Thursday, May 24, 2007

எங்களுக்கு உரிமை இருக்கா?

சில நாட்களுக்கு முன்னர் பிபிசி தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை பார்க்க முடிந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொத்தடிமையாக வேலை செய்துகொண்டிருந்த சிறுவன் ஒருவனை வெளிநாட்டு ஊடகவியலாளர் காப்பாற்றி மாவட்ட ஆட்சித்தலைவர் முன் நிறுத்தினார். சம்பந்தப்பட்ட பகுதியின் வட்டாட்சியாளர் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாவட்ட ஆட்சித்தலைவர் தலையீட்டிற்கு பின்னரும் அந்த சிறுவனை காப்பாற்றுவதை விட அவரை பணியில் ஈடுபடுத்தியவரை காப்பாற்றுவதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டியதை காண முடிந்தது.

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டங்களுக்காக ILO மட்டுமே வழங்கும் பெருந்தொகை இந்தியாவிற்கு தான் வருகிறது. இந்த பணம் எதற்காக செலவிடப்படுகிறது? எத்தனை குழந்தைகள் இந்த திட்டங்களால் எப்படியான பயனை பெற்றார்கள் என விளக்கமாக மக்களுக்கு தெரிவிக்க அரசிற்கு கடமையுண்டு. குழந்தை தொழிலாளர், கொத்தடிமை ஒழிப்பு திட்டங்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் அதிகாரிகள் வர்க்கத்தினருக்கு கடுமையான தண்டனை அவசியம்.

உலகின் மூலை முடுக்குகளில், உணவு விடுதிகளில், வைரம் தீட்டுதலில், சாயப்பட்டறைகளில், கல் குவாரிகளில், சுரங்கங்களில், தொழிற்சாலைகளில், விவசாயத்தில், செங்கல் சூளைகளில்...உழைக்கும் உலகை உருவாக்கும் பிஞ்சு மலர்களின் உரிமைக்காக...


திருத்தப்பட வேண்டிய தீர்ப்புகள்!

ஏப்பிரல் 30 காலை சுமார் 6 மணிக்கு ஏர் பிரான்ஸ் விமானம் தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்க் சர்வதேச விமான நிலையத்தில் சென்று சேர்ந்தது. விமானத்திலிருந்து இறங்கியதும் குடியுரிமை அதிகாரிகள் இருக்கும் பகுதிக்கு வரிசையில் சென்றேன். சுமார் 20 இளம் வயது அதிகாரிகள் இருந்தனர். அவர்களில் அனைவரும் கறுப்பினத்தை சார்ந்தவர்கள். பெரும்பான்மையினர் பெண்கள். 1994ல் கறுப்பின விடுதலைக்கு முன்னர் இதே விமானநிலையத்தின் குடியுரிமை அதிகாரம் வெள்ளையினத்தினரின் கைகளில் தான் இருந்தது. சுமார் 10 சதவிகிதம் மட்டுமே உள்ள வெள்ளையினத்தவர் கறுப்பின மக்களை அடக்குமுறையால் ஆட்சி செய்த சித்திரவதை காலம் apartheid என அழைக்கப்படுகிறது.
கறுப்பின மக்கள் நகரங்களில், பேருந்துகளில் நடமாட முடியாத வண்ணம் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது. சொவேற்றோ (Soweto) பகுதியில் கறுப்பின மக்கள் மீதான அடக்குமுறையை நடத்தியது அரசு. நிர்வாகம், நீதிமன்றம், அரசு என அனைத்தும் கறுப்பின மக்களுக்கு எதிராகவே இயங்கின. கொலை, ஆட்கடத்தல், மின்சாரம் துண்டித்தல், காலல்த்துறையினர் அடக்குமுறைகள் என தொடர்ந்தது. இந்த கொடுஞ்செயல்களை எதிர்த்து வெளிநாடுகளுக்கு சென்று கெரில்லா பயிற்சி பெற்று ஆதிக்க அடக்குமுறையை எதிர்த்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அமைப்பின் விடுதலை போரரட்டம் வழி உருவானவர் தான் மாபெரும் தலைவர் நெல்சன் மண்டேலா. 30 ஆண்டுகள் கொடுஞ்சிறையில் வாடிய நெல்சன் மண்டேலா அதிபரான பின்னர் விடுதலையை சுவாசிக்க துவங்கினர் கறுப்பின மக்கள்.
கறுப்பின மக்களுக்கு அரசியல் விடுதலை கிடைத்த பின்னரும் முழு விடுதலை என்பது இன்றும் கனவாகவே இருக்கிறது. கல்வி, வேலை, அதிகாரம், பொருளாதாரம், விளையாட்டு, பண்ணைகள் என பொருளாதாரம் சார்ந்த அனைத்தும் இன்றும் வெள்ளையினத்தவர் கைகளில் இருக்கிறது. சுரண்டலுக்கும், பொருளாதார ஆதிக்கத்திற்கும் அடிமைகளாக தான் பெரும்பான்மையான கறுப்பின மக்கள் வாழ்கிறார்கள்.
'ஒரு பகுதி மக்களை புறக்கணித்து விட்டு எந்த ஒரு பொருளாதாரமும் வளர இயலாது' - தென்னாப்பிரிக்காவின் கறுப்பின பொருளாதார முன்னேற்ற திட்ட அறிக்கை பகுதியிலிருந்து.

வெள்ளையின ஆதிக்கத்தில் அடக்கப்பட்ட மக்களுக்கு (கறுப்பின, இந்திய, நிறம் கொண்ட) பொருளாதார விடுதலையை வழங்க Black Economic Empowerment (BEE) என்னும் திட்டத்தை தென்னாப்பிரிக்க அரசாங்கம் உருவாக்கியிருக்கிறது. இந்த திட்டத்தை பற்றி "Our country requires an economy that can meet the needs of all our economic citizens - our people and their enterprises - in a sustainable manner," என்கிறது அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் பிரிவு.

BEE திட்டத்தை சட்டமும், விதிமுறைகளும் இயக்குகின்றன. 2004ல் இயற்றப்பட்ட BEE சட்டம் தொழில் நிறுவனங்களின் செயலாக்கத்தை 4 முக்கிய பகுதிகளாக அளவிடுகிறது:

  • Direct empowerment through ownership and control of enterprises and assets.

  • Management at senior level.

  • Human resource development

  • employment equity.

இவை அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு பொருந்தும். பொருளாதார முடிவுகளை எடுக்கும் வேளைகளில் அரசாங்கம் இந்த அளவுகோல்களை பயன்படுத்தவேண்டும்.

  • கொள்முதல்,

  • உரிமம் வழங்கல் மற்றும் சலுகைகள்,

  • பொதுத்துறை-தனியார்துறை இணைந்து செயலாக்கம்,

  • அரசுக்கு சொந்தமான சொத்து மற்றும் நிறுவனங்கள் விற்பனை

போன்ற பொருளாதார முடிவுகளுக்கும் இந்த திட்டம் பொருந்தும். இந்த திட்டத்தால் தென்னாப்பிரிக்காவின் ஒடுக்கப்பட்ட இனங்களின் மக்களுக்கு நீதி கிடைக்க வழி பிறந்துள்ளது. அதற்கு அடிப்படை அவர்களுக்கு கிடைத்த அரசியல் விடுதலை என நண்பர் கூறும் போது இந்திய துணைக்கண்ட இடப்பங்கீடு அரசியல் நினைவுக்கு வந்தது.

***

உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடப்பங்கீடு வழங்க இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம். இரண்டு நீதிபதிகள் வழங்கிய இந்த தீர்ப்பு உரை பல கேள்விகளை எழுப்புகிறது.

"... nowhere else in the world do castes, classes or communities queue up for the sake of gaining backward status. Nowhere else in the world is there competition to assert backwardness and then to claim we are more backward than you. This truth was recognised as (sic) unhappy and disturbing situation... " - பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உயர்கல்வியில் 27% இடப்பங்கீடு வழங்குவதற்கு எதிரான தடையில் இந்திய உச்சநீதிமன்றம்.

பின்தங்கிய நிலையை காரணமாக வைத்து தான் தென்னாப்பிரிக்காவில் BEE செயல்படுகிறது என்பது 'மேன்மை தங்கிய, மாட்சிமை பொருந்திய' உச்சநீதிமன்றத்தின் கவனத்தில் வராமல் போனது பரிதாபம். "... nowhere else in the world do castes, classes or communities queue up for the sake of gaining backward status...." என தீர்ப்பு எழுதிய நீதிமன்றம் எத்தனை உலக நாடுகளின் சமூகநீதி திட்டங்களை ஆய்வு செய்தது என்பதும் கேள்வியே. உலகில் வேறு எங்குமே சாதி அடிப்படையில் இவ்வளவு கேவலமான, மனிதத்தனமற்ற ஒடுக்குமுறை இல்லை. இந்த உண்மையை உணராத வரை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி என்பது கனவு மட்டுமே. பெரும்பகுதி மக்களை கல்வியில், வேலையில், பதவிகளில் ஈடுபட தகுதியில்லாதவர்கள் என ஒதுக்கி வைத்திருக்கும் சாதி ஆதிக்க தீட்டை இந்திய அதிகார மையங்கள் புரிந்துகொள்ளாது.

நீதிமன்ற முறையீடுகளால் மட்டுமே மாற்றங்கள் பிறப்பதில்லை. இலட்சிய உறுதிகொண்ட சமூகப்போராட்டங்களின் விளைவாக எழும் மாறுதல்களில் விடுதலையும், நீதியும் பிறக்கும். சாதி அடிமைத்தன ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலை பெற்று சமத்துவ சமுதாயம் உருவாக இடப்பங்கீடு உள்ளிட்ட சமூகநீதி போராட்டங்கள் அரசியல் அரங்கில் வலிமை பெறுவது காலத்தின் அவசியம். ஆதிக்க எண்ணங்களை எதிரொலிக்கும் தீர்ப்புகளை உடைக்கும் கருத்தியல் பலத்தை பெற அரசியல் விடுதலையால் மட்டுமே முடியும். ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பாதை சமூகநீதி என்னும் உயரிய இலட்சியத்தை அடைய ஒன்றுபடுமா?

--------

இடப்பங்கீடு பற்றிய முந்தைய பதிவு youth for equality=சமத்துவ காவலர்களா?

Wednesday, May 02, 2007

சே குவேரா: வரலாற்றின் நாயகன்-4

குயூபாவில் சன் மார்டின் அதிபராக பதவியேற்ற போது பிடல் காஸ்ட்ரோ சேசு சபையினர் நடத்திய உயர்நிலை பள்ளியில் கல்வி கற்க சேர்ந்தார். 1944 ல் உயர்நிலை பள்ளி அளவிலான குயூபாவின் சிறந்த விளையாட்டு வீரராக காஸ்ட்ரோ தேர்வு செய்யப்பட்டார். தன்னம்பிக்கையும், இலட்சிய உறுதியும் மிக்க காஸ்ட்ரோ பள்ளிப்படிப்பை முடித்து 1945ல் ஹவானா பல்கலைகழகத்தில் பயில துவங்கினார். மாணவப் பருவத்திலேயே அரசியல் நடவடிக்கைகளில் ஆர்வம் கொண்ட பிடல் காஸ்ட்ரோ ஏப்ரல் 8, 1948ல் கொலம்பியா நாட்டில் நடைபெற்ற மக்கள் எழுச்சியில் கலந்துகொண்டார்.

குயூபாவில் சன் மார்டின் ஆட்சியின் முதற் பகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை திட்டங்கள் அமைந்தாலும் பின்னர் நிழல் உலக தாதாக்களின் குழப்பங்கள் அதிகமாகவும் இருந்தது. இத்தாலியிலிருந்து வரவழைக்கப்பட்ட நிழல் உலகம் சார்ந்தவர்கள் ஹவானாவில் நேசனல் விடுதியில் இரகசிய கூட்டம் நடத்தி படுகொலைகளுக்கு திட்டமிட்டது வாடிக்கையானது. தொடர்ந்து நடந்த தேர்தலில் 1948 அக்டோபர் மாதம் கார்லோஸ் ப்ரியோ சொக்கரஸ் வெற்றி பெற்று அதிபரானார். பாடிஸ்டா லஸ் வில்லாஸ் பகுதியிலிருந்து குயூபாவின் செனட் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

******

யுத்தத்தின் காரணமாக ஸ்பெயினிலிருந்து மருத்துவர் ஜுயன் கொன்சலெஸ் அகுலர் குடும்பத்தினர் 3 குழந்தைகளுடன் அர்ஜெண்டினாவில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் ஏர்னெஸ்டோவின் அண்டை வீட்டில் குடியிருந்தனர். ஏர்னெஸ்டோ வீட்டிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் இருந்த பள்ளியில் ஏர்னெஸ்டோவும் அந்த 3 குழந்தைகளும் சேர்ந்து படித்து வந்தனர். இரு குடும்பத்தினருக்குமிடையே நெருக்கமான உறவு இருந்தது. மருத்துவர் ஜுயனும் அவரது குடும்பத்தினரும் பகிர்ந்துகொண்ட ஸ்பெயின் நாட்டின் உள்நாட்டு யுத்த அனுபவங்கள் ஏர்னெஸ்டோவுக்குள் விடுதலைக்கான விதையை சிறுவயதில் விதைத்திருந்தது.

பெற்றோர் அரசியல் சூழல் பற்றிய கருத்துக்களை இளம் ஏர்னெஸ்டோவுடன் பகிர்ந்து வந்தனர். ஏர்னெஸ்டோவை பாசிச எதிர்ப்பு இயக்கத்தின் இளையோர் அமைப்பில் உறுப்பினராக பதிவு செய்தனர் அவரது பெற்றோர். மனான அசியன் அர்ஜெண்டினா என்ற இந்த இயக்கத்தின் கிளையை அந்த பகுதியில் நிறுவியது ஏர்னெஸ்டோவின் தந்தையார். அப்போது ஏர்னெஸ்டோவுக்கு வயது பதினொன்று. அர்ஜெண்டினாவில் நாஜிகள் ஊடுருவலை தடுக்க கூட்டங்கள், நிதிசேகரிப்பு என பலவிதமான நடவடிக்கைகளில் ஏர்னெஸ்டோ பங்கெடுத்தார். அர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் பிரதிபலிப்பு ஏர்னெஸ்டோவின் குடும்பத்திலும் காணப்பட்டது. தனது 16 வயதில் லத்தீன் அமெரிக்கவில் பலரது எண்ணங்களில் புரட்சியை தூண்டிய மாபெரும் மக்கல் கவிஞன் பாப்லோ நெருடாவின் கவிதைகளால் கவரப்பட்டார் ஏர்னெஸ்டோ. இளம் வயதிலேயே கார்ல் மார்க்ஸ் எழுதிய "மூலதனம்" படித்திருந்தார் ஏர்னெஸ்டோ.

The Me Bird by Pablo Neruda

I am the Pablo Bird,
bird of a single feather,
a flier in the clear shadow
and obscure clarity,
my wings are unseen,
my ears resound
when I walk among the trees
or beneath the tombstones
like an unlucky umbrella
or a naked sword,
stretched like a bow
or round like a grape,
I fly on and on not knowing,
wounded in the dark night,
who is waiting for me,
who does not want my song,
who desires my death,
who will not know I'm arriving
and will not come to subdue me,
to bleed me, to twist me,
or to kiss my clothes,
torn by the shrieking wind.

That's why I come and go,
fly and don't fly but sing:
I am the furious bird
of the calm storm.


ஏர்னெஸ்டோவின் தந்தையாருக்கும் வேறு ஒரு பெண்ணிற்கும் காதல் ஏற்பட்டது. ஒருமுறை அந்த பெண்மணியை வீட்டிற்கு அழைத்து வந்து அறிமுகம் செய்தார் அவர். ஏர்னெஸ்டோவையும் அவரது தாயாரையும் எரிச்சலடைய வைத்தது அந்த நிகழ்வு. அது விசயமாக ஏர்னெஸ்டோ மிகவும் கோபமடைந்திருந்தார். அந்த பெண்ணின் பெயரை கேட்டாலே அவர் கோபமடந்தார். இந்த நிகழ்விற்கு பின்னர் ஏர்னெஸ்டோ அவரது தாயாருடன் மேலும் நெருக்கமானார்.

ஆஸ்துமாவின் தாக்கத்தாலும் குடும்பத்தில் ஏற்பட்ட மாறுதல்களாலும் ஏர்னெஸ்டோ ஒரு சராசரி மாணவனாகவே திகழ்ந்தார். மனிதவியல் மற்றும் தத்துவ பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்றார் ஏர்னெஸ்டோ. ராகத்திற்கும் தாளத்திற்குமுள்ள வேறுபாடு தெரியாதவராகவே வளர்ந்தார். நடனமாடவோ இசைக்கருவிகளை மீட்டவோ தெரியாதவராக இருந்தார்.

சிறுவயதிலேயே பரந்த மனதுடன் அவர் வாழ்ந்த கொர்டொபா பகுதி வாழ் ஏழைகளுக்கும் அவருக்கும் மத்தியிலான இடைவெளியை அகற்றவும், அடக்குமுறைகளையும் அநீதியையும் எதிர்க்க கடுமையாக முயன்றார். லத்தீன் அமெரிக்காவின் பிற பகுதிகளைப்போல அங்கு புறக்கணிக்கப்பட்டவர்களும், இடம்பெயர்ந்தோரும் தகரத்தாலும், அட்டைபெட்டிகளாலும் அடைத்த வீட்டில் வாழ்ந்தனர். கால்களை இழந்த ஒருவர் அந்த பகுதியில் நாய்கள் இழுக்கிற வண்டியில் பொருட்களை வைத்து விற்று பிழைத்து வந்தார். அவரது வீட்டிலிருந்து வீதிக்கு வரும் வழியில் ஒரு பள்ளத்தில் வண்டியை இழுக்க நாய்கள் சிரமப்படுவது வழக்கம். அந்த மனிதர் அவ்வேளைகளில் நாய்களை அடித்து துன்புறுத்தி நடைபாதையில் வண்டியை செலுத்துவார், இது அந்த பகுதி மக்களை எரிச்சலடையை செய்த அன்றாட நிகழ்வு. ஒரு நாள், அந்த பகுதி குழந்தைகள் அவர் மீது கற்களை வீசினார்கள். ஏர்னெஸ்டோவும் அவரது நண்பரும் அந்த காட்சியை கண்டு, குழந்தைகளிடம் தாக்குதலை நிறுத்த அறிவுறுத்தினர். ஆனால் நன்றி சொல்வதற்கு பதிலாக அந்த மனிதர் ஏர்னெஸ்டோவை வசைபாடி அவர் மீது பணக்காரர்கள் மீதுள்ள வெறுப்பை உமிழ்ந்தார். இந்த நிகழ்வின் வழி பணக்காரர்கள் ஏழைகள் மீது கொள்ளும் இரக்கம் விடுதலையாகாது என்பதை உணர்ந்தார்.

பொறியியல் படிக்க திட்டமிட்டதை மாற்றி 1947 ல் புயெனெஸ் எயர்ஸ் பல்கலைகழகத்தில் மருத்துவ துறையில், தொழுநோய் பற்றி சிறப்பு பாடமாக படித்தார் ஏர்னெஸ்டோ. கல்லூரியில் செயல்பட்ட புரட்சிகர மாணவர் இயக்கத்தில் ஏர்னெஸ்டோ பங்கெடுக்கவில்லை. படித்தவாறு ஒரு மருத்துவமனையில் பகுதி நேர வேலையும் செய்துவந்தார். கல்லூரியில் படித்து வந்த காலங்களில் தனக்கு பிடித்தமான ரக்பி விளையாட்டு விளையாடுவதில் அதிகமான நேரத்தை செலவிட்டார் ஏர்னெஸ்டோ. ரக்பி விளையாட்டு அவருக்கு உடல் வலுவையும் திட்டமிடும் கலையையும் உருவாக்கியது. இருந்தாலும் ஆஸ்துமா கொடுத்த தொந்தரவால் விளையாட்டு களத்திலிருந்து அடிக்கடி வெளியேறி தனக்குத்தானே ஊசி மருந்தை செலுத்துவது ஏர்னெஸ்டோவுக்கு பழக்கம். விடுமுறை நாட்களில் ஏர்னெஸ்டோ மோட்டார் சைக்கிள் பயணங்கள் போவது வழக்கம்.

ஏர்னெஸ்டோவின் நண்பர் ஆல்பர்டோ கிரானடோ, அர்ஜெண்டினா, கொர்டொபாவில் மருந்துக்கடை வைத்திருந்தார். இருவருமாக ஒரு விடுமுறைநாளில் சந்தித்தபோது லத்தீன் அமெரிக்கா முதல் வட அமெரிக்கா வரையிலான மோட்டார் சைக்கிள் பயணத்தை திட்டமிட்டனர். பயண திட்டத்தின் படி ஏர்னெஸ்டோ கல்லூரியிலிருந்து 1 வருட விடுப்பில் டிசம்பர் திங்கள் 1951 இல் பொதெரோசாII என பெயரிடபட்ட நோர்டன் 500சிசி மோட்டர் சைக்கிளில் பயணம் துவங்கினர்.
(வரலாறு வளரும்)