Sunday, January 21, 2007

நெல்லை: ஈழத்தமிழர் காலனி (அகதிகள் முகாம்)

விஜயகாந்த் கட்சிக்கொடி, ஸ்நேகா பிறந்தநாளுக்கு சுவரில் கிறுக்கல் வாழ்த்து என தமிழ்நாட்டிற்குரிய தற்போதைய அடையாளங்களுடன் வரவேற்கிறது தாழையுத்து ஈழத்தமிழர் காலனி (அகதிகள் முகாம்). தென்தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் பிரபல சிமெண்ட் தொழிற்சாலைக்கு எதிர்புறத்தில் இருக்கிறது இந்த முகாம். இங்கு வாழும் குழந்தைகள் பலருக்கு இலங்கை தமிழ் பேச வருவதில்லை. தங்களது நாட்டின் நிலை கூட தெரிகிறதா என்பது சந்தேகமே. ஈழத்தின் பேச்சுத்தமிழை மட்டுமல்ல, கலாச்சார அடையாளங்களும் வளரும் குழந்தைகள் அறியாமலே வளர்கிறார்கள்.

டிசம்பர் 2006 ஒரு அந்திப்பொழுதில் வலைப்பதிவாளர் நண்பர்கள் ஆழியூரான், வரவனையான் செந்தில், நான் மூவருமாக தாழையுத்து சென்றோம். முகாமிற்குள் செல்லத்துவங்கும் போதே முகாமின் நிலை நமது கண்களுக்கு தெரிகிறது. மண்சுவர்,தென்னை ஓலைகளால் வேயப்பட்ட சின்ன சின்ன குடிசைகள் நெருக்கமாக இருக்கிறது. தரை மண்ணால் செய்யப்பட்டு, சாணி பூசப்பட்டிருக்கிறது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் தாழ்வான பூமியாதலால் வீடுகளிலும் தண்ணீர் தேங்கி விடும்.

இந்த முகாமில் சுமார் 184 குடும்பங்களை சார்ந்த 605 பேர் இங்கு வாழ்கிறார்கள். முகாமிற்குள் சிறு பெட்டிக்கடைகள் சில இருக்கின்றன. முத்துமாரியம்மன் கோயில் ஒன்று இருக்கிறது. முகாமிலுள்ள மக்களுக்கு தண்ணீர் எடுக்க ஆழ்துழாய் கிணறுகள் அவற்றில் ஒன்று செயல்படாமல் இருக்கிறது, போதிய குடிநீர் இலாத நிலை. சுமார் 300 பெண்கள் வாழுகிற இந்த முகாமிற்கு 3 கழிவறைகள் மட்டுமே. போதிய மருத்துவ வசதி இல்லை. முகாமில் வாழுகிற மக்கள் கூலி வேலைக்கு சென்று வயிற்றுப்பிழைப்பு நடத்துகிறார்கள், அவர்களுக்கு போதிய சம்பளம் வழங்கப்படுவதில்லை.

ஒரு பழைய கிடங்கில் பல குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டிருக்கிறது. கிடங்கில் சுமார் 4 அடி உயரத்திற்கு 5 அடி X 5 அடி மண்சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்த இடம் தான் ஒரு குடும்பம் சமைத்து, சாப்பிட்டு, ஓய்வெடுத்து, உறங்கும் வசிப்பிடம். கிடங்கினுள் இப்படி பல குடும்பங்கள் இருக்கையில் அவர்களது வாழ்விற்கான தனிமையோ, போதுமான இடமோ இல்லை. ஓட்டுக்கூரை உடைந்து கீழே விழுந்து நொறுங்குகிறது. குழந்தைகளும், பெரியவர்களும் உயிருக்கு ஆபத்தான இந்த கிடங்கினுள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். கிடங்கின் சுற்றுச்சுவர் மண் இடிந்து விழுகிறது. எப்போது ஆபாத்து வருமோ என்ற நிலையில் தான் இவர்கள் வாழ்க்கை. ஒரு நாய் தனது குட்டிகளுடன் அதற்கான இடத்தில் சுகாமாக இருப்பதை கண்ட மனம் சகமனிதர்கள் நாயை விட கேவலமான நிலையில் இருப்பதை கண்டு அழுகிறது.

தாழையுத்து உள்ளாட்சி அமைப்பும், மாவட்ட நிர்வாகம், மாநில அரசு, இந்திய அரசு இவை இந்த மக்களுக்கு அடிப்படைத் தேவையான குடிநீர், குடியிருப்பு, கழிவறைகள், மருத்துவம், தொழிற்கல்வி முதலியவற்றை இதுவரை சரியாக செய்யவில்லை. பன்றியும், நாயும் கூட நல்ல இடத்தில் அடைக்கப்பட்டிருக்கும் நேரத்தில் யுத்தத்தால் உயிருக்கு பயந்து கண்ணீருடன் வருகிற இந்த மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க நமது அரசு தவறுவது ஏன்? முகாமிற்குள் அரசு உதவி செய்யாதது மட்டுமல்ல, பிற அமைப்புகளையும் உதவி செய்யவிடாமல் தடுக்கும் போக்கு நிலவுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கும், குழந்தைகளுக்கும் அடிப்படை தேவைகளை மனிதாபிமான அடிப்படையில் செய்யவேண்டியது சகமனிதர்கள் நமது கடமை.

ஈழத்தமிழர் குடியிருப்புகளுக்கு (அகதிகள் முகாமிற்கு) அமைப்புகள் உதவியுடன் வீடு, உணவு, குடிநீர், கழிப்பறை, கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதும், முகாமில் வாழுகிற மக்களுக்கான தொழிற்பயிற்சிகள், கூட்டுறவு முறையிலான வேலைகளை உருவாக்குவதும் காலத்தின் அவசியம். குழந்தைகளுக்கு முறையான கல்வியும், வேலைவாய்ப்புகளும் வழங்கப்படல் அவசியம். முகாமை விட்டு வெளியேறும் போது எங்கள் மூவரின் மனதும் கனமாக இருந்தது.

அகதிகளின் உரிமைகள் என்ன என்பதில் வெளிப்படையான தகவல்கள் இல்லை. அவர்களுக்கு ஆண்டுதோறும் ஒதுக்கப்படுகிற நிதி பற்றியும் செலவுகள் பற்றியும் வெளிப்படையான தகவல்கள் இல்லை. கடந்த 5 ஆண்டுகளாக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது, அவை எவ்வாறு செலவிடப்பட்டது என்பது பற்றிய தகவல்களை சேகரித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு செல்லவேண்டுமென திட்டமிட்டோம். அதற்கான பணிகள் நடந்துவருகிறது. முகாமை விட்டு வெளியேறும் போது எங்கள் மனது கனமாக இருந்தது . யுத்தமும் அதன் விளைவான 'அகதி' வாழ்வும் கொடியது!


கூரைக்கு கீழே சுவரில் ஸ்நேகாவிற்கு வாழ்த்து கிறுக்கல்!

வரவேற்கும் விஜயகாந்த் கட்சிக்கொடி!

முத்துமாரியம்மன் ஆலயம்

வசதியான இடத்தில் குட்டிகளுடன் நாய்
பாழடைந்த பழைய கிடங்கு வெளித்தோற்றம்


மழை வந்தால் மூழ்கும் நிலையில் குடிசைகள்


சுமார் 4 அடி உயரத்திற்கு 5 அடி X 5 அடி மண்சுவர் கட்டப்பட்ட இந்த இடம் தான் ஒரு குடும்பத்தின் வசிப்பிடம் (கிடங்கிற்குள்)

பல குடும்பங்கள் வசிக்கும் கிடங்கு


இடிந்து விழும் சுவர், அருகே விளையாடும் குழந்தை
-0O0-
நீண்டதூரம் பயணம் செய்து வந்து இந்த முயற்சியில் முன்னின்று செயல்பட்ட செந்தில், தனது வேலைகளுக்கிடையில் உற்சாகமாக ஏற்பாடுகளை செய்து படங்களை எடுத்த ஆழியூரான் என இரண்டு நண்பர்களும் தந்த உழைப்பும், ஊக்கமும் கலந்தது இந்த பதிவு. இந்த முகாமை பாவையிட சென்னை வலைப்பதிவாளர் சந்திப்பு முடிவுகள் ஊக்கத்தை தந்தன.
விடுபட்ட தகவல்களை நண்பர் ஆழியூரான், செந்தில் இருவரும் எழுதவேண்டுகிறேன்.

16 பின்னூட்டங்கள்:

-/பெயரிலி. said...

பதிவுக்கு நன்றி

இளங்கோ-டிசே said...

திரு, உங்களின் அக்கறைக்கு மிகவும் நன்றி.

கலை said...

பதிவுக்கு மிகுந்த நன்றிகள் திரு.

Sivabalan said...

திரு

பதிவுக்கு நன்றி!

அறிய தந்தமைக்கு நன்றி

சோமி said...

நல்லதொரு பணியை ஒரு ஊடகக்காரருக்குரிய பாங்கில் செய்திருகிறீர்கள்.நட்சத்திரமனமைக்கு வாழ்த்துக்கள்.
பண்டா-சாஸ்த்ரி ஒப்பந்தத்தின் போது மலையகதில் இருந்து இந்தியாவுக்கு திருப்பியனுப்பப் பட்ட மக்களும் நெல்லையில் இருகிறார்கள். இந்திய குடிமக்களகியும் எந்த பலனுமில்லாமல் இன்னமும் சிலோன் காலனிகளில் வசிக்கும் இந்த மக்கள் பற்றியும் முடிந்தால் பார்க்கவும்.

வெற்றி said...

திரு,
பதிவுக்கு நன்றி. இன்னும் பதிவைப் படிக்கவில்லை. படித்துவிட்டு பின்னர் கருத்துச் சொல்கிறேன்.

உங்களின் தமிழுணர்வுக்கும், மனிதாபிமான உணர்வுக்கும் என் நன்றிகள்.

மாசிலா said...

ஊடகங்களில் தமது (கட்சி)பெயர் விளம்பரம் செய்யப்படவேண்டும் என்கிற ஒரே நோக்கில் இலங்கை தமிழரை பற்றி பேசுவதும், வெளி நாடுகளில் கூட்டங்களில் பங்கெடுப்பதும் ஆராவாரம் செய்வதும் ஓட்டு பொருக்கி அரசியல் கூத்து என நன்றாகவே புரிந்துவிட்டது. தமிழன், திராவிடன் என உதட்டளவில் கூறினால் மட்டும் போதுமா? கலைஞர், திருமா, வை.கோ, வீரமணி, பழ.நெடுமாறன் மேலும் இதரபல தலைவர்கள்(?) என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?

ஐ.நா சபையிடமிருந்து அகதிகளுக்காக என வாங்கும் பணஉதவி எங்கே? ஐ.நா சபை அகதிகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டதிட்ட விதிகளை ஒழுங்காக அமுல் படுத்துவது எப்போது? அகதிகள் என்கிற முறையில் இவர்களுக்கென்று சில அந்தஸ்துகள் உண்டு. அதை மதித்து இவர்களுக்கு வேண்டிய வசதிகளை சட்டப்படி செய்து தரவேண்டியது அரசாங்கத்தின் கடமை.

மேலை நாடுகளில் அகதிகள் அகதிகள் ராஜ வாழ்க்கை வாழ்கிறார்கள். திபெத்திய அகதிகளுக்கு ஒரு நியாயம். இவர்களுக்கு வேரொரு நியாயமா? இலவசம் இலவசம் என ஏகப்பட்ட பணத்தை வாரி இரைத்து கொண்டிருக்கும் தமிழ அரசாங்கம் இவர்களுக்கு ஏதேனும் கருணை காட்டாதா?

Anonymous said...

திரு,

இப்பதிவுக்கு மிக்க நன்றி, குறிப்பாக புகைப்படங்களுடன் போட்டமைக்கு. உங்களுக்கு உதவிய செந்திலுக்கும் ஆழியூரானுக்கும் எனது நன்றிகள்.

வசந்தன்(Vasanthan) said...

உங்கள் முயற்சிக்கும் பதிவுக்கும் நன்றி.

வடுவூர் குமார் said...

திரு
ஒரு சாதாரன மனித நிலையில் (எங்களைப்போன்றவர்கள்)ஏதாவது உதவி செய்யமுடியுமா?முடிந்தால் சொல்லவும் என்னால் முடிந்த அளவு செய்கிறேன்.

Anonymous said...

உங்களுக்கும், செந்தில் மற்றும் ஆழியூரானுக்கு மனம் கனிந்த நன்றிகள்

வரவனையான் said...

திரு, அதுவும் நாம் பார்த்த வீட்டில் அந்த நண்பர் தன் மூன்று பெண்களுடன் வசிப்பதாய் சொன்னார். உலகின் கொடிய சிறைகள் நினைவுக்கு வந்தது.

பதிவது என் கடமை திரு. விரைவில் என் ஊரின் முகாமுக்கும் சென்று படம் எடுத்து போடுகிறேன்

பாரதி தம்பி said...

முதலில் தாமத பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.

கட்டுரை சிறப்பாக வந்திருக்கிறது.

''நான் படிக்கும் ஸ்கூலில் நாற்பது பொடியல்கள் படிக்காங்கள்.." என்று பேசும் முகாமின் குழந்தைகள் ஈழத்து தமிழையும்,நெல்லையின் தமிழையும் இணைத்துப் பேச பழகிவிட்டார்கள்.ஆனால் அரசுதான் தன்னை நாடி வந்தவர்கள் மீது அன்பு செலுத்தவும்,அரவணைக்கவும் மறுக்கிறது.

நிச்சயம் என் பார்வையிலான விஷயங்களையும் விரைவில் எழுதுகிறேன்.

Anonymous said...

உங்களது பதிவுக்கும் முயற்சிக்கும் நன்றிகள். புலம்பெயர்வாழும் ஈழத்தமிழர்களும் ஏதாவது முயற்சி எடுத்து தங்களால் முடிந்த உதவியைச்செய்ய முன்வரலாமே?

ச.சங்கர் said...

அன்புள்ள திரு,

பாராட்டுக்கள்...வலைப்பதிவர் சந்திப்பிற்குப் பின் (குறைந்த சமையத்துள்) உங்களுக்கு ஒரு முகாமாவது பார்வையிடக் கிடைத்ததே.

உங்கள் கட்டுரையில் அடிப்படை உரிமை, சுகாதாராம், அடிப்படை வசதி முதலியவை பற்றி..குறிப்பிட்டு இருக்கிறீர்கள்..இவற்றை முன்னேற்ற அரசாங்கத்திடம் தனியாகவோ, அமைப்பு ரீதியாகவோ, குழுவாகவோ கோரிக்கை வைக்கலாம்..நாம் எந்த விதமான உதவியும் அரசாங்க அனுமதியின்றி நேரடியாக செய்ய முடியாது..இந்த என் புரிதல் சரியா ? அல்லது தனியாக அல்லது குழுவாக நாம் பொருள் திரட்டி உதவ அனுமதி உண்டா ?

அது தவிர இந்த மக்களுக்கு உடை, போர்வை, தலையணைகள், பாத்திரங்கள், அரிசி முதலான அன்றாட அத்தியாவசியத் தேவைப் பொருட்கள் தர ஏதாகிலும் வழி உண்டா ? அப்படி இருந்தால்(வலை சந்திப்பில் பேசிக் கொண்டிருந்த படி) முயற்சி செய்து அவர்களுக்கு உதவ ஆசை.
இதை இங்கு வெளியிடுவதன் நோக்கம் அது பற்றி தகவல் அறிந்த நண்பர்கள் விளக்கலாமே என்பதே.

நன்றி

sasi said...

முதலில் மனமார்ந்த நன்றி
அரசியல்வாதிகள் அரசியல் இலாபத்திற்கு
மட்டுமே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசுவார்கள். விதிவிலக்கானவர்களும் உண்டு. பத்திரிகையளர்கள் நடிகை வீட்டு வாசலில் தூங்குவார்களே தவிர, ஒரு சக மனிதனின் வாழ்வு குறித்து
எழுதமட்டார்கள். ஈழ்க் கவியரசு காசி ஆனந்தன் எழுதியது போன்று
" கடலுக்கு அப்பால் கரையென்று எண்ணிணோம், கரையென்று நினைத்ததில்கூட காலூன்ற முடியவில்லை.".

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com