Thursday, May 11, 2006

கல்வி வாங்கலையோ கல்வி!

ஒரு காலத்தில் அறிவை தூண்டவும், மழலைகளாய் இருக்கிற மேதைகளை வளர வைக்கவும் பயன்பட்ட பள்ளிக்கூட கல்வி இன்று பரிதவித்து பாழாகிக்கிடக்கிறது. 1980களில் தமிழகத்தில் ஏழைகளின் வள்ளல்(!) திரு.எம்.ஜி.ராமச்சந்திரன் ஆட்சியில், திரு.அரங்கநாயகம் கல்வி அமைச்சராக இருந்தார். பலருக்கு அந்த காலகட்டத்தின் கல்வித்திட்டங்கள் இன்று மறந்திருக்கும். அந்த புண்ணியவான்கள் ஆட்சியில் தான் கல்வி வியாபார பொருளாக கடை விரிக்க துவங்கி சமூகத்தில் சாக்கடை வீசும் சரக்குகளை உதிர்த்தது.

ஆசிரியர் பணி என்பது மனிதர்களை செம்மைப்படுத்தி அறிவு நிரம்புபவர்களாக இருந்த காலத்தில், முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களால் தரமான ஆசிரியர்களை உருவாக்க பயிற்சி மையங்கள் மட்டுமே இயங்கிய காலம். கல்வின் நோக்கமும், தரமும் அதிகமாக கவனிக்கப்பட்டு பேணப்பட்டதன் விளைவு அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், தரமான கல்விப்பணியை சேவையாக கருதியவர்கள் மட்டும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை நடத்திய வேளை அது. திடீரென வந்த ஆட்சி அதிகாரத்தால் கொள்கைகளும் தொலைநோக்குமற்ற எம்.ஜி.ஆர் ஆரசின் கல்வி கொள்கை எந்த வரைமுறையும் இல்லாமல் தனியாருக்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை திறக்க அனுமதி வழங்கியது.

கல்விப்பணிக்கு சம்பந்தமே இல்லாத கட்சிக்காரர்கள் கடை திறந்து கொல்லைப்புறம், மாட்டுத்தொழுவம் என கொட்டைகளை பரப்பி அதில் வருங்கால ஆசிரியர்களை உருவாக்கும் பெயரில் கல்வியை கொள்ளையிட துவங்கினர். அவர்களது கல்வி மீதான காதலில்(!) பல லட்சம் ரூபாய்களை தொலைத்து, சட்டப்போராட்டங்களில் மூழ்கி வேலையும் கிடைக்காமல் அலைந்தவர்கள் எண்ணிக்கை பல்லாயிரம் பேர்கள். வேலை கிடைத்தவர்களில் பலருக்கு கல்வியின் மகத்துவத்தையும், ஆசிரியர்கள் பணி பற்றிய அறிவையும் விட சட்டைப்பையை நிரப்புதலே தொழிலானது.

ஆசிரியர் பயிற்சி நிறுவன (தொழில்) அதிபர்கள் செல்வம் பெருக அடுத்த அடி செவிலியர்கள் பணிக்கு. கொட்டோ கொட்டு என கொட்டிய கரன்சி மழையில் நனைந்த வள்ளல் ஆட்சி செவிலியர் பயிற்சி பள்ளி, பி.எட் பயிலரங்கங்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என தனியாருக்கு எந்த அடிப்படை அம்சங்களையும் பாராமல் லட்சக்கணக்கான பணத்தை பெற்று அனுமதி தந்தது. கரன்சி வெள்ளத்தில் திகைத்த கரைவேட்டிகள் தொழிற்கல்வி பக்கம் கரன்சி கட்டுகளை வீசி அனுமதி வாங்கினர். கல்வி தந்தைகள் என்ற பெயரில் முளைத்த பலர் பாலிடெக்னிக் என்ற பல்முனை தொழிற்கல்வி கூடங்களை திறந்து கேரளா, வட நாடு, பிறமாநில மாணவரக்ளை வேட்டையாடி பணம் சம்பாதித்தனர்.

ஆசை அடங்காத கல்வி நாயகர்கள் அடுத்த குறி பொறியியல் கல்லூரிகளில் பதிய கரன்சி, சட்டப்போர் என தொடர்ந்ததன் விளைவு புதிய சில பொறியியல் கல்விகள் முளைத்தன. கடவுள்களை மொத்த மற்றும் சில்லறை விற்பனை செய்யும் மடங்கள்(எல்லா மதமும் தான்), சகோ.தினகரன் என எல்லோருக்கும் அடித்தது பரிசு.

தமிழர்களுக்காகவே வாழும்(!) தலைவர் திரு.மு. கருணாநிதி ஆட்சியில் பேரா.அன்பழகன் கல்வி அமைச்சரானார். பழைய அதே தனியார்மய கொள்கைகள் மட்டுப்படுத்தலுடன் தொடர்ந்ததே தவிர மாற்றப்படவில்லை. தொடர்ந்தது பழைய ஒழுங்கீனங்கள். அதற்குள் ஆட்சியும் கவிழ்ந்தது.

கல்வியை கண் போல போற்றும் காவல் தெய்வம் செல்வி. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். ஏற்கனவே அரசு நிலத்தை அபகரித்து கல்வியை வியாபாரம் ஆக்கிய திரு.தம்பிதுரை கல்வி அமைச்சரானர். சென்னை முதல் கன்னியாகுமரி வரை காளான்கள் போல முளைத்தன புது பொறியியல் கல்வி நிலையங்கள். பெரும்பாலான் கல்வி நிலையங்களில் போதிய ஆசிரியர்கள், கருவிகள், கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள் என எதுவும் இல்லை. தொடர்ந்த இந்த வியாபாரம் பள்ளிக்கூடங்கள், ஆங்கில பள்ளிகள், துவக்கப்பள்ளிகள், பாலர் பள்ளிகள் என விரிந்து கிளை பரப்பியிருக்கிறது. அடுத்து வந்த தி.மு.க ஆட்சியிலும் எந்த மாற்றமும் இல்லாமல் கல்வி தனியார் உடமையானது. மீண்டும் வந்த அ.தி.மு.க ஆட்சியில் தொடர்ந்தது பழைய வேகத்தில் அதே முறைகேடுகள்.

தென்மாவட்டத்தில் இப்படி கல்வி (விற்ற) தந்தை முன்னாள் அமைச்சரை தொழில் போட்டியில் கொலை செய்ததாக இன்று சிறைக்குள் இருக்கிறார். வடமாவட்டத்தில் கல்வி வியாபரி ஒருவர் சிலை கொள்ளை வழக்கில் சிக்கினார். சென்னையில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக ஒரு கல்வி வியாபாரி. இப்படி பரந்து கிடக்கிற இவர்களது தனி மனித ஒழுக்கம் கொடிகட்டி பறக்கிறது.

இப்படிபட்ட ஒரு நிர்வாகம் செய்ய கல்வித்துறையும் அரசும் அவசியமா? இந்த முறைகேடுகளின் விளைவு தான் கும்பகோணத்தில் பிஞ்சு மழலைகள் பள்ளியில் தீயில் வெந்து செத்த கொடுமை. இந்த முறைகேடுகளை தவிர்க்க தனியார் பள்ளிகள் பற்றி ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட திரு.சிட்டிபாபு அவர்கள் தலைமையிலான விசாரணை அறிக்கையை அமல்படுத்துவதாக செல்வி.ஜெயலலிதா அறிவித்து சட்டமன்றம் கரவொலி எழுப்பியதுடன் முடிந்தது. இன்னும் மாறாமல் முறையற்ற விதமாக நடக்கிற கல்வி வியாபாரத்தை நிறுத்த யார் வருவார்? கல்விக்கு என தனி தெய்வமும், வழிபாடும் நடைபெறும் நாட்டில் கல்வி காலில் மிதிபடும் கடைச்சரக்கானது. சாராய வியாபாரிகளை கல்வி தந்தை ஆக திட்டங்கள் தந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவரின் ஆட்சிக்கே இது சமர்ப்பணம். அன்று முதல் இன்று வரை தொடரும் இந்த வேதனை என்று தான் தீருமோ?


திரு

Wednesday, May 03, 2006

வாக்காள பெருமக்களே!

வணக்கத்திற்குரிய வாக்காள பெருமக்களே! பெரியோர்களே! தாய்மார்களே! இளைஞர்களே,

தமிழகத்தின் வீதிகளில் தேர்தல் திருவிழாவின் போது கீறிய கிராமபோன் போல கேட்கிற மேற்காணும் குரல்களில் மயங்கி அடையாளம் இழந்த என் உறவுகளுக்கு வணக்கம். கடந்த பல தேர்தலின் போது கேட்ட, படித்த தேர்தல் பரப்புரைகளின் வாசம் இன்னும் மனதில் பதிந்து கிடக்கிறது. பல தேர்தலில் சொந்த பணத்தை செலவிட்டு நல்லாட்சி வராதா என்ற ஆசையில் பணியாற்றிய அனுபவம் உள்ளவன் அடியேன். தமிழக, இந்திய மற்றும் உலக அரசியலின் போக்கை கண்டு மனம் வெதும்பும் பல்லாயிரக்கணக்கானவர்களில் ஒருவன் என்ற முறையில் உங்கள் சிந்தனைக்கு இந்த அவசர கடிதம்.

வேட்பாளர் உங்கள் சாதியா? உங்களது மதத்தை சார்ந்தவரா? பிடித்தமான தலைவரின்/தலைவியின் தொண்டனா? என பார்த்து வாக்களித்து பாழ்பட்டது போதும். கடந்த கால அரசியல் வரலாற்றில் சினிமா மோகத்திலும், தனிநபர் துதிபாடலிலும் நாம் முழ்கியதன் விழைவு இன்று இரு பெரும் கட்சிகளுக்கிடையில் மாநில வளர்ச்சி தொலைநோக்கு இல்லாமல் செத்துக்கிடக்கிறது. இரு பெரும் குடும்பங்கள் தேர்தலையும் மாநில அரசியலையும் தங்களுக்கிடையேயான மூலதனத்தின் தகராறாக பார்க்கிறது. திரு.கருணாநிதி-மாறன் குடும்பத்தினர், செல்வி.ஜெயலலிதா-சசிகலா நடராஜன் குடும்பத்தினரின் தொழிற்போட்டியாக இன்று அரசியல் அரங்கு சுழல்வது வேதனையானது. இந்த போட்டியில் தாழ்த்தப்பட்ட மக்களை அடிமையாக்குகிற பலம் பொருந்திய சாதி சமுதாயங்கள்; தங்களது அதிகாரபலத்தை பல வடிவங்களில் உறுதியாக்கி வருகிறது. இந்த நிலை தொடர்வது தமிழகத்தின் சமூக, பண்பாட்டு வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது. காட்டுமிராண்டி வாழ்க்கையிலிருந்து ஒன்றுபட்ட சமுதாயம் மீண்டும் நவீன காட்டுமிராண்டிகளாக ஒருவரை ஒருவர் எதிர்த்து நிற்பதா அழகு?

உங்கள் சிந்தனைக்கு நமது உயர்ந்து நிற்கும் தலைவர்களிடமிருந்து சில பண்புகளை வைக்கிறேன். இதை உரைகல்லாக வைத்து தலைவர்களின், வேட்பாளர்களின் தரத்தை உரசிப் பார்த்து வாக்களியுங்கள்.

மாடுமேய்க்கவும், காடுகழனியிலும் சட்டயில்லாமல் அலைந்து திரிந்த பல லட்சம் சிறார்களை அதிகம் படிக்காத ஒரு மனிதர் பார்க்கிறார். உருவத்தில் அழகானவர் இல்லை அவர். மனதில், குணத்தில் அழகான அந்த மாமனிதர் பள்ளிக்கூடங்களை கிராமங்கள் தோறும் அரசு செலவில் திறந்தார். குழந்தைகளை பள்ளிக்கு வர வைக்கவும், அவர்கள் ஒரு வேளை உணவாவது சாப்பிட்டு நல்ல உடல் மன வலிவுடன் திகழ மதிய உணவு திட்டத்தை பள்ளிக்கூடங்களில் கொண்டுவந்தார். பூங்காக்கள், விளையாட்டு அரங்கங்கள் அமைத்தார். தமிழகத்தின் குறிப்பிடத்தக்க நீர்த்தேக்கங்களை கட்டி கால்வாய்களை அமைத்து விவசாயம் பெருக்கி வேலைவாய்ப்பை உருவாக்கிய நவீன கரிகாலன் அந்த கருப்பு மனிதர். அவர் தந்த தொழிற்சாலைகள் நமது வாழ்வாதாரமாக இன்றும் உயர்ந்து நிற்கிறது. அவர் தான் எளிமையே வாழ்வாக கொண்ட காமராஜர். திருமணம் செய்யாமலே வாழ்வை மக்களுக்கு அளித்த அந்த மேதை அரசு பணத்தையோ, அதிகாரத்தையோ தனக்காக அல்லது குடும்பத்தினருக்காக செலவிட்டவரில்லை. இன்றைய நமது தலைவிகள்/தலைவர்கள்?

திசயிக்கும் அறிவு கொண்ட அந்த மனிதர், எளிமைக்கு ஒரு நல்ல உதாரணம். மாற்று கொள்கை கொண்ட பெரியாரின் அன்பு நண்பர். கடவுள் மறுப்பு கொண்ட பெரியாருக்கு திருநீறு கொடுக்கும் அளவு இருவருக்குள் நட்பை வளர்த்தவர். அவரது கொள்கைகள் சில எதிரானது என்றாலும் தமிழக வரலாற்றில் சிறந்த பண்பாளர்களில் ஒருவர். ஆம், காந்தியின் உறவான இராஜாஜி.

ருவத்தில் குள்ளம், சிந்தனையில் உயர்வு. பேச்சில் எழுச்சி, முகம் முழுதும் மலர்ச்சி. தமிழர்களின் கலாச்சார பண்பாட்டு அடையாளங்களை தேடி தந்தவர். 2 ஆண்டுகள் முதல்வராக இருந்த வேளை நாளெல்லாம் நாட்டிற்காக செலவிட்டவர். உழைப்பு ஓயாத உழைப்பு அதன் விளைவாக அவர் தீட்டிய திட்டங்கள் தான் இன்று பல சமூக நல திட்டங்களாகி பலன் பெறுகிறோம். முதியோர், விதவைகள், பெண்கள் நல திட்டங்கள் அவரின் கருத்தாக்கத்தில் உதித்தவை. அவர் கனவு கண்ட பல திட்டங்கள் இன்னும் நாம் நடைமுறைப்படுத்தவில்லை. அவரது கனவு இன்றைய அரசியல் சண்டைகளும், விதண்டாவாதங்களுமல்ல, கொள்கை வழி அரசியல் நடத்தினாலும் பண்பாக எதிர்கட்சியினரை நடத்த தெரிந்தவர். மாற்றுக் கருத்தாளர்களையும் மதித்த அந்த மாமனிதர் அறிஞர்.அண்ணா.

மேற்கண்ட தலைவர்கள் கண்ணியமான அரசியல் நடத்தியவர்கள். மக்கள் பணத்தில் பதவி சுகத்தை அனுபவித்தவர்களல்ல. எதிர்கட்சியினரையும் பக்குவமாக மரியாதையுடன் நடத்தியவர்கள். இந்த அரசியல் வரலாறு தமிழகத்திற்கு இன்று அவசர தேவை. காழ்ப்புணர்ச்சியும், பகைமையும், பழித்தலும், தூற்றுதலும் நிறைந்த நமது அரசியல் அரங்கை சுத்தம் செய்ய தேர்தல் ஒரு அரிய வாய்ப்பு.

நமது இன்றைய வேட்பாளர்களும் தலைவர்களுக்கும் கண்ணியமான முறையில் அரசியல் நடத்த தெரிகிறதா என்பதை தெரிந்து கொண்டு அவர்களை தேர்ந்தெடுப்பது நமது அரசியல் கடமை. வாக்களிக்க செல்லும் முன்னர் வருகிற இந்த நாட்களில் அவசரமாக, அவசியமாக தமிழக வாக்காளர்களுக்கான அரிய நேரம் காத்திருக்கிறது. உங்களது சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் முன்னர் சில கேள்விகளை வேட்பாளர்களிடமும் அவர்களது கட்சியினரிடமும் கேளுங்கள்.

மக்கள் பணியும், திட்டங்களும் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அவற்றில் முறைகேடுகள், ஊழல் நடந்துள்ளனவா? உங்கள் தொகுதியின் உறுப்பினரை கடந்த 5 ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுத்ததால் அரசு மற்றும் பொதுமக்களின் உடமைகளுக்கு சேதாரம் ஏற்பட்டிருக்கிறதா? மனிதனை மனிதனாக மதிக்கும் பக்குவம் மிக்கவராக அவரும் அவரது கட்சியினரும் நடந்து கொண்டார்களா? தவறுகள் நடந்திருந்தால் கட்சியினரும் தலைமையும் அதை எப்படி கையாண்டார்கள் என தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் தொகுதியின் வேட்பாளர் மற்றும் அவரது கட்சியினர்:

கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், மருத்துவம், சாலைகளை மேம்படுத்தல், மின்சார இணைப்புகள் வழங்க கவனம் செலுத்தல், விளையாட்டு அரங்கங்கள் மற்றும் பூங்காக்கள் அமைத்தல், சமய மற்றும் சமூகங்களிடையே நல்லிணக்கம், காடுகள் மற்றும் இயற்கையை பேணல், நீர்நிலைகளையும் அதன் ஆதாரங்களையும் பாதுகாத்தல் போன்ற சமூக நலன் கொண்ட திட்டங்களுக்காக பாடுபட்டக் கூடியவரா?

இயற்கை பேரழிவுகள் நடந்த வேளை மக்களோடு இணைந்து பணியாற்றி பொதுவான, நேர்மையான தலைவராக நடந்து கொள்பவரா?

பெண்கள், சிறார், முதியோர், உடல்நலன் பாதிக்கப்பட்டோர் நலனுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த சட்டமன்றத்திலும், வெளியேயும் பாடுபடுபவரா?

வேட்பாளர் சார்ந்துள்ள கட்சியின் தேர்தல் அறிக்கை, வாக்குறுதிகள் மேற்காணுகிற துறைகளில் கவனம் செலுத்துகிறதா? ஆளும் கட்சியெனில் கடந்த முறை தேர்தல் அறிக்கையில் சொன்னவற்றை நிறைவேற்றியவர்களா? இல்லை எதிர்கட்சி என்றால் அதற்காக குரல் கொடுத்து வாதாடியவர்களா? தலைமை பிறரை மதித்து பண்புடன் நடத்தக்கூடியதா? என அலசி ஆராயுங்கள்.

இந்த தேர்தலில் திட்டங்களை அடிப்படையாக கொண்டு அரசு நடத்த தலைவர்களை தேர்ந்தெடுப்போம். தேர்ந்தெடுக்கப்படுகிற சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் கடமை தவறாமல் செயல்பட வைப்போம். இதற்காக தேர்தலில் வாக்களிக்கும் முன்னரே கேள்விகளை கேட்க பழகுவோம்! கேள்வியிலிருந்து விடையும், விடியலும் பிறக்கும்.

இலவசங்களிலும், தேர்தல் விளம்பர மோகத்திலும், நடிகர் நடிகைகளின் கவர்ச்சியிலும் மயங்கி வருகிற 5 ஆண்டுகளின் அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதார வாழ்வை தொலைக்காமல் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுப்போம். சட்டமன்றத்திலும், வெளியேயும் நேர்மையாக மக்களுக்காக உழைப்பவர்களை தேர்ந்தெடுப்போம். தலைமைக்கு துதிபாடி கரவொலி எழுப்ப மட்டுமே சட்டமன்றத்துக்கு உறுப்பினர்களை அனுப்பியதை நிறுத்துவோம். சட்டமன்றம் கட்சிக் கூடாரமல்ல, அது தமிழக மக்களின் வாழ்வை கட்டியெழுப்ப திட்டங்கள் தீட்டவேண்டிய கருத்துப் பட்டறை.

செய்வீர்களா? தமிழகம் விழிப்புறுமா?

உங்களில் ஒருவன்,

திரு

Monday, May 01, 2006

தமிழக முதலமைச்சருக்கு சில கேள்விகள்!

தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதாவுக்கு,

உங்களைப் மிக திறமையான அதிகார திறன் படைத்தவர் என வியந்து பூரித்து போகிறார்கள். கடந்த 5 ஆண்டுகால உங்களது ஆட்சியும், அதிரடி திட்டங்களும் இவற்றிற்கு எதிர்மாறாக இருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் மக்களிடம் வாக்குறுதி கொடுத்து வாக்குசேகரிக்கும் உங்களுக்கு சில கேள்விகள்.

ஆட்சிக்கு வந்ததும் தமிழக மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்துவருகிறீர்கள் என்பதை கேட்கையில் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது.

"மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை தரப்படும். 32 லட்சம் வேலை வாய்ப்புக்களை உருவாக்கித் தருவோம். கடந்த தேர்தலில் தந்த ஆதரவை தொடர்ந்து வழங்க வேண்டித்தான் உங்கள் அன்புச் சகோதரியான நான் மீண்டும் உங்கள் முன் வந்திருக்கிறேன்." என்று தாங்கள் முழக்கமுடுவதை பார்க்கையில் சில கேள்விகள் எழுகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில ஆட்சி அதிகாரத்தை வைத்திருந்தது தாங்கள் தலைமையில் உள்ள அ.தி.மு.க. உங்களது ஆட்சியில் தானே வேலை நியமன தடை சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தினால் லட்சக்கணக்கான பேர் தமிழகமெங்கும் படித்து வேலையில்லாமல் இருக்கிறார்கள். குறிப்பாக ஆசிரியர் பயிற்சி, பட்டமேற்படிப்புகள், தொழிற்கல்வி படித்த பல லட்சம் இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றியது தாங்கள் கொண்டுவந்த இந்த சட்டம். நிரந்தர வேலைகளை ஒழித்து ஒப்பந்த அடிப்படையில் உழைப்பை சுரண்டிய தாங்களது அரசு; தேர்தலில் தரும் வாக்குறுதியை எப்படி மக்கள் நம்ம முடியும்? உங்களது வாக்குறுதிக்கும் நீங்கள் கொண்டுவந்த சட்டத்துக்கும் இருக்கிற முரண்பாடுகள் பற்றி என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்? வழக்கம் போல இதுவும் எதிர்கட்சியினரது சதியா?

வேலை நியமன தடை சட்டத்தால் மூடப்பட்ட அரசு பள்ளிகளும், ஆசிரியர் பற்றாக்குறையில் இயங்கும் பள்ளிகளுமாக இன்று தமிழகத்தில் கல்வியின் நிலை பரிதாபமாக இருக்கிறது. தொலைநோக்கு பார்வையற்ற தாங்களது வேலை நியமன தடை சட்டம் உலக வங்கியை திருப்திபடுத்தலாம். ஆனால், உங்களை பதவியில் அமர்த்தி அழகு பார்த்த மக்கள் நிலை என்ன? அரசு ஊழியர் ஆசிரியர் போராட்டத்தின் போது அவசரமாக தொகுப்பு ஊதிய முறையில் ஒப்பந்த பணியில் அமர்த்தப்பட்டவர்கள் நிலை என்ன ஆயிற்று உங்களது ஆட்சியில்? முதுகலை பட்டம் படித்தவர்களுக்கு அரசு நடத்துகிற டாஸ்மார்க் மதுக்கடைகளில் மதுவுடன் சோடா கலந்து சாராயம் விற்க கற்றுத் தந்தது உங்கள் சாதனையில் ஒன்று என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். மதுக்கடைகளில் பணி செய்ய கூட 10,000 முதல் 50,000 ரூபாய் வரை அ.தி.மு.க கட்சியினர் லஞ்சமாக பெற்றதும் உண்மை.

உலகில் எந்த நாட்டிலாவது பள்ளிக்கூடங்களுக்கு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் மூடிவிட்டு மதுக்கடைகளை திறந்த வரலாறு உண்டா? அந்த மிகப்பெரிய பெருமை புரட்சித்தலைவி உங்களையே சாரும். இந்த நிலையில் 32 லட்சம் வேலைகளை உருவாக்குவதாக சொல்லும் நீங்கள் அது எந்த துறைகளில் எத்தனை வேலை என பட்டியல் தருவீர்களா? அதை உருவாக்கும் வழிமுறைகள், எப்படிப்பட்ட வேலை என்பதையும் சொல்லுவீர்களா? தி.மு.க ஆட்சியின் போது பணியில் அமர்த்தப்பட்டார்கள் என்ற ஒரே காரணத்தால் பணியிலிருந்து நீக்கப்பட்டு அல்லல் படுத்தப்பட்ட 10,000 சாலைப்பணியாளர்களின் 5 ஆண்டு அவலம் நிறைந்த வாழ்க்கைக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?

யானைகள் எல்லாம் இன்புற்று இருந்தால் நாடு (உங்களது தோழியர் குடும்பம் தானே நாடு) நலம்பெறும் என உங்களது ஆஸ்தான ஜோதிடன் சொன்னதன் விளைவாக, யானைகள் முகாம் அமைத்து பல நூறு கோடி வீணாக்கியது உங்கள் அரசு. யானைகள் முகாமில் கொழுத்துக்கிடந்த அதே வேளையில், தமிழகத்தின் நெற்கழஞ்சியம் தஞ்சையில் பசிக்கு உணவில்லாமல் எலிக்கறி, நத்தை, வயல்நண்டு சாப்பிட்ட விவசாயிகளை பழித்தது உங்களது அரசு தானே. கடன் தொல்லையில் விவசாயிகள் தற்கொலை செய்ததை உங்களது அமைச்சர்களும் நீங்களும் கேலிசெய்தீர்களே இது தான் நல்ல நிர்வாகத்திற்கு அழகா? தற்கொலைக்கு காரணத்தை கண்டுபிடித்து அதை மாற்ற தாங்கள் தலைமையில் அரசு எடுத்த திட்டம் என்ன? எதெற்கெடுத்தாலும் மத்திய அரசு, கருணாநிதி குடும்பம் மீது வசை மாரி பொழிவதற்கு தான் உங்களது அரசு என்றால் மீண்டும் உங்களுக்கு எதற்கு பதவியும் மக்களின் வாக்குகளும்? உங்கள் பரம்பரை பகையில் அழிவது தமிழக மக்களின் வாழ்வெனில் உங்களுக்கு மீண்டும் மகுடம் எதற்கு?

சுனாமி நிவாரண பணியில் மாநில அரசு சிறப்பாக பணியாற்றியதாக சொல்லும் நீங்கள், எந்த பகுதியில் எத்தனை வீடுகளை, எத்தனை கோடி ரூபாய் செலவில், வேலைவாய்ப்பு திட்டங்களை, கல்வி, சாலைவசதி போன்ற அடிப்படை திட்டங்களை மாநில அரசின் திட்டத்தில் மட்டும் நிறைவேற்றப்பட்டன என விபரமாக சொல்வீர்களா? அதோடு தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பணிசார்ந்த திட்டங்களை தனியாக புள்ளிவிவரம் தருவீர்களா? நல்ல நிர்வாகத்திற்கு அழகு வெளிப்படையான தன்மை. தாங்களது அரசு இந்த விடயத்தில் வெளிப்படையாக இல்லை, காரணம் சுனாமி புனரமைப்பில் தாங்களது கட்சியினர் செய்த ஊழல் வெளிவரக்கூடாது. இந்த முறை ஆட்சியில் ஊழலில் நிற்வாகதிறனுடன் ஈடுபட்டதால் தான் பெரிதாக வெளியில் தெரியாமல் போயிற்று.

பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் வேலை பெருக்கக்கூடிய அனைத்து திட்டங்களையும் உருவாக்கினார் அவர் படிக்காத மேதை மட்டுமல்ல, அதிகாரத்திறன் படைத்த மக்கள் நலனை முன்வைத்து செயல்பட்ட தலைவர். உங்களை அந்த வரிசையில் வைத்து பார்க்க முடியவில்லை. இந்த முறை உங்களது ஆட்சியில் மணல் வியாபாரத்தில் வெளிப்படையற்ற தன்மை. மதுகொள்முதல் செய்வதில் உங்கள் தோழி சசிகலாவுக்கு சொந்தமான மிடாஸ் நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தங்களின் முறையற்ற தன்மை. சுனாமி நிதி பற்றிய வெளிப்படையற்ற தன்மை. காவல்துறையின் அடக்குமுறை, ரேசன் அட்டை விநியோக குழறுபடிகள் என பட்டியல் நீழுகிறது. முதல்வர் என்ற முறையில் உங்களது ஆட்சி நேர்மையானது, அதிகாரத்திறன் வாய்ந்தது என நிரூபிக்க மேற்காணும் பிரச்சனைகளுக்கு என்ன பதில் தருவீர்கள்? வழக்கம் போல மத்திய அரசின் அமைச்சர்கள், திரு.கருணாநிதி மீது வசைபாடுவதை விட்டு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை உங்களுக்கு உண்டு. மக்கள் பதில் சொல்வார்களா?

திரு

மேதினம்! உரிமைகளின் பிறப்பு!

சின்ன வயதில் பள்ளிக்கு சென்று வரும் காலமது. சிகப்பு சட்டையிலிருந்த அந்த வேறுபட்ட மனிதர்களின் கொடி அசைவும், முழக்கமும் எதிரொலியாக இன்னும் மனதில்! மேதினம் வாழ்க! தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக! என்ற அந்த முழக்கம் புரியாத காலமது. மேதினம் என்றதும் இந்த சிகப்பு மனிதர்கள் மனதில் வந்து போனார்கள். என் நினைவலைகள் மேதின வரலாறை நோக்கி...காலப்போக்கில், கோயம்புத்தூரில் Pricol தொழிற்சாலையில் பணி செய்தவேளை மேதினம் என்பது விடுமுறை என்பதால் மனதுக்கு இனித்தது. ஆனாலும் விடுமுறைக்கான காரணம் புரியவில்லை. ஒப்பந்தவேலையில் இருந்த எனக்கும் நண்பர்களுக்கும் நிரந்தர வேலை என்பது கனவு.

இப்போதெல்லம் இந்தமாதிரி கனவு நிறைவேறாமல் பல்லாயிரம் பேர். அன்று 12 மணி நேரம் வேலைக்கு 15 ரூபாய் சம்பளம் தந்த ஆலை இன்று வளர்ந்திருக்கிறது பலரது உழைப்பை விழுங்கியபடியே!பணியில் நமக்கு இருக்கிற அனைத்து உரிமைகளுக்கும் (அடிப்படை குறைந்தபட்ச ஊதியம், பாதுகாப்பு சட்டங்கள், 8 மணி நேர வேலை வரையறை, ஓய்வூதியம், பணிபாதுகாப்பு முதலியன) அடைப்படி காரணம் மேதினம்! வருடம் ஒருமுறை வரும் இந்த நாள் தேர்திருவிழா மாதிரி நம் மக்களை சென்றடையவில்லை. இது ஒரு தனி வரலாறை உலகில் உருவாக்கிய நினைவு நாள். 1886 இல் அமெரிக்காவின் சிக்காகோ நகரில் வெடித்த ஒரு வரலாற்று புரட்சி உலகில் அனைவரின் வாழ்விலும் மாற்றத்தை வழங்கியது! அப்படி என்ன நடந்தது?நீராவி எந்திரத்தின் கண்டுபிடிப்பு உலகில் புதிய எந்திரங்களையும், தொழிற்கூடங்களையும் உருவாக்கியது. தொழிற்புரட்சி இந்த உலகில் அதிரடி மாற்றங்களை வழங்கிய காலமது. ஆலைகள், சுரங்கங்கள் என எங்கும் புது உருவாக்கங்களால் உலகம் வேகமாக சுழன்றது. வேலை, உற்பத்தி பெருக்கம் என உலகம் வேகமாக சுழன்ற வேளை குடும்பங்களில் அதன் தாக்கம் இருந்தது. எல்லோரும் 16, 18 மணி நேரம் வரை சுரங்கங்களிலும், ஆலைகளிலும் கடுமையாக உழைத்தனர். அப்போதெல்லம் கழைப்புடன் வேலையை விட்டு வரும்வேளை குழந்தைகள் நித்திரையில் இருப்பார்கள். இப்படியே காலங்கள் ஓடியத்தால் பல குழந்தைகளுக்கு தனது வீட்டுக்கு வரும் அந்த மனிதர் (அப்பா) யார் என்றே தெரியவில்லை. பாசத்தை பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பில்லாமல் போனது. உறவுகளோடு கலந்து வாழவும், ஓய்வு எடுத்துக்கொள்ளவும் வாய்ப்பு இல்லாமல் இயந்திரம் போன்ற வாழ்க்கையானது. ஆலை நிர்வாகமும், முதலாளிகளும் உற்பத்தி, இலாபம் என்பதில் மட்டும் கவனமாக இருந்தனர்.வேலை நேரத்தை குறைக்கவேண்டும் என பல போராட்டங்கள் நடந்தும் அந்த குரலுக்கு செவிசாய்க்காமல் அடிமைத்தனமான அணுகுமுறைகள் தொடர்ந்தன.

வேலைநேரம் வரையறுக்க கேட்டு 1886 மே 1இல் அமெரிக்காவின் பல பகுதிகளிலுமாக சுமார் ஆறு லட்சம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். அதன் ஒரு கட்டமாக 8 மணி நேரம் வேலை என்ற கோரிக்கையை முன் வைத்து சிக்காகோ நகரில் "மெர்க்காமிக் ஹார்வெஸ்ட் ஒர்க்ஸ்" என்ற ஆலையின் தொழிலாளர்கள் போராடினார்கள். போராட்டம் தொடர்ந்ததால் ஆலை மூடப்பட்டது, துப்பாக்கி தோட்டாக்கள் தொழிலாளர்களை கொன்றுகுவித்தது. அந்த அடக்குமுறையில் பிறந்தது 8 மணி நேரம் என்ற உரிமை! வடிந்த குருதியுடன் உயிர் சாயும் வேளையில், உதிரத்தில் தோய்த்து கரம் உயர்த்தி முழக்கமிட்ட அந்த மாமனிதர்களால் நமது உரிமைகள் பிறந்தன. அதில் ஒரு உரிமை தான் 8 மணி நேரம் வேலை என்ற உரிமை கிடைத்தது. சிகப்பு சிந்தனையின் தொடக்கமும், சிகப்பு கொடி உருவான வரலாறும் இதுவே.

மேதினம், 8 மணிநேரம் வேலை என்பது பொதுவுடமை கொள்கையாளர்களுக்கு (கம்யூனிஸ்டு) மட்டுமானதல்ல, எல்லா தொழிலாளர்களுக்கும் கிடைத்த உரிமை.இன்று அந்த உரிமைக்கு என்ன ஆகி இருக்கிறது? கட்டாய அதிகநேர வேலை (ஓவர் டைம்) உலக தொழிலாளர் அமைப்பின் (International Labour Organisation) நெறிமுறைகளும், விதிகளும் (abolish Forced Overtime convention) தடை செய்துள்ளது. நடைமுறையில் இந்த உரிமை எப்படியிருக்கிறது? பல நாடுகளில் 12-16 மணி நேரம் வேலை என்பது இன்றைய வழக்கமாக இருக்கிறது. தொழிலாழர்களின் பல உரிமைகள் (ஓய்வு ஊதியம், சேமநல நிதி, விடுப்பு, காப்பீடு, பணிபாதுகாப்பு, மருத்துவ வசதி, பேறுகால விடுப்பு, பணியில் பெண்ணுக்கு சம உரிமை, பறிக்கப்பட்டு வருகிறது. அடிப்படை உரிமையான தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை மறுக்கப்படுகிறது.

பல நிறுவனங்கள் தங்களது இலாபத்திற்காக தொழிலாளர் உரிமையை மறுத்து ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு ஆலைகளை மாற்றி வருகிறது. பல இலட்சம் தொழிலாளர்கள் இதனால் பாதிப்படைந்து வருகிறார்கள். தாய்லாந்து, இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா என பல வளரும் நாடுகளில் தொழிலாளர்களது உரிமையை நேரடியாகவும், மறைமுகமாகவும் பறித்து வருவது அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்கள்.

உரிமைகளை பெறுவதென்பது எளிதானதல்ல! கிடைத்த உரிமையை பாதுகாப்பது வளரும் தலைமுறைக்கும், வருங்கால உலகுக்கும், வேலை அமைப்பு முறைக்கும் வழங்கும் பாதுக்காப்பாக அமையும்! நிரந்தரமற்ற தன்மையால் பாதிக்கப்பட்டு கிடக்கிற உலகின் கண்ணீரை துடைக்க நாம் என்ன செய்யபோகிறோம்? மேதினம் வாழ்க! மேதின தியாகிகள் வாழ்க! உலகமெங்கும் தொழிலாளர் உரிமை வளரட்டும்!

திரு

இன்றைய நாளின் தேவை கருதிய மீள்பதிவு இது.

மேதினமும் தொழிலாளர் நிலையும்

சூசேன், 20 வயது பெண், தன்னோடு சேர்த்து 10 பேர் தையற்கலை பயிலும் நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை பார்க்கிறார். குமாசி, கானா நாட்டில் (ஆப்பிரிக்கா) இவரைப் போல பயிற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு எந்த வித வருமானமோ, ஊதியமோ வழங்கப்படுவதில்லை. உணவு, தங்குமிடம், போக்குவரத்து அனைத்திற்கும் உறவினர்களை சார்ந்து வாழவேண்டிய நிலை. சுமார் 3000 ரூபாய் கூட பெறுமதியில்லாத தையல் எந்திரம் வாங்க இவர்கள் ஆசைப்படுவது ஒரு நிறைவேறா கனவு.

டேவிட், 25 வயது, வேலைதேடி பல நேர்காணல்கள், திறனுக்கான பயிற்சிகள் என அலைந்தும் பல வருடங்களாக வேலையில்லாமல் ஆஸ்திரேலியாவில் இருக்கிற ஒரு இளைஞன். அரசு கொடுக்கிற வேலையில்லா கால நிவாரணத்தை நம்பியே வாழ்க்கை. அந்த நிவாரணத்தையும் அரசின் பொருளாதார கொள்கைகள் பறித்து வருகிறது. எதிர்காலம் என்ன ஆகுமோ தெரியாத கவலை இவருக்கு.

ஹூலியோ, 24 வயது, பராகுவே நாட்டில் (அமெரிக்கா கண்டம்) வேலையில்லா இளைஞன். இவரது அண்ணா ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது அவரது உரிமைகளுக்காக குரல் கொடுத்தார் என்பதால், ஹூலியோவுக்கு வேலை மறுக்கப்பட்டது.

இங்கா, 26 வயது பெண், பெல்ஜியம் நாட்டில் ஒரு உணவு விடுதியில் வேலை செய்கிறார். அதிக வெப்பம் நிறைந்த பகுதியில் பாதுகாப்பற்ற, கடினமான சூழலில் இவரது வேலை. இவர் வேலை செய்கிற நிறுவனம் தொழிலாளர் பாதுகாப்பிற்கான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இங்காவின் கைகளில் நிரம்பியிருக்கிற காயங்கள் வேலைத்தள விபத்துகளுக்கு சாட்சியாக இருக்கிறது.

துசாந்த் மற்றும் பரிவள இருவரும் 21 வயது நிரம்பிய இளைஞர்கள். இலங்கையில் சுமார் 20 உணவு விடுதிகள் நடத்துகிற "நீலகிரிஸ்" நிறுவனத்தின் கொழும்பு கிளையில் இவர்கள் பணிபுரிகிறார்கள். மாதம் 800 இந்திய ரூபாய் ஊதியம் என வேலையில் சேர்க்கப்பட்ட இவர்களுக்கு 600 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. எந்த வித சமூக பாதுகாப்பு திட்டமும் இவர்களுக்கு இல்லை. இந்த உணவு விடுதியில் அதிக நேரம் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். அதிக நேர உழைப்பிற்கான ஊதியம் வழங்கப்படுவதில்லை. தினமும் அதிகாலை 4.30 மணி முதல் இரவு 11.30 வரை தொடர்ந்து வேலை செய்யும் இவர்கள் 60 பேருக்கு தங்க ஒரே அறை.

கோடிக்கணக்கான இளையோர் (ஆண்களும், பெண்களும்) உலகமெங்கும் (வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில்) இந்த மாதிரியான நிலையை சந்திக்கிறார்கள். பகுதிநேர வேலை, ஒப்பந்த வேலை, அமைப்புசாரா துறை, ஏற்றுமதி சார்ந்த தொழில், வீடுகள், விடுதிகள், கட்டிட வேலை, விவசாயம், பன்னாட்டு நிறுவனங்கள் போன்றவற்றில் இவர்கள் பணிபுரிகிறார்கள். சமூக பாதுகாப்பு திட்டங்களான மருத்துவ வசதி, பேறுகால விடுப்பு, ஓய்வு கால உரிமைகள், விடுமுறைகள் என்பவை இவர்களுக்கு முழுமையாக இல்லை. ஒப்பந்த வேலைகளிலும், ஏற்றுமதி சார்ந்த வேலைகளிலும் ஈடுபடுபவர்களுக்கு தொழிற்சங்கத்தில் சேர உரிமையில்லை. வீட்டுவேலைகள், பூக்களை வளர்க்கிற பண்ணைகள், ஏற்றுமதி சாந்த நிறுவனங்களில் பணிபுரிகிற பெண்கள் பாலியல் துன்புறுத்தல், பாலியல் கொடுமை, வன்முறை போன்றவைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். நல்ல வாழ்க்கை, ஊதியம் என ஆசை காட்டப்பட்டு கடத்தப்படுகிற இளம்பெண்கள் பெரும்பாலும் பாதுகாப்பற்ற நிலையில் பாலியல் தொழிலில் தள்ளப்படுகிறார்கள். வாழ்க்கை ஆதாரங்களை தேடி நகரங்களுக்கும் பிற நாடுகளுக்கும் செல்லுகிற இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகமான நெருக்கடிகள், புறக்கணிப்பு, சுரண்டல், மோசடிகளுக்கு பலியாகிறார்கள்.

சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்னர் 8 மணிநேர வேலை என்ற அடிப்படை கோரிக்கைக்கான போராட்டம் சிக்காகோவில் நடந்ததன் விளைவு, 8 மணி நேர வேலை என்பது சட்டரீதியான உரிமையானது. இந்த போராட்ட வரலாறு தான் மேதினமாக உருவெடுத்தது. 1919ல் உலக தொழிலாளர் அமைப்பு உருவாக்கிய முதல் ஒழுங்குமுறை 8 மணிநேர வேலை பற்றியது. 120 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த மேதினத்தில் தொழிலாளர்களுக்கான வேலை நேரம் என்ன என்பது சிந்திப்பது நமது கடமை. உலகமெங்கும் அதிகநேர வேலை செய்ய தொழிலாளர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். அரசாங்கங்கள் வேலை நேரத்தை முறைப்படுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் இருக்கிறது. அதே வேளையில் வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை அதிகமாகிறது. அடுத்த 8 ஆண்டுகளில் சுமார் 100 கோடி புது பணியிடங்கள் உருவாக்கினால் மட்டுமே உலக அளவில் வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்கொள்ள முடியும். இதற்கு வேலை நேரத்தை வரைமுறைப்படுத்தல் அவசியமாகிறது.

உலகமயமாக்கல் பொருளாதாரம் மக்களின் வாழ்க்கை, வேலை அனைத்தையும் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளியிருக்கிறது. கல்வி, குடிநீர், மின்சாரம், போக்குவரத்து, மருத்துவ வசதி என அனைத்தும் தனியார் மயமாக்கப்பட்டு, ஏழைகளை வளர்ச்சியிலிருந்து புறந்தள்ளியிருக்கிறது. ஒரு சாரார் மட்டுமே வளர்வதற்கான திட்டங்கள் வளர்ச்சி திட்டங்கள் என பெயரிடப்பட்டு பாமர மக்களின் வாழ்வை அழிக்கும் கொள்கைகள் ஊக்குவிக்கப்படுகிறது. வசிப்பிடம் இல்லாதவர்கள், வேலையில்லாதவர்கள், வறியவர்கள் என இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது.

காலதாமதம் செய்யாமல் சமூக பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தி புறக்கணிக்கப்பட்டவர்களை பாதுக்காப்பது ஒவ்வொரு நாட்டின் முக்கிய கடமை.

சர்வதேச தொழிலாளர் பாதுகாப்பு வரைமுறைகள் விதிமுறைகளை சட்டரீதியான உரிமையாக்கி அவற்றை நடைமுறைப்படுத்துவது தொழிலாளர் வாழ்வில் பாதுகாப்பை தரும். இதை செய்ய அனைத்து நாடுகளின் அரசுகளும் முன் வரவேண்டியது இக்காலகட்டத்தில் மிக முக்கியமானது. தொழிலாளர் பாதுகாப்பின் வழியாக தான் நிரந்தர மற்றும் பாதுகாப்பான உற்பத்தியையும் பொருளாதாரத்தையும் உருவாக்க முடியும்.

வேலை நேரத்தை 6 மணி நேரமாக குறைத்து (ஊதியம் மற்றும் பாதுகாப்பு திட்டங்களை குறைக்காமல்) நடைமுறைப்படுத்தி புதிய வேலைகளை உருவாக்குவதன் மூலம் வேலைவாய்ப்பை பெருக்கலாம். இன்றைய எந்திரமயமாக்கப்பட்ட சூழலில் வேலை நேர குறைப்பு உற்பத்தி திறனை பெருக்கவும், தொழிலாளர் மனநிலை மற்றும் அறிவுத்திறனை வளர்க்க உதவும். இவை அனைத்தும் வளர்ச்சியை நோக்கியதாக அமையும்.

இவற்றை செய்ய அரசுகளும், நிறுவனங்களும் முன்வருமா? இவர்களை செயல்பட வைக்கும் கடமை மீண்டும் தொழிலாளர் வர்க்கத்திடம். ஒன்று சேருவோம் மேதினத்தில்! உரிமைகளுக்கு குரல் கொடுப்போம்!! மேதினம் வாழ்க! மேதின தியாக வீரர்கள் தந்த ஊக்கம் வெற்றியை தேடி தரட்டும்!!!

திரு