Monday, September 18, 2006

சாயிராம் சத்ய ஸ்ரீ சாயி பாபா (ஒளிஒலி)உற்றுப்பாருங்கள்! உங்களால் இது முடியுமா? வாயிலிருந்து லிங்கம் எடுப்பது எளிதான செயலா? ஆச்சரியம் தரும் அற்புதமா? இல்லை அற்பமான செயலா? சாயிராம்!

தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள்

திரு

Tuesday, September 12, 2006

வலைஞர்களே உதவுங்கள்!

என்ன பெரிய உதவியோ என பதட்டமடையாதீர்கள். உங்களால் முடிந்த உதவி தான்.

நீண்ட நாட்களாக பெருத்த சந்தேகமாக இருக்கிறது எனக்கு. எத்தனையோ சந்தேகங்களை தெளிவுபடுத்திவருகிற நீங்கள் எனக்கு இந்த கேள்விக்கான பதிலை தெளிவுபடுத்துங்கள்! மாமிச உணவிற்கும், ஞானம் பெறுவதற்கும் தொடர்பு உண்டா?

இதை போன்ற கேள்வியை சுகி.சிவம் அவர்களிடம் ஒருவர் கேள்வி கேட்டிருக்கிறார். அவரும் அதற்கு தன்னைச் சார்ந்த பதிலை சொல்லியிருக்கிறார். அது விகடனில் வெளிவந்திருக்கிறது. அவரது பதிலும் அதற்கான கேள்வியும் இங்கே:

**************

கேள்வி: மாமிச உணவு, ஞானம் பெறுவதற்குத் தடையானதா? பெரிய ஆகமக் கோயில்களில் மாமிச உணவு உண்ட தினத்தன்று சிலர் நுழைவது இல் லையே! மற்ற மதங்களில் மாமிசம், மதத் தன்மைக்கு எதிரான ஒன்றாக இல்லையே... ஏன்?

-வே. ராமராஜ், திருச்செந்தூர்.

பதில்:
ஞானம் பெற மாமிசம் ஒரு தடையே அல்ல. ஆனால், மாமிச உணவு உண்டே ஆக வேண்டும் என்ற எண்ணம் உள்ள வரையில் ஞானம் பெறவே முடியாது. எதன் மீதும் பிடிவாதமான பற்று இருந்தால், உண்மையை எவ்வாறு தரிசிக்க முடியும்? அதிர்ச்சியான ஒரு விஷயம் சொல்லட்டுமா? வங்காளிகளில் எல்லோருமே மீன் உண்ணும் பழக்கம் உடையவர்கள். விவேகானந்தர், ராமகிருஷ்ணரும்கூட மீன் உண்டிருக்கிறார்கள் என்று ஓஷோ பேசுகிறார்.

சாதாரணமாகவே உணவின்றி விரதத்துடன் நீங்கள் கோயிலுக்குப் போகும்போது உங்களிடம் ஏற்படும் அதிர்வு கள், உணவுண்ட பின் சென்றால் ஏற்படாது. அதிலும் எளிதில் செரிமானம் ஆகாத கடின மாமிச உணவுகள், உங்கள் இறை ஏற்புத் திறனை நிச்சயம் மட்டுப்படுத்தவே செய்யும். இது பொதுவான விதி. விதிவிலக்குகளும் உண்டு.

மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குச் சைவ உணவு தருவதன் நோக்கம் என்ன? எளிய உணவு, நோயிலிருந்து விரைவில் உங்களை மீட்டு எடுக்கும். மன நோய்க்கு மருந்தான கோயில்களும் அதனால்தான் சைவ உணவை வற்புறுத்துகின்றன. அதை விடவும் உண்ணாமையை (வழிபாட்டுக் காலத்தில் மட்டும்) வற்புறுத்துகின்றன. திருவள்ளுவரோ என்னளவு கூட லிபரல் கருத்துடையவர் அல்லர்.

தன்ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்?

என்கிறார். கொலைக் குற்றத்துக்குத் தண்டிக்கப்பட்டவர் களில் பெரும்பாலோர் அசைவ உணவினர் என்பது ஒரு செய்தி. இவையெல்லாம் பரிசீலனைக்கு உரியவை என்பது மட்டுமே என் கட்சி. இதன் மூலம் மாமிசம் உண்ணாதவர்கள், கொலையே செய்ய மாட்டார்கள் என்றும் சொல்ல முடியாது. இரக்கமின்றி பிறரைக் கசக்கிப் பிழிந்து, ஹிம்சை செய்யும் சிலர் சைவ உண வில் தீவிரமாகவும் இருக்கிறார்கள்! பொதுவாக, சைவ உணவால் சாத்விக எண்ணங்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. அசைவத்தில் அப்படி அல்ல!

**********

எது உண்மை?

வலைஞர்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்களேன்! எனது கேள்வி: மாமிச உணவிற்கும், ஞானம் பெறுவதற்கும் தொடர்பு உண்டா?

ஞானத்தை தேடி...

திரு

Monday, September 11, 2006

புதிய உலக ஒழுங்குமுறை?

உலக நடைமுறைய மாற்றிய செப்டம்பர் 11 தாக்குதலின் 5வது வருடம் இன்று. ஒரு காலைப் பொழுதில் அலுவலகம் சென்ற பல ஆயிரம் அப்பாவிகளை பலி வாங்கிய நாள். இந்த சதியை செய்தது யார் என்பதில் இன்னும் பல குழப்பமான ஆய்வுகள் முன் வருகின்றன. எப்படி ஒசாமா பின்லேடன் என்கிற உலக தீவிரவாதியை நோக்கி கைகளை அமெரிக்கா நீட்டுகிறதோ அதே போல அமெரிக்க மக்களில் பலர் அமெரிக்க அரசின் மீதும் இந்த தாக்குதலை திட்டமிட்டதாக சுட்டுகிறார்கள். யார், எதற்காக செய்திருந்தாலும் அப்பாவி மக்கள் மீது உலகமெங்கும் நடைபெற்று வருகிற அனைத்து தாக்குதல்கள் கண்டிக்கப்படவேண்டிவை தான்.

செப்டெம்பர் தாக்குதல் உலகின் ஒழுங்குமுறையை மாற்றியிருக்கிறது. அமெரிக்காவை சர்வதேச காவல்காரனாக உயர்த்துகிற ஒழுங்குமுறையை உருவாக்க தந்தை அப்பா புஸ் ஆரம்பித்தார். அந்த கனவை மகன் ஜார்ஜ் புஸ் முடித்து வைத்திருக்கிறார். ஜனநாயகம், அமைதி என்பது அனைத்தும் அமெரிக்கா சொல்லுகிற விளக்கமே என தலையாட்ட உலகில் பல கூட்டணி நாடுகளை தன்னருகே ஒன்று சேர்க்க அமெரிக்காவிற்கு செப்டெம்பர் தாக்குதல் உதவியிருக்கிறது. இந்த தாக்குதலில் இழந்த உயிர்களை தவிர, அமெரிக்கா பெற்ற இலாபம் அதிகம் எனலாம். உலக அரங்கில் தனது எதிர்கொள்கை கொண்டவர்களை அடக்கி வைக்க பயங்கரவாத அழிப்பு நடவடிககை என்ற ஆயுதம் அமெரிககவிற்கு கிடைத்திருக்கிறது. அவை இராணுவ ஆதிக்கம், பொருளாதார ஆதிக்கம் என பரந்து விரிந்து எழுகிறது. அமெரிக்கா இன்று உருவாக்கி வைத்திருக்கிற புதிய உலக ஒழுங்குமுறை உலகில் அமைதியையும், ஒழுங்குமுறையையும் உருவாக்கவும் கண்காணிக்கவும் செயல்பட்டு வருகிற ஐக்கிய நாட்டு சபையின் இருப்பையே கேள்வியெழுப்பியிருக்கிறது.

செப்டெம்பர் தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில் ஜார்ஜ் புஸ் உலக நாடுகளின் அரசுகளை பார்த்து எச்சரிக்கையாக உதிர்த்த வார்த்தைகள் சாதாரணமானவையல்ல. “நீங்கள் எங்களோடு இருக்கிறீர்களா? இல்லை அவர்களொடு இருக்கிறீர்களா?“ இதன் பொருள் என்ன? எங்களோடு இல்லாவிட்டால் அவர்களோடு இருக்கிறீர்கள் என்பதா? இரண்டும் ஆதிக்கத்தின் உச்சம், ஒன்று அமெரிக்காவின் அரசியல், இராணுவ, பொருளாதார ஆதிக்கம், இன்னொன்று ஒரு பயங்கரவாத கும்பலின் பயங்கரம். இதில் ஒன்றை தேர்ந்தெடுங்கள் என கூவியழைக்க அதிபர் ஜார்ஜ் புஸ்க்கு அதிகாரமளித்தது யார்? பயங்கரவாதமும் வேண்டாம், ஆதிக்கமும் வேண்டாம் மக்களை அவர்களது வழியில் வாழ விடுங்கள்!

செப்டம்பர் 11 தாக்குதலை காரணமாக வைத்து இன்னொரு நாடு மீது போர் தொடுத்து அந்த மக்களின் வாழ்வை வீதிக்கு கொண்டுவந்து பயங்கரவாதத்தை விளைவிக்க களத்தை உருவாக்கிய பெருமை இன்று அமெரிக்காவிற்கு கிடைத்திருக்கிறது. ஈராக்கில் இருந்த கட்டமைப்பு, ஆட்சியதிகாரத்தை அப்புறப்படுத்த இரசாயன ஆயுதம், பேரழிவு ஆயுதங்கள் என்ற பெயரில் கதை கட்டி யுத்தம் தொடுத்தது அமெரிக்கா. ஈராக்கின் ஆயுதங்களை அழிக்காவிட்டால் அமெரிக்கவிற்கும் உலக்த்திற்கும் சதாம் உசேனால் ஆபத்து என கதைகளை கிழப்பி விட்டனர் ஜார்ஜ் புஸ் மற்றும் அரச அதிகாரத்தில் இருந்தவர்கள். அதன் விளைவாக அமெரிக்க மக்களின் அச்ச உணர்வை உருவாக்கி எடுத்த இராணுவ நடவடிக்கை இன்று அமெரிக்காவை உலகில் நிர்வாணமாக்கியிருக்கிறது. எங்கே இரசாயன ஆயுதங்களும், உயிர்கொல்லி ஆயுதங்களும், பேரழிவு ஆயுதங்களும்? எதையாவது கண்டுபிடிக்கவோ அழிகக்வோ முடிந்ததா? இல்லை இதி உளவு நிறுவனங்களின் குழறுபடி என்ற ஒற்றை வரியில் பதில் முடிகிறது. இந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை திருப்பி தர இயலுமா?

சதாம் உசேனுக்கும் அல்கொய்தா இயக்கத்துக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட காரணமும் பொய்யாகியிருக்கிறது. அடுக்கடுக்காக பொய்களை கூறி இன்னொரு நாட்டின் மீது படையெடுத்து அந்த நாட்டு மக்களின் வாழ்வையும் அழித்து, அழிவு பாதையில் தள்ளிய குற்றத்தின் சொந்தக்காரர்கள் அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகளும். அமெரிக்க மக்களின் பாதுகாப்பு மட்டுமா உயர்ந்தது? ஈராக்கிய மக்கள் மனிதர்களில்லையா? இது தானா அந்த புதிய உலக ஒழுங்குமுறை? ஆதிக்கமே உன் வேர் தான் எங்கே? மனிதகுலத்தின் முதல் எதிரி ஆதிக்கம்! பயங்கரவாதம் பிறப்பதும் ஆதிக்கமனங்களிலிருந்து தான்! அது அமெரிக்காவிற்கும் பொருந்தும்!

விடுதலையை மட்டும் திருப்பி தந்துவிடு!

நிச்சயமற்ற பொழுதில்
பதுங்கு குழியில் பதறும் - என்
நெஞ்சம் - பேரழிவே!
நீ தான் விடுதலையா?
பிணம்தின்னி கழுகின்
கொடிய அலகிலிருந்து
பாம்பின் நச்சு பற்களில் - எங்கள்
எதிர்காலம்!

விடியலைத் தேடி
விம்மி அழுத
நெஞ்சம் – படைகளை
கண்டு பதறுகிறது!
கனகுண்டுகளை கண்டு
கணங்கள் உறைகிறது...

கண் விழித்து பார்க்கும்
போதெல்லாம்
உலங்கு வானூர்திகளும்
கனல் குண்டுகளும்…

கனவில் கூட
புதைகுழிகள்...
பேரழிவே!
உன் பெயர் தான்
சுதந்திரமா?

அழிவே எங்கள்
தாயகத்தின்
தேச அடையாளமாய்...
ஆயுதங்கள் மட்டுமா
பேரழிவு? - உந்தன்
தடைகளில் மடிந்தவர்
எதனால்....?

உனக்கும், அவனுக்கும்
வேறுபாடென்ன?
ஆடிப்படையில் கொள்கை
ஒன்று தானே!
மரணம்
மரணத்தை நிறுத்துமா?
பேரழிவாளன்
அழிவை
தடுக்க முடியுமா?

கருப்பு தங்கம் மீதினில்
கதற வைத்த
காலதேவனே - வந்துவிடு
அழிந்த - எந்தன்
மழலை வேண்டாம்...
விடுதலையை மட்டும்
திருப்பி தந்துவிடு!


திரு

ஆடு தீண்டலாம் மாடு தீண்டலாம் நாங்க

தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையை இன்னும் உணராமல் சாதி ஆதிக்கம் பேசி, அவர்களது வாழ்வை இந்துத்துவ வலையில் சிக்க வைக்கிறவர்கள் கேட்க வேண்டிய பாடல். இன்னுமா நாங்களெல்லாம் இந்துக்கள்?

சாதி ஆதிக்கத்தில் ஊறி வளர்ந்த மனங்களுக்கு அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வு, வேதனை, கலை, இசை, மொழி, வழிபாட்டுமுறை புரிவது கடினமானது தான். RSS, சங்பரிவார கும்பலின் பார்வையில் எல்லோரும் இந்துக்கள்! ஆடு மாடு கூட தொடலாம்; ஆனால் சக மனிதன் தொட்டால் தீட்டு! பசுவை தெய்வமாக வழிபாடும் சக மனிதனுக்கு அடிமைத்தனமும், அவமானமும்! இந்துக்களே ஒன்று படுங்கள்!!

எதற்கு? எல்லோருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, நிலம், அதிகாரம் என உரிமைகளை சமூகநீதியுடன் பகிர்ந்து கொடுக்கவா?

கேளூங்கள் இந்த பாடலை http://www.acidplanet.com/artist.asp?PID=868449&T=2876

Friday, September 01, 2006

குமாரசாமியின் தோற்றப்பிழை

இட்லிவடையின் http://idlyvadai.blogspot.com/2006/09/8.html பதிவில் தமிழ்நேசன் என்கிற குமாரசாமி (எது உண்மை பெயர் தெரியவில்லை) என்பவர் பதிந்த பின்னூட்டத்தின் விளைவாக இந்த பதிவு. பொதுநலன் கருதியதாக அவர் எழுதியிருக்கும் பின்னூட்டத்தில் அவருக்கு தெரிந்தோ தெரியாமலோ பக்க சார்புதன்மையையும், பார்ப்பனீயத்தை எதிர்ப்பவர்களையும், பெரியார் கருத்துக்களையும் ஆபாசமாக சித்தரிக்க முற்பட்டிருக்கிறார்.

அவரது பின்னூட்டம் அடைப்புகளுக்குள் காணலாம். மற்றவை எனது பதில்.

//குமாரசாமி a dit...
பொது வேண்டுகோள்

தமிழ் மணம், மணம் வீசவில்லை.

வரவர அழுகல் நாற்றமடிக்க ஆரம்பித்து விட்டது

சில மேன்மைக்குரிய பதிவாளர்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைக் கடித்துக் குதறிக்கொண்டிருக்கிறார்கள்//


ஆண்டாண்டுகாலமாக அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகள் பற்றி விவாதிக்கிற வேளைகளில் நாற்றமடிக்கிறது என்றால் அந்த அவலத்தை அனுபவிக்கும் வேதனை மிக்க மனிதர்களது வாழ்வு எப்படி இருக்கும்? பார்ப்பனீயத்தை, அதன் கருத்தியலை, அதன் தாக்கத்தை கண்டிக்கிற வேளைகளில் பார்ப்பன இனத்தில் பிறந்த எல்லோரையும் தாக்குவதாக ஏன் எடுத்துக்கொள்ளவேண்டும்? ஆதிக்க சாதியில் பிறந்தும் இந்த நாட்டில் சமூகநீதிக்காக உழைத்த இன்னும் உழைக்கிற நல்லவர்கள் இருக்கிறார்கள். அடக்கப்பட்ட சாதிகளில் பிறந்தும் தனது சக மனிதனை அடக்க துடிக்கிறவர்களும் இருக்கிறார்கள். இதில் எந்த மாறுபாடும் இல்லை. இதெல்லாம் விதிவிலக்குகள். விதிவிலக்குகள் விதியாகுமா? தமிழ்மணத்தில் வருகிற பெரும்பான்மையான விவாதங்கள் ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்த எல்லோரையும் தாக்குவது நோக்கமல்ல. அப்படி ஒரு தோற்றப்பிழையை உருவாக்க முயலாதீர்கள் என அன்புடன் வேண்டுகிறேன்.

பார்ப்பனீயத்தை ஏன் குறிவைத்து பதிவுகள் வருகின்றன ? சாதீய ஒடுக்குமுறையும் அதில் இந்துமதம் எப்படியெல்லாம் பங்காற்றுகிறது என்பது பற்றிய விவாதங்களை திசைதிருப்புவது யார்? விமர்சனங்கள் வருகிற வேளைகளில், கிண்டலும் குதர்க்கமுமாக கேலிபேசுவதும், ஆதாரங்களை மறுப்பதை விட்டு விட்டு பிற இனத்தவரை வசைபாடுவது எதனால் ? மனிதர்களை நாயை விட கேவலமாக நடத்தும் மனுநீதியின் கேவலம் அம்பலப்படும் வேளைகளில் ஆவேசமடைவது யார் ? சக மனிதர்களை நாய் பேய் கவிதைகள் புனைந்து தான் தேவலோக த்து மைந்தர்களாக நடந்துகொள்வது யார் ? அநீதிகளை ஒப்புக்கொள்வது அதை திருத்தி மறுசீரமைக்க முதல் படியாக அமையும், வார்த்தைகளால் அதை பூசி மொழுகுவது அநீதிகள் தொடர உதவும். இது பெரியார் வ்ழியினர் உட்பட அனைவருக்கும் பொருந்தும்.

//அவர்கள் நினைக்கும் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் - அதாவது அவர்கள் மொழியில் பூஜை, புனஸ்காரம் என்று இருப்பவர்கள் அந்த சமூகத்தில் 10% பேர்கள்தான். மற்றவர்கள் எல்லாம் (90%) நன்றாகப் படித்து நல்ல வேலைகளில், நல்ல நிலைமையில் இருக்கிறார்கள்//

படித்து நல்ல வேலையில் இருபதால் ஒருவர் சக மனிதனை மனிதனாக மதித்து அவனது உரிமைகளை ஆச்சாரங்கள், ஆகமங்கள் என்ற பொய்யன சாக்குகளில் மிதிக்கமாட்டார் என்கிறீர்களா ? ஆதிக்க சாதியினரின் அதிகாரம் ஆட்டம் காண்கிற வேளைகளில் பதட்டமான பதிவுகளை வலையேற்றி வக்கிரமாக சந்தோசப்படும் அதிகம் படித்து வெளிநாடுகளில் உயர் நிறுவனங்களில் வேலை செய்பவர்களை, இலக்கிய வியாதிகளை என்ன என்பது ? படிப்பிற்கும் பண்பாட்டிற்கும் சம்பந்தமிருக்கிறதா? இதை நினைக்கையில் ஒரு நடந்த சம்பவம் நெஞ்சை உறுத்துகிறது.

தமிழகத்தின் நெற்கிடங்கு என போற்றப்பட்ட தஞ்சை மாவட்டத்தின் கீழவெண்மணி என்கிற கிராமத்தில் 1968ல் டிசம்பர் 25ம் நாள் நள்ளிரவில் 40 விவசாயிகளைன் குடும்பங்களை உயிருடன் வீட்டில் வைத்து தீவைத்து கொழுத்தினார்கள். கொல்லப்பட்டது கூலி விவசாயிகளான சாதி அடிமைகள். கொன்றவர்கள் ஆதிக்க சாதியினர். எதற்காக? அரைப்படி நெல் கூலி அதிகமாக கேட்டு போராடியதற்காக ஆண்டைகள் கொடுத்த தண்டனை அது. இந்த கொடுங்குற்றம் நீதிமன்ற வழக்கானது. நீதி வழங்கியவர்கள் குறிப்பிட்ட செய்தியும் உங்களது வார்தைகளும் ஏனோ ஒத்து போகிறது. “குற்றம் சாட்டபட்டவர்கள் சமூகத்தில் அந்தஸ்தானவர்கள் என்பதால் இவர்கள் இப்படிப்பட்ட குற்றம் செய்ய வாய்ப்பிலை என நீதிமன்றம் கருதுகிறது. ஆகவே அவர்களை விடுதலை செய்தும், பொய்குற்றம் சுமத்தியதற்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை" என தீர்ப்பு வழங்கியது. நம் நீதி நியாயம் பேசும் தன்மை எதிலிருந்து பிறக்கிறது என்ற வேடிக்கையை பாருங்கள். படித்தவன், உயர் பதவியில் இருப்பவன், வெளிநாட்டில் உயர் அந்தஸ்தில் இருப்பவன் சாதிவெறியில் இல்லை என்பது உண்மையா? இல்லை இது ஒரு தோற்றப்பிழையே.

//அரசு படிப்பதற்கு, வேலைகளுக்கு என்று கோட்டா வைத்து அவர்களை ஓரங்கட்டியபோதும் அவர்கள் உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் ஒட்டு மொத்தமாக அந்த சமூகத்தைச் சாடுவதில், குப்பைகளைக் கொட்டுவதில் எந்தப் பயனும் இல்லை. சூரியனைப் பார்த்து நாய் குறைப்பதைப் போன்றதாகும் அப்படிப்பட்ட செயல்கள்//

படிப்பதற்கும் வேலைக்கும் இட ஒதுக்கீடு ஏன் ஏற்படுத்தவேண்டிய நிலை இந்தியாவில் ஏற்பட்டது? அந்த அடிப்படை காரணத்தை அறிந்து சக வலைப்பதிவாளர்களுக்கு சொல்லுங்களேன். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் இடஒதுக்கீட்டின் பின்னரும் இந்தியாவின் கிராமங்களில், நகரங்களில் படிப்பில், வேலையில் முன்னேற முடியாத முட்டுக்கட்டைகள் இருக்கிறது என்ற பேருண்மையை இந்தியாவில் சென்று மக்களின் வாழ்வை நேரடியாக கண்டுணர்ந்து தெரிந்துகொள்ளுங்கள். ஓரங்கட்டப்பட்டது அடிமைப்படுத்தப்பட்ட சாதியினரே தவிர ஓரங்கட்டி வைத்திருப்பது ஆதிக்க சாதியினரை அல்ல. இது தான் கண்கூடான உண்மை. இட ஒதுக்கீடு மட்டும் இல்லாத இந்தியா எப்படியிருக்கும்? முடவர், விழியிழந்தோர், உடல் வலுவானவர், நோயாளி என அனைவரையும் ஒரே ஓட்டப்பந்தயத்தில் வைத்து ஓட விட்டு போட்டி நடத்துவது போன்றது. இட ஒதுக்கீடு நோயினால் வாடும் குழந்தைக்கு அதிகம் சத்தான உணவு வழங்கி சமசீர் நிலைக்கு கொண்டுவருவது போன்றது. இதனால் மற்றவர்களை பட்டினியால் வாட சொல்லவில்லை.

//முதலில் எழுதுபவர்கள் தங்களுடைய நிலைமையை உணரவேண்டும். அவர்கள் மீது குப்பைகளை கொட்டும் அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தார்கள்? அதற்குத் தமிழ் மணம்தான் கிடைத்ததா? வேறு ஊடகங்களே இல்லையா?

பெரியார் மீது இவர்களுக்குக் காதலென்றால் - அவருடைய கருத்துக்களை மக்களுக்குக் கொண்டு போகவேண்டு மென்றால் - அதை மட்டும் எழுதட்டும்//

எதை எழுதுவது எப்படி எழுதுவது என்பதை தீர்மானிப்பது சமூக, அரசியல், பொருளாதார, கலாச்சார சூழல்களும் அதன் காரணங்களும். எழுதுவதற்கான அதிகாரத்தை தருவது சமூகத்தின் அவலங்களும் அடக்குமுறைகளும் அதை ஆதரிப்பவர்களுமே என நம்புகிறேன். தமிழ்மணம் வலைப்பூக்களின் திரட்டி, அந்த விதத்தில் அதன் விதிகளுக்குட்பட்ட பதிவுகளே அனுமதிக்கப்படுகின்றன. தமிழ்மணம் கருத்து சுதந்திரத்தை நம்பி அனுமதிக்கிறது என அறிகிறேன். அந்த விதத்தில் பிடிக்காத விவாதங்களை படிக்காமல் இருப்பது நல்லது. பிடித்தவர்கள் படித்து தங்களது சொந்த அறிவால் தெளிவடையட்டும். குறிப்பிட்ட விதமான கருத்துக்களை மட்டுமே எழுதவேண்டும் என கட்டளையிட யாருக்கும் அனுமதியில்லை. பலர் தங்களது மிக அரிய சிறப்பான எண்ணங்களை, போராட்டங்களை, அனுபவங்களை, திறமைகளை, (உண்மையான) ஆன்மீக சிந்தனைகளை வலைப்பூக்களில் பகிர்ந்து வருகின்றனர். இருந்தாலும் வலைப்பூக்களில் வருகிறவை எல்லாம் உண்மை என சொல்வதற்கில்லை. பொய்யான வரலாற்று திணித்தல், மதவெறி, சாதிவெறியை கட்டிக்காத்தல், கலாச்சார காவல், காழ்ப்புணர்வு என கலவையாக கிடக்கிறது. ஆபசமான பதிவுகளை தமிழ்மணத்திற்கு தெரிவிக்கும் நடைமுரையும் இருக்கிறது. அதன் மீது தமிழ்மணம் நடவடிக்கை எடுக்கும் என உறுதியும் வழங்கியிருக்கிறது. இதில் தமிழ்மணத்தை குறை சொல்வதற்கில்லை. ஒட்டுமொத்தமாக பெரியார் கருத்துக்களை எழுதுவதோ, பார்ப்பனீயத்தை வெளிப்படுத்துவதோ ஆபாசம் என்பதா? இது கண்டிக்கப்பட வேண்டிய தோற்றப்பிழை.

//இப்படிக் காறி உமிழ்ந்துகொண்டே இருப்பதற்கும்,
தொண்டை வரண்டு போகும் அளவிற்கு விடாது குறைப்பதற்கும்தான் பெரியார் இவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டுப்போனாரா? இப்படி இவர்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தால் என்னைப் போன்ற பெரியார் கொள்கையில் பிடிப்பு உள்ளவர்களும், அந்த இயக்கத்தை விட்டு விலக நேரிடும்//

சமூக அவலங்களை கருத்துக்களால் விவாதிப்பதும், வெளிச்சத்துக்கு கொண்டு வருவதும் குரைப்பதாக கருதினால் குரைப்பது கடமையாக இருக்கட்டும். அடக்குமுறையாளர்களையும் அவர்களது கருத்துக்களையும் பார்த்து குரைப்பதால் விடியல் பிறக்கட்டும். பெரியார் இந்த பணியை தான் செய்து பார்ப்பனீய ஆதிக்க கட்டமைப்பை தகர்க்க துவங்கினார். இன்னும் அந்த பணி முழுமை பெறாமையால் தொடரவேண்டிய பாதை நீண்டது. அய்யா பெரியார் விட்ட பணியை அவரவர் சொந்த அறிவில் பகுத்தறிந்து சிந்தித்து இன்றைய காலச்சூழலுக்கு ஏற்ப தொடர்வது சமூகக்கடமை. இந்த சமூகப்பணி தங்களது சொந்த விருப்பங்களுக்கு எதிரானால் இயக்கத்தை விட்டு விலகுவோம் என பூச்சாண்டி காட்டுவதால் சமூக சீர்திருத்த பணிகள் நின்றுவிடுவதில்லை. பெரியார் தான் உருவாக்கிய இயக்கத்தில் யாரையும் அதிகார அடக்குமுறையில் பிடித்து வைத்தவர் அல்ல. உண்மையான பெரியார் உணர்வாளர்களுக்கு இது தெரியும்.

//படித்து, நல்ல நிறுவனங்களில் வேலை பார்க்கும் இவர்கள் இப்படித் தமிழ் மணத்தில் கத்தி (ச்) சண்டை போட்டுக்கொண்டிருப்பது இவர்களுடைய நிறுவன உயர் அதிகாரிகளுக்குத் தெரியுமா?
தங்கள் புகைப்படம், அலுவலக முகவரியுடன் தங்கள் எழுத்துக்களைப் பதிவு செய்யும் தைரியம் இவர்களுக்கு ஏன் இல்லை? //

நானும் இதையே இந்த பின்னூட்டம் இட்ட நபருக்கும் அவர் ஆதரவு தெரிவித்து குறிப்பிடுகிற நபர்களுக்கும் முன் வைக்கிறேன். பின்னூட்டத்தை பதிந்த குமாரசாமி தனது பெயர் தமிழ்நேசனா இல்லை குமாரசாமியா என்பதில் குழப்பம் அப்படி இருக்கையில் பிறரை கேட்க என்ன தகுதியிருக்கிறது? முகமூடிகளை கழைந்து எல்லோரும் தங்களது சொந்த அடையாளங்களை முன் வைக்கட்டும் அப்போது தானாக வெளிப்படைத்தன்மை வரும். சொந்த அடையாளங்கள் பற்றிய கேள்விகள் எழுந்த வேளைகளில் பலர் புனை பெயரில் எழுத காரணம் ஏன் என விளக்கமிட்டுள்ளார்கள்.

//அந்த துணிச்சலைப் பெரியார் இவர்களுக்குக் கொடுத்துவிட்டுப் போகவில்லையா? ஆகவே இவர்கள் திருந்த வேண்டும்! இவர்களின் ஆபாச எழுத்துக்கள் தமிழ் மணத்தில் தடை செய்யப்பட வேண்டும்

இல்லை என்றால் கண்ணியமாக எழுத & படிக்க விரும்பும் வாசகர்கள் தமிழ் மணத்தை இவர்களுக்குப் பட்டா போட்டுக் கொடுத்து விட்டு வேறு ஊடகங்களுக்குப் போக வேண்டியதுதான்//

பெரியார் எல்லா தைரியத்தையும் தந்திருக்கிறார். ஆபாச எழுத்துக்களை எழுதுவது யாராக இருப்பினும் கண்டிக்கபட வேண்டியவர்கள். அப்படிப்பட்ட செயல்கள் தடுக்கப்பட வேண்டும். பெரியார் கொள்கைகள் பேசி எழுதுவது ஆபாசம் என்ற தோற்றப்பிழையை உருவாக்கினால் இந்த அறிவை என்ன என்பது ? எனது பதிவுகளில் வந்த ஆபாசம் கலந்த பின்னூட்டங்களை அனுமதிக்கமல் வந்திருக்கிறேன், இன்னும் அதையே செய்வேன் இது யாரையும் திருப்திப்படுத்த அல்ல, எழுத்தில் நேர்மையையும், பண்பையும் கடைபிடிக்கும் தன்மை.

//எந்த சமூகத்திற்குத்தான் தன் சாதிப்பெருமை இல்லை? மருத்துவர் அய்யா கட்சிக்காரர்கள் வன்னியரைத்தவிர மற்றவர்கள் அன்னியர் என்கிறார்களே - அவர்களை எதிர்த்து எழுதும் துணிவு உண்டா இவர்களுக்கு, கொங்கு வேளாளர் பேரவை, முக்குலத்தோர் பேரவை என்று மாவட்டத்திற்கு ஒரு சாதி , இனச் சங்கம் தலை துக்க்கிக் கொடி பிடித்துக் கொண்டு இருக்கவில்லையா? அவர்களை எதிர்த்து எழுதும் துணிவு உண்டா இவர்களுக்கு. //

எந்த சாதி ஆதிக்கம் செலுத்தினாலும் எழுதப்படல் வேண்டும், அவை சமூகத்தின் சாளரங்களில் வெளிச்சத்திற்கு வரும் வேலைகளில் மட்டுமே ஆதிக்கத் தன்மை மறையும். அந்த விதத்தில் எழுத்தாளர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் மிகப்பெரிய கடமையுண்டு. ஆதிக்கம் யார் செய்தாலும் கண்டிக்கும் துணிவு பெரியார் வழியை உண்மையாக கடைபிடிப்பபவர்களுக்கு உண்டு.

//ஆகவே சாதி இனச் சண்டைகள் நமக்கு வேண்டாம் (வலைப் பதிவாளர்களுக்கு) எழுத்தாளன் என்றாலே எல்லோருக்கும் பொதுவானவன். ஆகவே சாதிகளை மறந்து மனிதர்களை நேசிப்போம். மனிதநேயத்தோடு மட்டும் இருப்போம். //

எல்லோருக்கும் இந்த கருத்துக்கள் பொருத்தமானது. அனைவரும் சமம், வீதியில், சமூக அமைப்பில், கோயிலில்.... என எல்லா இடங்களிலும் அனைவரும் பிறப்பால் சமமானவர்கள். உயர்குலம், தாழ்ந்த குலம் என பிறப்பில் இல்லை என்பதை நடைமுறையாக்குவோம். இதை மறுக்கிற கொள்கை, மதங்களை மறுசீரமைப்போம். அப்போது இந்த மனிதநேய கனவு மெய்படும்.

//இனிமேலாவது அறிஞர் திரு.C.N.அண்ணாதுரை அவர்கள் சொல்லிக்கொடுத்த கண்ணியத்தோடு அனைவரும் எழுதுவோம்! //

அய்யாவும் அண்ணாவும் தந்த கண்ணியத்தில் தான் எழுதுகிறோம். அண்ணா ஆரியமாயை எழுதி விழிப்புணர்வு தந்தவர். முடிந்தால் யாராவது ஆரியமாயை பற்றியும் வலையேற்றுவார்கள். கிடைக்கும் போது தவறாமல் படிக்கவேண்டிய நல்ல புத்தகம் அது.

//இவர்கள் திருந்தவில்லை என்றால் - தமிழ் மணம், ஆபாச எழுத்துக்களுக்குப் பதிலடியாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கைகளைக் கட்டிகொண்டு தொடர்ந்து வேடிக்கை பார்க்கும் என்றால் தமிழ் மணத்தை விட்டு வெளியேறுவோம். //

வெளியேறுவது அவரவரது விருப்பம் சார்ந்தது. ஆபாசத்தை அனைவரும் வெறுக்கவேண்டியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, ஆபாசத்திற்கு தமிழ்மணத்தில் வேலையில்லை. பார்ப்பனீயத்தை எதிர்ப்பது ஆபாசம் என்றால், பார்ப்பனீயம் ஆபாசமானதா?

//நான் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவனல்ல - அதை
நினைவில் வைத்துக்கொண்டு முதல்வரியில் இருந்து
மீண்டுமொரு முறை அனைவரும் படியுங்கள் //

யார் எந்த சாதி என்பதில் தனிப்பட்ட முறையில் எனக்கு கவலையில்லை. பார்ப்பனர் என்று குறிப்பிடுகிற சாதியில் பிறந்த எல்லோரையும் திட்டுவது வேறு, பார்ப்பனீயத்தை கடைபிடிப்பவர்களை வெளிப்படுத்துவது வேறு. பார்ப்பனர் என்ற் சாதியில் மட்டுமல்ல பிற சாதிகளிலும் சாதிவெறியர்கள், மதவெறியர்கள் இருக்கிறார்கள். இது பார்ப்பனீயம் என்கிற கருத்தியலின் தாக்கமும் அது இந்து மதத்தில் அடிப்படையான கட்டமைப்பை கொண்டதன் விளைவு. இந்த சாதி வ்எறி என்கிற தொற்றுவியாதி சாதி அடுக்குகளில் தொடர்கிறது.

நான் எந்த சாதியையும் சாராதவன். பார்ப்பன சாதி என்று சொல்லப்படுவதில் பிறந்த மனதிற்கினிய நல்ல குணம் படைத்த மனிதர்கள் பலர் நட்பும் உறவும் கொண்டவன் நான். அவர்களை மனிதர்களாக சமமாக மதிக்கிறேன். பார்ப்பனீய ஆதிக்க கருத்தியல் கொள்பவர் யாராக இருப்பினும் அவர்களது கருத்தியலை (நபர்களையல்ல) எதிர்க்கிறேன். நான் எல்லா உரிமையும் நிறைந்த மனிதன்! எல்லா அடையாளங்களையும் விட மனிதன் என்பதில் பெருமையடைகிறேன், பொறுமையாக படித்து சிந்தித்து தான் இந்த பதிலை எழுதியுள்ளேன்.

மனிதனை மனிதனாக சம உரிமையுடன் மதிக்கும் நிலை உருவாகட்டும், வீதி முதல் கோயில் வரையும் எல்லா இடங்களிலும் அனைவருக்கும் சமஉரிமை கிடைக்கட்டும். பிறப்பில் யாரும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் இல்லை என்பதை நிறுவுவோம். அதை மறுப்பவற்றை கழைவோம். அதுவரை பெரியார் கருத்துக்களும் பார்ப்பனீய, சாதி, மதவெறி எதிர்ப்பும் தொடரட்டும்.

திரு