வந்த பதிவாளர்கள், ஒரே இடத்தில் கூடிய முதல் நிகழ்வு இந்த சந்திப்பு. இயல்பாகவே இருந்தாலும் 'எல்லோரும்' இணைந்த கூடல் என்பது இதுவே முதல் முறை. முதல் முறையாக ஒருவரை ஒருவர் அறிய, சந்தேகங்கள், அச்சங்கள் விலக வாய்ப்புகளை உருவாக்கி தந்திருக்கிறது. Dialogue is the basis for understanding!//

மிகவும் சரி! சில எதிர்விளைவுகளுக்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் தரவேண்டியதில்லை! பாலபாரதியின் முயற்சி போற்றத்தக்கது!

ப்ரியன் said...

நல்ல பதிவு திரு.

நன்றி

Anonymous said...

என்னமோ போங்க....ஏதோ பெரிய அரசியல் மாநாடு முடிவுக்கு வந்த் மாதிரி இருக்கு....

இந்த கூத்தெல்லாம் பார்க்கும் போது, நமக்கு எழுதுவதும், படிப்பதும், போதும் என்றே தொன்றுகிறது....இத அட்டெண்ட் பண்ணுவானேன் அப்பறம் அதுக்காக சண்டையிடுவானேன்.....

Anonymous said...

சரி, சரி, இன்று, நாளை, நாளையமறுநாள் அப்பிடின்னு ஒரு பதிவிடுங்கள்....

Anonymous said...

திரு அவர்களே,

இவ்வளவு தெளிவாக எழுதிய நீங்கள், பாலா, அழைப்பு விடுத்ததற்க்கு வாழ்த்தவில்லை, வணங்கவில்லை என்றெல்லாம் குறைந்து கொண்டுள்ளாரே, அதனை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே?....அது சரியா? தவறா?

திரு said...

//யெஸ்.பாலபாரதி said...
பதிவுக்கு நன்றி திரு!
ஆனால் இனியெரு கூட்டம் நடத்த நான் தலைப்பட போவதில்லை. அதையும் அறிவித்து விட்டேன். கூட்டங்கள் கூட்டித்தான் செயல்படா வேண்டுமா என்ன? நான் செயல்படுபவன். எப்போதும் நண்பர்களின் துணையோடு என் (எங்கள்) கனவுகளை நினைவாக்குவேன்.//

பாலா உங்கள் வேதனையை உணர்கிறேன். இதுவரை நடைபெறாத ஒன்றை செயல்படுத்தியதில் உங்கள் பங்கும் அதிகமானது. இதை உணர்வீர்கள் தானே! எதிர்விளைவுகளை இன்னும் அதிகமாக செயல்பட வைக்கிற தூண்டுகணைகளாக எடுக்க பழகுவோம். செயல்களில் வெற்றியடைய வாழ்த்துகள்!

திரு said...

//Hariharan # 26491540 said...
மிகவும் சரி! சில எதிர்விளைவுகளுக்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் தரவேண்டியதில்லை! பாலபாரதியின் முயற்சி போற்றத்தக்கது!//

அன்பு ஹரிஹரன்,

உங்களது இந்த கருத்து முற்றிலும் உண்மை

திரு said...

//ப்ரியன் said...
நல்ல பதிவு திரு.

நன்றி//

நன்றி ப்ரியன்

திரு said...

//Anonymous said...
என்னமோ போங்க....ஏதோ பெரிய அரசியல் மாநாடு முடிவுக்கு வந்த் மாதிரி இருக்கு....

இந்த கூத்தெல்லாம் பார்க்கும் போது, நமக்கு எழுதுவதும், படிப்பதும், போதும் என்றே தொன்றுகிறது....இத அட்டெண்ட் பண்ணுவானேன் அப்பறம் அதுக்காக சண்டையிடுவானேன்.....//

கவலைப்படாதீர்கள் நண்பரே! இதெல்லாம் சந்தித்து வாழ்வது தான் வாழ்க்கையும், வளர்ச்சியை நோக்கிய போராட்டமும். :) இதுக்காக பயந்து ஒளிந்து கொள்வது என்ன தரும்?

திரு said...

//Anonymous said...
திரு அவர்களே,

இவ்வளவு தெளிவாக எழுதிய நீங்கள், பாலா, அழைப்பு விடுத்ததற்க்கு வாழ்த்தவில்லை, வணங்கவில்லை என்றெல்லாம் குறைந்து கொண்டுள்ளாரே, அதனை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே?....அது சரியா? தவறா?//

அனானி நண்பரே இது உங்கள் பார்வை! எனது பார்வைக்கும் உங்கள் பார்வைக்கும் வேறுபாடு இருக்கலாம். இருக்கலாம் தானே? :)

திரு said...

//Anonymous said...
சரி, சரி, இன்று, நாளை, நாளையமறுநாள் அப்பிடின்னு ஒரு பதிவிடுங்கள்....//

அடுத்த பதிவின் தலைப்பிற்கு உங்களிடம் ஆலோசனை கிடைக்கும் மாதிரி தெரியுதே :)

மணியன் said...

நல்ல பதிவு.

Anonymous said...

//பெயரில் அல்ல புனிதம்! செயலில் தான் நண்பரே. கருத்துக்களை பாருங்கள், கருத்து சொல்பவனின் வரலாறு நமக்கு அவசியமில்லை. நிஜ அடையாளத்துடன் குழப்பங்களையும், வசைபாடலையும் உமிழ்வதை விட புனைபெயரில் எழுதி சமூகத்தை வெளிச்சம் போட்டு காட்டுவது மேலானது.//

கலக்கிட்டீங்க திரு.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com