Tuesday, January 23, 2007

பார்ப்பனீய பிடரியை உலுக்கிய அய்யாவழி!

வழக்கம் போல ராஜாக்கமங்கலம் சந்தை கூட்டமாக இருக்கிறது.

வாழைக்குலைகளும், பாக்கும், வெற்றிலையும், நெல்லும், மரச்சீனி கிழங்கும் விற்கிற கூட்டம்.

'எப்போ இதெல்லாம் விக்குமோ (விற்பனையாகுமோ) ஓல மாடமா இருந்தாலும் மானத்தை மறைச்சிகிட்டு குடிசையில கெடக்கலாம். ஒருத்தரும் வந்து வெலையும் கேக்கெல' என்கிறாள் பச்ச புள்ளைக்கு தாயான முத்தாரு.

சந்தையில தீருவை (ஆயம்/வரி) பிரிக்கிற கிஷன் நாயர் தூரத்தில் வாறார்.

"அய்யோ இந்த பாவி வறானே! இவன் கண்ணு மேயுறது மட்டுமில்ல, இவன் பேச்சும், தொந்தரவும் மனுசனை கொல்லுற மாதிரி இருக்கு. இவன்கிட்ட தப்பிக்க நம்ம சாதி பெண்ணுங்க படுற பாடு...மானத்த மறைக்க ஒரு மொழம் துணி கூட மாருல மூட நமக்கு உரிமை இல்ல....எப்போ தீருமோ இந்த கருமம்...ம்ம்" வேதனையில் முணுமுணுக்கிறாள்.

"தீருவ எங்க? எத்திர கடவம் கொண்டு வந்தே? எடு முக்கா ரூவா." அதிகாரமான குரலில் கேட்டபடி பேனாவால் முதாருவின் மாராப்பில்லா முலைகளை தட்டுகிறான் கிஷன் நாயர்.

பச்சிளம் குழந்தை குடிக்கவேண்டிய பால் தெறித்து கிஷன் நாயரின் முகத்தில் விழுகிறது.

கோபக்கனலாய் மாறி இடுப்பில் இருக்கும் கத்தியால் முத்தாருவின் மார்பை சீவி எறிகிறான் நாயர்.

அலறல் சத்தத்துடன் சாயும் முத்தாருவை பார்த்தபடியே பதைபதைக்கிறது சந்தை.

முத்தாருவை பற்றி கவலைப்பாடாது திமிராக நடந்து போனான் கிஷன் நாயர். சந்தையின் மனங்கள் குமுறியது.

(கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலத்தில் இந்த கொடுமை நடந்தது. பெயர்கள் மட்டும் கற்பனை)

~0OO0OO0OO0~

நாகர்கோயில் செல்லும் வழியில் தாளக்குடி எனும் கிராமம். அங்கு சாம்பவர் சாதியைச் சார்ந்த கர்ப்பிணி பெண் மாடத்தியை ஆதிக்கசாதியினர் அடிமையாய் வைத்திருந்தனர். அவரை மாட்டுக்குப் பதிலாய் கலப்பையில் பூட்டி நிலத்தை உழுது கொன்றனர். இந்த கொடுமை 19ம் நூற்றாண்டில் நடந்தது.

~0OO0OO0OO0~

முத்தாரு, மாடத்தி போல அடிமையாக பலரை கொலைசெய்த வரலாறு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் இவை மட்டுமா? எத்தனை வகையான வரிகள் மற்றும் அபராதங்கள்?

 • புலையர் சாதி மக்கள் நடந்த பாதையைப் பெருக்கிச் செல்ல அவர்களது கழுத்தில் துடைப்பம் கட்டிச் செல்ல நிர்பந்திக்கப்பட்டனர்.
 • 'பார்த்தால் தீட்டு' என தீண்டாமை கொடுமையில் நம்பூதிரியும், நாயரும் தெருக்களில் நடந்து வரும் போது "எட்டிப்போ" என புலையர்களையும், ஈழவர்களையும் எட்டு அடி தூரத்திற்கு மேல் தள்ளி நடக்க வைத்தனர்.
 • நாடார் சாதி ஆண்கள் வளைந்த கைப்பிடி உள்ள குடை வைத்துக் கொள்ளக்கூடாது. மீறினால் அதற்கு அபராதம்.
 • ஆண்கள் மீசை வளர்க்கக்கூடாது.
 • ஆண்கள் தலையில் துணி கட்டக் கூடாது.
 • பெண்கள் மார்பைத் துணிவைத்து மறைக்கக் கூடாது. மார்பின் அளவிற்கு ஏற்ப வரி கட்ட வேண்டும் (முலை வரி எனப்பட்டது).
 • பனையேறுபவர்களது அருவா, கம்புதடி என அனைத்திற்கும் வரி.
 • திண்ணை வைத்து வீடு கட்டக்கூடாது. திண்ணை வைத்து வீடு கட்டினால் ஆட்கள் வந்து அமர்ந்து பேசுவார்கள் அதனால் அறிவு பெருகிவிடுமாம்.
 • குடியிருப்புகள் போல வரிசையாக வீடு கட்டக்கூடாது.
 • தாலியில் தங்கம் அணியக்கூடாது. பனைஓலையை சுற்றி கட்டுவது தான் தாலி.
 • செருப்பு அணியக்கூடாது.
 • படிக்கக்கூடாது.
 • பொது குளத்தில் குளிக்கக்கூடாது.
 • இடுப்பில் தண்ணி குடம் எடுக்கக்கூடாது.

இன்னும் பல...

~0OO0OO0OO0~

பைத்தியக்கார விடுதி என்று விவேகானந்தரால் சொல்லப்பட்ட மனுதர்மத்தின் கோட்டையாக இருந்த திருவிதாங்கூரில் நடந்த கொடுமைகள் தான் இவை அனைத்தும். கன்னியாகுமரியில் இந்து சமயம் செய்த அடிமைத்தனத்திற்கு சாட்சியாக திருவனந்தபுரம் ஆவணக் காப்பகத்தில் பல ஆவணங்களும், ஓலைச்சுவடிகளும் இருக்கின்றன.

இந்த கொடுமைகளை நிகழ்த்தியது யார்? ஆங்கிலேயர்களா? மிசனரிகளா? மொகலாய மன்னர்களா? யார் செய்தார்கள்?

1826 முதல் 1857 வரை மூன்று முறைகள் இக்கொடுமைகளை எதிர்த்து மக்கள் போராடினர். முறையீடுகள் பிரிட்டீஸ் மகாராணி வரை அனுப்பப்பட்டது. நாயர்களும், நம்பூதிரிகளும் இந்த உரிமைக்குரல்களை கடுமையாக எதிர்த்தனர்.

போராடிய நாடார் பெண்களுக்கு 1829ல் மேலாடை உடுத்த அரசாணை அனுமதி கொடுத்தது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்த விடவில்லை ஆதிக்க சக்திகள். திருவிதாங்கூர் மன்னனின் ஆதரவு பெற்ற நாயர் குழுக்கள் பெண்களின் ஜாக்கெட்டைக் கிழித்துக் கலகம் செய்ததனர். மனிதத்தனமற்ற கீழத்தரமாக நடந்துகொண்ட இந்த ஆதிக்க சாதியினரின் மதம் இந்துமதம்.

பாளையங்கோட்டையில் நாடார் சாதியை சார்ந்த மக்கள் மானம் காக்க துணி அணிய உரிமை இருந்தது; கன்னியாகுமரியில் அந்த உரிமை இல்லை. காரணம் கன்னியாகுமரி பார்ப்பனர்கள் கரம் ஓங்கிய திருவிதாங்கூர் இந்து மன்னர்கள் ஆட்சியில் இருந்தது. கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்களுக்கு 'குப்பாயம்' போட உரிமையிருந்தது. இந்துவாக இருந்து மார்பை மறைக்க கூட உரிமையில்லாமல் சுயமரியாதையை இழப்பதை விட தடையாக இருந்த மதத்தை தூக்கியெறிவது மேல் என கிறிஸ்தவர்களாக மதம் மாறினர். அப்போதும் திருவிதாங்கூர் இந்து மன்னனின் ஆதிக்கம் தான் நடந்துகொண்டிருந்தது. மன்னனின் காலத்தில் மதம் மாறுபவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டன (தேவசகாயம் பிள்ளைக்கு கிடைத்த தண்டனைகள் இதற்கு ஒரு உதாரணம்). கிறிஸ்தவ மதம் பரவ இந்துமதத்தின் சாதிச்சாக்கடை சனாதான தர்மமே காரணமாயிற்று.

~0OO0OO0OO0~

அய்யாவழி என்னும் விடுதலை மதம்

வைதீக இந்துமதத்திற்கும் (பார்ப்பனீய மதம்) முத்துக்குட்டி சுவாமிகளின் அய்யா வழிபாட்டு முறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆங்கிலேயர்களை அய்யா எதிர்க்கும் சில வரிகளை மட்டும் காட்டி பார்ப்பனீய இந்துமதம் தப்பிக்க இயலாது. அய்யா வழிபாடு முறை முற்றிலும் இந்துமதத்திற்கு எதிரானது. அதனால் தான் அய்யாவை இராஜாங்க எதிரியாக அன்றைய இந்து ஆதிக்க சாதியினர் திருவாங்கூர் மன்னரிடம் குற்றம் சாட்டினர். நம்பூதிரிகளின் ஆலோசனையின் பேரில் திருவிதாங்கூர் மன்னன் அய்யாவை சித்திரவதைக்குள்ளாக்கினான்.

'தாலிக்கு ஆயம், கம்புத்தடிக்கு ஆயம் ' என அகிலத்திரட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது திருவிதாங்கூர் மன்னன் சுமத்திய வரிக்கொடுமைகளை அய்யா எதிர்த்திருக்கிறார். (ஆயம் = வரி; கம்புத்தடி= பனையேறும் தொழிலுக்கு உதவும் கருவி). அய்யாவின் முதல் பெயரான "முடிசூடும் பெருமாள்" என்ற பெயரை மாற்றி 'முத்துக்குட்டி' என ஆக்க காரணமும் பார்ப்பனீய இந்துமத ஆதிக்க சாதியினர். 'முத்துகுட்டி' அய்யா வழியை உருவாக்க காரணமும் அவர்களது அடக்குமுறையே.

அய்யாவழியில் இந்துமதத்திற்கு நேர் எதிரான வழிகளை தான் அய்யா வகுத்தார். அவற்றில் சில:

 1. பூசை செய்யக்கூடாது.
 2. பூசாரி வைத்துக்கொள்ளக்கூடாது
 3. யாகம், ஹோமம் கூடாது
 4. மாயை உங்களை ஆளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
 5. எந்த தேர்த்திருவிழாக்களும் கூடாது.
 6. எந்த வழிபாடும் கூடாது
 7. ஆரத்தி எடுப்பதும், ஏற்பதும் கூடாது
 8. காணிக்கை பெறுவதும், கொடுப்பதும் கூடாது
 9. மாலையிடுதல் கூடாது
 10. யாரையும் உங்கள் காலில் விழ விடாதீர்கள்
 11. லஞ்சத்தை ஏற்காதீர்கள்
 12. ஆசைகளை துறந்துவிடுங்கள்.
 13. உண்மையாக இருங்கள்

இவை அனைத்தும் அய்யா வழியினரின் நூலான 'அகிலத்திரட்டில்' சாட்சியாக இருக்கிறது.

பார்ப்பனீய இந்துமதத்திற்கு எதிர்திசையில் அய்யாவழி!

 • சாதியை படைத்தவன் நீசன் என்கிறார் அய்யா. இந்துமதத்தில் சாதியை படைத்தவன் கடவுள். அய்யாவழிக்கும், இந்துமதத்திற்கும் இடைய்லான அடிப்படி முரண்பாட்டில் இது முக்கியமானது.
 • இந்து மதம் உருவ வழிபாட்டில் நம்பிக்கையுடையது. அய்யா வழியில் இறைவனுக்கு உருவமில்லை.
 • இந்து மதத்தில் சாதி அமைப்பு தான் அதன் அடித்தளம். அய்யா வழியில் சாதி வேற்றுமைகள் இல்லை. அனைவரும் சேர்ந்து துவையலுடன் கஞ்சி அருந்தும் 'துவயல் பந்தி' உண்பார்கள்.
 • இந்து மதத்தில் கடவுளுக்கும் மக்களுக்குமிடையில் அர்ச்சகர் என்ற இடைத்தரகர் உண்டு. அய்யா வழியில் எந்த பூசாரியோ/அர்ச்சகரோ இடைத்தரகராக இல்லை.
 • இந்து மதத்தில் பிறர் கருவறைக்குள் செல்ல உரிமையில்லை. அய்யா வழியில் 'பள்ளியறை' வரை சென்று (ஆண், பெண் வேறுபாடு உட்பட) எந்த வேறுபாடுகள் இல்லாமலும் வணங்கலாம். தலையில் சுயமரியாதையுடன் தலைக்கட்டுடன் தான் அய்யாவழியில் வணக்கம் செலுத்த வேண்டும்.
 • அய்யா வழியினர் எந்த இந்து கோயில்களுக்கும் சென்று வழிபடுவதோ, பிரசாதங்களை உண்பதோ இல்லை.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமையை உருவாக்க இந்துமதத்தை புறக்கணித்து தனது மக்களுக்காக புதிய வழியான 'அய்யா வழியை' தோற்றுவித்து அன்றைய பார்ப்பனீயத்தின் குரல்வளையை இறுக்கியவர் அய்யா!

இன்றைய இந்துவெறி ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் ஆதிக்க குரல்களை அடக்க இந்த மதம் தனித்தன்மையுடன் இருப்பது தடையாக இருக்கிறது. அதனால் இந்துவெறியாளர்கள் அய்யா வழியும் இந்து மதம் என புலம்ப ஆரம்பித்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ் நடத்திய மண்டைக்காடு கலவரத்தின் போது அதற்கு எதிராக குன்றக்குடி அடிகளார், அரோக்கியசாமி ஆண்டகை, இஸ்லாமிய தலைவர்கள் ஆகியோருடன் இணைந்து அய்யா வழியின் இன்றைய 'பட்டத்து அய்யா'. பாலபிரஜாதிபதி அடிகளார் ஒற்றுமை பேரணிகளை முன்னின்று நடத்தினார். அன்று முதல் அய்யா வழியை தனக்குள் விழுங்கும் பிரச்சரங்களை இந்து மதவெறியர்கள் ஆரம்பித்தனர்.

ஆதிக்கசாதி இந்துக்களால் ஒடுக்கப்பட்ட மக்களின் மாற்று மதங்களில் ஒன்று அய்யாவழி! ஆம் இது ஒரு தனிமதம்! பார்ப்பனீயத்தின் பிடரியை நெரித்ததில் அய்யா வழி தனிமதமே!

~0OO0OO0OO0~

அய்யாவழி பற்றிய முந்தைய பதிவிற்கு இங்கே

அய்யாவழி உருவாக காரணமான திருவிதாங்கூரின் சூழல் பற்றிய பதிவு சுட்டி இங்கே

Sunday, January 21, 2007

விடைபெறுகிறேன் நண்பர்களே!

நண்பர்களே,

கடந்த ஒரு வாரமாக நட்சத்திரமாக எழுதியதில் பல புதிய விடயங்களை கற்றுக்கொண்டேன். என்னால் இயன்ற வரை சமூகத்தை பற்றிய பல விடயங்களை பதிந்தேன். எந்த ஒரு மனிதன் மீதும் காழ்ப்புணர்வு கொள்வது எனது பதிவுகளின் நோக்கமல்ல. நாம் அனைவரும் பல்வேறு மொழி, கலாச்சாரம், பண்பாடு, நம்பிக்கைகள், மதங்கள் கொண்ட மனிதர்கள். பன்முகத்தன்மையுடன் இயங்கும் இந்த உலகம் நமது சந்ததிக்கும் சென்று சேர வேண்டும். தன்னுடைய அடையாளங்கள் மட்டுமே சிறந்தவை என்னும் பார்வை மனித இன ஒற்றுமைக்கு உதவாத செயல்.

'எனது நம்பிக்கை தான் நல்லது, உனது நம்பிக்கை நல்லதல்ல' என்ற போட்டிகள் குழப்பத்தையும் கலவரங்களையும் உருவாக்குகின்றன. எனது இருத்தலும், உனது இருத்தலும் மதிக்கப்படவேண்டும். உலகம் புதிய இயங்குதளத்தில், மக்கள் அனைவரும் விடுதலை பெற்று வாழும் புதிய பாதையில் செல்லுதல் அவசியம்.

-0Oo-

என்னைப்பற்றி...

தோழி தமிழ்நதி என்னைப்பற்றி விரிவாக எழுத பணித்திருந்தார் ஆகவே ஒரு சுயதம்பட்டம் இங்கே.

17 வயது முதல் பலவிதமான சமூக போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறேன். தமிழகத்தில் பல போராட்ட களங்களில் பங்குபெற்ற அனுபவம் என்னை உருவாக்கியது. திருச்சி, கும்பகோணம், சென்னை, தஞ்சாவூர் என ஒடுக்கப்பட்ட, சேரி வாழ் மக்களுடன் செய்த பணிகள் என்னை மனிதனாக்கியது. நான் சார்ந்திருந்த இயக்கம் மனித உரிமை மற்றும் தொழிலாளர் உரிமைக்கான பணியை செய்தது. 1996 முதல் இந்த பணிக்காக இந்தியாவில் முழுநேரமும் என்னை ஈடுபடுத்தி வந்தேன். பிறநாடுகளின் அழைப்பினால் 4 ஆண்டுகள் ஹாங்காங்கில் தங்கியிருந்து ஆசியநாடுகள் அளவில் இந்த பணியை செய்துவந்தேன். அதேவேளை உலக அளவில் 'அமைப்புசாரா தொழிலாளர்களை' ஒன்று திரட்டவும், அவர்களுக்காக சர்வதேச அளவில் ஐ.நாவின் தொழிலாளர் அமைப்பு கூட்டங்களில் முறையிடவும் செய்தேன். ஆசியாவில் இருந்த காலத்தில் ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா என சுற்றுப்பயணம் மேற்கொண்டதில் பலவிதமான கலாச்சாரத்தை சார்ந்த மக்களிடம் பழகியதில் மனித உரிமை பற்றிய பார்வை விரிவடைந்தது. அவர்கள் அனுபவங்கள் வழி எனக்கு கற்றுத்தந்தார்கள்.

தொடர்ந்து, பணியை உலக அளவில் செய்யவும், தலைமை பணியை ஏற்கவும் பணித்ததால் ஐரோப்பாவை அலுவலக மையமாக வைத்து இயங்குகிறேன். ஆப்பிரிக்கா நாடுகளின் பிரச்சனையிலும், அமைப்புசாரா தொழிலாளர்கள் பிரச்சனையிலும் தொடர்ந்து கவனம் செலுத்துகிறேன். என்னை 'மனிதனாக', 'மனிதநேயம்', 'மனிதஉரிமை', 'விடுதலை' போன்ற உயரிய விழுமியங்கள் மீது பற்றுகொள்ள செய்தவர்கள் விளிம்பு நிலையில் வாழும் மக்கள். என் எழுத்துக்கள் அந்த விழுமியங்களுக்காகவே அமையும்.

பணிநேரம் போக வாசித்தல், செய்திகள் படித்தல், எழுத்து, நிழற்படங்கள் எடுப்பது, பாடல்கள் கேட்பது, கற்களால் ஆபரணங்கள் செய்வது, சமையல் என பல இனிய விடயங்களில் ஈடுபாடு உண்டு.

எளியவனின் பயணம் இப்படியே தொடர்கிறது....

-0O0-

இன்னும் தேடலும், கற்றலும் தொடரும். இந்த தேடலில் ஆர்வத்தையும், ஆதரவையும் தருகிற அனைவருக்கும் நன்றி! மாற்றுக் கருத்துக்கள், எதிர்வாதங்கள், புதிய தகவல்கள் என நீங்கள் கொடுத்த அனைத்து ஊக்கத்திற்கும் நன்றி! இந்த நல்ல வாய்ப்பை வழங்கிய தமிழ்மணம் நிறுவனத்திற்கும் என் நன்றிகள்!

வழக்கம் போலவே ஒரு தொலைதூர மின்மினியாய் மின்ன முயல்கிறேன். விடைபெறுகிறேன்.

நன்றி!

அன்புடன்,

திரு

நெல்லை: ஈழத்தமிழர் காலனி (அகதிகள் முகாம்)

விஜயகாந்த் கட்சிக்கொடி, ஸ்நேகா பிறந்தநாளுக்கு சுவரில் கிறுக்கல் வாழ்த்து என தமிழ்நாட்டிற்குரிய தற்போதைய அடையாளங்களுடன் வரவேற்கிறது தாழையுத்து ஈழத்தமிழர் காலனி (அகதிகள் முகாம்). தென்தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் பிரபல சிமெண்ட் தொழிற்சாலைக்கு எதிர்புறத்தில் இருக்கிறது இந்த முகாம். இங்கு வாழும் குழந்தைகள் பலருக்கு இலங்கை தமிழ் பேச வருவதில்லை. தங்களது நாட்டின் நிலை கூட தெரிகிறதா என்பது சந்தேகமே. ஈழத்தின் பேச்சுத்தமிழை மட்டுமல்ல, கலாச்சார அடையாளங்களும் வளரும் குழந்தைகள் அறியாமலே வளர்கிறார்கள்.

டிசம்பர் 2006 ஒரு அந்திப்பொழுதில் வலைப்பதிவாளர் நண்பர்கள் ஆழியூரான், வரவனையான் செந்தில், நான் மூவருமாக தாழையுத்து சென்றோம். முகாமிற்குள் செல்லத்துவங்கும் போதே முகாமின் நிலை நமது கண்களுக்கு தெரிகிறது. மண்சுவர்,தென்னை ஓலைகளால் வேயப்பட்ட சின்ன சின்ன குடிசைகள் நெருக்கமாக இருக்கிறது. தரை மண்ணால் செய்யப்பட்டு, சாணி பூசப்பட்டிருக்கிறது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் தாழ்வான பூமியாதலால் வீடுகளிலும் தண்ணீர் தேங்கி விடும்.

இந்த முகாமில் சுமார் 184 குடும்பங்களை சார்ந்த 605 பேர் இங்கு வாழ்கிறார்கள். முகாமிற்குள் சிறு பெட்டிக்கடைகள் சில இருக்கின்றன. முத்துமாரியம்மன் கோயில் ஒன்று இருக்கிறது. முகாமிலுள்ள மக்களுக்கு தண்ணீர் எடுக்க ஆழ்துழாய் கிணறுகள் அவற்றில் ஒன்று செயல்படாமல் இருக்கிறது, போதிய குடிநீர் இலாத நிலை. சுமார் 300 பெண்கள் வாழுகிற இந்த முகாமிற்கு 3 கழிவறைகள் மட்டுமே. போதிய மருத்துவ வசதி இல்லை. முகாமில் வாழுகிற மக்கள் கூலி வேலைக்கு சென்று வயிற்றுப்பிழைப்பு நடத்துகிறார்கள், அவர்களுக்கு போதிய சம்பளம் வழங்கப்படுவதில்லை.

ஒரு பழைய கிடங்கில் பல குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டிருக்கிறது. கிடங்கில் சுமார் 4 அடி உயரத்திற்கு 5 அடி X 5 அடி மண்சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்த இடம் தான் ஒரு குடும்பம் சமைத்து, சாப்பிட்டு, ஓய்வெடுத்து, உறங்கும் வசிப்பிடம். கிடங்கினுள் இப்படி பல குடும்பங்கள் இருக்கையில் அவர்களது வாழ்விற்கான தனிமையோ, போதுமான இடமோ இல்லை. ஓட்டுக்கூரை உடைந்து கீழே விழுந்து நொறுங்குகிறது. குழந்தைகளும், பெரியவர்களும் உயிருக்கு ஆபத்தான இந்த கிடங்கினுள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். கிடங்கின் சுற்றுச்சுவர் மண் இடிந்து விழுகிறது. எப்போது ஆபாத்து வருமோ என்ற நிலையில் தான் இவர்கள் வாழ்க்கை. ஒரு நாய் தனது குட்டிகளுடன் அதற்கான இடத்தில் சுகாமாக இருப்பதை கண்ட மனம் சகமனிதர்கள் நாயை விட கேவலமான நிலையில் இருப்பதை கண்டு அழுகிறது.

தாழையுத்து உள்ளாட்சி அமைப்பும், மாவட்ட நிர்வாகம், மாநில அரசு, இந்திய அரசு இவை இந்த மக்களுக்கு அடிப்படைத் தேவையான குடிநீர், குடியிருப்பு, கழிவறைகள், மருத்துவம், தொழிற்கல்வி முதலியவற்றை இதுவரை சரியாக செய்யவில்லை. பன்றியும், நாயும் கூட நல்ல இடத்தில் அடைக்கப்பட்டிருக்கும் நேரத்தில் யுத்தத்தால் உயிருக்கு பயந்து கண்ணீருடன் வருகிற இந்த மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க நமது அரசு தவறுவது ஏன்? முகாமிற்குள் அரசு உதவி செய்யாதது மட்டுமல்ல, பிற அமைப்புகளையும் உதவி செய்யவிடாமல் தடுக்கும் போக்கு நிலவுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கும், குழந்தைகளுக்கும் அடிப்படை தேவைகளை மனிதாபிமான அடிப்படையில் செய்யவேண்டியது சகமனிதர்கள் நமது கடமை.

ஈழத்தமிழர் குடியிருப்புகளுக்கு (அகதிகள் முகாமிற்கு) அமைப்புகள் உதவியுடன் வீடு, உணவு, குடிநீர், கழிப்பறை, கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதும், முகாமில் வாழுகிற மக்களுக்கான தொழிற்பயிற்சிகள், கூட்டுறவு முறையிலான வேலைகளை உருவாக்குவதும் காலத்தின் அவசியம். குழந்தைகளுக்கு முறையான கல்வியும், வேலைவாய்ப்புகளும் வழங்கப்படல் அவசியம். முகாமை விட்டு வெளியேறும் போது எங்கள் மூவரின் மனதும் கனமாக இருந்தது.

அகதிகளின் உரிமைகள் என்ன என்பதில் வெளிப்படையான தகவல்கள் இல்லை. அவர்களுக்கு ஆண்டுதோறும் ஒதுக்கப்படுகிற நிதி பற்றியும் செலவுகள் பற்றியும் வெளிப்படையான தகவல்கள் இல்லை. கடந்த 5 ஆண்டுகளாக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது, அவை எவ்வாறு செலவிடப்பட்டது என்பது பற்றிய தகவல்களை சேகரித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு செல்லவேண்டுமென திட்டமிட்டோம். அதற்கான பணிகள் நடந்துவருகிறது. முகாமை விட்டு வெளியேறும் போது எங்கள் மனது கனமாக இருந்தது . யுத்தமும் அதன் விளைவான 'அகதி' வாழ்வும் கொடியது!


கூரைக்கு கீழே சுவரில் ஸ்நேகாவிற்கு வாழ்த்து கிறுக்கல்!

வரவேற்கும் விஜயகாந்த் கட்சிக்கொடி!

முத்துமாரியம்மன் ஆலயம்

வசதியான இடத்தில் குட்டிகளுடன் நாய்
பாழடைந்த பழைய கிடங்கு வெளித்தோற்றம்


மழை வந்தால் மூழ்கும் நிலையில் குடிசைகள்


சுமார் 4 அடி உயரத்திற்கு 5 அடி X 5 அடி மண்சுவர் கட்டப்பட்ட இந்த இடம் தான் ஒரு குடும்பத்தின் வசிப்பிடம் (கிடங்கிற்குள்)

பல குடும்பங்கள் வசிக்கும் கிடங்கு


இடிந்து விழும் சுவர், அருகே விளையாடும் குழந்தை
-0O0-
நீண்டதூரம் பயணம் செய்து வந்து இந்த முயற்சியில் முன்னின்று செயல்பட்ட செந்தில், தனது வேலைகளுக்கிடையில் உற்சாகமாக ஏற்பாடுகளை செய்து படங்களை எடுத்த ஆழியூரான் என இரண்டு நண்பர்களும் தந்த உழைப்பும், ஊக்கமும் கலந்தது இந்த பதிவு. இந்த முகாமை பாவையிட சென்னை வலைப்பதிவாளர் சந்திப்பு முடிவுகள் ஊக்கத்தை தந்தன.
விடுபட்ட தகவல்களை நண்பர் ஆழியூரான், செந்தில் இருவரும் எழுதவேண்டுகிறேன்.

அய்யாவழி வரலாறு


"அய்யாவழி"
தென்தமிழகத்தில் நாகர்கோயிலிலிரிருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் வழியில் பச்சை பசேலாக காட்சி தரும் செழிப்பான பகுதியில் சாமிதோப்பு என்னும் அழகிய கிராமம். இந்திய அளவில் அவ்வளவாக பேசப்பாடாத இந்த ஊர் இந்துமதத்தின் வர்ணாஸ்ரம சாதிக்கொடுமைகளுக்கு எதிராக தனிக்களத்தை அமைத்த "அய்யாவழியின்" முக்கிய பதியாக இருக்கிறது. அய்யாவழியினர் கூடும் இந்த இடங்கள் கோவில் என அழைக்கப்படுவதில்லை; மாறாக 'பதி', 'நிழல்தாங்கல்' என அழைக்கப்படுகிறது.

திருவிதாங்கூர் மன்னர்களால் கன்னியாகுமரி மாவட்டம் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. இந்த பகுதியில் சாணார், பரவர், மூக்குவர், என 18 வகை சாதி மக்கள் ஆதிக்க சாதியினரால் மனிதனை விட கேவலமாக நடத்தப்பட்டனர். பட்டன், தம்புரான், தம்பி, நம்பூதிரி, பிள்ளைமார், நாயர் (மேனன்), பிராமணர் என பல பல ஆதிக்கசாதியினர் திருவிதாங்கூர் மன்னனின் அதிகாரத்தை பயன்படுத்தி கொடுமைகளை மக்கள் மீது நடத்தினர். மன்னன் செல்லுகிற பகுதிகளில் ஆதிக்கசாதியினரை சார்ந்த பெண்கள் சிலரது வீடு 'அம்ம வீடு' என அறியப்பட்டது. இந்த 'அம்ம வீடு', 'உள்ளிருப்பு வீடு' களில் தான் மன்னன் ஓய்வெடுப்பது வழக்கம். கைமாறாக அந்த பகுதி நிலங்கள், வருவாய் துறை, நிர்வாகம் இவர்களது 'ஆதிக்கத்தில்' இருந்தது. மன்னனுக்கும் பார்ப்பனீயத்திற்குமான தொடர்பு இந்த உறவு முறைகளில் இருந்ததை பயன்படுத்தி ஆதிக்கசாதியினர் குறுநிலமன்னர்கள் போல தீர்ப்பு, தண்டனை வழங்குதல் என தொடர்ந்தனர்.

1809ல் பொன்னுநாடார், வெயியேலாள் தம்பதியினருக்கு கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பில் ஒரு குழந்தை பிறந்தது. அன்றைய சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்பட்ட சாணார் சாதியை சார்ந்தவர்கள் அவர்கள். அந்த சிறுவனுக்கு பெற்றோர் இட்ட பெயர் முடிசூடும் பெருமாள். "திருமுடியுடன் விஷ்ணு" என்னும் பொருள் படும் இந்த பெயரை கீழ்சாதி சாணார் குடும்பம் சூட்டியதும் பார்ப்பனீய ஆதிக்கசாதியினர் கடுமையாக எதிர்த்தனர். பெற்றோர் அந்த பெயரை முத்துகுட்டி என மாற்றினர். தாழ்த்தப்பட்ட குழந்தைக்கு பார்ப்பனீய தெய்வத்தின் பெயரை கூட சூட்ட அனுமதிக்காத இந்துத்துவ சாதிவெறியின் மத்தியில் பிறந்த இந்த குழந்தை தான் வளர்ந்து "அய்யா வைகுண்டர்" ஆகி, சாதி எதிர்ப்பை ஆயுதமாக எடுக்குமென்பது அன்றைய ஆதிக்கசாதியினருக்கு தெரியவில்லை. 17 வயதில் தனது வீட்டிற்கு அருகேயுள்ள புவியூர் என்னும் ஊரை சார்ந்த திருமாலம்மாள் என்பவரை மணந்தார் முத்துகுட்டி. இதுபற்றி திருமாலம்மாளை அவர் திருமணம் செய்யவில்லை, அவருக்கு பணிவிடை செய்ய வாழ வந்தார் என மாறுபட்ட தகவலும் உள்ளது. திருமாலம்மாள் ஏற்கனவே திருமணாமனவர், முத்துகுட்டியை திருமணம் செய்ய கணவனை விட்டு வெளியேறினார் என்ற தகவலும் காணப்படுகிறது.

அய்யாவழியினரின் நூல் 'அகிலம்', 'அகிலத்திரட்டு அம்மானை' அல்லது 'அகிலதிரட்டு' என அழைக்கப்படுகிறது. அகிலத்தின் படி திருமலையம்மாளுக்கு முதல் திருமணத்தின் வழி ஒரு ஆண்குழந்தை இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முத்துகுட்டி பனையேறுதல், விவசாய கூலி வேலை வழி தனது வருமானத்தை தேடிக்கொண்டார். சாதாரண மக்களில் ஒருவராக காணப்பட்ட இவர் உருவாக்கிய வழிமுறை 'அய்யாவழி' என அழைக்கப்படுகிறது. இது ஒரு தனிமதம் என்கிறார் இன்று அய்யாவழியின் தலைமை பதியை நிர்வகித்து வருகிற பாலபிரஜாதிபதி அடிகளார் (அய்யாவின் வாழ்க்கை பற்றி தனிப்பதிவில் பார்க்கலாம்).


அய்யா தனது வழியினருக்கு வகுத்த விதிமுறைகள் • பூசை செய்யக்கூடாது.

 • பூசாரி வைத்துக்கொள்ளக்கூடாது

 • யாகம், ஹோமம் கூடாது

 • மாயை உங்களை ஆளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

 • எந்த தேர்த்திருவிழாக்களும் கூடாது.

 • எந்த வழிபாடும் கூடாது

 • ஆரத்தி எடுப்பதும், ஏற்பதும் கூடாது

 • காணிக்கை பெறுவதும், கொடுப்பதும் கூடாது

 • மாலையிடுதல் கூடாது

 • யாரையும் உங்கள் காலில் விழ விடாதீர்கள்

 • லஞ்சத்தை ஏற்காதீர்கள்

 • ஆசைகளை துறந்துவிடுங்கள்.

 • உண்மையாக இருங்கள்

இவை அனைத்தும் அய்யா தனது வழியை பின்பற்றும் மக்களுக்கு கொடுத்த ஒழுங்குமுறைகள். இதன் வழி அய்யாவழி தனியொரு மதமாகவே இருப்பதை காணலாம்.

அய்யாவழியின் முறைகள் மற்றும் இறையியல்:
"கலியென்பது எலியல்ல, கணையாழி வேண்டாமே" என கலி பற்றியும் அதை அணுகும் முறை பற்றியும் அகிலம் கூறுகிறது.

கலி (தீமை) என்பது எலி போன்ற உருவ அமைப்பு உடையதல்ல. அதனால் ஆயுதம் வேண்டாம். அன்பை அடிப்படையாக வைத்து ஆயுதமே கூடாது என மக்களுக்கு அன்பு போதனையை உருவாக்கியது தான் அய்யாவின் வழி.

"இந்த நாள் முதல், உங்களது நம்பிக்கையை வைகுண்டம் மீது மட்டும் வையுங்கள், வேறு எதற்கும் அச்சம் கொள்ளாதீர்கள். கோயில்களுக்கு காணிக்கை கொடுக்காதீர், நீங்கள் கடுமையாக உழைத்து சேர்த்த பணத்தை உண்டியலில் போடாதீர், உங்களது செல்வத்தை உங்களுக்காகவே வைத்துக்கொள்ளுங்கள்" என்கிறது அகிலத்திரட்டு.

அச்சம் தவிர்த்து நிமிர்ந்து நில்
"அய்யாவழி" இந்துமதத்திலிருந்து முற்றிலும் எதிர்பாதையை மக்களுக்கு காட்டுகிறது. தாங்களை உயர்த்திக்கொண்ட சாதியினரின் ஆதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ""இந்த நாள் முதல், உங்களது நம்பிக்கையை வைகுண்டம் மீது மட்டும் வையுங்கள், வேறு எதற்கும் அச்சம் கொள்ளாதீர்கள்." என அய்யா சொன்னது இந்துமத வர்ணாஸ்ரம மனுதர்மத்தையும், அதன் வேதங்களையும் புறக்கணித்து புதிய பாதையை மக்களுக்கு தந்தது. கொடுமையான பார்ப்பனீய சட்டத்தை உடைத்து மக்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்தது அய்யாவின் வழி. விடுதலைக்கான பாதைக்கு முதல் நிலை அச்சம் தவிர்ப்பது; அய்யாவழி அதை செய்தது.
தன்மானமும், சுயமரியாதையும்
"நீங்கள் தன்மானத்தோடும், சுயமரியாதையுடனும் வாழ்ந்தால் கலி (தீமை/கொடுமைகள்) தானாகவே அழியும்" என அகிலத்திரட்டில் அடிக்கடி வலியுறுத்தப்பட்டுள்ளது. மனிதனை சுயமரியாதையுடனும், தன்மானத்துடனும் அடிமையற்ற நிலையில் நிமிர்ந்து நடக்க வைப்பது அய்யாவின் முக்கிய பணியாக அமைந்துள்ளது. அகிலத்திரட்டில் இதை பல பகுதிகளில் காணலாம்.

இந்துமதம் கீழ்சாதி என தீட்டாக வைத்திருந்து ஆடை அணிந்துகொள்ள கூட வரிவிதித்த காலத்தில்; ஆண்கள் தலையில் தலைப்பாகை அணியவும், பெண்கள் தோழ்ச்சீலை அணியவும் வழியை உருவாக்கி மக்களுக்கு அடிமைத்தனத்திலிருந்து விடுதலையை உருவாக்கியது. இந்த அடையாளங்கள் "மனிதனாக பிறந்த எவனும் எவனுக்கு முன்னும் அடிமையில்லை" என்ற சுயமரியாதையை ஒடுக்கப்பட்ட மக்கள் மனதில் விதைத்தது. மனித மாண்பை உன்னதமாக மக்களுக்கு எளிய வழியில் இந்த முறைகள் உணர்த்தின.

சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக
அய்யாவழியை சாதி ஒடுக்குமுறையை கடைபிடிக்காத ஒரு லட்சிய சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தை கொண்டது. சாதிகளற்ற, ஒரே குடும்பமாக வாழ்ந்த பண்டைய சமுதாயத்தைப் பற்றி அகிலத்திரட்டில் சொல்லப்பட்டுள்ளது. சாதியை உருவாக்கியவர்களை 'கலிநீசன்' என கடுமையாக சாடுகிறார் அய்யா. "18 சாதிகளையும், தீயசக்திகளையும் மலைகளிலும், தீயிலும், கடலிலிலும் எறிந்துவிடுங்கள்", "பலமுள்ளவர்கள், பலமிழந்தவர்கள் மத்தியில் அடக்குமுறைகள் கூடாது", "சாதி தானாகவே அழியும்" என பல இடங்களில் சாதி அமைப்பை பற்றி அகிலத்திரட்டில் சொல்லப்பட்டுள்ளது.

அரச(அரசியல்) அடக்குமுறைக்கு எதிராக:
திருவிதாங்கூர் மன்னனை 'கலிநீசன்' எனவும், ஆங்கிலேயர்களை 'வெண்நீசன்' எனவும் அகிலத்திரட்டில் சொல்லப்பட்டுள்ளது. கலிநீசனை பிரதான அடக்குமுறையாளனாகவும், அவனே மக்களின் உழைப்பை சுரண்டும் ஊழியம், வரிகள், சாதி அடக்குமுறைகளை கட்டிக்காப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டர் "மன்னனின் ஆட்சியை அகற்றி விட்டு நாட்டை ஒரே குடையின் கீழ் ஆளப்போவதாக" அகிலத்திரட்டில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. இது அன்றைய திருவிதாங்கூர் மன்னனின் சாதி அடக்குமுறைக்கு எதிராக எழுந்த குரலாக காணலாம். அய்யா வைகுண்டர் மீது மன்னனின் ஆட்சியை கவிழ்க்க திட்டமிடுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் வழி எங்கெல்லாம் அரச அதிகாரம் மக்களை அடக்குகிறதோ அங்கே மக்களுக்கு அரச அடக்குமுறையை எதிர்க்க மன உறுதியை அய்யாவழி தருகிறது.

பொருளாதார அடிமைத்தனத்திற்கு எதிராக
உழைக்கும் மக்களை சுரண்டுவதையும், ஏமாற்றி பிழைப்பதையும் அய்யாவழியில் கடுமையாக கண்டிக்கப்படுகிறது. உழைக்கும் மக்களுக்கு எதிராக இருந்த உழைப்பு அடிப்படையிலான அடக்குமுறைகளை எதிர்த்து 3 முழு பக்கங்கள் அகிலத்திரட்டில் கண்டிக்கப்பட்டுள்ளது. நிலம், விவசாயம் மற்றும் பிற வகைகளில் வாங்கப்பட்ட கொடுமையான வரிகளை எதிர்க்கிறது அகிலத்திரட்டு. "மக்களின் உழைப்பையும், செல்வத்தையும் வரி என்ற பெயரில் வசூலிக்கிற கொடுமையான நீசன்" என மன்னனை அகிலத்திரட்டு குறிப்பிடுகிறது. "யார் உழைத்து வருமானம் சேர்க்கிறார்களோ அவர்களே அதை அனுபவிக்கட்டும்; வேறு யாருக்கும் அதை அனுபவிக்க அதிகாரமில்லை", "எந்த வரியும் இனிமேல் கொடுக்க அவசியமில்லை" என்கிறது அகிலத்திரட்டு. அந்த காலகட்டத்தில் சாணார் சாதி மக்கள் பனையேற பயன்படுத்தும் மிருக்குத்தடி என்கிற துணைக்கருவிக்கு கூட வரி கட்டவேண்டியது இருந்தது என்பதை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.

பூசை, காணிக்கை, யாகங்களுக்கு எதிராக

அய்யாவழி பூசை, சிலைவழிபாடு, பேய்வழிபாடு, பலியிடுதல், காணிக்கை செலுத்துதல், யாகம் முதலியவற்றை நடத்தக்கூடாது. இவைகளினால் எந்த பலனும் இல்லை. மக்களின் உழைப்பை யாரோ பூசாரிகள் அனுபவிக்க கொடுக்ககூடாது என அய்யா மக்களுக்கு அறிவுறுத்தினார்.

பூசாரிகளுக்கு கண்டனம்

"வேத பிராமணர்களுக்கு தொல்லை தர நாம் வந்தோம்", "பூணூல் அணிபவர்கள் இந்த பூமியில் இனிமேல் இருக்கமாட்டார்கள்" என புரோகிதர்களை கண்டிக்கிறார் அய்யா. ஸ்ரீரங்கம், திருச்செந்தூர் போன்ற இடங்களில் பிராமணர்கள் கடைபிடித்து வரும் மனிதத்தன்மையற்ற செயல்களை அய்யா கண்டித்தார். அய்யாவழி மக்களுக்கு பூசாரி எதுவும் வைத்துக்கொள்ளக்கூடாது என்ற கட்டளை பிறப்பித்தார்.

விக்கிரக வழிபாட்டை மறுத்தல்
மூடப்பழக்கத்தையும், வெற்று சடங்குகளையும் வளர்த்து மக்களை அறிவில்லாதவர்களாகவும், அறியாமையிலும் வைத்து தாங்கள் எல்லாவற்றையும் அனுபவிக்க பூசாரிகளுக்கு உதவியாக இருக்கும் விக்கிரக வழிபாட்டை அய்யா மறுத்தார். தனது வழியை பின்பற்றுபவர்கள் விக்கிரகங்களை வழிபடுவதை எதிர்க்கவும், மறுக்கவும் கட்டாயமாக்கினார்.

அய்யா வழிமுறை

அய்யாவழி முறையில் கண்ணாடி வைத்து இருபக்கமும் இரண்டு குத்துவிளக்குகள் வைத்திருக்கப்படும். அய்யாவழியினர் அந்த கண்ணாடியை பார்த்து தான் வணக்கம் செலுத்துவர். "மனிதன் ஒவ்வொருவருக்குள்ளும் தெய்வம் இருக்கிறது" என்ற உயரிய கோட்பாட்டை கண்ணாடி முன் நின்று வணங்கும் ஒவ்வொருவரும் தனக்குள்ளே காண அய்யா வழிவகை செய்தார்.

அய்யாவழியினர் கூடி "அகிலத்திரட்டு" வாசித்து ஒன்றாக கலந்து வணக்கம் செலுத்தும் இடங்களின் பெயர் 'பதி' அல்லது 'தாங்கல்' என அழைக்கப்படுகிறது. சாமிதோப்பில் அமைந்துள்ள பதியின் கிணற்றில் அனைத்து சாதியினரும் சேர்ந்து குளிக்க, அதே கிணற்று தண்ணியை எடுத்து சமைத்து சேர்ந்து உணவருந்த என சாதிபேதமற்ற வழிமுறையை உருவாக்கினார்.


ஆண்பெண் சமஉரிமை:


அய்யாவழியினரின் பதிகளிலும், தாங்கல்களிலும் ஆணும், பெண்ணும் சமம். இருபாலருக்கும் பதியினுள் சென்று வணக்கம் செலுத்தல், ஏடுவாசித்தல் என எதற்கும் தடையில்லை. ஏராளமான தாங்கல்கள் பெண்களாலே நடத்தப்படுகின்றன.


அய்யாவழியில் கணவன் இறந்தால் பெண்ணுக்கு மறுமணம் செய்துகொள்ள உரிமையுண்டு.


அய்யாவழி ஒரு தனிமதம்:


கலி பற்றிய விடயத்திலும், அதை எதிர்கொள்ளுவதிலும் அய்யாவழி மற்ற இந்துமதத்திலிருந்து முரணானது. கலியை (தீமையை) அழிக்க ஆயுதங்கள் தாங்கி கடவுள்கள் அவதரிக்கும் இந்துமதத்திலிருந்து வேறுபட்ட பார்வையை அணுகுமுறை வழியாக அய்யாவழி மதம் உருவாக்கியது.


இந்துமதம் தனது நம்பிக்கையை வர்ணாஸ்ரம சாதி அடித்தளத்திலிருந்து கட்டி பரவலாக்கி வைத்திருக்கிறது. அது கோயில்கள் பிரதான இடங்களாகவும், கடவுள் வழிபாடு, காணிக்கை, வழிபாடு, யாகம், விக்கிரகம், அபிசேகங்கள், யாகம், பூசாரி என அதன் ஆதாரங்களாக விளங்குகிறது. பெண்ணுக்கு இந்துமத கோவில்களில் வழிபாட்டில் உரிமையில்லை.


அய்யாவழி ஆரிய இந்துமதத்திலிருந்து எதிரான திசையில் மக்களை ஒன்று திரட்டியது. அய்யாவழியை தனிமதமாக பதிய இந்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையையும் சாதகமாக செய்யவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது அய்யாவழி மக்களை இந்துமதம் என கணக்கில் சேர்க்கும் மோசடி கடந்த காலங்கள் தொட்டு நடந்து வருகிறது. அய்யாவழியினர் தங்களை தனிமதமாக அடையாளம் காணவே விரும்புகின்றனர்.


சமீபகாலங்களாக இந்துமதத்தில் ஒரு பிரிவு தான் அய்யாவழி என பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இந்துமதத்தின்(வைணவ) சாதி ஆதிக்கத்திற்கு எதிராக எழுந்த புதிய சமயங்களையும், வழிபாடுகளையும் (புத்தம், சமணம், நாட்டார் வழக்கியல் வழிபாடுகள், வள்ளலாரின் வழி, அய்யாவழி...) இந்துத்துவவாதிகள் ஒரே குடையின் கீழ் இந்து என முழக்கமிடுவது அனைவருக்கும் தெரிந்ததே. ஆதிக்க எண்ணமுடைய சில வலைப்பதிவாளர்களும் இந்த முயற்சியை தொடர்ந்து செய்து வருகின்றனர். அய்யாவழியைப் பற்றி பரப்புகிற பொய்யான புழுகு வரலாற்றை எதிர்ப்பதும், உண்மையை பதிவு செய்வதும் மட்டுமே இந்த பதிவின் நோக்கம்.


எப்படி ஒரு கையின் விரல்கள் பல வடிவங்களில் பன்முக தன்மையுடன் இருக்கிறதோ அதுபோல பன்முக சமயங்கள் அதன் கூறுகளோடும், காலத்திற்கேற்ற மறுமலர்ச்சியுடனும் எதிர்கால தலைமுறைக்கும் எடுத்து செல்லப்பட வேண்டும். இந்துத்துவம் என்கிற புளியமர நிழலில் அழிந்துபோகும் அழகிய ரோஜாசெடியாக நமது பண்பாடு ஆபத்தை சந்திக்கிறது. இந்த முறை பண்பாட்டை அழிப்பவர்கள் இந்துத்துவவாதிகள். அவர்களது எழுத்துக்கள் பொய்யையும் உண்மையாக நம்ப வைக்கும் கலையில் கைத்தேர்ந்தது. விழிப்பாக இருப்போம்.


________


குறிப்பு:


அய்யாவழி பற்றிய சில வரலாற்று உண்மைகளை பதிய வைக்கும் நோக்கத்தில் பாலபிரஜாதிபதி அடிகள் அவர்களை சந்தித்து உரையாடினேன். அந்த உரையாடல்கள் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு செய்யப்பட்டாலும், தொழில்நுட்ப விடயங்கள் இன்னும் இறுதி வடிவம் பெறாத காரணத்தால் பதிவு செய்ய இயலவில்லை. பாலபிரஜாதிபதி அடிகளாரின் பேட்டியை வெகுவிரைவில் பதிவு செய்ய முயல்கிறேன்.

Saturday, January 20, 2007

ஆணும், பெண்ணும் சமமா?

ஜார்கண்ட் மாநிலத்தை சார்ந்த 17 வயதான அபர்ணா குமரி தனது காதலனை திருமணம் செய்ய பணம் சேர்க்க வேலை தேடி பாட்னாவிற்கு சென்றாள். காலை 8 மணி துவங்கி இரவு 11 மணிவரை வீட்டுவேலை செய்ய மாதம் 500 ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது; இரண்டு வருடமாகியும் இன்னும் பணத்தை பார்க்கவில்லை. சமையல்கட்டில் ஒரு போர்வையும், சமுக்காளமும் தான் தூங்க உதவுகிறது. வீட்டு முதலாளியம்மா இல்லாத வேளை அவர்களது 20 வயதான மகனின் பாலியல் தொந்தரவுகள் பதட்டத்தை அதிகரிக்கிறது. எந்த நேரத்தில் இந்த நரிக்கு வேட்டையாவோமோ என்ற நிலை. முதலாளியம்மாவின் அடியும், உதையும் வேறு ரணமாய் உடலையும், மனதையும் வாட்டுகிறது.

******
ஆந்திராவை சார்ந்த 45 வயதான லட்சுமி சுகோல் பள்ளிக்கு சென்றதே இல்லை. 15 வயதில் தன்னைவிட 20 வயது அதிகமான ஒருவருடன் திருமணமானது. 17 வயதில் முதல் குழந்தையும்,23 வயதில் இரண்டாவது குழந்தையும் பிறந்த பின்னர் லட்சுமி வேலைக்கு செல்ல துவங்கினார். மாதம் 70 ரூபாய் கூலி பேசப்பட்டு வீட்டுவேலை கிடைத்தது. ஆனால் பணம் ஒழுங்காக கிடைக்கவில்லை. வீட்டு முதலாளியால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். 35 வயதில் கண்பார்வை குறைந்ததால் அறுவை மருத்துவம் செய்தவேளை பார்வை பறிபோனது. மகளும் வீட்டு வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை.

*******

இது கற்பனை கதையல்ல. ஒவ்வொரு நிமிடங்களிலும் நடந்துகொண்டிருக்கும் உண்மை வாழ்க்கை. உலகமெங்கும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிறைந்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பல வடிவங்களில் காணப்படுகிறது:

 • உடல் ரீதியான வன்முறைகள்.
 • பாலியல் அடிப்படையிலானவை.
 • உளவியல் அடிப்படையிலானவை
 • பெண்ணை விற்பனை பொருளாக்குவது

பெண்களை (கணவன் உட்பட) அடிப்பது, உதைப்பது, பாலியல் அத்துமீறல், வரதட்சணை தொடர்பான கொடுமைகள், மனைவியின் சம்மதமில்லாத பலாத்கார உறவு, பெணுறுப்பை சிதைத்தல் மற்றும் இது போன்ற பழக்கங்கள், உழைப்பை சுரண்டுவது, கேலி பேசுவது, குழுவாக கிண்டலடிப்பது (ஈவ்டீசிங்??), உணவிற்கும் அடிப்படை தேவைக்குமான பணம் கிடைக்காமல் தடுப்பது, வீட்டில் அடைத்து வைப்பது, கட்டாய திருமணம் செய்து வைப்பது என கொடுமைகள் என பல வடிவங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் கண்டனத்திற்கும், தண்டனைக்குரியதுமான மனித நாகரீகமற்ற குற்றங்கள். இந்த குற்றங்கள் வேலையிடங்கள், பொதுஇடங்கள், வீடு என எல்லா இடங்களிலும் நிறைந்து காணப்படுகிறது.

குடும்பங்களில் ஆண்களின் குரல்களே முடிவாகி போவதும், பெண்ணுக்கு கருத்து சொல்லும் உரிமை இல்லாமல் இருப்பதும் தான் நிதர்சனமான உண்மை. திருமணம், கல்வி போன்ற முக்கிய முடிவுகளில் கூட பெண்ணின் விருப்பத்திற்கு விடுவதில்லை. அதே வேளை வயதில் இளைய ஆண்களின் விருப்பங்கள் நிறைவேறிவிடும். 'என்ன இருந்தாலும் அவன் ஆண்பிள்ளை' என ஆணாதிக்க குரல் சிறுவயதிலேயே புகுத்தப்படுகிறது. கிராமங்களில் பல வீடுகளில் பெண் குழந்தைகளுக்கு போதிய உணவளிக்காமல் ஆண் குழந்தைகளை மட்டும் சத்தான உணவளித்து வளர்க்கும் முறை இயல்பாகவே இருக்கிறது. பெண் குழந்தைகளை வேலைக்கு அனுப்பி அந்த பணத்தில் ஆண் பிள்ளைகளை படிக்க வைக்கிற நிலை இன்றும் இருக்கிறது. மனைவியை கணவன் அடிப்பதும் உதைப்பதுமான வன்முறை இந்திய சமூகத்தில் அதிகமாக காணப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கொடுமைகளில் படிக்காதவர்கள் முதல் மேற்படிப்புகள் படித்தவர்கள் ஈடுபடுகிறார்கள். குடும்பம் பெண்ணுக்கு அடிமை விலங்கு பூட்டி அழகு பார்க்கிறது.

மதங்கள் அனைத்தும் பெண்ணுக்கு வழங்கி இருக்கும் இடமானது கொடுமையானது. வழிபடும் உரிமை, வழிபாடு நடத்தும் உரிமை, சுதந்திரமாக ஆடைகள் அணியும் உரிமை இவை அனைத்தும் மதங்களின் சட்டங்கள் கட்டுப்படுத்துகின்றன. இந்த விடயத்தில் ஆபிரகாமிய மதங்களும், இந்து மதமும் ஒன்றுக்கொன்று குறைந்ததல்ல. மதம் பெண்ணை உரிமைகளற்ற அடிமையாக நடத்துகிறது.

திரைப்படம், பத்திரிக்கை, தொலைக்காட்சி, விளம்பரங்கள் என ஊடகங்கள் பெண்ணை விலை பொருளாக, கேவலமாக சித்தரிப்பதும், ஆணாதிக்கத்தை ஊக்குவிக்கும் போக்குமே காணப்படுகிறது.

பணியிடங்களில் பெண் என்பதால் நிர்வாக பதவிகளுக்கு பதவி உயர்வு மறுக்கப்படுவது, ஊதியத்தை குறைப்பது, பாலியல் வன்கொடுமைகள் என பலவிதமான பாதிப்புகள்.

சமூக அமைப்புகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் முறையாக இல்லை. இந்திய பாராளுமன்றத்தில் பெண்ணுக்கு 30% இடப்பங்கீடு சட்டம் கொண்டுவருவதில் கூட முடிவற்ற நிலையாக ஆணாதிக்கம் மலிந்து காணப்படுகிறது. தொழிற்சங்கங்களில் பெண்ணுக்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு.

காரணங்கள்:

 1. பெண்களாக பிறந்த காரணத்தால் பாலியல் வன்புணர்ச்சி, பிறப்புறுப்பு சிதைத்தல் (circumcision/genital
  mutilation), பெண்சிசுக்கொலை, பாலியல் அடிப்படையிலான குற்றங்கள் பெண்களுக்கு எதிராக நடத்தப்படுகிறது. இதற்கான அடிப்படை காரணம் சமூகம் பெண்கள் மீது திணித்திருக்கும் பாலியல் பார்வையும் அது சார்ந்த கடமைகளுமான சமூக ஆதிக்கம்.
 2. ஆணோடு ஏற்படுத்தப்படுகிற உறவினால் பெண் குடும்ப வன்முறை, வரதட்சணை, சதி போன்றவைக்கு பலியாகிறாள். பெண்ணை உடமையாகவும்; தகப்பன், கணவன், மகன், சகோதரன் என ஆண்களின் 'பாதுகாப்பில்' அடங்கி நடக்க வேண்டியவளாக சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் பார்வையினால் இந்த வன்முறைகள் உருவாகின்றன.
 3. தான் சாந்திருக்கும் சமூக அடையாளத்தினால் பெண்கள் அடக்குமுறையை சந்திக்கிறார்கள். குழப்பம், கலவரங்கள், மோதல்களின் போது அவள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை, சாதியை, மதத்தை, இனத்தை, கலாச்சாரத்தை சார்ந்தவள் என்பதால் பாலியல் வன்புணர்ச்சி, கொலை, சித்திரவதை செய்வது. இதற்கு காரணம் சமூகம் பெண்ணை, ஆணின் உடமையாகவும், அவள் மீது திணித்திருக்கும் பாலியல் பார்வையும் சார்ந்தவை

இந்த நிலையில் பெண்கள் மீதான குடும்ப வன்முறையை தடுக்கும் சட்டமொன்றை இந்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டங்கள் சரியாக நிறைவேற்றப்பட வேண்டியது அவசியம். அதேவேளை, பெண்கள் மீதான பார்வையை, அணுகுமுறையை சமூகம், குடும்பம், மதங்கள், நிறுவனங்கள், ஊடகங்கள், அமைப்புகள் என அனைத்தும் மாற்ற அடிப்படை சமூக மாற்றம் அவசியமானது. பெண், ஆண் சமஉரிமை பற்றிய விழிப்புணர்வு கல்வி இன்றைய காலத்தில் மிக அவசியமாகிறது.

பெண்ணுக்கு வழங்கும் கல்வியும், உயிமையும் நமது சமூகத்தின் அவலங்களை துடைத்தெறியும். ஆணாதிக்க சிந்தனையால் பின்னப்பட்டிருக்கும் உலகை விடுவிக்க பெண், ஆண் சமஉரிமை மிக அவசியம்.

_____

டிஸ்கி: ஆணாக பிறந்த ஒருவன் பெண்களின் பிரச்சனையை அணுகுவதில் குறைபாடுகள் இருக்கலாம். குறைகள் இருப்பின் சுட்டுங்கள் என் கண்களையும், மனதையும் திறக்கிறேன்.

Friday, January 19, 2007

கீதையின் தர்மம்!

கீதை பற்றி உறவினர் ஒருவர் "கீதையை கிருஷ்ணன் தானே எழுதினார்." என்றார். பெரும்பாலானவர்கள் கீதையை கிருஷ்ணன் எழுதியதாக அல்லது கிருஷ்ணன் சொல்ல யாரோ அருகிலிருந்து எழுதியதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கிருஷ்ணன் யார்? கிருஷ்ணனை எப்போது பார்ப்பனீயம் தெய்வமாக வழிபட துவங்கியது என்பதை கடந்த பகுதியில் பார்த்தோம். இந்த பகுதியில் கீதை உண்மையில் நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பான வரலாற்று நூலா என்பதை பார்க்கலாம்.

மகாபாரத கதைகள் புனையப்பட்ட பின்னரே கீதை எழுதப்பட்டு இடையில் புகுத்தப்பட்டது. புத்தனின் நெறியால் பார்ப்பனீயத்தின் கொடுங்கோன்மை ஆட்டம் கண்டு இருந்த காலமது. மக்கள் முதல் மன்னர்கள் வரை புத்த சங்கங்களில் இணைந்து புத்த நெறியை பரப்பிய வண்ணமிருந்தனர். தங்களது ஏகபோக ஆதிக்கத்திற்கு முடிவு ஏற்பட்டுவிடுமென்பதை உணர்ந்த புரோகித தொழில் செய்தவர்கள், ஆதிக்கத்தை தக்கவைக்க பல வழிகளை உருவாக்கினர். புத்த சங்கங்களில் ஊடுருவி அதன் மூலம் செல்வாக்கை பெருக்கி புத்த நெறியில் பார்ப்பனீய அடையாளங்களையும், வழிபாட்டு முறைகளையும் புகுத்தினர். இந்த கொடுமைகளை எதிர்த்த மன்னர் தூக்கத்தில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அம்மன்னனை கொலை செய்தவர்கள் புரோகித கூட்டத்தினர். மெல்ல மீண்டும் அதிகாரங்கள் மீண்டும் புரோகிதர்கள் கைககளில் வர துவங்கியது. மன்னர்கள் பல வழிகளில் மாற்றப்பட்டு மீண்டும் பார்ப்பனீய மதத்திற்கு ஆதரவு வழங்கினர். இந்த சூழலில் புத்த மார்க்கத்தின் புரட்சிகர கருத்துக்களால் கவரப்பட்ட இளைஞர்களை கவரும் விதமாக கவிதை நடையில் எழுதப்பட்டது தான் கீதை. இப்படி புத்தன் உருவாக்கிய நெறிக்கு எதிராக கீதை எழுதப்பட்டு மகாபாரதக் கதையில் இடைச்சொருகப்பட்டது. தொடர்ந்து புரோகித கூட்டத்தினர் வர்ணாஸ்ரம தர்மத்தை காக்க கீதையின் வழி முயற்சி தொடர்ந்தது.

புராணக்கதைகளுக்கும், வரலாற்றிற்கும் வேறுபாடுகள் ஏராளமுண்டு. வரலாறு என்பது பலவிதமான ஆதாரங்களை அடிப்படையாக கொண்டது. கிருஷ்ணன் பர்வத மலையை தூக்கினார் என்பதற்கு எந்த ஆதாரத்தை அடிப்படையாக கொண்டது? தங்கள் பக்கம் மக்களை திரட்ட மதங்களுக்கு கட்டுக்கதைகளும், அவதாரங்களும் தேவைப்படுகிறது. மக்களை நம்ப வைப்பதற்காக தங்கள் அவதாரங்கள் மிகவும் வல்லமையுள்ளவர்கள், மனிதசக்திக்கு அப்பாற்பட்டவர்கள் என மிகைப்படுத்தல் கதைகள் அவசியமாகிறது. அவதாரங்கள் ஒரு துரும்பை கூட தூக்க இயலாதவர் என கதைகள் புனைந்தால் அவற்றை யாரும் கடவுளாக வழிபடமாட்டார்கள். அதனால் தான் அணில், குரங்கு முதல் மனித அவதாரமாக சொல்லப்படுகிற கிருஷ்ணன் வரை மிகைப்படுத்தல்கள் தேவைப்படுகிறது. இந்த மிகைப்படுத்தல் தான் புராணக்கதைகளின் சிறப்பு. ஹாரிபாட்டர் நாவலை படிக்கும் ஒருவர் மனதில் எப்படி கிளர்ச்சியை, வேகத்தை உருவாக்குமோ அப்படியே இந்த கதைகளும் கற்பனை உலகில் உலாவ வைக்கலாம் ஆனால் நிஜவாழ்க்கைக்கு எந்த பலனுமில்லை. கிருஷ்ணன் பற்றிய புராணகதைகளுக்கு வரலாற்று ஆதாரங்கள் எதுவுமில்லை. ஆரியர்களுக்கும், மண்ணின் மக்களுக்கும் நடந்த யுத்தங்களை வைத்து கற்பனை கதைகளையும், கதாபாத்திரங்களையும் உருவாக்கி பின்னப்பட்ட நூல்கள் தான் கீதை, மகாபாரதம், இராமாயணம் போன்ற அனைத்தும். இந்த கதைகளை பலர் நம்பினாலும் இந்த ஆதாரங்கள் இல்லாத நம்பிக்கைகளை வரலாறாக ஒப்புக்கொள்ள இயலாது.

வரலாறு என்பது நிச்சயமில்லாத அனுமானங்களை மையமாக வைத்து சுழல்வதல்ல. வரலாறு அடைப்படையான ஆதாரங்களை உள்ளடக்கியது. சிந்து சமவெளி நாகரீகம் இருந்தது என்பதும், அது எப்படி இருந்தது என்பதற்கும் வரலாற்று ஆதாரங்கள் உண்டு. அதற்கான தொல்பொருள் துறை சான்றுகள் பல இருக்கின்றன. ஒருவனது நம்பிக்கை இன்னொருவனது அடிப்படையான வரலாற்று இருப்பினை கேள்வி எழுப்ப இயலாது. வரலாற்று அடிப்படையில் அந்த நம்பிக்கை உண்மையா என சரிபார்ப்பது தான் அறிவுள்ளவர்கள் செய்யும் பணியாக இருக்க இயலும். வரலாற்றிற்கு முக்கியமான அடிப்படை இது.

உதாரணமாக; உங்கள் வீடு இருக்கும் இடத்தில் தான் எனது தாத்தாவின் குலதெய்வம் புதைந்து கிடக்கிறது என்பது என் நம்பிக்கையாக இருக்கலாம். ஆனால் ஆதாரங்கள் எதுவுமில்லாமல் எனது நம்பிக்கையை மட்டும் வைத்து உங்கள் வீட்டை இடித்து நிலத்தை தோண்டி குலதெய்வத்தை தேட இயலாது. அதற்கு எந்த அடிப்படையான ஆதாரமும் இல்லை. அது நம்பிக்கையாதலால் தோண்டி பார்க்க வேண்டுமென்னும் போது பிரச்சனை ஆரம்பித்துவிடுகிறது. நமக்குள் பிணக்குகளின் ஆரம்பமே இங்கு தான் துவங்குகிறது.

இராவணனுக்கு பத்து தலை, பிள்ளையாருக்கு யானை முகம், கீதையை கண்ணன் அருளினார் என்பதெல்லாம் நம்பிக்கை அடிப்படையிலானது. நம்பிக்கைகளுக்கு ஆதாரமில்லை. கண்ணை மூடிக்கொண்டு உங்களுக்கு பிடித்த யாராவது அருகில் இருப்பது போல நினைக்கும்போது, அந்த நினைப்பிலேயே அவர்கள் இருப்பதாக தெரியும். கண்ணை திறந்து பார்த்தால் அவை அனைத்தும் காணாமல் போகும். பார்ப்பனீய "இந்துமதத்தின்" அடிப்படைகளுள் ஒன்று இந்த மாயை தத்துவம். மாயை என்பது அடிப்படை ஆதாரமற்ற fantacy. கீதையும் இப்படியான மாயையை சுற்றியே பின்னப்பட்டிருக்கிறது.

மனித இனத்திற்கு வரலாற்றையும், புராண கற்பனைக் கதைகளையும் பிரித்து அறியும் தன்மை மிக அவசியமானது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இந்திய மக்களின் விடுதலைக் குரலுக்கு இந்த வேறுபாடு தான் மிகமுக்கியமானது.

காந்தியார் கீதையை அதிகம் நேசித்தவர் என்பது உலகறிந்த உண்மை. பகவத்கீதை பற்றி காந்தியார் "1888-1889ல் முதன் முதலாக கீதையை நான் அறிய நேர்ந்த போது அது ஒரு வரலாற்றுடன் தொடர்புடைய படைப்பல்ல என்பதை உணர்ந்தேன். உண்மையான போர்க்களத்தில் நடந்தது என்ற பெயரில், மனிதர்களின் இதயத்தில் நிகழ்ந்த இருவேறு வகைப்பட்ட எண்ணப் போராட்டங்களின் புனைந்துரைதான் அவ்வாறு வர்ணிக்கப்பட்டது" என்றார்.

கற்பனையாக புனையப்பட்ட ஒரு உரையாடலை புனித புத்தகமாக்கி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது பார்ப்பனீய பண்பாட்டு படையெடுப்பு நடத்தியிருக்கிறார்கள். இந்த "புனித புத்தகம்" தான் பசுக்களை காப்பாற்றும் வேளை தலித்மக்களை கொன்று குவிக்க இந்துத்துவவாதிகளால் பயன்படுத்தபடுகிறது. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கு நாடுகளுக்கு கீதையையும், கீதையின் மாயையான வார்த்தைகளை முன்வைத்தும் இந்திய மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் பார்ப்பனீய ஆதிக்கத்தை மூடிமறைக்கிறார்கள். பொருள் சார்ந்த வாழ்க்கையில் இருந்து உறவுகளையும், மனஅமைதியையும் தேடி அலையும் மேற்கத்திய மனிதர்கள் பலர் கீதையின் மாயையில் மயங்கி அலைந்து வழங்கும் நன்கொடைகளும், பொருட்களிலும் பார்ப்பனீய மடங்களும், இந்துத்துவ கொலைபாதக கொள்கையும் மீண்டும் பரப்பப்படுகிறது.

'யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்ப்பவதி பாரத
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்"

(பகவத்கீதை அத்தியாயம் 4 - ஸ்லோகம் 7)

yadaa yadaa hi dharmasya glaanirbhavati bhaarata .
abhyutthaanamadharmasya tadaatmaanaM sR^ijaamyaham.h .. 4\.7..

"பாரதா! எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் மேலோங்குமோ, அப்போது நான் அவதாரமெடுப்பேன்" இது தான் மேற்காணும் கீதை வாக்கியத்தின் பொருள்.

மேலோட்டமாக இதை படிக்கும் அனைவரும் இந்த வார்த்தைகளில் மயங்கி விடுவதுண்டு. இதில் என்ன குறை? அதர்மத்தை அழித்து, தர்மத்தை உருவாக்க கண்ணன் அவதரிப்பது சரிதானே என கேட்கலாம். ஆனால் கீதை எதை தர்மம் என்கிறது? எதை அதர்மம் என்கிறது? எதற்கு அவதாரம்?

கீதைக்கு உரை எழுதியும், பாண்டிச்சேரியில் ஆசிரமம் வழி கீதையை பரப்பியவருமான அரவிந்தர், "ஆண்டவன் தர்மத்தை காப்பாற்ற அவதாரம் எடுத்துவருவது என்பது பெரிதும் பயனற்ற ஒன்றாகும். சர்வசக்தி படைத்தவனான கடவுள் அதன்மூலம் (கடவுளின் சக்தி மூலமே) நல்லதை, நியாயங்களைக் காப்பதையும், நல்லவைகளைப் போற்றுவதையும் செய்யலாமே" என்றார்.

அவதாரம் என்பது என்ன? வேடம் கொண்டு வருவது. கடவுள்களுக்கு எல்லாம் கடவுளும் சகல வல்லமையும் பொருந்தியவர் தான் கிருஸ்ணன் என்கிறார்கள். அப்படியான வல்லமை பொருந்தியவருக்கு மாறுவேடங்களின் அவசியமென்ன? இந்த மாறுவேடங்களின் பின்னால் ஏதாவது அறநெறிகள் உண்டா? பாபர் மசூதியை இடித்த பின்னர் இந்துத்துவவாதிகள் அனுமார் பாபர்மசூதி கட்டிடத்தின் மீது நின்றதாக கதையளந்தார்கள். நீதிமன்றத்தையும், மக்களாட்சி அமைப்பையும் மதிக்காமல் காலித்தனத்தை நிறைவேற்றிவிட்டு பழியை ஒரு சாதாரண குரங்கு மீது சுமத்திவிட்டு தப்பிக்கும் மதவெறி முயற்சி இது.

தர்மம் எது, அதர்மம் எது என பிரித்து பார்க்கலாம். இன்றைய உலக நடைமுறையிலான தர்மம், அதர்மம் பற்றிய வரைமுறை ஒன்று. கீதையில் சொல்லப்படுகிற தர்மம், அதர்மம் வேறொரு வகை.

கீதையில் "நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன். நான் நினைத்தாலும் அவற்றை மாற்ற இயலாது' எனவும் 'பெண்களும், சூத்திரர்களும் பாவமான யோனிலிருந்து பிறந்தவர்கள்' என்னும் கீதையின் வாக்கியங்களோடு 'கீதையின் தர்மத்திற்கு' தொடர்பு உண்டு. நான்கு வர்ணங்கள் அடிப்படையில் மனிதனை பிரித்து இழிவுநிலையை புகுத்தியதே பார்ப்பனீயம். அந்த பார்ப்பனீய தத்துவத்தை கடவுளாகிய தானே படைத்ததாக கூறுகிறார் கிருஷ்ணன். அதில் பாவநிலையில் பிறந்தவர்கள் என இழிவும் புகுத்தப்பட்டுள்ளது.

கீதையில் சொல்லும் தர்மம் வர்ணாஸ்ரம (சனாதான) குலதர்மம். பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என மனிதர்களை நான்கு வகையினராக பிரித்து ஒவ்வொரு குலத்துக்கும் ஒவ்வொரு நீதியை உருவாக்கிய மனுதர்ம சாதி ஆதிக்க தர்மம் தான் கீதையின் தர்மம். கீதையில் சாதி வேறுபாடு இல்லை என்பவர்கள் ஆதாரங்களை காட்டுகிறவர்கள் மீது பாய்கிறார்களே தவிர, ஆதாரத்திற்கு பதில் சொல்வதில்லை. "பார்ப்பனீய புனிதகீதையில்" சாதி இல்லை எல்லோரும் சமம் என்றால் சிதம்பரம், காஞ்சி, திருப்பதி, ஸ்ரீரங்கம் தொடங்கி வடஇந்தியா வரை கோயில் கருவறைகளில், இந்து கோவில்களில் ஆதிக்கசாதியினர் தவிர மற்றவர்களுக்கு "தீட்டு" இருப்பது ஏன்? இது தான் கீதையின் தர்மமா? இல்லை இதை கடைபிடிப்பவர்கள் இந்துக்கள் இல்லையா? இந்த அதர்மத்தை அழிக்க எந்த கண்ணன் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் கழித்து வருவான்? கீதையின் தர்மம் கோவில்களின் புனிதம் காப்பது என்ற பெயரில் பெண்களை, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை "தீட்டு" என ஒதுக்கி வைப்பது. பீஅள்ளுதல், கல்லுடைத்தல், தெளுவிறக்குதல் என பரம்பரை அடிமைகளாக செய்ய வைக்கப்பட்ட கொடுமைகளிலிருந்து விடுபட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வியில், வேலைவாய்ப்பில் முன்னேற இடப்பங்கீடு உரிமை அளித்தால் அதற்கெதிராக நீதி அமைப்புகளை மிரட்டுவது, சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்துவது தானா கீதையின் தர்மம்? "நாயும், பூனையும் நிமிர்ந்து நடக்கும் தெருக்களில் மனிதனை மட்டும் கூனிகுறுகி நடக்க வைக்கும்" சாதி சனாதான கொடுமை தான் தர்மமா? இந்த தர்மம் எப்போது மீறப்படுகிறதோ அப்போதெல்லாம் கிருஷ்ணன் குலதர்மம் காக்க அவதரிப்பார். ஆதிக்கசாதியினருக்கு சாதகமான தர்மத்தை காப்பாற்ற தான் கிருஷ்ணனின் கீ(க)தை உரையாடல்.

ஆனால் இந்திய நாட்டின் தர்மம் வேறு. அது மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையில் சட்டங்களுக்குள் இயங்க வேண்டிய தர்மம். இந்திய சட்டப்படி தீட்டு என்பது தண்டிக்கப்படவேண்டிய குற்றம். கிருஷ்ணனின் மதுரா கோவில் முதல் கிராமங்களில் இருக்கும் பார்ப்பனீய கோவில்கள் வரை இந்த தீட்டு அர்ச்சகர் உரிமை வடிவில் இருக்கிறது. இந்திய சட்டமும் கைகட்டி நின்று வேடிக்கை பார்க்கும் அளவு மனுதர்மத்தின் ஆதிக்கம் வலுவானது.

ஒடுக்கப்பட்ட மக்களே! "எங்கெல்லாம் மனித தர்மம் தலைதூக்குமோ அங்கெல்லாம் மனுதர்மத்தை காக்க அவதாரம் எடுப்பேன்" என கீதையை திருத்திபடியுங்கள்.
______

கீதை பற்றிய முந்தைய கட்டுரைகளை படிக்க: கீதையின் அடிமைக் கட்டுகள்!, சாதிமுறை பற்றி கீதை! பகவத்கீதை: யாருடைய புனிதநூல்?

சித்தெறும்பு முதுகில பாறாங்கல்லு!

"சிட்டுக்குருவி தலையில பனங்காய பாருங்க! சித்தெறும்பு முதுகில பாறாங்கல்ல பாருங்க! பத்து வயசு முடியும் முன்னே என் குடும்ப பாரம் தானுங்க! அஞ்சு வயசு உழைச்சா தான் நாலு ஜீவன் வாழுங்க!" குழந்தை தொழிலாளியின் வேதனையை இந்த பாடல் வரிகளால் சொல்ல இயலாது.

"குட்டி" என ஒரு திரைப்படம் சில வருடங்களுக்கு முன்னர் வந்தது. அந்த திரைப்படத்தில் சமூகத்தின் மேல்தட்டு வீட்டு குழந்தை ஒருவன் நல்ல பள்ளியில் படித்து வளர்கிறான். அடிதட்டு ஏழையின் குழந்தை அந்த வீட்டில் பாத்திரம் தேய்க்கவும், வீட்டு வேலை செய்யவும் பயன்படுத்தப்படுகிறாள். அந்த குழந்தை தொழிலாளி பற்றிய நல்ல ஒரு திரைப்படம். பார்த்ததும் இந்த சமூகம் மீது கோபமும், குழந்தைகள் நிலை பற்றிய அழுகை தான் வந்தது. நமது மக்களுக்கு அடுத்த தொலைகாட்சி தொடரில் குழந்தைகள் பற்றிய அக்கறை மறந்து போயிருக்கும். ஆனால் நமது கண்ணெதிரில் கடைகளில், வீடுகளில், வீதிகளில், தொழிற் பட்டறைகளில் குழந்தைகள் கடினமாக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

சென்னையில், வடபழனி அருகே பிரபலமான ஒரு உணவு விடுதியில் உணவருந்த சென்றிருந்தேன். சாப்பிட்டு முடித்ததும் பாத்திரங்களை எடுக்கவும், சுத்தப்படுத்தவும் வந்த சிறுவர்களுக்கு வயது சுமார் 10 தான் இருக்கும். இதை கண்டதும் மனம் கனமாக இருந்தது. சாப்பிட்ட உணவே வயிற்றிலிருந்து கத்துவது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. தொடர்ந்து நகரில் பல இடங்களில் குழந்தைகள் வேலை செய்வது காண முடிந்தது.

கன்னியாகுமரியில் இருந்த வேளை செங்கல் சூளைக்கு சென்றிருந்தேன். அங்கு ஒரே ஒரு சூளையில் மட்டும் 4 சிறுவர்கள் வேலை செய்தனர். அந்த பகுதியில் சுமார் 15க்கும் மேல் சூளை அமைந்துள்ளது. அந்த சிறுவர்கள் காலையில் 7 மணி முதல் மாலை 4 அல்லது 5 மணி வரை அயராது கடும் வெயிலில் கடுமையாக உழைக்கிறார்கள். ஒரு நாள் ஊதியமாக சுமார் 75 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கிடைக்கிறது. அவர்களது கண்களில் ஒரு வித சோகமும், ஏக்கமும் கலந்திருந்ததை காணமுடிந்தது.


//குழந்தைத் தொழிலாளிகளை வேலையில் அமர்த்துவதற்குத் தமிழகத்தில் தடை இல்லையா?பள்ளிக்குச் சென்று குழந்தைப் பருவத்தை அனுபவிக்க வேண்டிய இந்தப் பிஞ்சுகள், கல்லுச் சுமப்பது மிகவும் வேதனையாக உள்ளது. 40 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தை ஆண்டு வரும் கழக ஆட்சியாளர்களின் மேல்தான் கோபம் வருகிறது. இலவசமாகத் தொலைக்காட்சி கொடுத்து வாக்கு வாங்கும் கலைஞர், அதில் ஒரு பகுதியை ஆவது இச் சிறுவர் நலன்களுக்கு ஒதுக்கி அவர்களைப் படிக்க வைத்தால் போதும். // நண்பர் வெற்றி குழந்தை தொழிலாளர்கள் படங்களை கடந்த பதிவில் பார்த்து மனம் வேதனைப்பட்டிருந்தார்.

இலவசங்கள், ஆடம்பரங்கள் என மக்களின் பணம் வீணடிக்கப்படுவதை விட்டு அடிப்படைக்கல்வியும், தொழில்நுட்ப கல்வியும் வழங்குவது மிக அவசியம். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இதே நிலை தான். இதில் ஒரு கட்சி உயர்ந்தது, இன்னொரு கட்சி நல்லது என கைகாட்டி தப்பிக்க இயலாது. உலகவங்கியிடமும், சர்வதேச தொழிலாளர் அமைப்பிடமும் குழந்தை தொழில் ஒழிப்பு அல்லது மறுவாழ்வு என்ற பெயரில் இந்திய அரசும், மாநில அரசுகளும் வாங்கிய, வாங்கும் கோடிக்கணக்கான பணம் எங்கே என்ற கேள்வி இந்திய மக்களால் கேட்கப்படவேண்டும்.

உலகமெங்கும் ஆறு குழந்தைகளில் ஒன்று குழந்தை தொழிலாளி. இவர்கள் ஆபத்தான வேலைகளில் 12 மணிநேரம் வரை ஈடுபடுத்தப்படுகிறார்கள். உலகமெங்கும் 5-15 வயது வரையுள்ள குழந்தை தொழிலாளர் 250 மில்லியன் பேர் ஆசியாவில் மட்டும் 61% குழந்தை தொழிலாளர்கள். சுமார் 153 மில்லியன் பேர். இந்த குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப 760 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அவசியமாகிறது. கடந்த 4 வருடங்களாக நான் காலந்துகொள்ளும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐக்கிய நாட்டு சபையின் தொழிலாளர் நலத்தை பேணும் அமைப்பு) கூட்டத்தில் பலமுறை இந்திய அரசு அதிகாரிகள் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பது பற்றி பேசிய பேச்சுக்கள் நினைவில் வந்தன.

வீட்டு வேலைகள், விவசாயம், உற்பத்தி சார்ந்த தொழில்கள், சுரங்கங்கள் மற்றும் கல் குவாரிகள், விடுதிகள், உணவகங்கள், சுற்றுலா சார்ந்த தொழில்கள், அமைப்பு சாரா தொழில்கள் என எல்லா இடங்களிலும் மோசமான நிலையிலான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

மிகமோசமான நிலையிலான குழந்தை தொழில் என ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு அடையாளம் காட்டுபவை:

 • கொத்தடிமை மற்றும் கட்டாய அடிப்படையிலான வேலை.

 • பாலியல் தொழில்கள் மற்றும் ஆபாசபடங்கள் போன்ற சட்டத்துக்கு எதிரான வேலைகள்.

 • ஆபத்தான வேலைகள்.

குழந்தை தொழிலாளர்கள் உருவாக குடும்ப வறுமை ஒரு அடிப்படை காரணியாக அறிப்படுகிறது. வறுமைக்கு குறைந்த கூலியும், போதிய வேலைவாய்ப்பின்மையும் அடிப்படையான காரணங்கள். கல்வி கட்டணங்களும் அதற்கான செலவுகளும் அதிகமாக காணப்படுவதால் பள்ளிக்கு அனுப்ப இயலாத நிலை. படித்தாலும் அதற்கேற்ற வேலை கிடைக்காது என்ற நம்பிக்கையின்மை. இந்த சூழல்களால் பல குழந்தைகள் கொத்தடிமைகளாகவே வாழ்கிறார்கள்.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே குழந்தை தொழிலாளர்களை பாதுகாக்கும் சர்வதேச சட்டங்களை இந்தியா கையெழுத்திட்டது. இருந்தும் குழந்தை தொழிலாளர் இருக்கிற நாடுகளில் முதல் இடத்தில் இந்தியா இருக்கிறது. "குழந்தைகளே கனவு காணுங்கள்! இளைஞர்களே கனவு காணுங்கள்" என அறைக்கூவல் விடுக்கிற இந்திய குடியரசு தலைவர் கூட மேல்தட்டு குழந்தைகளை தான் சந்தித்து அவர்களை அறிவியல் வல்லுநர்களாக உருவாக்க ஆர்வமாக உழைக்கிறார். செங்கற் சூளைகளில், தோல் பதனிடும் தொழிற்சாலைகளில், கம்பளம் செய்யும் இடங்களில் என இந்த ஊக்கம் கொடுப்பது யாரோ?

இந்தியாவில் மட்டும் 100 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள் இருப்பதாக கணக்கிடப்படுகிறது. இவர்கள் பெரும்பாலும் நகர்புறங்களில் வேலையில் இருக்கிறார்கள்.

காரணம் என்ன?

குடும்பத்திற்கு வருமானம் சேர்க்க இவர்கள் நிர்பந்தபடுத்தப்படுகிறார்கள். ILO கணக்குப்படி 1990களில் 40% இந்தியர்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டவர்கள். பெரும்பாலும் இந்த வறிய குடும்பத்தினரே குழந்தைகளை வேலைக்கு அனுப்புகின்றனர். பெரும்பாலும் இந்த குழந்ததகள் 7 அல்லது 8 வது வயதில் வேலை செய்ய அனுப்பப்படுகிறார்கள். அவர்களில் அத்க பெரும்பான்மையானவர்கள் சாதி அடுக்குமுறையில் ஒடுக்கப்பட்ட மக்கள் என்பதும் ஒரு வேதனையான உண்மை.

குழந்தை தொழிலாளர் முறையை தடை செய்து சட்டங்கள் இருந்தும் எத்தனை பேர் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது கேள்வியே! இந்த கொடுமையான முறையை மாற்ற அரசுக்கு திறனில்லை. சட்டங்களை மட்டும் இயற்றி தடை செய்துவிட்டு சட்டத்தை மதிக்கிறார்களா? இல்லை மீறப்படுகிறதா என கண்காணிப்பு இல்லை. தாசில்தார்கள், மாவட்ட ஆட்சித்துறைம் வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை என அனைத்து துறைகளிலும் லஞ்சமும், அரசியல் கட்சிகளின் சிபாரிசு நெருக்கடிகளுக்கும் வளைந்து கொடுக்கும் போக்கில் குழந்தைகளின் முதுகில் பாராங்கல் சுமத்தப்படுகிறது. தொழிலாளர் நலத்துறையின் அதிகாரிகள் வேலையிடங்களுக்கு சென்று சட்டங்கள் மீறப்படுகிறதா என பரிசோதனை செய்வதில்லை. அதற்காக போதிய எண்ணிக்கையில் ஊழியர்களும் அந்த துறையிடம் இல்லை. 1990 களில் இந்திய கம்பளங்கள் குழந்தை தொழிலாளர்களால் செய்யப்படுகிறது என சர்வதேச சந்தையில் புகார்கள் எழுந்தன. அதனால் இந்திய கம்பளங்களை தடைசெய்யப் போவதாக பல மேற்கத்திய அரசுகள் அறிவித்தன. இந்திய அரசும், அதிகாரிகளும், பானியா கும்பல்களும் அதற்கெதிராக வரிந்து கட்டினார்கள். ஆனால் குழந்தை தொழில் இன்னும் கம்பளம் நெய்யும் வேலையில் இருக்கிறது என்பதே வேதனையான உண்மை.

இந்தியா கையெழுத்திட்ட 120க்கும் மேற்பட்ட சர்வதேச சட்டங்களும், நெறிமுறைகளும் (ILO conventions) குழந்தை தொழில் முறையை அகற்ற வலியுறுத்துகிறது.

இந்திய சட்டம் "உயிருக்கும், உடல் நலத்திற்கும் ஆபத்தான தொழில்களின் குழந்தை தொழில் முறையை தடை" செய்தது. இதில் தான் வழக்கமான சட்டத்தின் குழப்பம். எந்த வேலை ஆபத்தானது, உடல்நலத்திற்கு எதிரானது என தீர்மானிப்பது யார் அல்லது எந்த வரைமுறை? இதில் எந்த தெளிவும் இல்லை. குழந்தை தொழிலாளர்களை ஈடுபடுத்துபவர்கள் இந்த சட்ட ஓட்டையில் தப்பித்தனர். குப்பை பொறுக்குதல், சாக்கடை சுத்தம் செய்தல், வைரகற்கள் பட்டை தீட்டுதல், சேலை நெய்தல், செங்கல் சூளை, தோல் பதனிடும் தொழில், கல்குவாரிகள், சுரங்கங்கள் என பல தொழில்கள் குழந்தைகளுக்கு ஆபத்தானவை. இன்னும் குழந்தைகள் அந்த தொழில்களில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

"குழந்தை தொழிலாளர் தடைசெய்யப்படாத துறைகளில் வேலையின் தன்மை, சூழலை முறைப்படுத்த" சட்டம் வலியுறுத்துகிறது. சுமார் 85% குழந்தைகள் அமைப்புசாராத துறையில் வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு எந்த பாதுகாப்பு திட்டங்களும் இல்லை.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக தடைசெய்திருக்கிறது. இந்த அடிப்படையில் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை வேலையில் அமர்த்துவதை கடந்த அக்டோபர் மாதம் தடைசெய்து இந்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

முறையான திட்டங்கள் இல்லாமல் இந்த தடைகளை அமல்படுத்துவது இயலாது என்பது தான் உண்மை. குழந்தை தொழில் முறையை ஒழிக்க:

 • பெற்றோர்களின் வேலைக்கான கூலி அவர்களது வாழ்க்கைக்கு தேவையான அளவு மாற்றப்படவேண்டும். குழந்தை தொழிலை ஒழிக்க வறுமையை ஒழிப்பது அவசியமானது; அதற்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் அடிப்படையான விடயம்.
 • போதிய வருமானமில்லாத அனைவருக்கும் கட்டாய இலவச அடிப்படைக்கல்வியும், தரமான தொழில்நுட்ப கல்வியும் அவசியமானது.
 • குழந்தை தொழிலாளர்களுக்கான புனர்வாழ்வு திட்டங்கள் உருவாக்கப்படல் அவசியம்.
 • படித்தவர்களுக்கான வேலை கிடைக்கும் நம்பிக்கையான சூழலை உருவாக்க வேலைவாய்ப்பு திட்டங்கள் அவசியம்.
 • குழந்தைகளை கடத்தி சென்று விற்கும் கும்பல்கள் இடைத்தரகர்கள் மீது சட்டத்தின் வழி கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

குழந்தை தொழில் ஒழிக்கப்பட இப்படியான பல நடவடிக்கைகள் அவசியம். அரசுகளுக்கும், அதிகாரிகளுக்கும் மனதில் நேர்மையும், நன்னெறியும் உண்டா?

"சிட்டுக்குருவி தலையில பனங்காய பாருங்க! சித்தெறும்பு முதுகில பாறாங்கல்ல பாருங்க! பத்து வயசு முடும் முன்னே என் குடும்ப பாரம் தானுங்க! அஞ்சு வயசு உழைச்சா தான் நாலு ஜீவன் வாழுங்க!" மீண்டும் பாடல்...

°°°°°°°°°°

சாம்பியா நாட்டில் கல்லுடைக்கும் குழந்தைகள்

சாம்பியாவில் 2 கிலோமீட்டர் வரை சென்று தண்ணீர் சுமக்கும் குழந்தைகள்சாம்பியா நாட்டில் கல்லுடைக்கும் குழந்தைகள்குடும்பத்தினரோடு சாம்பியாவில் கல்லுடைக்க உதவும் குழந்தைகள்
சாம்பியாவில் காய்கறி விற்கும் சிறுமி_________
மற்ற படங்கள்: செங்கல் சூளை, கன்னியாகுமரி, இந்தியா.

என் கேமராவின் பார்வையில்!

உங்கள் பார்வைக்கு நான் எடுத்த சில படங்கள்! பல இடங்களில், பல நேரங்களில் எடுக்கப்பட்டவை இவை.


Thursday, January 18, 2007

இடப்பங்கீடு சில நியாயங்கள்!

இந்திய அரசியலில் இடப்பங்கீடு (இடஒதுக்கீடு) பல விளைவுகளையும், மாற்றங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. இடப்பங்கீட்டினை எதிர்ப்பவர்கள், ஆதரிப்பவர்கள் என இரு பக்கங்களாக பிரிந்து நிற்கிறது இந்தியர்களது வாழ்வு. பெரும்பான்மை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்களது வாழ்வில் இடப்பங்கீடு சமூகநீதியை கொண்டுவரும் என நம்பிக்கை கொள்கின்றனர். அதே வேளை இடப்பங்கீடு கொள்கை நாட்டின் வளர்ச்சியை பாதிக்க வைக்கும் செயல் என ஆதிக்க சாதியினர் கொதிக்கின்றனர். இடப்பங்கீடு நாட்டின் வளர்ச்சியை பாதிக்குமா இல்லை ஒரு சிலரின் ஆதிக்கத்தை மாற்றி எல்லோரின் வளர்ச்சியையும் உருவாக்குமா? இது தான் இன்றைய தலைமுறை இந்தியர்களின் விவாதப்பொருள். இந்தியாவின் உள்நாட்டு அரசியல் இடப்பங்கீட்டை மையமாக வைத்தே நகர்கிறது.

இடப்பங்கீடு உருவாக காரணமான சூழல்:மன்னர் ஆட்சிக்குப் பின்னரான ஆங்கிலேய காலனியாதிக்க ஆட்சியிலும் பிராமணர்களது செல்வாக்கு உயர்ந்திருந்தது. சுமார் 3.2 சதவிகிதம் மட்டுமே இருந்த பிராமணர்கள் சகல துறைகளிலும் பெரும்பான்மையான வாய்ப்புகளை தாங்கள் மட்டுமே அனுபவித்தனர். ஆங்கில வழிக் கல்வியும், முன்னர் மன்னர் காலங்களில் இருந்த அதிகாரமும் அவர்களுக்கு இந்த நிலையை கொடுத்தன. சுதந்திரப் போராட்டத்தின் போதும் அதன் பின்னரான நாட்டின் தலைமையும் அவர்களிடமே இருந்தன. அடுத்த நிலைகளில் சத்திரியர்கள், வைசியர்கள் பதவிகளில், கல்வியில் இடம்பெற்றனர்.

ஆங்கிலேய ஆட்சியின் அரசு உத்தரவுகளிலும் இதற்கான ஆதாரங்களைக் காணலாம். "மாவட்டங்களில் உள்ள சார்புநிலைப் பணிகளில் சில குறிப்பிட்ட குடும்பங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. எனவே அந்த பகுதிகளில் முதன்மை சாதிகளுக்குப் பதவிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்" (அரசு உத்தரவு எண். 128 (2), வருவாய்த்துறை, 1854).

"பெரும்பான்மை மக்கள் எவ்வித உதவியுமின்றிக் கற்றுக்கொள்ள இயலாத நிலையில் இருக்கிறார்கள்" (இந்திய அரசு, கல்விக் குழுவின் அறிக்கை, அத்தியாயம்1, 1883 ஆம் ஆண்டு).

இந்த இரண்டு குறிப்புகளும் ஆங்கிலேய ஆட்சியில் யார் அதிகமாக பயனடைந்தனர் என்ற தகவலை தருகின்றன. மன்னர் கால பட்டயங்கள் யாருக்கு நிலம் அதிகமாக தானமாக வழங்கப்பட்டன என்பதை தெளிவுப்படுத்துகின்றன. தரமான வேலையும் கல்வியும் பெறும் உரிமை, நில உரிமை, அரசியல் உரிமை, சமூக பங்கேற்பு உரிமை, அரசியல் அதிகாரம் என எல்லாவற்றிலும் சாதி ஆதிக்கத்தின் தாக்கத்தைக் காணலாம்.

இதற்குச் சான்றாக சில புள்ளி விபரங்களை காணலாம்.

 • சென்னை பல்கலைகழகத்தில் 1918ல் இளங்கலை படிப்பில் மொத்த மாணவர் எண்ணிக்கை 15,209. அதில் பிராமணர்கள் 10269. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்கள் 3,213. மற்றவர்கள் எண்ணிக்கை 1,748.
 • முதுகலை படிப்பில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 511. அதில் பிராமணர்கள் 389. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்கள் 65. மற்றவர்கள் 53.
 • ஆசிரியப் பயிற்சியில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 1,498. பிராமணர்கள் 1,094. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்கள் 163. மற்றவர்கள் 241.
 • சட்டக்கல்வியில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 54. பிராமணர்கள் 48. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்கள் 4. மற்றவர்கள் 2.
 • பொறியியல் கல்வியில் (சிவில்) மொத்தம் 120 இடங்களில் பிராமணர்கள் 21. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்கள் 15. மற்றவர்கள் 23.
கல்வியில் பெற்ற பெரும்பான்மை இடங்களை பயன்படுத்தி அரசு சார்ந்த நிர்வாகப்பணிகள் சிலரின் நன்மைக்காகவே பயன்பட்டது. அந்த நிர்வாக பதவிகள் மேலும் மேலும் அவர்கள் சொத்து சேர்க்க, கல்வி, வேலைவாய்ப்பை பெற பெரும் துணையாக இருந்தன. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆதிக்கசாதியினரின் நிர்வாகத்தின் முன் கைகட்டி, வாய்பொத்தி சேவகம் செய்யும் எடுபிடி வேலைகளில் மட்டுமே வரமுடிந்தது. இந்த சாதி அரசியல் சுழலில் சிக்காமல் தப்பிய பிற்படுத்தப்பட்ட மக்களின் அறிஞர்கள் உயர் பதவிகளை பெற பல தடைகள் ஏற்படுத்தப்பட்டன.
சுதந்திரத்திற்கு முன்னர் சென்னை மாகாண அளவிலான நிர்வாகப் பணிகளில் ஆதிக்க சாதியினரின் நிலை பற்றிய சான்றுகள் கீழே:
 • 1912ல் அரசு துணை ஆட்சியாளர்கள் பதவியில் 77 இடங்களில் பிராமணர்கள் (55%). 30 இடங்களில் (21.5 சதவிகிதம்) மட்டுமே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்கள்.
 • 1912ல் நீதிபதிகளாக இருந்தவர்களில் மொத்தம் 83.3 % பேர் பிராமணர்கள். 16.7 சதவிகிதம் மட்டுமே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்கள்.
 • 1912ல் அரசு மாவட்ட முன்சிப் பதவிகளில் 72.6 % இடங்களில் பிராமணர்கள் அனுபவித்தனர்.
 • 1917ல் முக்கிய ஆரசு பதவிகளில் தாசில்தாராக 59.7 %, துணை தாசில்தாராக 69.1 சதவிதம், ஆங்கில தலைமை எழுதராக 66.7 சதவிகிதம், மாவட்ட வழக்குமன்ற சிரஸ்தாராக 59.1%, சார்பு வழக்குமன்ற சிரஸ்தார் 75% இடங்கள் என பெரும்பான்மையான பதவிகளை அனுபவித்தது பிராமணர்கள்.
 • 1844ல் உருவாக்கப்பட்ட சென்னை மாகாண சபையில் பார்ப்பனர்கள் ஆதிக்கமே நிலைத்திருந்தது. 1885ல் இந்திய தேசிய காங்கிரஸ் முதல் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற 5 பேர்களில் 4 பேர் பிராமணர்கள். பின்னர் அமைக்கப்பட்ட மாநில காங்கிரஸ் குழுவில் 15 பேரில் 14 பேர் பிராமணர்கள்.
 • 1904ல் மொத்த 16 இந்திய சிவில் சர்வீஸ் பதவிகளில் 15 பேர் பிராமணர்கள்.
 • 1914ல் மொத்த 128 மாவட்ட முன்சிப் பதவிகளில் 93 பேர் பிராமணர்கள்.
 • 1944ல் மொத்த 650 பட்டதாரிப் பணியாளர்களில் 452 பேர் பிராமணர்கள்.
இடப்பங்கீட்டிற்கான குரல்களும் எழுச்சிகளும்
நியூட்டனின் இயக்கவியல் விதிக்கு ஏற்ப ஆதிக்க சாதியினரின் இந்த போக்கு இந்திய சமூகத்தில் எதிர்விளைவுகளை உருவாக்கியது. பாதிக்கப்பட்ட மக்களின் தலைமை அரசியல் அரங்கில் தனது குரலை உயர்த்தத் துவங்கியது. அதன் துவக்கம் சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சியின் வெற்றியிலிருந்து ஆரம்பித்தது. 1920ல் சென்னை மாகாண தேர்தலில் வெற்றிபெற்று நீதிக்கட்சி ஆட்சியில் வந்ததும் சில முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. நீதிக்கட்சியின் ஆட்சியில் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகள் பிற்படுத்தப்பட்ட, தலித் மக்களுக்கு மிகவும் முக்கியமானவை.

கிராமப்புறங்களில் ஆயிரக்கணக்கான துவக்கப் பள்ளிகள் நிறுவப்பட்டன.
ஆதிதிராவிடரின் குழந்தைகளைக் கட்டிடத்திற்குள் அனுமதியாத பொதுப் பள்ளிகளுக்கு அரசு மானியம் அளிக்கப்படமாட்டாது என்று 1923 இல் ஆணைப் பிறப்பித்தது.
வகுப்புவாரி உரிமையை அரசின் கொள்கையாக ஏற்று 1921 செப்டெம்பர் 16ம் நாள் முதல் முறையாக வகுப்புவாரி சட்டம் பிறப்பித்தது. அதன்படி அரசுப்பள்ளிகளில், வேலைவாய்ப்பில் 12 இடங்களில் 2 பிராமணரும், 6 பிராமணர் அல்லாதவர்களுக்கு, 1 ஆதிதிராவிடர்களுக்கு, 2 இஸ்லாமியர்களுக்கு, 2 ஆங்கிலோ இந்தியர்களுக்கு என முதல் இடப்பங்கீடு உருவாக்கப்பட்டது.
1942ல் சட்ட அமைச்சராக இருந்த அண்ணல் அம்பேத்கார் அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடப்பங்கீட்டிற்காக முன்வரைவை வைசிராய் லின்லித்கோவிடம் சமர்ப்பித்தார். அதனடிப்படையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 8.33% பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. 1946ல் அந்த இடப்பங்கீடு 12.33% என உயர்த்தப்பட்டது. 1947ற்கு பின்னர் அது 16.66% என உயர்த்தப்பட்டது. அதே போன்று 1950ல் பழங்குடி மக்களுக்கு 5% இடப்பங்கீடு உருவாக்கப்பட்டது.

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் இடப்பங்கீடு வழங்க 26, ஜனவரி 1950ல் இந்திய அரசியல் சாசனம் வழி உரிமை ஏற்பட்டது. சுதந்திரமடையும் எந்த நாடும் விளிம்புநிலை மனிதர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்துவது இயல்பு. அந்த அடிப்படையில் தான் இந்த அரசியல் சட்ட உரிமையும் அமைந்தது.

அரசியல் சட்டம் வழங்கிய அந்த உரிமையை எதிர்த்து அதுவரை பெரும்பங்கை அனுபவித்து வந்தவர்களான பிராமணர்கள் சென்னை உயர்நீதிமன்றத்திலும் பின்னர் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தனர். 'கல்வி நிலையங்களில் இடப்பங்கீடு' என்பது violated the fundamental right to non-discrimination (முறையாக புரிந்துகொள்ள ஆங்கில வார்த்தைகளில்) ஆகவே அதை நீக்கவேண்டும் அந்த வழக்கு தொடுக்கப்பட்டது. "சமூகநீதியை நிலைநாட்ட உருவாக்கப்பட்ட அரசியல் உரிமையை" அரசியல் சட்டத்திற்கு முரணானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பெரியாரின் இயக்கப் பணிகள் அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் சாதி ஆதிக்கத்தை கடுமையாக எதிர்க்க துவங்கியிருந்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பெரியார் தலைமையில் போராட்டங்கள், கூட்டங்கள் என எதிர்ப்புகள் கிளம்பியது. நாடெங்கிலும் எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசு அரசியல் சட்டத்தை திருத்தி Clause 4 to the Article 15: "Nothing in this article or in clause (2) of Article 29 shall prevent the State from making any special provision for the advancement of any socially and educationally backward classes of citizens or for the Scheduled Castes and the Scheduled Tribes." என்ற பகுதி அரசியல் சட்டத்தில் சேர்த்தது. சமூகநீதியை காப்பற்றவே முதல் முறையாக அரசியல் சட்டம் திருத்தப்பட்டது (தற்போதைய உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்டத்தின் 9வது அட்டவணை பற்றிய தீர்ப்பு இந்த திருத்தத்துடன் தொடர்புடையது).

கொள்கை அளவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடப்பங்கீடு மத்திய, மாநில அரசுபணிகளில் கட்டாயமாக்கப்பட்டது. அதே வேளை பிற்படுத்தப்பட்ட மக்களின் இடப்பங்கீடு மாநில அரசின் நல்லெண்ண நடவடிக்கைக்கு விடப்பட்டது. 1953ல் பிற்படுத்தப்பட்டோர் நிலை பற்றி ஆராய ஸ்ரீ காகா கலேல்கர் ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆணைக்குழுவின் அறிக்கை 1955ல் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் "பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் இடப்பங்கீடு அளிக்கப்படவேண்டும்" என பரிந்துரைக்கப்பட்டது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி இந்த அறிக்கையின் பரிந்துரைகளை முறையாக அமல்படுத்தவில்லை.

சமூக மாற்றத்தை உருவாக்கிய மண்டல் விசாரணைக்குழு அறிக்கை:20.01.1978ல் பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா ஆட்சியில் "சமூக அடிப்படையிலும் கல்வி அடிப்படையிலும் பின்தங்கிய மக்களை அடையாளம் காண" பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் என்ற பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கான பரிந்துரைகளை பெற அரசு அமைத்த இரண்டாவது விசாரணைக்குழு இது. சமூக, பொருளாதார, கல்வி அடிப்படையில் பின்தங்கிய மக்களை அடையாளம் காண 8 அணுகுமுறைகளை இந்த விசாரணைக்குழு கையாண்டது.
 • நாடெங்கும் மக்களிடமும், அமைப்புகளிடமும் கேள்வித் தொகுப்பைக் கொடுத்து தகவல்களை திரட்டியது.
 • இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 84 மாவட்ட தலைநகரங்கள், 87 கிராமங்கள், 171 முறையான கருத்தமர்வுகள் நடத்தப்பட்டன. மக்களிடமிருந்தும், அமைப்புகளிடமிருந்தும் நேரடி வாக்குமூலங்கள் பெறப்பட்டன. அரசு துறை நிறுவனங்களின் அதிகாரிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உற்றுப்பினர்கள் கருத்துக்கள் சேகரிக்கப்பட்டன.
 • பத்திரிக்கையாளர்கள், 6வது பாராளுமன்ற உறுப்பினர்கள் சாட்சியம் நேரடியாக பெறப்பட்டன.
 • பேராசிரியர் M.V சீனிவாசன் அவர்கள் தலைமையில் 15 அறிஞர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு நாடு முழுவதும் சமூக, கல்வி நிலை பற்றிய ஆய்வு கணனி மூலம் செய்யப்பட்டது.
 • வட இந்தியா, தென்னிந்தியா என இரண்டாக பிரித்து ஒரு ஒப்பீட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. டாட்டா சமூகவியல் நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியது.
 • 1891 முதல் 1931 வரையில் சாதி அடிப்படையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்து, சாதிகளின் சமூக வளர்ச்சி பட்டியலிடப்பட்டது. இதில் சாதிக்கும், பரம்பரை தொழிலுக்குமான தொடர்பு கவனத்தில் எடுக்கப்பட்டது.
 • இந்திய மானுடவியல் அளவை மையம், கல்கத்தா, உதவியுடன் கிராமங்களில் ஆய்வு செய்யப்பட்டு சமூக, பொருளாதார வாழ்வு பற்றிய செய்திகள் திரட்டப்பட்டன. இது தவிர அகில இந்திய நிறுவனங்களிடமிருந்தும் செய்திகள் சேகரிக்கப்பட்டன.
 • இந்திய சட்ட நிறுவனத்தின் உதவியுடன் 20 வருடங்களாக வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்புகள் பரிசீலிக்கப்பட்டு பிற்படுத்தப்பட்டவர்களின் வளர்ச்சி மற்றும் இடஒதுக்கீடு சம்பந்தமான சட்ட நுணுக்கங்கள் கணிக்கப்பட்டன.
மண்டல் குழு சமூக மற்றும் கல்வி அடைப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை வரையறை செய்ய மூன்று அடிப்படை காரணிகள் நிர்ணயம் செய்தது.
அவை:
 1. சமூக அடிப்படைக் காரணிகள்: சாதி, குடும்பம், திருமணம், பெண்கள் உழைப்பு.
 2. கல்வி அடிப்படைக் காரணிகள்: எந்த சாதியினர் 5-15 வயது வரை பள்ளிக்கு செல்லாதவர்கள் மாநில படிப்பறிவற்றவர்கள் சராசரியை விட 25% அதிகம் உள்ள சாதியினர். எந்த சாதியினர் 5-15 வயது வரை பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்டவர்கள், இதில் மாநில சராசரியை விட 25% அதிகம் உள்ள சாதியினர். எந்த சாதியில் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் மாநில சராசரியை விட 25% குறைவாக உள்ள சாதியினர்.
 3. பொருளாதார அடிப்படைக் காரணிகள்: எந்த சாதியில் மாநில சராசரிக் குடும்ப சொத்தை விட 25% குறைவாக குடும்பச் சொத்து வைத்துள்ளனரோ அவர்கள். எந்த சாதியில் குடிசையில் வசிப்போர் மாநில குடிசைவாசிகளின் சராசரியை விட 25% அதிகமாக உள்ளனரோ அவர்கள். எந்த சாதியில் அரை கிலோமீட்டருக்கு மேல் நடந்து சென்று குடிநீர் எடுப்பவர்கள் 50% உள்ளனரோ அவர்கள். எந்த சாதியில் நுகர்கடன் வாங்குவோர் மாநில சராசரியை விட 25% அதிகமாக உள்ளனரோ அவர்கள்.
வகுப்புவாரியாக முற்படுத்தப்பட்ட சாதியினர் மொத்தமாக 17.58%, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் 22.56%, சிறுபான்மையினர்கள் 16.16%, பிற்படுத்தப்பட்டவர்கள் 52.10%. இந்திய மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மொத்தம் 74.66 சதவிகிதம் பேர். இவர்களுக்கு சமூகநீதி வழங்க அறிவியல் ஆய்வு அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட மண்டல் குழு தனது அறிக்கையை பரிந்துரைகளுடன் 31.12.1980ல் அரசிடம் சமர்ப்பித்தது. அவற்றில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இடப்பங்கீடு வழங்கப்படவேண்டும் என்ற பரிந்துரையும் அடங்கும்.
மண்டல் குழு விசாரணை அறிக்கையை காங்கிரஸ் கட்சியில் இருந்த ஆதிக்க சாதியினர் எதிர்த்தனர். அதோடு மண்டல் அறிக்கையை பரணில் போட்டது காங்கிரஸ் அரசு.

பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் காவலன் வி.பி.சிங்:
1989ல் நான் பள்ளி இறுதியாண்டை கடந்திருந்த வேளை இந்திய அரசியலும் சூடாக ஆரம்பித்தது. இந்திய அரசியலில் "மண்டல் கமிசன்" என்ற வார்த்தை அதிகம் உச்சரிக்கப்பட்டது இந்த காலத்தில் தான். தொடர்ந்த ஆண்டுகளில் இடஒதுக்கீடு பற்றியும் அதை சார்ந்த அல்லது எதிர்ப்பு அரசியலை அனுபவிக்க நேர்ந்தது. பிரதமர்.வி.பி.சிங் அவர்களது ஆட்சியை இழக்க வைத்தது மண்டல் விசாரணை அறிக்கை. மதவெறியில் மக்களை திரட்டும் "ராமர்கோவில் அரசியலை" பாரதீய ஜனதா கட்சியும், சங்பரிவாரங்களும் முன்னெடுக்கக் காரணமும் இந்த மண்டல் அறிக்கை தான்.

இவை நடந்தது எப்படி?

1989ல் மண்டல் கமிசன் அறிக்கையை நிறைவேற்றி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவதாக இந்திய நாடாளுமன்றத்தில் பிரதமர். வி.பி.சிங் அறிவித்தார். வடஇந்தியா முழுவதும் அரசிற்கு எதிரான எதிர்ப்புகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன. மாணவர் விடுதிகளில் தங்கியிருந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் ஆதிக்கசாதியினரால் மிரட்டப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டனர். இடப்பங்கீட்டை எதிர்த்து மாணவர் கிளர்ச்சியை உருவாக்க 'திட்டமிட்டு' மாணவன் ஒருவனை தீக்குளிக்க வைத்தனர். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை தங்களுக்கு சாதகமாக ஒன்று திரட்ட "இராமர்கோயில்" விவகாரத்தை உணச்சிகரமாக்கி மதவெறி அரசியலை சங்பரிவார அமைப்புகள் துவங்கின. இவை அனைத்தையும் ராஜீவ்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி வேடிக்கை பார்த்தது. இப்படியான நெருக்கடி நிலையை சந்தித்த பின்னரும் இடப்பங்கீடு கொள்கையை அரசு அமல்படுத்தியது. இராமர்கோவில் ரத யாத்திரையை அத்வானி தலைமையில் துவக்கி சங்பரிவார அமைப்புகள் வி.பி.சிங் அரசை கவிழ்த்தது. இந்திய அரசியலில் பதவி சுகங்களுக்காக கொள்கையில் சமரசம் செய்யாத மனிதராக வி.பி.சிங் அவர்களை உயர்த்தியது இந்த நிகழ்வுகள். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மனங்களில் வி.பி.சிங் இதன் மூலம் சிறப்பான இடத்தை பெற்றார்.

1990ல் இந்திய அளவில் அரசுதுறைகளில் ஆதிக்க சாதியினர்:
கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் பெரும்பான்மை இடங்களை அனுபவித்தது யார் என சண்டே வார இதழில் 1990 டிசம்பர் 23ல் வெளிவந்த சில தகவல்கள். இவை அனைத்தும் இடப்பங்கீட்டிற்கு எதிர்ப்பை ஆதிக்கசாதியினர் அதிகமாக்கிய 1990ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்கள்.
 • துணைச் செயலாளர்கள் 500 பேரில் 310 பேர் (62%) பிராமணர்கள்.
  மாநில தலைமைச் செயலாளர்கள் 26 பேரில் 19 பேர் (73.07%) பேர் பிராமணர்கள்.
 • ஆளுநர்கள் மற்றும் உதவி ஆளுநர்கள் 27 பேரில் 13 பேர் (48.15%) பிராமணர்கள்.
 • உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேரில் 9 பேர் ( 56.25%) பிராமணர்கள்.
  உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேரில் 166 பேர் (50.30%) பேர் பிராமணர்கள்.
  தூதுவர்கள் 140 பேரில் 58 பேர் (41.42%) பிராமணர்கள்.
  பல்கலைக்கழக துணைவேந்தர்கள் 98 பேரில் 50 பேர் (51.02%) பிராமணர்கள்.
 • மாவட்ட நீதிபதிகள் 438 பேரில் 250 பேர் (57.07%) பிராமணர்கள்.
 • ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 3300 பேரில் 2376 பேர் (72%) பிராமணர்கள்.
 • பாராளுமன்ற லோக்சபை உறுப்பினர்கள் 530 பேரில் 190 பேர் (35.85%) பிராமணர்கள்.
 • பாராளுமன்ற மேலவை உறுப்பினர்கள் 244 பேரில் 89 பேர் ( 36.48%) பேர் பிராமணர்கள்.
நாடு விடுதலையடைந்து 43 ஆண்டுகளுக்கு பின்னர் இருந்த நிலை இது. மன்னர் கால ஆட்சியிலும், ஆங்கிலேய காலனியாதிக்க ஆட்சியிலும் ஆதிக்க சாதியினரின் அதிகாரம் எவ்வளவு இருந்ததோ அதற்கு சற்றும் குறையவில்லை. தொடர்ந்து சட்டப்போராட்டங்கள் நடந்தன. இந்த சட்டப்போராட்டத்தில் திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீரமணியின் பங்கு குறிப்பிடத்தக்கது. அதன் விளைவாக இடப்பங்கீட்டிற்குப் பாதுகாப்பை சட்ட வடிவில் கொடுப்பதற்காக அரசியல் அமைப்பின் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது (9 அட்டவணை பற்றி தனிப்பதிவாக பார்க்கலாம். யாராவது இது பற்றி வலைப்பதிவில் எழுதியுள்ளார்களா தெரியவில்லை). அன்றைய தமிழக முதல்வர் என்ற முறையில் இடப்பங்கீடு அரசியல் சட்ட பாதுகாப்பை அடையும் பணியில் ஆதரவு வழங்கியதற்காக செல்வி. ஜெயலலிதாவிற்கு "சமூகநீதி காத்த வீராங்கனை" பட்டத்தை வீரமணி வழங்கினார்.

எதிர்ப்பாளர்களின் "திறமை" விளக்கங்கள்:
இடப்பங்கீடு அமல்படுத்தப்பட்ட பின்னரும் இந்திய உயர்கல்வி கழகங்களான ஐ.ஐ.டி (Indian Institue of Technology), ஐ,ஐ.எம் (Indian Institute of Management) போன்றவைகளில் ஆதிக்க சாதியினரின் கரங்களே வலுவாக இருந்தன; இருக்கின்றன. இந்த நிறுவனங்களே நாட்டின் உயர்ந்த தொழில்நுட்ப, பொருளாதார, அறிவியல் வல்லுநர்களை உருவாக்கி வருகிறது. ஆதிக்க சாதியினரின் உயர்கல்வி நிலைய ஆதிக்கத்தின் விளைவு அனைத்து உயர் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறைகளிலும் குறிப்பிட்ட சாதியினரை அதிமாக காணமுடிகிறது.

இடப்பங்கீட்டை உயர்கல்வி நிலயங்களில் அமல்படுத்த நடந்த அரசியல் போராட்டங்களின் விளைவாக திரு.மன்மோகன் தலைமையிலான தற்போதைய காங்கிரஸ் அரசு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உயர்கல்வியில் 27% இடப்பங்கீடு அறிவித்தது. மருத்துவர் சங்கங்களையும், மருத்துவக் கல்வி மாணவர்களையும் கிளர்ச்சியில் ஈடுபட வைத்து மக்களாட்சி அமைப்புகளையே மிரட்டினர் உயர்பதவிகளில் இருந்த ஆதிக்கசாதியினர். "உயர்கல்வி கழகங்களில் இடப்பங்கீடு வழங்குவதால் கல்வியில் தரம் அழிந்துவிடும்", "ஆராய்ச்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு தகுதி மற்றும் திறமை அடிப்படையில் தான் இடம் வழங்கவேண்டும். இதில் இடப்பங்கீடு என சமரசம் செய்தால் நாட்டின் எதிர்கால அறிவியல் வளர்ச்சிக்கு தடையாகும்", " என 'அறிவுசீவிகள்' தங்களது வாதங்களை முன்வைத்தனர். இந்த வாதங்களுக்கு பின்னால் தாங்கள் மட்டுமே திறமையானவர்கள் என்னும் ஆதிக்கமன அரசியல் வெளிப்பட்டது.

இந்திய சமூக அமைப்பில் காலங்காலமாக சமூக, பொருளாதாரம், கல்வி, அரசியல் சுகங்களை அனுபவிப்பவர்களுக்கு திறமை உருவாக்க பொருளாதார, அரசியல், பின்புலங்கள் என வாய்ப்புகள் அதிகம். கல்வி, வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்பட்ட மக்களின் சந்ததிகள் "திறமை" என்ற இவர்களின் அளவுகோலில் வர தலைமுறைகளுக்கு கல்வி, பொருளாதார பின்புலங்கள் அவசியமாகிறது.

இன்றைய ஆதிக்க சாதியினர் குறிப்பிடும் 'திறமைகள்' அவர்களது தலைமுறை கல்வியால், அரசியல் பலத்தால், பெரும்பான்மை இடங்களை தாங்களே அனுபவித்து வந்த பெரும்பான்மை வாய்ப்புகளில் கிடைத்தவையே. வேதம் படித்தவர்களுக்கும் மன்னர்களிடம் செல்வாக்கு இருந்தது. அவர்களுக்கு நிலம், பொருள், அதிகார பதவிகள் கிடைத்தன. இரு பிறப்பாளர்கள் மட்டுமே பிறப்பில் உயர்ந்தவர்கள் என்ற மனுதர்மத்தை பயன்படுத்தி சூத்திரர்களும், பஞ்சமர்களும் வேதம் படிக்கவோ, படிப்பதை கேட்கவோ தடை விதிக்கப்பட்டன. வேதம் படிப்பதை கேட்ட காதில் ஈயம் அல்லது மெழுகு காய்ச்சி ஊற்றவேண்டும் என்ற சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதனால் கல்வி அவர்களுக்கு மட்டுமான ஏகபோக உரிமையானது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வியறிவு மறுக்கப்பட்டவர்களாக அடிமை நிலையில் தள்ளப்பட்டனர். எல்லாம் தங்களுக்காக மட்டுமே வைத்துக்கொண்டவர்கள், அனைத்தும் மறுக்கப்பட்டவர்களிடம் "திறமை" என தங்களது அளவுகோலை காட்டுவது மனித நாகரிகமற்ற சாதி ஆதிக்கத்தின் புதிய வடிவம்.

இன்றைய சூழலிலும் புதிய கல்வித்துறைகளில் குறிப்பிட்ட ஆதிக்க சாதிகளின் மேலாதிக்கமே காணப்படுகிறது. வளம் குன்றிய துறைகள் மட்டும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வந்து சேர்கிறது. கல்வியின் பணி மனிதனை மனிதனாக மாற்றுவது, அறிவு வளர்ச்சியடைந்தவர்களாக்குவது என்ற அடிப்படையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வியில், வேலைவாய்ப்பில் இடப்பங்கீடு அவசியமாகிறது. பாதிப்படைந்தவர்களுக்கான ஊன்றுகோல் தான் இடப்பங்கீடு.

இடப்பங்கீடும் நாராயண மூர்த்திகளும்:
இந்தியாவின் உயர்கல்வி நிலையமான ஐ.ஐ.டி முழுவதும் ஆதிக்கசாதியினர் மயமாகவே இருந்து வருகிறது. செல்வாக்கைப் பயன்படுத்தி உயர்கல்வி, வேலைவாய்ப்பை உருவாக்கியவர்கள் இன்று திறமை பற்றி பேசுவது கேவலமானது. 'இன்போசிஸ்' நிறுவனர் திரு. நாராயணமூர்த்தி இடப்பங்கீடு எதிர்ப்பாளர் வரிசையில் முன்னணியில் இருக்கிறார். தலைமுறைகளாக அதிகாரமும், கல்வியும், வளமும் பெற்ற ஆதிக்க சாதியிலிருந்து 'நாராயணமூர்த்தி' போன்றவர்கள் உருவாக முடிகிறது. 38 ஆண்டுகளுக்கு முன்னர் திரு. நாராயணமூர்த்திக்கு ஐ.ஐ.டியில் கிடைத்த கல்வியும், பொருளீட்டும் வாய்ப்புகளும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டனவா? இது அடிப்படையான கேள்வி.

சந்தையையும், போட்டியையும் மையமாக வைத்து பணம் குவிப்பது மட்டுமே வாழ்வியல் கொள்கை என நினைத்தால், சமூகம் அழிவுநிலைக்கு தள்ளப்படும். மனிதர்களை அவர்களது சுயமரியாதையுடனும், தன்மானத்துடனும் வாழ வழி ஏற்படுத்துவது ஒரு நல்ல அரசின் கடமை. சமூகநீதிக்கான போராட்டத்தில் முதலாளித்துவ, பார்ப்பனீய சிந்தனைகளுக்கு எதிர்சிந்தனைகளை உருவாக்குவதன் வழியாகவே சமத்துவ சமுதாயம் என்ற இலக்கை அடையமுடியும் என்பதை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் உணரும் காலம் நெருங்குகிறது.

இடப்பங்கீடு பயணம் செய்யவேண்டிய பாதை:உலகயமயமாக்கல், தனியார்மயம் பொருளாதார கொள்கையால் இன்று வேலைவாய்ப்புகள் தனியார்துறைக்கு நகர்ந்திருக்கிறது. செல்வாக்கு, அதிகாரத்தை பயன்படுத்தி தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவன வேலைவாய்ப்புகளை அதிகமாக அனுபவிப்பது பெரும்பாலும் ஆதிக்கசாதியினர்களுக்கானதாக மாறியிருக்கிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இளைய தலைமுறை தகுதி, திறமை என்ற முடிவற்ற அளவுகோல்களில் சிக்கிப் போராடுகிறது. கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை தனியார் துறைக்கு நகர்ந்திருக்கும் இன்றைய சூழலில் தனியார் துறையில் வேலைவாய்ப்பு மற்றும் தனியார் நிறுவனங்களில் கல்வியில் இடப்பங்கீடு சட்டம் அவசியாமாகிறது.

சாதி ஆதிக்கமற்ற சமுதாயம் படைக்க சாதி ஆதிக்கம் தடையாக இருக்கும் வரை இந்தியாவில் இடப்பங்கீடும் அவசியமாகிறது. சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பையொட்டி இடப்பங்கீடு பற்றிய அரசியல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. சமூகநீதிப் போராட்டங்கள் தடைகளை தாண்டியே வளர்ந்தன. இடப்பங்கீடு என்னும் உரிமைக்கான போராட்டமும் தடைகளை உடைக்கும்.
___________

தகவல் பெற பயன்பட்ட நூல்கள் சில:
 1. Politics and Social Conflict in South India The Non-Brahmin Movement and Tanie Seperation (Berkeley: University of California Press, 1969) - Sundravadivelu.
 2. Great Britain parliamentary papers, Vol XXI (Reports from Commissioners etc. Vol XI).
 3. Caste in Indian Politics, Rajini Kothari

Wednesday, January 17, 2007

நான் அறிந்த மதம்

மாதவி டீச்சர் நல்லொழுக்க பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.

வெளியே திடீரென கும்பலாக சத்தம்.

"ஜெய்காளி! ஓம் காளி!"
"உயிரோட விடமாட்டோம்!"
"இந்து ஒற்றுமை ஓங்குக! கிறிஸ்தவர்கள் ஒழிக!"
"இந்து முன்னணி வாழ்க!"
"இந்தியா இந்துக்களுக்கே"
".........."
".........."
".........."

கும்பலாக பல குரல்கள் தொடர்ந்தன.

பள்ளிக்கூட ஓட்டுக்கூரை மீது கற்கள் விழுந்து ஓடுகளை உடைத்து உள்ளே விழுந்தது. தொடர்ந்து கல்லெறியும், கூக்குரலும், கெட்டவார்த்தைகளுமாக கலவர சத்தம்.

இரையை தேடும் கழுகை பார்த்து பதுங்குவது போல மேசைகளுக்கு அடியில் நாங்கள்.

பருந்தின் கொடிய தாக்குதலிலிருந்து காக்க போராடும் தாய்க்கோழி போல எங்களை பாதுகாக்க துடித்தார் மாதவி டீச்சர்.

வெளியே எல்லோரும் ஓடுவது காலடி சத்தங்களில் கேட்டது. ஏதோ வண்டியின் சத்தமும் அதிலிருந்து துரத்தும் குரல்களும் கேட்டது.

தொடர்ந்து மயான அமைதி!

மெதுவாக தாயின் இறகையிலிருந்து வரும் குஞ்சுகள் போல மேசைக்கடியிலிருந்து எட்டிப்பார்த்து வெளியே வந்த எங்களில் சிலரின் தலையிலிருந்து இரத்தம் வழிந்துகொண்டிருந்தது.

எப்போதுமே கண்டிப்பாக இருந்த டீச்சரின் குரல்கள் உடைந்து கண்ணீர் விட்டு அழுதார். அவசரமாக முதலுதவி, மருத்துவம் என பரபரத்தது பள்ளி. சிலமணி நேரங்களுக்கு பின்னர் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. வெளியே பதட்டத்துடன் பெற்றோர் காத்திருந்தனர். என்னையும், சகோதரியையும் அழைக்க அப்பாவின் பழைய சைக்கிளின் வந்திருந்தார்.

எதற்கு திடீரென இந்த குரல்கள்? எதற்கு விடுமுறை? எதுவும் தெரியாது. அப்பாவை கண்டதும் விடுமுறையை நினைத்து சந்தோசாமா, சத்தங்களையும், கல்லெறியையும் அனுபவித்த அச்சமா தெரியவில்லை. அப்பாவை கட்டிக்கொண்டு அழுகை மட்டும் வந்தது. பாதுகாப்பான ஒரு வித உணர்வும் கூடவே ஒட்டிக்கொண்டது.

வீட்டில் அம்மாவும், அப்பாவும் அக்கம் பக்கத்து சொந்தங்களிடம் பேசியதில் மண்டைக்காட்டில் கலவரம் என தெரிந்தது. கலவரம்னா என்னன்னு அதற்கு முன் வரை தெரியலை. மண்டைக்காடு திருவிழாவின் போது தாத்தா வாங்கி வரும் மிட்டாய், கரும்பு, உருட்டு வண்டி நினைவில் வந்து சிரிப்பூட்டியது. பள்ளியில் கேட்ட குரல்களும், கற்களுமாக அச்சத்தை கொண்டுவந்தது.

அம்மாவின் மடியில் தலை வைத்து அசதியாக உறங்கிப் போனேன்!

°°°°°

மறுநாள் அப்பா வேலைக்கு போகாமால் பள்ளிவரை வந்து பாதுகாப்பாக விட்டு சென்றார்.

பள்ளியில் மணியடித்து ஆசிரியர் வருகைப்பதிவேட்டில் பெயரை படிக்க துவங்கினார்.

"ஓங்குக கிறிஸ்தவ ஒற்றுமை!" தூரத்தில் குரல்கள்.
"கைது செய் கைது செய்........"
"இந்து முன்னணி ஒழிக!"
".........."
".........."
".........."

தொடர்ந்தன குரல்கள்.

மீண்டும் மேசைக்கடியில் நாங்கள். என்னருகில் இருந்த நண்பன் பலகிருஸ்ணன் நாயரும் நானும் நேற்று போல இன்றும் கைகளை இறுக்கமாக பற்றிக்கொண்டோம்.

தாய்கோழியாக இந்த முறை கணக்கு வாத்தியார் கிறிஸ்டோபர். துரத்தல்களும் குரல்களும் தொடர்ந்தன. மீண்டும் அமைதி!

இந்த முறை பள்ளியில் போலீஸ் வந்தது. தலைமை ஆசிரியர் சில மணிநேரங்களில் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை என அறிவித்தார்.

நேற்று போலவே அப்பா பள்ளியின் வாசலில் சைக்கிளுடன். அப்பாவை கட்டிப்பிடித்து மீண்டும் அழுகையும், பாதுகாப்பு உணர்வும் ஒட்டிக்கொண்டது.

வீட்டில் அப்பா, அம்மா பேசியதிலிருந்து பலர் கொல்லப்பட்டது, துப்பக்கிச்சூடு, கோவில்களும், தேவாலயங்களும் உடைக்கப்பட்டது. கன்னியாகுமரியெங்கும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது என பல காதில் விழுந்தது. வெள்ளை நிற போலீஸ் வண்டிகளின் நடமாட்டமும், ஒலிபெருக்கியில் தடை பற்றிய அறிவிப்புகளும் தொடர்ந்தன. ரோட்டில் பல இடங்களில் கல், மரங்களால் தடைகள் என பல நடந்தன. பஸ் எதுவும் ஓடவில்லை. ஊரே பதட்டமாக இருந்தது.

இந்து, கிறிஸ்தவம்,இஸ்லாம் என எந்த மதம் பற்றியும் அறியாத எனக்கு முதல் முறையாக மதங்களின் அறிமுகம் கிடைத்தது.

இவர்களில் நான் யார்? நான் இந்துவா? கிறிஸ்தவனா? எந்த மதம்?

எதுவுமறியாத பிஞ்சுமனம் கனமானது.

°°°°°°

இரண்டு நாட்களுக்கு முன்னர் வரை எந்த கடவுளையும் அறிந்ததில்லை. கடவுளை நினைத்து கவலைப்பட்டதோ, வேண்டியதோ இல்லை. காரணம் எதுவும் இல்லாமலே அடிக்கிற வாத்தியார் பள்ளிக்கு வராமல் இருக்க கடவுளிடம் வேண்டியதும் இல்லை. பெரியார் பற்றியோ அவரது சாதி மறுப்பு, வாழ்வியல் கொள்கைகள் பற்றியோ அப்பா எங்களிடம் அந்த வயதில் பேசியதில்லை. அம்மா, அப்பா எந்த கடவுளை வழிப்படவோ, வெறுக்கவோ இல்லை. அவர்களுக்கும் அதனால் அச்சமோ, துக்கமோ எதுவும் ஒட்டிகொள்ளவும் இல்லை.

பெரியப்பா வீட்டிலும் எந்த தெய்வங்களின் சிலையோ, படங்களோ இல்லை. அவர் இஸ்லாமியனும் அல்ல. எந்த கோவிலுக்கு செல்லும் பழக்கமும் இல்லை. சொந்தங்கள் பலர் கிறிஸ்தவர்கள், பலர் நட்டார் வழக்கியல் தெய்வங்களை வழிபடுபவர்கள். திருப்பதிக்கோ, காஞ்சிபுரத்திற்கோ அவர்கள் சென்றதில்லை. அவர்களே அவர்களது கோவில்களில் வழிபாடு நடத்தினர். குடும்ப நண்பர்கள் பலர் இஸ்லாமியர்கள். சொந்தத்தில் ஒருவர் இஸ்லாமியர். எனது தாத்தாவின் நெருங்கிய நண்பர் பார்க்க காந்தி மாதிரி உருவமுடன் இருப்பர், அவர் இஸ்லாமியன் என பல ஆண்டுகள் வரை அறிந்ததில்லை. அவரை காந்தித் தாத்தா என தான் நாங்கள் குறிப்பிட்டோம். திருமணங்களில் மதவேறுபாடு இல்லாமல் கலந்துகொண்டிருக்கிறோம்.
ஒரே குடும்பத்தில் கணவன் எந்த மதமும் இல்லாமலும், மனைவி கிறிஸ்தவ பெண்ணாகவும் இருந்தவர் பலர். அல்லது கணவன் கிறிஸ்தவனாக, மனைவி மண்ணின் தெய்வங்களை வழிபட்டார்.

எங்கள் வீட்டிலிருந்தபடியே பக்கத்து சாமுண்டீஸ்வரி கோயிலின் சுப்பிரபாதமும், மசூதியின் வாங்கும், தேவாலயத்தின் பிரார்த்தனையும் என்னை இழுக்கவில்லை. ஆனால் அவையெழுப்பிய ஒலி இனியதாக இருந்தன. காலையில் பாட்டு சத்தம் கேட்கும் போது சில நேரம் தொந்தரவாகவும் இருந்தது. வீட்டில் கடிகாரங்கள் இல்லாததால் மசூதியின் வாங்கும், சுப்ரபாதமும், பாடலும் தான் அதிகாலையிலேயே எங்களை எழுப்பி படிக்க வைக்க அம்மாவுக்கு உதவியாக இருந்தது. அனைத்தும் ஒருசேர கேட்பதில் ஒருவித இனிமையும் இருந்தது.

மசூதியின் வாங்கு சாப்பாட்டு வேளை நெருங்குவதையும், அதிகாலையிலேயே எழுந்து அப்பா வேலைக்கு செல்ல அறிவிப்பையும் எங்களுக்கு தந்தது. திருவிழா காலங்களில் மசூதியின் ஓதுதலும், குரான் பற்றிய உரைகளும் காதில் விழுந்திருக்கின்றன. அந்த விழாக்களில் கலகலப்பாக என்னைப் போன்றவர்கள் புத்தாடையில் திரிந்ததை பார்க்க சுகமாக இருந்தது. தூரத்தில் இருக்கிற ஒரு அம்மன் கோவிலிலிருந்து வருடம் ஒருமுறை வரும் யானை ஆறாட்டு (ஊர்வலமாக யானை மீது சாமியை வைத்து ஆற்றுக்கு கொண்டு போகும் நிகழ்ச்சி) பார்க்க ரோட்டோரம் சென்று வேடிக்கை பார்த்ததுண்டு. அப்போதும் கடவுள் பற்றிய எந்த விடயமும் கேட்டதில்லை. யானையையும், அதன் நெற்றியில் ஒளிர்ந்த வண்ணமான நெற்றிப்பட்டத்தையும் வேடிக்கை பார்க்க மட்டுமே சென்றோம். தேவாலய திருவிழா நடக்கும் போது நாடகம் பார்த்திருக்கிறேன்.

இப்படியாக நேற்று வரை எங்கள் சிறுவயது வாழ்க்கை இனிதாக இருந்தது! இன்று 'மதம்' பற்றி அறியத்தொடங்கி விட்டேன்.

°°°°°°°

ஈழம்: ஓரு இந்தியனின் கண்ணோட்டம்

அன்பு நண்பர்களே!

நம் நாட்டில் அவ்வப்போது நடக்கிற குண்டுவெடிப்புகளில் அச்சமும், பரிதவிப்பும், கோபமும் என உணர்வுகளின் கலவையாக நமது மனம் மாறுகிறது. நமக்கு அருகில் இருக்கும் ஒரு தீவில் ஓயாத குண்டுவெடிப்புகளும், வான்வெளிதாக்குதலும்,பொருளாதாரத் தடைகளுமாக பல இலட்சம் மக்களின் வாழ்வு அவலமாக இருக்கிறது. இதைப் பற்றி சக மனிதர்கள் நாம் தெரிந்துகொள்வது அவசியமானது. பிரதான ஊடகங்களின் செய்தி அறிக்கைகளில் ஒளிந்திருக்கிற சூட்சுமம் புரியாது அவை விற்கும் செய்திகளே உண்மை என நம்பிவிடுகிறோம். அதையொட்டி நாம் நம்புகிறவை சில வேளைகளில் தீர்வாக அமைந்துவிடுவதில்லை. கடந்த, நிகழ்கால வரலாற்றை அறிந்த பின்னர் நமது முடிவுகளை தெரிவிப்பது மட்டுமே ஒரு இனப்பிரச்சனையின் சிக்கலுக்கு உதவும்.

ஈழத்தமிழர் பிரச்சனை பற்றிய அறிவு நமக்கு சரியான அளவு தெரியவில்லை என சில நண்பர்கள் சென்னையில் வலைப்பதிவாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டபோது தெரிவித்தனர். ஈழப்பிரச்சனை பற்றி ஒரு தொடர் கட்டுரை எழுதினால் அடிப்படை விடயங்களை தெரிந்துகொள்ள நன்றாக இருக்கும் என நண்பர் ஒருவர் தெரிவித்தார். அவரது தூண்டுதலின் விளைவாகவே இந்த தொடர் கட்டுரையை எழுதுகிறேன். நான் ஈழத்தமிழன் இல்லை. இலங்கையில் எந்த பகுதியிலும் வாழவும் இல்லை. இந்த பிரச்சனையை 1983 முதல் அறிந்து வருகிறவன் என்ற முறையிலும், ஈழத்தமிழர்கள், சிங்களவர்கள் என இரு இனமக்களிடம் பழகியவன் என்ற முறையிலும் நான் அறிந்தவற்றை எழுதுகிறேன்.

குறுகிய கால வரலாற்றை மட்டும் தெரிந்து கொள்வதால் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை சரியாக புரிந்து கொள்ள இயலாது.
ஏற்கனவே முன்முடிவு செய்த ஒரு தீர்வு திட்டத்துடன் இனப்பிரச்சனையின் வரலாற்றை படிப்பதுவும் தவறான பாதைக்கு செல்ல மட்டுமே வழிவகுக்கும்.
இனப்பிரச்சினைக்கு இவை இரண்டும் அடிப்படையான விடயங்கள். அந்த அடிப்படையில் ஈழத்தமிழர் பற்றிய சில வரலாற்று நிகழ்வுகளை, அரசியல் பார்வையை இந்த தொடர் கட்டுரையில் பார்ப்போம். இவற்றில் குறைகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள் ஆராய்ந்து உண்மையாக இருப்பின் திருத்தம் செய்கிறேன். மேலதிக தகவல்கள் உள்ளவர்கள் தனிமடலிலோ அல்லது பின்னூட்டமாகவோ தெரிவித்தால் இந்த சிறுமுயற்சிக்கு உதவியாகவும் இருக்கும்.

நன்றி!

***********

நாடு பிரித்தானியாவிடமிருந்து விடுதலை அடைந்த பின்னரும் அரசியல், பொருளாதார, கலாச்சார, சமூக விடுதலையை ஆதிக்கமனப்பான்மையில் இழந்து நிற்கிறது இலங்கை தேசம். கடந்த 60 ஆண்டுகளாக நடந்து வருகிற இன விடுதலை போராட்டத்தில் ஈழத்தமிழர் தரப்பு, சிங்கள தரப்பு என இரு வேறு அரசியல், இராணுவ, பொருளாதார, நிர்வாக தலைமை இலங்கைத் தீவில் இன்று காணப்படுகிறது.

தமிழர்கள் பூர்வீக குடிகளா? இந்த இனப்பிரச்சனைக்கு காரணமென்ன?

வரலாற்றுப் பின்னணி
கி.மு. 3000 முதல் 6000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவான கடல்கோழ் உருவாகி லெமூரியா கண்டம் துண்டுகளாகியது. கடல்கோழ் வீழுங்கிய நிலம் போக உருவான நிலபரப்பில் இந்தியா துணைக்கண்டமானது. அதன் அருகில் அழகிய தீவு ஒன்று உருவானது. இன்றைய இலங்கை தென்னிந்தியாவுடன் கடல்கோழுக்கு முன்னர் பூகோள ரீதியாக இணைந்திருந்ததற்கு பால்க் முனைப்பகுதி சான்றாக விளங்குகிறது.

இலங்கைத் தீவில் கி.பி. 1 முதல் 9ம் ஒன்றாம் நூற்றாண்டு வரை கந்தோரடையை தலைமையிடமாக கொண்டு ஈழமண்டல ஆட்சி நடந்துள்ளது. கி.பி.10ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழன் இலங்கை மீது படையெடுத்து வெற்றிகண்டான் என்றும் 11ஆம் நூற்றாண்டின் பின் முற்பகுதியில் சோழர் ஆட்சி நிலவியதாகச் வரலாற்று சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.

போர்த்துக்கீசியர் இலங்கை மீது படையெடுத்த போது யாழ்ப்பாணம், மன்னார், பனங்காமம், முள்ளியவளை, தென்னமரவடி ஆகிய பகுதிகளை உள்ளடக்கி வன்னிய மன்னர்கள் ஆட்சி செய்ததாக கருதப்படுகின்றது. இந்த ஆட்சி சில காலம் தென்னிலங்கை வரை நீண்டிருந்தது. கி.பி 13ஆம் நூற்றாண்டு முதல் 17ஆம் நூற்றாண்டு வரை நீடித்த இந்த ஆட்சியை தான் யாழ்ப்பாண இராட்சியம் என அழைக்கின்றனர். தமிழர்களும் இலங்கைத்தீவின் மண்ணின் மைந்தர்கள் என்பதற்கான சான்றுகளாக இவை அமைகின்றன. அதே வேளை தென்னிலங்கையில் சிங்கள மன்னர்களது ஆட்சி நடந்திருக்கிறது. ஆங்கிலேயர் படையெடுப்பில் தமிழ்மன்னன் பண்டார வன்னியன் வீழ்ச்சியோடு யாழ்ப்பாண ஆட்சி முடிவுக்கு வந்தது.

"பிரித்தானியர் 1796 இல் இலங்கைக்கு வந்தபோது இங்கு மூன்று அரசுகள் இருந்தன. பொதுவான நிர்வாக முறைக்கு வசதியாக பிரித்தானியர் இலங்கையை ஒரே நாடாக்கினர். 1832 கோல்புறுக் சீர்த்திருத்தத்தையடுத்து இலங்கையின் அனைத்து பகுதிகளும் ஒரு நிர்வாக அமைப்பின்கீழ் கொண்டு வரப்பட்டது." என்று சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் டொமினிக் சில்கொட் வீரகேசரி இதழுக்கான பேட்டியில் தெரிவித்துள்ளார். காலனியாதிக்கத்தில் பிரித்தானியா செய்த ஒற்றையாட்சி முறையில் தமிழர்களது ஆட்சியும், சிங்கள ஆட்சியும் இணைக்கப்பட்டது இதிலிருந்து தெரிகிறது. தமிழர்கள் இலங்கையில் பூர்வீகமாக தங்களது ஆட்சியை கொண்டிருந்தனர் என்பது இதன் வழி தெரிகிறது.

ஆங்கிலேய ஆட்சியில் இந்தியாவிலிருந்து தமிழர்களை காப்பி, தேயிலை, இரப்பன் தோட்ட வேலைக்காக 19, 20ம் நூற்றாண்டில் அனுப்பி வைத்தனர். அவர்கள் இந்திய வம்சாவழி தமிழர்களாக கருதப்படுகின்றனர். இந்தியாவை போல இலங்கையிலும் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து விடுதலைக்கான போராட்டங்கள் வலுவடைந்தன. தமிழர்களும், சிங்களர்களும் இணைந்து போராடி நாடு விடுதலையடைந்தது.

கடுமையான போராட்டங்களுக்கு பின்னர் இலங்கை 4, பெப்ருவரி 1948ல் பிரித்தானியாவிடமிருந்து விடுதலை பெற்றது. வழக்கம் போல பெரும்பான்மை (சிங்கள) இனத்திடம் சிறுபான்மையினரை (தமிழர்களை) அடகு வைத்து பிரித்தானியா காலனியாதிக்க தவறை இலங்கையிலும் செய்தது. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் சிறுபான்மையினரை தனது ஒற்றை தேசியத்தில் அடக்கி வைக்க சிங்கள தரப்பு பல விதமாக முனைந்தது. அதன் தொடர் விளைவுகள் இரு இன மக்கள் மனங்களிலும் நீங்காத காயங்களை உருவாக்கி இரு துருவங்களாக மாற்ற காரணமானது. திட்டமிட்டு நடத்தப்பட்ட பல கலவரங்கள், அதற்கு துணையாக பரப்பப்பட்ட வதந்திகள், அச்ச உணர்வு காரணமாக இரு வேறு திசையில் சிங்கள, தமிழர் அரசியல் வாழ்வு பரிணமித்தது.

1956 இனக்கலவரம்
1956 "சிங்களம் மட்டும்" சட்டத்தை சிங்கள தேசியவாத பிரதமர் S.W.R.D பண்டாரநாயகே பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்தார். இந்த சட்டப்படி சிங்களம் மட்டுமே அலுவலக மொழியாக அறிவிக்கப்பட்டது. மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதினராக இருந்த தமிழர்களது தாய்மொழியில் பேசவும், கல்வி பயிலவும், அலுவலக தொடர்பு கொள்ளவும் ஏற்பட்ட தடை தமிழர்களை கொதிப்படைய வைத்தது. தமிழர் தரப்பு தந்தை.S.J.V. செல்வநாயகம் தலைமையில் "சிங்களம் மட்டும்" சட்டத்தை எதிர்த்து சுமார் 300 தமிழர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். சிங்கள பிக்குகள் முன்னணினர் காலணி முகத்திடலுக்கு ஊர்வலமாக சென்று அங்கேயிருந்த தமிழ்த் தொண்டர்கள் பலரைத் தாக்கி, சிலரைத் தூக்கி நாடாளுமன்றத்திற்கு அண்மையிலுள்ள பெய்ரா ஏரியில் போட்டனர். சிங்கள காவல்த்துறை இவற்றை கண்டும் காணாமலே இருந்தது. தமிழர் போராட்ட நெருக்கடியின் விளைவாக பிரதமர்.பண்டாரநாயகே தமிழர் தரப்புடன் 1957ல் "தமிழ் பேசப்பட்டு வருகிற வடகிழக்கு இலங்கையில் தமிழ் ஆட்சிமொழியாக இருக்கும்" என்ற 'பண்டாரநாயகே - செல்வநாயகம் ஒப்பந்தத்தை' ஏற்படுத்தினார். இதை தொடர்ந்து சிங்கள தேசியவாத கூட்டத்தினரின் மிரட்டலால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

தமிழர்கள் அரசியல் வாழ்வை மாற்றிய 1958 கலவரம்:
பிரித்தானிய கடற்படையின் திரிகோணமலை தளம் மூடப்பட்டதையொட்டி வேலையாட்களாக இருந்த 400 தமிழர்கள் வேலையிழந்தனர். அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்க பொலனருவா மாவட்டத்தை அரசாங்கம் தேர்வு செய்தது. சிங்கள இனவெறியினர் இதை எதிர்த்தனர். மே மாதம் சிங்கள கும்பல்கள் தமிழர்கள் மீது தாக்கவும், தமிழர்களுக்கு எதிரான கலவரத்தையும் உருவக்க துவங்கினர். கரும்பு தோட்டங்களில் வேலை பார்த்த தமிழர்கள் தாக்கப்பட்டனர். அதில் 8 மாத கர்ப்பமாக இருந்த ஒரு தமிழ் பெண்ணின் வயிற்றை கத்தியால் கிழித்து உயிருடன் இரத்தம் சிதற துடிதுடிக்க கொன்றனர். 25 மே இரவு மட்டும் சுமார் 70 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட சும்மார் 3000 சிங்கள வெறியர்களை கட்டுப்படுத்த முனைந்த பொலனருவா பகுதியில் இருந்த காவல் நிலையத்தின் காவலர்களும் தாக்குதலுக்கு ஆளானர். மறுநாள் கலவரத்தை அடக்க அனுப்பப்பட்ட 25 இராணுவ வீரர்கள் 3000 கலவரக்காரர்களை சந்திக்க இயலாது தவித்தது.

மே 26ல் நுவரேலியா மேயர் செனெவிரத்னே மரணத்தை தொடர்ந்து கலவரம் உருவானதாக தவறான தகவலை பிரதமர் பண்டாரநாயகே அறிவித்தார். உண்மையில் கலவரம் மூன்று நாட்களுக்கு முன்னரே நடக்க துவங்கியது. இந்த அறிவிப்பால் தமிழர்கள் தான் கலவரத்திற்கு காரணம் என பொய்யான பரப்புரை ஏற்பட்டு கொழும்புவில் தமிழர்கள் மீது கலவரம் கட்டவிழ்ந்தது. கடைகள் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டன. பனதுரா பகுதியில் பரப்பப்பட்ட வதந்தியின் காரணமாக இந்து கோவிலுக்கு தீ வைக்க கலவர கும்பல் முனைந்து தீ பரவாததால் கோவில் அர்ச்சகரை இழுத்து சென்று உயிருடன் எரித்தார்கள்.

சிங்கள வெறி கும்பல் ஆண்களில் காதணி அணிந்தவர்கள், சட்டையை வெளியே விட்டவாறு காற்சட்டை அணிந்தவர்கள், சிங்கள பத்திரிக்கை படிக்க இயலாதவர்கள் என தமிழர்களை இனங்கண்டு தாக்க துவங்கினர். இதில் ஆங்கிலம் மட்டுமே பேசி வந்த சிங்களர்களும் தாக்கப்பட்டனர். காவலர்கள் போல் உடை தரித்து தமிழர்களை ஒழிந்து கொள்ள சொல்லிவிட்டு அவர்களது வீடு, கடைகளில் கொள்ளையடித்தனர்.

இப்படியாக கலவரம் கட்டற்ற மதம் பிடித்த யானை போல தறிகெட்டு நாடெங்கும் பரவியது. இந்த ஆபத்தான சூழலிலும் நல்ல மனதும், மனிதாபிமானமும் கொண்ட சில சிங்கள குடும்பங்கள் அண்டை வீட்டு தமிழர்களை தங்களது வீடுகளில் பாதுகாத்தனர்.

கலவரத்திற்கு பழிவாங்கும் விதமாக கிழக்கு பகுதியில் தமிழர்களும் தாக்குதலை துவங்கினர். மோட்டார்களில் பயணம் செய்த சிங்களர்களை அடித்து துவைத்தனர். 56 அப்பாவி சிங்கள மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் இது சம்பந்தமான உயிரிழப்பு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் புத்த நாக விகாரை ஒன்றை தமிழர்கள் தரப்பு தகர்த்தது.

இந்த கலவரங்களை தொடர்ந்து மே 27ல் நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. பெடரல் கட்சியும், ஜாதிக விமுக்தி பெர்மனுனா கட்சியும் தடை செய்யப்பட்டது. இரண்டு நாட்களுக்குள் நாடெங்கும் அமைதியை இராணுவம் உருவாக்கியது. அரசின் நடவடிக்கையற்ற நேரத்தில் A.M.முத்துகுமாரு (Tamil Chief of Staff) என்னும் தமிழரின் துறை ரீதியான நடவடிக்கை பல்லாயிரம் தமிழர்களை காப்பாற்றியதாக வரலாற்றாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்குள் 12000 தமிழர்கள் அகதிகளாக கொழும்பு பகுதிக்கு மட்டும் வந்திருந்தனர். நாடு முழுவதிலிருந்தும் இராணுவம் விலக்கப்பட்டாலும் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து நிலை கொண்டிருந்தது. இந்த கலவரங்களின் தமிழர்கள் மத்தியிலும், சிங்களர்கள் மத்தியிலும் மனக்காயங்களை உருவாக்கியிருந்தது. இந்த காலப்பகுதியில் திரு.வேலுபிள்ளை பிரபாகரன் சிறுவனாக இருந்தார். இந்த கலவரங்கள் தன்னை பிற்கால அரசியல் நிலைபாடுகளுக்கு நகர்த்தியதாக பிரபாகரன் குறிப்பிட்டுள்ளார்.

(தொடர்வேன்)