Sunday, May 31, 2009

திரை கடலோடியும் துயரம் தேடு - உயிரோசை விமர்சனம்

அயல்நாடுகளுக்கு வேலைக்காகப் புலம்பெயர்ந்து செல்லும் போக்கு அதிகரித்துவருகிறது. திரவியம்தேடி வளைகுடா நாடுகளுக்கும், தென்கிழக்காசிய அல்லது ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்லும் இந்தியர்களும், பிற மூன்றாம் உலக நாட்டுத் தொழிலாளர்களும் படும் துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

மனிதக் கடத்தலுக்குள்ளாகும் மனிதர்களின் சோகம் நெஞ்சை உலுக்கக்கூடியது. வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்லும் பெண்களின் துயரம் கொடூரமானது. புலம் பெயரும் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டித்தான் நவீன நாகரிகங்கள் செழித்துக் கொண்டிருக்கின்றன. அக்கரைப்பச்சை தேடிச் சென்றோரில் பலர், வாழ்வைத் தொலைத்துவிட்டார்கள்.

புலம்பெயரும்போது பயண ஒழுங்குமுறைகளில் சந்திக்கிற நெருக்கடிகள், குடிபெயர்வு நடைமுறைகளைக் கடந்து செல்ல பயணமுகவர்களின் சேவையைப் பயன்படுத்தும்போது ஆபத்தான மனிதக் கடத்தல் சூழலில் சிக்குவது, ஏமாற்றத்திற்குள்ளாகி ஆவணங்களில்லாமல் சிறைகளில் வாடுவது ஆகிய வேதனை மிக்க பகுதிகளை பலரது அனுபவங்களிலிருந்து விளக்கமாக இந்நூல் அலசுகிறது.

பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஏற்படுத்த அரசுகளும், தொழிற்சங்கங்களும், மனித உரிமை அமைப்புகளும், புலம்பெயரும் தொழிலாளர்களும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய ஆய்வு மற்றும் சில ஆலோசனைகளை இந்நூலில் காணலாம்.

கடந்த பத்தாண்டுகளாக தொழிலாளர் உரிமைகளுக்கான இயக்கப் பணிகளில் ஈடுபட்டுவரும் யோ.திருவள்ளுவர் இந்தக் கொடுமைகளும் துன்பங்களும் உழலும் உலகத்தை அறிமுகப்படுத்துகிறார். பல நாடுகளுக்கு ஆய்வுக்காகச் சென்று வந்த அவர், அந்த அனுபவங்களை நூல்வடிவில் தொகுத்துள்ளார். இந்தப் பிரச்சினைக்கான மூல காரணங்களையும், பிரச்சினையின் பல முகங்களையும் சித்தரிக்கும் திருவள்ளுவர், அதற்கான தீர்வுகளையும் முன்மொழிகிறார்.

உயிரோசை, இதழ்-37. May, 2009

Saturday, May 23, 2009

ஈழம்: நாங்கள் கொலைகாரர்கள்! - இறுதிப் பாகம்


அமெரிக்காவின் நட்பு நாடான பாகிஸ்தான் இருந்து வந்தது. 1990களின் உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கையில் துவங்கி ஜார்ஜ் புஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் ராணுவ ஒப்பந்தம் மற்றும் அணுசக்தி ஒப்பந்தங்கள் வழியாக அமெரிக்காவின் நிலையான நண்பனாக இந்தியா மாறியிருக்கிறது. அமெரிக்கா மற்றும் இதர மேற்குலக நாடுகளுக்கு ஆசியாவில் நிரந்தரமாக பலமுள்ள நட்பு சக்தியாக சீனாவை எதிர்கொள்ள இந்தியா அவசியம். பொருளாதார ரீதியாக இந்தியாவின் சந்தை, உற்பத்தி, குறைந்த ஊதியத்திற்கு உழைக்க காத்திருக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களின் மனித வளம், இயற்கை வளங்கள் அனைத்தும் மேற்குலகிற்கு அனுகூலமானவை. சமாதான முயற்சியில் மூன்றாம் தரப்பாக செயல்பட்ட நோர்வே நாட்டின் முதலீடுகள் இந்தியாவில் (நிறுவனங்களின் பட்டியல் விபரங்கள்: http://www.norwayemb.org.in/business/busind/database.htm) உள்ளன. சிறீலங்காவுக்கு ஆயுதங்களை கொடுத்து தமிழ்மக்களது தாயகநிலம், அரசியல் உரிமைகள், போராளி இயக்கங்கள் ஆகியவற்றுக்கு எதிரான இந்தியாவின் திட்டத்திற்கும் அடிப்படை காரணம் இலங்கையில் இந்திய முதலாளிகளின் முதலீடுகள். உலகமயமாக்கல் பொருளாதாரச் சுரண்டல் பரஸ்பரம் புரிதலுடன் ஏகாதிபத்தியங்களும், பிராந்திய வல்லரசுகளும் தேசிய இனங்களையும், அரசியல் உரிமைப் போராட்டங்களையும் அழிக்க ‘பயங்கரவாத’ அரசியலையும், ‘மனிதாபிமான’ வேடத்தையும், ‘சமாதானப் பேச்சுக்களையும்’ பயன்படுத்துகிறது. ஈழம் இன்று நமக்கு தரும் பாடமிது.

புலம்பெயர் நாடுகளில் தமிழ்மக்கள் போராட்டங்கள் எழுச்சி பெற்ற பிறகு வேறுவழியில்லாமல் மேற்குலக நாடுகள் சிறீலங்கா மீதான கண்டனங்களை தெரிவிக்க துவங்கின. அவை செயலாக வடிவம் பெறவதும் தமிழர்களின் தொடர்ச்சியான போராட்டப் பாதையிலிருக்கிறது. தமிழ்மக்களின் போராட்டம் சிறீலங்கா, சீனா, ரஷ்யா ஆகியவற்றின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் வேளையில் இந்தியாவின் நயவஞ்சக நாடகங்களையும் எதிர்கொள்ளும் நிலைக்கு ஆளாகியிருக்கிறது.

இந்திய அதிகாரவர்க்கத்தின் குரல்கள் நம்பியார் சகோதர்கள். விஜய் நம்பியாரின் இலங்கைக்கான முதல் பயணம் முடிந்த சில நாட்களில் சதீஸ் நம்பியாரின் இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை வெளிவந்தது கவனிக்க வேண்டியது. இந்திய வெளியுறவுக் கொள்கையின் முகம் நம்பியார் சகோதர்கள். வன்னியில் தமிழ்மக்கள் மீது பாரபட்சமில்லாது பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்தி போர்க்குற்றங்களையும், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களையும் மகிந்தா ராஜபக்சே அரசு செய்திருக்கிறது. மகிந்தாவின் அரசுக்கு சகலவிதங்களிலும் உதவிய இந்தியாவின் அதிகாரிகள் எவரையும் இலங்கை விவகாரங்களில் ஈடுபடுத்துவது மனித உரிமைக்கு எதிரான குற்றங்களுக்கும், அநீதிக்கும் துணை போகும். இந்தியாவின் கைகளில் பல ஆயிரம் தமிழர்களை கொன்றொழித்து, ஈழத்தை கந்தகபூமியாக மாற்றிய இரத்தக்கறை படிந்துள்ளது.

வெளியுறவுக் கொள்கையும், அதிகாரவர்க்கத்தின் மனப்பாங்கும் மாறும் வரையில் ஈழத்தமிழர்களுக்கு அரசியல் உரிமைகளை பெற்றுத் தர இந்தியா நேர்மையான பங்கு வகிக்க முடியாது. குறைந்தபட்சம் ஒரு நல்ல மூன்றாம் தரப்பு நாடாக கூட செயல்பட முடியாது. இந்தியாவின் பூகோள அரசியல் மட்டுமல்ல; சமூக, அரசியலும் ஈழத்தமிழர்களுக்கு எதிராக உள்ளது. இந்திய அதிகார வர்க்கத்தையும், அரசியல்வாதிகளையும் ஈழத்தமிழர்கள் இனியும் நம்ப முடியுமா?

-முற்றும்-

குறிப்பு: இந்தியா, ஐ.நா, மேற்குலகம் தொடர்பான அதிகாரவர்க்கத்தின் பார்வையை கூர்மைப்படுத்துவதற்காக இந்த பதிவுகள். இந்திய முதலாளித்துவம் மற்றும் பார்ப்பனீயத்தின் பங்கை இக்கட்டுரை தொடவில்லை.

ஈழம்: நாங்கள் கொலைகாரர்கள்!-பாகம்4

சதீஸ் நம்பியார் சிறீலங்காவின் சமாதான முயற்சிகள் சம்பந்தமான விசயத்தில் நுழைந்தது தற்செயலாக நடந்த ஒன்றல்ல. மனிதாபிமான பிரச்சனைகளை கவனத்தில் எடுத்து ராணுவத்தின் ‘உயர்பாதுகாப்பு வலையங்களை’ அப்புறப்படுத்துவது பற்றிய பரிந்துரைக்கு, உடன்பட வேண்டுமானால் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை கழைதல் வேண்டுமென்று வரைவு அறிக்கையில் குறிப்பிட்டார். விடுதலைப்புலிகளின் எதிர்ப்பு வந்ததும் இறுதி அறிக்கையில் ‘நீண்ட தூர ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பிற்குள் கட்டுப்படுத்த’ வேண்டுமென்று குறிப்பிட்டார். இந்திய ராணுவத்தின், அதிகாரிகளின் ஈடுபாடு தமிழர்கள் தரப்பில் சந்தேகத்தையும், நம்பிக்கையின்மையையும் உருவாக்குமென்று தெரிந்தும் சமாதான முயற்சிகளின் போது சிறீலங்கா லெப்.ஜெனரல். சதீஸ் நம்பியாரை அழைக்க என்ன காரணம்?

சதீஸ் நம்பியார் ‘உயர் பாதுகாப்பு வலையம்’ பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் கப்பல் சர்வதேச கடற்பரப்பில் தாக்கி அழிக்கப்பட்டன. இதற்கு இந்தியா நேரடியான உதவிகளை செய்ததாக ரணிலும், ஐ.தே.கட்சியும் பின்னர் ஒப்புக்கொண்டன. இந்தியாவின் செய்மதிகள் சிறீலங்கா கடற் பரப்பை 2002 முதல் கண்காணிக்க துவங்கியிருந்தன என்பதற்கு புலிகளின் கப்பல்கள் அழிக்கப்பட்ட நிகழ்வுகள் உதாரணம். சதீஷ் நம்பியார் 'பாதுகாப்பு வலையங்களிலிருந்து சிறீலங்கா படைகள் வெளியேற, புலிகளின் ஆயுதங்களை கழைய வேண்டும்' என்று பரிந்துரைத்த அறிக்கை ஜனவரி 2003 இறுதியில் கசிந்தது. விடுதலைப்புலிகள் தங்களது எதிர்ப்பை ஆன்ரன் பாலசிங்கம் வழியாக பதிவு செய்தார்கள். தொடர்ந்து 2003 ஏப்பிரல் இறுதியில் சதீஷ் நம்பியார் 'புலிகளின் நீண்ட தூர ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பிற்குள் வைத்திருக்க வேண்டும்' என்ற பரிந்துரையுடன் இறுதி அறிக்கையை ரணில் விக்கிரமசிங்கே அரசிடம் சமர்ப்பித்திருந்தார். பாராளுமன்றத்தில் அந்த அறிக்கை பற்றிய கேள்விகளுக்கு 'நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான ரகசியம்' என்று தெரிவித்தார் ரணில். விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தையிலிருந்து தற்காலிகமாக விலகிய போது 'உயர் பாதுகாப்பு வலையங்கள்' பிரச்சனையும் முக்கியமானது.

சதீஸ் நம்பியார் ஈழப் போராட்டத்தில் சிறீலங்கா அரசுக்கு நேரடியாக ஆலோசனை வழங்க ஆரம்பித்த போது யாழ்ப்பாணத்தில் சரத் பொன்சேகா ராணுவத் தளபதி. சிறீலங்கா ராணுவம் வன்னியில் தமிழ்மக்களை படுகொலை செய்த போது சரத் பொன்சேகாவை பாராட்டி சதீஸ் நம்பியார் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அக்கட்டுரையில் பேச்சுவார்த்தை முயற்சிகளின் போது ரணில் விக்கிரமசிங்கே விடுதலைப்புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்தியது பற்றியும் எழுதியிருக்கிறார்.

‘As someone who was briefly involved with the peace process in Sri Lanka in 2002-2003, I have already acknowledged the outstanding performance of the SLAF and the efforts of General Fonseka, a person I met on a number of occasions during my visits to Sri Lanka during 2002-2003 and developed great respect for, both as an individual and as a soldier. However, as a strategic analyst I would like to make the point that this military victory would not have been possible but for the bold initiatives of Prime Minister Ranil Wickremasinghe in 2002 in entering into a dialogue with the LTTE leadership under an umbrella provided by the Norwegians. The present dispensation in Colombo is unlikely to share with him the credit for what has been achieved today. But I have no doubt that when historians come to record the events of the day, Ranil will be lauded for having brought the LTTE leadership out of the jungle for talks in the exotic surroundings of Bangkok and Geneva. And, in the process, weakened the seemingly steely resolve of the cadres, leading in due course to a split in the movement. Karuna’s estrangement and the divorce of the LTTE cadres of the North-East and Eastern provinces from their fellow fighters in Jaffna and the Vanni have without doubt been a major factor in the success achieved by the SLAF.’
சமாதானப் பேச்சுக்கள், பேச்சுக்களின் போதான குழப்பங்கள், விடுதலைப்புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்தியது, புலிகளின் கப்பல்களை தாக்கி அழித்தது போன்ற எல்லாவற்றிலும் பின்னணியில் இந்தியா பங்கெடுத்தது. விடுதலைப்புலிகள் ‘சுயநிர்ணய உரிமையுடன் தமிழர் பகுதிகளுக்கான பிரதேச ஆட்சி’ ஒன்றுக்கு உடன்படும் நிலையில் இருந்தனர். அதற்கான சகிம்சைகள் செப்டெம்பர் 2002ல் வெளியான சூழலில் இலங்கை விவகாரத்தில் நுழைந்தவர் லெப்.ஜெனரல்.சதீஸ் நம்பியார். லெப்.ஜெனரல்.சதீஸ் நம்பியார் இந்தியா தமிழர்களுக்கு வழங்க இருக்கும் திட்டத்தை தனது பரிந்துரையாக முன்வைக்கிறார்.
The government of India would do well, together with international players like the US, UK and Japan among others, to ensure that the government of Sri Lanka is given full support, and provided all the assistance necessary to initiate appropriate political processes with the various Tamil groups in Sri Lanka to evolve a framework for devolution of power to the Tamil minority that takes into account the assurances given to the Tamils during the Norwegian sponsored peace process. In doing so it would no doubt be useful to replicate the arrangements that seem to have been arrived at with the Karuna faction in the Eastern and North Eastern provinces. Whatever the intricacies of that arrangement, it appears to have worked with a fair degree of success given the fact that elections have been conducted in those provinces and a representative local government is in place.[i]
கருணா குழுவை பயன்படுத்தி கிழக்குப் பகுதியில் வழங்கியது போன்ற தீர்வு ஒன்றை முன்வைக்கும் சதீஸ் நம்பியாரின் தம்பி விஜய் நம்பியார் எப்படி பாரபட்சமில்லாமல் செயல்படுவார்?

வன்னிப்படுகொலைகளை தடுத்து நிறுத்த மேற்குலக நாடுகள் தலையிடாமல் தடுக்கும் விதமாகவே இந்திய அதிகாரவர்க்கம் செயல்பட்டது. சிவசங்கர மேனன் அமெரிக்காவிற்கு பறந்ததும் அவ்வகை திட்டத்தின் ஒருபகுதி. துவக்கம் முதல் புலிகளின் ஆயுதங்கள், நிர்வாக கட்டமைப்பு, தலைமை ஆகியவற்றை குறிவைத்து இந்த படுகொலைகளுக்கு முழு அளவில் ஆதரவாக செயல்பட்டது இந்தியா. இந்தியாவை கடந்து தெற்காசியாவில் மேற்குலக நாடுகள் தலையிடுமா?

[i] Without the Tigers, Satish Nambiar Posted: Monday , Apr 27, 2009 at 0043 hrs IST http://www.indianexpress.com/news/without-the-tigers/451517/0

இக்கட்டுரையின் இறுதிப் பாகம் தொடர்கிறது...

ஈழம்: நாங்கள் கொலைகாரர்கள்! - பாகம்3


‘ஆயுதங்களை ஒப்படைத்தல்’, ‘போர் இடைநிறுத்தம்’, வன்னியிலிருந்து மக்களை ‘பாதுகாப்பாக வெளியேற்றுவது’ ஆகிய வார்த்தைகள் புதுடில்லியிலிருந்து முதலில் பரப்பப்பட்டன. பெப்ருவரி 2009 பாராளுமன்ற துவக்க உரையில் இந்திய குடியரசுத் தலைவர் இலங்கை பற்றி குறிப்பிட்டார்.

அவரது உரையில் “We are concerned at the plight of civilians internally displaced in Sri Lanka on account of escalation of the military conflict. We continue to support a negotiated political settlement in Sri Lanka within the framework of an undivided Sri Lanka acceptable to all the communities, including the Tamil community. I would appeal to the Government of Sri Lanka and to the LTTE to return to the negotiating table. This can be achieved if, simultaneously, the Government of Sri Lanka suspends its military operations and the LTTE declares its willingness to lay down arms and to begin talks with the government.”(இந்திய குடியரசுத் தலைவர் உரை Fourteenth Series, Vol. XXXVII, Fifteenth Session, 2009/1930 (Saka) No.1, Thursday, February 12, 2009/Magha 23, 1930 (Saka) http://164.100.47.134/newls/textofdebatedetail.aspx?sdate=02/12/2009)

போரை நிறுத்த சிறீலங்கா அரசுக்கு அரசியல் அழுத்தம் கொடுக்காத சம்பிரதாய நடைமுறைக்கானது இப்பேச்சு. ஆனால் போரை நிறுத்த விடுதலைப்புலிகள் இயக்கம் ஆயுதங்களை கைவிட முன்வரவேண்டும் என்ற நிபந்தனையை விதித்தது இந்தியா. 18 பெப்ருவரி, 2009ல் பாராளுமன்றத்தில் இலங்கை விவகாரம் பற்றிய விவாதங்களுக்கு அறிக்கை தாக்கல் செய்த வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஜனவரி 27ல் தனது பயணத்தில் மகிந்தா ராஜபக்சேயிடம் ‘உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் வெளியேறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த ‘போர் இடைநிறுத்தம்’ கொடுக்க அறிவுறுத்தியதாக தெரிவித்தார். ‘விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிட வேண்டும்.’ ‘தமிழ் மக்களை விடுவிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார். உடனடியாக புது டில்லியின் ஆங்கில ஊடகங்கள் ‘ஆயுதங்களை கைவிடுதல்’, ‘மக்களை வெறியேற்றுதல்’, ‘போர் இடைநிறுத்தம்’ போன்ற கருத்துக்களை பரப்பின. பின்னர் இந்த நிபந்தனைகளை ஐ.நாவும், பான் கீ மூனும், மேற்குலக நாடுகள் மற்றும் மேற்குலக ஊடகங்கள் திரும்ப திரும்ப கூறத் துவங்கின.

விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை கழைவது புதுடில்லியின் நீண்டகால திட்டமாக இருந்தது. 1987ல் ராஜீவின் நோக்கமும் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை கழைவதாக இருந்தது. தமிழ் மக்களின் கருத்துக்களுக்கு இடமளிக்காமல் இந்திய பிராந்திய வல்லரசு கனவிற்கு பலம் சேர்க்க ராஜீவின் இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இதில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் காவு வாங்கப்பட்டிருந்தன. இந்திய அமைதிப் படைகளின் காலத்தில் சுமார் 6ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர். வன்னியில் நடந்த போர் இந்தியாவின் அரசியல் திட்டத்திற்கு ஏற்ப மகிந்தா ராஜபக்சேவால் நடத்தப்பட்டது.

பெப்ருவரி 18, 2009ல் இந்திய மக்களவையில் பிரணாப் முகர்ஜி தெரிவித்திருந்த கருத்துக்கள் ‘இந்தியா போரை நடத்துகிறது’ என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபித்திருக்கிறது. போர் நிறுத்தம் கேட்டு தமிழ்நாட்டில் போரட்டங்கள் வலுவடைந்திருந்த நிலையில் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த போது போரை நிறுத்துவதற்கு எந்த நடவடிக்கைகளையும் எடுக்கும் விதமான எந்த சகிம்சையும் அவரது பேச்சில் இல்லை. அதற்கு மாறாக, ‘இலங்கையின் அரசியல் சட்டத்தின் 13வது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்ட இந்திய-இலங்கை ஒப்பந்தம் வழியாக 23 வருட மோதலுக்கு தீர்வை காணும் அரசியல் வாய்ப்பு இலங்கை முழுவதும் ஏற்பட்டுள்ளதாக’ தெரிவித்தார். ‘இலங்கையில் ஏற்பட இருக்கிற புனரமைப்பு மற்றும் மீள்கட்டுமான பணிகளில், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் இந்தியா ஈடுபட காத்திருக்கிறது. கிழக்கு மாகாணத்தில் 500 மெகாவாட் அனல் மின்நிலையம் அமைத்தல், ரயில், பேருந்து திட்டம் மற்றும் மென்பொருள் சார்ந்த மையங்களை உருவாக்கும் ‘வளச்சித்திட்டங்களில்’ நாங்கள் ஈடுபட துவங்கியுள்ளோம்.’ என்று அவர் தெரிவித்திருந்தார். Fourteenth Series, Vol. XXXVII, Fifteenth Session, 2009/1930 (Saka) No.5, Wednesday,February 18, 2009/ Magha 29, 1930 (Saka) http://164.100.47.134/newls/textofdebatedetail.aspx?sdate=02/18/2009 ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை, படுகாயமடையும் போர் நடைபெறும் போது போரை நிறுத்த ஒரு வார்த்தையும் பேசாமல் காயம்பட்டிருக்கும் ஆட்டின் தலையிலிருந்து வழியும் இரத்தத்தை நக்கி நக்கி ஓநாய் ‘கருணைப் பிதாவாக’ மாறிய கதை போன்றது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பேசிய இப்பேச்சு.

இந்தியாவின் பாதுகாப்பு, ராணுவ நலனுக்காக சிறீலங்காவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க போராளி இயக்கங்களை ஆதரித்து வளர்த்தார் இந்திரா. தமிழர்களுக்கு இலங்கையில் தனிநாடு உருவாக்கும் நோக்கம் எதுவும் இந்திராவுக்கு இருக்கவில்லை. தங்களது கட்டுப்பாட்டில் சொன்ன பேச்சை கேட்டு நடக்கும் சில போராளி குழுக்கள் இந்தியாவுக்கு தேவைப்பட்டது. விடுதலைப்புலிகள் அந்த நோக்கத்துக்கு ஒத்துவரமாட்டார்கள், தனிநாட்டை நோக்கி செல்பவர்கள் என்பதால் இந்திய அதிகார வர்க்கத்தின் பார்வை விடுதலைப்புலிகளின் பலத்தை நொறுக்கி, அதே வேளையில் முற்றாக அழித்துவிடாமல் வைத்திருப்பது ராஜீவ் காலத்தின் இலங்கைக் கொள்கையின் அடிப்படையாக இருந்தது. ராஜீவிற்கு பிறகு நேரடியான ஈடுபாடு இல்லாமல் அவ்வப்போது சிறீலங்கா அரசுக்கான உதவிகளோடு நிறுத்தியிருந்தது இந்தியா. இந்தியாவின் இலங்கைக்கான கொள்கையில் மாற்றத்தை துவங்க காரணமாக இருந்தது ஆனையிறவு பெரும்தளத்தை விடுதலைப் புலிகள் கைப்பற்றி, யாழ்ப்பாண நகருக்குள் நுழைந்த மூன்றாம் ஈழப்போர். அப்போது புலிகளின் முற்றுகைக்குள் இருந்த சிறீலங்கா படைகளுக்கு இந்தியா (வாஜ்பாய் பிரதமராக பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி) ஆயுதங்களை வழங்க தயாராக இருந்தது என்று பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னான்டஸ் பின்னர் ஒரு நேர்காணலில் தெரிவித்தார். ஆட்சிகள் இந்தியாவில் மாறலாம். ஆனால் அதிகாரவர்க்கத்தின் சிந்தனையும், வெளியுறவுக் கொள்கையிலும் மாற்றமில்லை. வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை உருவாக்க தமிழக அரசியல் தலைமைகளும் ஒன்றுபட்டு முயற்சிகளில் ஈடுபடவில்லை. பிரச்சனைகள் அடிப்படையில் தனித்தீவுகளாக பிரிந்து நின்று புதுடில்லி நோக்கி கோரிக்கைகள் எழுப்புவதால் இலங்கைக்கான வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது.

கடந்த வருடம் இறுதியில் வன்னியில் தமிழ்மக்கள் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டும், லட்சக்கணக்கான மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்து வதைமுகாம்களில் முடக்கப்பட்ட போதும் மனித உரிமகள் பற்றி உலகமெங்கும் பாடம் நடத்துகிற அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஏன் அமைதியாக இருந்தன? இந்துப் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்துவதற்கான வல்லரசு நாடுகளின் போட்டிக்கு களப்பலியானவர்கள் வன்னியில் ஈழத்தமிழர்கள். இலங்கைத் தீவில் சீனாவின் முதலீடுகளும், கட்டுமானங்களும், ராணுவ முக்கியத்துவமும் அதிகரித்துள்ளது. இந்துப்பெருங்கடல் பகுதியில் சீனாவின் ‘முத்துமாலைத் திட்டம்’ இலங்கையை இணைத்திருக்கிறது. அதன் ஒரு பகுதியாக அம்பாந்தோட்டம் துறைமுகத்தை சீனா கட்டுகிறது. அக்கட்டுமானங்களில் ராணுவ முக்கியத்துவம் மிக்க கட்டமைப்புகளும் உள்ளடக்கம். ஆனால் சீனாவின் ஆதிக்கமும், ஐ.நா சபையில் சீனாவின் ‘வீட்டோ’ அதிகாரமும் தமிழர்களுக்கு எதிராக பயன்படுவது உண்மை. சீனாவுக்கு போட்டியாக இந்தியா தனது செல்வாக்கையும், அதிகாரத்தையும் வைத்திருக்க சிறீலங்கா அரசுக்கு ஆதரவளிப்பதை வெளியுறவுக் கொள்கையின் அங்கமாக வைத்திருக்கிறது இந்தியா. இலங்கைக்கான வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்காவின் ராணுவ ஆக்கிரமிப்பை தடுக்க இந்திரா போராளி இயக்கங்களை ஜெயவர்த்தனேவிடம் துருப்புச் சீட்டாக பயன்படுத்தினார். ராஜீவ் ஆட்சியில் தமிழர்களின் அரசியல் உரிமையை காவுகொடுத்து, போராளி இயக்கங்களை பலத்தை குறைக்கும் நோக்கமிருந்தது. குறிப்பாக விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை கழைவது மற்றும் தலைமையை ஒழிப்பது ஆகிய நோக்கமிருந்தது. ஆனால் தங்களுக்கு இசைவான செல்லப்பிள்ளைகளை வளர்க்கும் நோக்கம் கொண்டிருந்தது. வரதராஜ பெருமாளை உருவாக்கியதும் அந்த திட்டத்தின் ஒரு பகுதியானது. தற்போது விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள், நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் தலைமையை அழிக்கும் திட்டத்துடன் இந்தியா வன்னியில் படுகொலையில் பிரதான பங்காற்றியது. இதற்கான திட்டங்களின் துவக்கம் விடுதலைப்புலிகளுக்கும், ரணில் விக்கிரமசிங்கே அரசுக்கும் சமாதானப் பேச்சுக்கள் துவங்கிய 2002 ஆண்டிலிருந்து (பாரதீய ஜனதா கட்சியின் வாஜ்பாய் ஆட்சி) துவங்கி விட்டன.

முதலில் போர்நிறுத்த ஒப்பந்தம், சமாதான பேச்சுக்களில் நேரடியாக தலையிடாமல் இந்தியா விலகியேயிருந்தது. ஆனாலும் எரிக் சோல்கெய்ம் ஒவ்வொரு முறையும் புதுடில்லியின் அதிகாரவர்க்கத்திற்கு தகவல்களை பரிமாறி, ஆலோசனைகளையும் பெற்றிருந்தார். விடுதலைப்புலிகள் தலைவர் வே.பிரபாகரன் நவம்பர் 2002 மாவீரர் நாள் உரை முக்கியமானது. அவரது உரையில், ‘எமது மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வு காண்பது சாத்தியமாயின் அதனை முயன்று பார்ப்பதில் முழுமனதுடனும், நேர்மையுடனும் செயற்பட நாம் தயாராக இருக்கின்றோம்.’ என்று குறிப்பிட்டார். ‘உயர்பாதுகாப்பு வலையங்கள்’ என்ற பெயரில் யாழ்ப்பாணம் ராணுவ முற்றுகைக்குள் இருப்பதையும், அதனால் தமிழர்கள் தங்களது சொந்த இருப்பிடங்களுக்கு செல்லவும், தொழில்களில் ஈடுபடவும் முடியாத நிலை பற்றியும் அந்த அமைந்தது. ‘தனித்துவமான ஒரு மொழி, பண்பாடு, வரலாறு, நன்கு வரையறுக்கப்பட்ட ஒரு தாயக நிலம், இன அடையாள உணர்வு போன்ற பண்புகளை உடையவர்கள் என்பதால், எமது மக்கள் ஒரு தேசிய இனமாக, ஒரு மக்கள் சமூகமாக அமைந்துள்ளனர். ஒரு தனித்துவமான மக்கள் சமூகம் என்ற ரீதியில் எமது மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்தானவர்கள். சுயநிர்ணய உரிமை என்பது உள்ளான, புறமான இரு அம்சங்களைக் கொண்டது. உள்ளான சுயநிர்ணயம் என்பது ஒரு மக்கள் சமூகத்தின் பிரதேச சுயாட்சி உரிமையை வலியுறுத்துகின்றது…..’

‘தமிழ் மக்கள், தமது சொந்த மண்ணில், வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த பாரம்பரிய மண்ணில், அந்நிய சக்திகளின் ஆதிக்கம், தலையீடு இன்றி, சுதந்திரமாக, கௌரவமாக வாழ விரும்புகின்றார்கள். தமது மொழியை வளர்த்து, தமது பண்பாட்டைப் பேணி, தமது பொருளாதாரத்தை மேம்படுத்தி, தமது இன அடையாளத்தைப் பாதுகாத்து வாழ விரும்புகின்றார்கள். தமது தாயக மண்ணில், தம்மைத் தாமே ஆளும் சுயாட்சி உரிமையோடு வாழ விரும்புகின்றார்கள். இதுவே எமது மக்களின் அரசியல் அபிலாசை.’

‘உள்ளான சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில், எமது தாயக நிலத்தில், எமது மக்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய பூரண சுயாட்சி அதிகாரத்துடன் ஒரு தீர்வு முன்வைக்கப்பட்டால், நாம் அத்திட்டத்;தை சாதகமாக பரிசீலனை செய்வோம். ஆனால், அதேவேளை, எமது மக்களுக்கு உரித்தான உள்ளான சுயநிர்ணயம் மறுக்கப்பட்டு, பிரதேச சுயாட்சி உரிமை நிராகரிக்கப்பட்டால் நாம் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை.’[i] பிரபாகரனது மாவீரர் நாள் உரையை தொடர்ந்து அரசியல் தீர்வுகள் பற்றி ஆராய சமாதானப் பேச்சுக் கூட்டங்களில் பேசினார்கள்.

இந்த சூழலில் லெப்.ஜெனரல்.சதீஸ் நம்பியாரை (ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி) ஆலோசிக்க துவங்கியது சிறீலங்கா. ரணில் விக்கிரமசிங்கே அரசு சதீஸ் நம்பியாரை தேர்வு செய்ததில் இந்திய அரசின் சம்மதமும், ஆலோசனையும் இருந்தது. இந்திய அமைதிப்படை காலத்தில் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரலான சதீஸ் நம்பியாரை ஈழப்பிரச்சனையில் ஈடுபடுத்தியதற்கு பின்னால் இந்தியாவின் பங்கு இருந்தது. விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்தி தனக்கு சாதகமான குழுக்களை உருவாக்க இந்திய உளவு நிறுவனங்களும், ஆதிக்கவர்க்கத்தினரும் மீண்டும் ஈழப்போராட்டத்தில் நுழைந்தது. சதீஸ் நம்பியார் யாழ்ப்பாணத்திற்கு (யாழ்ப்பாண உயர்பாதுகாப்பு வலையத்தின் வரைபடம் http://www.tamilguardian.com/tg193/jaffna_hsz.jpg) சென்று ‘உயர்பாதுகாப்பு வலையங்கள்’ பற்றி ஆய்வு செய்தார்.

பாகம் 4 தொடர்கிறது...

அடிக்குறிப்பு: [i] தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் உரை, நவம்பர், 2002

ஈழம்: நாங்கள் கொலைகாரர்கள்! - பாகம்2


மே 14, 2009 நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா. செய்தித் தொடர்பாளர் மாரி ஒக்காபே, மனிதாபிமான சிக்கலை தீர்ப்பதில் இலங்கைக்கு உதவுவதற்காக அன்று மாலையில் தனது சிறப்புத் தூதராக விஜய் நம்பியாரை மீண்டும் கொழும்புக்கு அனுப்பி வைக்க ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தீர்மானித்துள்ளதாக தெரிவித்திருந்தார். பான் கீ மூனின் நடவடிக்கைகள் ஐ.நா பொதுச்செயலாளருக்குரிய பொறுப்புடன் இருப்பதாக தெரியவில்லை. இலங்கைக்கு சென்ற விஜய் நம்பியார் வழக்கம் போல திரைமறைவில் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டார். விஜய் நம்பியார் இலங்கையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் இரகசியம் காக்கப்படுகின்றன.

வன்னியில் தொடர்ந்து ‘பாதுகாப்பு வலையத்திற்குள்’ சிறீலங்கா நடத்திய தாக்குதலில் மக்களின் நிலைமை மோசமாகியது. ஆனாலும் ஐ.நா சபைப் பொதுச்செயலாளர் பான் கீ மூன் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. தமிழர்கள் பேரழிவை சந்தித்துக்கொண்டிருக்கும் போதும் சண்டை இடைநிறுத்தம் பற்றி மட்டுமே ஐ.நா கருத்து வெளியிட்டு வந்தது. இன்று வரையில் நிரந்தர போர் நிறுத்தம் என்ற வார்த்தையை பான் கீ மூன் பயன்படுத்தவில்லை. ‘மக்கள் பாதுகாப்பாக வெளியேற தற்காலிக போர் நிறுத்தம் செய்ய வேண்டும்’ என்பதோடு பான் கீ மூனின் கடமை முடிந்து போனது. போரை நிரந்தரமாக நிறுத்த அழுத்தம் கொடுப்பது வழக்கமான நடைமுறை. காசா, லெபனான், காங்கோ போன்ற இடங்களின் மோதல்களில் ஐ.நா போரை நிரந்தரமாக நிறுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்திருந்தது. அப்போதெல்லாம் ஐ.நா ‘போர் இடைநிறுத்தம்’ அல்லது ‘தற்காலிக போர் நிறுத்தம்’ கேட்டதில்லை. இலங்கையில் மட்டும் ஏன் ‘போர் இடை நிறுத்தம்’? வன்னியில் நடைபெற்ற போர் அரசியல் அடக்குமுறையின் கோர வடிவம். மனிதாபிமானப் பிரச்சனை ராஜபக்சே அரசின் போர் வெறியினால் செயற்கையாக உருவாக்கப்பட்டது. போரை நிரந்தரமாக நிறுத்தியிருந்தால் தமிழ் மக்களின் அவலங்களும், துயரங்களும் தானாகவே நின்றிருக்கும். அதற்கு பதிலாக மக்களை தங்களது சொந்த இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றும் சிறீலங்கா அரசின் திட்டத்திற்கு உதவுவதாக இருந்தது பான் கீ மூனின் ‘போர் இடைநிறுத்தம்’ அறிவுறுத்தல். அப்படி ‘இடைநிறுத்தம்’ கேட்பதற்கு போர் ஒன்றும் திரைப்படக் காட்சியுமில்லை.

ஐ.நா அமைப்பின் மனித உரிமை பிரகடனங்கள் ‘just war’ என்று எதையும் அங்கீகரிக்கவில்லை. ‘just war’ அல்லது ‘war on terror’ (பயங்கரவாதத்திற்கு எதிரான போர்) என்பதெல்லாம் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஸ் நிர்வாகத்தின் ஈராக், ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பிற்கான உற்பத்தி. வன்னியில் தமிழ் மக்களை படுகொலை செய்ய ராஜபக்சே மற்றும் புது டில்லியின் கொள்கை வகுப்பாளர்கள் பயன்படுத்தியதும் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற பதம். கோத்தபாய ராஜபக்சேயின் மிரட்டல்களும், திட்டங்களும் தமிழ் மக்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக சித்தரித்தது. அப்போது மேற்குலக நாடுகளும் மௌனமாக இருந்தன.

அப்படியிருக்கும் போது மோதல் நடைபெறும் பகுதியில் போரை தற்காலிக இடைவெளி கொடுக்க ஐ.நா சபை பொதுச்செயலாளர் தெரிவித்தது ஏன்? பான் கீ மூன் தேவைப்பட்டால் இலங்கைக்கு செல்ல தயாரென்று அறிவித்திருந்தார். அப்படி அவர் அறிவித்த காலத்தில் தனது மகனின் திருமண விழா ஏற்பாடுகளை செய்து ரகசியமாக வைத்திருந்தார். ஐ.நாவின் அதிகாரி ‘இரத்தக்குளியல்’ என்று குறிப்பிடுமளவு சிறீலங்காவின் படுகொலைகள் கோரத்தாண்டவம் ஆடிய போதும் எந்த கண்டனத்தையும் பான் கீ மூன் தெரிவிக்கவில்லை. அதனால் சிறீலங்கா அரசு போரின் இறுதி நாட்களில் பல்லாயிரம் தமிழர்களை கொன்று, தடையங்களையும் அழித்துள்ளது. இந்த நிலையில் இலங்கைக்கு பயணம் செல்வதாக அறிவித்துள்ளது பான் கீ மூன் மீதும் சந்தேகங்களை வலுப்படுத்துகின்றன. கடுமையான மோதல் நடைபெறும் நாட்டிற்கு தனது ராஜதந்திர அழுத்தத்தை செலுத்துவதற்கு பதிலாக பொறுப்பில்லாமல் பான் கீ மூன் இருக்க காரணம் யார்?

ஈழத்தில் மனிதப் பேரவலத்தை தடுத்து நிறுத்த இன்று வரையில் ஐ.நா ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? 'சிறீலங்காவுக்கு ஆதரவாக ஐ.நா பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளான சீனாவும், ரஸ்யாவும் செயல்படுகின்றன. மற்ற நாடுகள் அதிகாரப்பூர்வமான விவாதத்தை துவங்க முடியாத அளவு அவற்றின் எதிர்ப்பு உள்ளது. அதையும் மீறி எந்த தீர்மானத்தையும் கொண்டுவந்தால் 'வீட்டோ' அதிகாரத்தை பயன்படுத்தும். போதாத குறைக்கு பாதுகாப்புச் சபையில் சுழல்முறையில் இடம் பெற்றிருக்கும் ஜப்பானின் ஆதரவு சிறீலங்காவிற்கு கிடைத்துள்ளது. அதனால் சிறீலங்கா மீதான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.' இது ஐ.நாவின் மௌனத்திற்கு பலரும் சொல்லும் மேலோட்டமான காரணம்.

சீனாவும், ரஸ்யாவும் எதிர்ப்பதால் ஈழப் பிரச்சனை பற்றிய விவாதத்தை ஐ.நாவில் அதிகாரப்பூர்வமாக முன்னெடுக்கவில்லை என்பது உண்மையில்லை. சூடான் நாட்டின் டாஃபூர் பிரச்சனையில் சீனா கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது. சிறீலங்காவில் சீனாவுக்கு ராணுவ, பொருளாதார அனுகூலம் இருப்பதைப் போல சூடானில் இயற்கை வளங்களை சுரண்டுதல் மற்றும் ஆயுதங்கள் விற்பனையுண்டு. சூடான் அதிபரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்க கொண்டு வரப்பட்ட ஐ.நா பாதுகாப்புச் சபை தீர்மானம் மீது சீனா, அமெரிக்கா, அல்ஜீரியா, பிரேசில் ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ வாக்களிக்கவில்லை. ஆனாலும் 11 வாக்குகளுடன் தீர்மானம் நிறைவேறியது. சிம்பாப்வே விசயத்திலும் சீனாவின் எதிர்ப்பையும் மீறி பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தலையிட்டு ஐ.நா வழியாக நெருக்கடிகளை ராபர்ட் முகாபே அரசுக்கு கொடுத்தன. சிறீலங்கா விவகாரத்தில் மேற்குலக நாடுகள் அப்படி ஒரு நிலையை ஏன் எடுக்கவில்லை? இந்தியாவே அதற்கு காரணம்.


பாகம் 3 தொடரும்

ஈழம்: நாங்கள் கொலைகாரர்கள்! - பாகம்1


உலக, பிராந்திய வல்லரசுகளின் ராணுவ, பொருளாதாரப் பசிக்கு இரையாகியிருக்கிறது ஈழத்தமிழர்களின் தாய்நிலமும், பல்லாயிரம் உயிர்கள். அனைவரும் கொடூரமான தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள். சர்வதேச மனித உரிமைச் சட்டங்களும், மனிதாபிமான சட்டங்களும் ஈழத்தில் இனப்படுகொலைக்காக வளைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. ‘மனிதாபிமான போர் இடைநிறுத்தம்’ என்று தவணை முறையில் மனிதாபிமானம் பேசியது வெட்கம் கெட்ட கொலைகாரக் கூட்டம். வன்னியில் இரத்தப் படுகொலையை நடத்திய இந்தியா தடையங்களை அழிப்பதிலும், சர்வதேச அரங்கில் சிறீலங்காவை பாதுக்காக்கவும் திட்டமிட்டு செயல்படுகிறது. இந்தியாவின் வெளியுறவுத்துறையும், ஐ.நாவில் பணியாற்றுகிற இந்திய அதிகாரிகளும் இந்தியாவின் ஈழத்தமிழர்களுக்கு எதிரான பெரும் திட்டத்திற்கு துணிந்து உதவுகிறார்கள்.

வன்னியில் இனப்படுகொலை நடந்த போது முதலில் இலங்கைக்கு ஐ.நாவின் மனிதாபிமானப் பணிகளுக்கான அதிகாரி ஜான் ஹோல்ம்சை இலங்கைக்கு அனுப்பினார் பான் கீ மூன். இலங்கையிலிருந்து திரும்பிய அவர் தமிழ் மக்களின் மனிதாபிமானப் பிரச்சனைகள் பற்றிய அறிக்கையை ஐ.நாவுக்கு கொடுக்கும் முன்னரே கொலம்பியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விசயத்தில் ஐ.நாவின் போக்கு சந்தேகங்களை உருவாக்கியது. அதன் பின்னர் விஜய் நம்பியார் மேற்கொண்ட பயணங்களிலும் ஐ.நா சபையின் நடவடிக்கைகள் மீது பலத்த சந்தேகங்கள் எழும்புகின்றன.

லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் நடத்திய கடுமையான போராட்டத்தினால் பிரிட்டிஸ் பிரதமர் கோர்டன் பிரவுன் இலங்கைக்கான சிறப்புத் பிரதிநிதி ஒருவரை நியமித்தார். அவரை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தது. இதன் பிறகு பிரிட்டன் ஐ.நாவுக்கு சில நெருக்கடிகளை கொடுக்கத் துவங்கியது. இந்த நிலையில், எப்பிரல் 16, 2009 அன்று ஐ.நா மனிதாபிமானப் பிரச்சனைகளுக்கான நடவடிக்கைகளை எடுக்க பொதுச்செயலாளர் பான் கீ மூன் விஜய் நம்பியாரை தனது சிறப்புத் தூதுவராக வழக்கத்திற்கு மாறாக ரகசியமாக அனுப்பினார். இன்னர்சிற்றி பிரஸ், மேத்யூ ரஸ்ஸல் லீ அதை வெளிப்படுத்திய பிறகு உலகம் இந்த பயணம் பற்றி அறிந்தது. அப்போது ஐ.நா மீதான சந்தேகம் வலுவடைய ஆரம்பித்தது. இந்த பயணத்தில் விஜய் நம்பியார் வன்னியிலுள்ள ‘முகாம்களை’ பார்வையிட்டு, ராஜபக்சே அரசிடம் பேச்சுக்களை நடத்தி, ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு அறிக்கை கொடுப்பாரென்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் பயணத்தில் இருந்த போது ஐ.நா பணியாளர்கள் சிலர் சிறீலங்கா அரசினால் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். ‘வதை முகாம்களில்’ தமிழ்மக்கள் ராணுவ கட்டுப்பாடு, அச்சுறுத்தல், சித்திரவதையை அனுபவிப்பதாக செய்திகள் வந்தன. ‘பாதுகாப்பு வலையம்’ மற்றும் மருத்துவமனைகள் மீது குண்டுகளை வீசியது சிறீலங்கா. ‘முகாம்கள்’ எவற்றையும் பார்வையிடாமல், சிறீலங்காவின் இன அழிப்பு போரை கண்டிக்காமல் பயணத்தை முடித்தார் விஜய் நம்பியார். மனித உரிமை ஆர்வலர்களை இச்செயல் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.

ஏப்பிரல் 20, திங்கள் கிழமை அறிக்கை கொடுக்க வேண்டிய விஜய் நம்பியார் ஏப்பிரல் 23, புதன்கிழமை இரவு வரையில் ஐ.நாவுக்கு திரும்பவில்லை. வன்னியில் மக்களின் நிலவரத்தை அறிந்து ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு உடனடியாக அறிக்கை சமர்ப்பித்து ஆலோசனைகளை வழங்கும் கடமையுள்ள விஜய் நம்பியார் கொழும்பு பயணம் முடித்ததும் சென்ற இடம் இந்தியா. இந்தியாவிற்கு விடுமுறைக்காக சென்றதாக சொல்லப்பட்டது. வன்னியில் மக்களின் அவலங்கள் அரங்கேறிக் கொண்டிருந்த அவசரமான சூழலில், பயணத் திட்டத்தில் இல்லாத விடுமுறைக்கு தனது சொந்த நாடான இந்தியாவிற்கு விஜய் நம்பியார் செல்ல வேண்டிய அவசரத் தேவையென்ன?

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த நிலங்கள் அனைத்தையும் ஏப்பிரல் முதல் வாரத்திற்குள் கைப்பற்றும் திட்டம் எதிர்பார்த்ததை விடவும் நாட்கள் அதிகமாகியது. ஏப்பிரல் 25ற்குள் விடுதலைப்புலிகளின் கதையை முடித்து, நிலங்களை மீட்டு விடுவோமென்று சிறீலங்கா பிரதமர் அறிவித்திருந்தார். அதற்கு கால அவகாசம் கொடுக்க விஜய் நம்பியார் இந்தியா சென்றிருக்க வாய்ப்புள்ளது. அதற்கும் மேலாக விஜய் நம்பியார் புது டில்லியின் அதிகார வர்க்கத்திடம் ஆலோசிக்க இந்தியா சென்றிருக்கும் வாய்ப்புகளே அதிகம். ஏப்பிரல் 23, வியாழக்கிழமை ஐ.நா பாதுகாப்புச்சபை கூட்டத்துக்கு திரும்பிய அவர் சிறீலங்கா பற்றிய அறிக்கையை கொடுக்க மறுத்தார். வழக்கமாக ஊடகங்களை சந்திக்கும் விஜய் நம்பியார் ஊடக சந்திப்பை தவிர்த்தார். ஐ.நா பாதுகாப்புச் சபையில் இடம்பெறும் நாடுகளும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. விஜய் நம்பியாரின் அறிக்கை ஐ.நா பாதுகாப்புச் சபை கூட்டத்தில் கொடுக்கப்பட்டிருந்தால் சிறீலங்கா மீதான அலுவலக ரீதியான கண்டனங்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் அவை வழி ஏற்படுத்தி, போரை நிறுத்த நெருக்கடிகளை ஏற்படுத்த வாய்ப்பிருந்தது. விஜய் நம்பியாரின் அணுகுமுறை சிறீலங்காவை காப்பாற்றும் உள்நோக்கம் கொண்டிருந்ததை இதில் உணரமுடியும்.

விஜய் நம்பியாரின் அண்ணன் லெப்.ஜெனரல்.சதீஸ் நம்பியார் சிறீலங்காவின் ராணுவ ஜெனரல் போரில் சிறீலங்கா ராணுவத்தையும், சரத் பொன்சேகாவையும் பாராட்டி எழுதியுள்ளார் (சதீஸ் நம்பியார் பற்றி பின்னர் விரிவாக பார்க்கலாம்). சிறீலங்கா அரசுக்கு ஆயுதங்கள், பொருளதவி, ஆலோசனைகள், பயிற்சிகள் மற்றும் வல்லுநர்களை அனுப்பி மறைமுகமாக யுத்தத்தை இந்தியா நடத்திய நிலையில், இந்திய குடியுரிமையுள்ள விஜய் நம்பியாரை ஐ.நா அனுப்பியது பற்றி ராஜதந்திர மட்டங்களிலும் சர்ச்சைகளை உருவாக்கியிருந்தது. இந்தியாவில் மன்மோகன் சிங் ஆட்சியில் 2005ல் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக 2005ல் பணியாற்றியவர் தான் விஜய் நம்பியார். விஜய் நம்பியார் ஐ.நா முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அன்னானின் சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தார். பான் கீ மூன் ஐ.நா பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதும் ஜனவரி 2007ல் ஐ.நா தலைமை அதிகாரியாக விஜய் நம்பியாரை நியமித்தார். விஜய் நம்பியாரின் அண்ணன் லெப்.ஜெனரல். சதீஸ் நம்பியார் (ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி) ஈழப்போராட்ட சிக்கலில் முக்கிய பங்கு வகித்தவர். வெளியுறவுத்துறையின் Foreign Affairs Instituteல் விஜய் நம்பியாரும், சதீஸ் நம்பியாரும் அழைப்பின் பேரில் பங்கெடுத்து வருகிறார்கள். ராணுவ சம்பந்தமான United Service Institution of India ஜூலை 1996 முதல் டிசம்பர் 31, 2008 வரையில் இயக்குநராக சதீஸ் நம்பியார் இருந்திருக்கிறார். சிறீலங்கா அரசுக்கு ராணுவ ஆலோசனைகளை வழங்கி வந்தவர் சதீஸ் நம்பியார்.

ஐ.நா அதிகாரியின் கடமையும், பொறுப்பும் சொந்த நாட்டின் விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். அதனால் பிரச்சனைக்குரிய இடங்களுக்கு அவற்றில் தொடர்புடைய நாடுகளின் குடியுரிமை கொண்டிருக்கும் அதிகாரிகளை வழக்கமாக பிரதிநிதிகளாக அனுப்புவதில்லை. அதற்கு மாறாக சிக்கலான அளவு தொடர்புடைய விஜய் நம்பியாரை இலங்கைக்கு சிறப்புத் தூதுவராக பான் கீ மூன் அனுப்பியது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.

பாகம் 2 அடுத்த பதிவில் தொடர்கிறது...