Sunday, December 31, 2006

ஆர்.எஸ்.எஸ் ஒரு கலாச்சார அமைப்பு?

தமிழக பயணத்தின் போது தமிழர்களின் தொன்மையான கட்டடக்கலை, சிற்பக் கலையை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு வைத்திருக்கும் மாமல்லபுரம் சென்றேன். வாகனம் ஓட்டி வந்த நண்பர் "கிருஸ்ணாவின் வெண்ணை உருண்டை" பார்க்கவேண்டுமா என கேட்டார். கிருஸ்ணா இனிப்பகம் வெண்ணை உருண்டை கண்காட்சி நடத்துகிறதோ என நினைத்து, வெண்ணை உருண்டை கண்காட்சி எதாவது நடக்கிறதா என கேட்டேன்.

மீண்டும் விசாரித்ததில் அவர் குறிப்பிட்டது ஒரு உருண்டை வடிவிலான கல் என்பது புரிந்தது. இதற்கு ஏன் Krishna's Butter Ball என பெயர்? இந்த பெயர் எப்படி வந்தது? தொல்பொருள் ஆய்வுகளின் அடிப்படையில் இது சரியான பெயர்தானா?

மகாபாரத கதை நடந்ததாக சொல்லப்படுகிற பகுதிகள் அனைத்தும் வட இந்தியாவில் இருக்கிறது. கிருஸ்ணனது நடமாட்டமோ, கோபியர்கள் நடமாட்டமோ, வெண்ணை கதைகளோ நடந்த பகுதி மாமல்லபுரம் சார்ந்ததல்ல. பிறகு ஏன் இப்படி ஒரு பெயர்? பார்ப்பனீய இந்து மதத்தை தென்னிந்தியர்கள் மீது திணித்து நமது கலாச்சார அடையாளங்களை, வழிபாட்டுமுறைகளை அபகரித்த வரலாறும் இப்படி தான் துவங்கியிருக்கிறது. அந்தந்த பகுதிகளில் உள்ள அடையாளங்களை, சின்னங்களை, இயற்கையை, இடத்தை பார்ப்பனீய இந்து மத பெயர்களை வழங்கி அழைத்திருக்கிறார்கள். மண்ணின் மக்கள் வழங்கிய பெயர்கள் காலப்போக்கில் மறைக்கப்பட்ட வரலாறு அரங்கேறியது இப்படி தான். ஆரியர்களின் பெயர்களும், வெள்ளைக்காரனின் பெயர்கள் என அடையாளங்கள் வரலாற்றில் நிறைந்து காணப்படுகிறது.

****
பத்மனாபபுரம் அரண்மனை பகுதியில் மூன்று கோட்டைகள் அமைந்துள்ளன. ஒன்று யுத்தங்களில் கொல்லப்படும் சவங்களுக்கானது. இன்னொன்று அரண்மனை அமைந்துள்ள கோட்டை. மற்றொன்று மருந்துவாழ் மலையில் காணப்படுகிற மருந்துக்கோட்டை. மருந்துவாழ்மலை என்ற பெயர் காரணம் திருவிதாங்கூர் மன்னன் மூலிகைகளை பயிரிட்டு யுத்தத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை வழங்கிய இடம் என்பதால் என அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். அந்த மலையை சுற்றி இந்துமுன்னணி, ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனீய கும்பல் புதிய "கதையை" திரித்திருக்கிறது.

அவர்களது திரித்தல் கதை: யுத்தகளத்தில் இருந்த இராமனுக்கு சிரஞ்சீவி மலையை அனுமன் கொண்டு சென்ற வேளை விழுந்த துண்டு ஆதலால் அது மகேந்திரகிரி மலை என்றழைக்கப்பட்டது.ஆகவே இது இந்துக்களுக்கு புனிதமான இடமாம்.

இப்படி மகாபாரத, இராமாயண கதைகளை சொல்லி வரலாற்றை மாற்றி எழுத அதிகார மையங்கள் மட்டுமல்ல நமது நாட்டின் சிற்றூர், கிராமங்களிலும் பார்ப்பனீயம் ஊடுருவியிருக்கிறது. பார்ப்பனீயத்தின் புதிய வடிவம் சங்பரிவார அமைப்புகளாக இந்துமுன்னணி, இந்துதேசம், ஆர்.எஸ்.எஸ் என பல பெயர்களில் இயங்குகிறது. பார்ப்பனீய சிந்தனையை எல்லா சாதியினருக்கும் திணிக்க இந்த அமைப்புகள் பயன்படுத்தப்படுகிறது. சித்பவன் பார்ப்பனர் கோல்வால்கரால் (குருஜி) துவங்கப்பட்ட மதவெறி, வர்ணாஸ்ரம அமைப்பான ஆர்.எஸ்.எஸ் உருவாக்கிய கலாச்சார பண்பாட்டு சிதைவுகளை சீர்படுத்த ஆண்டுகள் ஆயிரம் வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் ஒரு கலாச்சார அமைப்பு தான்! நமது கலாச்சாரத்தை பார்ப்பனீயமயமாக்குகிற அமைப்பு அது. காந்தியின் கொலைக்காரர்கள் சத்தமில்லாமல் செய்கிற இந்த வரலாற்று சிதைத்தலில் வரும் தலைமுறைகளின் வாழ்வும் அடையாளமும் தொலையப் போகிறது.

____

பூங்கா இதழில் இது வெளிவந்தது.

Saturday, December 30, 2006

ஈராக்: சுருக்கு கயிற்றில் உலக சமாதானம்

குளிர்படர்ந்த டிசம்பர் 30, 2006 அதிகாலை நேரம் பாக்தாத் நகரில் பரபரப்பான இராணுவ கெடுபிடிகள் நிறைந்த இடம். கடந்த சில நாட்களாகவே அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளும், ஈராக்கிய படையினருமாக ஏற்பாடு செய்து வைத்திருந்த பாதுகாப்பான ஒரு இடத்தில் முக்கிய நபர் ஒருவரின் வருகைக்காக காவலாளிகள், ஒளிப்பதிவு கருவிகள், தூக்குமேடை, தூக்கு கயிறு என அனைத்து ஏற்பாடுகளும் தயாரான நிலையில் இருந்தது.

*****
வாசிங்டன் நகரில் அமைந்துள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் ஜார்ஜ் புஸ் இன்னும் சில மணி நேரங்களில் ஈராக்கில் நடைபெற போகிற தூக்கிக்கொலை செய்யும் சட்டரீதியான நடவடிக்கை பற்றிய செய்தியை அறிந்த பின்னர் ஆழ்ந்த நித்திரைக்கு செல்கிறார். அமெரிக்க அதிபரின் உறக்கம் கலையும் வேளை அமெரிக்கா மட்டுமல்ல உலகமே ஒரு வித அமைதியில் விழித்திருக்கும்.

*****

மணித்துளிகள் கடந்து காலை நேரம் நெருங்கி வர துவங்குகிறது. ஈராக்கிய (முன்னாள்) அதிபர் சதாம் உசேன் பாதுகாப்பு படையினரின் கெடுபிடிகளுடன் அமைதியாக ஏற்பாடாக இருந்த அறையில் கையில் தனது புனித நூலான குரானுடன் நடந்து வருகிறார். தூக்குதண்டனைக்கான வழக்கமான நடவடிக்கைகள் துவங்குகிறது. சுற்றியிருக்கும் காவலாளிகள் அடையாளம் தெரியாமல் இருக்க தலை மூடப்பட்டிருக்கிறது. ஒளிப்பதிவு கருவிகள் இயங்க துவங்கிவிட்டது. சதாமுக்கு அணிவிக்க முகமூடி ஒன்றை காவலாளி எடுத்து நடக்க போவதை விவரிக்க துவங்க, முகமூடி அணிவதை நிதானமாக உறுதியுடன் மறுக்கிறார். கழுத்தை சுற்றி மட்டும் கருப்பு துணி கட்டப்படுகிற வேளையிலும், அதன் மீது சுருக்கு கயிற்றை வைத்து இறுக வைக்கும் நேரத்திலும் அதே நிதானத்துடன் அதிபருக்கான மிடுக்கான உடையில் சதாம். சிறிது நேரத்தில் எல்லாம் முடிந்தது.

கடைசிவரை தானே ஈராக்கிய அதிபர். ஈராக்கை சூழ்ந்துள்ள அமெரிக்க ஆக்கிரமிப்பு படைக்கு அதிகாரமில்லை என முழங்கிய சதாமின் குரல் சட்டத்தின் உள்ளே சுருக்கு கயிற்றில் அடக்கப்பட்டது.

*****

பேரானந்தம் கொள்ளுங்கள் இனி உலகில் அமைதி துவங்கிவிட்டது! உலகையே பேரழிவு பாதைக்கு கொண்டு செல்ல இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஸ்ஸால் அடையாளம் காட்டப்பட்ட சதாம் உசேனை தூக்கிலிட்டால் அமைதி வராமல் என்ன வரும்?

மனித குலத்தையே அழிக்க வல்லமை கொண்ட பேரழிவு ஆயுதங்களை சதாம் உசேன் வைத்திருப்பதாக கூறி ஈராக் மீது 2003 மார்ச். 20ல் அமெரிக்கா போர் தொடுத்தது. இந்த யுத்தத்தை ஜார்ஜ் புஸ், டோனி பிளேயர், ஜான் ஹவார்ட் வகையறாக்கள் துவங்கியதை அதிகாரம் இல்லாத ஐக்கிய நாடுகள் சபையும் பிற நாடுகளும் வேடிக்கை பார்த்தன. எந்தவித ஆதாரமும் இல்லாமல் அரசியல் பேச்சாளர்களை போல ஜார்ஜ் புஸ் அடுக்கடுக்காக சொன்ன பொய்களில் உலகமே மூழ்கியது. யுத்தம் துவங்கி சில மாதங்களிலேயே ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் எதுவுமில்லை. தவறான உளவுத் தகவல்களால் ஈராக் மீது தொடுக்கப்பட்டது இந்த ஆக்கிரமிப்பு யுத்தம் என்ற செய்தி வெளியானது. அதன் பின்னரும் தனது தவறை திருத்த அமெரிக்க அரசும் அதன் இராணுவ வல்லமையும் முன்வரவில்லை.

ஜார்ஜ் புஸ் தொடுத்த ஆக்கிரமிப்பு யுத்தத்தால் இதுவரை ஈராக்கில் சுமார் 6 லட்சம் மக்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

148 ஷியா இன மக்களை கொன்று குவித்த வழக்கில் சதாமிற்கு மரணதண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த மரணதண்டனையை "பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நீதி", "ஈராக்கியர்களது வாழ்வில் ஒரு மைல்கல்" என கொண்டாடுகிற மேற்கத்திய உலகம் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டது. ஒரு நாட்டை சீரழித்து சின்னா பின்னமாக்கி 6 லட்சம் மக்களை கொன்றவர்களுக்கு எப்போது தண்டனை? இந்த சர்வதேச கொலைக் குற்றவாளிகளை எந்த நீதிமன்றத்தில் விசாரிப்பது?

ஈராக்கை கைப்பற்றிய சில மாதங்களில் மரணதண்டனையை ஒழித்ததாக அறிவிப்பு செய்தது அமெரிக்கா. பாக்தாத் நகரை கைப்பற்றிய நாளில் சதாமின் சிலையை டாங்கிகளை வைத்து இழுத்து ஈராக்கிய மக்களை வைத்தே ஒரு நாடகத்தை அரங்கேற்றியது அமெரிக்கா. இந்த நிகழ்வு மூலம் அமெரிக்காவிடம் பிடிபட்டால் சதாமின் மரணம் தீர்மானிக்கப்பட்டு விட்டதை அனைவரும் கணித்தனர்.காட்டிக்கொடுத்தவன் உதவியால் பாதாள அறையில் பதுங்கி இருந்த சதாம் உசேனை 2003 டிச. 14 அன்று அமெரிக்கா பிடித்தது முதல் சதாமின் மரணம் பற்றிய சர்ச்சைகள் பலமாக எழுந்தது. தானே ரத்து செய்த மரணதண்டனையை தனது பொம்மை அரசாங்கம் வழியாக கொண்டுவந்து கோமாளித்தனமான நீதிமன்றத்தில் வெள்ளை மாளிகையின் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. ஈராக்கிய பொம்மை பிரதமர் மாலிக்கி கையெழுத்திட்டு அதற்கு தலையாட்டினார்.

இந்த நாடகத்தை அரங்கேற்றியதன் மூலம் சர்வதேச நீதிமன்றத்தையும் அதன் தேவைகளையும் கேலிக்குள்ளாக்கியிருக்கிறார்கள் ஜார்ஜ் புஸ், டோனி பிளேயர் வகையறாக்கள். பாரபட்சமில்லாத நீதி வழங்கவும், குற்றத்தின் உண்மை நிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வரவும் விடாது தடுத்து சதாம் உசேனோடு உண்மைகளும் புதைகுழிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. முறையான விசாரணை இல்லாத ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பினால் மரணதண்டனை கொடுக்கப் போகிறார்கள் என தெரிந்தும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஈராக்கிய அதிபர் சதாமை சில நாட்களுக்கு முன்னர் தான் ஈராக் பொம்மை அரசின் கையில் ஒப்படைத்தது. ஈராக்கியர்களை வைத்தே சட்டரீதியான கொலையை செய்து முடித்திருக்கிறது அமெரிக்க ஆதிக்கம்.

அமெரிக்க ஆதிக்கத்திற்கு தனஹு எதிரிகளை கொலை செய்வது ஒன்றும் புதியதல்ல! ஆப்கானின் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அதிபர் நஜிபுல்லாவை செப்டம்பர் 2, 1996ல் காபூல் நகர மின்சார கம்பத்தில் தலிபன்களை வைத்து தூக்கிலேற்றி கொன்றது. சிலி அதிபர் அலண்டேவை அவரது இராணுவத்தை வைத்து கொன்றது. குயூபா புரட்சியாளன் சேகுவேராவை உயிருடன் பிடித்த பின்னரும் துப்பாக்கியால் சுட்டு சி.ஐ.ஏ கொன்றது என அமெரிக்க வல்லாதிக்கதின் வரலாறு நீளமானது. தனது கட்டுப்பாட்டில் இயங்க மறுக்கிற நாடுகளின் தலைவர்களை கொன்ற வரலாற்றில் சதாமின் கொலை சட்டரீதியாக பதிவு செய்யப்பட்டு வளர்ந்த தொழில்நுட்ப உதவியால் ஒளிப்பதிவுடன் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. முறையான விசாரணை இல்லாத மரணதண்டனை வழி சதாமிற்கு வரலாற்றில் அழுத்தமான இடத்தை வழங்கியிருக்கிறது அமெரிக்கா. சதாம் கடைசி வரை அமெரிக்க வல்லாதிக்கத்தை எதிர்த்த வீரன் என்ற அளவுகோலில் உயர்ந்து நிற்கிறார்.

சதாமை ஒழித்தால் உலகம் அமைதியாகும் என்றது அமெரிக்கா. சதாம் கொல்லப்பட்ட ஈராக்கியர் வாழ்வில் தொடர்ந்து வரும் நாட்கள் சமாதானத்தை தருமா?

அமெரிக்காவின் அடுத்த குறி எந்த நாட்டின் தலைவர் மீது? காலம் பதில் சொல்லும்.

சென்னை வலைப்பதிவாளர்கள் சந்திப்பு - எனது பார்வை

வலைப்பதிவாளர்கள் சந்திப்பிற்கான நாளான டிசம்பர் 17 காலையில் தம்பி அகிலன் தொடர்பு கொண்டு ஒரு பேட்டிக்காக கேட்டிருந்தார்.

நண்பர் பாலபாரதியிடம் தொலைபேசியில் சந்திப்பு பற்றிய தகவல்கள் அறிந்து கொண்டேன். தி.நகர் பகுதியில் சுமார் 3.45க்கு சென்று சேர்ந்தேன். தம்பி அகிலன் தொடர்பு கொண்டு தான் வந்து சேர்ந்து விட்டதாக தகவலை தந்ததால் பனகல் பூங்கா பக்கம் செல்ல, பாலபாரதியின் அழைப்பால் சந்திப்பு இடம் மாற்றப்பட்டிருபது தெரிந்து கொண்டு தம்பி அகிலனை தேடி கண்டுபிடித்தேன். உருவத்தில் தம்பி இளையவராக இருந்தாலும் கருத்துக்களில் அனுபவத்தில் பெரியவர் என்பது அவரது பதிவுகளை படிப்பவருக்கு தெரியும்.

இயல்பாகவே உள்ள கூச்சம், முதல் சந்திப்பு நடக்கப் போகிறது பற்றிய ஆர்வம் என கலவையான நிலையில் நடேசன் பூங்காவில் சென்றதும் பாலபாரதி இருந்த பக்கமாக நகர, சில நண்பர்கள் இருப்பதை அடையாளம் காணமுடிந்தது. நண்பர்கள் வந்து சேர துவங்க பூங்காவில் இயல்பாகவே வட்ட வடிவமாக அமர்ந்து கொண்டோம். லக்கிலுக் அவர்களை அறிமுகத்தை துவங்க 'கலாய்த்தலும், கலாய்க்கப்படுதலும் நாயகன்' பாலபாரதி சொன்ன வேளை "அடடா நாம தான் கடைசியா" என கெட்டுக்கொண்டேன். ஒவ்வொருவரும் புன்னகையுடன் தங்களைப் பற்றியும் அவர்களது வலைப்பூக்கள் பற்றியும் சொல்லிக்கொண்டே வந்தனர் (பொன்ஸ் பக்கங்களில் அறிமுகம் பற்றிய குறிப்பை காணலாம்). அந்த மாலை கருக்கல் நேரத்தில் "இதற்கு முன்னரே சந்தித்து பழகிய நண்பர்களை மீண்டும் பார்ப்பது போன்று" எனக்குள் உணர்வு ஏற்பட நாம் சக மனிதர்கள் என்பதை கடந்து காரணம் எது என தெரியவில்லை.

இடையில், வசந்தன் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு அகிலனுடன் உரையாடினார். கலையின் அழைப்பு வந்திருந்தது கவனிக்காமலே என்னை அறிமுகம் செய்து கொண்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்தின் அவசியம் பற்றி பேசிக்கொண்டிருந்தேன்.

பதிவர்கள் அனைவரிடமும் ஒருவித சமூக அக்கறை/ பிறரது துன்பத்தை எண்ணி வருந்தும் மனநிலையை காண முடிந்தது.

தாயக பயணத்தின் போது ஈழத்தமிழர்களது நிலை பற்றி தமிழக மக்கள் கிணற்றில் இடப்பட்ட கல் போன்ற மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது. அவற்றிற்கு சில காரணங்கள்:

  • ஈழத்தின் சமகால நிகழ்வுகளும், ஈழமக்கள் படுகிற வேதனை பற்றிய தகவலும் தமிழகத்தில் மிக குறைவாகவே காணப்படுகிறது.
  • கடந்த கால அரசுகள் எழுப்பிய அச்ச உணர்வுகளால் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான குரல்கள் கொடுப்பதோ அமுக்கப்பட்டிருப்பது.
  • ஈழ மக்களின் அவலநிலை பற்றி தமிழக/இந்திய ஊடகங்களில் பெரியதாக செய்திகள் காணப்படுவதில்லை. அப்படி வருகிற செய்திகளும் பெரும்பாலும் இராணுவ, அரச செய்திகளாக அமைகிறது.
  • ஈழப்பிரச்சனை என்றாலே சில தமிழக அரசியல் கட்சிகளுக்கு மட்டுமான 'உரிமம்' என்றாகிவிட்டதோ?
பல நாட்களாக வலைப்பூக்களில் கருத்துக்களை பகிர்ந்து அடையாளம் கண்டுகொண்ட பல முகம் தெரியாத பதிவர்களை ஒரே இடத்தில் சந்தித்தது ஒருவித இனிய உணர்வை தந்தது. கருத்துக்களில், கொள்கையில் மாறுபாடு கொண்டிருக்கலாம் ஆனால் மனிதர்கள் என்ற விதத்தில் நாம் இணைய வேண்டியவர்கள் என்பதை இந்த சங்கமம் மீண்டும் ஒலித்தது. மூத்த பதிவர்கள் முதல் புதிதாக வந்த பதிவர்கள் வரை கூடி கலந்துரையாடும் இந்த பண்பு வளரவேண்டும். இவற்றிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

சந்திப்பு பற்றியும் அதன் உரையாடலையும் சிவஞானம்ஜி அய்யா, தமிழ்நதி, பொன்ஸ், தமிழி என பலரும் அழகாக எழுதியுள்ளனர். அதனால் அது பற்றி எழுதுவதை தவிர்த்துவிட்டேன்.

சென்னை வலைப்பதிவாளர் சந்திப்பில் அருள்குமார், வீரமணி, லக்கிலுக், பகுத்தறிவு, ரியோ, சுந்தர், விக்கி, தமிழ்நதி, சிவஞானம்ஜி, துளசிகோபால், பொன்ஸ், மா.சிவகுமார், யெஸ். பாலபாரதி, ப்ரியன், த. அகிலன், கோ. இராகவன், ஓகை நடராஜன், தமிழி, We the people, நிர்மலா, அன்புடன் ச.சங்கர், சுகுணா திவாகர் என வலைப்பதிவாளர்கள் அனைவரையும் சந்திக்க கிடைத்த வாய்ப்பு அருமை. ஒவ்வொருவரைப் பற்றியும் பொன்ஸ் தனியாக எழுதியுள்ளமையால் என் அறிமுகம் அவசியமில்லை. எல்லோரும் திறைமையான, அக்கறையான இயல்பான சகமனிதர்கள். இவர்களிடமிருந்து தனிப்பட்ட விதமாக கற்றுக்கொள்ள எனக்கு பல விடயங்கள் இருந்தன.

சந்திப்பின் முடிவில் ஈழத்தமிழர் அகதிகள் முகாம் பற்றிய செயலுக்கான திட்டத்துடன் கலந்தபோது மனம் கனமாகவும் ஒரு வித அமைதியாகவும் இருந்தது.

கூட்டம் பற்றிய எனது பார்வை:
  • குறுகிய கால அறிவிப்பாக இருப்பினும் 23 பேர் கூடி கலந்துரையாடியது வலைபதிவாளர் ஒன்று கூடலில் இருக்கிற ஆர்வத்தை உணர்த்தியது.
  • ஈழத்தமிழர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள பொருளாதார தடை, அகதிகள் நிலை போன்ற சமகால நிகழ்வுகள் பற்றிய கருத்து பரிமாறல்கள் துவக்கம் வலைப்பதிவாளர்கள் பரந்த சமூக தளத்தில் சிந்திக்க, இயங்க வாய்ப்பு வளர்கிறது. நமது சமூகத்தில் காணப்படுகிற பல அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார நிகழ்வுகளையும் தொடர்ந்து விவாதிப்பது வலைப்பதிவாளர்களிடையே சிந்தனைகளை வளர்க்க உதவலாம்.
  • பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வை எதிர்பார்க்கும் தன்மை வலைப்பதிவாளர்களிடமும் இருப்பதை காணமுடிந்தது (நாமும் சமுதாயத்தில் ஒரு அங்கம் என்பதில் அது சரியே). சமூகப்பிரச்சனைகளில் மாற்றம் என்பது ஒரு செயல்பாட்டால் மட்டும் நிகழ்ந்துவிடாது. இணைந்து செயல்படும் தொடர் செயல்பாடால் மட்டுமே மாற்றங்கள் பல நிகழ்ந்திருக்கிறது. குடிதண்ணீர் பிரச்சனை முதல் லஞ்சம், ஊழல், வேலையில்லா திண்டாட்டம் என அனைத்து பிரச்சனைகளுக்கும் இது பொருந்தும் (இது பற்றி இன்னொரு தலைப்பில் விரிவாக எழுதுகிறேன்).
  • அகதிகள் முகாமை பார்வையிட்டு அறிக்கை தயாரிக்கவும் முடிவானது இந்த சந்திப்பின் முத்தாய்ப்பான நிகழ்வு.

இந்த சந்திப்பின் பின்னர் சென்னையில் முத்துதமிழினி சந்திப்பு. மதுரை, இராசபாளையம், நெல்லை என பயணித்து தருமி அய்யா, லிவிங் ஸ்மைல் வித்யா, மதுமிதா, ஆழியூரான், வரவனையான் ஆகியோரை சந்தித்தது பற்றி அடுத்த பதிவில்.

சென்னை வலைப்பதிவாளர் சந்திப்பின் விளைவாக நண்பர்கள் ஆழியூரான், வரவனையான் ஆகியோருடன் இணைந்து நெல்லையில் தாழையுத்து அகதிகள் முகாமை பார்வையிட்டோம். இது பற்றிய விரிவான அறிக்கையை இன்னும் சில நாட்களில் படங்களுடன் பதிவிடுகிறேன்.

குறவர் இன மக்களின் நிலை பற்றி அறிய எடுத்த முயற்சி இன்னும் முற்றுப்பெறாதது வருத்தம்.

செங்கல் சூழையில் வேலை செய்ய்யும் தொழிலாளர்கள், குழந்தை தொழிலாளர்கள் பற்றி ஆய்வு, அய்யாவழி மதத்தினரின் தலைமை பதியான சாமிதோப்பில் பாலபிராஜாதிபதி அடிகளாருடன் நேர்முக பேட்டியை ஒளிப்படத்தில் பதிவு செய்தது என விடுமுறை நிறைவாய் அமைந்தது. அதற்குள் விடுமுறை முடிந்து மறுபடியும் பெல்ஜியம் பயணம். அனைத்தையும் கோர்வையாக எழுதவேண்டும்.

அனைத்து சந்திப்புகளிலும் நல்ல பல விடயங்களை கற்றுத்தந்த வலைப்பதிவாளர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.

வருகிற புத்தாண்டு அனைவருக்கும் மனநிறைவையும், உலக அமைதியையும், ஏழைகளின் வாழ்வில் ஏற்றத்தையும் தரட்டும்!

(விரைவில் வருகிறேன் சந்திப்புகளின் இனிய செய்திகளுடன்)

Thursday, December 28, 2006

நண்பர்களே நன்றிகள்

அன்பு நண்பர்களே!

மூன்று வாரங்கள் தாயக பயணத்திற்கு பின்னர் மீண்டும் பெல்ஜியம் வந்து சேர்ந்தாயிற்று!

இந்த குறுகிய காலத்தில் காலநிலையில் மட்டுமல்ல; மக்களின் வாழ்வில், சமூக, பொருளாதார, அரசியல் சூழலில் என பல மாற்றங்கள். நாட்கள் நகரும் முன்னர் யுகங்களில் நடக்கும் செயல்கள் கடந்து விடுகிறதோ என எண்ண வைக்கிறது.

  • மார்கழி மாதத்தின் துவக்கம் பெரியார் சிலை உடைப்பு, கோயில் சிலை உடைப்பு என கலவரங்களை எதிர்நோக்கிய பதட்டமான சூழலில் தமிழகம்.
  • எழைத் தொழிலாளி வீட்டுப்பெண் சாந்தி ஓட்டப்பந்தயத்தில் பதக்கம் பெற்ற இனிய செய்தியும், அதையொட்டிய சர்ச்சைகளும்.
  • தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தனது வாழ்வை, அறிவை, உயிரை என அனைத்தையும் அர்ப்பணித்த பாலாண்ணை என்கிற திரு.பாலசிங்கம் அவர்களது மிகப்பெரிய இழப்பு.
  • முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் முறுக்கிக்கொண்டே கொக்கோ கோலா, பெப்சி நிறுவனங்கள் கொள்ளையிடுகிற நீர்வளம் பற்றி கவலைப்படாத அரசுகள்.
  • தமிழகத்தில் தெருநாய்களுக்கும், பன்றிகளுக்கும் கூட செழுமையான வாழ்வு இருக்க சகமனிதனை அகதி என்ற சிறைப்படுத்தலில் ஏதுமற்றவர்களாக வைத்திருக்கும் அவலம்.
  • பாட்னாவில் வாழைப்பழம் திருடியதாக குற்றம் சாட்டி 50 வயது தலித் பெண்ணை சகமனிதர்கள் முன்னால் நிர்வாணப்படுத்திய உயர்சாதி இந்து ஆணாதிக்க நீதி.
  • ஒரு தலித் சிறுமியின் விரல்களை வெட்டியெறிந்த வன்செயல்.
  • பல லட்சம் தமிழ் மக்களை உணவு கொடுக்காமல், சுதந்திரமாக நடமாட விடாது இராணுவ நெருக்கடியில் சிறை வைத்து அவர்கள் மீது குண்டுமழை பொழிகிற தென்னிலங்கை அரசு.
  • பலவிதமான முயற்சிகளுக்கு பின்னர் காலம் தாழ்த்தியாவது ஈழத்தமிழர் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை இந்திய பிரதமர் சந்தித்து உரையாடிய நிகழ்ச்சி.

இன்னும் எண்ணிக்கையில் அடங்காத நெஞ்சைத் தொடுகிற நிகழ்வுகள் பல.

இப்படியான ஒரு காலச்சூழலில் தங்கையின் திருமணத்திற்காக விடுமுறையில் தமிழகத்திற்கு சென்றிருந்த வேளை வலைப்பதிவாளர்களை சந்திக்க எனது விருப்பத்தை சில நண்பர்களிடம் தெரிவித்திருந்தேன். வலைப்பதிவில் எனது இந்திய தொலைபேசி எண்ணை பதிவு செய்த சில மணித்துளிகளில் முகம் தெரியாத பல உறவுகளிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்தது.

நண்பர் லக்கிலுக் அவர்கள் கொடுத்த மிக குறுகிய கால அறிவிப்பை ஏற்று சென்னையில் பதிவர் சந்திப்பிற்கு வருகை தந்த, தொலைபேசியில் உரையாடிய அனைத்து வலைப்பதிவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள். சென்னை சந்திப்பிற்கு முயற்சி எடுத்த சென்னைப்பட்டிணம் நண்பர்களுக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்!

பதிவர் சந்திப்பு நாளில் 22 வலைப்பதிவாளர்களுடன் உரையாடியதில் மேலும் செயலுக்கான ஊக்கமும் ஆர்வமும் கிடைத்தது. இது பற்றிய விரிவான பதிவு ஒன்றை இன்று இரவு எழுத இருக்கிறேன். தொடர்ந்து மதுரை, இராசபாளையம், நெல்லை என நண்பர்களை சந்தித்த அனுபவங்களையும் பதிவு செய்வேன். பதிவர்கள் சந்திப்பு மற்றும் அதன் விளைவாக தொடரும் செயல்களை வரும் பதிவுகளில் எழுத முயல்கிறேன்.

நமது கையெழுத்து இயக்கம் இதுவரை 5000க்கும் மேல் கையெழுத்துக்களை ஈழத்தமிழ் மகளின் அவலத்தை நீக்க ஆதரவாக பெற்றிறுப்பதும், இந்த இயக்கத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்ல நண்பர் மா.சிவகுமார் எடுக்கிற சீரிய முயற்சியிலும் மனிதாபிமானத்தை உணர வைக்கிறது. பொது மக்களிடம் கையெழுத்துக்களை பெற போதிய நேரம் கொடுப்பதற்காக ஜனவரி முதல் வாரம் வரை கையெழுத்து இயக்கத்தை தொடரலாம் என தோன்றுகிறது.

அனைத்து முயற்சிகளிலும் ஆதரவும், ஊக்கமும் கொடுத்து செயல்படுகிற அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்!

- திரு