Saturday, March 10, 2007

பெண் விடுதலையும், ஐ.நா சபையும்

இந்த வருடம் பெண்கள் தினத்தில் ஐ.நா முன் வைத்த இரண்டு கருத்துக்கள் உலக அளவில் முக்கிய கவனத்தை பெறுகிறது. "பெண்கள், சமாதானம், பாதுகாப்பு சம்பந்தமான 1325வது தீர்மானத்தின் அடிப்படையில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்காணிக்க பாதுகாப்பு சபை முறையான நடவடிக்கைகளை ஏற்படுத்துமாறு" ஐ.நா செயலாளர் பான் கி மூன் ஐ.நா பாதுகாப்பு சபைக்கு அழைப்பு விடுத்துள்ளார். "ஆண்டிற்கு ஒருமுறை ஐ.நா பாதுகாப்பு சபையில் விவாதங்கள் நடத்த்தி பாரபட்சமற்ற நடவடிக்கைகள் எடுக்குமாறு" பாதுகாப்பு சபைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இரண்டாவதாக, "பெண்கள் உரிமையில் கவனம் செலுத்தி வருகிற மூன்று ஐ.நா அமைப்புகளின் பணியையும் இணைத்து பெண்களுக்கான தனி அமைப்பு ஒன்றை உருவாக்க ஐ.நா-வின் 192 உறுப்பு நாடுகளும் முன்வரவேண்டுமென" ஐக்கியநாட்டு சபை செயலாளர் கருத்து தெரிவித்திருக்கிறார். பெண்கள் உரிமைக்காக இதுவரை ஆண்டிற்கு சுமார் 80 மில்லியன் அமெரிக்க டாலர் மொத்தம் செலவிடப்பட்டு வருவது அதிகரிக்கப்பட வேண்டும் என ஐ.நா செயலாளர் தெரிவிக்கிறார். "புதிதாக உருவாக்கப்படும் நிறுவனம் பெண்கள் முன்னேற்றம் மற்றும் பாலியல் சமன்பாட்டை அடைய ஐ.நா-வின் அனைத்து திறனையும் பயன்படுத்தும் நிலையில் இருக்கவேண்டும்" என்கிறார் அவர்.

பெண்கள் உரிமைக்கான தனி அமைப்பு அவசியமா? எதற்காக பெண்களுக்கு மட்டுமான ஒரு அமைப்பு?

'விமானிகள், பேருந்து ஓட்டுநர், எழுத்தாளர், நிறுவனங்களின் தலைவர் பதவிகள்...என எங்கும் பெண்கள் 'சாதனை படைக்கிறார்காள். நவநாகரீகமாக வாழுகிறார்கள். இதை விட என்ன முன்னேற்றம் தேவை?" என ஆண் மேலாதிக்கம் கேட்கிறது. 'பெண்களிடமிருந்து தான் ஆண்களுக்கு விடுதலை அவசியம்' என்றும், 'பெண்களால் என்ன செய்துவிட இயலும்' என்றும் வசதிக்கேற்ற முறையில் ஆணாதிக்கம் வெளிப்படுகிறது. பெண்கள் உரிமையும், விடுதலையும் இப்படி இன்னும் மேம்போக்காகவே புரியப்படுகிறது.

. இரண்டாயிரமாவது ஆண்டில் உலக நாடுகள் சேர்ந்து 8 வளர்ச்சிக் குறிக்கோள்களை மில்லனியம் ஆண்டு பிரகடனமாக அறிவித்தன. எட்டு குறிக்கோள்களில் மூன்றாவது குறிக்கோள் பாலின சமன்பாடு மற்றும் பெண்கள் முன்னேற்றம் (Gender equality and empowerment of women) என்னும் இலட்சியத்தை அடையும் நோக்கமுடையது. இந்த குறிக்கோள்களை அடைய இன்னும் 8 ஆண்டுகளே உள்ள நிலையில் உலகமெங்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது.

பெண்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவது பெரும்பாலும் கணவன், நண்பன், காதலன், சக பணியாளர்கள் என ஆண்களின் உருவத்தில் இருக்கிறது. கணவன் என்னும் ஆணாதிக்கவாதியால் அடிவாங்கும் ஒவ்வொரு பெண்ணின் மீதும் சுமத்தப்படும் வலியும், கொடுமைகளும், உளவியல் சித்திரவதைகளும் சட்டங்களால் தண்டிக்கப்படாமல் தப்பித்துவிடுகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் ஈடுபடுவதில் படித்து பட்டங்கள் வாங்கியவர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள் என எவரும் விதிவிலக்கல்ல. காதல் திருமணங்களையும், சாதி எல்லைகளையும் கடந்து ஆணாதிக்க வன்முறை எங்கும் பரந்துகிடக்கிறது. பெண்கள் மீதான வன்முறைக் குற்றவாளிகள் கலாச்சாரம், குடும்பம், சமுக அமைப்பு என்ற போர்வையில் தப்பித்துவிடுகிறார்கள்.

இந்தியாவில் 37.2 % திருமணமான பெண்கள் கணவனின் அடி, உதை என வன்முறையை எதிர்கொள்கிறார்கள். தமிழகத்தின் இந்த வன்முறையின் அளவு 41.9 % என அதிர்ச்சி தருமளவு உள்ளது. சென்னையில் 41 % பெண்களும், தமிழக கிராமப் பகுதிகளில் 61% பெண்களும் கணவனின் வன்முறையை எதிர்கொள்ளுகிறார்கள். 'கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்'னு சொல்லியே வளர்க்கப்பட்டு கல்யாண சந்தை மூலம் சித்திரவதை களத்திற்கு அனுப்பும் உரிமம் கிடைப்பது போன்ற நிலையை உருவாக்கி வைத்திருக்கிறது நமது திருமண முறை. திருமணம் செய்ததாலே பெண்ணை ஆளும் அதிகாரம் ஆணுக்கு இருப்பதாக குடும்ப அமைப்பு பெண்ணை அடக்கி வைத்திருக்கிறது.

காதல் மணம் செய்து மூன்று பிள்ளைகள் கொண்ட தம்பதி ஒன்று எங்கள் வீட்டின் அருகில் வசித்து வந்தனர். இரவு நேரம் 'ஆண்மகனார்' குடித்து வந்து மனைவியை அடிப்பதும், மனைவி அழுவதும், அக்கம் பக்கத்தவர் அமைதிப்படுத்துவது என தொடரும் நிகழ்வுகள் வாடிக்கையானது. ஒரு நாள் வழக்கத்திற்கு மாறாக 'தலைவர்' வலியால் கத்த ஆரம்பித்தார். அடி வாங்கி பொறுக்கமுடியாத அந்த பெண் அருவாமணை முனையால் தலைவனின் காலில் வெடியது தான் அதன் காரணம். அன்றோடு அடியும் கதறலும் நின்றது. அமைதியான வாழ்க்கை தொடர்ந்தது.

இன்னொரு வீட்டில் மனைவியை வீட்டை சுற்றி சுற்றி அடித்த கொடுமைக்கார கணவன். அய்யப்பசாமிக்கு மாலை போடும் நேரம் கூட அடிப்பதை நிறுத்தவில்லை. அவனது இறப்பின் பின்னர் மகன்கள் அம்மாவை அடிக்கும் 'பொறுப்பை' எடுத்துக்கொண்டனர். வன்முறை தகப்பனிடமிருந்து மகன்களுக்கு இடம் மாறியது. இன்றும் அந்த வயதான தாய் மகன்களுக்கு பயந்து யாரிடமும் எதுவும் பேசாது இருகிறாள்.

"யாரு உன் புருசன் தானே அடிச்சான், போகட்டும் பிள்ளை.", "அடிச்சாலும், பிடிச்சாலும் அவன் உம்புருசன்! நீ தான் அரவணைச்சு போணும்", "ஆண்பிள்ளைன்னா அப்படி தான் இருப்பினும்! நாம தான் பொறுத்துப் போகணும்" பெண்ணின் உரிமையை உணரவிடாது குடும்ப உறவினர்களால் மழுங்க வைக்கும் குரல்களில் பெண்ணின் சுயம் இழக்கப்படுகிறது. பெண் என்றால் எதிர்வாதம் செய்யக்கூடாது, கோபப்படக்கூடாது, அதிர்ந்து பேசக்கூடாது போன்ற கூடாமைகள் பல பெண்ணிற்கான சங்கிலிகள்.

தலித் பெண்கள் ஆதிக்கச்சாதி ஆண்களின் பாலியல் வன்கொடுமைக்கும், வன்முறைக்கும் ஆளாவது தினமும் இந்தியாவில் நடந்துகொண்டே வருகிறது. சாதி, மத கலவரங்களின் போது ஆதிக்கச்சாதி ஆண்களுக்கு பெண்கள் தான் முதல் வேட்டை. வன்முறைக்கு முகம் கொடுக்கும் இந்த பெண்களை காக்க வேண்டிய அமைப்புகளும் சட்டங்களும் வேடிக்கை பார்க்கின்றன. குஜராத் படுகொலையின் போது பாலியல் வன்கொடுமை, சித்திரவதை, கொலை என கொடுமைகளுக்கு ஆளான ஆயிரக்கணக்கான பெண்கள் இன்னும் நீதி கிடைக்காமல் இருக்கிறார்கள். குற்றம் புரிந்தவர்கள் அரசியல், மத அமைப்புகளின் பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள். போர் நடைபெறும் பகுதிகளிலும், பிரச்சனைக்குரிய பகுதிகளிலும் அரச படைகளும், துணைப்படைகளும், குழுக்களும் வன்முறை தொடுப்பது பெண்கள் மீது தான். இராணுவம் இந்த குற்றங்களிலிருந்து தப்பித்துக்கொள்வது இயல்பானதாக கருதப்படுகிறது. காஷ்மீர், அசாம், தமிழீழம், ஈராக் முதல் சண்டை நடந்து வரும் ஆப்பிரிக்க நாடுகளான சூடான், காங்கோ என எங்கும் சண்டைகளில் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

விலங்கினங்கள் மீது கருணை காட்ட அமைப்புகள் இயங்கும் அதே வேளை பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான அமைப்புகளின் எழுச்சி குறைவாகவே இருக்கிறது. பெண் வன்முறையை தடுக்க பெண் கல்வி, வேலை, பொருளாதார முன்னேற்றம் முதலியவை பெண்ணுக்கு அவசியமானது. அதே வேளை பெண்ணுக்கு எதிரான வன்முறைகளையும், கொடுமைகளையும் செய்பவர்கள் யாராக இருப்பினும் சட்டத்தின் வழி கடும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவது மிக அவசியம்.

பாலின சமன்பாடு விசயத்தில் ஐ.நா நிறுவனங்களில் கூட இன்னும் ஆண்களின் ஆதிக்கமே நிலவி வருகிறது. "பாலின சமன்பாட்டை அடைவதில் நாம் தோல்வியடைந்துள்ளோம். கடந்த ஆண்டு ஐ.நாவில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் ஐ.நா பணியாளர்கள் வட்டத்தில் பாலின சமன்பாட்டை அடைவதில் ஏற்றுக்கொள்ள முடியாத முன்னேற்றமின்மையை தெளிவுபடுத்தியது." என்கிறார் ஐ.நா துணைப் பொதுசெயலாளர் ஆஷா ரோஸ் மிகிரோ. இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 30 சதவிகிதம் சட்டம் இயற்றப்படாமல் காலம் கடத்தியே வருகிறார்கள். அரசு மற்றும் தனியார் வேலைகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு பற்றி எண்ணங்கள் இன்னும் உருவாகவில்லை. தமிழகத்தில் மதிய உணவு திட்டம் பெண் கல்விக்கு ஊக்கமளிப்பதாக அமைந்ததும் அதை தொடர்ந்து அரசு சார்ந்த அமைப்புகளில் 33 சதவிகிதம் பெண்கள் பங்கு வகிப்பதும் நல்ல முன்னேற்றம். ஆண்களை விட பெண்களுக்கு குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. விவசாயம் போன்ற வேலைகளில் இந்த சமமற்ற தன்மை வெளிப்படையாக தெரிகிறது. தொழிற்சங்கங்கள் ஆண்கள் இயங்கும் விதமாக செயல்படுவதால் பெண்களின் தலைமையும் ஈடுபாடும் குறைந்து இருக்கிறது. தொழில் நிறுவனங்கள் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி பெண்களின் உழைப்பு, திறமையை சுரண்டுகின்றன.

பெண்களின் உரிமைகளில் கட்டுப்பாடுகளை விதிப்பதில் குடும்பமே பெரும் பங்கு வகிக்கிறது. இந்திய கணவர்கள் தங்கள் மனைவியர் மீது தொடுக்கிற கட்டுப்பாடுகள் ஆணாதிக்க அடிமைத்தனத்தை உறுதிப்படுத்துகிறது. மனைவியர் தங்களை விட படிப்பில் குறைந்தவர்களாக இருக்கவும், பதவிகளில் கீழ் நிலையில் இருக்கவும், வேலைக்கு செல்லவிடாமல், படிக்கவிடாது தடுப்பதிலும் குறிப்பாக இருக்கிறார்கள் இந்திய ஆண்கள். "எனக்கு மேலும் படிக்க ஆசை. ஸ்ரீதருக்கு நான் படிப்பதில் விருப்பமில்லை. அதனால் குழந்தையை கவனித்து வருவதை தவிர வேறுவழியில்லை" என்கிறார் உளவியல் முதுகலை பட்டதாரியான குடும்பப்பெண் சுனிதா. "டோணிக்கு பார்க்கிற பொண்ணு வேலைக்கு போகக்கூடாது. என் மகனையும், பிள்ளையையும் கவனித்தால் போதும்" என்கிறார் அந்தோணியின் அம்மா. "உனக்கு ஓண்ணும் தெரியாது. வாயை மூடிட்டு இரு" அதட்டலான குரலில் ஒரு கணவன். இப்படி பலவிதமாக கட்டுப்பாடுகளும் கண்காணிப்பு செய்யும் காவலாளியாகவும் கணவன் என்னும் ஆணாதிக்கவாதியிடமிருந்து பெண் விடுதலை அடையாவிடில் பாலின சமன்பாடு வெறும் கனவு மட்டுமே.

திருமணம், குழந்தை பேறு போன்ற விசயங்கள் பெண் அடிமையாகவே நடத்தப்படுகிறாள். குழந்தை பெறும் எந்திரமாக நடத்தப்படும் பெண்ணுக்கு தனது குழந்தையை வளர்க்கும் விதங்களில் கருத்து சொல்லவோ, முடிவெடுக்கவோ உரிமை குறைவாகவே காணப்படுகிறது. குழந்தை பேற்றில் காணவன் முழு பங்கெடுப்பது என்பது அரியதாகவே இருக்கிறது. கற்பமாக இருக்கும் மனைவியை கவனிக்காது இயல்பாக திரியும் ஆண்களே அதிகம். சில தினங்களுக்கு முன்னர் கேரளாவை சார்ந்த ஒருவர் மனைவியுடன் வந்திருந்தார். கடந்த மே மாதம் தான் திருமணம் செய்த புது தம்பதிகள். அந்தப் பெண் இரு மாத கற்பிணியாக இருக்கும் செய்தியை பற்றி கூறிப்பிடும் போது "முன்பு செய்த குற்றம் இப்போ கற்பம்" என குறிப்பிட்டார். கேட்டதும் மனதிற்கு அதிர்ச்சியாகவும், கவலையாகவும் இருந்தது. அந்த நபரை கடிந்து கொண்டு விவாதித்து விளக்குவதை தவிர வேறு வழி தெரியவில்லை.

கடவுள், பாவம் என குற்ற உணர்வை ஏற்படுத்தி பெண்களை அடிமைப்படுத்த ஆண்களுக்கு மதங்கள் 'புனிதப்பணி' செய்கின்றன. மாதவிடாய் போன்ற உடல் மாற்றங்களை காரணம் காட்டி பெண்ணின் வழிபாட்டு உரிமையை மதங்கள் மறுத்து வருவது ஆணாதிக்க மதங்கள். மத கருத்துக்களின் தாக்கங்களால் பாதிப்பிற்குள்ளாவது பெண்களே. தன்னையொத்த இன்னொரு உயிரை கருத்தாங்கி உருவாக்கும் பெண்கள் மீது அனைத்து சுமைகளையும் சுமத்தி விட்டு எளிதாக ஆண் வர்க்கம் தப்பித்துவிடுகிறது. இனப்பெருக்கம் செய்யும் உரிமையை பெண்ணிடமிருந்து ஆண் வர்க்கம் களவாடியிருப்பதன் வலியை பெண்ணே சுமக்கிறாள். குழந்தை பிறக்காத நிலையிலுள்ள பெண்களை புறந்தள்ளி வைப்பதும், ஆண் வாரிசு பெறாத பெண்ணை புறக்கணிப்பதும் இன்றும் தொடர்கிறது.

பெண் கல்வியும், வேலைவாய்ப்பும் பெற நடவடிக்கைகளை அரசுகள் எடுக்கவேண்டும். பெண்ணுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க கடுமையான சட்டங்களும் செயல்களும் அவசியம். பெண்கள் உரிமைக்கான இயக்கங்கள் எழுச்சியுடன் பணியாற்ற வேண்டிய நேரமிது. பெண்ணினத்திற்கு எதிரான வன்முறைகளை தடுக்கவும், பாலின சமன்பாடு மற்றும் பெண்ணின வளர்ச்சிக்காக ஐ.நா எடுக்கும் நடவடிக்கைகள் மிகவும் அவசியமானது. பெண்களின் தலைமையால் உலகின் இயக்கம் சமூக மாற்றமடையட்டும்.

சர்வதேச பெண்கள் தினத்தில் அனைத்து பெண்களும் விடுதலை பெறும் திசையில் முன்னேற வாழ்த்துக்கள்!

-திரு

6 பின்னூட்டங்கள்:

மங்கை said...

அருமையான கட்டுரை திரு அவர்களே,

London School of Economics வெளியிட்டுள்ள ஒரி அறிக்கையில், ஆண்கள் அளவிற்கு பெண்கள் ஊதியம் வாங்க இன்னும் 150 ஆண்டுகள் ஆகுமாம்..ஹ்ம்ம்..

இனப்பெருக்க உரிமை பற்றிய சர்ச்சைகளும் நடந்ட்ஜு கொண்டிருந்தாலும், பெண்களுக்கு அது எந்த விதத்திலும் உதவவில்லை என்று தான் கூற வேண்டும், இதற்கு நம் நாட்டில் நாளுக்கு நாள் அதிகமாகிக்கெண்டே இருக்கும் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கையே சாட்சி..

பொருளாதார முன்னேற்றமும், கல்வியும்
மட்டுமே பெண்ணை காப்பாற்ற முடியும்

மில்லேனியம் கோல்ஸ்ஐ அடைவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளின் வேகம் திருப்தி அளிப்பதாய் இல்லை... இதற்கென ஒதுக்கப்படும் பணத்தை இதற்காகவே பயன் படுத்தினால், ஓரளவிற்காவது முன்னேற்றத்தை காண முடியும்.

நல்ல கட்டுரைக்கு நன்றி திரு அவர்களே

Anonymous said...

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளுக்கு எதிராக கட்டாயம் ஆசிய ஆப்பிரிக்க அளவிலாவது ஒரு அமைப்பு தேவை. தங்கள் எழுத்து இதற்கு நன்றாக வலு சேர்க்கிறது. பாதுகாப்புக்கு பல கோடிகளை வாரி இறைக்கும் இன்றைய நாடுகள் இதை கவனிக்குமா? காத்திருந்து பார்ப்போம்.

பத்மா அர்விந்த் said...

பெண்கள் தினத்தில் உண்மையில் பிரச்சினையின் ஆழம் தொட்டு எழுதப்பட்ட பதிவு. கண்னாடிக்கூறை விதிகல் இருந்தாலும் அதை எப்படி தவிர்க்க முடியும் என்று சிந்தித்து அதை செய்பவர்கள் உண்டு. அப்படியே உயர் மட்ட பதவிகளுகு வந்தாலும் அதிக முக்கியத்துவம் இல்லா திட்டங்கள் தருவது என்று எத்தனை வழிகள் இருக்கிறது. பெண்களின் நெருக்கமான பகைவன் பற்றி நான் எழுதியதன் சுட்டி:http://reallogic.org/thenthuli/?p=114

Thamizhan said...

இன்று உலகெங்கும் பெண்ணுரிமை பல பரிமாணங்களில் வளர்ந்து வருகிறது.பெண்ணடிமை மிகவும் மோசமான எண்ணப்பாட்டிலிருக்கும் இந்தியா,ஜப்பான் போன்ற நாடுகளிலும் பெண்கள் படிப்பு வேலை என்று பொருளாதார முன்னேற்றத்தால் விடுதலை அடைந்து வருகின்றனர்.அமெரிக்காவிலே வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்களே பெண்களைச் சமமாக நடத்தாதலால் வழக்குகளைச் சந்தித்து நீதி வழங்கப்பட்டுள்ளது.
சிறு வயது முதலே பெண்கள் தங்கள் உரிமைகளை நிலை நாட்டிக் கொள்ளவும்,படிப்பில் பொருளாதரத்தில் முன்னேறவும்,சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற உறுதியில் நிற்கவும் அனைவரும் மனதளவில் சிந்தித்துச் செயல்படவேண்டும்.
இதில் ஆண்களின் மனமாற்றம் அவர்களுக்கே மகிழ்ச்சி தரும் என்ற நிலை வந்தால்தான் முழு வெற்றி அடையமுடியும்.மதம் குறுக்கிடுவது ஒழிய வேண்டும்.சட்டங்கள் மட்டும் போதாது,உண்மையான் மனமாற்றம் ஒவ்வொரு வீட்டிலுந்தேவை.

செல்வநாயகி said...

அருமையான கட்டுரை

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி..வேறென்ன சொல்ல...
இப்படி புரிதல் உள்ளவர்களாக இருப்பதே பெரிய விஷயம்..

முப்பதுக்குள் உள்ள இளைஞர்கள் கூட
ஆணாதிக்க சிந்தனையுடனோ அல்லது
பெண்களுக்கு உரிமை என்பதில் விருப்பமில்லாமல் அல்லது குழப்பமாக இருப்பதைப் பார்க்கிறேன். எனவே பெண்கள் இன்னும் நிம்மதியான காலத்தை எதிர்நோக்கி பலவருடம் காத்திருக்க வேண்டிவரும் என்றே கவலையாக இருக்கிறது.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com