Thursday, March 20, 2008

அப்பாவின் ஓய்வும், உடலுழைப்பு பற்றிய பகிர்தலும்

ழுப்பத்து எட்டு வயதான அப்பா இந்த மாதம் வழக்கமான வேலையிலிருந்து ஓய்வுபெற்றார். சுமார் 38 வருடங்கள் ஓடியாடி சிறு முதலாளி ஒருவரின் ரப்பர் தோட்டத்தில் காடுமையான உழைப்பு. முப்பத்தெட்டு வருடங்களுக்கு வாரக்கூலி வேலைக்கு சேர்ந்த நாளைப் பற்றிய நினைவுகளை தொலைபேசியில் குறிப்பிட்ட அப்பாவின் உணர்வை உணர முடிந்தது. உழைப்பு நம் மக்களோடு எவ்வளவு பிணைந்திருக்கிறது. குடும்ப பொருளாதார சூழல் காரணமாக கடைசி வரை உழைத்துக் கொண்டிருப்பதை தவிர வேறு எந்த வழியுமற்றவர்கள் பற்றி எப்போதாவது நாம் சிந்தித்திருக்கிறோமா? அவர்களது முன்னேற்றம், உடல்நலன், ஓய்வு எந்த பொருளாதார மேற்கோள்களிலும், புள்ளிவிபரங்களிலும் 'வளரும் இந்தியாவில்' உணரப்படாதது கவலையளிக்கும் விசயம். எழுபது வயதை கடந்தும் அம்மாக்கள் நமது குடும்பங்களில் உழைத்துக் கொண்டிருப்பதை பற்றி நினைக்காமல் இருப்பது அதைவிட கொடுமையானது. அம்மாக்கள் என்றாலே நமக்கு சேவகம் செய்ய 'படைக்கப்பட்டவர்கள்' என்ற மனநிலை நம்மில் ஊறிப்போயிருக்கிறது.

'கறுப்பி' (இயற்பெயராக தெரியவில்லை) என்று அறியப்படும் 70 வயதுடைய மூதாட்டி கடவத்தில் பாக்கு, வெற்றிலை, பழங்கள், காய்கறி எடுத்து சென்று சந்தையில் தினம் தோறும் விற்கிறார். காலை 7 மணி முதல் மதியம் 1 மணிவரையும், மாலையில் 3 முதல் 6 மணிவரையும் கடுமையான உழைப்பு. வாரம் இருமுறை அதிகாலையில் வடசேரி, மார்த்தாண்டம், கருங்கல், தக்கலை சந்தைகளிலிருந்து காய்கறி, வெற்றிலை, பாக்கு, பழங்கள் வாங்கி அரசு பேருந்தில் ஏற்றி வந்து விற்று பிழைக்கும் உழைப்பு மிகுந்த ஓய்வற்ற வாழ்க்கை.

பசுமணி, 74 வயதிலும் மரம்வெட்டும் வேலை செய்கிற முதியவர். 'வெள்ளெளுத்தால்' கண்பார்வை சற்று குறைந்த வயதிலும், விடியக்காலம் 4.30 மணிக்கு பழங்கஞ்சியை குடிச்சிட்டு, கோடாரியை தோளில் போட்டபடியே ரோட்டோரமாக காத்திருப்பார். சுருளோடு, தடிக்காரன்கோணம், குலசேகரம், களியல் பகுதிகளில் எங்காவது 'ஸ்லாட்டர்' ரப்பர் மரம் முறிக்க போகும் ஆராவது விளிச்சா, வேலை கெடைக்கும். இல்லன்னா அடுத்தநாள் சாப்பாட்டுக்கு பக்கத்து வீட்டில ரேசன் அரிசி கடன் வாங்கணும்.

ஞானப்பூ, எழுபது வயதிலும் சுறுசுறுப்பாக நாத்து நட்டு, களைபறிக்கும் பெண்மணி. அவர் களைபிடுங்கிக் கொண்டு வெற்றிலை குதப்பல் தெறிக்க அடிக்கிற கிண்டல்கள் கடும் வெயிலில், குனிந்து நின்று களைபிடுங்கும் மற்ற பெண்களுக்கும் வலியை சிறிது மறக்க வைக்கும். காலை 7 மணிக்கு துவங்கி மாலை 3 மணி வரையில் கடும் உழைப்பிற்கு பின்னர் மண்சுவர் எழுப்பி ஓலைக்கூரை கூழமாகிப்போன வீட்டில் ஐம்பது ரூபாய் கூலியில் கிடைத்த சாப்பாடு முழு குடும்பத்திற்கும். வயல்காரர் கூப்பிடும் போது செருப்பை தூரத்தில் கழற்றி வைத்து அவன் முன்னால் நிற்கும் சுயமரியாதையற்ற 'நாய் பொழைப்பு'.

ஸ்டீபன், அறுபத்தெட்டு வயதில் எருதூர்க்கடை 'முக்கு ரோட்டோரமா' மீன் அறுத்து விற்பதை பார்க்கும் போது உழைப்பின் இலாவகம் புரிகிறது. அளவாக துண்டு போட்டு விக்கலைன்னா நட்டம் வந்தா முதலாளி என்னதான் சொந்தக்காரனா இருந்தாலும் விடமாட்டார். காலையில மீன் எடுத்து தலைசுமட்டுல கொண்டுவந்து விற்கும் ஸ்டீபன் புற்றுநோயாளி. மருத்துவம் பார்க்க வசதியில்லாமல், மகள் ஒருத்தியின் ஆதரவுடன் அவ்வப்போது 'கதிர் பிடித்தும்' பலனில்லாமல் இறந்து போனார்.

உடலுழைப்பு தொழிலாளர்கள், முதியவர்கள், விளிம்புநிலையினர் மீது நாம் மேற்கொள்ளுகிற சுரண்டலை எவ்விதத்திலும் உணராமல் இருப்பது மோசமான சமூகநோய். அரசு மற்றும் தனியார் துறையில் முறைப்படுத்தப்பட்ட வேலைகளுக்கு மட்டும் ஓய்வுபெறும் காலமும், ஓய்வுகால சமூக பாதுகாப்பு திட்டங்களும் இருக்கிறது. நடைபாதையில் பழங்கள் விற்கும் 70 வயது மூதாட்டியும், தள்ளாடும் வயதில் மரம்வெட்டும் 74 வயது முதியவரும், களையெடுக்கும் 70 வயது பெண்மணியும், உடல்நிலை பாதிக்கப்பட்ட மீன்விற்கும் 68 வயது உழைப்பாளியும் நமது சமூகத்தில் அளித்திருக்கும் பங்கை மதித்து, அவர்களை பாதுகாத்திருக்கிறோமா? ஆசிரியர்களும், வங்கி ஊழியர்களும், அரசு அதிகாரிகளும், இராணுவமும், தபால்காரர்களும், கிராம அலுவலக ஊழியரும் 58 அல்லது 60 வயதில் ஓய்வெடுக்க முடிகிறது. சுமார் 93 % உடலுழைப்பு தொழிலாளர்கள் எந்த அடிப்படை சமூகபாதுகாப்பு திட்டகளுமில்லாமல் இறுதிவரையில் உழைப்பை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். இவர்களுக்கு இந்தியா என்னும் அடையாளத்தின் பொருள் என்ன?

சமூக பாதுகாப்பு திட்டங்களும் (social protection), சுயமரியாதையும் (dignity) குறைந்த/இல்லாத வேலைகளில் கிராமங்கள் முதல் நகரங்கள் வரையில் பெரும்பாலும் பெண்களும், முதியவர்களுமே அதிகபடியாக இருக்கின்றனர். வியாபாரத்தில் மட்டுமல்ல, விவசாயம் உள்ளிட்ட உணவு உற்பத்தி, குடிசைத்தொழில்கள், கட்டுமான பணிகள் என்று நாம் உயிரோடு இயங்க அவர்கள் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். 'சோம்பேறிகளாக வேலையில்லாமல் இருந்தாலும் இளம்வயதினர் இப்படிப்பட்ட வேலையை செய்ய விரும்புவதில்லை' என்று விவசாய வேலைகளுக்கு செல்ல தயங்கும் இளைய வயதினரைப் பற்றி குறைகூறுகிறோம். வேலை மற்றும் வருமான உத்தரவாதமும் இல்லாத, சமூகபாதுகாப்பு திட்டங்களற்ற, கடும் உடலுழைப்பு வேலைகளுக்கு நாம் செல்ல ஏன் விரும்பவில்லை என்று ஒருமுறையாவது சிந்தித்திருக்கிறோமா?

விவசாயம், கட்டிட வேலை உள்ளிட்ட வேலைகளில் நிலவுகிற வேலை நிச்சயமற்றதன்மை, கூலி சார்ந்த உழைப்பு சுரண்டல், சமூகப்பாதுகாப்பு திட்டங்கள் இல்லாமை, சாதி அடிப்படையிலான சுயமரியாதையற்ற அடிமைத்தனம் கலந்த மிகமோசமான சுரண்டல் உடலுழைப்பு வேலைகளின் சமூக அங்கீகாரம், சுயமரியாதை, வாழ்க்கைத்தரம் போன்ற அடிப்படை அம்சங்களுக்கு வேட்டுவைக்கிற சவாலாக இருக்கிறது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் முன்னர் தொழிலதிபர்களை சந்தித்து முதலாளிகள் கருத்து கேட்கும் நாம், என்றாவது உடலுழைப்பு தொழிலாளர்கள் கருத்து கேட்டு திட்டங்கள் இயற்றியிருக்கிறோமா? அவர்கள் நமது சமூகத்தின் அங்கமாக இல்லையா? உடலுழைப்பு தொழிலாளர்களது பங்கேற்பற்ற நமது ஆட்சி, அதிகாரமுறைக்கு மக்களாட்சி என்று அழைப்பதன் வழியாக நம்மை நாமே கேலிசெய்கிறோம்.

உடலுழைப்பு தொழிலாளர்களை புறக்கணிப்பது உணவு உற்பத்திமுறை, கட்டுமானப் பணிகள், துணை நிறுவனங்களது உற்பத்தியில் பெரும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு சமூகபாதுகாப்பு திட்டங்கள், வாழ்க்கைத்தரத்திற்கேற்ற வருமான உத்தரவாதம், சாதி அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை பெறுவதற்கான திட்டங்கள் பாரபட்சமில்லாது அமைந்தாலொழிய இம்மக்களுக்கு ஓய்வு, பாதுகாப்பு, சுயமரியாதை என்பது கனவு மட்டுமே.

Friday, March 07, 2008

இலங்கை அரச மனித உரிமை மீறல்களுக்கு துணையாகும் 'பேனா முனை'

லங்கை நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொண்டு தனது பாதுகாப்பிற்கு எதிராக நாட்டின் இராணுவம் நடத்துகிற கெடுபிடிகளை பற்றி பேசிவிட்டு நேற்று சொந்த ஊருக்கு திரும்பும் வழியில் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையின் தொடர் குண்டுகளால் மாங்குளம் அருகே தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசன் கொல்லப்பட்டிருக்கிறார். மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து இலங்கையின் தமிழ்தேசிய கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இதுவரையில் குற்றவாளிகள் பற்றிய நேர்மையான விசாரணயோ, நடவடிக்கைகளோ இல்லை. யுத்த நிறுத்த ஒப்பந்தம் 8கையெழுத்திட்ட பின்னர் மூன்று ஆண்டுகளில் கொல்லப்பட்ட, தாக்குதலுக்குள்ளான முன்னாள் மற்றும் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியல்:

  1. மட்டகளப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 24 டிசம்பர் 2005 நள்ளிரவு கிறிஸ்து பிறப்புநாள் ஆராதனையில் தேவாலயத்தின் உள்ளே வைத்து இராணுவ உடையணிந்த வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
  2. ஜோசப் பரராஜசிங்கம் அவர்களுக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வன்னியசிங்கம் விக்னேஸ்வரன் திரிகோணமலைக்கு பணிநிமித்தமாக செல்லும் போது 7 ஏப்பிரல் 2006ல் சுட்டுக்கொல்லப்பட்டார்.
  3. நாடாளுமன்ற உறுப்பினர் தேர்வு பட்டியலில் இருந்த ஆறுமுகம் செந்தில்நாதன் வவுனியாவில் அவரது கடையில் வைத்து 25 ஏப்பி்ரல் 2006ல் சுட்டுக்கொல்லப்பட்டார்.
  4. யாழ்ப்பாண நாடாளுமன்ற நடராஜா ரவிராஜ் நாட்டின் தலைநகர் கொழும்புவின் அருகே நரஹென்பிட்டியாவில் வைத்து 8 நவம்பர் 2006ல் சுட்டுக்கொல்லப்பட்டார்.
  5. கிளிநொச்சியிலிருந்து மட்டகளப்பு செல்லும் போது 23 பெப்ருவரி, 20005ல் மட்டகளப்பின் அருகே வைத்து சந்திர நேரு, அம்பாறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
  6. சின்னத்தம்பி சிவமகாராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அவரது வீட்டின் அருகே யாழ்ப்பாணத்தில் 21 ஆகஸ்டு 2006ல் படுகொலை செய்யப்பட்டார்.
  7. வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் 29 அக்டோபர் 2006ல் அவரது வீட்டில் நடந்த கையெறி குண்டு தாக்குதலில் தப்பித்தார். காவலாளிக்கு காயம் ஏற்பட்டது.
  8. கி.சிவநேசன், 6 மார்ச் 2008 மாங்குளம் அருகே வைத்து ஆழ ஊடுருவும் படையினரின் தொடர் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே இந்த நிலை என்றால் மக்களுக்கு எப்படிப்பட்ட நிலையாக இருக்கும். இப்படி தொடர்ந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்படுவது பற்றி நாடாளுமன்றம் மௌன அஞ்சலியோடு முடித்து விடும் கள்ளத்தனத்தின் அரசியலை யாரும் கண்டுகொள்வதில்லை. உலக நாடுகளும், இந்தியா உள்ளிட்ட நாடுகளும் இந்த மௌனத்தின் வழியாக மனித உரிமை மீறலுக்கு உடந்தையாக இருக்கிறது. அதனால் படுகொலைகளும், கடத்தல்களும், அடக்குமுறைகளும் இலங்கையின் இறையாண்மையின் புதுவடிவமாக உருவெடுத்து நிற்கிறது.

அமெரிக்காவை மையமாக கொண்ட மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு சிலதினங்களுக்கு முன்னர் வெளியிட்ட அறிக்கை, "கடந்த 18 மாதங்களுக்கு மேலாக அரசாங்கப்படைகளினாலான துஸ்பிரயோகங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளதுடன், இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் கண்காணிப்புக்குழுவை நியமிப்பதற்கு உதவி வழங்கும் நாடுகள் மற்றும் கரிசனை கொண்ட அரசுகளின் ஆதரவையும் கோரியுள்ளது." என்று தெரிவிக்கிறது.

புலிகளை " பொதுமக்களை இலக்காகக் கொண்ட கொலைகள், அச்சுறுத்திப் பணம் பெறுதல் மற்றும் படைகளில் சிறுவர்களை பயன்படுத்தல் " பற்றி குற்றம் சாட்டியிருப்பினும், 129 பக்கங்கள் கொண்ட “போரிற்கு மீளல்: முற்றுகையின் கீழ் மனித உரிமைகள்” என்னும் இவ்வறிக்கை இலங்கை அரச படைகளின் அடக்குமுறைகளையும் அதற்கு முகம்கொடுக்கிற தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள, இஸ்லாமிய மக்கள் பாதுகாப்பின்மை பற்றியும் அரசாங்கத்தை குற்றம்சாட்டுகிறது.

பயங்கரவாதிகள் ஒழிப்பு என்ற போர்வையில் இலங்கை அரசு செய்கிற மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்படுவது அப்பாவி தமிழ்மக்கள். நாள் தோறும் கடத்தப்படுதல், துப்பாக்கிமுனையில் மிரட்டப்பட்டு பாதுகாப்பற்ற பகுதிகளுக்கு மீள்குடியேற்றம் செய்தல், அரசபடைகள் மற்றும் துணைக்குழுக்களின் மீறல்களுக்கு (violations) இணங்க மறுக்கும் தமிழ் மக்களை கொலை செய்வது போன்ற மனித உரிமை மீறல்கள் அரசால் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. அரசாங்கத்தின் மீதான வாக்கெடுப்பில் போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் மிரட்டப்பட்டார். பாதுகாப்பு விலக்கப்பட்டு இரகசிய புலன்விசாரணை இராணுவ/காவல் பிரிவினரால் செய்தியாளர்கள் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை மிரட்டப்படுகின்றனர். அரசின் அடக்குமுறைகளுக்கு இணங்க மறுத்த பல செய்தியாளர்கள் கடந்த 3 வருடங்களில் படுகொலை செய்யப்பட்டனர். செய்தி நிறுவனம் தாக்கப்பட்டது. இக்பால் அத்தாஸ் என்னும் செய்தியாளர் புலனாய்வு பிரிவினரால் மிரட்டப்பட்டார். தமிழ் பொதுமக்கள் முதல் தமிழ் தொழிலதிபர்கள் வரை கடத்தப்பட்டு படுகொலை செய்யப்படுவது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வருகின்றன.

ஐரோப்பா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இலங்கைக்கு திரும்பும் போது இரகசிய காவல் பிரிவினரால் விமானநிலையத்திலிருந்து ‘வெள்ளை வேனில்’ சட்டத்துக்கு புறம்பாக கடத்தி, மிரட்டப்பட்டு, பணம் பறித்தல், காணாமல் போக செய்தல் என்று குற்றங்கள் அதிகாரமயப்படுத்தப்பட்டு நடைபெறுகிறது. அல்கொய்தா தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் ஈராக், ஆப்கானிஸ்தான் மக்கள் மீதான மனித உரிமை மீறலையும், குற்றமற்ற இஸ்லாமிய இளைஞர்கள் பலரை கியூபா அருகே தனித்தீவில் சிறைவைத்து சித்திரவதை செய்ததையும் உலகம் ஏற்கவில்லை.

“இலங்கை அரசாங்கம் அதன் பாதுகாப்புப் படைகளிற்கு “கீழ்த்தரமான போர் உத்திகளை” கையாள்வதற்கு சம்மதத்தை கொடுத்துள்ளாற் போலுள்ளது”, “ கொலைகள், ‘காணாமல் போதல்கள்’ மற்றும் இடம்பெயர்ந்தவர்களை கட்டாயப்படுத்தி மீளக்குடியேற்றல் போன்ற அரசின் திட்டமிட்ட செயல்களுக்கு த.வி.பு. இனால் மேற்கொள்ளப்படும் துஸ்பிரயோகங்கள் ஒரு சமாதானமாக அமையாது” என்கிறார் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் ஆசிய பணிப்பாளர் பிரட் அடம்ஸ்.

இலங்கை அரசாங்கம் மற்றும் த.வி.பு. இடையில் செய்துகொள்ளப்பட்ட 2002ம் ஆண்டின் யுத்த நிறுத்த ஒப்பந்தம் பெயரளவில் நடைமுறையிலுள்ளது எனினும், பாரியளவிலான மோதல்கள் 2006ம் ஆண்டின் நடுப்பகுதியில் மீளவும் ஆரம்பித்துள்ளன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்சவும், குடிமக்களது பாதுகாப்பில் கரிசனை எதுவுமின்றி நாட்டின் வட கிழக்கில் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

அரசபடைகள் தமிழ் மக்கள்மீது கண்மூடித்தனமான தாக்குதல்களுக்குள்ளாக்கியது. டன் கணக்கில் வெடிமருந்துகள் அடங்கிய குண்டுகள் மக்கள் வாழும் பகுதிகளில் வீசப்பட்டு வீடுகள், உணவுக்காக பயிர்கள், வாழ்வாதாரங்களை அழித்து முடக்கியது. மனிதாபிமான உதவிகள் செய்ய முன்வந்த நிறுவனங்களை தடுத்து உணவு, மருந்து விநியோகத்துக்கு முட்டுக்கட்டையிட்டது.

“ஆகஸ்ட், 2006 இலிருந்தான சண்டைகளின் பின்னர் சுமார் 315,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு ஓட வேண்டியிருந்துள்ளதுடன், இதில் பெரும்பான்மையானோர் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களாவர். மார்ச் மாதத்தில் மட்டும் சுமார் 100,000 பேர்கள் இடம்பெயர்ந்தனர். அரசாங்க அதிகாரிகள், இவர்களுள் சிலரை, தொடர்ந்தும் பாதுகாப்பின்றி இருந்த பகுதிகளுக்கு மீள்திரும்புமாறு வற்புறுத்தினர்.” என்கிறது மனித உரிமை கண்கானிப்பு அமைப்பு.

‘காணாமற் போதல்’ பற்றி தொடர்ந்து ஆவணப்படுத்தி வருகிறது. ஜனவரி 2006 மற்றும் ஜுன் 2007 இடையில் 1100 புதிய சம்பவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பெருமளவிலானோர் தமிழர்களாவர்.” “அண்மைகாலமாக பெருமளவிலான “காணமற்போதல்கள்” அவற்றிற்கு பொறுப்பானவர்களாக அரசாங்கப்படைகளை அல்லது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் ஆயுதக்குழுக்களையே” குறிப்பிட்டுக் காட்டுகின்றன.

“அரச படைகளின் தீவிர கட்டுப்பாட்டிலுள்ள வடக்கின் யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் 800க்கும் மேற்பட்ட மக்கள் டிசம்பர் 2005 மற்றும் ஏப்பிரல் 2007 இடையிலான காலப்பகுதியில் காணமற்போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 241 பேர்கள் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டனர். அநேகமான இச் சம்பவங்களில் பாதுகாப்புப்படையினர் சம்பந்தப்பட்டிருந்ததாக அல்லது கடத்தல்களில் தொடர்புபட்டிருந்ததாக சாட்சிகளும் மற்றும் குடும்ப அங்கத்துவர்களும் குற்றங்சாட்டுகின்றனர்.”

“ஆகஸ்ட் 2006 இல், அரசாங்கம் அவசரகால சட்டத்தை மீள் அறிமுகப்படுத்தியதானது, இலங்கை மற்றும் சர்வதேசச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பளிக்கப்பட்டிருந்த ஒரு தொகை அமைதிச் செயற்பாடுகளை குற்றவியல் குற்றங்களாக்கியுள்ளது. அரசாங்கம், இச்சட்டங்களை, அதன் அரசியல் எதிரிகள் மற்றும் ஊடகத்துறையினரை குற்றஞ்சாட்டப் பயன்படுத்தியுள்ளது.”

“இலங்கையில் ஆகஸ்ட் 2005 இலிருந்து 11 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழ் ஊடகவியலாளர்கள் த.வி.பு.களதும், அரசாங்கத்தினதும் கடுமையான அச்சுறுத்தல்களின் கீழ் பணியாற்ற வேண்டியுள்ளது. ஆனால் அரசாங்கம் விமர்சன நோக்கிலான கருத்துகள் மற்றும் செய்திகளை வெளிவிடும் சிங்களமொழி வெளியீடுகள் மீதும் அழுத்தங்களைப் பிரயோகிக்கிறது. அரசாங்கம், ஆயுத மோதல் மீதான அதன் அணுகுமுறை அல்லது அதன் மனித உரிமை மீறல்கள் குறித்து வினாவும் அல்லது விமர்சனம் செய்பவர்களின் குரல்களை மௌனிப்பதற்கு முயற்சிக்கிறது. அது, சாத்வகீமான முறையில் கண்டனம் செய்பவர்களை “துரோகிகள்”, “பயங்கரவாதத்தின்அனுதாபிகள்” மற்றும் “த.வி.பு ஆதரவாளாகள்” என்று கூறி நிராகரிக்கிறது.”

“அரசாங்கம், த.வி.பு. உடனான அதன் மோதலையும் மற்றும் ‘பயங்கரவாத எதிர்ப்பு’ பற்றிய வாதங்களையும் பயன்படுத்தி இலங்கையில் மாற்றுக் கருத்துக்களை நசுக்கிறது”,என்கிறார் அடம்ஸ்.

‘இலங்கைப் பாதுகாப்புப் படைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் ஆயுதக் குழுவான கருணா குழு தொடர்ந்தும் சிறுவர்களையும் இளம் வாலிபர்களையும் இலங்கை அரசாங்கத்தினது ஒத்தாசையுடன் அல்லது இணங்குதலுடன் தனது படைகளில் பலவந்தமாக இணைத்து வருகிறது. யுனிசெப் நிறுவனம் 2006ம் ஆண்டு டிசம்பரிலிருந்து கருணா குழுவினரால் சேர்க்கப்பட்ட மற்றும் மறுபடியும் சேர்க்கப்பட்ட சிறுவர்களின் 145 க்கும் மேற்பட்ட சம்பவங்களை ஆதாரப்படுத்தியுள்ளது, இதன் உண்மையான தொகை இன்னமும்

அதிகமாக இருக்க வேண்டும். அத்துடன் கருணா குழுவினர் மட்டக்களப்பு, வவுனியா மற்றும் தலைநகர் கொழும்பில் கப்பம் பெறுவதற்காக பெருந்தொகையான தமிழ் வர்த்தகர்களையும் கடத்தியுள்ளனர். கருணா குழுவினரது கடத்தல்களில் அரசின் உடந்தை பற்றி விசாரணைகள் மேற்கொள்வதாக மீண்டும், மீண்டும் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ள போதிலும் அரசாங்கம் இதுவரைக்கும் இவ்விதமான விசாரணைகளை மேற்கொள்வதற்கு எடுத்த நடவடிக்கைகள் குறித்து எதுவும் குறிப்பிடாததுடன், கடத்தல்களும் குறைவில்லாமல் தொடர்கின்றன.’ என்கிறது இவ்வறிக்கை.

நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் தானே குறிப்பிடுவதற்கு!

இந்த நிலையில், இந்திய முன்னாள் நீதிபதி பகவதி அவர்கள் தலைமையில் உருவாக்கப்பட்ட பன்னாட்டு நிபுணர் குழு தனது பணியிலிருந்து விலகியுள்ளது. அதற்கு அடிப்படையான காரணங்கள் அரசு தரப்பில் தேங்கிக்கிடக்கின்ற மிகப்பெரிய அளவிலான மனித உரிமை மீறல்களும், அடக்குமுறைகளும், போர்க்குற்றங்களுமே காரணமாகும். பிரான்ஸ் நாட்டை சார்ந்த தொண்டு நிறுவன ஊழியர்கள் 17 பேர் point blankல் சுட்டுக்கொல்லப்பட்டது, செஞ்சிலுவை சங்க ஊழியர்கள் கொலை, தமிழ் புனர்வாழ்வு கழக ஊழியர்கள் கடத்தல் மற்றும் கொலைகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகொலை என்று நீளுகின்ற பட்டியல் ராஜபக்சே சகோதர்களது இரத்தக் கறைபடிந்த ஆட்சியின் படுகொலைகள். இக்கொலைகளை விசாரிக்க பன்னாட்டு நிபுணர் குழுவிற்கு முறையான தகவல்கள், கட்டமைப்புகள், வாய்ப்புகள் அனுமதிக்காது திட்டமிட்ட தடைகள் ஏற்படுத்தப்பட்டன. அதே வேளையில் உள்ளூர் மற்றும் உலகின் விமர்சன பார்வையிலிருந்து தப்ப இந்த நிபுணர் குழுவை இலங்கை அரசு பயன்படுத்தியது. மனித உரிமை மீறல் குற்றங்களில் அரசபடையினர், அதிகாரவர்க்கம், அமைச்சர்கள், காவல்த்துறை இணைந்து செயல்படுகிறது. இவர்கள் இதுவரை தண்டிக்கப்படவுமில்லை. மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் அறிக்கையும் இதை தெளிவுபடுத்துகிறது.

“அரசாங்கம், துஸ்பிரயோகங்களை முடிவுறுத்துவதற்கும் விசாரணை செய்வதற்கும் திரும்பத் திரும்ப வாக்குறுதிகளை அளித்த போதிலும் ஓர் பயனுறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான அரசியல் துணிவின்மையையே வெளிக்காட்டியது” என்று மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் ஆசிய பொறுப்பாளர் அடம்ஸ் கூறுகிறார்.

ஏன் இந்த அரசியல் துணிவின்மை? குற்றங்களில் ஈடுபட்ட, காரணமான, ஆதரித்த, உத்தரவிட்ட, வழிகாட்டிய அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிக்கை எழுப்பப்படும் என்பதாலா? அரச அதிபருக்கும் நேரடியாக அல்லது மறைமுகமாக குற்றங்களோடு தொடர்பு இருக்கும் என்பதாலா? ‘நேர்மைமிக்க அரசும் அதன் தலைமையும்’ ஐ.நா மனித உரிமை அமைப்பின் விசாரணைகளுக்கு உட்படவும், ஐ.நா.மனித உரிமை அமைப்பின் கிளையை ஏற்படுத்த ஏன் தடையாக இருக்கவேண்டும்? இப்படிப்பட்ட அரசின் படைகளுக்கு ஆயுத, பயிற்சி உதவிகள் வழங்குவதும் செய்துவரும் ‘இறையாண்மை’ ரசிகமணியான இந்தியா மனித உரிமை விசயத்தில் என்ன நடவடிக்கை எடுத்தது? ஐ.நா மனித உரிமை கூட்டங்களில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா தொடர்ந்து செயல்படுவது மனித உரிமைக்கு எதிரான கேவலமான, மோசமான அணுகுமுறை. இப்படி ஆதரிப்பதன் வழியாக இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், படுகொலையின் பின்னால் இந்தியாவின் பங்கும் இருக்கிறது.

இனப்பிரச்சனையின் ஒரு தரப்பினரான விடுதலைப்புலிகளை மட்டும் குறை சொல்லுதல், ஒதுக்கி வைத்தல், கண்டித்தல், தடைசெய்தல் போன்ற எந்த நடவடிக்கைகளும் சமாதானத்தை யாருக்கும் தரப்போவதில்லை. சண்டையில் ஈடுபடுபவர்கள் இருவரில் ஒருவரை மட்டும் பிடித்து வைத்து சமாதான போர்வையில் மற்றவருக்கு தாக்கும் வாய்ப்பை உருவாக்கி கொடுப்பது தீர்வல்ல. இலங்கை விசயத்தில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள், இந்தியா மற்றும் ஜப்பான் இலங்கைக்கு செய்து வருகிற ஆயுத, பொருளாதார உதவிகளை நிறுத்தவேண்டும். விடுதலைப்புலிகள் மீது தடைகள் ஏற்படுத்தி அழுத்தங்கள் கொடுப்பது தமிழ்மக்கள் மீது பணிந்து போக விடும் மிரட்டலாக மட்டுமே அமைந்துவிடும். இலங்கை அரசு, அதிகாரவர்க்கம், இராணுவம் மீது இணையான தடைகள் ஏற்படுத்தினால் தவிர தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களும், யுத்தமும் நிற்க வழியில்லை.

சிவநேசன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.47 வைத்துக்கொண்டு நடமாடியவர்களா? அல்லது விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களா? ‘சமாதான’ தலைவர்கள் பற்றி வாய்கிழிய பேசி, கைவலிக்க எழுதி வருபவர்கள் இந்த படுகொலையை ஏன் கண்டிக்கவில்லை?

நிலமை இப்படியிருக்க, ஜீனியர் சுப்பிரமணிய சாமி போன்று இலங்கை அரசிற்கு ஆதரவான கருத்துக்களை ‘இந்திய தேசியம்’, ‘இறையாண்மை’ என்ற போர்வையில் மாலன் எழுதி வருவது வேதனையும், வேடிக்கையுமானது. எங்கெல்லாம் வாய்ப்புகள் கிடைக்குமோ அங்கெல்லாம் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கு எதிரான கருத்துக்களை பரப்புவதில் சமீப காலமாக தொடர்ந்து செய்து வருகிறார் மாலன்.

‘அறியப்பட்ட பத்திரிக்கையாளர்’ திரு. மாலனுக்கு,

தமிழ்செல்வன் படுகொலைக்கு கண்ணீர் கவிதை எழுதியதற்காக கலைஞரின் பேனாவை/அரசை உடைப்பதும், தமிழ் மக்கள் மீதான அரச பயங்கரவாதத்தை ஆதரிக்கும் விதமாக திருமாவளவனது குரல்வளையை நேரிப்பதும் கவனத்தை ஈர்க்க உதவலாம். அதனால் தமிழ் மக்களுக்கு எந்த பலனுமில்லை. மாறாக, ஜெயலலிதா பாணியிலான 'அறிக்கை அம்புகள்' மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கும், படுகொலைக்கும் ஆளாகிற ஈழத்தின் சகோதர, சகோதரிகளின் சாவிற்கும், நடுகடலில் பிணமாகிற ‘அகதி'களின் மரணங்களுக்கும், தமிழக ‘முகாம்களில்’ சித்திரவதைக்குள்ளாகிற ஈழ இளைஞர்களுக்கு எதிரான ஆயுதம். உங்கள் கையில் இருக்கும் பேனா கொலைக்கருவியாக வேண்டுமா? தேசத்தின் இறையாண்மை என்ற போர்வையில் ராஜபக்சேவின் பயங்கரவாத ஆட்சியை ஆதரியுங்கள். தேடிவரும் இலங்கை ரத்னா!



தொடர்புடைய சுட்டிகள்:

மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு அறிக்கை: “போரிற்கு மீளல்: முற்றுகையின் கீழ் மனித உரிமைகள்”
மாலன் எழுதியதடுமாறுகிறார் முதல்வர். ஏன்?
பத்ரியின் எதிர்வினை