Friday, January 19, 2007

சித்தெறும்பு முதுகில பாறாங்கல்லு!

"சிட்டுக்குருவி தலையில பனங்காய பாருங்க! சித்தெறும்பு முதுகில பாறாங்கல்ல பாருங்க! பத்து வயசு முடியும் முன்னே என் குடும்ப பாரம் தானுங்க! அஞ்சு வயசு உழைச்சா தான் நாலு ஜீவன் வாழுங்க!" குழந்தை தொழிலாளியின் வேதனையை இந்த பாடல் வரிகளால் சொல்ல இயலாது.

"குட்டி" என ஒரு திரைப்படம் சில வருடங்களுக்கு முன்னர் வந்தது. அந்த திரைப்படத்தில் சமூகத்தின் மேல்தட்டு வீட்டு குழந்தை ஒருவன் நல்ல பள்ளியில் படித்து வளர்கிறான். அடிதட்டு ஏழையின் குழந்தை அந்த வீட்டில் பாத்திரம் தேய்க்கவும், வீட்டு வேலை செய்யவும் பயன்படுத்தப்படுகிறாள். அந்த குழந்தை தொழிலாளி பற்றிய நல்ல ஒரு திரைப்படம். பார்த்ததும் இந்த சமூகம் மீது கோபமும், குழந்தைகள் நிலை பற்றிய அழுகை தான் வந்தது. நமது மக்களுக்கு அடுத்த தொலைகாட்சி தொடரில் குழந்தைகள் பற்றிய அக்கறை மறந்து போயிருக்கும். ஆனால் நமது கண்ணெதிரில் கடைகளில், வீடுகளில், வீதிகளில், தொழிற் பட்டறைகளில் குழந்தைகள் கடினமாக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

சென்னையில், வடபழனி அருகே பிரபலமான ஒரு உணவு விடுதியில் உணவருந்த சென்றிருந்தேன். சாப்பிட்டு முடித்ததும் பாத்திரங்களை எடுக்கவும், சுத்தப்படுத்தவும் வந்த சிறுவர்களுக்கு வயது சுமார் 10 தான் இருக்கும். இதை கண்டதும் மனம் கனமாக இருந்தது. சாப்பிட்ட உணவே வயிற்றிலிருந்து கத்துவது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. தொடர்ந்து நகரில் பல இடங்களில் குழந்தைகள் வேலை செய்வது காண முடிந்தது.

கன்னியாகுமரியில் இருந்த வேளை செங்கல் சூளைக்கு சென்றிருந்தேன். அங்கு ஒரே ஒரு சூளையில் மட்டும் 4 சிறுவர்கள் வேலை செய்தனர். அந்த பகுதியில் சுமார் 15க்கும் மேல் சூளை அமைந்துள்ளது. அந்த சிறுவர்கள் காலையில் 7 மணி முதல் மாலை 4 அல்லது 5 மணி வரை அயராது கடும் வெயிலில் கடுமையாக உழைக்கிறார்கள். ஒரு நாள் ஊதியமாக சுமார் 75 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கிடைக்கிறது. அவர்களது கண்களில் ஒரு வித சோகமும், ஏக்கமும் கலந்திருந்ததை காணமுடிந்தது.


//குழந்தைத் தொழிலாளிகளை வேலையில் அமர்த்துவதற்குத் தமிழகத்தில் தடை இல்லையா?பள்ளிக்குச் சென்று குழந்தைப் பருவத்தை அனுபவிக்க வேண்டிய இந்தப் பிஞ்சுகள், கல்லுச் சுமப்பது மிகவும் வேதனையாக உள்ளது. 40 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தை ஆண்டு வரும் கழக ஆட்சியாளர்களின் மேல்தான் கோபம் வருகிறது. இலவசமாகத் தொலைக்காட்சி கொடுத்து வாக்கு வாங்கும் கலைஞர், அதில் ஒரு பகுதியை ஆவது இச் சிறுவர் நலன்களுக்கு ஒதுக்கி அவர்களைப் படிக்க வைத்தால் போதும். // நண்பர் வெற்றி குழந்தை தொழிலாளர்கள் படங்களை கடந்த பதிவில் பார்த்து மனம் வேதனைப்பட்டிருந்தார்.

இலவசங்கள், ஆடம்பரங்கள் என மக்களின் பணம் வீணடிக்கப்படுவதை விட்டு அடிப்படைக்கல்வியும், தொழில்நுட்ப கல்வியும் வழங்குவது மிக அவசியம். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இதே நிலை தான். இதில் ஒரு கட்சி உயர்ந்தது, இன்னொரு கட்சி நல்லது என கைகாட்டி தப்பிக்க இயலாது. உலகவங்கியிடமும், சர்வதேச தொழிலாளர் அமைப்பிடமும் குழந்தை தொழில் ஒழிப்பு அல்லது மறுவாழ்வு என்ற பெயரில் இந்திய அரசும், மாநில அரசுகளும் வாங்கிய, வாங்கும் கோடிக்கணக்கான பணம் எங்கே என்ற கேள்வி இந்திய மக்களால் கேட்கப்படவேண்டும்.

உலகமெங்கும் ஆறு குழந்தைகளில் ஒன்று குழந்தை தொழிலாளி. இவர்கள் ஆபத்தான வேலைகளில் 12 மணிநேரம் வரை ஈடுபடுத்தப்படுகிறார்கள். உலகமெங்கும் 5-15 வயது வரையுள்ள குழந்தை தொழிலாளர் 250 மில்லியன் பேர் ஆசியாவில் மட்டும் 61% குழந்தை தொழிலாளர்கள். சுமார் 153 மில்லியன் பேர். இந்த குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப 760 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அவசியமாகிறது. கடந்த 4 வருடங்களாக நான் காலந்துகொள்ளும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐக்கிய நாட்டு சபையின் தொழிலாளர் நலத்தை பேணும் அமைப்பு) கூட்டத்தில் பலமுறை இந்திய அரசு அதிகாரிகள் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பது பற்றி பேசிய பேச்சுக்கள் நினைவில் வந்தன.

வீட்டு வேலைகள், விவசாயம், உற்பத்தி சார்ந்த தொழில்கள், சுரங்கங்கள் மற்றும் கல் குவாரிகள், விடுதிகள், உணவகங்கள், சுற்றுலா சார்ந்த தொழில்கள், அமைப்பு சாரா தொழில்கள் என எல்லா இடங்களிலும் மோசமான நிலையிலான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

மிகமோசமான நிலையிலான குழந்தை தொழில் என ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு அடையாளம் காட்டுபவை:

  • கொத்தடிமை மற்றும் கட்டாய அடிப்படையிலான வேலை.

  • பாலியல் தொழில்கள் மற்றும் ஆபாசபடங்கள் போன்ற சட்டத்துக்கு எதிரான வேலைகள்.

  • ஆபத்தான வேலைகள்.

குழந்தை தொழிலாளர்கள் உருவாக குடும்ப வறுமை ஒரு அடிப்படை காரணியாக அறிப்படுகிறது. வறுமைக்கு குறைந்த கூலியும், போதிய வேலைவாய்ப்பின்மையும் அடிப்படையான காரணங்கள். கல்வி கட்டணங்களும் அதற்கான செலவுகளும் அதிகமாக காணப்படுவதால் பள்ளிக்கு அனுப்ப இயலாத நிலை. படித்தாலும் அதற்கேற்ற வேலை கிடைக்காது என்ற நம்பிக்கையின்மை. இந்த சூழல்களால் பல குழந்தைகள் கொத்தடிமைகளாகவே வாழ்கிறார்கள்.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே குழந்தை தொழிலாளர்களை பாதுகாக்கும் சர்வதேச சட்டங்களை இந்தியா கையெழுத்திட்டது. இருந்தும் குழந்தை தொழிலாளர் இருக்கிற நாடுகளில் முதல் இடத்தில் இந்தியா இருக்கிறது. "குழந்தைகளே கனவு காணுங்கள்! இளைஞர்களே கனவு காணுங்கள்" என அறைக்கூவல் விடுக்கிற இந்திய குடியரசு தலைவர் கூட மேல்தட்டு குழந்தைகளை தான் சந்தித்து அவர்களை அறிவியல் வல்லுநர்களாக உருவாக்க ஆர்வமாக உழைக்கிறார். செங்கற் சூளைகளில், தோல் பதனிடும் தொழிற்சாலைகளில், கம்பளம் செய்யும் இடங்களில் என இந்த ஊக்கம் கொடுப்பது யாரோ?

இந்தியாவில் மட்டும் 100 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள் இருப்பதாக கணக்கிடப்படுகிறது. இவர்கள் பெரும்பாலும் நகர்புறங்களில் வேலையில் இருக்கிறார்கள்.

காரணம் என்ன?

குடும்பத்திற்கு வருமானம் சேர்க்க இவர்கள் நிர்பந்தபடுத்தப்படுகிறார்கள். ILO கணக்குப்படி 1990களில் 40% இந்தியர்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டவர்கள். பெரும்பாலும் இந்த வறிய குடும்பத்தினரே குழந்தைகளை வேலைக்கு அனுப்புகின்றனர். பெரும்பாலும் இந்த குழந்ததகள் 7 அல்லது 8 வது வயதில் வேலை செய்ய அனுப்பப்படுகிறார்கள். அவர்களில் அத்க பெரும்பான்மையானவர்கள் சாதி அடுக்குமுறையில் ஒடுக்கப்பட்ட மக்கள் என்பதும் ஒரு வேதனையான உண்மை.

குழந்தை தொழிலாளர் முறையை தடை செய்து சட்டங்கள் இருந்தும் எத்தனை பேர் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது கேள்வியே! இந்த கொடுமையான முறையை மாற்ற அரசுக்கு திறனில்லை. சட்டங்களை மட்டும் இயற்றி தடை செய்துவிட்டு சட்டத்தை மதிக்கிறார்களா? இல்லை மீறப்படுகிறதா என கண்காணிப்பு இல்லை. தாசில்தார்கள், மாவட்ட ஆட்சித்துறைம் வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை என அனைத்து துறைகளிலும் லஞ்சமும், அரசியல் கட்சிகளின் சிபாரிசு நெருக்கடிகளுக்கும் வளைந்து கொடுக்கும் போக்கில் குழந்தைகளின் முதுகில் பாராங்கல் சுமத்தப்படுகிறது. தொழிலாளர் நலத்துறையின் அதிகாரிகள் வேலையிடங்களுக்கு சென்று சட்டங்கள் மீறப்படுகிறதா என பரிசோதனை செய்வதில்லை. அதற்காக போதிய எண்ணிக்கையில் ஊழியர்களும் அந்த துறையிடம் இல்லை. 1990 களில் இந்திய கம்பளங்கள் குழந்தை தொழிலாளர்களால் செய்யப்படுகிறது என சர்வதேச சந்தையில் புகார்கள் எழுந்தன. அதனால் இந்திய கம்பளங்களை தடைசெய்யப் போவதாக பல மேற்கத்திய அரசுகள் அறிவித்தன. இந்திய அரசும், அதிகாரிகளும், பானியா கும்பல்களும் அதற்கெதிராக வரிந்து கட்டினார்கள். ஆனால் குழந்தை தொழில் இன்னும் கம்பளம் நெய்யும் வேலையில் இருக்கிறது என்பதே வேதனையான உண்மை.

இந்தியா கையெழுத்திட்ட 120க்கும் மேற்பட்ட சர்வதேச சட்டங்களும், நெறிமுறைகளும் (ILO conventions) குழந்தை தொழில் முறையை அகற்ற வலியுறுத்துகிறது.

இந்திய சட்டம் "உயிருக்கும், உடல் நலத்திற்கும் ஆபத்தான தொழில்களின் குழந்தை தொழில் முறையை தடை" செய்தது. இதில் தான் வழக்கமான சட்டத்தின் குழப்பம். எந்த வேலை ஆபத்தானது, உடல்நலத்திற்கு எதிரானது என தீர்மானிப்பது யார் அல்லது எந்த வரைமுறை? இதில் எந்த தெளிவும் இல்லை. குழந்தை தொழிலாளர்களை ஈடுபடுத்துபவர்கள் இந்த சட்ட ஓட்டையில் தப்பித்தனர். குப்பை பொறுக்குதல், சாக்கடை சுத்தம் செய்தல், வைரகற்கள் பட்டை தீட்டுதல், சேலை நெய்தல், செங்கல் சூளை, தோல் பதனிடும் தொழில், கல்குவாரிகள், சுரங்கங்கள் என பல தொழில்கள் குழந்தைகளுக்கு ஆபத்தானவை. இன்னும் குழந்தைகள் அந்த தொழில்களில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

"குழந்தை தொழிலாளர் தடைசெய்யப்படாத துறைகளில் வேலையின் தன்மை, சூழலை முறைப்படுத்த" சட்டம் வலியுறுத்துகிறது. சுமார் 85% குழந்தைகள் அமைப்புசாராத துறையில் வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு எந்த பாதுகாப்பு திட்டங்களும் இல்லை.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக தடைசெய்திருக்கிறது. இந்த அடிப்படையில் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை வேலையில் அமர்த்துவதை கடந்த அக்டோபர் மாதம் தடைசெய்து இந்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

முறையான திட்டங்கள் இல்லாமல் இந்த தடைகளை அமல்படுத்துவது இயலாது என்பது தான் உண்மை. குழந்தை தொழில் முறையை ஒழிக்க:

  • பெற்றோர்களின் வேலைக்கான கூலி அவர்களது வாழ்க்கைக்கு தேவையான அளவு மாற்றப்படவேண்டும். குழந்தை தொழிலை ஒழிக்க வறுமையை ஒழிப்பது அவசியமானது; அதற்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் அடிப்படையான விடயம்.
  • போதிய வருமானமில்லாத அனைவருக்கும் கட்டாய இலவச அடிப்படைக்கல்வியும், தரமான தொழில்நுட்ப கல்வியும் அவசியமானது.
  • குழந்தை தொழிலாளர்களுக்கான புனர்வாழ்வு திட்டங்கள் உருவாக்கப்படல் அவசியம்.
  • படித்தவர்களுக்கான வேலை கிடைக்கும் நம்பிக்கையான சூழலை உருவாக்க வேலைவாய்ப்பு திட்டங்கள் அவசியம்.
  • குழந்தைகளை கடத்தி சென்று விற்கும் கும்பல்கள் இடைத்தரகர்கள் மீது சட்டத்தின் வழி கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

குழந்தை தொழில் ஒழிக்கப்பட இப்படியான பல நடவடிக்கைகள் அவசியம். அரசுகளுக்கும், அதிகாரிகளுக்கும் மனதில் நேர்மையும், நன்னெறியும் உண்டா?

"சிட்டுக்குருவி தலையில பனங்காய பாருங்க! சித்தெறும்பு முதுகில பாறாங்கல்ல பாருங்க! பத்து வயசு முடும் முன்னே என் குடும்ப பாரம் தானுங்க! அஞ்சு வயசு உழைச்சா தான் நாலு ஜீவன் வாழுங்க!" மீண்டும் பாடல்...

°°°°°°°°°°

சாம்பியா நாட்டில் கல்லுடைக்கும் குழந்தைகள்

சாம்பியாவில் 2 கிலோமீட்டர் வரை சென்று தண்ணீர் சுமக்கும் குழந்தைகள்சாம்பியா நாட்டில் கல்லுடைக்கும் குழந்தைகள்குடும்பத்தினரோடு சாம்பியாவில் கல்லுடைக்க உதவும் குழந்தைகள்
சாம்பியாவில் காய்கறி விற்கும் சிறுமி_________
மற்ற படங்கள்: செங்கல் சூளை, கன்னியாகுமரி, இந்தியா.

13 பின்னூட்டங்கள்:

Anonymous said...

திரு!
தங்கள் இளமையைத் தொலைத்த இவர்கள் பற்றிய பதிவும்;படங்களும் மிக மனச்சுமையைத் தந்தது.என்ன செய்யப் படைத்தான் இவன்.
யோகன் பாரிஸ்

தருமி said...

போக வேண்டிய தூரம் இன்னும் எவ்வளவோ ...?

யோகன் பாரீஸ்,
//என்ன செய்யப் படைத்தான்..//
இல்லீங்க... நாமதான் எல்லாமே...

கலை said...

குட்டி படம் பார்த்து அழுதேன். பலநாட்களாய் மனதிலேயே தங்கி, மனதில் பார்த்தை ஏற்றி வைத்திருந்த படம்.

இந்தக் குழந்தைகளின் நிலையை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது. ம்ம்ம்.

Anonymous said...

மிகவும் கவலையாக இருக்கிறது

Sivabalan said...

திரு,

வருந்தக்கூடியதுதான்!! ஏதாவது நம்மால் செய்ய முடியுமான்னு யோசிக்கிறேன்..

✪சிந்தாநதி said...

நாம் மனதில் சுமக்க வேண்டிய பாறாங்கல் இது...

G.Ragavan said...

நம்மூர்ல ஒரு கெழவி இருந்தாங்க. அவங்க சொன்னாங்க "கொடிது கொடிது வறுமை கொடிது. அதனினும் கொடிது இளமையில் வறுமை. இந்தப் படங்களைப் பாக்கும் போது மனசுக்குக் கஷ்டமா இருக்கு. ஆனா என்ன செய்றதுன்னே தெரியலையே.

இன்னைக்கு பொன்ஸ் போட்ட பதிவைப் பாத்தீங்களா? இதுலயெல்லாம் தப்பிப் பிழைச்சு நல்லாயிருக்குற குழந்தைகளுக்கு வேறுவிதமான பாலியல் பிரச்சனைகளாம். குழந்தைகளைக் குழந்தைகளாக வைத்திருப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது.

சேதுக்கரசி said...

மிகவும் வருந்தத்தக்கது :-(

செல்வநாயகி said...

சிந்திக்கவைக்கும் பதிவு. நன்றி.

செல்வநாயகி said...

சிந்திக்கவைக்கும் பதிவு. நன்றி.

வெற்றி said...

திரு,
என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
தருமி ஐயா சொன்னது போல், இத் துயர்களைக் களைவதற்கு இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டும்.

"தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையென்றால்
இந்த ஜகத்தினை அழித்திடுவோம்
என்று தமிழ்க்கவி பாரதி பாடிய பாடலை நடைமுறையாக்கிடுவோம்!"


எனும் கவிஞர் வாலியின் பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

பத்மா அர்விந்த் said...

குழந்தைகள், அதிலும் சிறுமிகள் பாலியல் தொழிலுக்காக விற்பனையாவதும் அதிகம். உலகெங்கும் குழந்தைகள் கடத்தல் கவலக்குரிய ஒன்று. அதிலும் 200 ரூபாய்க்காக கூட தங்கள் பெண்ணை விற்றுவிடும் நிலையில் பரிதாபமாக இருக்கும் குடும்பங்களை என்ன சொல்ல. இயன்றநிலையில் சில பணிகளை செய்வதோடு வேறு எதுவும் செய்ய முடியாமல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம்.

thiru said...

அனைவருக்கும் நன்றி!

//Padma said...
குழந்தைகள், அதிலும் சிறுமிகள் பாலியல் தொழிலுக்காக விற்பனையாவதும் அதிகம். உலகெங்கும் குழந்தைகள் கடத்தல் கவலக்குரிய ஒன்று. அதிலும் 200 ரூபாய்க்காக கூட தங்கள் பெண்ணை விற்றுவிடும் நிலையில் பரிதாபமாக இருக்கும் குடும்பங்களை என்ன சொல்ல.//

உண்மைதான் Child trafficking இன்றை முக்கிய பிரச்சனையாக உலகமெங்கும் உருவாகியிருக்கிறது பத்மா. இந்த குற்றங்கள் செய்பவர்கள் குழந்தைகளை விலைக்கு வாங்கி விற்பது, கடத்தி விற்பது என தொடர்கிறது. இது பற்றிய விழிப்பும், செயல்களும் நமது நாட்டில் குறைவு.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com