Thursday, December 28, 2006

நண்பர்களே நன்றிகள்

அன்பு நண்பர்களே!

மூன்று வாரங்கள் தாயக பயணத்திற்கு பின்னர் மீண்டும் பெல்ஜியம் வந்து சேர்ந்தாயிற்று!

இந்த குறுகிய காலத்தில் காலநிலையில் மட்டுமல்ல; மக்களின் வாழ்வில், சமூக, பொருளாதார, அரசியல் சூழலில் என பல மாற்றங்கள். நாட்கள் நகரும் முன்னர் யுகங்களில் நடக்கும் செயல்கள் கடந்து விடுகிறதோ என எண்ண வைக்கிறது.

  • மார்கழி மாதத்தின் துவக்கம் பெரியார் சிலை உடைப்பு, கோயில் சிலை உடைப்பு என கலவரங்களை எதிர்நோக்கிய பதட்டமான சூழலில் தமிழகம்.
  • எழைத் தொழிலாளி வீட்டுப்பெண் சாந்தி ஓட்டப்பந்தயத்தில் பதக்கம் பெற்ற இனிய செய்தியும், அதையொட்டிய சர்ச்சைகளும்.
  • தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தனது வாழ்வை, அறிவை, உயிரை என அனைத்தையும் அர்ப்பணித்த பாலாண்ணை என்கிற திரு.பாலசிங்கம் அவர்களது மிகப்பெரிய இழப்பு.
  • முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் முறுக்கிக்கொண்டே கொக்கோ கோலா, பெப்சி நிறுவனங்கள் கொள்ளையிடுகிற நீர்வளம் பற்றி கவலைப்படாத அரசுகள்.
  • தமிழகத்தில் தெருநாய்களுக்கும், பன்றிகளுக்கும் கூட செழுமையான வாழ்வு இருக்க சகமனிதனை அகதி என்ற சிறைப்படுத்தலில் ஏதுமற்றவர்களாக வைத்திருக்கும் அவலம்.
  • பாட்னாவில் வாழைப்பழம் திருடியதாக குற்றம் சாட்டி 50 வயது தலித் பெண்ணை சகமனிதர்கள் முன்னால் நிர்வாணப்படுத்திய உயர்சாதி இந்து ஆணாதிக்க நீதி.
  • ஒரு தலித் சிறுமியின் விரல்களை வெட்டியெறிந்த வன்செயல்.
  • பல லட்சம் தமிழ் மக்களை உணவு கொடுக்காமல், சுதந்திரமாக நடமாட விடாது இராணுவ நெருக்கடியில் சிறை வைத்து அவர்கள் மீது குண்டுமழை பொழிகிற தென்னிலங்கை அரசு.
  • பலவிதமான முயற்சிகளுக்கு பின்னர் காலம் தாழ்த்தியாவது ஈழத்தமிழர் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை இந்திய பிரதமர் சந்தித்து உரையாடிய நிகழ்ச்சி.

இன்னும் எண்ணிக்கையில் அடங்காத நெஞ்சைத் தொடுகிற நிகழ்வுகள் பல.

இப்படியான ஒரு காலச்சூழலில் தங்கையின் திருமணத்திற்காக விடுமுறையில் தமிழகத்திற்கு சென்றிருந்த வேளை வலைப்பதிவாளர்களை சந்திக்க எனது விருப்பத்தை சில நண்பர்களிடம் தெரிவித்திருந்தேன். வலைப்பதிவில் எனது இந்திய தொலைபேசி எண்ணை பதிவு செய்த சில மணித்துளிகளில் முகம் தெரியாத பல உறவுகளிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்தது.

நண்பர் லக்கிலுக் அவர்கள் கொடுத்த மிக குறுகிய கால அறிவிப்பை ஏற்று சென்னையில் பதிவர் சந்திப்பிற்கு வருகை தந்த, தொலைபேசியில் உரையாடிய அனைத்து வலைப்பதிவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள். சென்னை சந்திப்பிற்கு முயற்சி எடுத்த சென்னைப்பட்டிணம் நண்பர்களுக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்!

பதிவர் சந்திப்பு நாளில் 22 வலைப்பதிவாளர்களுடன் உரையாடியதில் மேலும் செயலுக்கான ஊக்கமும் ஆர்வமும் கிடைத்தது. இது பற்றிய விரிவான பதிவு ஒன்றை இன்று இரவு எழுத இருக்கிறேன். தொடர்ந்து மதுரை, இராசபாளையம், நெல்லை என நண்பர்களை சந்தித்த அனுபவங்களையும் பதிவு செய்வேன். பதிவர்கள் சந்திப்பு மற்றும் அதன் விளைவாக தொடரும் செயல்களை வரும் பதிவுகளில் எழுத முயல்கிறேன்.

நமது கையெழுத்து இயக்கம் இதுவரை 5000க்கும் மேல் கையெழுத்துக்களை ஈழத்தமிழ் மகளின் அவலத்தை நீக்க ஆதரவாக பெற்றிறுப்பதும், இந்த இயக்கத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்ல நண்பர் மா.சிவகுமார் எடுக்கிற சீரிய முயற்சியிலும் மனிதாபிமானத்தை உணர வைக்கிறது. பொது மக்களிடம் கையெழுத்துக்களை பெற போதிய நேரம் கொடுப்பதற்காக ஜனவரி முதல் வாரம் வரை கையெழுத்து இயக்கத்தை தொடரலாம் என தோன்றுகிறது.

அனைத்து முயற்சிகளிலும் ஆதரவும், ஊக்கமும் கொடுத்து செயல்படுகிற அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்!

- திரு

5 பின்னூட்டங்கள்:

கலை said...

ungal muyaRsikaL anaiththukkum vaazththukkaLum, paaraaddukkaLum.

Kalai

✪சிந்தாநதி said...

செய்யுங்க..
(idக்கு ஒன்று வீதம் 4 கையெழுத்து போட்டாச்சு)

Anonymous said...

உங்களின் இந்த சீரியமுயற்ச்சிக்கு
எங்களின் உளப்பூர்வமான வாழ்த்துக்கள்.

என்றேனும் வெல்லும் ஈழம்
வெகுதொலைவில் இல்லை காலம்.

Anonymous said...

பெல்ஜியமா இருந்தா என்ன பெருமாள்
பட்டியா இருந்தா என்ன. நம்மை

இணைப்பது இதயங்கள்
நமக்கில்லை தூரங்கள்.

தருமி said...

பெல்ஜியமா இருந்தா என்ன
விளாங்குடியா இருந்தா என்ன?

இணைப்பது இதயங்கள்
நமக்கில்லை தூரங்கள்.

(கொஞ்சம் காப்பி அடிச்சிக்கிறேன்! - அருளுக்கு நன்றி)

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com