Sunday, May 25, 2008

தென்னாப்பிரிக்காவில் புலம்பெயர் தொழிலாளர் மீதான தாக்குதல்!

பிரஸ்ஸல்ஸ், எனது அலுவலக அறையில் முன்னர் பொறுப்பில் இருந்த தலைவரால் ஒட்டப்பட்டிருந்த "free Mandela!" என்ற வாசகம் எப்போதும் மனிதசமுதாயம் எதிர்கொள்ளும் சாதி, மத, இன, பாலியல் சார்ந்த அடக்குமுறைகளிலிருந்து விடுதலை பெற்று ஒற்றுமையான, ஏற்றதாழ்வற்ற, சகோதரத்துவமான சமுதாயத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கையை தந்தது. மண்டேலா தென்னாப்பிரிக்காவிற்கு மட்டுமல்ல; உலகநாடுகளில் அடக்குமுறையை அனுபவிக்கும் அனைத்து மக்களுக்கும் மண்டேலா நாயகன். 2005ல் முதல் முறையாக ஆப்பிரிக்கா கண்டத்திற்கு பயணம் செய்து தென்னாப்பிரிக்காவில் காலடி வைத்த வேளையும் நமது முன்னோர்கள் உருவாகி, நடமாடிய மண்ணில் காலடி வைத்த மனசிலிர்ப்பு ஏற்பட்டது.

நிறவெறியை எதிர்த்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நண்பர் ஒருவர், தென்னாப்பிரிக்காவில் புலம்பெயர் தொழிலாளர் மீது அதிகரித்து வருகிற தாக்குதல்கள் குறித்து இவ்வருடம் ஏப்பிரல் மாதம் தென்னாப்பிரிக்காவில் இருந்த போது குறிப்பிட்டார். சோமாலியாவிலிருந்து பிழைப்பிற்காக வந்த 4 புலம்பெயர் தொழிலாளர்கள் கொல்லப்பட்டிருந்தனர். பல தொழிலாளர்களது, இருப்பிடங்களும் கடைகளும் தீயிடப்பட்டிருந்தன. தற்போது இந்த தாக்குதல் விரிவடைந்து புலம்பெயர் தொழிலாளர்களை வேட்டையாடி கொலை செய்யும் வெறுப்பு கொள்கையாக மாறியிருக்கிறது. பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர், சுமார் 16000 புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது இருப்பிடங்களை இழந்திருக்கின்றனர். தென்னாப்பிரிக்க மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட இயலாத இந்த கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. தெருக்களில் இராணுவம் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருப்பதாக நண்பர் தொலைபேசியில் தெரிவித்தார்.

புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு காரணமாக இருப்பது தென்னாப்பிரிக்க வாழ் மக்களிடம் காணப்படுகிற வறுமை, வேலையில்லா திண்டாட்டம், போதிய இருப்பிடமின்மை, சுயமரியாதையுடன் வாழ இயலாத பொருளாதார சூழல் என்று பல காரணங்கள் இருக்கின்றன. உலகில் மிக அதிகமான குற்றங்கள் நடைபெறுவதும், பாதுகாப்பற்றதன்மையும் தென்னாப்பிரிக்க நகரங்களில் தான் காண இயலும். தென்னாப்பிரிக்காவில் மாலை சுமார் 5 மணிக்குள் சாலைகளும், தெருக்களும் வெறிசோடியதாக காணப்படுகின்றன. மக்கள் தங்களை வீட்டிற்குள் சிறைப்படுத்திகொள்ளும் பாதுகாப்பற்ற சூழ்நிலையும் சுதந்திர நாடு என்கின்ற வேறு எந்த நாட்டிலும் அறியமுடியாது. எந்த நேரம் யார் துப்பாக்கி முனையில் கையில் கிடைப்பதை பறித்து செல்வாரோ என்ற தவிப்பில் இருப்பதும், உயிரை எப்படி காப்பற்றுவது என்று நண்பர்கள் பலர் கவலைப்படுவதை கேட்டிருக்கிறேன். சொவேற்றோ என்கிற புறநகர் குடியிருப்பு பகுதியில் ஒரு முடியவராது வீட்டிற்கு சென்றிருந்தேன். சில வாரங்களுக்கு முன்னர் அவர் தனது மகன் மற்றும் சிறு வயது பேத்தியுடன் இருந்த வேளையில், இருவர் நவீன துப்பாக்கிகளுடன் வீட்டில் வந்து தனது கைத்தொலைபேசி, கார், பணத்தை கொள்ளையடித்து சென்றதாகவும் குறிப்பிட்டார். குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லும் போது அவரது கவலையையும், அச்சத்தையும் உணரமுடிந்தது. பொருளாதார பிரச்சனைகளும். மலிந்து போன துப்பாக்கி கலாச்சாரமும் மக்களை சுதந்தரமாக வெளியே நடமாட விடாது வைத்திருப்பதை உணர முடிந்தது. இதற்கான உண்மையான காரணம் என்ன?

நிறவெறி அரசிலிருந்து ‘சுதந்தரம்’ பெறப்பாட்டதாக அறியப்படும் தென்னாப்பிரிக்காவில் இன்னும் நிறவெறி அரசால் உருவாக்கப்பட்ட அமைப்புமுறைகளில் அடிப்படை மாற்றம் முழுதாக வந்துவிடவில்லை. இந்தியாவில் ஆங்கிலேயரிடமிருந்து காந்தி ‘சுதந்திரத்தை வாங்கி’ ஆதிக்கசாதி, பணக்காரர்களுக்கு கொடுத்தது போன்ற நிலை தான் தென்னாப்பிரிக்காவிலும். இந்தியாவில் இன்னும் தாழ்த்தப்பட்ட தலித் மக்கள் சமூக, பொருளாதார, அரசியல் விடுதலைக்காக போராடுவது போல தென்னாப்பிரிக்காவின் உழைக்கும் மக்கள் தங்களது பொருளாதார விடுதலையை தேட வேண்டிய நிலையிலேயே இருக்கிறார்கள். வெள்ளை இன ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று ‘நம்மவர்கள்’ ஆட்சி வந்தால் விடுதலை என்பது அரசியல் தளத்தில் சரியான பார்வை. பொருளாதார, சமூக தளத்திற்கு தென்னாப்பிரிக்க மக்களுக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை. மிகப்பெரிய பொருளாதார நிறுவனங்கள், பண்ணைகள், உயர்குடியிருப்புகள், தங்கம் மற்றும் பிளாட்டினம் உள்ளிட்ட சுரங்க வளங்கள், நிலங்கள் எல்லாம் இன்னும் சிலரிடம் மட்டுமே இருக்க குடிசை பகுதியில் தான் பெரும்பாலான தென்னாப்பிரிக்க மக்கள் வாழுகிறார்கள்.

சமூக, பொருளாதார தளத்தில் தங்களது விடுதலை போராட்டத்தை தொடர்வதற்கு பதிலாக அண்டை நாடுகளிலிருந்து பொருளாதார, அரசியல் காரணங்களால் பாதுகாப்பு தேடி வந்து தென்னாப்பிரிக்காவின் தெருக்களில் கடுமையாக உழைக்கிற புலம்பெயர் தொழிலாளர்களை தாக்குவதும், கொலை செய்வதும், அழித்தொழிப்பதும், பொருட்களை கொள்ளையிடுவதுமான செயல்கள் எந்த நோக்கத்திற்காக தென்னாப்பிரிக்க மக்கள் போராடினார்களோ அதற்கு எதிராகவே அமைகிறது. தென்னாப்பிரிக்க மக்கள் தங்களது விடுதலையை மட்டுமல்ல, சக ஆப்பிரிக்க நாடுகளின் மக்களுக்கும் சமூக, பொருளாதார, அரசியல் விடுதலையை பெறும் போராட்டத்தையும் முன்னெடுக்கவேண்டிய காலத்தில் இருக்கிறார்கள்.

‘மண்டேலாவை விடுதலை செய்யுங்கள்’ என்னும் வாசகம் அடங்கிய சுவரொட்டியை பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். மண்டேலாவின் கனவு இன்னும் சிறைபட்டிருக்கிறது. மண்டேலா , இன்னும் விடுவிக்கப்படாத ஒடுக்குமுறைகளில் சிக்கியிருக்கிற மக்களின் விடுதலைக்கான குறியீடு!

"There is no such thing as part freedom." Nelson Mandela