Tuesday, January 16, 2007

பெரியப்பாவின் வீடு

பெரியம்மா மிகவும் யதார்த்தமானவங்க. பாம்படம் போட்ட காது ஆட, வெற்றிலை மெல்லும் பொக்கை வாயால் சிரித்தபடியே அக்கறையாக விசாரிக்கும் பெரியம்மாவின் நினைவு வந்தது. விடுமுறைக்கு செல்லும் போதெல்லாம் தேடி வந்து அன்பாக சுகம் கேட்கும் பெரியம்மா இல்லாதது இந்தமுறை கவலையாகவே இருந்தது. பெரியம்மா மாரடைப்பு நோயினால் இறந்த நேரத்தில் 5 மகன்களில் ஒருவரும், ஒரே மகளும் மட்டும் பக்கத்துல இருந்தாங்களாம். யாரு அவங்க இறுதி சடங்குகளை கவனிப்பதுன்னு பெரிய குழப்பமாம். கௌரவத்தை விடாம அண்ணனே எல்லாத்தையும் நடத்தி முடித்தாராம். அவரும் பழையபடி வெளிநாட்டுக்கு போயிட்டார்.

பெரியப்பா சரியாக கண் தெரியாததால் மகள் வீட்டில் தங்கி இருக்கார். பெரியப்பா எந்த கோவிலுக்கும் போனதில்லை. அவர் சிலைகளோ, படங்களோ வைத்து கும்பிட்டதும் இல்லை. நிறைகளும், குறைகளும் கொண்ட சாதாரணமான மனிதர் அவர். பெரியப்பா வீடு இப்போ யாருமில்லாமல் கழையிழந்து பூட்டியே கிடக்கிறது. மண்ணும், சுண்ணாம்பும், ஓடும், மரங்களும் சேர்ந்தது மட்டுமா வீடு? பார்க்க மிகவும் எளிமையாக சிறியதாக இருப்பினும் இந்த வீட்டை சுற்றி ஒரு குடும்பத்தின் தொடர் வரலாறும், சுற்றுப்புறத்தவரது இனிமையான காலங்களும் சேர்ந்தே பூட்டப்பட்டிருக்கிறது.

°°°°
பெரியப்பா வீட்டின் முன்னர் பெரிய முற்றம் உண்டு. அக்கம் பக்கத்து ஆட்கள் அங்கே பந்து விளையாட, கபடி விளையாட வருவாங்க. சின்ன வயதில் கோலி விளையாடுறது, டயர் வண்டி ஓட்டுறது, பனங்காய் கூந்தை வண்டி செய்து விளையாடியது, ஆடுபுலியாட்டம், கண்டு விளையாட்டு (கண்ணாமூச்சியாட்டம்) எல்லாம் இங்கே தான். பெரியவங்க எல்லோரும் கூடி நின்று வேடிக்கை பார்ப்பதும், பிள்ளைகள் விளையாடுவது, வம்பளப்பது (வெட்டியா பேசுறது) எல்லாமே உண்டு. அறுவடை நேரத்தில் பல குடும்பத்தினர் களமடிக்கிறது இந்த முற்றத்தில் தான். நாடோடி மக்களான கோணங்கிகள் ஊருக்கு வரும் போது புகலிடம் தருவதும் பெரியப்பா வீட்டு திண்ணையும், முற்றமும் தான்.

அந்த காலங்களில் வயல் அறுக்கிற நேரம் பெரியப்பா பிள்ளைகள் எல்லோரும் வேலைக்கு போனாங்க. பக்கத்து வீட்டுக்காரங்க வயலறுக்க, களமடிக்க இவங்க உதவியும் செய்தாங்க. பெரியப்பா வயல் அறுக்க மற்ற எல்லாரும் வந்தாங்க. வயலறுக்கிற நேரம் நானும் வேடிக்கை பார்க்க போனதுண்டு. எங்களுக்கு வயல் இல்லாததால் நெல்கட்டுகளை பிரிச்சு போட்டு மாடுகளை பூட்டி சுற்றி வருவதும், நெல்லை அளக்கிறதும் பார்ப்பதே சந்தோசம். ஊரிலுள்ளவங்க கூடி நின்னு எல்லா வேலையையும் செய்யுறது பார்க்க மனசுக்கு இதமாக இருந்தது.

கடும் வறட்சி வந்து ஊரிலுள்ள ஒரே பொது கிணறு தண்ணி வற்ற ஆரம்பித்ததும் பெரியப்பா வீட்டு முற்றத்தில ஓரமா கிணறு வெட்டினாங்க. அந்த கிணற்று தண்ணி தான் ஊரில நிறைய குடும்பங்களுக்கு சமையலுக்கு பயன்பட்டது. தண்ணி எடுக்க ஆணும், பெண்ணும் வருவாங்க. தண்ணி எடுக்கிறப்ப கேலி, கிண்டல், அக்கறை எல்லாமே பேச்சுகளில் கலந்திருந்தது. அதை பார்க்கவும், கேட்கவும் சந்தோசமா இருந்தது.

யாராவது சுகமில்லைன்னா கிணற்றடியில் தண்ணி எடுக்கிற நேரம் செய்தியை பரிமாறுவதும், எல்லாரும் திரண்டு வீட்டுக்கு போவாங்க. நல்ல அக்கறையா, பாசமா விசாரிப்பாங்க. நோய் தீரும் வரை தினமும் வந்து பாக்கிறவங்களும் உண்டு. பார்க்க போற நேரம் பொருட்கள் எதுவும் கொண்டு போக மாட்டாங்க.

இக்கட்டான சூழ்நிலையில் பெரியப்பா வயலை விற்றார். அறுவடையும், களமடிக்கும் சந்தோச நிகழ்வுகளும் மெல்ல மறந்தது. கலப்பை மட்டும் அவ்வப்போது யாராவது தேவைப்பட்டால் எடுத்துட்டு போவாங்க. முற்றம் விளையாட்டு களமாக கொஞ்சம் காலம் இருந்தது. அண்ணன்களும், பக்கத்து வீட்டு ஆண்களும் கேரளத்துக்கும், வெளிநாட்டுக்கும் போன பிறகு விளையாட ஆட்கள் வந்ததும் குறைய ஆரம்பித்தது.தங்கச்சி கல்யாணம் வரவே பெரியப்பா ஒரு பகுதி நிலத்தை விற்றார். முற்றம் துண்டாகி இன்னொருவரிடம் ஒரு பகுதி போனதில் வாழை பயிரிட்டனர். நீண்ட முற்றம் இல்லாமல் விளையாட ஆட்கள் வருகையும் நின்று போனது.

பிள்ளைகளுக்கு சொத்தை பிரித்து கொடுத்ததில் கிணறும் வீடும் குறுகிய முற்றமும் மட்டும் பெரியப்பாவிற்கு மிஞ்சியது. வெளிநாட்டு பணம் கொண்டு வந்து அண்ணன்கள் அவரவரது பங்கு நிலத்தில் வீடுகட்ட ஆரம்பிச்சாங்க. ஒருவர் வீட்டில் இருந்து அடுத்தவர் வீட்டை பார்க்க முடியாமல் சுற்றி மதில் கட்டினாங்க. ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனி கிணறு வெட்டப்பட்டது. பழைய கிணற்றில் யாருமே தண்ணீர் எடுக்க முடியாத அளவு கிணற்றிற்கான வழி அடைபட்டுப்போனது. எல்லாருக்கும் கல்யாணம் ஆகி, குழந்தைகளும் இருக்கு. வீடு ரொம்ப பெருசா கட்டியிருக்காங்க. குழந்தைகள் இப்போ எல்லாம் டி.வி முன்னாடி உக்காந்து சினிமாவும், சீரியலும் பாக்கிறாங்க. சொந்த பந்தங்கள் வீட்டோட முடிஞ்சு போகுது. வெளிநாட்டில இருந்து எப்போவாவது போன் வரும் போது அப்பா கூட பேசுறதும் கடந்த முறை அப்பா வாங்கி வந்த பொம்மை துப்பாக்கியால் விளையாடுவதுமாக குழந்தைகளின் நேரம் வீட்டிலேயே முடிகிறது. அடுத்த முறை வருகைக்கு அப்பாவை தேடிய படியே குழந்தைகளும், கூடவே துணைவியும்!

வெற்றிலை இடித்தபடியெ பொக்கை வாயால் சிரிக்கும் பெரியப்பாவை யார் தேடி காத்திருப்பர்களோ? பெரியப்பா எதை எதிர்பார்த்து இருக்கிறாரோ? பெரியம்மாவின் முகம் மனதில் வந்து போகிறது.

11 பின்னூட்டங்கள்:

bala said...

திரு அய்யா,

"பெரியப்பாவின் வீடு" கதை மனதை பிசைந்தது.மறு காலனி ஆதிக்க மோகினியின் ஆட்டத்தால் நமது பண்பு/கலாசாரம் எப்படி சீரழிகிறது என்பதை இதைவிட வெளிச்சம் போட்டு யாரும் காட்டியதில்லை என்று சொல்லலாம்.
வாழ்த்துக்கள்.

பாலா

கலை said...

தற்போதைய உலக ஓட்டத்தில், பல்வேறு காரணங்களால், பலரும் பலதையும் இழந்து விட்டு, நினைவுகளை மட்டுமே சுமந்து வாழ்கின்றோம்.

வல்லிசிம்ஹன் said...

எத்தனை பெரியப்பாக்களும் ஷித்தப்பாக்களும் நிறைந்த உலகம் நமக்குக் கிடைத்தது.
இனிமேல் அப்படியா இருக்கும்.
தொலைக்காட்சியும்,முதுகு கூனும் பையும், வேலைக்குப் போக மட்டுமே படிப்பும் ,எனக்கு அப்புறமான இந்தப் பரம்பரையைப் பார்க்கும்போது மனது சிரமப்படுகிறது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அந்த காலத்துல அந்தகாலத்துல ன்னு
பெரியவங்க சொல்லிக்கேட்கும்
போது என்னடா இது ன்னு தோணும்.ஆனா இப்போ
நானே எங்க காலத்துலன்னு சொல்லநேரும் போது தான் மாற்றங்கள் எத்தனை தூரம் இழப்புகளை ,பாதிப்புகளை தந்து இருக்குன்னு தெரியுது.

ரவி said...

நட்சத்திர வாழ்த்துக்கள் !!!!!!

தருமி said...

கனத்த மனத்திலிருந்து வந்த வார்த்தைகள் எங்கள் மனத்தையும் கனக்க வைக்கின்றன. மொழியின் அழகோ, சொன்னவைகளில் இருந்த உண்மையான உணர்வுகளோ எதனாலென்று சொல்லவியலவில்லை.

thiru said...

//bala said...
திரு அய்யா,

"பெரியப்பாவின் வீடு" கதை மனதை பிசைந்தது.மறு காலனி ஆதிக்க மோகினியின் ஆட்டத்தால் நமது பண்பு/கலாசாரம் எப்படி சீரழிகிறது என்பதை இதைவிட வெளிச்சம் போட்டு யாரும் காட்டியதில்லை என்று சொல்லலாம். வாழ்த்துக்கள். பாலா//

பொருளாதாரம் மட்டுமே சமூக வாழ்வில் முன்னிலைபடுத்தப்படுகிற போது இப்படியான சோகங்கள் தான் மிச்சம் பாலா!

thiru said...

//கலை said...
தற்போதைய உலக ஓட்டத்தில், பல்வேறு காரணங்களால், பலரும் பலதையும் இழந்து விட்டு, நினைவுகளை மட்டுமே சுமந்து வாழ்கின்றோம்.//

உண்மைதான் காலத்திற்கு ஏற்ப நாம் மாறுவதா? இல்லை சமூகத்தையும் அதன் போக்கையும் மாற்றுவதா? இது தானே இன்றைய போராட்டம்.

thiru said...

//வல்லிசிம்ஹன் said...
எனக்கு அப்புறமான இந்தப் பரம்பரையைப் பார்க்கும்போது மனது சிரமப்படுகிறது.//

::வல்லிசிம்ஹன் said...
எத்தனை பெரியப்பாக்களும் ஷித்தப்பாக்களும் நிறைந்த உலகம் நமக்குக் கிடைத்தது.
இனிமேல் அப்படியா இருக்கும்.
தொலைக்காட்சியும்,முதுகு கூனும் பையும், வேலைக்குப் போக மட்டுமே படிப்பும் ,எனக்கு அப்புறமான இந்தப் பரம்பரையைப் பார்க்கும்போது மனது சிரமப்படுகிறது.)

:((

thiru said...

//லட்சுமி said...
அந்த காலத்துல அந்தகாலத்துல ன்னு
பெரியவங்க சொல்லிக்கேட்கும்
போது என்னடா இது ன்னு தோணும்.ஆனா இப்போ
நானே எங்க காலத்துலன்னு சொல்லநேரும் போது தான் மாற்றங்கள் எத்தனை தூரம் இழப்புகளை ,பாதிப்புகளை தந்து இருக்குன்னு தெரியுது. //

மனித இனம் உறவுகள் அடிப்படையில் கூடி வாழவேண்டிய சமூக விலங்கு. இன்று தனிமைகளும், பணம் மட்டுமே வாழ்வாகி போனது. ம்ம்ம்..

thiru said...

முதல் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி ரவி!

//Dharumi said...
கனத்த மனத்திலிருந்து வந்த வார்த்தைகள் எங்கள் மனத்தையும் கனக்க வைக்கின்றன. மொழியின் அழகோ, சொன்னவைகளில் இருந்த உண்மையான உணர்வுகளோ எதனாலென்று சொல்லவியலவில்லை.//

உணர்வுகளை பகிர்ந்தமைக்கு நன்றி அய்யா!

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com