Tuesday, November 09, 2010

மாமிசத்தை புசித்து இரத்தத்தை பருகுபவன்


ஆதிநகரக் குடிகளை
நவபாணங்களில்
எரித்துக் கொன்ற
இந்திரனுக்காக
நகர்களும்
தேர்களும்,
தெருக்களும்,
மாடங்களும், மரங்களும்
நவீனம் பூசிக்கொண்டன.

அவன் வருகைக்காக
மண்டையோடுகளும்
எலும்புத் துண்டுகளும்
கோர்த்து
நவசாமிகள் மந்தரித்த
மாலையுடன்
காத்திருந்த இவனோ
முன்பிருந்து
காடுகளில்
நகர்களில்
நாடுகளில்
ஆதிக்குடிகளை
வேட்டையாடி
அகதிகளாக்கி கொன்ற
இந்திரனின் பிள்ளை.

அவன்
"வறுமையையும், நோயையும்
விரட்டுகிற வல்லமை
உனக்குள்ளது" என்றான்.
இவன் விரட்டியடிப்பதில்
வல்லவன் தான்.

நகரங்களின் தெருக்களில்
விரட்டியடிக்கப்பட்ட பிச்சைக்காரர்களும்
இடிந்த கட்டிட வனாந்தரங்களில்
அநாதரவாக அடைக்கப்பட்ட
பெண்களும், பசிக்கு அழுத குழந்தைகளும்
காடுகளுக்குள் சுட்டு கழிகளில்
இவன் கட்டியிழுத்த
ஆதிக்குடி மக்களும்
கிழக்கு தீவில்
இவனது பாணங்களால்
எரிக்கப்பட்ட ஆதிநிலமும்
இவனது வல்லமையின்
அடையாளங்கள்.

எசமானைப் போன்று
வறியவர்களை
நோயாளிகளை
குழந்தைகளை
எளியவர்களை
கொன்று
மாமிசத்தை புசித்து
இரத்தத்தை பருகுபவன் இவன்.