Saturday, May 23, 2009

ஈழம்: நாங்கள் கொலைகாரர்கள்! - பாகம்3


‘ஆயுதங்களை ஒப்படைத்தல்’, ‘போர் இடைநிறுத்தம்’, வன்னியிலிருந்து மக்களை ‘பாதுகாப்பாக வெளியேற்றுவது’ ஆகிய வார்த்தைகள் புதுடில்லியிலிருந்து முதலில் பரப்பப்பட்டன. பெப்ருவரி 2009 பாராளுமன்ற துவக்க உரையில் இந்திய குடியரசுத் தலைவர் இலங்கை பற்றி குறிப்பிட்டார்.

அவரது உரையில் “We are concerned at the plight of civilians internally displaced in Sri Lanka on account of escalation of the military conflict. We continue to support a negotiated political settlement in Sri Lanka within the framework of an undivided Sri Lanka acceptable to all the communities, including the Tamil community. I would appeal to the Government of Sri Lanka and to the LTTE to return to the negotiating table. This can be achieved if, simultaneously, the Government of Sri Lanka suspends its military operations and the LTTE declares its willingness to lay down arms and to begin talks with the government.”(இந்திய குடியரசுத் தலைவர் உரை Fourteenth Series, Vol. XXXVII, Fifteenth Session, 2009/1930 (Saka) No.1, Thursday, February 12, 2009/Magha 23, 1930 (Saka) http://164.100.47.134/newls/textofdebatedetail.aspx?sdate=02/12/2009)

போரை நிறுத்த சிறீலங்கா அரசுக்கு அரசியல் அழுத்தம் கொடுக்காத சம்பிரதாய நடைமுறைக்கானது இப்பேச்சு. ஆனால் போரை நிறுத்த விடுதலைப்புலிகள் இயக்கம் ஆயுதங்களை கைவிட முன்வரவேண்டும் என்ற நிபந்தனையை விதித்தது இந்தியா. 18 பெப்ருவரி, 2009ல் பாராளுமன்றத்தில் இலங்கை விவகாரம் பற்றிய விவாதங்களுக்கு அறிக்கை தாக்கல் செய்த வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஜனவரி 27ல் தனது பயணத்தில் மகிந்தா ராஜபக்சேயிடம் ‘உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் வெளியேறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த ‘போர் இடைநிறுத்தம்’ கொடுக்க அறிவுறுத்தியதாக தெரிவித்தார். ‘விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிட வேண்டும்.’ ‘தமிழ் மக்களை விடுவிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார். உடனடியாக புது டில்லியின் ஆங்கில ஊடகங்கள் ‘ஆயுதங்களை கைவிடுதல்’, ‘மக்களை வெறியேற்றுதல்’, ‘போர் இடைநிறுத்தம்’ போன்ற கருத்துக்களை பரப்பின. பின்னர் இந்த நிபந்தனைகளை ஐ.நாவும், பான் கீ மூனும், மேற்குலக நாடுகள் மற்றும் மேற்குலக ஊடகங்கள் திரும்ப திரும்ப கூறத் துவங்கின.

விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை கழைவது புதுடில்லியின் நீண்டகால திட்டமாக இருந்தது. 1987ல் ராஜீவின் நோக்கமும் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை கழைவதாக இருந்தது. தமிழ் மக்களின் கருத்துக்களுக்கு இடமளிக்காமல் இந்திய பிராந்திய வல்லரசு கனவிற்கு பலம் சேர்க்க ராஜீவின் இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இதில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் காவு வாங்கப்பட்டிருந்தன. இந்திய அமைதிப் படைகளின் காலத்தில் சுமார் 6ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர். வன்னியில் நடந்த போர் இந்தியாவின் அரசியல் திட்டத்திற்கு ஏற்ப மகிந்தா ராஜபக்சேவால் நடத்தப்பட்டது.

பெப்ருவரி 18, 2009ல் இந்திய மக்களவையில் பிரணாப் முகர்ஜி தெரிவித்திருந்த கருத்துக்கள் ‘இந்தியா போரை நடத்துகிறது’ என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபித்திருக்கிறது. போர் நிறுத்தம் கேட்டு தமிழ்நாட்டில் போரட்டங்கள் வலுவடைந்திருந்த நிலையில் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த போது போரை நிறுத்துவதற்கு எந்த நடவடிக்கைகளையும் எடுக்கும் விதமான எந்த சகிம்சையும் அவரது பேச்சில் இல்லை. அதற்கு மாறாக, ‘இலங்கையின் அரசியல் சட்டத்தின் 13வது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்ட இந்திய-இலங்கை ஒப்பந்தம் வழியாக 23 வருட மோதலுக்கு தீர்வை காணும் அரசியல் வாய்ப்பு இலங்கை முழுவதும் ஏற்பட்டுள்ளதாக’ தெரிவித்தார். ‘இலங்கையில் ஏற்பட இருக்கிற புனரமைப்பு மற்றும் மீள்கட்டுமான பணிகளில், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் இந்தியா ஈடுபட காத்திருக்கிறது. கிழக்கு மாகாணத்தில் 500 மெகாவாட் அனல் மின்நிலையம் அமைத்தல், ரயில், பேருந்து திட்டம் மற்றும் மென்பொருள் சார்ந்த மையங்களை உருவாக்கும் ‘வளச்சித்திட்டங்களில்’ நாங்கள் ஈடுபட துவங்கியுள்ளோம்.’ என்று அவர் தெரிவித்திருந்தார். Fourteenth Series, Vol. XXXVII, Fifteenth Session, 2009/1930 (Saka) No.5, Wednesday,February 18, 2009/ Magha 29, 1930 (Saka) http://164.100.47.134/newls/textofdebatedetail.aspx?sdate=02/18/2009 ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை, படுகாயமடையும் போர் நடைபெறும் போது போரை நிறுத்த ஒரு வார்த்தையும் பேசாமல் காயம்பட்டிருக்கும் ஆட்டின் தலையிலிருந்து வழியும் இரத்தத்தை நக்கி நக்கி ஓநாய் ‘கருணைப் பிதாவாக’ மாறிய கதை போன்றது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பேசிய இப்பேச்சு.

இந்தியாவின் பாதுகாப்பு, ராணுவ நலனுக்காக சிறீலங்காவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க போராளி இயக்கங்களை ஆதரித்து வளர்த்தார் இந்திரா. தமிழர்களுக்கு இலங்கையில் தனிநாடு உருவாக்கும் நோக்கம் எதுவும் இந்திராவுக்கு இருக்கவில்லை. தங்களது கட்டுப்பாட்டில் சொன்ன பேச்சை கேட்டு நடக்கும் சில போராளி குழுக்கள் இந்தியாவுக்கு தேவைப்பட்டது. விடுதலைப்புலிகள் அந்த நோக்கத்துக்கு ஒத்துவரமாட்டார்கள், தனிநாட்டை நோக்கி செல்பவர்கள் என்பதால் இந்திய அதிகார வர்க்கத்தின் பார்வை விடுதலைப்புலிகளின் பலத்தை நொறுக்கி, அதே வேளையில் முற்றாக அழித்துவிடாமல் வைத்திருப்பது ராஜீவ் காலத்தின் இலங்கைக் கொள்கையின் அடிப்படையாக இருந்தது. ராஜீவிற்கு பிறகு நேரடியான ஈடுபாடு இல்லாமல் அவ்வப்போது சிறீலங்கா அரசுக்கான உதவிகளோடு நிறுத்தியிருந்தது இந்தியா. இந்தியாவின் இலங்கைக்கான கொள்கையில் மாற்றத்தை துவங்க காரணமாக இருந்தது ஆனையிறவு பெரும்தளத்தை விடுதலைப் புலிகள் கைப்பற்றி, யாழ்ப்பாண நகருக்குள் நுழைந்த மூன்றாம் ஈழப்போர். அப்போது புலிகளின் முற்றுகைக்குள் இருந்த சிறீலங்கா படைகளுக்கு இந்தியா (வாஜ்பாய் பிரதமராக பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி) ஆயுதங்களை வழங்க தயாராக இருந்தது என்று பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னான்டஸ் பின்னர் ஒரு நேர்காணலில் தெரிவித்தார். ஆட்சிகள் இந்தியாவில் மாறலாம். ஆனால் அதிகாரவர்க்கத்தின் சிந்தனையும், வெளியுறவுக் கொள்கையிலும் மாற்றமில்லை. வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை உருவாக்க தமிழக அரசியல் தலைமைகளும் ஒன்றுபட்டு முயற்சிகளில் ஈடுபடவில்லை. பிரச்சனைகள் அடிப்படையில் தனித்தீவுகளாக பிரிந்து நின்று புதுடில்லி நோக்கி கோரிக்கைகள் எழுப்புவதால் இலங்கைக்கான வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது.

கடந்த வருடம் இறுதியில் வன்னியில் தமிழ்மக்கள் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டும், லட்சக்கணக்கான மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்து வதைமுகாம்களில் முடக்கப்பட்ட போதும் மனித உரிமகள் பற்றி உலகமெங்கும் பாடம் நடத்துகிற அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஏன் அமைதியாக இருந்தன? இந்துப் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்துவதற்கான வல்லரசு நாடுகளின் போட்டிக்கு களப்பலியானவர்கள் வன்னியில் ஈழத்தமிழர்கள். இலங்கைத் தீவில் சீனாவின் முதலீடுகளும், கட்டுமானங்களும், ராணுவ முக்கியத்துவமும் அதிகரித்துள்ளது. இந்துப்பெருங்கடல் பகுதியில் சீனாவின் ‘முத்துமாலைத் திட்டம்’ இலங்கையை இணைத்திருக்கிறது. அதன் ஒரு பகுதியாக அம்பாந்தோட்டம் துறைமுகத்தை சீனா கட்டுகிறது. அக்கட்டுமானங்களில் ராணுவ முக்கியத்துவம் மிக்க கட்டமைப்புகளும் உள்ளடக்கம். ஆனால் சீனாவின் ஆதிக்கமும், ஐ.நா சபையில் சீனாவின் ‘வீட்டோ’ அதிகாரமும் தமிழர்களுக்கு எதிராக பயன்படுவது உண்மை. சீனாவுக்கு போட்டியாக இந்தியா தனது செல்வாக்கையும், அதிகாரத்தையும் வைத்திருக்க சிறீலங்கா அரசுக்கு ஆதரவளிப்பதை வெளியுறவுக் கொள்கையின் அங்கமாக வைத்திருக்கிறது இந்தியா. இலங்கைக்கான வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்காவின் ராணுவ ஆக்கிரமிப்பை தடுக்க இந்திரா போராளி இயக்கங்களை ஜெயவர்த்தனேவிடம் துருப்புச் சீட்டாக பயன்படுத்தினார். ராஜீவ் ஆட்சியில் தமிழர்களின் அரசியல் உரிமையை காவுகொடுத்து, போராளி இயக்கங்களை பலத்தை குறைக்கும் நோக்கமிருந்தது. குறிப்பாக விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை கழைவது மற்றும் தலைமையை ஒழிப்பது ஆகிய நோக்கமிருந்தது. ஆனால் தங்களுக்கு இசைவான செல்லப்பிள்ளைகளை வளர்க்கும் நோக்கம் கொண்டிருந்தது. வரதராஜ பெருமாளை உருவாக்கியதும் அந்த திட்டத்தின் ஒரு பகுதியானது. தற்போது விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள், நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் தலைமையை அழிக்கும் திட்டத்துடன் இந்தியா வன்னியில் படுகொலையில் பிரதான பங்காற்றியது. இதற்கான திட்டங்களின் துவக்கம் விடுதலைப்புலிகளுக்கும், ரணில் விக்கிரமசிங்கே அரசுக்கும் சமாதானப் பேச்சுக்கள் துவங்கிய 2002 ஆண்டிலிருந்து (பாரதீய ஜனதா கட்சியின் வாஜ்பாய் ஆட்சி) துவங்கி விட்டன.

முதலில் போர்நிறுத்த ஒப்பந்தம், சமாதான பேச்சுக்களில் நேரடியாக தலையிடாமல் இந்தியா விலகியேயிருந்தது. ஆனாலும் எரிக் சோல்கெய்ம் ஒவ்வொரு முறையும் புதுடில்லியின் அதிகாரவர்க்கத்திற்கு தகவல்களை பரிமாறி, ஆலோசனைகளையும் பெற்றிருந்தார். விடுதலைப்புலிகள் தலைவர் வே.பிரபாகரன் நவம்பர் 2002 மாவீரர் நாள் உரை முக்கியமானது. அவரது உரையில், ‘எமது மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வு காண்பது சாத்தியமாயின் அதனை முயன்று பார்ப்பதில் முழுமனதுடனும், நேர்மையுடனும் செயற்பட நாம் தயாராக இருக்கின்றோம்.’ என்று குறிப்பிட்டார். ‘உயர்பாதுகாப்பு வலையங்கள்’ என்ற பெயரில் யாழ்ப்பாணம் ராணுவ முற்றுகைக்குள் இருப்பதையும், அதனால் தமிழர்கள் தங்களது சொந்த இருப்பிடங்களுக்கு செல்லவும், தொழில்களில் ஈடுபடவும் முடியாத நிலை பற்றியும் அந்த அமைந்தது. ‘தனித்துவமான ஒரு மொழி, பண்பாடு, வரலாறு, நன்கு வரையறுக்கப்பட்ட ஒரு தாயக நிலம், இன அடையாள உணர்வு போன்ற பண்புகளை உடையவர்கள் என்பதால், எமது மக்கள் ஒரு தேசிய இனமாக, ஒரு மக்கள் சமூகமாக அமைந்துள்ளனர். ஒரு தனித்துவமான மக்கள் சமூகம் என்ற ரீதியில் எமது மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்தானவர்கள். சுயநிர்ணய உரிமை என்பது உள்ளான, புறமான இரு அம்சங்களைக் கொண்டது. உள்ளான சுயநிர்ணயம் என்பது ஒரு மக்கள் சமூகத்தின் பிரதேச சுயாட்சி உரிமையை வலியுறுத்துகின்றது…..’

‘தமிழ் மக்கள், தமது சொந்த மண்ணில், வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த பாரம்பரிய மண்ணில், அந்நிய சக்திகளின் ஆதிக்கம், தலையீடு இன்றி, சுதந்திரமாக, கௌரவமாக வாழ விரும்புகின்றார்கள். தமது மொழியை வளர்த்து, தமது பண்பாட்டைப் பேணி, தமது பொருளாதாரத்தை மேம்படுத்தி, தமது இன அடையாளத்தைப் பாதுகாத்து வாழ விரும்புகின்றார்கள். தமது தாயக மண்ணில், தம்மைத் தாமே ஆளும் சுயாட்சி உரிமையோடு வாழ விரும்புகின்றார்கள். இதுவே எமது மக்களின் அரசியல் அபிலாசை.’

‘உள்ளான சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில், எமது தாயக நிலத்தில், எமது மக்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய பூரண சுயாட்சி அதிகாரத்துடன் ஒரு தீர்வு முன்வைக்கப்பட்டால், நாம் அத்திட்டத்;தை சாதகமாக பரிசீலனை செய்வோம். ஆனால், அதேவேளை, எமது மக்களுக்கு உரித்தான உள்ளான சுயநிர்ணயம் மறுக்கப்பட்டு, பிரதேச சுயாட்சி உரிமை நிராகரிக்கப்பட்டால் நாம் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை.’[i] பிரபாகரனது மாவீரர் நாள் உரையை தொடர்ந்து அரசியல் தீர்வுகள் பற்றி ஆராய சமாதானப் பேச்சுக் கூட்டங்களில் பேசினார்கள்.

இந்த சூழலில் லெப்.ஜெனரல்.சதீஸ் நம்பியாரை (ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி) ஆலோசிக்க துவங்கியது சிறீலங்கா. ரணில் விக்கிரமசிங்கே அரசு சதீஸ் நம்பியாரை தேர்வு செய்ததில் இந்திய அரசின் சம்மதமும், ஆலோசனையும் இருந்தது. இந்திய அமைதிப்படை காலத்தில் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரலான சதீஸ் நம்பியாரை ஈழப்பிரச்சனையில் ஈடுபடுத்தியதற்கு பின்னால் இந்தியாவின் பங்கு இருந்தது. விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்தி தனக்கு சாதகமான குழுக்களை உருவாக்க இந்திய உளவு நிறுவனங்களும், ஆதிக்கவர்க்கத்தினரும் மீண்டும் ஈழப்போராட்டத்தில் நுழைந்தது. சதீஸ் நம்பியார் யாழ்ப்பாணத்திற்கு (யாழ்ப்பாண உயர்பாதுகாப்பு வலையத்தின் வரைபடம் http://www.tamilguardian.com/tg193/jaffna_hsz.jpg) சென்று ‘உயர்பாதுகாப்பு வலையங்கள்’ பற்றி ஆய்வு செய்தார்.

பாகம் 4 தொடர்கிறது...

அடிக்குறிப்பு: [i] தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் உரை, நவம்பர், 2002

1 கருத்துக்கள்:

Anonymous said...

IC knows now who are the terrorist and who are the Freedom Fighters. Why Can't they lift the Ban on freedom fighters?
In this case UN did not act as a people organisation,it acted like a organisation which can be bought for Sri lankan Ruppees.
Who with right mind send a delegate to investigate a human disaster with a well know corrupted official? May be an another beneficiary?
Karuna

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com