Friday, March 30, 2007

கொக்கு பிடிக்க வெண்ணையும், பார்ப்பனீய தேசியமும்!

கொக்கு பிடிப்பது எப்படி என்பது பற்றி கிராமத்தில் ஒரு கதை சொல்லுவார்கள். "கொக்கு தலையில் வெண்ணை வைத்து, வெண்ணை உருகி கொக்கு தலையில் வழிந்து அதன் கண்களை மறைக்கும் போது, கொக்கை அமுக்கி பிடிக்கலாமாம். கேட்க அழகாக இருக்கும் இந்த கதை நடைமுறை சாத்தியமா? 'கலாச்சார தேசியம்' என்னும் வெண்ணையை ஒடுக்கப்பட்ட மக்கள் தலையில் வைத்து கொக்கு போல அமுக்கப் பார்க்கிறார்கள் இந்துத்துவ பயங்கரவாதிகள். அந்த தந்திரத்தை வெளியிடுபவர்களை அல்லது எதிர்ப்பவர்களை 'தேசத்தின் எதிரிகள்' என அழுவது வாடிக்கை. எந்த தேசத்துக்கு எதிரிகள்?

பிராமணா அல்லாத எவரும் உள்ளே செல்ல அனுமதி இல்லை! இது ஆங்கிலேய காலனியாதிக்க காலத்தில் வைத்த அறிவிப்பு பலகையல்ல. தமிழகத்தின் இராமேசுவரத்தில் இன்றும் இருக்கிற அறிவிப்பு தான் இது (படம்: நன்றி! யெஸ். பாலபாரதி). "பிராமணாள் ஹோட்டல்" நடத்திய பார்ப்பனீய கும்பல் பெயரை மாற்றும் நிலையை ஏற்படுத்தியது பெரியாரியம். இருந்தும் இன்றைக்கும் கூட இப்படி ஒரு அறிவிப்பு பலகை தமிழகத்தில் இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்னால் பார்ப்பனீயமே ஆட்சியாக இருந்த நிலையில் எப்படி இருந்திருக்கும்? இன்றும் வட இந்தியாவில் தமிழகத்தை விட கேவலமான நிலையில் தான் ஒடுக்கப்பட்ட மக்கள் நடத்தப்படுகிறார்கள். "ஆர்.எஸ்.எஸ் காரன் தலித் கடையில் சாயா சாப்பிட்டு சாதியை ஒழிக்கிறான். தலித்தை உள்ளே விடாத கோயில்களில் பிச்சை எடுக்கிறான்." என சம்பந்தமில்லாது பேசி பார்ப்பனீயத்திற்கு வால் பிடிக்கும் நரிகள் இந்த படத்திற்கு என்ன மழுப்பல் வைத்திருக்கிறார்களோ?

புனித பண்டமான பார்ப்பனீய இந்துமதம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தருவது பார்ப்பனீயத்தின் கண்டுபிடிப்பான தீட்டு மட்டும் தான். 19ம் நூற்றாண்டில் பார்த்தாலே தீட்டு "எட்டிப்போ". 21ம் நூற்றாண்டில் பிராமணா அல்லாத எவருக்கும் உள்ளே செல்ல அனுமதி இல்லை! தீட்டு கோவில்களிலும், தெருக்களிலும் மட்டுமல்ல, உயர்கல்வி நிலையங்களிலும் தான். தீட்டின் வடிவம் தான் மாறுபடுகிறது. தெருக்களுக்கு அறிவிப்பு பலகை. IIT, IIM போன்ற உயர் கல்விநிலையங்களாக இருந்தால் உச்சநீதிமன்ற போய் எழுதி வாங்கி வரும் இடைக்கால தடை. நீதிமன்றம் எதை அடிப்படையாக வைத்து தீர்ப்பு எழுதுகிறது என கேட்காதீர்கள். தேசிய துரோகி ஆகிவிடுவீர்கள். எந்த தேசமா? அது தான் பார்ப்பனீய தேசியம்.


Nationalism is an infantile disease. It is the measles of mankind. Albert Einstein

இப்படித்தான் பார்ப்பனீய தேசியத்தை சுட்டும் விதமாக கடந்த பூங்கா இதழில் ஆசிரியர் குழு எழுதிய தலையங்கத்தை வைத்து பார்ப்பனீய/இந்துத்துவ தீவிரவாதிகள் திசைதிருப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். மேற்கு வங்க மாநிலத்தில் துப்பாக்கிச் சூட்டில் மக்கள் கொலைசெய்யப்பட்டதையொட்டி, பார்ப்பனீயத்தின் பன்முக வடிவங்கள் இந்திய அரசியல் கட்சிகளுக்குள் இயங்குவதை தலையங்கம் குறிப்பிட்டிருந்தது. பார்ப்பனீயத்தை எதிர்ப்பது தேசவிரோதமாம். மனுதர்ம குப்பையை உயர்ந்ததாக தூக்கிப்பிடிக்கும் வரிசையில் இது அடுத்த வருகை.


The Brahmana is declared (to be) the creator (of the world), the punisher, the teacher, (and hence) a benefactor (of all created beings); to him let no man say anything unpropitious, nor use any harsh words.
- மனுதர்மம் 11 அத்தியாயம், 35.

வலதுசாரி இந்துத்துவம் இன்று உழைக்கும் மக்களை தங்களது தீவிரவாத செயல்களுக்கு அடிமையாக்க காவிப்பட்டாளத்தை உருவாக்கி வருகிறது. இந்துத்துவ தீவிரவாதத்திற்கு அமெரிக்கா,ஆஸ்திரேலியா, பிரித்தானியா, கானடா, ஐரோப்பிய நாடுகள் என பல வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கான பணம் வசூலிக்கப்படுகிறது. தனது நோக்கத்திற்கான மறைமுக நிதியை திரட்ட இயற்கை பேரிடர்களையும், வறுமை, கல்வியின்மை போன்ற அவலங்களை பயன்படுத்தி சேவை என்ற பெயரில் பெரும் நிதி வசூலிக்க தனி அமைப்புகளை பார்ப்பனீய இந்துத்துவம் இயக்குகிறது. இவ்வாரு திரட்டப்படும் பெரும் தொகையில் சிறுபகுதி நிதியை சேவைகளுக்கும், பெரும் தொகை இந்துத்துவ நிழல் நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. வெளிநாட்டு 'மிசநரிகளுக்கு' ஒரு முகமும், உள்நாட்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இன்னொரு முகமுமாக மத தீவிரவாதத்தை வளர்ப்பது தான் இன்றைய இந்துத்துவம். இதன் துவக்கம் இன்று நேற்றல்ல காலனியாதிக்க காலத்திலேயே துவங்கியது.

வலதுசாரி தீவிரவாத இந்துத்துவத்தை ஆர்.எஸ்.எஸ் என்னும் அமைப்பை உருவாக்கி 1925ல் துவங்கி வைத்தார்கள் மராட்டிய மாநில சித்பவன் பார்ப்பனர்கள். All road goes to Rome என்பது போல இந்தியாவின் மத தீவிரவாதம் துவங்கும் முடிச்சு ஆர்.எஸ்.எஸ். அதன் பின்னால் சித்பவன் பார்ப்பனீய கனவு! பார்ப்பன மேலாதிக்கம் எப்போதெல்லாம் ஆட்டம் கண்டுவிடுமோ அப்போதெல்லாம் தாக்குதல்களை புது முகங்கள் வழியாக தொடுத்தே பார்ப்பனீயம் வந்திருக்கிறது. ஒவ்வொரு முகமூடிக்கும் ஒரு வேலை பார்ப்பனீயத்தில் இருக்கும். கொலைக்களத்தை அதிகாரமயப்படுத்திய மோடிக்கும் இடமுண்டு. சட்டத்துக்கு புறம்பாக மசூதியை இடிக்க ஆள் சேர்த்த அத்வானிக்கும் இடமுண்டு. பசப்பு வார்த்தைகள் பேசும் வாஜ்பாய்க்கும் இடமுண்டு. தங்களது சித்பவன பார்ப்பனீய கனவை பாதிக்காது என்றால் அப்துல்கலாமையும் சேர்த்துக்கொள்வார்கள்.

ஆனால், தங்களது கனவிற்கு சிறு இடைஞ்சலானால், இராமனை கும்பிட்ட காந்தியாக இருப்பினும் கொன்று கைலாயத்துக்கு அனுப்ப கோட்சே என்னும் கொலைகாரனை உருவாக்குவார்கள். காந்தியை கொலை செய்த கோட்சே கண்டதும் இந்துத்துவ கனவு தான். குஜராத்தில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து சிசுவை தீயிட்டு பொசுக்கியதும் இந்துத்துவ முகங்கள் தான். குஜராத்தில் உயிருக்கு பயந்து தப்பியோடிய பெண்களை சுற்றி வளைத்து பாலியல் பலாத்காரம் செய்து படுகொலைகள் செய்தது இந்த முகம் தான். காங்கிரஸ் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரை உயிரோடு எரித்து கொன்ற காலிகள் கூட்டத்தின் முகங்கள் இந்துத்துவம். சாதிக்கலப்பு திருமணம் செய்தவர்களை வேட்டையாடி கொலை செய்த தொடர் கொலையாளனின் முகம் இந்துத்துவம். ஒரிசாவில் பாதிரியார் மற்றும் இரு பிள்ளைகளை உயிரோடு கொழுத்திய 'புண்ணியவான்' தாராசிங்குக்கு இந்துத்துவ முகம் தான். உழைப்பை சுரண்டியதை எதிர்த்து எழும்பிய தலித்களை கொன்று குவிக்க ரன்வீர் சேனா படையும் இதில் ஒரு முகம் தான். இந்தியா பாகிஸ்தான் என எல்லைப் பிரிவினைக்கு முதல் அடி எடுத்து வைத்தவரும், காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டவட்டவருமான சாவர்க்கர் உருவாக்கியது இந்துத்துவ முகம் தான். இந்த இந்துத்துவ முகத்தை பெற்றெடுத்தவரும் இவரே. அவர் உருவாக்கிய இந்துத்துவம் என்கிற பார்ப்பனீய கொள்கை தான் இன்று இந்து தீவிரவாதிகளை உருவாக்கும் மூளைச்சலவை பட்டறைகளாக உருவெடுத்து நிற்கிறது. எதிர்காலத்தில் இந்திய துணைக்கண்டத்தின் ஒற்றுமைக்கும் அமைதிக்கும் எதிரான பயங்கரவாதிகள் இந்துத்துவவாதிகள்.

உழைக்கும் மக்களின் கருப்பசாமி, மூதேவி, மதுரை வீரன், சுடலைமாடன்....போன்ற நாட்டார் தெய்வங்களை தங்களது பார்ப்பனீய கடவுள்களின் புட்டியில் அடைத்து, "நாமெல்லாரும் இந்து! வாங்க! வாங்க...!" என அடியாள் படையை திரட்டும் இவர்கள் உழைக்கும் மக்களது எந்த பிரச்சனைக்கும் உண்மையாக போராடியதில்லை. தெய்வங்களை அடிமைப்படுத்துவதன் வழி ஒரு இனத்தையே அடிமைப்படுத்தலாம். இதையே பார்ப்பனீயம் வரலாற்று காலம் முதல் செய்து வருகிறது. கடந்த காலங்களில் தீட்டாக ஒதுக்கி வைக்கப்பட்ட சுடலைமாடனும், கருப்பசாமியும், பேச்சியும் இன்றைய இந்துத்துவ பார்ப்பனீயத்தின் அரசியல் ஆதாயத்திற்கு அவசியமாகிறது.

இந்துத்துவத்தின் மிதவாத வடிவம் காங்கிரஸ் அமைப்பில் இருந்தது. இன்னும் இருக்கவே செய்கிறது. அடிப்படைக் கொள்கையும், அமைப்பு மாற்றமும் இல்லாவிட்டால் ஆட்சி மாறினாலும் பார்ப்பனீயம் நிலைத்திருக்கும் என்பதற்கு மிகச்சரியான உதாரணம் கடந்த மாதம் ஜெனிவாவில் நடந்த ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பின் கூட்டத்தில் இந்திய அரசு கொடுத்த அறிக்கை.

Mr. GUPTA (India): "......The so-called fourfold scheme of the Brahmin, the warrior, the commoner and the untouchable was a myth and did not exist in reality..."

Fifteenth to nineteenth periodic reports of India
COMMITTEE ON THE ELIMINATION OF RACIAL DISCRIMINATION
Seventieth session
SUMMARY RECORD OF THE 1796th MEETING
Held at the Palais Wilson, Geneva,
on Friday, 23 February 2007 at 3 p.m.


ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தேசிய மாயை தரும் பரிசு இது தான். பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று சொல்லப்படும் நான்கு அடுக்குநிலை என்பது ஒரு கற்பனை, இந்தியாவில் அது இருந்ததில்லை. என சாதிப்பது பா.ஜ.க அரசு அல்ல. பார்ப்பனீய அதிகாரிகளால் நிறைந்திருக்கும் இந்திய ஒன்றியத்தின் காங்கிரஸ் கூட்டணி அரசு. ஆட்சிகள் மாறினாலும் அதிகார வர்க்கம் பார்ப்பனீயத்தின் கையில் தான். இது தான் இந்திய தேசியம். இந்த பார்ப்பனீய தேசியத்தை கேள்வியெழுப்பினால் தேசதுரோகிகள் தான். பகத்சிங் வரிசையில் இந்த தேசதுரோகிகள் பலர் இருந்தார்கள், இன்னும் இருக்கிறார்கள். பார்ப்பனீய தேசிய மாயை ஒழிக்கப்படும் வரை இன்னும் இருப்பார்கள்.

இந்தியா என்கிற துணைக்கண்ட நிலப்பரப்பில் பல கலாச்சாரங்கள், மதங்கள், இனங்களை சார்ந்த மக்கள் வாழுகின்றனர். இந்தியா என்ற பெயர் உருவாகும் முன்னரே இங்கு வாழும் மக்களில் பெரும்பான்மையோரின் ஆதி நிலமாகவே இந்திய நிலம் இருந்து வந்திருக்கிறது. ஆரியர்கள் 'படையெடுப்பிற்கு' (யுத்தம் நடத்துபவன் மட்டுமல்ல படையெடுப்பவன், கலாச்சாரத்தை அழிப்பவனும் தான்) முன்னரே இங்கு மக்கள் குழுக்களாக, கலாச்சார, பண்பாட்டு அடையாளங்களுடன் வாழ்ந்திருக்கிறார்கள். இந்தியா என்கிற துணைக்கண்ட நிலப்பரப்பையும் அதில் வாழும் மக்களையும் 'இந்து' என்கிற பார்ப்பனீய 'கலாச்சார தேசியத்தில்' அடைத்து பார்க்கும் போது தான் பிரச்சனை ஆரம்பமாகிறது.

ஆங்கிலேயர்கள் காலனியாதிக்கத்திற்கு முன்னர் இந்தியா ஒற்றை நாடாக எந்த காலத்திலும் இருக்கவில்லை. ஆதியில் நாடு, தேசியம் என்னும் கோட்பாடுகள் தோன்றியிருக்கவில்லை. நிலப்பரப்புகள் அனைத்தும் பொதுவாகவே இருந்தன. அடுத்தடுத்த கட்டங்களில் மனித குழுக்கள் தாங்கள் நடமாடிய இடங்களை சொந்தம் கொண்டாடவும், கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் துவங்கினர். முதலாளித்துவத்தின் முதல் கட்டமான நிலவுடமை சமுதாயம் துவங்கியது இப்படி தான். பின்னர் மனிதக்குழுக்களின் தலைமைகள் கட்டுப்பட்டில் மக்களும், உடமைகளும் இயங்க ஆரம்பித்தன. சட்டங்கள், ஒழுங்குமுறைகள், காவலாளிகள் என அதிகார மயப்படுத்தல் உருவானது. தொடர்ந்து மன்னராட்சி உருவானது. மன்னர் காலங்களில் கூட இந்தியா என ஒற்றை நாடு இல்லை. மகத நாடு, சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என பகுதிகளாகவே இயங்கியது. சில நாடுகள் இன்றைய சிறு மாவட்ட அளவு கூட இருக்கவில்லை. ஆங்கிலேயர்களின் காலனியாதிக்க நிர்வாக வசதிக்காக தான் இந்தியா என்னும் ஒற்றைமுறைப்படுத்தல் முதலில் துவங்கியது. இந்தியாவை உருவாக்கும் போது காலனியாதிக்க தலைமை இந்த நிலப்பரப்பின் தேசிய இனங்களின் கனவு என்ன என பார்க்கவில்லை. ஒரே நாடாக எல்லைக்கோட்டை வரையறுத்த ஆங்கிலேயனின் மாயையில் ஒரே தேசியம் என பார்ப்பனீயம் பேசி திரிகிறது. இந்தியா ஒரு துணைக்கண்டம் இங்கு வாழும் மக்கள் ஒரே தேசிய இனத்தை சார்ந்தவர்களல்ல. பல்வேறு தேசிய இனங்களில் கூட்டமைப்பே இந்தியா. இந்த பன்முகத்தன்மை தான் அழகு.

1947 ஆகஸ்டு செல்வாக்கு மிக்க பார்ப்பனீயவாதிகளுக்கு அதிகாரத்தை எழுதி கொடுத்துவிட்டு ஆங்கிலேயர்கள் வெளியேறினார்கள். அன்று முதல் இன்று வரை அரசு அதிகாரம், நீதிமன்றம், பாராளுமன்றம், பத்திரிக்கை என அனைத்தும் பார்ப்பனீய ஆதிக்க மயம் தான் தேசியமாக கற்பிக்கப்படுகிறது. இதன் செயல், சிந்தனை என அனைத்தும் பார்ப்பனீய ஆதிக்கமாகவே இருக்கிறது. இந்த பார்ப்பனீய அதிகார ஒற்றைமயப்படுத்தலுக்கு என்றும் சவாலாக இருப்பவர்கள் பொதுவுடமையாளர்கள், பெண்ணின விடுதலையாளர்கள், தலித்தியம்/அம்பேத்காரியம், பெரியாரியம் போன்ற முற்போக்காளர்கள். அதனால் தான் முற்போக்கான எந்த விசயத்தையும், சொல்லையும், செயலையும் ஏற்க முடியாத நிலையில் பார்ப்பனீய இந்துத்துவம் இருக்கிறது. இந்துத்துவத்தின்/பார்ப்பனீயத்தின் எதிரிகள் தேசவிரோதிகள் என்றால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது பார்ப்பனீய 'கலாச்சார தேசியம்'. மனிதம் என்னும் உயரிய விழுமியம் காக்கப்பட பார்ப்பனீய 'கலாச்சார தேசிய மாயை' உடைக்கப்பட வேண்டியது அவசியம்.

இப்போது சொல்லுங்கள் பூங்கா தலையங்கம் எந்த தேசியத்திற்கு எதிரானது? நேரடியாகவே பார்ப்பனீய 'ஒற்றைமுறைப்படுத்தலுக்கு' எதிரானது. தேசியத்தையும் பார்ப்பனீயத்தையும் போட்டு குழப்பும் இந்துத்துவ வேடங்களை அடையாளம் கண்டு கொள்வோம்.

Our true nationality is mankind. H. G. Wells

Wednesday, March 28, 2007

எனது கிறுக்குத்தனங்கள்

பொதுவாக தொடர் விளையாட்டுக்கள் நடக்கிற நேரம் வேடிக்கை பார்ப்பதோடு சரி. அஞ்சலி திடீர்னு சுடரை கையில குடுத்தாங்க. தொடர்ந்து தருமி அய்யா "கிறுக்குத்தனங்களை சொல்லு" ன்னு நம்மளையும் மாட்டி விட்டுட்டார். ம்ம்ம் தப்பிக்கலாம்னா வேற வழியே இல்ல.

கிறுக்குத்தனங்களும் இணைந்த வாழ்க்கை தான் சுவையானது. எப்போதாவது நம் அனைவருக்குள்ளும் கிறுக்குத்தனங்கள் இருந்துகொண்டே தான் இருக்கும். நம்மிடம் இருக்கும் கிறுக்குத்தனங்கள் எவை என அறிவது நமக்கு எளிதான விசயமல்ல. சில கிறுக்குத்தனங்கள் சுவையானவை, சில சோம்பேறித்தனமானவை, சில மாற்றப்படவேண்டியவை என பல நமக்குள் இருப்பதை கண்டுபிடிப்பதும், இனம் பிரிப்பதும் ஒரு வகை கலை. இந்த விளையாட்டு அதற்கு உதவுகிறது எனலாம்.

இனி எனக்குள் இருக்கும் கிறுக்குத்தனங்கள் சில...

எதாவது செய்யணும்னு நினைத்து திட்டம் எல்லாம் ஒழுங்கா தீட்டிடுவேன். செயல்படுத்தும் போது இன்னும் நிறைய நேரம் இருக்கு, கொஞ்சம் சாவகாசமா செய்யலாம்னு கடைசிநேரம் வரை காலம் தள்ளுவது. கடைசியில் வேற வழியில்லாம பந்தயக்குதிரை வேகத்துல ஓடி செய்யுற நேரம் 'இனி இப்படி செய்யக்கூடாது'னு நினைக்கிறது உண்டு. மறுபடியும் பழைய கதை தான் :). ஒரு வகையில் இதுவும் பிடித்திருக்கிறதோ? அது தான் இந்த பதிவு கூட கடைசி நேரத்தில் தான் பதிவு செய்கிறேன்.

எப்போதும் கையில் புத்தகம் ஏதாவது இருந்து கொண்டிருக்கும். வேலையில்லாமல் நண்பர்களுடன் அரட்டையடித்த காலத்தில் இந்த பழக்கம் துவங்கியது. இந்தியாவில் இருந்த காலங்களில் நீண்ட தூரம் பேருந்து பயணம் செல்லும் போது புத்தக மூட்டையே கைவசம் இருந்தது. இப்போ அந்த பழக்கம் கையில புத்தகத்தோட ரோட்டில் நடக்க வைக்குது. நடந்துகொண்டே படிக்கிறதை நிறுத்திடணும்னு பார்த்தாலும் முடியவில்லை. வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் இடையில் சிறிய தூரத்தில் கூட நடந்துகொண்டே படிக்கும் பழக்கம் இருக்கவே செய்கிறது.

வரிசையில, புதுசா வந்து சேர்ந்த பழக்கம் இயற்கையை வேடிக்கை பார்ப்பது. போகிற வழியில் எங்காவது பூ, குருவி, புறா, குழந்தைகள், விந்தையான காட்சிகள் எதாவது பார்த்தால் சிறிது நேரம் நின்று ரசித்த பின் தான் போவேன்.

ராத்திரி நீண்டநேரம் உறங்காமல் இருக்கிறது. அதன் பலன் காலையில் 8 மணிக்கு பிறகு தான் உறக்கம் எழும்புவது. அதுவும் கைத்தொலைபேசியில் காலையில் 6 மணிக்கு ஒரு தடவை, 8 மணிக்கு இன்னொரு தடவை என மணியடிக்கும். இருந்தும் எழும்புறது 8.15 மணிக்கு தான்.

திடீர்னு பாட்டு படிக்கிறது (நமக்கு தான் பாட வராதே :)). பக்கத்துல இருக்கிறவங்க பாடு தான் பாவமா இருக்கும்.

இப்படி பல கிறுக்குத்தனங்கள்...

அடுத்து யாரை மாட்டி விடலாம்?

1. அஞ்சலி
2. மதி கந்தசாமி
3. ஆழியூரான்
4. பாலபாரதி
5. பொன்ஸ்

ஏற்கனவே உங்க கிறுக்குத்தனங்களை சொல்லியிருந்தா வேற ஆளை மாட்டி விடுங்க...

யப்பா... தப்பிச்சாச்சு

Monday, March 26, 2007

இந்தியா: மருந்து சோதனை எலிகளின் கூடாரம்!

நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவரிடம் செல்கிறோம். மருத்துவர் தருகிற மருந்தின் விளைவு, தரம் பற்றியும் அறியாமலே அதை பயன்படுத்துகிறோம். நோய் குணமடைவதற்கு பதிலாக புதிய பிரச்சனை உருவானால் எப்படி இருக்கும்? பல மருத்துவர்கள் கடைகளில் விற்பனைக்கு வராமல் சோதனை கட்டத்தில் இருக்கும் மருந்துகளை ஏழை நோயாளிகளிடம் கொடுத்து பயன்படுத்த சொல்வதுண்டு. இப்படி மருத்துவர் இலவசமாக தருகிற மருந்துகளை பெற்றுக்கொள்ளும் ஏழைகள் நன்றியுடன் பெறுவதுண்டு. தனக்கு தரப்பட்டுள்ள மருந்து சந்தையில் விற்பனை செய்ய உரிமம் பெற்றதல்ல, அதன் பக்கவிளைவுகள் பற்றிய சரியான கணிப்பு இல்லை என்பது ஏழை நோயாளிக்கு தெரிவதில்லை. தனது நோயை பயன்படுத்தி சோதனை ஒன்று நடைபெறுவதும் அவர்களுக்கு தெரிவதில்லை. ஏழ்மையை பயன்படுத்தி ஆய்வுகளை நடத்துவது மருத்துவர்கள் மட்டுமல்ல. மருத்துவர்களுக்கு பின்னால் விற்பனை பிரதிநிதிகள், மருந்து நிறுவனங்கள் என பெரிய கூட்டமே இயங்குகிறது. சிலவேளைகளில் மருத்துவருக்கே தான் செய்யும் செயலின் பின்விளைவுகள் பற்றி தெரிகிறதா என்பது சந்தேகமே. இந்த மருந்து சோதனையை (Clinical Trial) நிகழ்த்தும் மருந்து நிறுவனங்கள் தான் ஒழுக்கமற்ற நடைமுறைகளை கடைபிடிக்கும் முதல் குற்றவாளிகள்.

மருந்து பொருட்களை தயாரிக்கும் முயற்சியில் மருந்து சோதனை மிக முக்கியமானது. புதிதாக உருவாக்கப்படும் மருந்து மற்றும் கருவிகளின் செயலாற்றும் திறன் மற்றும் பயனை கணிப்பிட மருந்துவ ஆராய்ச்சி அவசியமாகிறது. புதிதாக கண்டுபிடிக்கப்படும் நோய் தடுப்பு மருந்துகள் மற்றும் கருவிகளை முதலில் விலங்கினங்கள் மீது சோதனை செய்து வெற்றியடைந்த பின்னர் மட்டுமே பல கட்டங்களாக மனித உடலில் செலுத்தி கட்டுப்பாடான சூழ்நிலையில் வைத்து கண்காணிக்க வேண்டும் என்பது பொது நடைமுறை. இந்த சோதனை முடிவுகள் அடிப்படையில் மருந்தின் தரம் மற்றும் பாதுகாப்பிற்கான இறுதி வடிவமும், அனுமதியும் கொடுக்கப்படுகிறது. அதன் பின்னரே ஒரு மருந்து கடைகளில் விற்கப்படும். புதிய மருந்து சோதனைக்கு தங்களை பயன்படுத்த அனுமதிப்பவர்களுக்கு பணம் கிடைப்பதால் தானாகவே பலர் சேர்வதுண்டு. மருந்து சோதனைக்கு தன்னை ஈடுபடுத்த முன்வரும் நபர்களிடம், சோதனையின் தன்மை, பாதிப்புகள் பற்றிய அனைத்து விபரங்களையும் தெரிவித்த பின்னரே சம்மதம் பெறப்படவேண்டும் என்பது பொதுவான விதி. நடைமுறையில் இவை அனைத்தும் மீறப்படுகிறது.

பெரும்பாலும் சோதனைக்கு உட்படுபவர்களுக்கு பாதுகாப்புக்கான உத்தரவாதம் ஆய்வு நிறுவனங்களால் தரப்படுவது இல்லை. தன்னை சோதனைக்கு உட்படுத்த சம்மதிப்பவர்கள் பணம் கிடக்கும் ஆசையில் இருப்பதால், உடல்நலம் பற்றிய பாதிப்புகளை பற்றி தெரிந்துகொள்ளும் விழிப்புணர்வு குறைந்தே இருக்கிறார்கள். சோதனைக்கு உட்படும் நபர்களின் அறியாமையை பயன்படுத்தி சோதனையின் பக்கவிளைவுகளை பற்றி தெரிவிக்காமல் மருந்து நிறுவனங்கள் ஆய்வுகளை நிறைவேற்றுகின்றன. மருந்து சோதனையில் ஒளிவு மறைவற்ற தன்மையையோ, நேர்மையோ மருத்துவ ஆய்வு நிறுவனங்கள் கடைபிடிக்கவில்லை என்று பிரிட்டன், அமெரிக்கா முதலான மேற்கத்திய நாடுகளில் எதிர்ப்புகள் எழுகின்றன. புதிய மருந்து ஒன்றை கண்டுபிடித்தால் கிடைக்கும் பண இலாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு மருத்துவ ஆய்வு நிறுவனங்கள் இயங்குகின்றன. உலகமயமாக்கல் கொள்கையின் முதலாளித்துவ சித்தாந்தத்தில் இயங்கும் காப்புரிமை, போட்டி, இலாப நோக்கு மட்டுமே மருந்து நிறுவனங்களின் நோக்கமாக அமைந்துவிட்டதால் பக்கவிளைவுகளைப் பற்றி கவலைப்படாது நேர்மையற்ற வழிகளில் ஆய்வுகளை மேற்கொள்கின்றன.

பிரிட்டனில் மருந்து சோதனையால் பாதிப்படைந்த அதிர்ச்சிகரமான ஒளிப்பதிவு ஒன்று இங்கே (நேரம் இருப்பின் அவசியம் பார்க்க வேண்டியது):

இந்தியாவில் 1970 மற்றும் 1980-களில் நடத்தப்பட்ட மருத்துவ சோதனைகளின் போது புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள் கொண்ட திசுக்கள் 1000 பெண்களிடம் கண்டறியப்பட்ட போதும் ஆய்விற்காக மருத்துவம் செய்யாது (அந்த பெண்களுக்கு தெரிவிக்காது) விடப்பட்டது. சோதனையின் இறுதியில் அவர்களில் 71 பேருக்கு கட்டிகள் உருவாகியது. 9 பேர் புற்றுநோயால் முழுவதும் பாதிக்கப்பட்டிருந்தனர். 62 பேருக்கு குறைந்த அளவு புற்றுநோய் பரவிய பின்னரே மருத்துவம் செய்யப்பட்டது.

1990ல் அமெரிக்காவை சார்ந்த இரு ஆய்வாளர்கள் பல நாடுகளில் சட்டத்திற்கு புறம்பான ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். ஒருவகை காய்ச்சலை குணப்படுத்த பயன்பட்டுவந்த Quinacrine http://en.wikipedia.org/wiki/Quinacrine என்னும் ஆபத்தான மருந்தை கருத்தடைக்கு பயன்படுத்த சிலி, இந்தியா, வங்காளதேசம், வியட்நாம் போன்ற நாடுகளில் ஆயிரக்கணக்கான ஏழை பெண்கள் மீது இந்த சோதனை நடத்தப்பட்டது. பெண்களின் கருப்பைக்குள் இந்த மாத்திரையை அனுமதி பெறாமலே நுழைத்தனர். இந்த சோதனையின் விழைவாக கருப்பையின் பகுதிகள் கருகியது மட்டுமல்ல பெலோப்பியன் குழாய் அடைபட்டது. முன்னர் உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலையீட்டினால் இந்த ஆய்வு மேற்கு நாடுகளில் நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஆய்வாளர்களால் கடத்தி வரப்பட்டு, மேற்கு வங்காளம் மற்றும் பிற மாநிலங்களில் 30,000 பெண்களுக்கு சட்டத்திற்கு புறம்பான முறைகளில் சோதனைக்காக கருத்தடை செய்யப்பட்டது. மேற்கு வங்காளத்தில் மட்டும் 10,000 பெண்களிடம் இந்த சோதனை நடந்தது. சமூக போராளிகளின் தொடர்ந்த சட்டப்போராட்டத்தின் விளைவாகா உச்சநீதிமன்றம் quinacrine sterilisationஐ இந்தியாவில் தடைசெய்தது. ஆனால் மருத்துவர்கள் antibiotic erythromycin என்னும் மருந்தை அதே காரணத்திற்காக சோதனை செய்ய துவங்கினர். இந்த சட்டப்புறம்பான சோதனையின் மருத்துவ முடிவுகள் சர்வதேச சஞ்சிகைகளில் பிரசுரிக்கப்பட்டது. "இன்னும் மேற்கு வங்காளத்தின் கிராமப்புறங்களில் quinacrine கிடைக்கிறது" என பத்திரிக்கையாளர் ராஜஸ்ரீ தாஸ் குப்தா தெரிவிக்கிறார்.

அரசுக்கு சொந்தமான மாநில புற்றுநோய் மருத்துவ மையம் திருவனந்தபுரத்தில் 1999 ஆண்டு வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 25 நோயாளிகளுக்கு சோதனை மருந்து ஒன்றை அவர்கள் அனுமதி இல்லாமல் கொடுத்தனர். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சோதனை பொருட்களின் வேதியல் பெயர் chemical tetra-O-methyl nor-dihydro-guaiaretic acid (M4N) or tetraglycinyl nor-dihydro-guaiaretic acid (G4N). வாய்புற்றுக்கு ஏற்கனவே கண்டறியப்பட்ட மருந்து இருந்தும் சோதனைக்காக இப்புது வேதிப்பொருள் கொடுத்ததன் மூலம் நோயாளிகளின் உரிமை மீறப்பட்டது. இந்த சோதனை இந்திய மருந்து கட்டுப்பாடு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்ததக்கது. அவர்களில் 10 நோயாளிகளுக்கு அளவுக்கு அதிகமான உறுப்பு வளர்ச்சி கண்டறியப்பட்டு மருத்துவம் நிறுத்தப்பட்டது. இந்த மருத்துவ ஆய்வை அமெரிக்க நிறுவனமான Johns Hopkins University நன்னெறி ஒப்புதல்கள் வழங்காமலே நிதியுதவி செய்திருந்தது. இந்திய மருத்துவ ஆய்வு மையம் இந்த சோதனை பற்றிய விசாரணையை நடத்தியது. விசாரணை அறிக்கையை மக்கள் பார்வைக்கு வைக்காமல் மறைக்கப்பட்டது.

இந்திய மருத்துவ ஆய்வு மையம் மனிதர்கள் மீது செய்யப்படும் மருத்துவ ஆய்வுகளுக்கான நன்னடத்தை விதிகளை 2000 ஆண்டில் முடிவு செய்தது.
2002ல் Novo Nordisk என்னும் பன்னாட்டு நிறுவனம் சர்க்கரை வியாதிக்கான மருந்து சோதனையின் 3வது கட்டத்தை விலங்குகள் மீதான சோதனையின் அறிக்கையை பெறும் முன்னரே நடத்தியது. எலிகள் மீது நடத்தப்பட்ட சோதனை அறிக்கையில் ragaglitazar என்னும் இந்த மருந்து எலிகளுக்கு சிறுநீர்ப்பையில் கட்டிகளை உருவாக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதல் இரண்டு கட்ட சோதனைகளை தாண்டாமலே மூன்றாம் கட்ட சோதனைக்கு இந்த ஆய்வை நடத்தப்பட்டது. Ragaglitazar என்னும் இந்த மருந்தை ஐதராபாத்தை சார்ந்த Dr Reddy's Laboratories, என்னும் நிறுவனம், Novo Nordisk அனுமதி பெற்று உருவாக்கியது. தென் அமெரிக்கா, பசிபிக், ஐரோப்பா, இந்தியா போன்ற இடங்களில் இந்த சோதனை நிறைவேற்றப்பட்டது. இந்திய மையங்களின் வழி மட்டும் 130 நபர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டனவா என்பது பற்றிய தகவல்களை வெளியிட Novo Nordisk மறுத்துவிட்டது.

2003ல் மும்பையை சார்ந்த சன் பார்மாசூட்டிகல் தொழிற்சாலை மருத்துவர்களுக்கு சலுகைகளை வழங்கி 400 பெண்களுக்கு புற்றுநோய் தடுப்பு மருந்து கொடுத்து சோதனை நடத்தியது. மருத்துவ விற்பனை பிரதிநிதிகள் வழியாக அந்த மருத்துவர்களின் அறிக்கைகளை பெற்று ஆய்வு அறிக்கை என மாற்றியது.

2003 - 2004, சாந்தா பயோடெக் நிறுவனம் மாரடைப்பு நோயாளிகள் மீது இரத்தக்கட்டிகளை நீக்க streptokinase என்னும் மருந்தை சோதனை செய்தது. இதே காரணத்திற்கான மருந்து ஏற்கனவே இருந்தும் Streptokinase அவசரமாக உயிரை காப்பாற்ற என்ற பெயரில் கொடுக்கப்பட்டது. இந்த சோதனைகளுக்கான மருத்துவத்துறை சார்ந்த அனுமதி, நோயாளிகளின் அனுமதி பெறப்படவில்லை. சோதனையில் பாதிக்கப்படுபவர்களுக்கான இழப்பீடுகள் பற்றி நிறுவனத்திடம் எந்த விதிமுறைகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்விக்கு பதில் சொல்லாமல் ஓடும் மருந்து நிறுவன அதிகாரி பற்றிய ஒளிப்பதிவு:

மருந்து நிறுவனங்கள், விற்பனை பிரதிநிதிகள், ஆய்வுக்கூடங்கள், மருத்துவர்கள் என கூட்டணி சேர்ந்து நோயாளிகளது உயிரைப்பற்றி கவலைப்படாமல் நடத்தப்படும் சோதனைகள் இந்தியாவில் இயல்பாகவே நடந்துகொண்டிருக்கிறது. இந்த சூழநிலையில் உலகமயமாக்கல் பொருளாதாரத்தின் புதுவரவாக outsourcing அடிப்படையில் மருந்து சோதனை இந்தியாவிற்கு இடம் மாறி வருகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் மருந்து சோதனையால் வரும் பணத்தை குவிக்க தனது பொருளாதார, சட்ட, நிர்வாக கதவுகளை இந்தியா கடந்த பல ஆண்டுகளாக திறக்க துவங்கிவிட்டது. பன்னாட்டு மருந்து நிறுவனங்களான Novo Nordisk, Aventis, Novartis, GlaxoSmithKline, Eli Lilly மற்றும் Pfizer மருந்து சோதனைக் கூடங்களை இந்திய நகரங்களில் நிறுவி வருகின்றன. எல்லா மருந்து நிறுவனங்களுக்கும் விருப்பமான இடம் நரேந்திர மோடி ஆளும் குஜராத் மாநிலம். 2010ல் சுமார் 2 மில்லியன் இந்திய நோயாளிகள் மீது மருந்து சோதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கும். இந்தியாவில் இருக்கிற நோயாளிகளை குறிவைத்தே மருத்துவ சோதனைகளை பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு நகர்த்துகின்றன. அதிகபடியான நோயாளிகள் இருப்பதும், பெரும்பாலானோர் எந்த மருந்துகளையும் பயன்படுத்தாமல் இருப்பதும் தங்களது புதிய மருந்துகளை சோதனை செய்யும் ஆய்வுகளுக்கு நல்லது என மருந்து நிறுவனங்கள் கருதுகின்றன. இந்தியாவில் சுமார் 30 மில்லியன் பேருக்கு இதயநோயும், 25 மில்லியன் பேர் இரண்டாவது வகை சர்க்கரை வியாதியிலும், 10 மில்லியன் பேருக்கு மனநோயும் இருப்பதால் இந்த மருந்து சோதனைக்கு தகுதியானதாக இந்தியா கருதப்படுகிறது.

மிக குறைந்த செலவில் எந்த விதமான சிக்கலும் இல்லாமல் இந்தியாவில் மருந்து சோதனை மற்றும் ஆய்வுகளை செய்துவிடமுடியும். அமெரிக்காவை விட பாதி செலவில் மருந்து சோதனையை இந்தியாவில் நிறைவேற்ற முடியும். பன்னாட்டு நிறுவனங்களின் மருந்து ஆய்வுகளுக்கு தேவையான மருத்துவ துறையில் பட்டங்கள் படித்தவர்கள் இந்தியாவில் குறைந்தௌஉதியத்திற்கு வேலை செய்ய காத்திருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும் என தெரிவிக்கப்படுகிறது. 2002ல் மட்டும் மருந்து சோதனை வழி இந்தியா ஈட்டிய பணம் 70 மில்லியன் அமெரிக்க டாலர் என இந்திய தொழில் கூட்டமைப்பு அறிக்கை தெரிவிக்கிறது. இந்த வருடத்தில் இந்த தொகை 200 மில்லியன் அமெரிக்க டாலர் ஆக உயரும். 2010ல் இதன் வேகம் 500 மில்லியன் முதல் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை குவிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2007 நிதிநிலை அறிக்கையில் மருத்துவ ஆய்வுகளுக்கு சேவை வரி விலக்கு அளிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மருந்து சோதனைக்கான 'விரும்பத்தகுந்த இடமாக' இந்தியாவை மாற்ற இந்த வரிவிலக்கு உதவும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். சுமார் 20 நிறுவனங்கள் இந்தியாவில் மருந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. 2010ஆம் ஆண்டிற்குள் உலக அளவிலான மொத்த மருந்து சோதனையில் 20 சதவிகிதம் சோதனைகள் இந்திய நோயாளிகளிடம் செய்யப்படும்.

மருந்து நிறுவனங்களில் சோதனைகளால் இந்திய மக்கள் குறிப்பாக எழை நோயாளிகள் சந்திக்க இருக்கிற வேதனைகளை பற்றி அரசும், அமைப்புகளும் மௌனமே சாதிக்கிறது. மருந்து சோதனைகள் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்வதால் எழைகளின் வாழ்வில் வேதனை மட்டுமே மிஞ்சும். மனிதர்களை "சோதனை மிருகங்களாக" பயன்படுத்தும் போக்கு இந்தியாவில் இன்னும் வளரும். எயிட்ஸ் நோய்க்கான மருந்து சோதனை இந்தியாவில் இரண்டாவது கட்டத்தை அடைந்துள்ளது. இந்த சோதனையில் மனிதர்கள் ஈடுபடுத்தப்பட்டது நாடறிந்தது. மேனகா காந்தி சுகாதரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றது முதல் பிராணிகள் மீது மருந்து சோதனை செய்வது தடைசெய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மருந்து நிறுவனங்கள் பிராணிகளுக்கு பதிலாக மனிதர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்த துவங்கின.

உலகமயமாக்கல் பொருளாதாரத்தை இலாப நோக்கில் பார்க்கும் முதலாளிகளுக்கு ஏழைகளின் நோய் முதலீட்டிற்கான ஒரு வாய்ப்பாக அமைகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் நோயாளிகளது அறியாமை, குடும்ப வறுமை மற்றும் ஏழ்மையை தங்களது ஆய்வு சோதனைகளுக்கான முதலீட்டு தளமாக மனிதாபிமானமற்று கருதுகிறது. நிதிநிலை அறிக்கைகள் தயாரிப்பின் போது பணக்காரர்கள், முதலாளிகள், நிறுவனங்கள் ஆகியவர்றுன் விருப்பத்தின் அடிப்படையில் திட்டங்களை தீட்டும் அரசு ஏழைகளின் நோயை விற்று தனது பெட்டியில் டாலரை குவித்து 'வளர்ச்சி' என பெருமை கொள்கிறது.

இந்தியா உலக ஒழுங்குமுறைக்கு ஏற்ப மருந்து சோதனைக்கான விதிகள், நோயாளியின் சம்மதம் பெற விதிமுறை போன்றவை ஏற்படுத்தப்பட்டிருகிறது. ஆனால் நடைமுறையில் படிப்பறிவு இல்லாத நோயாளிகளது சம்மதம் பெறுவது பற்றி அறிஞர்கள் சந்தேகமடைகின்றனர். கோடிக்கணக்கான அமெரிக்க டாலர்களை அள்ளிக் குவிப்பதால் இந்திய ஏழைகளின் உடல்நலன் மற்றும் பாதுகாப்பு பற்றிய கவலையில்லாது பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடங்கிஅய் நிலையில் இந்திய ஏழைகளின் பாதுகாப்பை பற்றி கவலைப்படாது இந்திய மருத்துவத்துறையும், அரசுகளும் இயங்குகின்றன.

நோய்க்கு என்ன மருந்து தரப்படுகிறது, அதன் அவசியம் என்ன? என்ன பக்க விளைவுகளை ஏற்படுத்தும்? இந்த மருந்தின் தரமென்ன? என்பதை அறியும் உரிமை நோயாளிக்கு உண்டு. நடைமுறையில் மருத்துவர்கள் இந்த அடிப்படை உரிமைகளை மதித்து செயல்படுகிறார்களா என்பது கேள்வியே! வளர்ந்த நாடுகளே தடுமாறும் ஒரு பிரச்சனையை இந்தியா வலிய வந்து டாலருக்காக அணைத்துக்கொள்கிறது. இனி மருந்து நிறுவனங்களின் கையில் இந்திய ஏழைகளின் உயிர்.

Saturday, March 24, 2007

சுடர்: அஞ்சலி தந்த தீப்பந்தம்!

எனக்கு மிகவும் நேசத்திற்குரிய அஞ்சலியிடமிருந்து திடீரென தொலைபேசி அழைப்பு வந்தது. "நான் உங்களுக்கு சுடர் கொடுத்திருக்கேன். நீங்க எழுதுவீங்க தானே" என அன்பான உத்தரவு :).

நடனம், இசை, விளையாட்டு, ஓவியம், படிப்பு, பல மொழிகள் என திறமையாக வளர்வதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்குது. அஞ்சலியின் விண்வெளி விஞ்ஞானியாகும் கனவு நிறைவேற வாழ்த்துக்கள்.

அஞ்சலி நெருப்பை கொடுத்த போது கேட்டிருந்த கேள்விகள் இனிமை. ஒரே கேள்வியில் துணைக்கேள்விகளாக பல கேள்விகளை கேட்டிருக்கும் அழகு அருமை. கேள்விகள் கொஞ்சம் கடினமாக தான் இருக்கிறது :). முடிந்த அளவு எனது பதில்களை தருகிறேன்.

1. நீங்க எதுக்கு blog எழுத choose பண்ணினீங்க?
தமிழில் ஒரு வலை மன்றத்தில் பொது விசயங்களை பற்றி எழுதியதை படித்த ஒரு நண்பர் வலைப்பதிவு துவங்க சொன்னார். எனக்கு தெரிந்ததை மற்றவங்களுக்கு சொல்லவும், மற்றவங்களுக்கு தெரிந்ததை அறிந்துகொள்ளவும் வலைப்பதிவு செய்ய ஆரம்பித்தேன்.

2. தமிழ் உங்களுக்கு நல்ல விருப்பமா?
ஆமாம், தமிழ் மொழி மீது விருப்பம் அதிகமுண்டு. பிறந்தது முதல் அறிந்த, பேசிய, பழகிய மொழி தமிழ் தானே அதனால் இயல்பாக அதிக விருப்பம். மலையாளம் மற்றும் ஆங்கிலம் சரளமாக பேச தெரியும். பிரெஞ்சு படித்து வருகிறேன். பழக்கமாகி போனதாலோ என்னவோ எந்த மொழியில் பேசினாலும் தமிழில் தான் முதலில் சிந்தனை வருது.

3. இந்தியாவில எப்படி இருக்குது? அங்க நிறைய elephants இருக்கா? அங்க நல்ல sunny யா இருக்குமா? நிறைய beaches இருக்கா? உங்களுக்கு இந்தியா நல்ல விருப்பமா? ஹொங்கொங் ல முந்தி இருந்தீங்கதானே? ஹொங்கொங் உம் உங்களுக்கு விருப்பமா?
இந்தியாவில் பார்க்க அழகான இடங்கள் நிறைய இருக்கு.பெரிய யானை, குட்டி யானை என நிறைய யானைகள் இருக்கு.யானைகளுக்கு பெரிய சரணாலயம் கூட இருக்கு. அங்கே போனா யானைகளை பார்க்கலாம். சில கோயில்கள்ல கூட யானை வளர்க்கிறாங்க. வலைப்பதிவாளர்கள் சிலர் யானை இரசிகர்களாக இருக்காங்க :).

இந்தியாவில் வெயில் காலம், மழைக்காலம் என உண்டு. நார்வே மாதிரி பனி பொழிகிற பகுதிகளும் உண்டு. ஒரு பகுதியில் சூடாக இருக்கிற அதே நேரம் இன்னொரு பகுதியில் குளிரா இருக்கும்.

இந்தியாவில் அழகான கடற்கரைகள் நிறைய இருக்கு. சுமார் 5700 கிலோமீட்டர் நீளம் கடலோர பகுதிகள் மட்டும் இந்தியாவில் (அஞ்சலி பேசும் தமிழ் 'மட்டும் இந்தியா' :) ) இருக்கு. இரண்டு பெரிய தீவுகளையும் சேர்த்தால் அது 7500 கிலோமீட்டர் தூரம்.

எல்லா நாடுகளையும் பிடிக்கும். இந்தியாவில் பிறந்து, வளர்ந்ததால் கொஞ்சம் கூடுதலாக இந்தியா பற்றி தெரியும்.

ஆமா ஹாங்காங் பிடிக்கும். அழகான சின்ன கடற்கரைகள் உள்ள இடம்.

4. நீங்க என்னோட Sri Lanka க்கு வந்தீங்கதானே? உங்களுக்கு திருப்பியும் என்னோட Sri Lanka வர விருப்பமா? Sri Lanka ல உங்களுக்கு என்ன விருப்பம்?

உங்களோட 2002 டிசம்பர் உங்களோட இலங்கை வந்தது ரொம்ப சந்தோசம். இன்னமும் வாய்ப்பு கிடைத்தால் உங்களோடு இலங்கை வர விருப்பம். அங்கு நாம் பார்த்த மக்களின் எளிமையான வாழ்க்கை பிடித்திருக்கு. பனைமரம் பிடிக்கும். இயற்கை கொஞ்சும் அழகிய ஒழுங்கைகள், வேலிப்படல்கள், கடற்கரை, யானை என நிறைய பிடிக்கும்.

உங்களோடு குழந்தைகள் காப்பகமான 'குருகுலம்' சென்று, அங்கு குழந்தைகளிடம் பேசியது மறக்கமுடியாத நிகழ்வு. அது பற்றியும் வலைப்பதிவில் எழுதியிருக்கிறேன். யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அப்பா, அம்மா, உறவுகள் அனைவரையும் இழந்த அந்த மழலைகள் பிடித்திருந்தார்கள். யுத்தம் நின்று தமிழர்களின் விடுதலையும், உரிமையும் கிடைக்க வேண்டும்.

5. ஐந்தாவது கேள்வி என்ன கேக்கிறது எண்டு நிறைய யோசிச்சன். எனக்கு படுக்கிற நேரமும் வந்திட்டுது. அதால நிறைய யோசிக்கவும் முடியெல்லை. அம்மா சொன்னா, கஷ்டமா இருந்தா பெயரிலி மாமா என்னட்டை கேட்ட கடைசி கேள்வியையே (மேலதிகக் கேள்வி), உங்களிட்டையும் கேக்கச் சொல்லி. அதால அந்த கேள்வியையே கேக்கிறன். உங்களிட்டை வேறை என்ன கேள்வி கேட்டிருக்கலாம் எண்டு நீங்க நினைக்கிறீங்க. அந்த கேள்விக்கு பதிலென்ன?

ஆங், இது கொஞ்சம் கஸ்டமான கேள்வி! என்ன கேள்வி கேட்டிருக்கலாம்? (சரி கேள்வி நீங்க கேட்பதால் உங்கள் வழக்கமான கேள்வியில் ஒன்றை கேட்கிறேன்.)

என்னோடு விளையாட பிடிக்குமா? இந்த கேள்வியை கேட்டிருக்கலாம்.
உங்களோடு விளையாட பிடிக்கும். அதுவும் நீங்கள் விளையாட்டுக்கு சொல்லும் புதிய விதிமுறைகள் பார்க்க பிடிக்கும். விளையாட்டில் நீங்க வெற்றி பெறும் வரைக்கும், தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருப்பது பிடிக்கும்.

யப்பா...கேள்விகள்ல இருந்து கடந்து வந்தாச்சு. இனி யாரு மாட்டப்போறாங்க....நம்ம பத்மா அர்விந்த் வாங்க. தீப்பந்தத்தை பிடியுங்க. என்ன கேட்கலாம் உங்க கிட்டே? ....

சரி ரொம்ப எளிமையான கேள்விகளாக கேட்கிறேன்.

 1. அமெரிக்காவில் விளிம்புநிலை மனிதர்கள் நிலை பற்றி சொல்லுங்களேன்.

 2. சமூக நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அரசு குறைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பாதிப்பு விளும்புநிலை மனிதர்கள் மீது எப்படி இருக்கிறது/இருக்கும்?

 3. சமீபத்தில் உங்களை பாதித்த நிகழ்வு எது? ஏன்?

 4. மூன்றாம் உலக நாடுகளின் பெண்கள் விடுதலைக்கும், வளர்ந்த நாடுகளது பெண் விடுதலைக்கும் மத்தியிலான ஒற்றுமை என்ன? வேறுபாடுகள் இருப்பின் அவை என்ன?

 5. சுடர் உங்களிடம் கிடைத்தால் நீங்கள் சொல்ல வேண்டுமென நினைத்தது என்ன?

Wednesday, March 21, 2007

மனுதர்ம குப்பை!

மனு ஸ்மிருதியை பஞ்சகட்சம் கட்டி அலங்கரித்து புனித வட்டம் சூட்டி கட்டுரைகள் எழுதி வருகிறார்கள் சிலர். மனுதர்ம குப்பையை அள்ளியெடுத்து பூசிக்கொள்வது மட்டுமல்ல; நீங்களும் பூசிக் கொள்ளுங்கள் சந்தனமாக மணக்கிறது என கூக்குரலிடுவது அவர்களுக்கு பிடித்திருக்கிறது. ஆதிக்கச்சாதி மனம் கொண்டவர்களிடம் ஒடுக்கப்பட்டவர்களின் நீதியை எதிர்பார்க்க முடியாது தான். அதற்காக ஆதிக்கச்சாதியினரின் கருத்து தான் உண்மை என்றாகி விடாது. ஒடுக்கப்பட்டவர்களின் குரலை கேட்கவும் மனிதர்கள் உள்ள காலமிது. திண்ணையில் திரு. மலர்மன்னன் என்பவர் சமீபத்தில் மனு தர்மத்தை ஆதரித்து மூன்று கட்டுரைகள் எழுதியிருந்தார்.

 • மனுதர்மத்தை எதிர்ப்பவர்கள் மனுதர்மத்தை முழுவதும் புரிந்துகொள்ளவில்லை.
 • சமஸ்கிருத மூலத்திலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்பு உள்நோக்கமுடையது. ஆங்கில வழி கல்வியால் ஊட்டப்பட்டதை நம்மவர்கள் நம்பி பயன்படுத்துகிறார்கள்.
 • மனுதர்மத்தில் இடைச்சொருகல்கள் உள்ளன அவற்றை வேறுபடுத்தி பார்க்காமல் பார்ப்பனீய மதத்தை எதிர்க்க பயன்படுத்துகிறார்கள். இடைச்சொருகல்களை பிரிந்து பார்த்து நல்லவனவற்றை ஏற்கலாம்.

என மனு தர்மத்தை எதிர்ப்பவர்களை குறைகூறும் விதமாக அந்த கட்டுரைகள் அமைந்திருந்தன.

"சமஸ்கிருதம் படித்த அறிவாளி அம்பேத்கருங்கூட ஒரு மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சியாக மனு ஸ்மிருதி நூலின் பிரதியைக் கொளுத்தியிருக்கிறார். மனு ஸ்மிருதியை ஆதாரம் காட்டித்தான் தீண்டாமைக் கொடுமைகள் நியாயப்படுத்தப்படுவது போன்ற ஒரு பிரமையை அவர் தோற்றுவித்திருக்கத் தேவையில்லைதான். மனு ஸ்மிருதி என்கிற பெயரையே கேள்விப்படாத அடித்தட்டு மக்களால்தான் தீண்டாமைக் கொடுமைகள் மிகவும் தீவிரமாகக் கடைப்பிடிக்கப் பட்டு வருகின்றன என்பதை அறியாதவரல்ல, அம்பேத்கர்." இது மலர்மன்னன் எழுதிய கட்டுரையின் பகுதி.

அண்ணல் அம்பேத்கார் சமஸ்கிருதம் கற்று தனது சொந்த அறிவால் மனுஸ்மிருதியை, வேதங்களை பல ஆண்டுகளாக ஆராய்ந்து அதன் அடிப்படையில் எடுத்த கொள்கைப்போர் தான் மனுஸ்மிருதியை எரித்தது. அரைவேக்காட்டுத்தனமாக அம்பேத்கார் மீது சேற்றை வாரி எறியும் மலர்மன்னன் ஒடுக்கப்பட்ட மக்களது விடுதலை எழுச்சியையே கேலிசெய்கிறார். ஆதிக்கச்சாதி திமிரின் இந்த வெளிப்பாடு மிகவும் ஆபத்தானது. சாதிக்கொடுமைகளை கடைபிடிக்க மனுஸ்மிருதியை படிக்க அவசியம் இல்லை என்பது சிறு குழந்தைக்கும் தெரியும். மேலிலிருந்து கீழாக படிநிலையில் அடக்குமுறைய சாதி அடுக்குகளாக வைத்து 'உன்னை விட அவன் தாழ்ந்தவன்' 'உன்னை விட நான் உயர்ந்தவன்' என வர்ணாஸ்ரம தர்மத்தை மனுதர்ம சட்டமாக்கி நடைமுறைப்படுத்தும் போது தனியாக படிக்க அவசியமில்லை தான். இந்திய குற்றவியல் சட்டங்களை பற்றி அறியாமலே பாமரனும் அதற்கு அடங்கி வாழ்கிறானோ அதே அடிப்படையில் தான் மனுதர்மமும் இயங்குகிறது. சாதி அடிமைத்தனத்திற்கு காரணமான பார்ப்பனீய மதத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்னும் அடையாளம் தான் மனுதர்மத்தை அம்பேத்கார் எரித்த போராட்டம். மனுதர்மம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அடிமை சங்கிலி எனவே அதை கடைபிடிக்க அவசியமில்லாத குப்பை என மக்களுக்கு உணர்த்த மனுதர்மத்தை எரித்தல் அவசியமாகிறது. மனுதர்மத்தால் பலன் பெற்ற/பெறும் மலர்மன்னனுக்கும் அவரது சகாக்களுக்கும் மனுதர்மம் அவசியமாக இருக்கலாம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இந்த மனுதர்ம குப்பை அவசியமில்லை.

"மனு ஸ்மிருதியின் பத்தாவது சருக்கத்தில் உள்ள அறுபத்தைந்தாவது செய்யுள் ஒரு சூத்திரன் பிராமணனின் நிலைக்கு உயர்வதும் அதேபோல் ஒரு பிராமணன் சூத்திரனின் நிலைக்குத் தாழ்வதும் சாத்தியம் என்று சொல்கிறது. சத்திரியர், வைசியர் விஷயத்திலும் இது பொருந்தும் என்று அது மேலும் விளக்குகிறது. இதிலிருந்து பிறவியின் பயனாக வர்ணங்கள் அமைவதில்லை, குணநலன்களின் அடிப்படையில்தான் அவை நிர்ணயிக்கப்படுகின்றன என்று மனு ஸ்மிருதி வலியுறுத்துவதாகக் கொள்ளமுடியும்."என்கிறார் மலர்மன்னன்.

மலர்மன்னன் 10வது அத்தியாயத்தில் 65வது விதியை சுட்டிக்காட்டி 'பிறவியின் பயனாக வர்ணம் அமைவதில்லை, குணநலன்களின் அடிப்படையில் தான் நிற்ணயிக்கப்படுகிறது' என்பது ஒருவித மேதாவித்தனமான் மோசடி.

மனுதர்மத்தின் ஒரு விதியை மட்டும் தனக்கு சாதகமாக பிரித்து பயன்படுத்தும் மலர்மன்னனின் கயமை வெளிப்படுகிறது. மனுதர்மத்தை படிக்கும் போது முந்தைய, பிந்தைய பகுதிகளோடு தொடர்பு படுத்தி தான் படிக்க முடியும். தொடர்பு இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக மனுதர்ம விதிகளை 'பொறுக்கி' எடுத்து உதாரணம் காட்டும் செயலில் மனுதர்மத்தை 'புனித பண்டமாக' மாற்றும் நோக்கம் வெளிப்படுகிறது. மனுவின் ஒரு விதிக்கு முன்னரும், பின்னரும் சொல்லப்பட்ட விதிகள் தொடர்ச்சியான நெருக்கமான தொடர்பு உண்டு. எந்த சூழ்நிலையில் பிராமணன் தனது நிலையில் தாழ்வான் என மனுதர்மம் குறிப்பிடுகிறது என்பதை வசதியாக மறைத்துவிட்டார்.

மனுதர்மத்தின் 10வது அத்தியாயம் (நேரமும், ஆர்வமும் உடையவர்கள் சுட்டியில் முழு பகுதியையும் படித்து அறிந்துகொள்ளலாம்) 131 விதிகளில் நான்கு வர்ணங்களையும், அதன் கடமைகளையும், கட்டுப்பாடுகளையும் குறிப்பிடும் பகுதி இது.

10வது அத்தியாயத்தின் 64 வது விதியில்

64. If (a female of the caste), sprung from a Brahmana and a Sudra female, bear (children) to one of the highest caste, the inferior (tribe) attains the highest caste within the seventh generation.

அதன் தொடர்ச்சியாக 65வது விதியில்

65. (Thus) a Sudra attains the rank of a Brahmana, and (in a similar manner) a Brahmana sinks to the level of a Sudra; but know that it is the same with the offspring of a Kshatriya or of a Vaisya.

இந்த 65வது விதியை தான் மலர்மன்னன் சிலாகித்து 'பிறப்பின் அடிப்படையில் அல்ல; குணநலன்களின் அடிப்படையில்' என எழுதியிருந்தார். குணநலன்களாக இந்த பகுதியில் எதை குறிப்பிடுகிறது மனுதர்மம்? அதை தெரிய தொடர்ந்து வரும் விதிகளை படிப்பது அவசியம்.

பிராமணனுக்கும், சூத்திர பெண்ணிற்கும் பிறக்கும் குழந்தை; அல்லது பிராமண பெண்ணிற்கும் சூத்திரனுக்கும் பிறக்கும் குழந்தை இருவரில் யார் உயர்ந்தவர் என சந்தேகம் ஏற்பட்டால், (மனுதர்மம் 10 அத்; 66)

'பிராமணனுக்கும், சூத்திர பெண்ணிற்கும் பிறக்கும் குழந்தை பிறப்பின் உயர்வால் பிராமணனாக கருதப்படலாம். பிராமணப் பெண்ணிற்கும் சூத்திரனுக்கும் பிறக்கும் குழந்தை பிராமணனாக அறியப்படாது.' என்பதே முடிவாகும். (மனுதர்மம் 10 அத்; 67)

முதலாவது குழந்தை ('பிராமணனுக்கும், சூத்திர பெண்ணிற்கும் பிறக்கும் குழந்தை) பிறப்பில் தாழ்ந்ததாலும், இரண்டாவது (பிராமணப் பெண்ணிற்கும் சூத்திரனுக்கும் பிறக்கும் குழந்தை) சாதி அமைப்பின் விதிகளை மீறிய (பெற்றோர் இணைந்ததால்) காரணத்தால் இருவரும் வேத சடங்குகளில் ஈடுபடக்கூடாது என்பதே சட்டம். (மனுதர்மம் 10 அத்; 68)

சாதிக்கலப்பில் பிறக்கும் குழந்தை இழிவானதாக மனுதர்மம் சொல்லுகிறதா இல்லையா? சாதிக்கலப்பை மீறுவது குற்றமாக மனுதர்மம் கருதுகிறதா இல்லையா? மேற்காணும் விதிகளில் பிறப்பின் அடிப்படையில் உறவுகளை தீர்மானிக்காமல் எந்த அடிப்படையில் தீர்மானிக்கின்றன? போகிற போக்கில் 'இப்படி இருக்கலாம், அப்படி இருக்கலாம்' என அனுமானமாக சொல்லாமல் எந்த விதிகள் நல்லவை என மலர்மன்னன் விளக்க வேண்டும்.

'குணநலன்களின் அடிப்படையில் தான் வர்ணம் அமைகிறது. பிறப்பின் அடிப்படையில் அல்ல' என்னும் மலர்மன்னனின் கூற்றை வாதத்திற்காக ஏற்றுக்கொண்டால் சில கேள்விகள் வருகின்றன. மனுதர்ம ஆதரவாளர்களே பதில் சொல்லுங்கள்.

 1. குணநலன்களின் அடிப்படையில் தான் வர்ணப்படுத்தல் அமைகிறது என்றால், குறிப்பிட்ட அந்த குணநலன்கள் எவை?
 2. குறிப்பிட்ட அந்த குணநலன்கள் 'குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே' அமையுமா? இல்லை எல்லோருக்கும் பொதுவானதா?
 3. அந்த குணநலன்களை விதிப்பதும், காலத்திற்கேற்ப மாற்றும் அதிகாரமும் யாரிடம் இருந்தது? இருக்கிறது?
 4. குணநலன்களின் அடிப்படையில் தரம் பிரித்து வர்ணங்களை மாற்றி அமைக்கும் 'தரக்கட்டுப்பாட்டு முறை' எப்படி அமல்படுத்தப்பட்டது? எவ்வளவு காலத்திற்கு ஒரு முறை அது நடைபெறும்?
 5. குணம் உயர்ந்ததும் பிராமணனாக சூத்திரனை மாற்றியதற்கும், சூத்திரனாக பிராமணனை மாற்றியதற்கும் வரலாற்று ஆதாரங்கள் (புராணக் கதைகள் வேண்டாம்), நிகழ்கால சாட்சியங்கள் என்ன?
 6. குணநலன்கள் அடிப்படையில் கொலை வழக்கில் சிக்கியிருக்கும் காஞ்சி சங்கராச்சாரி இருள்நீக்கி சுப்பிரமணியம், அப்பாவி மக்களை படுகொலைகளை நிகழ்த்த ஆதரவளித்த நரேந்திர மோடி, கலவரங்கள் உருவாக காரணமான மசூதி இடிப்பை மேற்பார்வையிட்டு நிகழ்த்திய சங்கப்பரிவார தலைவர்களுக்கு வர்ணம் மாறிவிட்டதா? இப்போது அவர்கள் எந்த வர்ணத்தில் இருக்கிறார்கள்?
 7. அடுத்தவன் மலத்தை தின்ன வைக்கப்பட்டாலும், அடக்குமுறைகளை அனுபவித்து மனிதனாகவே அறமுடன் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வர்ண உயர்வு கிடைத்ததா? எங்கே? அந்த உயர்வால் அவர்கள் அடைந்த பயன் என்ன?

மனுவின் ஆதரவாளர்களே! இன்னும் கேள்விகள் இருக்கின்றன. இப்போதைக்கு இவற்றிற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்!

Saturday, March 10, 2007

பெண் விடுதலையும், ஐ.நா சபையும்

இந்த வருடம் பெண்கள் தினத்தில் ஐ.நா முன் வைத்த இரண்டு கருத்துக்கள் உலக அளவில் முக்கிய கவனத்தை பெறுகிறது. "பெண்கள், சமாதானம், பாதுகாப்பு சம்பந்தமான 1325வது தீர்மானத்தின் அடிப்படையில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்காணிக்க பாதுகாப்பு சபை முறையான நடவடிக்கைகளை ஏற்படுத்துமாறு" ஐ.நா செயலாளர் பான் கி மூன் ஐ.நா பாதுகாப்பு சபைக்கு அழைப்பு விடுத்துள்ளார். "ஆண்டிற்கு ஒருமுறை ஐ.நா பாதுகாப்பு சபையில் விவாதங்கள் நடத்த்தி பாரபட்சமற்ற நடவடிக்கைகள் எடுக்குமாறு" பாதுகாப்பு சபைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இரண்டாவதாக, "பெண்கள் உரிமையில் கவனம் செலுத்தி வருகிற மூன்று ஐ.நா அமைப்புகளின் பணியையும் இணைத்து பெண்களுக்கான தனி அமைப்பு ஒன்றை உருவாக்க ஐ.நா-வின் 192 உறுப்பு நாடுகளும் முன்வரவேண்டுமென" ஐக்கியநாட்டு சபை செயலாளர் கருத்து தெரிவித்திருக்கிறார். பெண்கள் உரிமைக்காக இதுவரை ஆண்டிற்கு சுமார் 80 மில்லியன் அமெரிக்க டாலர் மொத்தம் செலவிடப்பட்டு வருவது அதிகரிக்கப்பட வேண்டும் என ஐ.நா செயலாளர் தெரிவிக்கிறார். "புதிதாக உருவாக்கப்படும் நிறுவனம் பெண்கள் முன்னேற்றம் மற்றும் பாலியல் சமன்பாட்டை அடைய ஐ.நா-வின் அனைத்து திறனையும் பயன்படுத்தும் நிலையில் இருக்கவேண்டும்" என்கிறார் அவர்.

பெண்கள் உரிமைக்கான தனி அமைப்பு அவசியமா? எதற்காக பெண்களுக்கு மட்டுமான ஒரு அமைப்பு?

'விமானிகள், பேருந்து ஓட்டுநர், எழுத்தாளர், நிறுவனங்களின் தலைவர் பதவிகள்...என எங்கும் பெண்கள் 'சாதனை படைக்கிறார்காள். நவநாகரீகமாக வாழுகிறார்கள். இதை விட என்ன முன்னேற்றம் தேவை?" என ஆண் மேலாதிக்கம் கேட்கிறது. 'பெண்களிடமிருந்து தான் ஆண்களுக்கு விடுதலை அவசியம்' என்றும், 'பெண்களால் என்ன செய்துவிட இயலும்' என்றும் வசதிக்கேற்ற முறையில் ஆணாதிக்கம் வெளிப்படுகிறது. பெண்கள் உரிமையும், விடுதலையும் இப்படி இன்னும் மேம்போக்காகவே புரியப்படுகிறது.

. இரண்டாயிரமாவது ஆண்டில் உலக நாடுகள் சேர்ந்து 8 வளர்ச்சிக் குறிக்கோள்களை மில்லனியம் ஆண்டு பிரகடனமாக அறிவித்தன. எட்டு குறிக்கோள்களில் மூன்றாவது குறிக்கோள் பாலின சமன்பாடு மற்றும் பெண்கள் முன்னேற்றம் (Gender equality and empowerment of women) என்னும் இலட்சியத்தை அடையும் நோக்கமுடையது. இந்த குறிக்கோள்களை அடைய இன்னும் 8 ஆண்டுகளே உள்ள நிலையில் உலகமெங்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது.

பெண்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவது பெரும்பாலும் கணவன், நண்பன், காதலன், சக பணியாளர்கள் என ஆண்களின் உருவத்தில் இருக்கிறது. கணவன் என்னும் ஆணாதிக்கவாதியால் அடிவாங்கும் ஒவ்வொரு பெண்ணின் மீதும் சுமத்தப்படும் வலியும், கொடுமைகளும், உளவியல் சித்திரவதைகளும் சட்டங்களால் தண்டிக்கப்படாமல் தப்பித்துவிடுகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் ஈடுபடுவதில் படித்து பட்டங்கள் வாங்கியவர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள் என எவரும் விதிவிலக்கல்ல. காதல் திருமணங்களையும், சாதி எல்லைகளையும் கடந்து ஆணாதிக்க வன்முறை எங்கும் பரந்துகிடக்கிறது. பெண்கள் மீதான வன்முறைக் குற்றவாளிகள் கலாச்சாரம், குடும்பம், சமுக அமைப்பு என்ற போர்வையில் தப்பித்துவிடுகிறார்கள்.

இந்தியாவில் 37.2 % திருமணமான பெண்கள் கணவனின் அடி, உதை என வன்முறையை எதிர்கொள்கிறார்கள். தமிழகத்தின் இந்த வன்முறையின் அளவு 41.9 % என அதிர்ச்சி தருமளவு உள்ளது. சென்னையில் 41 % பெண்களும், தமிழக கிராமப் பகுதிகளில் 61% பெண்களும் கணவனின் வன்முறையை எதிர்கொள்ளுகிறார்கள். 'கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்'னு சொல்லியே வளர்க்கப்பட்டு கல்யாண சந்தை மூலம் சித்திரவதை களத்திற்கு அனுப்பும் உரிமம் கிடைப்பது போன்ற நிலையை உருவாக்கி வைத்திருக்கிறது நமது திருமண முறை. திருமணம் செய்ததாலே பெண்ணை ஆளும் அதிகாரம் ஆணுக்கு இருப்பதாக குடும்ப அமைப்பு பெண்ணை அடக்கி வைத்திருக்கிறது.

காதல் மணம் செய்து மூன்று பிள்ளைகள் கொண்ட தம்பதி ஒன்று எங்கள் வீட்டின் அருகில் வசித்து வந்தனர். இரவு நேரம் 'ஆண்மகனார்' குடித்து வந்து மனைவியை அடிப்பதும், மனைவி அழுவதும், அக்கம் பக்கத்தவர் அமைதிப்படுத்துவது என தொடரும் நிகழ்வுகள் வாடிக்கையானது. ஒரு நாள் வழக்கத்திற்கு மாறாக 'தலைவர்' வலியால் கத்த ஆரம்பித்தார். அடி வாங்கி பொறுக்கமுடியாத அந்த பெண் அருவாமணை முனையால் தலைவனின் காலில் வெடியது தான் அதன் காரணம். அன்றோடு அடியும் கதறலும் நின்றது. அமைதியான வாழ்க்கை தொடர்ந்தது.

இன்னொரு வீட்டில் மனைவியை வீட்டை சுற்றி சுற்றி அடித்த கொடுமைக்கார கணவன். அய்யப்பசாமிக்கு மாலை போடும் நேரம் கூட அடிப்பதை நிறுத்தவில்லை. அவனது இறப்பின் பின்னர் மகன்கள் அம்மாவை அடிக்கும் 'பொறுப்பை' எடுத்துக்கொண்டனர். வன்முறை தகப்பனிடமிருந்து மகன்களுக்கு இடம் மாறியது. இன்றும் அந்த வயதான தாய் மகன்களுக்கு பயந்து யாரிடமும் எதுவும் பேசாது இருகிறாள்.

"யாரு உன் புருசன் தானே அடிச்சான், போகட்டும் பிள்ளை.", "அடிச்சாலும், பிடிச்சாலும் அவன் உம்புருசன்! நீ தான் அரவணைச்சு போணும்", "ஆண்பிள்ளைன்னா அப்படி தான் இருப்பினும்! நாம தான் பொறுத்துப் போகணும்" பெண்ணின் உரிமையை உணரவிடாது குடும்ப உறவினர்களால் மழுங்க வைக்கும் குரல்களில் பெண்ணின் சுயம் இழக்கப்படுகிறது. பெண் என்றால் எதிர்வாதம் செய்யக்கூடாது, கோபப்படக்கூடாது, அதிர்ந்து பேசக்கூடாது போன்ற கூடாமைகள் பல பெண்ணிற்கான சங்கிலிகள்.

தலித் பெண்கள் ஆதிக்கச்சாதி ஆண்களின் பாலியல் வன்கொடுமைக்கும், வன்முறைக்கும் ஆளாவது தினமும் இந்தியாவில் நடந்துகொண்டே வருகிறது. சாதி, மத கலவரங்களின் போது ஆதிக்கச்சாதி ஆண்களுக்கு பெண்கள் தான் முதல் வேட்டை. வன்முறைக்கு முகம் கொடுக்கும் இந்த பெண்களை காக்க வேண்டிய அமைப்புகளும் சட்டங்களும் வேடிக்கை பார்க்கின்றன. குஜராத் படுகொலையின் போது பாலியல் வன்கொடுமை, சித்திரவதை, கொலை என கொடுமைகளுக்கு ஆளான ஆயிரக்கணக்கான பெண்கள் இன்னும் நீதி கிடைக்காமல் இருக்கிறார்கள். குற்றம் புரிந்தவர்கள் அரசியல், மத அமைப்புகளின் பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள். போர் நடைபெறும் பகுதிகளிலும், பிரச்சனைக்குரிய பகுதிகளிலும் அரச படைகளும், துணைப்படைகளும், குழுக்களும் வன்முறை தொடுப்பது பெண்கள் மீது தான். இராணுவம் இந்த குற்றங்களிலிருந்து தப்பித்துக்கொள்வது இயல்பானதாக கருதப்படுகிறது. காஷ்மீர், அசாம், தமிழீழம், ஈராக் முதல் சண்டை நடந்து வரும் ஆப்பிரிக்க நாடுகளான சூடான், காங்கோ என எங்கும் சண்டைகளில் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

விலங்கினங்கள் மீது கருணை காட்ட அமைப்புகள் இயங்கும் அதே வேளை பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான அமைப்புகளின் எழுச்சி குறைவாகவே இருக்கிறது. பெண் வன்முறையை தடுக்க பெண் கல்வி, வேலை, பொருளாதார முன்னேற்றம் முதலியவை பெண்ணுக்கு அவசியமானது. அதே வேளை பெண்ணுக்கு எதிரான வன்முறைகளையும், கொடுமைகளையும் செய்பவர்கள் யாராக இருப்பினும் சட்டத்தின் வழி கடும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவது மிக அவசியம்.

பாலின சமன்பாடு விசயத்தில் ஐ.நா நிறுவனங்களில் கூட இன்னும் ஆண்களின் ஆதிக்கமே நிலவி வருகிறது. "பாலின சமன்பாட்டை அடைவதில் நாம் தோல்வியடைந்துள்ளோம். கடந்த ஆண்டு ஐ.நாவில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் ஐ.நா பணியாளர்கள் வட்டத்தில் பாலின சமன்பாட்டை அடைவதில் ஏற்றுக்கொள்ள முடியாத முன்னேற்றமின்மையை தெளிவுபடுத்தியது." என்கிறார் ஐ.நா துணைப் பொதுசெயலாளர் ஆஷா ரோஸ் மிகிரோ. இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 30 சதவிகிதம் சட்டம் இயற்றப்படாமல் காலம் கடத்தியே வருகிறார்கள். அரசு மற்றும் தனியார் வேலைகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு பற்றி எண்ணங்கள் இன்னும் உருவாகவில்லை. தமிழகத்தில் மதிய உணவு திட்டம் பெண் கல்விக்கு ஊக்கமளிப்பதாக அமைந்ததும் அதை தொடர்ந்து அரசு சார்ந்த அமைப்புகளில் 33 சதவிகிதம் பெண்கள் பங்கு வகிப்பதும் நல்ல முன்னேற்றம். ஆண்களை விட பெண்களுக்கு குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. விவசாயம் போன்ற வேலைகளில் இந்த சமமற்ற தன்மை வெளிப்படையாக தெரிகிறது. தொழிற்சங்கங்கள் ஆண்கள் இயங்கும் விதமாக செயல்படுவதால் பெண்களின் தலைமையும் ஈடுபாடும் குறைந்து இருக்கிறது. தொழில் நிறுவனங்கள் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி பெண்களின் உழைப்பு, திறமையை சுரண்டுகின்றன.

பெண்களின் உரிமைகளில் கட்டுப்பாடுகளை விதிப்பதில் குடும்பமே பெரும் பங்கு வகிக்கிறது. இந்திய கணவர்கள் தங்கள் மனைவியர் மீது தொடுக்கிற கட்டுப்பாடுகள் ஆணாதிக்க அடிமைத்தனத்தை உறுதிப்படுத்துகிறது. மனைவியர் தங்களை விட படிப்பில் குறைந்தவர்களாக இருக்கவும், பதவிகளில் கீழ் நிலையில் இருக்கவும், வேலைக்கு செல்லவிடாமல், படிக்கவிடாது தடுப்பதிலும் குறிப்பாக இருக்கிறார்கள் இந்திய ஆண்கள். "எனக்கு மேலும் படிக்க ஆசை. ஸ்ரீதருக்கு நான் படிப்பதில் விருப்பமில்லை. அதனால் குழந்தையை கவனித்து வருவதை தவிர வேறுவழியில்லை" என்கிறார் உளவியல் முதுகலை பட்டதாரியான குடும்பப்பெண் சுனிதா. "டோணிக்கு பார்க்கிற பொண்ணு வேலைக்கு போகக்கூடாது. என் மகனையும், பிள்ளையையும் கவனித்தால் போதும்" என்கிறார் அந்தோணியின் அம்மா. "உனக்கு ஓண்ணும் தெரியாது. வாயை மூடிட்டு இரு" அதட்டலான குரலில் ஒரு கணவன். இப்படி பலவிதமாக கட்டுப்பாடுகளும் கண்காணிப்பு செய்யும் காவலாளியாகவும் கணவன் என்னும் ஆணாதிக்கவாதியிடமிருந்து பெண் விடுதலை அடையாவிடில் பாலின சமன்பாடு வெறும் கனவு மட்டுமே.

திருமணம், குழந்தை பேறு போன்ற விசயங்கள் பெண் அடிமையாகவே நடத்தப்படுகிறாள். குழந்தை பெறும் எந்திரமாக நடத்தப்படும் பெண்ணுக்கு தனது குழந்தையை வளர்க்கும் விதங்களில் கருத்து சொல்லவோ, முடிவெடுக்கவோ உரிமை குறைவாகவே காணப்படுகிறது. குழந்தை பேற்றில் காணவன் முழு பங்கெடுப்பது என்பது அரியதாகவே இருக்கிறது. கற்பமாக இருக்கும் மனைவியை கவனிக்காது இயல்பாக திரியும் ஆண்களே அதிகம். சில தினங்களுக்கு முன்னர் கேரளாவை சார்ந்த ஒருவர் மனைவியுடன் வந்திருந்தார். கடந்த மே மாதம் தான் திருமணம் செய்த புது தம்பதிகள். அந்தப் பெண் இரு மாத கற்பிணியாக இருக்கும் செய்தியை பற்றி கூறிப்பிடும் போது "முன்பு செய்த குற்றம் இப்போ கற்பம்" என குறிப்பிட்டார். கேட்டதும் மனதிற்கு அதிர்ச்சியாகவும், கவலையாகவும் இருந்தது. அந்த நபரை கடிந்து கொண்டு விவாதித்து விளக்குவதை தவிர வேறு வழி தெரியவில்லை.

கடவுள், பாவம் என குற்ற உணர்வை ஏற்படுத்தி பெண்களை அடிமைப்படுத்த ஆண்களுக்கு மதங்கள் 'புனிதப்பணி' செய்கின்றன. மாதவிடாய் போன்ற உடல் மாற்றங்களை காரணம் காட்டி பெண்ணின் வழிபாட்டு உரிமையை மதங்கள் மறுத்து வருவது ஆணாதிக்க மதங்கள். மத கருத்துக்களின் தாக்கங்களால் பாதிப்பிற்குள்ளாவது பெண்களே. தன்னையொத்த இன்னொரு உயிரை கருத்தாங்கி உருவாக்கும் பெண்கள் மீது அனைத்து சுமைகளையும் சுமத்தி விட்டு எளிதாக ஆண் வர்க்கம் தப்பித்துவிடுகிறது. இனப்பெருக்கம் செய்யும் உரிமையை பெண்ணிடமிருந்து ஆண் வர்க்கம் களவாடியிருப்பதன் வலியை பெண்ணே சுமக்கிறாள். குழந்தை பிறக்காத நிலையிலுள்ள பெண்களை புறந்தள்ளி வைப்பதும், ஆண் வாரிசு பெறாத பெண்ணை புறக்கணிப்பதும் இன்றும் தொடர்கிறது.

பெண் கல்வியும், வேலைவாய்ப்பும் பெற நடவடிக்கைகளை அரசுகள் எடுக்கவேண்டும். பெண்ணுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க கடுமையான சட்டங்களும் செயல்களும் அவசியம். பெண்கள் உரிமைக்கான இயக்கங்கள் எழுச்சியுடன் பணியாற்ற வேண்டிய நேரமிது. பெண்ணினத்திற்கு எதிரான வன்முறைகளை தடுக்கவும், பாலின சமன்பாடு மற்றும் பெண்ணின வளர்ச்சிக்காக ஐ.நா எடுக்கும் நடவடிக்கைகள் மிகவும் அவசியமானது. பெண்களின் தலைமையால் உலகின் இயக்கம் சமூக மாற்றமடையட்டும்.

சர்வதேச பெண்கள் தினத்தில் அனைத்து பெண்களும் விடுதலை பெறும் திசையில் முன்னேற வாழ்த்துக்கள்!

-திரு