Sunday, January 21, 2007

விடைபெறுகிறேன் நண்பர்களே!

நண்பர்களே,

கடந்த ஒரு வாரமாக நட்சத்திரமாக எழுதியதில் பல புதிய விடயங்களை கற்றுக்கொண்டேன். என்னால் இயன்ற வரை சமூகத்தை பற்றிய பல விடயங்களை பதிந்தேன். எந்த ஒரு மனிதன் மீதும் காழ்ப்புணர்வு கொள்வது எனது பதிவுகளின் நோக்கமல்ல. நாம் அனைவரும் பல்வேறு மொழி, கலாச்சாரம், பண்பாடு, நம்பிக்கைகள், மதங்கள் கொண்ட மனிதர்கள். பன்முகத்தன்மையுடன் இயங்கும் இந்த உலகம் நமது சந்ததிக்கும் சென்று சேர வேண்டும். தன்னுடைய அடையாளங்கள் மட்டுமே சிறந்தவை என்னும் பார்வை மனித இன ஒற்றுமைக்கு உதவாத செயல்.

'எனது நம்பிக்கை தான் நல்லது, உனது நம்பிக்கை நல்லதல்ல' என்ற போட்டிகள் குழப்பத்தையும் கலவரங்களையும் உருவாக்குகின்றன. எனது இருத்தலும், உனது இருத்தலும் மதிக்கப்படவேண்டும். உலகம் புதிய இயங்குதளத்தில், மக்கள் அனைவரும் விடுதலை பெற்று வாழும் புதிய பாதையில் செல்லுதல் அவசியம்.

-0Oo-

என்னைப்பற்றி...

தோழி தமிழ்நதி என்னைப்பற்றி விரிவாக எழுத பணித்திருந்தார் ஆகவே ஒரு சுயதம்பட்டம் இங்கே.

17 வயது முதல் பலவிதமான சமூக போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறேன். தமிழகத்தில் பல போராட்ட களங்களில் பங்குபெற்ற அனுபவம் என்னை உருவாக்கியது. திருச்சி, கும்பகோணம், சென்னை, தஞ்சாவூர் என ஒடுக்கப்பட்ட, சேரி வாழ் மக்களுடன் செய்த பணிகள் என்னை மனிதனாக்கியது. நான் சார்ந்திருந்த இயக்கம் மனித உரிமை மற்றும் தொழிலாளர் உரிமைக்கான பணியை செய்தது. 1996 முதல் இந்த பணிக்காக இந்தியாவில் முழுநேரமும் என்னை ஈடுபடுத்தி வந்தேன். பிறநாடுகளின் அழைப்பினால் 4 ஆண்டுகள் ஹாங்காங்கில் தங்கியிருந்து ஆசியநாடுகள் அளவில் இந்த பணியை செய்துவந்தேன். அதேவேளை உலக அளவில் 'அமைப்புசாரா தொழிலாளர்களை' ஒன்று திரட்டவும், அவர்களுக்காக சர்வதேச அளவில் ஐ.நாவின் தொழிலாளர் அமைப்பு கூட்டங்களில் முறையிடவும் செய்தேன். ஆசியாவில் இருந்த காலத்தில் ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா என சுற்றுப்பயணம் மேற்கொண்டதில் பலவிதமான கலாச்சாரத்தை சார்ந்த மக்களிடம் பழகியதில் மனித உரிமை பற்றிய பார்வை விரிவடைந்தது. அவர்கள் அனுபவங்கள் வழி எனக்கு கற்றுத்தந்தார்கள்.

தொடர்ந்து, பணியை உலக அளவில் செய்யவும், தலைமை பணியை ஏற்கவும் பணித்ததால் ஐரோப்பாவை அலுவலக மையமாக வைத்து இயங்குகிறேன். ஆப்பிரிக்கா நாடுகளின் பிரச்சனையிலும், அமைப்புசாரா தொழிலாளர்கள் பிரச்சனையிலும் தொடர்ந்து கவனம் செலுத்துகிறேன். என்னை 'மனிதனாக', 'மனிதநேயம்', 'மனிதஉரிமை', 'விடுதலை' போன்ற உயரிய விழுமியங்கள் மீது பற்றுகொள்ள செய்தவர்கள் விளிம்பு நிலையில் வாழும் மக்கள். என் எழுத்துக்கள் அந்த விழுமியங்களுக்காகவே அமையும்.

பணிநேரம் போக வாசித்தல், செய்திகள் படித்தல், எழுத்து, நிழற்படங்கள் எடுப்பது, பாடல்கள் கேட்பது, கற்களால் ஆபரணங்கள் செய்வது, சமையல் என பல இனிய விடயங்களில் ஈடுபாடு உண்டு.

எளியவனின் பயணம் இப்படியே தொடர்கிறது....

-0O0-

இன்னும் தேடலும், கற்றலும் தொடரும். இந்த தேடலில் ஆர்வத்தையும், ஆதரவையும் தருகிற அனைவருக்கும் நன்றி! மாற்றுக் கருத்துக்கள், எதிர்வாதங்கள், புதிய தகவல்கள் என நீங்கள் கொடுத்த அனைத்து ஊக்கத்திற்கும் நன்றி! இந்த நல்ல வாய்ப்பை வழங்கிய தமிழ்மணம் நிறுவனத்திற்கும் என் நன்றிகள்!

வழக்கம் போலவே ஒரு தொலைதூர மின்மினியாய் மின்ன முயல்கிறேன். விடைபெறுகிறேன்.

நன்றி!

அன்புடன்,

திரு

14 பின்னூட்டங்கள்:

Sivabalan said...

திரு,

மிக அருமையான பதிவுகளை தந்தமைக்கு மிக்க நன்றி!

வாழ்த்துக்கள்!!

உங்கள் உன்னத பணி தொடர வாழ்த்துக்கள்

கானா பிரபா said...

வணக்கம் திரு

உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றுக்கும் பதில் போட முடியாவிட்டாலும் அனைத்தையும் படித்தேன், ரசித்தேன். நல்லதொரு சமூகப் பார்வையும், பண்பட்ட மனதும் கொண்ட உங்களுக்குத் தொடர்ந்தும் சுபீட்சமான வாழ்வும் வளமும் பெற வாழ்த்துகின்றேன்.

துளசி கோபால் said...

இந்தக் கடைசிப் பதிவை மட்டுமே படித்தேன். மற்றவைகளை கொஞ்சம் ஆறுதலாகத்தான்
படிக்கணும்.

தங்களை நேரில் சந்திக்க வாய்ப்புக் கிடைச்சது ஒரு மகிழ்ச்சியான விஷயமே.

ஆலமரம்- பொருத்தமான பெயர்.

Anonymous said...

உங்களின் ஒரு சில பதிவுகளை மட்டுமே படிக்க முடிந்தது.படித்த வரையில் சிந்திக்க வைத்தது உங்கள் எழுத்துக்கள்.வாழ்த்துக்கள் திரு.

கோவி.கண்ணன் said...

//'எனது நம்பிக்கை தான் நல்லது, உனது நம்பிக்கை நல்லதல்ல' என்ற போட்டிகள் குழப்பத்தையும் கலவரங்களையும் உருவாக்குகின்றன. எனது இருத்தலும், உனது இருத்தலும் மதிக்கப்படவேண்டும். உலகம் புதிய இயங்குதளத்தில், மக்கள் அனைவரும் விடுதலை பெற்று வாழும் புதிய பாதையில் செல்லுதல் அவசியம்.//

கடந்த ஒரு வார ஆலமர நிழல் அருமை.

பாராட்டுக்கள் திரு.

வெற்றி said...

திரு,
மிகவும் அருமையான ஒரு வாரம். பல மனிதாபிமானப் பிரச்சனைகளை உங்கள் பதிவுகளின் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தீர்கள். அருமையான பணி. மிக்க நன்றி.
நட்சத்திரவாரம் போனாலும், இதே போன்ற பல மனிதாபிமானப் பிரச்சனைகளை நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என உங்களை மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

வடுவூர் குமார் said...

தங்கள் வாழ்கை மற்றும் பணிகளில் மென்மேலும் வெற்றி பெற்று நல்வாழ்கை வாழ வாழ்த்துக்கள்,திரு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மிக அருமையான நட்சத்திர வாரத்திற்கு நன்றி.உங்கள் ந்ற் பணிகள் தொடர வாழ்த்துக்கள் .

- யெஸ்.பாலபாரதி said...

காரணம் கருதியே எந்த படைப்புக்கும் பின்னூட்டவில்லை. அதை தனியே வேறு சொல்லனுமா?
பலருக்கும் பயனுள்ள பல விடயங்களை எழுதியமைக்கு நன்றிகள் அண்ணா!

கலை said...

உங்கள் நட்சத்திர வாரத்தில் அருமையான படைப்புக்களை தந்தீர்கள். உங்கள் பணி சிறப்பாக தொடரவும், உங்கள் நல்வாழ்வுக்கும் வாழ்த்துக்கள்.

பொன்ஸ்~~Poorna said...

திரு,
நல்ல வாரம்.

மதம், இடப் பங்கீடு, படங்கள், குழந்தைத் தொழிலாளர்கள், பெண்கள், போன்ற சிலவற்றை மட்டுமே படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறவற்றையும் மெல்ல படித்துவிட்டு வருகிறேன்..

வாழ்த்துக்கள்..

bala said...

திரு அய்யா,

உங்கள் புது முயற்சிகள் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
கண்டிப்பா திரும்பி வாங்கய்யா.
வரும் போது நிறைய "போகியும் பூனையும்" போன்ற திகில் கதைகளையும் கையோட யோசிச்சு எடுத்துகிட்டு வாங்கய்யா.

பாலா

தருமி said...

திரு,

//எளியவனின் பயணம் இப்படியே தொடர்கிறது....//

உண்மையிலேயே நீங்கள் பார்க்கவும், பழகவும் மிக மிக எளியவர்தான் என்பதை நேரில் கண்டு பழக நேர்ந்த அந்த சில மணி நேரங்களுக்குள் புரிந்து கொள்ள முடிந்ததோடு, எளியவர் மட்டுமல்ல இனியவர் என்பது புரிந்தது.

உங்கள் பயணம் நீண்டு தொடர ...
அன்புடன் என் வாழ்த்துக்கள்.

Ram said...

I am zapped looking at ur profile..Keep the good work , Thiru.Hats-off.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com