Wednesday, September 15, 2004

உறவுக்கு உயிர்கொடுங்கள்

றவுகளுக்குள் தான் எத்தனை மாற்றங்கள். தொழில்நுட்ப வளர்ச்சியும், தகவல் தொடர்புகளும் ஊர், சொந்தம், உறவு, குடும்பம் என அனைத்தையும் அசைத்து பார்த்திருக்கிறது. கடந்த வருடம் விடுமுறைக்கு சென்றிருந்த வேளை நண்பர்களை பார்க்க அரிதாக இருந்தது, குழந்தைகளை வெளியே காணமுடியவில்லை. என்ன தான் நடக்கிறது என ஊரில் கவனித்தபோது... தொலைகாட்சி தொடர்கள் கட்டிவைத்திருக்கும் மாயம் புரிந்தது. இதுவா நாம் வாழும் உலகம்? என் நினைவுகள் 20 ஆண்டுகளுக்கு பின்னால் சென்றது.

அப்போதெல்லாம் தொலைக்காட்சி பெட்டி சிலருடைய வீடுகளில் தான் இருந்தது. அதுவும் பெரும்பாலும் கருப்பு வெள்ளை தொலைகாட்சி. அரசு ஒளிபரப்பிய இந்திமொழி தொடர்களையும், செய்திகளையும், திரைப்படங்களையும் தாங்கிவந்தன. மக்களின் உறவு எப்படி இருந்தது? பொழுதுபோக்கு என்ன? வீடுகளுக்கு மத்தியில் சுற்றுசுவர்களோ வேலியோ அதிகம் இல்லாமல் திறந்த இடங்களாக இருந்ததால் குழந்தைகள் ஓடி விளையாடுவதும், பெரியவர்கள் கூடி கலந்து உறவுகளையும், கருத்துக்களையும் பரிமாறிய காலம் அது. ஒருவர் வீட்டில் சுகமோ, துக்கமோ ஊரே வந்து உதவி செய்து வாழ்ந்த காலம். அந்த சாதாரண மனிதர்கள் வாழ்வு தான் இப்போது எப்படி மாறியிருக்கிறது?

வண்ணத்தொலைக்காட்சி பெட்டிகளும், தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுமாக பல வடிவங்களில் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் உலகில் நாம் வாழ்கிறோம். காலை எழுந்ததும் செய்திகளை படிக்கிறோமோ இல்லையோ திரைப்பாடல்களையும், கன்ணீர் சிந்தும் தொடர்களையும் பார்ப்பதில் குறை வைப்பதில்லை. பெரும்பாலான தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் அனைத்தும் அதிகபடியான வன்முறை, வக்கிரம், மூடநம்பிக்கை, முறைகேடுகள் என சமூகத்துக்கு எதிர் கருத்துக்களை தான் பரப்புகிறது. பொருட்களின் கவர்ச்சியான விளம்பரங்களுக்கும் உண்மையான தரத்திற்கும் பல வேறுபாடுகள்! தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் திரைப்படங்கள், திரைநட்சத்திரங்கள், திரைப்பாடல்கள் என வந்ததை சுற்றி சுற்றியே வருகிறது. உலகம் என்ன சினிமா என்ற ஊடகத்தில் சுருங்கிவிட்டதா? நமது கலை, கலாச்சாரம், பண்பாடு, அறிவியல்.. என எத்தனையோ விடயங்களை பதிவு செய்ய வாய்ப்பிருக்கையில். கவர்ச்சிகட்டிலில் போதையுடன் கிடக்கிறது தமிழ்த்தொலைகாட்சிகள்.

மத சடங்குகளில் அதிகம் நாட்டமுள்ளவர்கள் கூட, கோவிலுக்கு போகும் நேரத்தில் தொலைகாட்சி தொடரில் மூழ்கியிருக்கிறார்கள். வீட்டில் விருந்தினர் வந்தால் என்ன, விடுமுறைக்கு பிள்ளைகள் வந்தால் என்ன முதலில் "சித்தி", "மெட்டி ஒலி", "அண்ணாமலை" பார்த்தபிறகு தான் மற்றதெல்லாம். பகல் முழுதும் திரைப்படங்கள், இரவில் தொலைகாட்சி தொடர்கள், நள்ளிரவில் சிரிப்பு நிகழ்சிகள் என தொலைகாட்சி பெட்டிக்குள் நமது சிந்தனைகளும், குடும்பமும் அடக்கப்பட்டிருக்கிறது.

முன்பெல்லாம் பல வீட்டு குழந்தைகள் ஒன்றுகூடி ஒரு பொது இடத்தில் விளையாடுவதும், பலவிதமான விளையாட்டுக்களில் குழுவாக இணைந்து இன்பமாக செயல்படுவது வாடிக்கை. அது குழந்தைகளுக்குள் தன்னம்பிக்கை, நட்புறவு, குழுவாக இணைந்து செயல்படும் பண்பு, தலைமைத்துவம் இவற்றை வளர்க்க உதவும். தொலைகாட்சியை வெறித்து பார்த்துகொண்டே இருப்பதாலும், வீடியோ திரை விளையாட்டுகளில் ஈடுபடுவதாலும் என்ன நன்மையோ? தகவல்தொடர்பு ஊடகங்களை நமது உறவை, சமூகத்தை பாதிக்காதபடி பயன்படுத்துவது நன்மைதான்! அதுவே நமது உறவை சிதைக்குமானால்?

இதனால் உனக்கென்ன என்கிறீர்களா? நேருக்கு நேராக உரையாடும் போது உறவு வலுப்படும். மனிதர்களுக்குள் ஆழமான அன்பும், ஈடுபாடும், மனித பண்புகளும் வலுப்படும். கண்கள் பேசும் மொழியை, உதடும் முகமும் படர விடும் மௌனமொழியை இழந்து வார்த்தைகள் மட்டுமாய் உறவுகள் மாறினால்... உறவுகள் சிதைவதும், வாழ்வு கொடுமையாவதும் தானே நடக்கும். உறவுக்கு உயிர்கொடுங்கள் உயிர் உள்ளவரை... வருகிறேன் என் நினைவுகளை சுமந்தபடியே...

நினைவுகளுடன்...
திரு

குழந்தைகளுக்கான உலகை உருவாக்குவோம்!

சிலருக்கு சுகங்களையும், பலருக்கு வேதனையையும் அள்ளி தெளிக்கிற வாழ்க்கை கோலம் புதிரானது. மழலைகளை நினைக்கையில் அழகு வண்ண சிறகடிக்கும் பட்டாம்பூச்சியின் நினைவு வருவதும், இறக்கையில்லா தேவதைகளை காணும் சுகமும் தனே வருகிறது. நம்மால் சோகமான முகத்துடனிருக்கும் தேவதையை நினைத்து பார்க்க முடிகிறதா?

வாழ்வில் மனதை உருக்கும் காலங்கள் சிலவேளைகள் மட்டும் வரும். எனக்கும் அப்படி வந்தது ஒரு பொழுது 2002 டிசம்பரில். அது எனது தமிழீழ பயண வேளை. குழந்தைகள் காப்பகம் சென்ற நேரம். யுத்தத்தின் கொடிய வலியையும் இழப்பையும் தாங்கி "குருகுலம்" என்ற அந்த காப்பகத்தில் மட்டும் 100 க்கும் அதிகமான குழந்தைகள் இருந்தனர். ஒவ்வொரு குழந்தையிடமும் ஒரு சோக பின்னணி இருந்தது. அம்மா, அப்பா, அக்கா, அண்ணா என எல்லா உறவுகளையும் யுத்த்தில் தொலைத்தவர்கள். வாழ்வில் இடி இடியாக துன்பங்கள் தொடர்ந்து வந்ததால் யாருமற்றவர்களாக ஆக்கப்பபட்டவர்கள்.

அவர்களது குடும்பம் "குருகுலம்" என்ற குழந்தைகள் இல்லம். நாங்கள் சென்றபோது எங்களை மாமா, அத்தை என உறவு சொல்லி சுற்றி வந்து அவர்களது இடங்களை ஆசையோடு காட்டினார்கள். அவர்களோடு அங்கேயே வாழ நான் துடித்த துடிப்பு சொல்லமுடியாதது. அவர்களில் மிகவும் சின்னவர்கள் கூட எங்களுக்கு மழலை மொழியில் விளக்கியது நெஞ்சை தொட்டது. அவர்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கும் திறமைகளை நேரடியாக காணமுடிந்தது. பல மேடைகளில் பேசிய அனுபவம் இருந்த போதிலும் அந்த குழந்தைகள் முன்னால் பேச இயலாமல் மௌனமாய் நின்றேன். அந்த நாள் நெஞ்சில் எப்போதும் ஈரமாய் தொடரும்.

கரண் என்ற சுமார் 4 வயது நிரம்பிய மழலை, அவர்கள் வாழுகிற "குருகுலம்" வீட்டையும், மற்ற குழந்தைகளையும் அறிமுகப்படுத்தியது இன்னும் நீங்காமல் என் மனதில். அவர்களுக்குள் இருக்கும் தன்னம்பிக்கை மிகவும் பெரியது. சிறுவயதில் உறவினர்கள் அனைவரையும் இழந்து குடும்பத்தில் தான் மட்டுமே மிஞ்சிய குழந்தை ஒன்று தைரியமாகவும், திடமாகவும் வளர்வதை கண்டபோது பராமரிப்பாளர்களையும், "குருகுலம்" வீட்டை உருவாக்கி காப்பாற்றுகிற அந்த நல்ல மனிதர்களையும் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.

ஒரு அறையில் வயதில் சிறிய குழந்தைகளுக்கென தொட்டில் படுக்கைகள் வைக்கபட்டிருந்தது. ஒவ்வொருவருக்கும் ஒரு படுக்கை, தலையணை, கொசுவலை என வழங்கப்பட்டிருந்தது. அதில் வயதுக்கு ஏற்றவாறு தொட்டிலின் உயரம் இருந்தது. காரணம் அறிந்தபோது வியந்துபோனேன். அந்த குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை தொட்டிலில் துவங்குகிறது. மற்றவர்களை எல்லாவற்றிற்கும் எதிர்பார்க்கும் உலகில், திடமாக தன்னம்பிக்கையுடன் அவர்கள் எடுத்துவைக்கும் முதல் அடி தொட்டிலில் துவங்குகிறது.

கரண் எங்களுக்கு ஒரு அழகிய குருவிகூட்டை காட்டினார். (தமிழீழ மக்கள் குழந்தைகளையும் மரியாதையுடன் தான் அழைக்கிறார்கள்! இதனால் மற்றவர்களுக்கு மரியாதை தரும் குணம் சிறுவயதிலிருந்தே வளர்கிறது.)அவருடன் மற்ற குழந்தைகளும் அந்த குருவிகூட்டை கலைக்காமல் பாதுகாத்து வருகிறார்களாம். குருவியின் கூட்டை கலைக்காமல் பாதுகாக்கும் இந்த குழந்தைகளின் கூட்டையும், வாழ்வையும் கலைத்தது நீதியா? மனிதநேயத்தின் பிறப்பு குருவிகூட்டை பாதுகாக்கும் பண்பிலிருந்து பிறக்கின்றது என்பதை எங்களுக்கு உணர்த்தியது அந்த குழந்தைகள் (சிறுவர்கள் என அவர்களை அழைக்க முடியவில்லை... காரணம் சில பண்புகளில் அவர்கள் எங்களை விடவும் பெரியவர்கள்). அங்கே ஒரு வீட்டை சேர்ந்த பெற்றோரை இழந்த ஐந்து குழந்தைகளையும் கூட பார்க்க முடிந்தது.

இந்த அப்பழுக்கற்ற மழலைகளுக்கு எதை நாம் திருப்பி தர இயலும்? கொஞ்சும் மொழி பேசி, துள்ளி திரிய வேண்டிய இவர்களது மழலை வாழ்வை பறித்த கொடிய யுத்தம் மீண்டும் வராமல் தடுப்பது இனியும் இழப்புகளை தடுக்க உதவும்.

குழந்தைகளுக்கு இணக்கமான உலகை பற்றி பேச நம்மில் பலர் தயங்குவது ஏன்? தத்தி தவழ்ந்து, தாவி பிடித்து, கிடைத்ததை வாயில்வைத்து மெல்ல அடியெடுத்துவைத்து, பொக்கை வாயால் சிரிக்க வைத்து, திடீரென அழுது, மெல்ல பஞ்சு பொம்மையாய் நித்திரையாகி, செல்லமாக கிறங்கடிக்கும் மழலைகளுக்கு இந்த உலகம் எப்படி இருக்கிறது?

குழந்தைகளுக்கான அந்த அழகிய உலகை திருப்பி தர முடியுமா? ஒவ்வொரு யுத்தமும் வந்து போகிறது, மழலைகளையும் அவர்களது வாழ்வையும் விழுங்கியபடியே.

பலவித வேதனையான பின்னணியிலிருந்து வருகிற குழந்தைகளுக்கு "குருகுலம்" ஒரு பரந்துவிரிந்த பண்பாட்டு இல்லம். இங்கு குழந்தைகள் வாழமட்டுமல்ல, "மனிதர்களாக" பண்பாட்டு விழுமியங்களுடன் கல்வியும் அனுபவமும் பெற்று வளர்கிறார்கள். நாம் போகவேண்டிய புண்ணியதலமது!

இன்னொருமுறை வருகிறேன் என் தமிழீழ பயண நினைவுகளை சுமந்தபடி!

நினைவுகளுடன்...
திரு

மேதினம்!!! உரிமைகளின் பிறப்பு!

சின்ன வயதில் பள்ளிக்கு சென்று வரும் காலமது. சிகப்பு சட்டையிலிருந்த அந்த வேறுபட்ட மனிதர்களின் கொடி அசைவும், முழக்கமும் எதிரொலியாக இன்னும் மனதில்! மேதினம் வாழ்க! தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக! என்ற அந்த முழக்கம் புரியாத காலமது. மேதினம் என்றதும் இந்த சிகப்பு மனிதர்கள் மனதில் வந்து போனார்கள். என் நினைவலைகள் மேதின வரலாறை நோக்கி...

காலப்போக்கில், கோயம்புத்தூரில் Pricol தொழிற்சாலையில் பணி செய்தவேளை மேதினம் என்பது விடுமுறை என்பதால் மனதுக்கு இனித்தது. ஆனாலும் விடுமுறைக்கான காரணம் புரியவில்லை. ஒப்பந்தவேலையில் இருந்த எனக்கும் நண்பர்களுக்கும் நிரந்தர வேலை என்பது கனவு. இப்போதெல்லம் இந்தமாதிரி கனவு நிறைவேறாமல் பல்லாயிரம் பேர். அன்று 12 மணி நேரம் வேலைக்கு 15 ரூபாய் சம்பளம் தந்த ஆலை இன்று வளர்ந்திருக்கிறது பலரது உழைப்பை விழுங்கியபடியே!

பணியில் நமக்கு இருக்கிற அனைத்து உரிமைகளுக்கும் (அடிப்படை குறைந்தபட்ச ஊதியம், பாதுகாப்பு சட்டங்கள், 8 மணி நேர வேலை வரையறை, ஓய்வூதியம், பணிபாதுகாப்பு முதலியன) அடைப்படி காரணம் மேதினம்! வருடம் ஒருமுறை வரும் இந்த நாள் தேர்திருவிழா மாதிரி நம் மக்களை சென்றடையவில்லை. இது ஒரு தனி வரலாறை உலகில் உருவாக்கிய நினைவு நாள். 1886 இல் அமெரிக்காவின் சிக்காகோ நகரில் வெடித்த ஒரு வரலாற்று புரட்சி உலகில் அனைவரின் வாழ்விலும் மாற்றத்தை வழங்கியது! அப்படி என்ன நடந்தது?

நீராவி எந்திரத்தின் கண்டுபிடிப்பு உலகில் புதிய எந்திரங்களையும், தொழிற்கூடங்களையும் உருவாக்கியது. தொழிற்புரட்சி இந்த உலகில் அதிரடி மாற்றங்களை வழங்கிய காலமது. ஆலைகள், சுரங்கங்கள் என எங்கும் புது உருவாக்கங்களால் உலகம் வேகமாக சுழன்றது. வேலை, உற்பத்தி பெருக்கம் என உலகம் வேகமாக சுழன்ற வேளை குடும்பங்களில் அதன் தாக்கம் இருந்தது. எல்லோரும் 16, 18 மணி நேரம் வரை சுரங்கங்களிலும், ஆலைகளிலும் கடுமையாக உழைத்தனர். அப்போதெல்லம் கழைப்புடன் வேலையை விட்டு வரும்வேளை குழந்தைகள் நித்திரையில் இருப்பார்கள். இப்படியே காலங்கள் ஓடியத்தால் பல குழந்தைகளுக்கு தனது வீட்டுக்கு வரும் அந்த மனிதர் (அப்பா) யார் என்றே தெரியவில்லை. பாசத்தை பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பில்லாமல் போனது. உறவுகளோடு கலந்து வாழவும், ஓய்வு எடுத்துக்கொள்ளவும் வாய்ப்பு இல்லாமல் இயந்திரம் போன்ற வாழ்க்கையானது. ஆலை நிர்வாகமும், முதலாளிகளும் உற்பத்தி, இலாபம் என்பதில் மட்டும் கவனமாக இருந்தனர்.

வேலை நேரத்தை குறைக்கவேண்டும் என பல போராட்டங்கள் நடந்தும் அந்த குரலுக்கு செவிசாய்க்காமல் அடிமைத்தனமான அணுகுமுறைகள் தொடர்ந்தன. வேலைநேரம் வரையறுக்க கேட்டு 1886 மே 1இல் அமெரிக்காவின் பல பகுதிகளிலுமாக சுமார் ஆறு லட்சம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். அதன் ஒரு கட்டமாக 8 மணி நேரம் வேலை என்ற கோரிக்கையை முன் வைத்து சிக்காகோ நகரில் "மெர்க்காமிக் ஹார்வெஸ்ட் ஒர்க்ஸ்" என்ற ஆலையின் தொழிலாளர்கள் போராடினார்கள். போராட்டம் தொடர்ந்ததால் ஆலை மூடப்பட்டது, துப்பாக்கி தோட்டாக்கள் தொழிலாளர்களை கொன்றுகுவித்தது. அந்த அடக்குமுறையில் பிறந்தது 8 மணி நேரம் என்ற உரிமை! வடிந்த குருதியுடன் உயிர் சாயும் வேளையில், உதிரத்தில் தோய்த்து கரம் உயர்த்தி முழக்கமிட்ட அந்த மாமனிதர்களால் நமது உரிமைகள் பிறந்தன. அதில் ஒரு உரிமை தான் 8 மணி நேரம் வேலை என்ற உரிமை கிடைத்தது. சிகப்பு சிந்தனையின் தொடக்கமும், சிகப்பு கொடி உருவான வரலாறும் இதுவே.

மேதினம், 8 மணிநேரம் வேலை என்பது பொதுவுடமை கொள்கையாளர்களுக்கு (கம்யூனிஸ்டு) மட்டுமானதல்ல, எல்லா தொழிலாளர்களுக்கும் கிடைத்த உரிமை.

இன்று அந்த உரிமைக்கு என்ன ஆகி இருக்கிறது? கட்டாய அதிகநேர வேலை (ஓவர் டைம்) உலக தொழிலாளர் அமைப்பின் (International Labour Organisation) நெறிமுறைகளும், விதிகளும் (abolish Forced Overtime convention) தடை செய்துள்ளது. நடைமுறையில் இந்த உரிமை எப்படியிருக்கிறது? பல நாடுகளில் 12-16 மணி நேரம் வேலை என்பது இன்றைய வழக்கமாக இருக்கிறது. தொழிலாழர்களின் பல உரிமைகள் (ஓய்வு ஊதியம், சேமநல நிதி, விடுப்பு, காப்பீடு, பணிபாதுகாப்பு, மருத்துவ வசதி, பேறுகால விடுப்பு, பணியில் பெண்ணுக்கு சம உரிமை, பறிக்கப்பட்டு வருகிறது. அடிப்படை உரிமையான தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை மறுக்கப்படுகிறது.

பல நிறுவனங்கள் தங்களது இலாபத்திற்காக தொழிலாளர் உரிமையை மறுத்து ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு ஆலைகளை மாற்றி வருகிறது. பல இலட்சம் தொழிலாளர்கள் இதனால் பாதிப்படைந்து வருகிறார்கள். தாய்லாந்து, இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா என பல வளரும் நாடுகளில் தொழிலாளர்களது உரிமையை நேரடியாகவும், மறைமுகமாகவும் பறித்து வருவது அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்கள்.

உரிமைகளை பெறுவதென்பது எளிதானதல்ல! கிடைத்த உரிமையை பாதுகாப்பது வளரும் தலைமுறைக்கும், வருங்கால உலகுக்கும், வேலை அமைப்பு முறைக்கும் வழங்கும் பாதுக்காப்பாக அமையும்! நிரந்தரமற்ற தன்மையால் பாதிக்கப்பட்டு கிடக்கிற உலகின் கண்ணீரை துடைக்க நாம் என்ன செய்யபோகிறோம்? மேதினம் வாழ்க! மேதின தியாகிகள் வாழ்க! உலகமெங்கும் தொழிலாளர் உரிமை வளரட்டும்! வருகிறேன் என் நினைவுகளை சுமந்தபடி...

நினைவுகளுடன்...
திரு

நீரின்றி யாதுமில்லை!

தாய்லாந்தில் தண்ணீர் திருவிழா! ஆனால் சென்னை முதல் கிராமங்கள் வரை தண்ணீர் இல்லாமல் காலி குடங்களுடன் மக்கள் அணி அணியாக! வழக்கம் போல அரசியல் பசப்பு பேச்சுகள் கட்சித்தலைவர்கள் முதல் முன்னணி நடிகன் வரை தண்ணீரை பற்றி தான்! என் நினைவுகள் அழகிய என் கிராமத்தை நோக்கி...

எனது 13 வது வயது வரை எங்களது கிராமத்தில் சுமார் 75 குடும்பங்களுக்கு ஒரே ஒரு கிணறு மட்டும் இருந்தது. அப்போதெல்லாம் அம்மா, அக்கா, நான் என அனைவரும் மண் குடத்தை சுமந்து தண்ணீர் கொண்டுவருவது ஒருவித யாத்திரை. அந்த யாத்திரைக்குள்ளும் இருந்த ஒருவித சுகம் இப்போதும் இனிக்கிறது. தரைமட்டம் வரை கற்கள் பரப்பி இருந்த அந்த கிணற்றில் பலர் சுற்றி நின்று கமுகு பாளையில் கயிறு கட்டி கையால் தண்ணி எடுக்கும்போதே சுகங்களும், சோகங்களும் பரிமாறிய அந்த இனிய உள்ளங்கள் ஒவ்வொன்றும் இனிய கனவு போல இருக்கிறது. சில காலங்களில் கிணறு வற்றி போன வேளைகளில் வயல்வெளி பக்கமாக ஊறணி வெட்டி தண்ணீர் எடுத்தாலும் தண்ணீர் பஞ்சம் என்பது அப்போதெல்லாம் இல்லை. ஏன் இந்த தண்ணீர் தட்டுப்பாடு தற்போது மட்டும்? இந்த நிலை தொடர்ந்தால் நாம் என்னாவோம்?

பிறப்பு முதல் இறப்புவரை நீருக்கு தான் எத்தனை முக்கிய பங்கு நமது வாழ்வில். தாயின் பனிக்குடத்தில் நீருக்குள் தான் கரு வளர்ந்து குழந்தையாக பிறக்கிறது. அப்போது தொடங்கும் இந்த தண்ணீர் நேசம் வாழ்வின் இறுதிவரை வருகிறது. தண்ணீர் வெறும் சமையலுக்கும், தேவைகளுக்கும் மட்டும் பயன்படும் ஒரு பொருள் அல்ல. நம் வாழ்வில் இரண்டற கலந்திருக்கும் ஒரு அதிசய சக்தி. அதனால் தான் இறைநம்பிக்கை கொண்டவர்களுக்கு தண்ணீர் மிகவும் புனிதமானது. பகுத்தறிவாளர்களுக்கு இது உயிர் வாழ அடிப்படை ஆதாரம்.

"தாகமாய் இருந்தேன் குடிக்க தண்ணீர் தந்தீர்கள்" இது பைபிள். தண்ணீர் புனிதமானது, பாவ அழுக்குகளை தண்ணீர் கழைந்துவிடும் என்பது அனைத்து மதங்களின் நம்பிக்கை. இஸ்லாமியர்கள் தொழுகைக்கு முன்னர் முகம், கை, கால் என தண்ணீரால் சுதம் செய்த பின்னர் தான் தொழுகைக்கு செல்வார்கள். கோடிகணக்கான மக்கள் இந்தியாவில் மகா கும்பமேளாவில் தண்ணீரில் குளித்து எழுவது புனிதமாக நம்புவதை இந்தியாவில் காண்கிறோம். தாய்லாந்து, வியட்னாம், கம்போடியா போன்ற நாடுகளில் தண்ணீருக்கு என தனி விழாவே இருக்கிறது. தண்ணீரால் ஒருவரை ஒருவர் நனைப்பது ஒருவித இன்பமான கொண்டாட்டம். புத்த மதத்தின் சடங்குகளில் தண்ணீருக்கு என தனி இடம் உண்டு. கிறிஸ்தவ மததில் இணையும் ஞானஸ்தானம் என்ற முதல் சடங்கில் தண்ணீர் சிறப்பான இடத்தை பிடிக்கிறது. தமிழர்கள் புது வீட்டில் குடியேறும் போது நிறைகுடம் தண்ணீருக்கு முதல் இடம். வீடு கட்டும் போது முதலில் பார்ப்பது தண்ணீர் வசதி இருக்கிறதா என்பதை தான். தண்ணீர் வாழ்வின் ஆதாரம். மனித உடல் 55% முதல் 70% வரை தண்ணீரால் நிரப்பப்பட்டது. ஆக நீரின்றி யாதுமில்லை இவ்வுலகில்! அதனால் தான் செவ்வாய் கிரகத்தில் உயிர்வாழ்க்கை உள்லதா என்பதை ஆராய, அங்கு நீர் இருக்கிறதா என்பதை முதலில் ஆராய்கிறார்கள் அறிவியலாளர்கள்.

நீர் மிகவும் சக்திமிக்கது, கத்தியால் நீரை வெட்டினாலும் இணைந்துவிடும். கற்பாறைகளையும் கரைத்துவிடும் தன்மை கொண்ட நீர் தான் வரும் காலத்தில் உலகில் யுத்தங்களை உருவாக்க போகிறது! ஏன்? தண்ணீர் தட்டுப்பாடு அந்த அளவு மனிதனை வாட்டி வதைக்க போகிறது.

கணக்கில்லாத அளவில் வளரும் நாடுகளில் தண்ணிரை உறிஞ்சி வியாபாரம் செய்கிற பன்னாட்டு குளிர்பான கம்பெனிகளும், தண்ணீர் வியாபார நிறுவனங்களும். கொக்கோ கோலா, பெப்சி-யின் வியாபாரம் அனைத்தும் தண்ணிர் சம்பந்தமானது! இந்த கம்பெனிகள் தண்ணிரை பயன்படுத்த எந்த கட்டுபாடுகளும் இல்லை. மக்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லாத வேளை, தண்ணீரை டாலராக மாற்றி கொள்ளையடிக்கிற இந்த பன்னாட்டு கம்பெனிகளை பற்றி எத்தனை பேர் கவலைப்படுகிறோம். நாம் குடிக்கிற ஒவ்வொரு குவளை பெப்சி, கோக் குளிர்பானங்களிலும் உரிமைகள் மறுக்கப்பட்ட தொழிலாழியின் இரத்தமும், ஏழைகளின் வியர்வையும் கலந்திருக்கிறது. எந்த அரசும் இந்த நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கமுடியாத அளவு அதன் அதிகார கரங்கள் பரந்துகிடக்கிறது. எல்லோரும் புறக்கணித்தால் இந்த கரங்கள் தானாக வலுவிளக்கும் என்ற நம்பிக்கையில் கோக், பெப்சி முதலிய பானங்களை தவிர்த்துவருகிறேன். இது கணக்கற்ற உள்ளங்களில் பரவவேண்டும்! படர்கிறது!

பணம் சம்பாதிக்கும் நோக்கில் நீர் ஆதாரங்களை சேதப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளும் நடக்கிறது. நீர் மட்டத்தை பாதித்தாலும் கவலைப்படாமல் மணல் கொள்ளை நடக்க, அரசும் அதிகாரிகளும் துணை போகிறார்கள். தண்ணீரை சேமிக்கும் திட்டங்களை கிராம, நகர அமைப்புகள் நடைமுறை படுத்துகிறதா? மழையை பெருக்கும் காடுகளின் நிலை தான் என்ன? அனைத்து நாடுகளிலும் காடுகள் அழிப்பு நடக்கிறது. பல நகரங்களில் தண்ணீரை விற்று பணம் சம்பாதிக்கும் கும்பல் அரசியல் துணையுடன் வளமாக நடமாடுகிறது.

நகர்புறங்களில் தண்ணிரை பல அரசுகள் வினியோகம் செய்துவந்தது, இதில் குறைபாடுகள் இருந்தாலும் கடமையும், பொறுப்பும் அரசுக்கு உண்டு. இனி தண்ணீர் பெறும் உரிமையும் தனியாருக்கு நம்மையறியாமலே போகிறது. நமது நாடுகளின் இயற்கை வளமான தண்ணீரை வடிகட்டி நமக்கு விற்க ஐரோப்பிய, அமெரிக்க நிறுவனங்கள் போட்டி போடுகிறது. தண்ணீரை தேக்க கட்டப்படுகிற அணைகள் இதுவரை அரசுக்கு சொந்தமானது (அரசு என்றால் அது மக்களுக்கு சொந்தம்!). இனி நீர்தேக்கங்களும், அதில் செயல்படும் மின் உற்பத்தி நிலையங்களும் தனியார் நிறுவனங்களுக்கு உரிமையாக போகிறது! யார் இதனால் இலாபமடைவது?

  • உலக அளவில் 1.1 பில்லியன் மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை. (ஐ.நா மனித மேம்பாட்டு அறிக்கை 2002)
  • 2025 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு தேவையான அளவு சுத்தமான குடிநீர் இருக்காது. (உலக வங்கி 2002)
  • 2050 இல் உலக மக்களில் 45% பேர் (4.2 பில்லியன்) நபருக்கு தினமும் 50 லிட்டர் நீர் கிடைக்காத நாடுகளில் வாழ்வார்கள் (ஐ.நா உலக மக்கள்தொகை அறிக்கை 2001)
  • தண்ணீர் சம்பந்தமான தடுக்கப்படக்கூடிய நோய்களினால் வளரும் நாடுகளில் தினமும் 10,000 முதல் 20,000 வரை குழந்தைகள் உயிரிளக்கிறார்கள் (உலக சுற்றுபுறசூழல் செய்தி, ராய்ட்டர் செய்தி நிறுவனம் 2002)
  • 95 % கழிவுகளும், 70% ஆலைக்கழிவுகளும் சுத்தைகரிக்காமலே வளரும் நாடுகளின் நீர்நிலைகளில் கலக்கிறது. (ஐ.நா உலக மக்கள்தொகை அறிக்கை 2001)

என புள்ளி விபரங்கள் நீண்டுகொண்டே போகிறது. இவற்றிற்கு என்ன காரணம்? இவை மாற என்ன செய்யலாம்?

தமிழ்மக்கள் வீடுகளுக்கு சென்றால் முதலில் கிடைப்பது குடிநீர். எதிரியாக இருந்தாலும் தண்ணீர் கேட்டால் தடுக்காமல் கொடுக்கும் பண்பாடு கிராமத்து மனிதர்களுடையது. இன்று "உலகமாக்கல்" கொள்கையால் அந்த பண்பாடு சிதைந்து குடிக்க தண்ணீர் கேட்டால் காசு கேட்கிறார்கள்.

"அன்று தாகமாய் இருந்தேன்

குடிக்க தண்ணீர் தந்தீர்கள்...

இன்று தாகமாய் இருக்கிறேன்

குவளை தண்ணீர் கொடுத்து

கூடவே கையும் நீள்கிறது

காசு வாங்க"

தனியார் நிறுவனங்களை இலாபமடைய வைப்பதற்கு தண்ணீர் ஒரு விற்பனை பொருளல்ல. தண்ணீரை பற்றிய நமது மதம்சார்ந்த நம்பிக்கைக்கும் நமது வாழ்விற்கும் என்ன தான் சம்பந்தம்?

மழை நீரை சேமிக்க குரல் கொடுப்பவர்களும், நதிகளை இணைக்க குரல் உயர்த்துபவர்களும் தண்ணீரை வியாபாரமாக்குவதை பற்றி எதுவும் பேசாதது ஏனோ? நதிகள் அனைத்தையும் இணைத்தாலும் தண்ணீருக்கான உரிமையை மக்களுக்கு வழங்காவிட்டால் என்ன பயன்? உடனடியாக நாம் செயல்படாவிட்டால் பூமித்தாயின் கோபம் நம் சந்ததியையே அழிக்கும் சக்தி மிக்கது! அந்த சக்தி இப்போது தண்ணீர் வடிவில்! வருகிறேன் என் நினைவுகளை சுமந்தபடி...

நினைவுகளுடன்...

திரு

மக்களாட்சியும், மாயங்களும்...

ந்த வருடம் ஆசிய நாடுகளுக்கு தேர்தல் ஆண்டு. பழைய பகைவர்கள் ஒன்று சேர்வதும், புதிய பகைவர்கள் உருவாவதும் என தினம் ஒரு அரசியல் வேடிக்கை நமது நாடுகளின் அரசியல் அரங்கில். பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா, இலங்கை, இந்தியா என தேர்தலை சந்திக்கும் நாடுகளின் பட்டியல் ஆசியாவில் நீள்கிறது. என் நினவுகளில் தேர்தல்களில் அழைத்து செல்கிறேன்...

எனக்கு 8 வயதிருக்கும் போது ஒரு தேர்தல் காலம் அது. உடைந்த குரலில் ஒலிபெருக்கியில் வாக்குறுதிகளை கேட்ட அந்த வேளைகளில் ஒரு இனம்புரியாத சிலிர்ப்பு. ஒவ்வொரு ஒலி பெருக்கி வண்டியிலும் (கட்சி பேதம் பார்க்காமல் தான்) அவர்களது அறிக்கை காகிதங்களை பெறுவது அப்போதெல்லம் ஒரு வித விளையாட்டு... புழுதி கிழப்பி சென்ற அந்த வாகனங்களும், அந்த வாக்குறுதி குரல்களும் இன்னும் நெஞ்சில்...

அதே அரசியல்வாதிகள் இன்னும் அரசியல் வானில்! வாக்குறுதிகள்?

தேர்தலை சந்திக்கிற இந்த நாடுகள் எல்லாம் “மக்களாட்சி அமைப்பு முறையை (!)” பின்பற்றி வருகிறது. "மக்களால், மக்களுக்காக, மக்களே ஆட்சி செய்யும் ஆட்சி முறை மக்களாட்சி" என்ற அருமையான தத்துவம் அடிப்படையில் ஆட்சி நடத்தப்பட வேண்டும். நடை முறையில் என்ன? யார் இந்த மக்கள்? மக்களுக்காக யார் முடிவுகளை எடுப்பது?

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இந்தியாவில் இட ஒதுக்கீடு கொண்டு வந்ததால் வி.பி.சிங் ஆட்சியை 11 மாதங்களில் ரதயாத்திரை மூலம் கவிழ்த்து மத வெறியை தூண்டியவர் திரு.அத்வானி. இதன் பின்னர் தொடர்ந்த கலவரங்களில் பல்லாயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர், வீடு மற்றும் உடமைகளை இழந்தனர். ஆனால் இன்று திரு.அத்வானி இந்தியாவின் துணை பிரதமர். இன்றும் ஒரு ரதத்தில் பவனி வருகிறார் பிரதமர் ஆகும் கனவுகளுடன்.

கடந்த முறை அமெரிக்காவில் தேர்தல் நடந்த போது பல்லாயிரம் கறுப்பின மக்களின் வாக்களிக்கும் தகுதியை முறைகேடுகள் வழி திரு.ஜார்ஜ் புஷ் இன் ஆதரவு அதிகாரிகள் தடுத்தனர். படையினரின் வாக்குகளை விதி மீறல்கள் மூலம் குவித்தனர். தேர்தல் விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டதை உலகமே கண்டு சிரித்தது. உண்மையில் வெற்றிபெற்றது அல்கோர், பாவம் அமெரிக்க மக்களும் உலகமும் ஒரு சர்வாதிகாரி உலக வல்லரசின் தலைவர் ஆனார்.

இலங்கையில் மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த ரணில் அரசை தந்து அதிகார பலத்தில் கலைத்தார் திருமதி.சந்திரிகா. விடை தெரியாத நிலையில் சமாதான முன்னெடுப்பும், மக்களும் விடியலை எதிர்பார்த்தபடி மீண்டும் வாக்குச்சாவடிகளுக்கு ஆயத்தமாகின்றனர்.

பிலிப்பைன்ஸில் எஸ்டரடா என்ற முன்னாள் நடிகர் ஊழல் நிறைந்த ஆட்சியை தந்ததால் மக்களின் வாழ்வு படுபாதாளத்துக்கு சென்றது. எஸ்டரடாவின் ஆட்சியை மக்கள் ஒன்று சேர்ந்து வீழ்த்தியதில் திருமதி.குளோரியா மக்கபாகல் அராயோ ஆட்சியில் வந்தார். மீண்டும் அதே ஊழலும் கொடுமைத்தனமும். அந்த மக்களின் வாழ்வில் இன்னொரு தேர்தல் இன்னொரு ஊழல்வாதியை நோக்கி...

இந்தோனேசியாவில் இராணுவ சர்வாதிகாரி சுகார்த்தோ வின் ஆட்சியை மாணவர் புரட்சி மூலம் தூகியெறியப்பட்டதன் பின்னர் தொடர்ந்த குழப்பங்களை எதிர்த்து கிளம்பியவர் திருமதி.மேகாவதி சுகர்ணோ புத்திரி. இந்தோனேசியா சந்தித்த நல்ல தலைவரான திரு.சுகர்ணோ வின் மகளான இவர் முன்னைய இராணுவ அடக்குமுறையாளனை விட மோசமானவர் என மக்கள் நினைக்கும் அளவுக்கு ஆட்சி செய்கிறார்...

இந்தியாவில் பொருளாதாரதுடன் ஊழலும் போட்டி போட்டு வளர்கிறது. காஷ்மீர் யுத்ததில் இறந்த இராணுவத்திற்கு சவப்பெட்டி வாங்கியது முதல் அரசு பத்திரங்கள் வரை ஊழல். பிரதமர் அலுவலகம் முதல் கிராம அதிகாரி வரை ஊழல். மதவெறி படுகொலைகள் என பரந்து கிடக்கும் இயலாமையின் மீது நின்று மீண்டும் திரு.வாஜ்பாய் தேர்தலில் வருகிறார். கடந்த முறை கொடுத்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமல். 5 கோடி இளைஞர்களுக்கு வேலை தருவதாக சொல்லி ஆட்சியில் வந்தவர்கள் முதலில் வேலையில் இருந்தவர்களை வேலையை விட்டு அனுப்பினார்கள்.

பதவி வெறி பிடித்து அலைந்து தேர்தலுக்கு தேர்தல் வாக்குறுதிகள் அள்ளி வீசுவதில் நமது அரசியல் தலைவர்கள் வள்ளல்கள். அவர்களது வீண் பேச்சுக்களில் ஏமாற்றப்படுவது மக்கள் மட்டுமல்ல. மக்களாட்சி என்ற தத்துவமும் தான்.

காலமெல்லாம் கண்ணீருடனும், எதிர்கால கனவுகளுடன் விடியலை நோக்கி விம்மி அழுகிற இதயங்களுக்கு தேர்தல் என்பது என்ன ஆறுதலை தர முடியுமோ. காலமும், நல்ல செயல் படைத்த தலைவர்களும் தான் தீர்மானிக்க முடியும். இல்லையெனில் மக்களாட்சி என்பது ஒரு உழுத்து போன தத்துவமாக மாறி விடும்.

மீண்டும் அதே புழுதிகிளப்பும் வண்டியும், உடைந்த குரல்களும், துண்டறிக்கைகளும், மக்கள் கூட்டமும் என எங்கள் வீதிகள்...இந்த முறை எங்களை ஆள்வதற்கு யாரோ? விடை தெரியா நினைவுகளுடன் வாக்குச்சாவடிக்கு நானும்... வருகிறேன் என் நினைவுகளுடன்

நினைவுகளுடன்...
திரு

நீதிதேவதையின் கண்களை கட்டி...

மீபத்தில் ஒரு நீதிபதி “தமிழ் மக்களுக்கு நீதிமன்றங்கள் கோவில்கள், நீதிபதிகள் கடவுள்களை போன்றவர்கள்... நீதிமன்றங்களை விமர்சனம் செய்தால் விளைவுகளை சந்திக்க வெண்டும்” என்று தனது முறையில் கூறியிருந்தார். எந்த அளவு நடைமுறை வாழ்வில் இது உண்மையானது? பல வழக்குகளின் தீர்ப்புகள் நினைவுக்கு வருகிறது!...

தமிழ்நாட்டில், நாகப்பட்டினம் மாவட்டத்தின் கீழவெண்மணி என்ற விவசாயம் செய்கிற சாதாரண தொழிலாழர்களின் அழகிய ஊர். 1968 இல் உலகமெங்கும் கிறிஸ்து பிறப்பை கொண்டாடிய டிசம்பர் மாதம் 25 ம் தேதி நள்ளிரவு பொழுது. இருட்டில் தீபந்தங்கள் ஏந்திய உருவங்கள் 40 ஓலை குடிசைகளில் தீவைத்து வீட்டில் இருந்த 44 தலித் மக்களை எரித்து, சாம்பலானதை உறுதிபடுத்திய பின்னர் நகர்ந்தனர். தப்பியது சிலர் மட்டும். எதற்கு இந்த கொடுமைத்தனம்? யார் செய்தது இந்த வன்செயலை?

அந்த பகுதி நிலத்தை சொந்தமாக்கி வைத்திருந்த பண்னையார்களுக்கு காலங்காலமாக கூலி அடிமைகளாக இருந்தவர்களது குடிசையும், வாழ்வும் தீயில் கருக்கப்பட்டது! காரணம் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதர்க்காக. திட்டமிட்டு இந்த வன்கொடும் பாதகத்தை செய்தது அந்த பண்ணையார்களும், அடியாட்களும். வழக்கு நீதிமன்றத்தில் வந்தபோது இந்த கொடும் செயலில் பாதிக்கப்பட்டவர்கள் கண்களால் பார்த்ததை முறையிட்டும் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வேடிக்கையும் விந்தையானதும் கூட. பண்னணயார்கள் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் என்பதால் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடமாட்டார் என நீதிமன்றம் கருதி விடுதலை செய்தது. இப்படி "பொய்யான" குற்றத்தை பண்ணையார்கள் மீது சுமத்தியதற்காக அந்த உயிர்பிழைத்த அப்பாவிகளுக்கு தண்டனை வழங்கியது. இது உண்மை வரலாறு...

ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் கொலை பற்றி எதுவுமே தெரியாதவர்களுக்கு மரணதண்டனை வழங்கியது ஒரு நீதிமன்றம். 21 நபருக்கு மரண தண்டனை வாங்கி கொடுத்த கழிப்பில் அப்போதைய விசாரணை அதிகாரி "வாய்மையே வெல்லும்" என்றார். மேல் முறையீட்டில் அவர்கள் குற்றமற்றவர்களாக 19 பேர் விடுதலையானார்கள். வாய்மை தான் வென்றது, அது வரை வருடக்கணக்கில் சிறைக்கொடுமை, விசாரணை கொடுமைகளை சந்தித்த அந்த குற்றமற்றவர்களுக்கு என்ன நீதி? யார் வழங்க முடியும்? இழந்த விடுதலை காலத்தை எது ஈடு செய்யும்?

வரலாற்று காலம் முதல் இன்றுவரை ஒரு தீர்ப்புக்கும், இன்னொரு தீர்ப்புக்கும் முரண்பாடுகள் ஏன்? முதலில் குற்றம் செய்ததாக தண்டனை கொடுக்கும் நீதிமன்றம், பின்னர் குற்றமற்றவர் என தீர்ப்பு சொல்லும் சூழல் ஏன்? வழக்குகளில் உண்மை இருக்கிறதா என்பதை முடிவு செய்வது எது? சாட்சிகளும் வாதங்களும் தானே? நல்ல வழக்குரைஞர்களும், அழுத்தமான (பொய்)சாட்சிகளும் கிடைத்தால் எந்த குற்றமற்றவனும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது! இது தான் பலரது வாழ்வின் இருண்ட உண்மை.

குற்றம் செய்யாமல் சிறை கொட்டடியில் தன்டனை பெற்றதர்க்கு என்ன நீதி வழங்கமுடியும்? மனித நாகரீகத்தின் வளர்ச்சியில் உருவாக்கப்பட்டவை தான் நீதிமன்றங்களும், சிறைசாலைகளும், தண்டனை முறைகளும், தீர்ப்புகளும். இன்றைய நீதிமன்றங்களுக்கு எது வழிகாட்டி? மன்னனின் தீர்ப்புகளையும், ஊர்த்தலைவனின் தீர்ப்புகளையும் தட்டிகேட்க முடியாதது எப்படியோ அதுபோன்ற நடைமுறைதான் இன்றைய நீதிமன்ற நடைமுறையும்.

தனது மகன் பசுவின் கன்றை தேர் சக்கரத்தில் கொன்றதர்க்காக நீதி கேட்டு மணியடித்த பசுவுக்கு நீதி வழங்கும் வண்ணம் மகனை தேர் சக்கரத்தில் நசுக்கிய மனுநீதி சோழன் கதையை நீதிமன்றங்களும், நீதியரசர்களும் மறந்துவிடக்கூடாது! குற்றமற்றவனை தண்டிப்பது நீதிதேவதையின் கண்களை கட்டி பேனாவினால் பலாத்காரம் செய்வது தானே தவிர வேறென்னவாக இருக்க முடியும்? சமீபத்து பல தீர்ப்புகள் நீதிக்கு என்ன விலை என்ன கேட்க வைத்து விடுமோ?

நீதிமன்றங்களும், தீர்ப்புகளும், அதன் நடைமுறைகளும் மனிதனால் நடத்தப்படுபவை தான். ஆனால் அவற்றில் மனிதனேயம், நீதி, நேர்மை இருக்கிறதா? இதை விவாதிப்பதால், விமர்சனம் செய்வதால் தண்டிக்கபட்டாலும் துணிந்து விவாதம் செய்வோம். நீதியை காப்பாற்றவும்! நீதி தேவதையின் மாண்பை காப்பாற்றவும். வருகிறேன் நினைவுகளை சுமந்தபடி...

நினைவுகளுடன்...
திரு

மனித மனதை நேசியுங்கள்!

மீப காலத்தில், எனக்கு நெருக்கமான ஒருவரின் தற்கொலை முயற்சி என்னை மிகவும் பிசைந்தது. அதன் விழைவு என் பழைய நினைவுகளை நோக்கிய பயணம்...

1997ன் இறுதிகாலம் அது. நான் கலந்துகொண்ட வளமையான கூட்டம் அது. எப்போதும் போல இளையவர்களுடைய பிரச்சனைகளை பற்றி கருத்துக்களை பகிர்ந்து கொண்ட பின்னர் தேனீர் இடைவேளை. என்னருகே ஒடி வந்த தோழி ஒருத்தி, "அண்ணா! நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன்! வாழ்வின் அனைத்து வழிகளும் எனக்கு அடை பட்டுவிட்டது!" என்றாள். அவளது கதையை கேட்க உட்கார்ந்த போது தான் புரிந்தது. அம்மாவின் இழப்பு, சித்தியின் கொடுமை, பெரியப்பா மகனின் காம துரத்தல், குடும்பத்தின் சுமை, அக்கா கணவரின் அடங்க மறுக்கும் வெறி என இடியப்ப சிக்கல்களே வாழ்கையாக மாறிப்போனது. பொறுமையாக அவளது பிரச்சனைகளை கேட்டு சில ஆறுதல் வார்த்தைகளை மட்டும் என்னால் அந்த தங்கைக்கு சொல்ல முடிந்தது. காலங்கள் பல சென்றது; இன்று அவள் ஒரு கிராமத்தில் தனது இனிய கணவருடன்... ஒரு உயிரை காப்பற்றிய நிம்மதி எனக்கு! அவளுக்கு ஆறுதலாக நான் சொன்ன கதை இப்போதும் என் நினைவில்...

2000 ம் ஆண்டின் தொடக்க காலம் அது.! தமிழகத்தின் புதுகோட்டையில் ஒரு கருத்தரங்க கூட்டத்தில் பேசிகொண்டிருந்தேன். கூட்டதிலிருந்த ஒரு இளைஞன் தனியாக பேச அழைத்தான்! அவனோடு அந்த உச்சி வெயிலில் மண்ணில் உட்கார்ந்து கதையை கேட்டேன். தற்கொலை என்ற முடிவுக்கே வந்துவிட்டதாக அவன் சொன்னபோது வெயிலை விட அவன் வாழ்வின் கொடுமை என்னை கொடூரமாய் சுட்டது. தாய் தந்தையின் அழுத்தமும், ஒரு நல்ல விளையாட்டு வீரனாய் இருந்தும் வேலையில்லை என்ற அவமானமும் பிசைந்தெடுக்க சாவது என்ற முடிவுடன் வந்தவன் அவன். எங்கள் உரையாடலுக்கு பின்னர் சில நாட்கள் என்னோடு தங்கிய பின்னர் திரும்பி போனது "ஆலமரம்" என்ற சமூக நிறுவனத்தில் ஆதரவற்றவர்களை கவனிக்க. அவன் எனக்கு நேசிக்க கற்று தந்தான் பிந்தைய காலத்தில். உலகின் ஒரு மூலையில் அவன் பயணம் நம்பிக்கையுடன் தொடர்கிறது...

தற்கொலைகள் ஏன் நடக்கிறது? வாழ்வின் விளிம்பில் இந்த உலகமே தள்ளிவிடும் வேளைகளில் வாழ்வை முடித்துக்கொள்வது ஒன்று தான் இயலாமையின் முடிவா? நம்பிக்கை வெளிச்சமே இல்லாமல் மனதின் சன்னல்களும், கதவுகளும் மூடிய நிலையில் சாவது தான் தீர்வா? புறக்கணிப்பின் வலி கொடியது தான்! எல்லைகளற்ற இந்த பரந்த உலகில் ஓடி ஒளிந்துகொள்ள மனிதனுக்கு இதயமா இல்லை?

மரணத்தை துரத்தி வெற்றி கொள்வது சுலபமானதல்ல! அது சிலருக்கு மட்டும் தான் கிடைக்கும் வாய்ப்பு. சிறைச்சாலையில் மரணதண்டனைக்கு காத்திருக்கும் கைதிக்கும் வாழ ஆசை! ஆனால் சுதந்திரமாக சுற்றித் திரியும் பலருக்கு சாவு தான் எதிர்பார்ப்பு. முரண்பாடுகள் தான் நமது உலகமா? எழு!!! பரந்த உலகில் கால்கள் அழுந்த நட... நீ இந்த பூமியின் பிள்ளை...மனித மனதை நேசியுங்கள்! வருகிறேன் என் நினைவுகளை சுமந்தபடி...

நினைவுகளுடன்...
திரு

புத்தன் பிறந்தும் வராத ஞானம் அணுகுண்டு

ஹிரோஷிமா நகரம், ஜப்பான். 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத குளிரில் ஒரு நண்பகல் பொழுது. அந்த அமைதி பூங்காவில் நின்ற பொழுது என் ஒவ்வொரு அணுவும் நடுக்கத்தால் மோதியது. இந்த மண்ணில் அமைதிக்கு தான் எத்தனை சோதனை! யுத்த வெறி பிடித்த ஒவ்வொரு முரட்டு மனமும் தரிசிக்க வேண்டிய தலம் அது. கருகிய மனித வரலாற்றின் கருவறை அது. அந்த இடத்தில் ஞானம் பிறக்காதவர்களுக்கு போதி மரத்தடியிலும் புத்தி வராது! அந்த பொழுதை நினைக்கையில் இன்றும் காலங்கள் சுழல்கிறது நான் காணாத ஒரு மனித வரலாறை நோக்கி...

காலை பொழுது 8.15 மணி 6ஆம் நாள் ஆகஸ்டு மாதம் 1945. அமெரிக்காவின் எனோலா ஹே என்ற போயிங் B- 29 குண்டு வீச்சு விமானம் அந்த அழகிய நகரில் வீசிய "சின்னப் பையன்" என்ற அந்த அணுகுண்டில் பிறந்தது பேரழிவின் பிறப்பிடம். மனித இன வரலாற்றில் பேரழிவை தந்த ஆயுதம். பள்ளிக்கு சென்ற குழந்தையின் சடலம் கூட மிச்சமில்லை. சாப்பாடு கரியாகி உறைந்த நிலை. கட்டிடங்களின் பாகங்கள் ஆவியாக மாறியது. கடிகாரம் நின்றது! காலமே உறைந்தது.. இரண்டாம் உலக யுத்தத்தை நிறுத்திய இந்த வெடிசத்தம் அமெரிக்காவின் ஆதிக்கத்தை துவக்கி வைத்தது!

விடை தேடும் பல கேள்விகள் மனதில்... எதற்காக இந்த உயிர்வேட்டை? உலக யுத்தம் முடிவுக்கு வந்த வேளை அணுகுண்டின் அவசரம் ஏன்? உலகை யார் அடக்கி ஆழ்வது என்ற வெறியில் கருக்கப்பட்டது பல்லாயிரம் உயிர்கள். அந்த வெறி தான் அடங்கியதா? அதன் எல்லை தான் என்ன? பல லட்சம் யூதர்களை கொன்றழித்த ஹிட்லருக்கும், பல்லாயிரம் ஜப்பானியர்களை அழித்த அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ட்ருமெனுக்கும் என்ன தான் வேறுபாடு? அதிகார வெறி கொண்டு அன்று எழுந்த அமெரிக்க தேசத்தின் இரத்த வேட்டை என்றுதான் முடிவுக்கு வரும்?

நினைவுகள் இந்திய தேசம் நோக்கி பறந்தது...

100 கோடி மக்களில் 35% பேர் வறுமையில் வாடும் நாட்டில் எதற்கு அணுகுண்டு? பசித்தவனுக்கு தட்டில் கொஞ்சம் புளூட்டோனியமோ, யுரேனியமோ கொடுக்க முடியுமா? உயிரை கொடுக்க முடியாத நமக்கு எது உயிரை எடுக்கும் அதிகாரம் வழங்கியது? மனித உரிமை மீறல்களும், வறுமையும், வேலையில்லாமையும், சமூக சீர்கேடுகளுமாக இருக்கும் மனித சமுதாயத்துக்கு தீர்வு அணுகுண்டுதானோ?

அணுகுண்டுகள் வைத்திருப்பது தான் பாதுகாப்பு, அது தான் வல்லமையுள்ள நாட்டுக்கு அடையாளம் என்ற கருத்துக்களை நம்புபவர்களுக்கு சில கேள்விகள். எனது பக்கத்து விட்டிற்கும் எனக்கும் பகை என்றால் என் சக்திக்கு ஏற்ப நானும் ஆயுதங்கள் வைத்திருக்கலாமா? ஆயுதமும் ஆயுதமும் மோதினால் எது தான் வெற்றி பெறும்?

அணுகுண்டு சோதனையில் வெற்றி பெற்ற வேளை விழா கொண்டாடியவர்கள், பசியால் மக்கள் மடிந்தவேளை என்ன செய்தார்கள்? ஒரு கனியும் விளையாத நிலத்துக்கு பல கோடி ரூபாய் செலவு செய்து யுத்தம் செய்யும் அவலம் காஷ்மீர் பகுதியில் மட்டும் தான் நடக்கிறது. அணுவெறி கொண்டு அலையும் மானிடர்களே! மனிதம் சுவாசிக்க ஒருமுறை ஹிரோஷிமா நகரம் சென்று வாருங்கள்! புத்தன் பிறந்தும் வராத ஞானம் அணுதாக்குதலின் அழிவில் பிறக்கும்! வருகிறேன் நினைவுகளை சுமந்தபடி...

நினைவுகளுடன்...
திரு

நாடுமில்லை, கொடியுமில்லை, எல்லைகளுமில்லை

2000 ஆண்டின் தொடக்க காலம் அது... அந்த குளிர் காலையில் புது டில்லியிலிருந்து புறப்பட்ட எங்கள் புகையிரதம் (ரயில் வண்டி தான்!) அமிர்தசரசு மண்ணில் நின்றதும் நான் வைத்த முதல் காலடியில் என் கால்கள் கூசின. என் எண்ணங்கள் பகத்சிங்கின் நினைவில்...

யார் இந்த பகத்சிங்?
பிரிட்டிஷ்காரனிடமிருந்து விடுதலைக்காக இந்திய மக்கள் கிளர்ந்தெழுந்த நேரமது. அந்த 28 வயது நிரம்பிய வாலிபன் தனது சக தோழர்களுடன் விடுதலைக்கு கவனத்தை ஈர்க்க நாடளுமன்றத்தில் வெடிகுண்டுகளை எறிந்தான். துண்டறிக்கைகளும், கோசங்களும் ஆங்கிலேயனை வெறி கிளப்பியது. கைது செய்யப்பட்டு சிறைக்கொட்டடியில் அடைக்கப்பட்டான். இராணுவ நீதிமன்றம் தூக்குத்தண்டனை வழங்கியது. கடைசி ஆசை என்ன என்று கேட்டார்கள், அவனிடமிருந்து வந்த பதில் உயிர் வாழ ஆசை என்பதல்ல! அந்த விடுதலை வீரன் "என் தாய் மண்ணுக்கு விடுதலை வேண்டும்...என் கண்களை திறந்தபடி என்னை தூக்கி கொல்லுங்கள்! என் தாய் மண்ணை பார்த்த படியே சாக வேண்டும்!" என்றான்.

இன்று நாங்கள்? "உயிர் மண்ணுக்கு! உடல் குஷ்புவுக்கு!" என்கிறோம்... விடுதலைத் தாயே! எங்கே தவறு செய்தோம்? சின்ன வயதில் எங்களுக்கு பேய் கதைகளும், கடவுள் புராணங்களையும், மன்னர்களையும் மண்டைக்குள் திணித்த எங்கள் "விடுதலை பெற்ற இந்தியா"! காந்தி உட்பட சிலரைத் தவிர வீரர்கள் எல்லோரையும் எங்களுக்கு மறைத்ததாலா?

அப்போதெல்லாம் விடுதலை நாள் என்றதும் என் மனதில் வருவதெல்லாம் அந்த ஆறஞ்சு சுளையின் சுவை கொண்ட இனிப்பும், அன்று மட்டும் எங்கள் கைகளில் திணிக்கப்பட்ட வண்ணக் காகித கொடியும். இது தான் விடுதலை என நினைத்து விடுதலையை (அந்த இனிப்பைத்தான்) வாங்க காசு தேடிய நாட்கள் தான் எத்தனை! வளர்ந்த போது தான் தெரிந்தது விடுதலை என்பது வேறு சமாச்சாரம் என்பது! அதைத் தான் இன்னும் தேடுகிறேன்!...

அன்றைய நாள் மாலைப்பொழுது.... சீக்கிய மதத்தின் புனிததலமான பொற்கோவிலில் நின்ற வேளை. எமது இராணுவத்தின் "நீல நட்சத்திர நடவடிக்கையின் விளைவுகள்" நெஞ்சை அடைத்தது. ஒன்றாக கூடி வாழ வந்த எமக்குள் எது தனி தேசங்களை கேட்கத் தூண்டியது? இராணுவத்தின் கொட்டடிகளில் சிதைக்கப்பட்ட உயிர்களை திருப்பித்தர இயலுமா?

தேசபற்று என்பது ஒருவகையில் ஒரு வெறி தான்! சேர்ந்து வாழ்வதால் வஞ்சிக்கப்படும் என் சகோதரனுக்கு பிரிந்து போய் தனி வாழ்க்கை அமைக்க அவனுடைய பங்கை கொடுக்க எப்படி விருப்பமில்லையோ அதே வெறி! தொடர்ந்த பயணத்தில் பாகிஸ்தான் - இந்தியா "வாகா எல்லையில்" நின்ற கணத்தில் விடுதலை தான் என்ன என ஆயிரம் கேள்விகள்! என் பாகிஸ்தானிய சகோதரனையும், என்னையும் பிரிக்கும் அந்த இராணுவ வேலியிலும், துப்பாக்கி குண்டுகளிலும் விடுதலை தேவதையின் கற்பு களங்கப்படுகிறதை கண்டேன்! இரு பகுதிகளின் மக்களையும் எளிதாக பழக விடாத இராணுவம் என் தேசதுக்கே சொந்தமானாலும் அது ஆக்கிரமிப்பு படைகளே!

கலங்கிய கண்களுடன் பாகிஸ்தானிய முகம் தெரியா என் உறவுகளை பார்வைகளால் தொட்டு கனத்த மனதுடன் திரும்பினேன். அப்போது தான் புரிந்தது இராணுவத்தின் தொல்லைகள். அதோடு அழித்துப் போட்டேன் ஒருகாலத்தின் என் இராணுவ கனவுகளையும், மாணவ பருவத்தின் "தேசிய மாணவர் படை" (இராணுவ) பயிற்சியின் சான்றிதழையும்.

அப்பொது உதித்தது என் சிந்தையில் "எனக்கு நாடுமில்லை, கொடியுமில்லை, எல்லைகளுமில்லை, நான் மனிதன்". யார் இந்த சில மனிதர்கள் என்னை இந்த நாட்டில் அனுமதிக்கலாமா அல்லது கூடாதா என்ற முடிவை எடுக்க? யார் இவர்களுக்கு இந்த உரிமையை தந்தது? எல்லைகளற்ற தேசங்களும், அடக்குமுறையில்லா அமைப்புகளும் இல்லாமல் போனது ஏன்? உலகில் இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள் தான் எத்தனை விதங்களில்?தேசங்கள் தோறும் விடியலைத் தேடி அலையும் மக்களுக்கு நம்பிக்கை ஒளிகீற்று என்று தான் வருமோ? நினைவுகளை சுமந்தபடியே...

நினைவுகளுடன்...
திரு

Thursday, September 09, 2004

நினைவாலே சிலை செய்து...

நினைவுகளே இல்லாமல் இருக்க இயலுமா? நினைக்கவே சூன்யமாக இருக்கிறது! நினைவுதானே வாழவைக்கிறது. இதய சுவர்களில் பதிந்த நினைவு கோடுகளின் பதிவுகளும் அதன் அழகிய வண்ணங்களும் தான் இப்போதெல்லாம் என்னை வாழவைக்கிறது!

நினைவே எனது உலகம்! சின்ன வயதில் எண்ணை வடியும் தலையும் குறு குறுத்த பார்வையுமாக அந்த அழகிய கிராமத்தில் தான் என் உலகம்... இன்று அந்த உலகம் எங்கே? நினைவுகளை மட்டும் சுமந்து வாழும் கனவு உலகமா இது?

நினைவுகள் சுகமானவை!
கலையாத கனவு பொக்கிசங்கள்!
ஒவ்வொரு படியிலும் என்னை வைத்து
எட்ட நின்று பார்க்கும்!
கை கொட்டி சிரிக்க வைக்கும்!
கண் சிமிட்டி அழைக்கும்!
கதற வைத்து வேடிக்கை பார்க்கும்!
வாழவைக்கும் கனவுக்கவிதை நினைவுகள்!

அதிகாலையில் குளத்துக்கு குளிக்க போனால் வருவது 9 மணிக்கு. போவது குளிக்க மட்டும் தான்... ஆனால் அதற்குள் நடக்கும் ஆட்டங்கள் தான் எத்தனை? அக்கறையுடன் அடிக்க விரட்டி, பாசமாய் பழைய சோற்றை பிசைந்து தரும் அம்மாவின் பாசவாசனை இன்னும் நெஞ்சில் நினைவாய்...

மார்கழி பனி காலையின் அழகிய கனவு கலைந்தது போல இருக்கிறது. கண்விழித்து பார்க்கையில் உலகமே மாறி இருக்கிறது! என் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா வாழும் உலகை நான் பார்க்க முடியவில்லை. உலகம் மாறுகிறது. நமது கலாச்சாரத்தை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்ய முடியுமா எதிர்காலத்தில்? என் கிராமத்து குழந்தைகள் அண்ணாமலை தொடரை பார்க்கும் சோனி தொலைக்காட்சி பெட்டி எப்படி வந்தது எங்கள் விளையாட்டுகளை மறக்கடிக்க? எங்களது குடும்ப உரையாடலை தொலைத்து "மெட்டி ஒலி"தொலைக்காட்சி தொடரில் மௌனமாக்கிய மாயம் எது?

பள்ளிக்கு போகும் போது புகைகக்கி தார் உருக்கும் அந்த பூத வண்டியும், கருப்பு தார் படிந்த உடையுமாய் நெருப்பில் பாதை போட்ட அந்த முகம் மறந்த மனிதர்கள் எங்கே? மண்பாதையில் புரண்டு, மரங்களின் பசுமையை சுவாசித்து சொந்தங்களுடன் வாழ்ந்த என்னை நாடு விட்டு நாடு செல்ல வைத்தது எது? பத்து பைசா கிடைத்தாலே அழகிய முயல் கிடைத்தது போன்ற அந்த சந்தோசம்... இன்றைய கிரெடிட் கார்டு உலகில் தொலைந்தது எப்படி?

பசிக்கு பொரித்த கோழிக்கறியும், வறுத்த உருளை கிழங்கு சிப்ஸ், பர்கர், என உலகெங்கும் பரந்து கிடக்கும் இளைய தலைமுறையின் அமெரிக்காவின் சாப்பாட்டு கடைகள். தாகத்துக்கு கொக்கோ-கோலா, பெப்சி என நம் உணவு பழக்கத்தை மாற்றியது எது?

“போறாளே பொன்னுத்தாயி பொல பொல என்று கண்ணீர் விட்டு…” என கருத்தம்மா பாடல் வரிகளில் நனைகிற என் மண் வாசனையின் ஏக்கம்... தேடி, அடுக்கி எடுக்கிறேன் என் சிதறிய நினைவுப் புதையல்களை! வருகிறேன் என் நினைவுகளை சுமந்த படி...

நினைவுகளுடன்...
திரு