Wednesday, November 29, 2006

அவசர உதவி மக்கள் உயிரை காப்பாற்ற

நண்பர்களே,

உங்கள் அனைவரின் நல்ல முயற்சியால் இதுவரை 870 கையெழுத்துக்கள் தமிழீழத்தில் பட்டினியால் யுத்தந்நெருக்கடிக்கு மத்தியில் வாடுகிற மக்களுக்கு ஆதரவாக கிடைத்துள்ளது. இந்த முயற்சியை இன்னும் வேகமாக செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

வாகரை பகுதில் இருக்கிற 45000 மக்களுக்கு உணவு, மருந்து பொருட்கள் எடுத்து சென்ற 90 கனரக வாகனங்களை மாங்கேணியில் இலங்கை இராணுவம் தடுத்து வைத்திருக்கிறது. விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்கும் ஏற்பட்ட மோதலில் மக்களின் உணவை கேடையமாக பயன்படுத்துகிற கொடிய தந்திரத்தை மனிதாபிமானம் கொஞ்சமும் இல்லாமல் இலங்கை அரசு செய்து வருகிறது.

இந்த அவல நிலையிலிருந்து மக்களை காப்பாற்ற நமது சிறிய முயற்சியாக கையழுத்து இயக்கத்திற்கு ஆதரவு திரட்டுமாறு அன்புடன் வேண்டுகிறேன் http://www.petitiononline.com/TAMEELAM/petition.html

திரு

Monday, November 27, 2006

ஈழத்தமிழர்களுக்கு உதவ கையெழுத்து இயக்கம்

யாழ்குடா நாட்டில் பட்டினிச்சாவை எதிர்நொக்கி வாடுகிற தமிழ் மக்களுக்கு அதரவாக சர்வதேச அழுத்தம் கொடுக்க உங்கள் ஆதரவை பதிய:சர்வதேச நாடுகளுக்கும் ஐக்கிய நாட்டு சபைக்கும் ஒரு முறையீட்டு கடிதத்தை அனுப்ப வடிமைத்துள்ளோம். உங்கள் ஆதரவை பதிய சுட்டியில் அழுத்தவும்! http://www.petitiononline.com/TAMEELAM/petition.html

தெரிந்த நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் சொல்லுங்கள்! உங்கள் முயற்சி பல இலட்சம் உயிரை காப்பாற்ற உதவலாம்!

பல்லாயிரம் மனிதர்களை காப்பாற்ற வாருங்கள்!

நண்பர்களே!

உங்கள் ஒருவரின் கையெழுத்தால் பல லட்சம் உயிர்கள் காப்பாற்றப்படும்

6 இலட்சம் மக்களுக்கு உணவு, மருந்து பொருட்கள் கிடைக்கும்...

பல ஆயிரம் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல இயலும்...

பலஆயிரம் உயிர்கள் நோயிலிருந்து காப்பாற்றப்படும்
...


இவை அனைத்தும் நமது அருகில் வடகிழக்கு இலங்கையில்!


இலங்கைத்தீவில் A9 சாலையை மூடி சக மனிதர்கள் 6 லட்சம் பேரை பட்டினிச்சாவின் விளிம்பில், அபாயகரமான சூழலில் தள்ளியிருக்கிறது இலங்கை அரசு!
அப்பாவித் தமிழர்கள் வாழ்வை பற்றி நமது கவலையையும், அக்கறையையும் ஒன்று சேர்ப்போம்!
நமது தமிழக தொலைக்காட்சிகளும், அரசியல் அரங்கும் செய்ய தவறியதை நமது கையெழுத்துக்களால் சாதிப்போம்!
இது பற்றிய விரிவான செய்திகளுக்கு முந்தைய பதிவுகளை படியுங்கள்: மனிதாபிமான உதவி கேட்கிறேன்!
சர்வதேச அழுத்தம் கொடுக்க உங்கள் ஆதரவை பதிய:
முந்தைய பதிவுகளில் வந்த ஆலோசனைகளின் அடிப்படையில் சர்வதேச நாடுகளுக்கும் ஐக்கிய நாட்டு சபைக்கும் ஒரு முறையீட்டு கடிதத்தை அனுப்ப வடிமைத்துள்ளோம். உங்கள் ஆதரவை பதிய சுட்டியில் அழுத்தவும்! http://www.petitiononline.com/TAMEELAM/petition.html உங்களிடமிருந்து திரட்டப்படுகிற தகவல்களின் இரகசியம் காக்கப்படும். அவை வேறு எதற்கும் பயன்படுத்தப்படமாட்டாது என உறுதியளிக்கிறேன். எந்த நாட்டவராக இருப்பினும் உங்கள் நண்பர்கள், உறவினர் எல்லோரையும் ஆதரவளிக்க அழையுங்கள்...

பிரித்தானியா வாழ் நண்பர்கள் பிரித்தானியா பிரதமருக்கு முறையிட ஏற்கனவே ஒருவர் பதிந்து இருகிற திரட்டியில் உங்கள் ஆதரவை கொடுக்க இங்கே அழுத்தவும்.

இந்தியாவில், தமிழகத்தில் இருக்கிற நண்பர்களுக்கு வேண்டுகோள்!
உங்கள் உறவுகள், நண்பர்கள், ஊரார், பொதுமக்களிடமிருந்து கையெழுத்தினை காகிதத்தில் திரட்ட முயலுங்கள். இதன் வழி சில நூறு கையெழுத்துக்களாவது ஒன்று சேர்த்தால் தமிழக அரசினை வலுயுறுத்த நேரடியாக மனுவை சமர்பித்து நமது குரல்களை பதிவு செய்யலாம். காலத்தின் சூழலில் அயல்நாட்டிலிருப்பதால் உங்களிடம் இந்த உதவியை நாடுகிறேன். யாராவது முன்வந்து இந்த பொறுப்பை எடுத்தால் உதவியாக இருக்கும்.

பொருளாதார உதவி செய்ய:
தடைகளினால் நம்மால் எளிதாக சர்வதேச தொண்டு நிறுவனங்கள் வழியாக கூட பொருளாதார உதவிகளை கொண்டு சேர்க்க இயலாத நிலை. நீங்கள் பொருளாதார உதவிகள் செய்ய விரும்பினால் கீழ்காணும் நிறுவனங்கள் வழியாக செய்யலாம். இப்படியான இக்கட்டான காலங்களில் அபலைகளுக்கு உதவும்
http://www.troonline.org/volunteer.htm
http://www.opusa.org/ இந்த அமைப்பு பற்றி சுந்தரவடிவேல் அவர்களது பதிவை காண அழுத்தவும்

பத்திரிக்கையில் பணியாற்றுகிற/தொடர்புடைய நண்பர்களுக்கு,
உங்களால் இயன்ற வரை இந்த மனித அவலம் பற்றிய செய்திகளை வெளியிட முயலுங்கள்.

பல்லாயிரம் மனித உயிர்களை காப்பாற்ற நாம் எடுக்கிற நல்முயற்சி அனைவருக்கும் ஆறுதலை தரட்டும்.

-------------
பின்குறிப்பு:

ஆலோசனைகளும், ஆதரவும் வழங்கி ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி! இரவு முழுவதும் தூங்காது இந்த முறையீட்டு மனு எழுதிய வேளை உதவிய இவ்வார நட்சத்திரம் பொன்ஸ்க்கு என் உளம் கனிந்த நன்றிகள்!

இன்னும் உங்கள் ஆலோசனைகளும், உதவியும் தேவை! ஆர்வமுடையவர்கள் தயை கூர்ந்து தொடர்பு கொள்ளுங்கள் thirukk@gmail.com

அன்போடு,

திரு

மனிதாபிமான உதவி கேட்கிறேன்!

நண்பர்களே,

நம் அருகில் ஒருவர் உணவில்லாமல் தவித்து சாகும் தருவாயில் இருக்க நம்மால் நிம்மதியாக சாப்பிட இயலுமா? இந்த நேரம் அதை தான் செய்து கொண்டிருக்கிறோம் நாம்.

நமக்கு அருகில் தமிழ் ஈழத்தில் சக மனிதர்கள் உணவு இல்லாமலும், மருந்து பொருட்கள் இல்லாமலும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். பஞ்சமும், பட்டினியும், நோயும், சாவுமாக ஆப்பிரிக்க நாடுகளில் இருப்பதை விட நமக்கு அருகில் ஒரு தேசத்தின் மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தியன் என்றோ, தமிழன் என்றோ உங்களை அடையாளப்படுத்துங்கள். எந்த அரசியல் கட்சியையோ, கொள்கையையோ ஆதரிக்கக் கூடியவர்களாகவும் இருங்கள். யாராக இருப்பினும் முதலில் நாம் மனிதர்கள்.

பாதுகாப்பு என்ற பெயரில் ஏ9 சாலையை மூடி சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வை புதைகுழிகளுக்கு கொண்டு செல்கிறது இலங்கை அரசு. சாலை மூடப்பட்டதிலிருந்து அத்தியாவசிய பொருட்கள் விலை ஏறி இருக்கிறது. அதன் விளைவு மிகப்பெரிய மனித அவலத்தை அப்பாவித் தமிழர்கள் சந்திக்கிறார்கள்.

"மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்டங்களிலுள்ள சில பிரதேசங்களில் பரவி வரும் சிக்குன்குனியா என கருதபப்டும் வைரஸ் காய்ச்சல் காரணமாக அந்தப் பிரதேசங்களிலுளள் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன.
ஆசிரியர்களும், மாணவர்களும் இந்நோயின் தாக்கத்திற்குள்ளாகி வருவதால், வழக்கமான நாட்களை விட இவர்களது வரவு 25 முதல் 40 சத வீதம் வரை வீழச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது."

வேகமாக பரவுகிற வைரஸ் காய்ச்சலில் போதிய மருத்துவ பொருட்களும், மருத்துவர்களும் இல்லாமல் மக்கள் துன்புறுகிறார்கள். "மானிப்பாயைச் சேர்ந்த கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரான கந்தையா ஸ்ரீபதி (வயது 52), மல்லாகம் மில் ஒழுங்கையைச் சேர்ந்த சிவகுரு கமலாதேவி (வயது 56) ஆகியோர் இந்த நோயினால் உயிரிழந்தனர்." யாழ்குடாவில் மட்டும் இதுவரை சுமார் 5000 பேருக்கு மேல் இவ்வித வைரஸ் காய்ச்சல் பரவியிருப்பதாக ராயிட்டர் செய்தி நிறுவனம் வழி அறிய முடிகிறது.

6 லட்சம் மக்கள் உணவு பொருட்கள் இல்லாமல் யாழ் தீபகற்பத்தில் மட்டும் சிறை போன்ற வாழ்வில் தினமும் பட்டினியால் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் பட்டினியால் ஒருவர் சாவடைந்ததாக செய்திகள் கூறுகிறது. பட்டினிச்சாவுகலுக்கு பெரும்பாலும் பலியாவது குழந்தைகள், பெண்கள், வயோதிகர்களாக தான் இருப்பார்கள்.

வாகரையில் மட்டுமே சுமார் 12000 குடும்பங்களை சார்ந்த 40,000 மக்கள் தினமும் பட்டினியிலும்,நோயிலும் எல்லா உதவிகளும் வாய்ப்புகளும் மறுக்கப்பட்ட நிலையில் அபலைகளாக வாழ்கிறார்கள். இவர்களில் சுமார் 8500 குடும்பத்தினர் இலங்கை அரசின் ஆர்டிலரி கணைகளுக்கும், விமானத்தாக்குதலுக்கும் அஞ்சி இடம்பெயர்ந்தவர்கள். தமிழர் தரப்பு கொடுத்த அரசியல் அழுத்தங்களால் அரசு பிரதிநிதிகளுடன் 10 லாரிகளில் மட்டகளப்பிலிருந்து பொருட்கள் வாகரைக்கு நவம்பர் 17 அன்று அனுப்பப்பட்டுள்ளது.அவற்றை மாங்கேணி சோதனைச் சாவடியில் வைத்து பிரிகேடியர் இரத்தினநாயகா தலைமையிலான படைகள் மறித்து திருப்பி அனுப்பியுள்ளது. மீண்டும் தமிழர் தரப்பு கொடுத்த அழுத்தம் காரணமாக 18 நவம்பரில் 8 லாரிகளில் பொருட்களுடன் அரசு அதிகாரிகளும் சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் சென்ற வாகன தொடரணியை மாங்கேணியில் தடுத்து அரசு படைகள் திருப்பி அனுப்பியிருக்கிறது.

தனது நாட்டின் குடிமக்களை நெருக்கடியில் தள்ளி பட்டினியில் சாக வைத்து, உதவி செய்ய வருகிற அமைப்புகளையும் முடக்கி வைத்திருக்கிறது இலங்கை அரசு. இதன் மூலம் சர்வதேச மனிதநேய சட்டங்களை மீறியது மட்டுமல்லாமல், உணவை ஆயுதமாக பயன்படுத்தி தமிழ் மக்கள் மீதான யுத்தத்தை தொடர்கிறது இலங்கை அரசு.

சர்வதேச நாடுகள் இது பற்றிய கண்டனங்களை இலங்கை அரசிற்கு தெரிவிக்காமல் மௌனம் சாதிக்கிறது. இலங்கை வடகிழக்கில் நடந்து வருகிற மனித அவலம் பற்றி ஐ.நா. பேச்சாளர் ஓர்லா கிளிண்டன் கூறியுள்ளதாவது "வாகரையில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கான உணவுப் பொருட்கள் அவசியத் தேவையாக உள்ளது. ஒக்ரோபர் 31 ஆம் நாளுக்குப் பின்னர் எதுவித உணவுப் பொருட்களும் அங்கு சென்றடையவில்லை. ஏற்கனவே வாகரை நிலைமை மிகவும் மோசமடைந்திருப்பதை நாம் அறிவோம். பாரிய மனித அவலம் ஏற்படுவதைத் தடுக்க வாகரைக்கு ஐ.நா. மற்றும் இதர நிறுவனங்கள் தொடர்ந்து அங்கு சென்றடையவேண்டும்.
வாகரைக்கு உணவுப் பொருட்களின் வாகனங்கள் செல்வது தாமதமடையும் போது பொதுமக்களுக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தும்".


இந்த நிலையில் நமது நாட்டிற்கு வருகை தந்துள்ள இலங்கை அதிபர் இந்திய அரசிடம் இராணுவ, தொழில்நுட்ப, பொருளாதார உதவிகளை தென்னிலங்கைக்கு பெறுவதில் தான் கவனம் செலுத்தி வருவதாக செய்திகள் வருகின்றன. இலங்கை அதிபரின் இராஜதந்திர வலையில் வீழ்ந்து நமது வரிப்பணம் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் வாழ்வை பட்டினியில், இராணுவக் கொடுமைகளுக்கு உதவ வேண்டுமா? இந்த கேள்விகளுக்கு விடை காண்பது மனிதநேயமுள்ள ஒவ்வொருவரின் கடமை.

இங்கு அப்பாவித் தமிழர்கள் வாழ்வை பற்றி நமது கவலையும் அக்கறையும் இருத்தல் அவசியம். நமது தமிழக தொலைக்காட்சிகளும், அரசியல் அரங்கும் இந்த பிரச்சனைஅயி முன்னெடுத்து செல்வதில் கவனம் செலுத்த தவறி வருவதாகவே அறிகிறோம். இந்த நிலையில் நமது செயலை பொறுப்புடன் ஆற்ற அழைக்கிறேன்.

பொருளாதார உதவி
நண்பர்களே, தடைகளினால் நம்மால் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் வழியாக கூட பொருளாதார உதவிகளை கொண்டு சேர்க்க இயலாத நிலை. நீங்கள் கொடுக்க விரும்புகிற பொருளாதார உதவிகள் கீழ்காணும் நிறுவனங்கள் வழியாக செய்யலாம். அது இப்படியான இக்கட்டான காலங்களில் உதவும்.
http://www.troonline.org/volunteer.htm
http://www.opusa.org/

இந்த அமைப்பு பற்றி சுந்தரவடிவேல் அவர்களது பதிவை காண அழுத்தவும்

சர்வதேச அழுத்தம்
முந்தைய பதிவில் வந்த ஆலோசனைகளின் அடிப்படையில் ஒரு முறையீட்டு கடிதத்தை கீழ்காணும் அமைப்புகளுக்கு அனுப்பலாம்.

U.N. Secretary General,
Heads of the world’s democratic states,
The European Parliament,
UN Commission on Human Rights,
Amnesty International,
Human Rights Watch

முடிந்த வரையில் நம்மால் இயன்ற அளவு ஆதரவை திரட்டலாம். இதற்கென ஒரு ஆன்லைன் முறையீட்டை உருவாக்கி உடனடியாக தெரிவிக்கிறேன். நாம் திரட்டுகிற ஆதரவுடன் கடிதத்தை மேற்காணும் அமைப்புகளுக்கும் அரசுகளுக்கும் அனுப்பலாம். அரசுகளுக்கும், அமைப்புகளுக்கும் அந்த நாடுகளிலேயே நேரடியாக கொடுப்பது இன்னும் முறையாக இருக்கும். இதற்கு உங்களது ஆதரவும் ஈடுபாடும் மிக மிக அவசியம்.

தமிழகத்திலும், இந்தியாவிலும் வாழுகிற நண்பர்கள் பொதுமக்களிடமிருந்து கையெழுத்துக்களை பெற்று கடித நகலுடன் நமது பிரதமருக்கும், தமிழக முதல்வருக்கும் அனுப்ப முயற்சி எடுக்கலாம்.

இது பற்றிய கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதியுள்ளேன். தகவல்களை சரி பார்க்கவும், ஆலோசனைகளுக்கும் ஒருங்கிணைக்கவும் உங்கள் உதவியும் தேவை! உதவ ஆர்வமுடையவர்கள் தயை கூர்ந்து தொடர்பு கொள்ளுங்கள் thirukk@gmail.com

அடுத்த பதிவில் online petition link வரும். அது வரை இணைந்திருங்கள். இது பற்றி பிரித்தானிய முறையிட ஏற்கனவே இருகிற திரட்டியில் உங்கள் ஆதரவை கொடுக்க இங்கே அழுத்தவும் We the undersigned petition the Prime Minister to Persuade the Sri Lankan government to open the A9 road and also alert Britain of the killings in Sri Lanka.

ஊடக செய்திகளுக்கு
உங்களது திறமையை, செல்வாக்கை பயன்படுத்தி பத்திரிக்கை, தொலைக்காட்சி, வானொலி மற்றும் இதர ஊடகங்களுக்கு இந்த மனித அவலம் பற்றிய செய்திகளை பரப்புங்கள்.

உங்கள் ஒருவரின் முயற்சியில் பல்லாயிரம் உயிர்கள் காப்பாற்றப்படலாம்.

அன்புடன் ஆதரவு கேட்டு,
திரு

Sunday, November 26, 2006

கண்ணீருடன் அனைவரின் ஆதரவிற்காக!

கண்ணீருடனும் ஆழ்ந்த கவலையுடனும் இந்த பதிவை எழுதுகிறேன். நாம் வசதியாக வேளா வேளைக்கு நல்ல உணவை சாப்பிடுகிற இந்த வேளைகளில் தமிழீழ மண்ணில் பட்டினியால் குழந்தைகள், தாய்மார்கள், வயோதிகர்கள் என செத்துக்கொண்டிருக்கிறார்கள். யாழ்பாணம் பகுதிக்கு செல்லுகிற பிரதான சாலையான A9ஐ மூடி வைத்தி தமிழர் பகுதிகளுக்கான உணவு பொருட்கள் செல்லாது இலங்கை அரசு தடுத்து வைத்திருக்கிறது. தொடர்ந்து மாற்று சாலைகளும் மூடப்பட்டு வருவதாக தமிழீழத்திலிருந்து வருகிற செய்திகள் தெரிவிக்கின்றன.

வாகரையில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கான உணவுப் பொருட்கள் செல்லாது போனால் பாரிய மனித அவலங்கள் ஏற்பட்டுவிடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐ.நா. பேச்சாளர் ஓர்லா கிளிண்டன் இது தொடர்பில் கூறியுள்ளதாவது:

வாகரையில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கான உணவுப் பொருட்கள் அவசியத் தேவையாக உள்ளது. ஒக்ரோபர் 31 ஆம் நாளுக்குப் பின்னர் எதுவித உணவுப் பொருட்களும் அங்கு சென்றடையவில்லை. ஏற்கனவே வாகரை நிலைமை மிகவும் மோசமடைந்திருப்பதை நாம் அறிவோம். பாரிய மனித அவலம் ஏற்படுவதைத் தடுக்க வாகரைக்கு ஐ.நா. மற்றும் இதர நிறுவனங்கள் தொடர்ந்து அங்கு சென்றடையவேண்டும்.

நவம்பர் 20 ஆம் நாளன்று இரு வாகனத் தொடரணிகள் மூலம் உணவுப் பொருட்கள் சென்றிருந்த போதும் மேலதிகமாக செல்ல வேண்டிய தேவை உள்ளது.

வாகரைக்கு உணவுப் பொருட்களின் வாகனங்கள் செல்வது தாமதமடையும் போது பொதுமக்களுக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்றார் ஒர்லா கிளிண்டன்.

அண்மையில் வாகரைப் பிரதேசத்துக்கு உணவுப் பொருட்களுடன் சென்ற பாரஊர்திகளை மாங்கேணி சிறிலங்கா இராணுவ முகாமில் தடுத்து இராணுவத்தினர் திருப்பி அனுப்பி வைத்தனர். தொடர்ச்சியாக இராணுவத்தினர் அந்த அடாவடித்தனத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் ஏ-9 பாதையை சிறிலங்கா இராணுவம் மூடியதற்கும் அதன் பின்னருமான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை விவரம்:


(இரண்டாவதாக தரப்பட்டுள்ள விலை முன்னையது- மூன்றாவதாக உள்ளவை தற்போதைய விலை)

அரிசி 1 கிலோ- ரூ. 35 - ரூ. 180

மா 1 கிலோ - ரூ. 40 - ரூ. 150

சீனி 1 கிலோ - ரூ. 60 - ரூ. 400

பால் மா 400 கிராம் ரூ. 145- ரூ. 400

1 தேங்காய் - ரூ. 15- ரூ. 90

தேங்காய் எண்ணெய் 1 லிற்றர்- ரூ. 75- ரூ. 450

செத்தல் மிளகாய் 1 கிலோ - ரூ. 160 - ரூ. 480

புளி 1 கிலோ - ரூ. 60- ரூ. 150

வெள்ளைப்பூடு 1 கிலோ - ரூ. 60- ரூ. 2,000

கொத்தமல்லி 1 கிலோ- ரூ. 180 - ரூ. 600

தேயிலைத் தூள் 1 கிலோ - ரூ. 300- ரூ. 800

மிளகு 1 கிலோ - ரூ. 280- ரூ. 450

கறுப்புக் கடலை 1 கிலோ ரூ. 70- ரூ. 250

பச்சைகடலை 1 கிலோ ரூ. 80- ரூ. 250

1 முட்டை - ரூ. 6 - ரூ. 55

சன்லைட் 1 ரூ. 19- ரூ. 60

பேபி சோப் 1 ரூ. 23- ரூ. 60

சம்பூ 1 பைக்கட் ரூ. 2.50 - ரூ. 10.00

சோப் தூள் 20 கிராம் ரூ. 6- ரூ. 16.00

இஞ்சி 1 கிலோ ரூ. 100- ரூ. 2,500

பெற்றோல் 1 லிற்றர் ரூ. 100 - ரூ. 650

டீசல் 1 லிற்றர் ரூ. 45- ரூ. 150

மண்ணெண்ணெய் 1 லீற்றர்- ரூ. 40- ரூ. 190

1 தீப்பெட்டி - ரூ. 2.50- ரூ 40

பாதியாக வேக வைக்கப்பட்ட அரிசி 1 கிலோ ரூ. 35- ரூ. 220

1 ரின் மீன் - ரூ. 75- ரூ. 225

எள் எண்ணெய் 1 லீற்றர் ரூ- 250 ரூ. 600

தற்போது..

1 கிலோ மீன் - ரூ. 1,000

வெங்காயம் 1 கிலோ ரூ. 30

வெண்டைக்காய் 1 கிலோ ரூ, 320

தக்காளி 1 கிலோ ரூ. 400

முட்டைகோஸ் ரூ. 80

ரொட்டி 1 பைக்கட் ரூ. 30


இந்த நிலையில் இந்திய அரசாங்கத்திடமிருந்து தென்னிலங்கைக்கு இராணுவ, தொழில்நுட்ப உதவிகளை பெற இலங்கை அரச அதிபர் மகிந்த ராஜபக்ச புதுடில்லி வருகிறார். தமிழகத்திலிருந்து வருகிற எதிர்ப்பு குரல்களை வெறியில் கிண்டலடித்து பேசியிருக்கிறார் இலங்கை அதிபர். தனது ஆளுகைக்கு உட்பட்டதாக கூறுகிற நாட்டில் ஒரு பகுதி மக்களை பொருளாதார தடைகளால் கொன்று குவிக்கிற அதிபரை வரவேற்க, வழக்கம் போல ஆதரவு வழங்க நமது அரசும் கதவுகளை திறந்து வைத்திருக்கிறது.

மனிதாபிமான அடிப்படையில் அப்பாவி ஈழத்தமிழர் வாழ்வை காப்பாற்ற நாம் என்ன செய்யப்போகிறோம்? வலைப்பதிவாளர்கள் நாம் கொள்கை, குழப்பங்களை நீக்கி வைத்திவிட்டு மனிதாபிமான அடிப்படையில் இந்த பட்டினி படுகொலைகளுக்கு எதிராக குரல்கொடுக்க உங்களது ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்.
கண்ணீருடனும், கவலையுடனும்,
திரு

நன்றி: செய்திகள் தந்த ஊடகங்களுக்கு!

Friday, November 24, 2006

தொடராத பொழுது போக்குகள்

பொழுது போகாத நேரத்தில் எதாவது புதுசா செய்ய முயற்சி பண்ணுவேன். கொஞ்சம் காலம் ஒழுங்கா அதைச் எய்யுறது பிறகு நிறுத்தி வைக்கிறது என ஒரு கெட்ட பழக்கம். கார்ட்டூன், படம் வரைய ஆரம்பிச்சது பாதியில நிறுத்தி வச்சிருக்கேன். ஒழுங்கா தொடர்வது சமையல் மட்டும் :).

பலவிதமான கற்களை சேர்த்து காதணி செய்யும் பழக்கம் இந்த வரிசையில் புதிதாக சேர்ந்திருக்கு. தென்னாப்பிரிக்கா போய் வரும் போது ஜோகன்னஸ் விமானநிலையத்தில் இருக்கிற கைவினைப்பொருட்கள் கடையில கிடைத்த inspiration. அந்த கடையில் இருந்த அணிகலன் அனைத்தையும் செய்தது வேலைவாய்ப்பில்லாத ஒரு பெண்கள் அமைப்பு. அதில் இருந்த வர்ணங்களின் சேர்க்கை, நேர்த்தியான இணைப்புகள், கற்பனை வளம், படைப்பு திறன் எல்லம் நம்மளையும் இழுத்து போட்டுதா. அப்புறம் என்ன வழக்கம் போல சொந்த முயற்சியில் தேடல் தான்.

கற்கள், அதற்கான கம்பிகள் என பல விதமான பொருட்கள் வாங்கி காதணி செய்ய துவங்கியாயிற்று! காதணி செய்கிற வேளை பொறுமையா இருக்க கற்றூக் கொண்டேன். ஊரில் இருந்த நாட்களில் நகைக்கடை நடத்திக் கொண்டிருந்த 2 பேர் நட்பு கிடைத்தது. அந்த நாட்களின் நினைவுகளை மனது அசை போடுகிறது. கைவினைக் கலைஞர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் நகை செய்யும் தொழிலாளர்கள். எந்திரங்கள் வரவு பொலிவான, இலகுவான நகைகளை உருவாக்கி தந்தாலும் இந்த தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் வாழ்க்கை நிலை பரிதாபமான சூழலில்...ம்ம்ம்ம்

இதுவரை செய்த காதணிகளில் சில இங்கே படங்களில். இதுவும் எதுவரை தொடருமோ...Wednesday, November 22, 2006

கதையும், கதைத்தலும்!

பல இலட்சம் குரல்களில் சில மட்டும் இங்கே...

"யாழ்ப்பாணத்தில எங்கட சனம் பட்டினியால செத்துக் கொண்டிருக்காம்".

இன்னொரு குரல், "எங்கட நெலமை எப்போ என்ன ஆகுமோ தெரியல, ஆமிக்காரங்க கெடுபிடி கூடிட்டே போவுது. எல்லா பாண்டங்களும் வாங்க முடியாத வெலயில இருக்கு "

"நான் வேல செஞ்சிட்டு இருந்த விவசாய கல்லூரியில ஆமிக்காரங்க துப்பாக்கி சூடு நடத்தி படிச்சிட்டு இருந்த பொடியன்கள (மாணவர்கள்) கொன்னுருக்கு."

"யுத்தம் வந்ததால நான் 12 வகுப்பு படிச்சதோட சரி. பெறவு உயிர காப்பாத்தினா போதும்னு ஆச்சி. தஞ்சம் தேடி வந்த நாட்டுல கல்யாணம் ஆகிட்டுது. படிக்காம போயிட்டோமேன்னு இப்போ கவலையா கெடக்கு. எங்கட வாழ்க்க இப்பிடி ஆவ நாங்க என்ன செஞ்சோம்?"

"என்ட அப்பா, அம்மா கொழும்புல. தங்கச்சி ஜெர்மனில இருக்கா. ஒரு மாமா சுவிஸ்ல. இன்னொரு மாமா ஜெர்மனில (அவர நான் பாத்து 15 வருசம் இருக்கும்). ஒரு தங்கை கானடால, இன்னொரு மாமா ஆஸ்திரேலியால. நாங்க சுவீடன்ல. என்றைக்கு எங்கட குடும்பம் சேரும்? நிலா வெளிச்சத்துல மாமரத்தடியில இருந்து நிம்மதியா கூழ் சாப்பிட்ட சின்ன பிள்ளையள் அனுபவம் எனி வருமா?"

"என்ட கூட படிச்சவ குடும்பத்த ஆமிக்காரங்களும், இந்திய அமைதிப் படையும் சேந்து செதைச்சு போட்டாங்க. இப்போ அவ இயக்கத்துல இருக்கா."

"சுனாமில அப்பா, தம்பிய கடல் கொண்டு போச்சு. நானும் அம்மாவும் கூட செத்து போயிருக்கலாம். இங்க எங்கட சனத்த நிம்மதியா வாழவிடாம குண்டு போட்டு கொல்லுறதும், பஞ்சத்தில சாக விடுறதும் தான் நடக்குது. நாங்க இனி உயிரோட இருந்து எதுக்கு?

°°°°°°°°°°
வழக்கம் போலவே கதைக்கும் கதைத்தலுக்கும், நிஜத்துக்கும் நிழலுக்கும் வித்தியாசம் அறியாமலே கண்களை மூடியபடியே தமிழகத் தமிழன்!

டிஸ்கி: இது சிந்திக்க வைக்கவே!

Tuesday, November 21, 2006

வலைப்பதிவாளர்கள் சந்திப்பு-ஒரு பார்வை

சென்னையில் கடந்த ஞாயிறு அன்று நடந்த தமிழ் வலைப்பதிவாளர்கள் சந்திப்பு சில விளைவுகளை உருவாக்கியிருக்கிறது. நியூட்டனின் இயக்கவியல் விதியின் படி இந்த சந்திப்பில் பல நல்ல விடயங்களும், சில எதிர்விளைவுகளும் எழுந்திருக்கிறது. வழக்கமான சந்திப்புகளிலிருந்து இந்த முறை முக்கியத்துவம் பெற பல காரணங்கள் அமைந்திருக்கிறது.

அருமையாக நடந்து முடிந்திருக்கிற வலைப்பதிவாளர் சந்திப்பில் சில முக்கியமான விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை.

  1. இரு குழுக்களாக கூடி வந்த பதிவாளர்கள், ஒரே இடத்தில் கூடிய முதல் நிகழ்வு இந்த சந்திப்பு. இயல்பாகவே இருந்தாலும் 'எல்லோரும்' இணைந்த கூடல் என்பது இதுவே முதல் முறை. முதல் முறையாக ஒருவரை ஒருவர் அறிய, சந்தேகங்கள், அச்சங்கள் விலக வாய்ப்புகளை உருவாக்கி தந்திருக்கிறது. Dialogue is the basis for understanding!
  2. தமிழீழ மக்களின் அவலங்கள் மற்றும் பிற பிரச்சனைகள் பற்றி பேச, அறிய வாய்ப்பை தந்திருக்கிறது இந்த பொது ஒன்றுகூடல். இதுவரை வலைப்பூவில் சந்தித்து வருகிற ஒரு 'குறிப்பிட்ட' பிரச்சனையை பற்றி அதிகமாக பேசப்பட்டு வந்த ஒரு தளம், மக்கள் பிரச்சனைகளை பேச ஆரம்பித்திருப்பது நல்ல வளர்ச்சி.
  3. தமிழ் வலைப்பதிவாளர்கள் அமைப்பு உருக்குதல் பற்றி ஏற்கனவே இருந்த வாதங்களை இன்னும் சிந்திக்க தூண்டியிருக்கிறது.
  4. ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ள, நட்பை இன்னும் உறுதியாக்க, புரிந்து கொள்ளவும் உதவியிருக்கலாம்.
  5. தொழில்நுட்ப உதவிக்காக என பதிவாளர்கள் இணைந்து குழுவை உருவாக்கி இருப்பது, புதிய பதிவாளர்களுக்கு வழிக்காட்ட கையேடு என நல்ல பல முயற்சிகளின் உருவாக்கம்.

இப்படியான நல்ல விடயங்களிலிருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்வது இன்றைய காலத்தின் தேவை. தமிழ் வலைப்பூ பதிவுகள் தரமுள்ள பதிவுகளாக சமூக அக்கறையுடன் வளர இந்த சந்திப்புகளின் வடிவங்களும், முறைகளும் உதவுவது அவசியம்.

தமிழீழ நாட்டின் வலைப்பதிவாளர் அகிலன் அவர்கள் தமிழீழ மக்களின் அவலங்களை சந்திப்பில் உணர்வு பொங்க பகிர்ந்திருக்கிறார். அகிலன் வழியாக அந்த மக்களின் துயரத்தை தெரிந்துகொண்ட பின்னர் வலைப்பூக்களில் என்ன விளைவு ஏற்பட்டது? அந்த மக்களின் பிரச்சனை பற்றிய விவாதங்களை எழுப்ப, அதற்கான செயலில் ஈடுபட வலைப்பதிவாளர்கள் கவனம் செலுத்துகிறோமா?

அதற்கு பதிலாக சந்திப்பு தொடர்பாக/பின்னர் சில விளைவுகள் வலைப்பதிவாளர்களை ஆக்கிரமித்து வைத்திருக்கிறது.

சந்திப்பு நடந்து கொண்டிருந்த போதே அதன் படங்கள்"இட்லிவடை" பதிவில் வெளியாகியிருந்தது. அனுமதியின்றி வெளியிடப்பட்ட இந்த படங்கள் குழப்பத்தை உருவாக்கியது. எதிர்ப்பின் பின்னர் அந்த படங்கள் நீக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட படங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.

அடுத்ததாக படம் எடுக்க தயங்கியவர்களது கருத்தின் நேர்மை பற்றி ஜயராமன் என்கிற பதிவர் தனது பின்னூட்டம் வழி எழுப்பிய கேள்வி அடுத்த பிரச்சனையை உருவாக்கியிருக்கிறது. ஜயராமனும் தனது போட்டோவை 21, நவம்பரில் தான் பதிந்திருக்கிறார் என்பதை கவனத்தில் கொள்வது அவசியம். இது பற்றி பாலபாரதியின் பதிவில் விவாதம் தொடர்கிறது.

இந்த பிரச்சனைகளால் எடுக்கப்பட்ட நல்ல முயற்சிகள் சிதைந்துவிடக்கூடாது. வலைப்பதிவாளர்கள் சந்திப்புகளில் கலந்து கொண்டவர்கள் இவற்றை கவனத்தில் கொள்வது அவசியம்.

வருங்கால சந்திப்புகளில் கவனிக்கப்பட சில விடயங்கள்:

கலந்துரையாடலை நெறிப்படுத்த யாராவது முனைந்தார்களா என தெரியவில்லை. வலைப்பூவில் சாதீயம் பற்றிய கட்டுரையை பாலா படிக்கிற வேளை கதம்பமாக அனைவரும் உரையாடியதாக தெரிகிறது. இப்படிப்பட்ட கூட்டங்களுக்கு நெறியாளர் (moderator) ஒருவர் இருப்பது நல்லது. (நமக்கு பிடித்தது இது :)). ஒருவருடைய கருத்துக்களை பேச அனுமதிப்பதும் அதன் பின்னர் சந்தேகங்களை, எதிர்கருத்துக்களை பதிவதும் நல்ல கலந்துரையாடலுக்கு அவசியம். கட்டுரை வாசிப்பவரை வாசிக்க விடாத அளவு தான் நமது கேட்கும் திறனென்றால் வழக்கமான அரசியல் கூத்து நம்மையும் தாக்கியிருக்கிறதன் வெளிப்பாடு இது. இதை முறையாக எதிர்கால வலைப்பதிவாளர்கள் சந்திப்புகளில் அணுகுவது அவசியம்.

கூட்டத்தின் இருக்கை அமைப்பிலும் மாற்றம் அவசியம். பெண் வலைப்பதிவாளர்கள் பின் வரிசையில் இருந்தது படங்களில் பார்க்க முடிந்தது. கூட்ட இருக்கைமுறையை மாற்றி வட்ட வடிவமாக அமைத்திருந்தால் கலந்துரையாடலுக்கு உதவும். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து உரையாட வசதியாக அமையும். இந்த வடிவத்தில் கலந்தூரையாடலாக அமைந்து பார்வையாளர், உரையாளர் என்ற வேறுபாடுகள் இல்லாமல் அமையும்.

பெண் வலைப்பதிவாளர்கள் மட்டும் சந்தித்து பெண்ணியம் பற்றிய கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளும் நிலை உருவாக எதாவது திட்டங்கள் இருக்கிறதா என தெரியவில்லை. :)

பின்குறிப்பு: இது என் பார்வையிலான ஒரு திறனாய்வு! சில விடயங்களை சொல்லாமல் தவிர்த்திருக்கிறேன் என்பதையும் கவனத்தில் கொள்க. இந்த பதிவிற்கு முதலில் வைத்த தலைப்பு "தமிழ் நண்டும், வலைப்பதிவாளர்களும்" :))

Saturday, November 18, 2006

மனிதா! இவை உன் கடவுளுக்கா...

நண்பர்களே! தளராத மனமுடையோர் இந்த வீடியோ பதிவை அவசியம் பாருங்கள். இவை தான் மதங்கள் நமக்கு தருபவை எனில்...ம் (அதிர்ச்சி கொள்ளும் மனமுடையோர் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது)

சுமார் 20 நிமிடங்கள் தொடரும் சுருக்கமான காட்சிகளுக்கு இங்கே அழுத்தவும்.

முழு வீடியோ பதிவும் சுமார் இரண்டரை மணி நேரம் பார்க்க இங்கே அழுத்தவும்.

வீடியோ பதிவை பார்த்த பின்னர் உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள்! உலகமெங்கும் மனிதநேயம் மலரட்டும்! மனிதர்களை நேசிக்க பழகுவோம்.

நன்றி வீடியோ: கூகிள் வீடியோ

Tuesday, November 14, 2006

நாம் சாப்பிடும் உணவு நஞ்சா?

இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளினால் நாம் சாப்பிடும் உணவே நஞ்சாக மாறுவதை கூறிப்பிடும் ஒரு குறும்படம். எனது பார்வையில் பட்டது உங்களுக்காக இங்கே: Slow Poisoning of India

இரசாயனம் நம்மை மட்டுமா கொல்கிறது? நுண்ணுயிர்கள் முதல் பறவைகளுக்கும் அவை எதிரியே! விழிப்புணர்வை உருவாக்குவோம்.

Monday, November 13, 2006

கண்ணீர் கதைகள்!

“காலையில 6.00 மணி முதல் 11.00 மணி வரை தண்ணி பயன்படுத்தாத உலர்ந்த கக்கூசை (dry latrines) சுத்தம் செய்றேங்க. மனுச பீயை அள்ளி தலையில சுமந்து அரை கிலோமீட்டர் தூரத்தில இருக்க ஆற்றுக்கு தினமும் 7 முதல் 10 தடவை வரை எடுத்து போவேங்க. மத்தியானம் சாக்கடையை சுத்தம் செய்வேங்க. இன்னொரு பாங்கி சாக்கடையிலிருந்து குப்பைகளை எடுத்து வெளியே வைப்பாருங்க. அதையும் எடுத்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில கொண்டு போயி கொட்டுவேங்க. பத்து வருசத்துக்கு முன்னால எம் புருசன் செத்ததிலயிருந்து இந்த வேலைய செய்துட்டுவறேங்க. இதுக்கு தினக்கூலியா 30 ரூபா தருவாங்க. ஒம்பது வருசத்து முன்னால 16 ரூபா குடுத்தாங்க, அப்புறம் 22 ஆச்சு, இப்போ இரண்டு வருசமா 30 ரூவா தறாங்க. ஆனா இந்த கூலியும் நிச்சயமில்லீங்க. போன ரெண்டு மாசமா கூலி எதுவும் கிடைக்கலைங்க. ரெண்டு மாசத்திற்கு ஒரு முறை கூலி தருவாங்க அதுவும் நிச்சயமில்ல. நகர் பாலிகா முனிசிபாலிட்டி ஆபீசர் தான் கூலி தருவாருங்க”

நாற்பது வயதான மஞ்சுவின் கதை இது. அவர் வட இந்தியாவில் ஒரு நகராட்சியில் மனித மலத்தை அப்புறப்படுத்தும் வேலை செய்து வருகிற ஒடுக்கப்பட்ட இனப்பெண் தொழிலாளி.

ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணீர் வாழ்வை இந்த பதிவில் காணுகிற ஒளிப்படத்தில் பாருங்கள். இந்த வேதனையை சொல்ல வார்த்தையில்லை. "இன்னுமா" சாதிக்கொடுமைகளும் பார்ப்பனீயமும் இருக்கிறது? "ஒரே வேலையை செய்வதால் இவர்களுக்கு சலிப்பும், வெறுப்பும், வேதனையும், எரிச்சலும்...."ஏற்படாதா?

Sunday, November 12, 2006

தலித்மக்கள் நிலை ஒளிப்படம்...

இந்தியாவில் சக மனிதர்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்பது பற்றிய ஒரு ஒளிப்படம். சில வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டு CNN/CBC யில் காட்டப்பட்ட இந்த ஒளிப்படம் 14 நிமிடங்களில் நீங்கள் நேரில் சந்தித்திராத ஒரு சூழலுக்கு அழைத்துச் செல்லும்... இந்தியா வளர்கிறது, ஒளிர்கிறது என்பதற்கு இது சாட்சியா? பார்ப்பனீய வர்ணாஸ்ரமம் அழிந்து விட்டதன் அடையாளமா? முடிவை உங்களிடமே விட்டுவிடுகிறேன்... உங்கள் மன உணர்வுகளை பதியுங்கள்...

வீடியோவை காண இங்கே அழுத்தவும்: இந்தியாவின் தலித்மக்கள்

நன்றி: CNN / CBS, கூகிள் வீடியோஸ்

வலையுலகமும் சமூகக் கடமையும்...

நண்பர்களே,

சீனர்கள் கொண்டாடும் லாந்தர் விளக்கு பண்டிகை பற்றி தெரிந்திருக்கிறீர்களா? அது நம்மூர் தீபாவளி பண்டிகை போன்ற பண்டிகை. இதன் துவக்கம் பற்றி பல கதைகள் சொல்லப்பட்டு வருகிறது. சீன மொழியில் யுயான் சியாஒ ஜியே என்று அழைக்கப்படுகிற இந்த பண்டிகை ஆங்கிலத்தில் Lantern Festival எனப்படுகிறது. சீன வருடத்தின் முதல் மாதத்தின் 15வது நாளில் இந்த பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும். சீனர்கள் இந்த பண்டிகையை கி.மு 206-221 கி.பி வரையான காலத்திலிருந்து கொண்டாடி வருவதாக கூறப்படுகிறது. இப்போதும் இந்த பண்டிகை கால இரவுகளில் வண்ண விளக்குகளை கையிலேந்திய படியே தெருக்களில் குழந்தைகளையும் பெரியவர்களையும் காணலாம். டிராகன் ஆட்டம், பலவித சீன நடனங்கள், வாணவேடிக்கை என கோலாகலமாக நடைபெறும் விழா இது (கானடா வாழ் நண்பர்கள் இந்த பண்டிகையை காணலாம். அமெரிக்காவில் இது நடைபெறுவதாக தெரியவில்லை). இந்த பண்டிகைக்காக முட்டை மற்றும் தாமரையின் கிழங்கை பயன்படுத்தி ஒருவித கேக் செய்வார்கள். மன்னராட்சி காலங்களில் பக்கத்து நகரங்களை எதிரிகளின் படைகளிடமிருந்து காப்பாற்ற இந்த விளக்குகளை விதவிதமாக செய்து செய்திகளை பரிமாறினார்கள். மாவோவின் தலைமையிலான கலாச்சார புரட்சியின் காலத்தில் இந்த விளக்குகள் தடை செய்யப்பட்டது.ஆனாலும் மக்கள் கேக் செய்து தங்களுக்குள் பரிமாறினார்கள். இந்த கேக்கிற்குள் மறைத்து வைத்து செய்திகளும் பரிமாறப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அனைத்து வாய்ப்புகளும் மறுக்கப்பட்டாலும் செய்திகளை பரிமாற வழிகளை உருவாக்கி வந்திருக்கிறது மனித சமுதாயம். ஒலியெழுப்ப கற்றுக்கொண்டதிலிருந்து ஒலிகளை கூட்டுக் கோர்வையாக்கி அவற்றிற்கு பொருள், இலக்கணம், மொழி என வளர்ந்திருக்கிறது மொழியியல். மொழியின் வளர்ச்சி இசை, நாடகம், நாட்டியம் என பல வடிவங்களை பெற்றது. இவை அனைத்தும் செய்திகளை பல வடிவங்களில் பரிமாற ஆதிகாலம் தொட்டு உதவி வருகின்றன. செய்திகளை பரிமாற பல வடிவங்களில் நமது திறமைகளால் ஊடகங்களை (media)உருவாக்கியிருக்கிறோம்.

பனை ஓலை, தேங்காய், கல்வெட்டுகள், செப்புத்தகடுகள், பாறை, சித்திரங்கள், சிற்பங்கள், புறாக்கள், மரம் என பலவும் செய்திகளை சேகரிக்கவும், பரிமாறவும் பயன்பட்டிருக்கிறது. வரலாற்றையும் இலக்கியங்களையும் நமக்கு கொண்டுவந்து சேர்க்க இவை பயன்பட்டிருக்கிறது. இந்த ஊடகங்கள் யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தனவோ அவர்களைச் சுற்றிய செய்திகளையே பெரும்பாலும் பிரதானமாக தாங்கி வந்திருக்கிறது. அறிவியல் வளர்ச்சியினால் அச்சுக்கலை வளர்ந்து, பத்திரிக்கைகளாக வெளிவந்த போது மன்னர்களை சார்ந்திருந்த ஊடகங்கள் செல்வம் படைத்தவர்களின் கையில் சேர்ந்தது. அவரவரது கொள்கைகளுக்கும் நம்பிக்கைக்கும் ஏற்ப சமூகத்தின் வளர்ச்சியில்/மாற்றத்தில் அச்சுமுறையிலான ஊடகம் பங்காற்றியிருக்கிறது.ஆனால் எழுத்து சுதந்திரத்தை தீர்மானிக்கும் வல்லமை யார் பத்திரிக்கைகளை நடத்தி வருகிறார்களோ அவர்கள் ஆதரிக்கிற கொள்கைக்கு ஆதரவாக செய்திகளை தாங்கி வருகிறது. தொடர்ந்த வளர்ச்சியில் வானொலி, தொலைக்காட்சி என பல வடிவங்களை கண்ட போதும் மக்களின் கையில் இல்லாமல் முதலாளிகளின் கைகளில் அவர்களுக்கு சாதகமான கொள்கைகளுக்காக பயன்படுகிறது. எப்படிப்பட்ட செய்திகளை பரப்புவது, அதை எப்படி பரப்புவது அதன் வழி மக்களை எந்த வழிக்கு கொண்டு செல்வது என்பதை தீர்மானிக்கும் சக்தியாக முதலாளித்துவம் விளங்கிவருகிறது. விதிவிலக்காக சில ஊடகங்கள் மட்டும் மக்கள் அமைப்புகளால் அல்லது மக்கள் சார்பாக இருந்தாலும் பிரதான ஊடகங்களின் பிரச்சாரங்களால் விழுங்கப்படுகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று ஊடகம் அடுத்த பரிணாமமாக இணையவலைத் தளங்களாகவும் வலைப்பூக்களாகவும் வளர்ந்திருக்கிறது. இன்றைய காலத்தில் எழுத்தாளர்களது சுதந்திரம் கடந்த காலங்களை விட அதிகமாக நிறுவனமயமான ஊடகத்தின் அதிக்கத்தை கடந்து வளர்கிறது. அதற்கு தொழில்நுட்ப வளர்ச்சியும் இணையத்தளங்களின் உருவாக்கம், வலைப்பூ என பரந்த எல்லைகள் உதவுகிறது. பொதுஜன ஊடகங்களான தொலைக்காட்சி, வானொலி, பத்திரிக்கைகள், பதிப்பகங்கள் முதலியன தங்களுக்கு பிடித்தமான/ஆதரவான கருத்துக்களை பரப்புவதில் கவனம் செலுத்தியே வந்திருக்கிறது. அந்த வளையத்தை உடைத்த வல்லமை இணையத்தள ஊடகத்திற்கு உண்டு. இன்றைய சமுதாயம் இந்த சுதந்திரத்தை எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பது முக்கியமான கேள்வி.

பேனா முனை வாள் முனையை விட பலம் வாய்ந்தது. உலக மற்றும் இந்திய வரலாற்றில் மக்களின் விடுதலைக்காக எழுத்தாளர்கள் பங்கு மிக முக்கிய பங்கை தந்திருக்கிறது. உண்மை செய்திகளை கொண்டு சேர்ப்பதற்காக உயிரையும் கொடுத்த மாவீரர்களை சரித்திரத்தில் காண்கிறோம். அந்த நல்ல மனிதர்கள் மட்டும் இந்த அளப்பரிய பணியை செய்யாமலிருந்தால் இன்றும் நாம் ஒரு காலனியாதிக்க, அடிமைகள் கால உலகில் இருந்திருப்போம். இந்திராகாந்தி அடக்குமுறை சட்டத்தை கொண்டுவந்த வேளைகளில் பல சவால்களை சந்தித்து நமது ஊடகங்கள் மக்களின் விடுதலையை மையமாக வைத்து அரசை எதிர்த்து செய்திகள் வெளியிட்டன.

நமது ஊர்களின் சாலை, தண்ணீர், பேருந்து வசதி இல்லாமை போன்ற பிரச்சனைகளை எழுதும் போது ரசித்து அதற்கு காரணமான அரசியல்வாதிகளை விமர்சிக்கிறோம். கண்டன குரல்களை எழுப்புகிறோம். ஆனால் தெரிந்தோ தெரியாமலோ நாமும் காரணமாக இருந்து பிறரை அடிமைப்படுத்துகிற மத,சாதி விடயங்களை பகிர்ந்துகொள்வதை நம்மால் திறந்த மனதுடன் ஆராய முடியாத அளவு நமது வழியில் மட்டுமே உண்மை இருப்பதாக சாதிக்க முனைகிறோம். இதுவே ஆதிக்க அரசியலின் முதல் படி. இந்த தடையான எண்ணம் ஏன்? காலங்காலமாக நாம் நம்பி வருகிற அல்லது கடைபிடிக்கிற வழிமுறைகள், விதிகள் என பலவற்றின் உண்மை உருவம் வெளிப்பட்டால் நம் கலாச்சாரத்தின் மனிததன்மை பற்றிய கேள்வியெழும் என்ற தயக்கமா?

இதற்காகவே தனக்கு சாதகமாக செய்திகளை பரப்புவதிலும், உண்மை போல செய்திகளை பிறரை நம்பவைக்க பல யுக்திகளை வெகுஜன முதலாளித்துவ நிறுவன ஊடகங்களின் பாதையில் வலைப்பூவிலும் ஆதிக்க சிந்தனை வளர்கிறது. இந்த சிந்தனைக்கு எதிரான கருத்துக்களை பொதுவான விவாத தளத்தில் வர விடாமல் தடுக்க போலிப்பெயர்களிலும் அநாகரீக வழிகளிலும் பல வடிவங்களில் வலைப்பதிவுகளில் ஆதிக்க கருதுக்கள் வளர்கிறது. மக்களின் வாழ்வியல் சார்ந்த உண்மை செய்தியை தரும் விதமாக வலைப்பூக்கள் என்கிற ஊடக வடிவம் வளருமா?

சமூக மாற்றம் என்கிற சமூகக் கடமையில் வலையுலக எழுத்தாளர்கள் பங்கு என்ன? மக்கள் வாழ்வை மாற்றும் சக்தி நம்மிடம் என்பதை உணர்கிறோமா? தவறு எங்கிருந்தாலும் சுட்டுவதும், நல்லவற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் ஊடக நேர்மையையும், தரத்தையும் வலையுலகம் என்று பெறும்? அரசுகளின் கொள்கைகளை மாற்றும் வல்லமை படைத்த ஆயுதத்தை துருப்பிடிக்க வைப்பதா? வரலாற்றிலிருந்து பாடம் கற்போம். பரந்த வெளியில் பாடித்திரியும் பறவைகளாக கூடுகளை விட்டு வெளியேறுவோம்!

இராஜ இராஜ சோழன், தஞ்சைப் பெரியகோவில்...

தஞ்சைப் பெரியகோவில் பற்றிய ஒரு பார்வை இந்த ஒளிப்படத்தில். இதில் சொல்லப்படுகிற சம்பவங்களும், சரித்திரமும், பார்வையும் உண்மையா? உங்கள் முடிவிற்கே விடுகிறேன்.

உங்கள் கருத்துக்களை பதியுங்கள்!

தஞ்சைப் பெரியகோவில்

Saturday, November 11, 2006

முற்றத்தில் கூடும் உறவுகள்...

சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னால் சென்று உங்கள் குடும்பத்தை நினைத்துப் பாருங்கள். எவ்வளவு எளிமையாக, ஒவ்வொருவர் மீதும் கவனம் செலுத்தி அன்புடன் கூடி, குலவி மகிழ்வுடன் கொண்டாடியது நமது குடும்பங்கள். சிறு சண்டைகள் வரினும் அதன் பின்னர் உறவாடுதலில் தனி சுகமான பண்பு நிறைந்தவை அந்த காலம். கூட்டுக்குடும்பமாக கூடி உறவாடியதில் தான் எவ்வளவு நன்மைகள். பிரிவின் துயரங்களில் அருகிருந்து ஆறுதல் தர அப்பா, அம்மா, சகோதர/ரிகள், சித்தப்பா,பெரியப்பா, தாத்தா, பாட்டி என உறவுகள் கூடி விழாக்களை கொண்டாடுவதில் தான் எத்தனை சுகம்.

ஒரே வீட்டிற்குள் மட்டுமா இந்த உறவு பிணைப்பு? அண்டை வீட்டில் இருக்கும் அனைவருடனும் இறுக்கமான தொடர்புகள், ஊரே உறவான காலம். நம் வீட்டில் விசேசமாக பண்டம் பலகாரங்கள் செய்தால் ஊரே சுவைப்பதும், அடுத்த வீட்டில் பணியாரம், கொழுக்கட்டை மணத்தால் நமக்கு வருவதும் என எவ்வளவு ஒரு பாசப்பிணைப்பு. இது வெறும் வாயை நிரப்பும் நடைமுறையா? இல்லை இது உணர்வுகளின் பிணைப்பில் உறவுகளின் சங்கமம். அந்த காலங்களில் வீடுகளை சுற்றி பெரும்பாலும் சுற்றுச்சுவர்கள் இல்லை. வேலிப்படல்கள் கூட இருக்காது. வீட்டின் முன்னால் அல்லது பல வீடுகளுக்கு பொதுவான முற்றம் இருக்கும். இந்த முற்றம் தான் சுற்றத்தினர் அன்றாடம் கூடுமிடம்.

சுற்றத்தினர் அனைவரும் ஒன்று சேரா விடினும் அவர்கள் பற்றிய கதைகள் அந்த கூடலில் வரும். அந்த கதைகள் நல்லவையோ கெட்டவையோ அனைத்தும் அம்பலமாகும். வாய் நிறைய வெற்றிலையுடன் பாட்டிமார்கள் கதையளப்பது பார்க்க அது ஒரு தனி சுகம். இன்று வீட்டை கட்டும் முன்னரே சுற்றுச்சுவரை எழுப்புகிறோம். முற்றங்கள் துண்டாக்கப்பட்டு மனைகளாக பணம் பார்க்கிறோம். முதியோர்களுக்கு தொலைக்காட்சி பெட்டிகளும், முதியோர் இல்லங்களும் தந்திருக்கிறோம். அண்டை வீட்டில் நடப்பாது என்ன என தெரியாத தனி உலகங்களில் தனி மனிதர்களாக நடக்கிறோம். இந்த வளர்ச்சி/வீழ்ச்சி ஒரே வீட்டினுள்ளும் தொடர்கிறது. தனி மனிதர்களாக மாறும் நாம் என்று எப்படி ஒன்று சேர்வோம்?

முற்றத்தின் மறுமுனையில் வாண்டுகளின் விளையாட்டுக் களம். விளையாட்டுகளில் தான் எத்தனை வகைகள். கபடி, பட்டம் விடுதல், பந்தாட்டம், கில்லி, கோலி, வண்டி உருட்டல், வீடு செய்தல், வட்டு விளையாட்டு, சீட்டுக்கட்டெறிதல், ஆடு புலி ஆட்டம், பல்லாங்குழியாட்டம் என பல வகை விளையாட்டுகள். இவை அனைத்தும் கூடி ஒன்று சேர்ந்து விளையாடும் சுகம் தந்தது. நமது சமூகத்தின் கட்டமைப்பிலிருந்து, தேவைகளிலிருந்து பிறந்தவை. இன்று கிரிக்கெட், டி.வி தொடர்கள் என முடங்கிக் கிடக்கிறது விளையாட்டு. எதிர்கால தலைமுறையினர் கூடி உறவாட எந்த களம் நமக்கு இருக்கிறது? இணையத்தளம்? தொழில்நுட்ப சாதனங்கள்? இவை மட்டுமா நம் உறவு? செய்திகளை பரிமாறுவதற்கும் உணர்வுகளை புரிந்து உணர்வதற்கும் வேறுபாடுகள் உண்டு. இதை நம் எதிர்கால தலைமுறை எப்படி எதிர்கொள்ளுமோ.

நோய்வாய்ப்பட்டால் உறவுகள் அனைவரும் வந்து பார்த்து ஆறுதல் சொல்ல வருவார்கள். அந்த ஆறுதல்களும் அருகிருப்பும் மனதை திடப்படுத்தி சுகமாக்கும். பேராபத்தெனில் ஊரே துடித்து துன்புறும். இன்ப விழாக்கள் சொற்கமான கொண்டாட்டங்களாக சிரிப்பும் கழிப்புமாக நடைபெறும். இன்று விழாக்களும் சம்பிரதாய சடங்குகளாகி வறண்டு போனது. நோயெனில் பக்கத்து வீட்டார் வந்து போவதே வீண் தொந்தரவாக பார்க்கிறோம். அருகிருந்து ஆறுதல் சொல்ல ஆட்கள் அவசியமில்லாதது போல மருத்துவமனையின் சொகுசு அறையில் நாட்கள் நகர்கிறது.

நம் சமூகம் மாறி வருகிறது. அவசியமான பல மாற்றங்களாக இருப்பினும், வாழ்வில் இருந்த நல்ல பல விடயங்களை சந்தைப் பொருளாதாரத்தில் தொலைத்து வருகிறோம். பணம்/பொருள் சேர்ப்பது மட்டுமே மனித மனங்களில் இலக்கா வளர்கிறது. கடல் கடந்து கடினமாக உழைத்து வீடு வந்து சேர்கிற செல்வம் நம்மை பல விதமாக மாற்றுகிறது. பல நல்லவை தான், இருப்ப்பினும் இருந்த நல்லவைகளையும் தொலைக்கிறோம். எங்கேப் போகிறோம் மனிதர்கள் நாம்?

வீடு பாதுகாப்பு என்ற பெயரில் சுவர் கட்டி நம்மை நாமே சிறைபடுத்தும் இந்த முறை சரி தானா? சமூகத்தை, உறவை கட்டியெழுப்ப நாம் என்ன செய்யப்போகிறோம்?

சாதிமுறை பற்றி கீதை!

பகவான் கண்ணனின் கதையை படக்கதையாக படித்தும், "பிருந்தாவனத்தின் நந்தகுமாரன் யாவருக்கும்...", "ஆயப்பாடி மாளிகையில்...", "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே..." என பாடல்களில் கண்ணனுடன் பயணித்து வெண்ணை திருடி, கோபியர்களுடன் ஆடல் பாடல் என கற்பனையில் பயணித்து உருகியிருக்கிறேன். அந்த கண்ணன் தீராத விளையாட்டுப் பிள்ளை.

அர்சுனனுக்கு வந்த கடமையின் குழப்பத்தை நீக்க கிருஸ்ண பரமாத்மா நிகழ்த்திய நீண்ட பிரசங்கம் தான் கீதை. இன்று கீதையை இந்துக்களின் புனித நூலாக பார்ப்பனீயம் திணித்திருக்கிறது. கண்ணன் பற்றியும் அவன் அருளியதாக சொல்லப்படுகிற பகவத்கீதை பற்றியும் அறியும் ஆவல் அதிகமானது. 2002 ஆம் ஆண்டு முதல் இந்த அறிவுத்தேடலை துவங்கினேன். அந்த தேடல் தற்போதைய காலத்தில் வளர்ச்சி பெறுகிறது. அறிவுக்கண் திறந்து கண்ணனை ஒரு அரசியல் சூத்திரத்தில் இயங்கியவனாக பார்க்க துவங்கிய போது, குறும்பான கண்ணனின் வேடம் கலைந்து, அவனது புல்லாங்குழல் உடைந்து கொடிய வில்லாக மாறுகிறது. கீதையை மேலோட்டமாக பார்க்கையில் நல்லவையாக தென்படுகிறது. ஆழ்ந்த சிந்தனைக்கு பின்னர், அதே வார்த்தைகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியல் சூத்திரத்தை கொண்டுள்ளதை அறிய முடிகிறது. அதன் தொடர்ச்சியாக கீதையின் அடிமைக் கட்டுகள் என்ற பதிவை தொடர்ந்த பதிவு இது.

பார்ப்பனீய மதத்தின் தத்துவங்கள் குலவழிபாடு, நாட்டார் தெய்வங்கள் என வழிபடும் மக்களையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் வேதங்கள் பெயரில் அடக்கி வைத்திருக்கிறது. இந்த வேதங்கள் கர்மா, தர்மம் என மக்கள் மனதில் விதைத்துள்ள நம்பிக்கைகள் ஆழமானது. அவற்றிலிருந்து விடுபட இயலாத அளவு கடவுளை முன்னிறுத்தி பார்ப்பனீயவாதிகள் தங்களுக்கு சாதகமான கதைகளை, புராணங்களை புனைந்துள்ளனர். பகவத்கீதையும் இதற்கு விதிவிலக்கல்ல. சாதியாதிக்க அடக்குமுறையான வர்ணாஸ்ரம தர்மத்தை கீதை மிக அழுத்தமாக போதிக்கிறது. இந்த கருத்தை விவாதங்களில் முன் வைக்கிற வேளைகளில் பார்ப்பனீய சிந்தனையாளர்கள் கீதையில் எந்த இடத்திலும் சாதி இல்லை என்று சாதிக்க முனைகிறார்கள்.

கீதைக்கு திராவிடர் கழகத்தின் வீரமணி அவர்களது பொருளுரையை சொன்னால் விடுவார்களா இன்றைய வலையுலக பார்ப்பனீய சிந்தனையாளர்கள்? ஆகவே, காஞ்சி மகாப்பெரியவரின் விளக்கவுரையிலிருந்து சில பகுதிகள்... (மேற்கோள் காட்டப்படுகிற பகுதி (தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகம்) என்ற புத்தகத்திலிருந்து, வேதம், பிராம்மணரல்லாதார் விஷயம் என்ற தலைப்பிலிருந்து எடுக்கப்பட்டவை) . இனி மகாப்பெரியவர் பேசுகிறார்...

"பிராம்மணன் தவிர மற்றவர்கள் பரிசுத்தியாக வேண்டாமா?அவர்களுக்கு இந்தக் கர்மாநுஷ்டானம் அத்யயனம், இவை இல்லையே என்றால், அவரவருக்கும் அவரவர் செய்கின்ற தொழிலே சித்தசுத்தியைத் தருகிறது. எந்த ஜாதியானாலும், தங்களுக்கு ஏற்பட்ட கர்மாவை (தொழிலை)ச் செய்து அதை ஈச்வரார்ப்பணம் பண்ணினால் ஸித்தி அடைந்து விடுகிறார்கள்."


பார்ப்பனீய மதத்தின் படி சூத்திரர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட தொழிலை (கர்மாவை) செய்தால் அவர்களுக்கு ஸித்தி கிடைக்குமாம். அதை மீறி வேறு வேலை செய்தால் அவர்களுக்கு ஸித்தி இல்லையா? வேதனையுடன் "இது என் கர்மா(ம்)" என நொந்தபடியே மலம் அள்ளியும், பிணங்களை புதைத்தும், அழுக்கு துவைத்தும், முடிவெட்டியும், கழை பிடுங்கியும் வேலை செய்பவன் காலங்காலமாக அதே அவலத்தில் வாழவேண்டுமா? சமூகத்தில் அனைவரும் உடல்நலமுடன் வாழ தங்களை வருத்தி உழைக்கிற மக்கள் மனித மரியாதை இல்லாமல் நாயை விட கேவலமாக நடத்தப்படுவதை பொறுத்து அதே தொழிலை தொடர்ந்து செய்யவேண்டுமா? கர்மாவை மீறுவது கூடாதது என சங்கராச்சாரியார் சாதிக்கிற வர்ணாஸ்ரம முயற்சி இங்கு அம்பலமாகிறது.

இன்னும் கேளுங்கள் மகாபெரியவரின் வார்த்தைகளில்...

"இந்த விஷயத்தை பகவான் கீதையில் (xviii.46) தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

ஸ்வகர்மணா தம் அப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மானவ

யுத்தம் செய்வது, காவல் காப்பது முதலான தொழில் ஒருத்தனுக்கு ஏற்பட்டிருக்கிறது. இன்னொருவன் வியாபாரம் செய்கிறான், பசுவை ரக்ஷிக்கிறான். வேறொருவன் இந்த நாளில் தொழிலாளர்கள் என்று சொல்கிற labour force ஆக இருக்கிறான். பிராம்மணன் சமூகத்துக்காகச் செய்ய வேண்டிய தொழில் என்ன? இந்த லோக ரீதியில் மற்றவர்கள் தொழில் செய்கிறார்கள். ஆனால் நம்முடைய பரமாத்மாவின் அநுக்ரஹந்தானே எல்லாவற்றுக்கும் முக்யமாக வேண்டியிருக்கிறது? அதை ஸகல ஜாதியாருக்கும் ஸம்பாதித்துக் கொடுப்பதற்கான காரியங்களே பிராம்மணனுக்கு ஏற்பட்டவை...."

" ...லோகரீதியிலேயே இவன்தான் (பிராமணன்) எல்லா வித்யைகளையும், சாஸ்திரங்களையும், மற்ற எல்லார் செய்கிற தொழில் முறைகளையும் நன்றாகப் படித்து, அவரவர்க்கும் உரிய தொழிலை அவரவர்களுக்குச் சொல்லி கொடுக்க வேண்டும். Teaching (கற்றுக் கொடுப்பதே) இவன் (பிராமணன்) தொழில். மற்ற தொழில்களை இவனே (பிராமணனே) செய்யாமல், அவற்றைப் பற்றிய நூல்களைப் பயில மட்டும் செய்து, அததற்கு உரியவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதோடு நிற்கவேண்டும். மற்றவர்களின் சரீரத்தைக் காப்பாற்றுகிற காவல் காரியம், வியாபாரம், உடலுழைப்பு முதலியவற்றைவிட, அவர்களுடைய தொழில் முறை, வாழ்க்கை நெறி இவற்றையே காப்பாற்றிக் கொடுப்பதன் மூலம், அவர்களுடைய மனஸையும், அறிவையும் ரக்ஷித்துக் கொடுப்பதான இந்தத் தொழில் ரொம்பவும் பொறுப்பு வாய்ந்ததாக இருக்கிறது...."

சூத்திரன் உடலுழைப்பு செய்வதற்கும், பிராமணர்கள் கற்றுக்கொடுக்கவும் என்ற சாதி அடிமை முறையை கீதை வலியுறுத்துகிறது என்பது இதிலிருந்து விளங்குகிறது. பிராமணர்களுக்கு என தனி வேலை, சத்திரிய சாதியினருக்கு தனி வேலை, வைசியனுக்கு தனி வேலை, சூத்திரனுக்கு தனி வேலை என கீதை சொல்லுகிற கர்மாவை (தொழிலை) மேற்கோள் காட்டி இறந்து போன மகாபெரியவர் சங்கராச்சாரியார் (தி.க.வீரமணி அல்ல) சொல்லியிருக்கிறார். கர்மாவை மீறுவது சித்தியடைய தடையாகும் என்பது பார்ப்பனீய மத கோட்பாடு. நம் மக்கள் மத நம்பிக்கையில் ஊறியவர்கள், தெய்வகுற்றம் என எல்லாவற்றிற்கும் பணிந்து அடக்குமுறையான இந்த வர்ணமுறையை ஏற்று வாழ்க்கையில் ஆயிரமாயிரம் ஆண்டுகள் தலைமுறைகள் பல தொலைத்தவர்கள்.

BadNewsIndia என்ற வலைப்பூவில் சாக்கடையில் இறங்கி கழிவை அள்ளி எடுக்கிற ஒரு இளைஞனின் படமும், கழிவறையிலிருந்து மனித மலத்தை அள்ளி எடுக்கிற ஒரு முது வயது பெண்மணியின் படமும் போட்ட மனிதர்களா நாமெல்லாம்? தூ!!! என்ற பதிவை படித்தேன். சமூக அக்கறையுடன் எழுதப்பட்ட அந்த பதிவில் சம்பந்தபட்ட பேரூராட்சியின் தலைவரையும், அரசையும் இந்த நிலைக்கு கடிந்திருந்தார். இந்த சமூக அக்கறை பாரட்டப்படக்கூடியது. ஆனால் சம்பந்தப்பட்ட பதிவர் இப்படிப்பட்ட கொடுமைகளுக்கான அடிப்படை காரணத்தை புரிந்து கொள்கிறாரா தெரியவில்லை.

அந்த பதிவில் சங்கராச்சாரியின் வரிகளை பிரதிபலிக்கிற சில வரிகள்...

"மனித கழிவை சுத்தப்படுத்தும் வேலை செய்வது ஒடுக்கப்பட்டவனோ இல்லை 'உயர்' ஜாதிக்காரனோ, அதை விடுங்கள். யாராவது செஞ்சுதான ஆவணும். என்ன இயந்திரம் வந்தாலும், மனிதனின் தயவு இல்லாமல் எந்த வேலையும் நடக்காது. "

இந்த வேலையை ஏன் ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டுமே செய்ய வேண்டும்? இதே கருத்தைத் தானே கீதையும் வேதங்களும் கூட வலியுறுத்துகிறது? இயந்திரங்கள் வந்தால் கூட இந்த வேலையை குறிப்பிட்ட மக்கள் மட்டுமே செய்ய வைக்கப்படுவார்கள். ஏன் மற்றவர்கள் இந்த வேலையை செய்யக்கூடாது அல்லது செய்ய முன் வரவில்லை? இந்த வேலைக்கான தொழில் நுட்பம் அவசியமானது அதில் மாறுபாடில்லை. இயந்திரம் வந்தால் எல்லா சாதியினரும் இந்த தொழிலை செய்ய முன் வருவார்களா? இதை பார்ப்பனீய மதம் அனுமதிக்குமா? ஒடுக்கப்பட்ட மக்கள் பூசை செய்ய அனுமதிக்காத பார்ப்பனீயவாதிகள், அதே தொழிலை செய்யுங்கள் உங்களுக்கு வாளியும், கூடைக்கும் பதிலாக தொழில்நுட்பம் தருகிறோம் என்பதன் பொருள் என்ன? ஒடுக்கப்பட்ட மக்கள் இப்படிப்பட்ட சலுகைகளை/உதவிகளை எதிர்பார்க்கவில்லை. சகமனிதனாக முழு விடுதலையே ஒடுக்கப்பட்ட மக்களின் தாகம்.

மனித கழிவை மனிதனே சுமக்கும் இந்த அவலம் தென்தமிழகம் முதல் பார்ப்பனீயவாதிகளின் கோட்டையான வட இந்தியா வரை இன்றும் நடைபெறுகிறது.

கீதை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான புனித நூலல்ல. பார்ப்பனீயத்தின் அரசியல் சூத்திரம். என் மாயக்கண்ணனின் வேடம் கலைகிறது...

(கலைவது இன்னும் தொடரும்)

Friday, November 10, 2006

ஆர்.எஸ்.எஸ், பார்ப்பனீயம், வலைப்பதிவாளர்கள் இன்ன பிற...

இந்திய சமூகத்தின் சாதிக்கொடுமைகள் பற்றிய அவலங்களை எழுதுகிற வேளைகளில் எல்லாம் நீ யார்? உனக்கு என்ன தகுதி இருக்கிறது? இதில் நீ உனது வாழ்வை வளப்படுத்துகிறாயா? இந்த நேரத்தை வேறு விதமாக பயன்படுத்தலாமே? என பல அறிவுரைகள் வருகின்றன. இவ்வளவு சமூக அக்கறையில் வலைப்பதிவில் கேள்விகள் கேட்கிறார்களே என மனம் சிலிர்க்கிறது.

இந்த வலையுலக பிரம்மாக்களின் (அவர் தானே சாதி வர்ண முறையை உருவாக்கியவர்) கேள்விகளை ஒரு முறைக்கு மறுமுறை படித்து சிந்தித்ததில் கிடைத்தவை இங்கே.

மதவெறி பிடித்த ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணியை சார்ந்த ஆட்களின் கலவரத்தையும் அந்த பீதியில் குடும்பங்கள் சின்னாபின்னமாக சிதறியதையும் சிறுவயதில் என் கண்முன் கண்டிருக்கிறேன். அந்த கலவரங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பலவற்றின் உயிர் எங்கள் வீட்டில் தஞ்சமடைந்திருந்தது. இருட்டில் தூரத்தில் டார்ச் வெளிச்சம் வரும் போதே அது ஆர்.எஸ்.எஸ் குண்டர்களா இல்லை அவர்களின் கைக்கூலியாக செயல்பட்ட காவலர்களா என பதட்டமடைந்த நாட்கள் அவை. ஆர்.எஸ்.எஸ் இயக்கம் எப்படிப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள தூண்டிய துயரமான நிகழ்வுகள் அவை. இவ்வளவு கலவரங்களையும் தலைமையேற்று நடத்தியதில் ஒருவரான இந்து முன்னணியை சார்ந்த ஒரு ஆர்.எஸ்.எஸ் தொண்டர் பகல் வேளைகளில் எங்களுடன் கலந்துரையாடும் போது காட்டிய அடக்கம், பண்பு என்னை இன்றும் வியக்க வைக்கிறது. அதிர்ந்து பேசமாட்டார். இவரா இப்படிப்பட்ட கலவரங்களின் நாயகர்களில் ஒருவர் என வியந்திருக்கிறேன். களத்தில் கண்முன் கண்ட நிகழ்வுகளும் அதில் அவரது பங்கும் இந்த கேள்விக்கு விடையை தந்தது. இன்றும் அவர் எனக்கு நட்புக்குரியவர். அவர் பல தடவை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறவில்லை, அந்த தொகுதியில் வாழும் மக்கள் பெரும்பான்மையினர் கிறிஸ்தவர்களோ, இஸ்லாமியர்களோ அல்ல இருந்தும் ஏன் வெற்றி பெறவில்லை என எண்ணிப்பார்க்கிறேன்.

சாதிக்கொடுமைகளையும் பார்ப்பனீய சிந்தனையையும் நிலை நிறுத்த துடிப்பவர்கள் சமூக அக்கறை என்ற போர்வையில் சமாதானவாதிகள் போன்ற வேடத்துடன் வலம் வருகிறார்கள். இந்திய சமூகத்தின் சாதி ஆதிக்கத்தின் புதிய வரலாறு சமாதான வேடத்துடன் வஞ்சகத்தை மறைத்து வைத்து இயங்குகிறது. அதற்கான சிந்தனை, ஆள்சேர்ப்பு, களங்களை உருவாக்கும் பணியை ஆர்.எஸ்.எஸ் என்கிற பார்ப்பனீய மதவெறி இயக்கம் மிக நன்றாகவே செய்து வருகிறது. சாதாரண மக்களின் ஆன்மீக நம்பிக்கையை பயன்படுத்தி நாம் அனைவரும் இந்துக்கள் என்ற வட்டத்தில் ஒரு மதத்தினர் என்ற பொய்யான மாயையை உருவாக்கி பார்ப்பனீய ஆதிக்கத்தை தக்க வைக்க ஆள் சேர்க்கிறது ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவம் என்கிற மதவெறி கொள்கைக்கும் மாரியாத்தா, குலதெய்வங்கள் என நாட்டார் வழக்கியல் தெய்வ வழிபாட்டுமுறைக்கும் மிகப்பெரிய முரண்பாடுகள் உண்டு. எந்த மக்கள் பார்ப்பனீயத்தால் அடிமைப்படுத்தப்படுகிறார்களோ அந்த மக்களை ஒன்று திரட்டி தனது அரசியல் இலட்சியத்தை அடையும் படையை உருவாக்குகிறது ஆர்.எஸ்.எஸ். ஆர்.எஸ்.எஸ் தலைமைக்கு பார்ப்பனர் அல்லாத ஒருவர் வர முடியாத அளவு வர்ணாஸ்ரம சாதியாதிக்க கொள்கையில் ஊறியது அது. பார்ப்பனீய தலைமையின் அதிகாரத்தில் கட்டுண்டு கிடக்கிற அடியாள் பட்டளத்தை உருவாக்கி ஆயுதப் பயிற்சி களங்களை ஆர்.எஸ்.எஸ் உருவாக்குவதன் அரசியல் சூட்சுமம் மகா ஆபத்தானது. அதன் வெளிப்பாடு நாட்டில் பல கலவரங்களாக, சூறையாடல், பாலியல் பலாத்காரம், படுகொலைகள், வழிபாட்டுத்தலங்களை அழித்தல் என பரந்து விரிகிறது. யார் இதை செய்கிறார்கள்? உயர் சாதியினர் இல்லையே? அடித்துக் கொள்வதும் இதை செய்வதும் மற்ற சாதியினர் தானே என பார்ப்பனீயவாதிகள் இதற்கு விளக்கம் வேறு தருகின்றனர். இந்த கரச்சேவை காலி அடியாள் பட்டாளத்தை உருவாக்கி, கட்டுப்படுத்துவது யார்? பார்ப்பனீயவாதிகளின் கரம் ஒவ்வொரு மதக்கலவரத்தின் பின்னாலும், சாதிக்கொடுமைகளின் பின்னாலும் இருப்பது கண்கூடான உண்மை.

சாணார் என்றழைக்கப்பட்ட மக்கள் சாதிக்கொடுமையினால் தனது மானத்தை மறைத்து பெண்கள் இடுப்புக்கு மேல் துணி அணிய மறுக்கப்பட்ட நிலை தென்தமிழகத்தில் 19ம் நூற்றாண்டுவரை இருந்தது. இந்த கொடுமையை நடத்தியது மேல்சாதியினர். அதை எதிர்த்து அந்த அடக்கப்பட்ட மக்களிடமிருந்து உருவானவர் தான் முத்துக்குட்டி சாமி என்கிற இளைஞர். அவரது வழிமுறை இன்று அய்யாவழி என பலரால் வாழ்வில் கடைபிடிக்கப்படுகிறது. அவர் தோற்றுவித்த வழிமுறையில் அனைவரும் தலையில் துண்டணிந்து தான் வழிபாடு நடத்தவேண்டும் என்ற உயர்வை மனித மனங்களில் விதைத்தது. அந்த வழிபாட்டுத்தலங்களில் அந்த மக்களே வழிபாடு நடத்தலாம் அதற்கு இடைத்தரகர்கள் அவசியமில்லை. இது பார்ப்பனீய மதத்தின் கொடுமையை எதிர்த்து உருவான ஒரு புரட்சிகர வாழ்வியல், வழிபாட்டுமுறை. ஏன் தலையில் தலைப்பாகையுடன் வழிபாடு செய்ய வேண்டும்? மேல்சாதியினர் முன்னால் தோழில் துண்டணிய கூடாது; இடுப்பில் கட்ட வேண்டும் அல்லது கையில் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும் என்றிருந்த காலத்தில் பிறந்த விடுதலை வழி இது. கடவுள் முன்னால் தலைப்பாகையுடன் வழிபாடு செய்வதன் மூலம் எவருக்கும் அடிமையில்லாத முழு சுயமரியாதையுடைய மனிதர்கள் நாம் என அந்த மக்களுக்கு கற்பித்த விடுதலை இறையியல் வழிபாடு தான் அய்யாவழி.

அய்யாவாழி பற்றி விக்கிபீடியாவின் விளக்கம் இதோ:

//அய்யாவழி, Ayyavazhi (தமிழ்:அய்யா+வழி --> தந்தையின் வழி, இறைவன் வழி) பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், தென்னிந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தோன்றிய ஒருமை கோட்பாட்டு சமயமாகும்.
அய்யாவழி ஒரு தனி சமயமாக அரசால் அங்கீகரிக்கப்படாத போதிலும் அய்யாவழி சமயத்தினரால் அது தனி சமயமாக நிலை நிறுத்தப்படுகிறது. இது அரசால் அங்கீகரிக்கப்படாததால் அய்யாவழி மக்கள், மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போது இந்துக்களாக கருதப்படுகிறார்கள்.

அய்யாவழியினர் மட்டுமல்லாமல் சில புற சமூக[1] சமய[2] ஆய்வலர்களும் அய்யாவழியை தனி சமயமாக அங்கீகரித்துள்ளனர். அய்யாவழி தமிழகத்தின் வெளியிலும் பின்பற்றப்படுகின்றபோதிலும் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் கேரளாவின் தென் மாவட்டங்களிலும் இதன் வளர்ச்சி மகத்தானதாகும். //

குமரிமாவட்டத்திலுள்ள சாமிதோப்பு என்னும் இடத்தில் அமைந்துள்ள அய்யாவழி பதி மிகவும் பிரபலமான தலைமை பதி. பாலபிரஜாதிபதி அடிகளார் இந்த பதியின் வழியாக தமிழகத்தின் பல பகுதியில் மக்களிடையே ஆற்றி வருகிற மதநல்லிணக்கம் பலர் அறிந்தது. ஒருமுறை வேலையில்லா திண்டாட்டம் பற்றி நடந்த ஒரு பொது மேடையில் அடிகளாரும், மறைந்த தமிழார்வலர். வலம்புரிஜான் அவர்களும் கலந்து கொண்டார்கள். அந்த மேடையில் உரையாறும் போது பாலபிரஜாதிபதி அடிகளாருடன் கலந்துரையாட வாய்ப்பு கிடைத்தது. அடிகளாரின் சமூக அக்கறையும், இரக்கமும், பண்பும், மனிதத்தன்மையும், எளிமையும் என்னை வியக்க வைத்தது. வாய்ப்பு கிடைத்தால் இந்த விடுமுறையில் அடிகளாரை சந்தித்து பேட்டி எடுக்கவேண்டும் என ஆவலாக இருக்கிறது.

இன்று அய்யாவழி மதத்தையும் இந்து மதத்தின் ஒரு பிரிவாக திரிக்கும் பணியை பார்ப்பனீயவாதிகளும், ஆர்.எஸ்.எஸ் காரர்களும் செய்து வருகிறார்கள். இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் யார் இந்து மதத்தை சார்ந்தவர்கள் என்பதற்கான விளக்கம் இஸ்லாமிய, சீக்கிய, பார்ப்பனீய, கிறிஸ்த்தவ மதங்களல்லாத இப்படிப்பட்ட சிறு மதங்களையும் இந்துக்கள் என சேர்த்து வைக்கிறது. அந்த மக்களின் அடையாளத்தை அழிக்கும் பார்ப்பனீய மோசடி இது.

மனிதநேயத்திற்கு உதாரணமான வள்ளலார் வழிமுறைக்கும் இதே நிலை ஏற்படுவதாக செய்திகள் வருகின்றன. புத்தன் காட்டிய வழிக்கும் இது தான் நடந்தது. இது எல்லா தலவழிபாட்டு முறைகளிலும் பார்ப்பனீய இந்துத்துவம் எடுக்கிற பண்பாட்டு படையெடுப்பு. வரலாற்றை அழிப்பது, திரிப்பது, திருத்தி தங்களுக்கு சாதகமாக எழுதுவது என அனைத்திலும் பார்ப்பனீயவாதிகள் கை தேர்ந்தவர்கள். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கலாச்சாரப் பிரிவுகள் இந்த பணியை செய்து வருகிறது. இதற்கான சமையலறை ஆய்வாளர்கள் பலர் தங்களது முன்முடிவுகளுடன் ஆய்வு அறிக்கைகளை உருவாக்கி வருகின்றனர். வலைப்பூவிலும் இந்த திரித்தல் பணி பல வடிவங்களில் சிறப்பாக நடக்கிறது.

வலைப்பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் வருகிற பார்ப்பனீய சிந்தனைகளின் வடிவங்களும் அவதாரங்களும் ஆர்.எஸ்.எஸ் சிந்தனையின் விளைவு. எத்தனை விதமான பதிவுகள்? சாதி, மதவெறியை ஆதரித்து சொந்த பெயரில், புனைபெயரில், பின்னூட்டமிட போலிபெயரில் என எத்தனையோ வலைப்பதிவுகள். அப்பப்பா எவ்வளவு பெரிய பார்ப்பனீய தற்காப்பு முயற்சிகள். சாதியாதிக்க பார்ப்பனீய எதிர்ப்பு விவாதங்களின் போது வழக்கமான திசை திருப்பல்கள்களாக கருணாநிதிXஜெயலலிதா அரசியலை இழுப்பது இதில் ஒரு வகை. திராவிட ஆட்சியால் தான் எல்லாம் கெட்டுப்போனது அதற்கு முன்னர் எல்லா மக்களும் சமமாக வாழ்ந்தனர் என்பது போன்ற மாய(மடத்)தோற்றம் உருவாக்கும் பதிவுகள் இன்னொரு வகை. இது எப்போதோ நடந்தது இப்போது காலம் மாறிவருகிறது எதற்கு சாதி மதம் பற்றிய சர்ச்சை என எத்தனை கூப்பாடு என எத்தனை முயற்சிகள் அடடா. இந்த பார்ப்பனீய ஆதரவு பணியை "படித்த" வலைப்பதிவாளர்கள் செம்மையாக செய்து வருகிறார்கள்.

ஒரு பிரச்சனையை பொது தளத்தில் வைத்து விவாதிப்பது மாற்றத்திற்கு மிக அவசியம். பிரச்சனைகளையும் அதற்கான காரணங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வர விடாமல் தடுப்பது ஒரு வித வன்முறை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடுதலை கிடைக்க காரணமாக எழுகிற குரல்களை அடக்கும் அகங்கார ஆதிக்க முயற்சி இது. பிரச்சனைகளையும் அதன் காரணங்களையும் பலரது பார்வைக்கு கொண்டுவராமல் இருந்தால் சிந்திக்கும் திறனும், அறியும் தன்மையுமில்லாமல் அடக்குமுறைகள் தொடரும். நாஜிக்களின் ஆதிக்கத்தால் இருந்த ஜெர்மனியும், ஜெர்மானியர்களும் இன்றும் அந்த கொடுமைகளை விவாதிப்பதும், வரலாற்றை படிப்பதும் மீண்டும் அந்த கொடுமை தொடராமல் இருப்பதற்காக. உலகில் எங்காவது நிறவெறி நடந்தால் அது பற்றி கண்டிப்பதும் விவாதிப்பதும் மீண்டும் நிறவெறி தலைதூக்காமல் தடுக்கும் நல்ல முயற்சியாக கருதப்படுகிறது. சாதிப் பிரச்சனையையும் அதற்கு காரணங்களையும் (பார்ப்பனீய மத வேதங்கள், தர்ம சாஸ்திரங்கள் உட்பட எல்லாவற்றையும்) பற்றி பேசாமல் சமூக, அராசியல், கலாச்சாரா, பொருளாதார விடுதலை எப்படி கிடைக்குமோ சம்பந்தபட்டவர்களுக்கு மட்டுமே இது வெளிச்சம்

முற்றிலும் அழிக்கப்படாத நெருப்பு கனலாக இருந்தால் கூட, அந்த தீக்கங்கு பரவி மீண்டும் பேராபத்தை விளைவிக்கும். சாதிக்கொடுமை இந்திய சமுதாயத்தில் பார்ப்பனீயம் மதவெறி என்கிற எரிபொருள் ஊட்டி வளர்க்கிற காட்டுத்தீ. அதை சமூகத்தில் பரவாமல் தடுக்க மீண்டும் மீண்டும் ஆரோக்கியமான விவாதங்களும், கலந்துரையாடல்களும், புரிதல்களும் மிக அவசியமானது. அது பார்ப்பனீயம் அழியும் வரை தொடரவேண்டும். பார்ப்பனீயம் எந்த சாதியில் இருப்பினும் கழைதல் அவசியம்.

என் கனவு எல்லோரும் பண்பட்ட மக்களாக அனைத்து இனத்தவரும் சமமான மனிதர்களான உரிமைகளுடன் வாழும் இந்தியா. அது பார்ப்பனீய, இந்துத்துவ பாசிச வெறிக்கு முரணானது. இதில் உயர்வு, தாழ்வு என்ற தரப்படுத்தல் கொள்கைகளுக்கு இடமில்லை. என்றாவது ஒரு நாள் இந்த வளர்ச்சியை அடைந்த நல்லரசாக அமையும்!

Wednesday, November 08, 2006

பார்ப்பனீயம், படிப்பு, மரியாதை இன்ன பிற...

சுந்தரவடிவேல் அவர்கள் தனது தந்தையாரின் இறப்பின் பின்னர் சடங்குகளை செய்த வேளை ஏற்பட்ட வேதனையான அனுபவத்தை சாவிலும் பிழைக்கும் பார்ப்பனக் கூட்டம் என எழுதியிருந்தார். அவரது 50 வயது ஆன சித்தப்பாவை, மற்றும் பிறரையும் ஒருமையில் நீ, வா என சடங்கு நடத்திய பார்ப்பனர் மரியாதை பொங்க அழைத்திருக்கிறார். அதை சுந்தரவடிவேல் கண்டிக்க, அந்த பார்ப்பன பெரியவரின் தன்மானத்திற்கு இழுக்கு ஏற்பட்டதால் அவர் ரொம்ப ஓவர் மரியாதையில் "வாங்கைய்யா, வைய்யுங்கைய்யா, எடுங்கைய்யா" என அழைத்திருக்கிறார். பக்கத்தில் வேறு சிலருடன் சடங்கு நடத்திய பார்ப்பனருக்கு இந்த மரியாதையின் தொனி கவரப்பட்டு என்ன ஓய் நடக்குது என்ற பாணியில் விசாரித்திருக்கிறார். அதற்கு அவா, They need respect! என அடக்கமா பதில் சொல்லியிருக்கா. என்ன இருந்தாலும் வர்ணாஸ்ரம சாதி அடுக்கில் உயர் பீடத்தில் இருக்கிற சவுண்டியானாலும் பார்ப்பனர் என்பதை உணராமல் ஒரு சூத்திரன் மரியாதையை கேட்கலாமா? இது தான் பார்ப்பனீயம் வெளிப்படுத்துகிற மரியாதை. ம்ம்

சுந்தரவடிவேல் அதோடு நின்றால் பரவாயில்லை, போதாத குறைக்கு பார்ப்பனீயம் கையகப்படுத்த தவித்து துடிக்கிற இணைய வலைப்பூவில் பதிவு எழுதி தனது எண்ணங்களை வெளிப்படுத்தினார். விடுவார்களா நமது "படித்து பண்பட்ட", "சுயமரியாதையை காலங்காலமாக மதித்து" நடக்கிற புண்ணியாவான்கள். பின்னூட்ட கமண்டலங்களுடன் கிளர்ந்தெழுந்து அவரை கட்டம் கட்டி பின்னி எடுக்கிறது வலைப்பதிவுலக நியோபார்ப்பனீயம். இது என்ன குருஷேத்திர யுத்தமா?

அறிவுத்தனமாக எழுதுவதாக அல்லது சமுதாய அக்கறையில் எழுதுவது போல காட்டிக்கொள்கிற வலைப்பூ எழுத்தாளர்கள் இது ஏதோ ஒரு சாதாரண செயலாக காட்ட முனைவது எதை காட்டுகிறது? அந்த பார்ப்பனரின் இடத்தில் இருந்து பார்க்க வேண்டுமாம். ஒரே வேலையை திரும்ப, திரும்ப செய்தால் எரிச்சலும் ஆத்திரமும் வருமாம். என்ன அருமையான உபதேசம்.

மனதில், சிந்தனையில் என கொஞ்சமாவது மனிதாபிமானம் மிச்சமிருப்பின் சிந்திக்க சில கேள்விகள்.

ஒரே வேலை எரிச்சலை தருமெனில் பீஅள்ளுபவனும், சவம் இறக்குபவனுக்கும், முடிவெட்டுபவனுக்கும், களையெடுப்பவளுக்கும், பாத்திரம்ம் தேய்ப்பவழுக்கும் எவ்வளவு எரிச்சலும் ஆத்திரமும் இருக்கும்? இவர்களை என்றாவது மனிதர்களுக்கான உரிமையும், மரியாதையையும் கொடுத்திருக்கிறதா இந்திய சமுதாயம்? பூசை செய்ய நாங்களும் வருகிறோம் என்ற மக்களின் வேண்டுகோளை ஆதரித்து ஆணையிட்ட அரசை எதிர்த்து கட்டம் கட்டி எத்தனை அசுவமேதயாகப் பதிவுகள் வலைப்பதிவில்? அந்த ஆணையை சில விபீடண கோடாரிகம்புகளை வைத்து வழக்குப் போட்ட போது எத்தனை ஆனந்த கமெண்ட் கமண்டலங்கள்?

சுந்தரவடிவேலிடம் "இன்னமும்" இதை எதிர்பார்க்கவில்லை என்கிறவர்கள் "படித்த வர்க்கமாக" காட்டிக்கொண்டு வலைபப்திவில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலவும், இராமாயணத்தில் வருகிற மறைந்திருந்து கொல்லுகிற வித்தையை போலவும் எழுதுகிற பார்ப்பனீயக் கருத்துக்களை கண்டித்திருக்கிறார்களா? அப்போதெல்லாம் எத்தனை ஸ்மைலி போட்டு சிரிப்பு? மனவிகாரங்களின் வெளிப்பாடா இவை?

பாதிக்கப்பட்ட ஒருவனின் உள்ளக்குமுறலை புரிந்துகொள்ளாமல், அதற்கான காரணகாரியங்களை ஆராய்ந்து கழைய முயலாமல், எவன் பாதிப்பை உருவாக்குகிறானோ அவன் பக்கம் சாய்ந்து நிற்பது பார்ப்பனீயத்திற்கு புதியதா என்ன? புராணகாலம் முதல் இன்று வரை பார்ப்பனீயம் இதை தான் செய்துவருகிறது.

//இன்னும் என்ன அவ்வளவு வெறுப்பு?ஒரு காலத்தில் ஒடுக்கினார்கள் - சரி.பிராமணன் மட்டுமா ஒடுக்கினான்? பணம் படைத்தவன் எல்லாரும் சேர்து தானே ஒடுக்கினார்கள்.இன்று அப்படி ஒடுக்குதல் கிடையாதே.// இது நல்ல ஒரு அழைப்புடன் சுந்தரவடிவேல் பதிவில் வந்த பின்னூட்டம்.

மரியாதை குறைவாக நடத்தப்பட்ட ஒருவர் அதன் பாதிப்பை வெளிப்படுத்தினால் அது வெறுப்பு! அந்த அவமானத்தை நிகழ்த்திவருக்கு ஆதரித்து/பரிந்து எழுதினால் அது சமூக அக்கறை? பார்ப்பனீயம் என்றோ நிகழ்த்தியதையல்ல சுந்தரவடிவேல் எழுதிருக்கிறார். அவருக்கு தற்போது ஏற்பட்ட அனுபவத்தின் வலி இது. பார்ப்பனீயம் பணம் படைத்த வர்க்கத்துடனும், அதிகார வர்க்கத்துடனும் சேர்ந்து சூத்திரர்களை ஒடுக்கிய/ஒடுக்குகிற நிலை வேதகாலம் முதல் இன்று வரை தொடர்கிறது. இதற்கு ஆயிரமாயிரம் உதாரணங்களை காணலாம்.

கோவில் முதல் அனைத்து இடங்களிலும் மனிதனை மனிதனாக சம மரியாதை, உரிமையில் நடத்த அழைப்புகள், குரல்கள் வருகிற வேளைகளில் வேதங்கள், சாத்திரங்கள், ஆகமங்கள் பின்னால் ஒளிந்து கொண்டு நிற்கிற கோழைத்தனமான செயல்களை கழையுங்கள். அந்த சடங்கு நடத்திய ஒரு பார்ப்பனர் மட்டுமல்ல எதிர்கால பல தலைமுறைகளின் பார்ப்பனீய சிந்தனைத் திமிர் பிடித்த மனிதர்களை (எந்த சாதியாக இருப்பினும்) உருவாக்கும் தவறை இனியாவது நிறுத்துங்கள். தவறு என்பது நம் வீட்டு சமையலறையில் இருந்தாலும் தவறு என ஒத்துக்கொள்ள ஏன் தயக்கம்? racial purity/racial suprimacy என்கிற மாய உலகில் வாழ்வதை விட்டு நாம் குறைகள் நிறைந்த நிறை மனிதர்கள், நிறைகளாக மலர்வோம் என வெளிச்சத்துக்கு வாருங்கள்! வாருங்கள் மனிதனை மரியாதையும், மாண்பும் மிக்கவர்களாக நடத்துவோம். We need respect! because WE ARE HUMANS WITH DIGNITY!

Monday, November 06, 2006

கீதையின் அடிமைக் கட்டுகள்!

"கடமையை செய் பலனை எதிர்பாராதே!"
கடவுளுக்கெல்லாம் கடவுளும், முழுமுதல் கடவுளுமாக கருதப்படுகிற கண்ணன் பகவத்கீதையில் அருளிய வார்த்தைகள் இவை. மேலெழுந்த விதமாக இந்த வாக்கியத்தை பார்த்தால் அருமையான வார்த்தைகளாக தெரியும். ஆழமாக சிந்தித்துப் பாருங்கள் அதன் அரசியல் சூட்சுமம் விளங்கும்.

நீங்கள் மைக்ரோசாப்ட்ல் அல்லது வேறு எந்த இடத்திலும் வேலை செய்யுங்கள் அதற்கு பலனாக ஊதியம் அல்லது எந்த பலனையும் எதிர்பார்க்காதீர்கள். உங்கள் கட்சிக்காக, ஊருக்காக உழையுங்கள் அதன் பலனை எதிர்பாராதீர்கள். இப்படி உங்களிடம் யாராவது சொன்னால் ஏற்க முடியுமா? நாள் முழுவதும் வயல்வெளியில், கடற்பரப்பில், காட்டில், வீட்டு வேலைகளில், சுத்தம் செய்தலில், புதைகுழிகளில் பிணம் எரித்தலில் ஈடுபடுங்கள் அது உங்கள் கடமை. ஆனால் இந்த வேலைக்கு பலனாக பொருள், செல்வம், கல்வி, புகழ், மனிதநேயம் என எதையும் எதிர்பாராமல் உழையுங்கள். இந்த வார்த்தைகள் யாருக்காக? உழைக்கும் மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு, சாதி அடிமைகளாக்கப்பட்ட மக்களுக்கு என சொல்லப்பட்டதா? இல்லை உண்டு கொழுத்து, உழைப்பவன் மீது ஏறி மிதிக்கிறவர்களுக்கு ஆதரவாக; அடிமைப்படுத்தப்பட்ட மக்களை அடக்கி வைப்பதற்காக சொல்லப்பட்டதா? இந்த கேள்விகளுக்கு விடை தெரிய கீதை உருவாக்கப்பட்ட காலச்சூழலோடு புரிந்து கொள்வது அவசியம்.

இந்துக்களுக்கு புனித நூல் என புகுத்தப்படுகிற பகவத்கீதை எல்லாருக்கும் பொதுவான கருத்தை சொல்கிறதா? கீதை ஆரிய சார்புத்தன்மையுடன் வர்ணாஸ்ரம சாதி அமைப்பில் இருக்கிற உயர் சாதியினருக்கு ஆதரவாக பிராமணீயத்தை உயர்த்தி வைக்கிறது. கீதை உழைக்கும் மக்களின் வாழ்வின் விடுதலைக்கு சொந்தமானதல்ல. கீதை உருவாக்கப்பட்ட விதம் எப்படியானது? ஆரியர்கள் சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்களின் நாகரீகத்தை, வாழ்க்கைமுறையை சிதைத்து தங்களுக்கு சாதகமான விதிகளை, கதைகளை உருவாக்கினர். அவை வேதங்கள், உபநிடங்கள், சாத்திரங்கள் என பல வடிவங்களில் உருவாக்கப்பட்டது. இவை அனைத்திலும் பார்ப்பனீயம் வெளிப்படுவதை காணலாம்.

பகவத்கீதை என்பது குருஷேத்திர யுத்தத்தில் தேரோட்டும் சாரதியான கண்ணன் அர்சுனனுக்கு அருளிய உபதேசங்கள். மகாபாரத கதையில் நடந்ததாக சொல்லப்படுகிற ஒரு பகுதியை தொகுத்த நூல் தான் பகவத்கீதை. நமது மக்களுக்கு அறவழியை, அன்பை, மனிதநேயத்தை, அறம் சார்ந்த வாழ்வை போதிக்கிறதா கீதை? போர்க்களத்தில் நின்ற அர்ச்சுனன் தனக்கு எதிரில் நிற்பவர்களில் தனது உறவினர்களை, சித்தப்பாமார்களை....காண்பதாகவும். அவர்களை கொன்று நாட்டைப் பிடிப்பது தேவையில்லை என்கிறான். ஆனால், அர்ச்சுனன் தனக்கு எதிரில் நிற்பது யாரென்றும் பிரித்துப் பார்க்காமல் கொலைகள் செய்ய கண்ணன் வழங்கிய அறிவுரை தான் கீதை. கொடுத்த வாக்குறுதிகளையும் போர்க்கள விதிகளையும் மீறி தந்திரங்களால் எதிரியை கொலை செய்தவன் கண்ணன்.

கடமையை செய் பலனை எதிர்பாராதே என்ற கீதையின் வாக்கியத்தை நடைமுறை வாழ்வில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அனுபவித்து வருகிற தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் நிலை என்ன ஆனது? மேல்சாதி அடிமைத்தனத்திற்கும், பணக்கார வர்க்க அடக்குமுறைக்கும் சந்ததிகளை இழந்து கூனி குறிகி கை கட்டி வாய் பொத்தி நிற்பது மட்டும் தான் மிஞ்சியது. நிலச்சுவாந்தாராக இருக்கிற மேல் சாதிப் பண்ணையாரின் பெல்ட் அடி, செருப்படி, சித்திரவதைகள் அனைத்தையும் அனுபவித்தாலும் வாய்பேசக்கூடாத விதி.

நாள் முழுவதும் உழைத்து அதன் பலனை வணிகம் செய்பவன், அரசன், பூசை செய்பவன் அனுபவிக்க ஊரின் ஒதுக்குப்புறத்தில் அல்லது காடுகளில் ஒழிந்து வாழ்வது தான் கடமையா? கோவில் முதல் அனைத்தையும் உடல் உழைப்பால் கட்டியெழுப்பி கடமையை செய்து; மரியாதை முதல் வழிபடும் உரிமை வரை வேடிக்கை பார்ப்பவர்கள் அனுபவிக்க கொடுப்பதா கடமை? இந்த புறக்கணிப்பின் வேதனையை பொறுத்துக் கொள்வது தான் கீதை சொல்லும் கடமையா?கடமையை செய்தால் அதன் பலனை அனுபவிக்க உழைப்பவனுக்கு உரிமையுண்டு. இதை தடுப்பது கண்ணனின் உபதேசமாக இருந்தால் அவன் முழுமுதல் கடவுளல்ல! வர்க்க பேதத்தையும் வர்ணபேதத்தையும் கட்டிக்காக்கிற முதன்மையானவன்.

அடக்குமுறையிலிருந்து விடுதலையை தருவது தான் நல்ல நெறியாக இருக்கமுடியும். கட்டுகளிலிருந்து கட்டற்ற தன்மைக்கும். விலங்குகள் பூட்டிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலையடைந்த மனிதர்களாகவும். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதங்களிலிருந்து முழு உரிமையுள்ள சமமான மனிதர்கள் என்பதும் தான் மனித முன்னேற்றத்திற்கு அவசியமான அணுகுமுறை.

கீதை "கடமையை செய்! பலனை எதிர்பாராதே" என்பதை திருத்தி படியுங்கள்! கடமையை செய்து பலனையும் சரிசமமாக அனுபவியுங்கள்! வர்ண, வர்க்கபேதமற்ற மனிதர்களாக நடைபயில கிருஷ்ணனின் இந்த மாயாஜாலம் அவசியமில்லை!!

(கீதை சாதி அடிமைத்தனத்தை போதிக்கிறதா? அடுத்த பதிவில் தொடரும் ...)

திரு

Sunday, November 05, 2006

புறக்கணிப்பின் எல்லையில் வெண்மலர்கள்

கோகுல கண்ணனின் பிருந்தாவனத்தின் தெருக்களில், சிவபெருமானில் தலையிலிருந்து வழிந்து பாய்கிற புனித கங்கையின் கரைகளில் வெள்ளுடை தரித்து புன்னகையிளந்த முகங்களை பார்த்திருக்கிறீர்களா? ஆணாதிக்கம் தானே நமது மதங்களின் மையமாகிப் போனது. கணவன் என்பவன் இருக்கும் வரை தான் வாழ்வு! அதன் பின்னர் சாவு அல்லது செத்த நடை பிண வாழ்க்கை இது தான் நமது இந்திய சமுதாயம் பெண்களுக்கு வழங்கியிருக்கும் நெறி.

இந்தியாவில் கணவனை இழந்த பெண்கள் வெள்ளை உடை தரிக்க வைக்கப்பட்டு தலையில் முக்காடு இடப்பட்ட நிலையில், பூ, பொட்டு என எல்லா ஆசைகளையும் பறிக்கப்பட்டு பொருளாதாரத்தை இழந்து பிச்சை எடுக்கும் நிலையில் தெருக்களில் தள்ளப்படுகிறார்கள். இந்து மதம் விதவை பெண்களுக்கு விட்டு வைத்திருக்கிற வாழ்வு இது தான். ராஜாராம் மோகன் ராய், காந்தி என பலரை பெண்களுக்காக குரல் கொடுத்தவர்கள் என வரலாற்று பாடத்தில் படித்து பழக்கப்பட்ட நமக்கு அந்த பெண்களின் உண்மை வேதனை விளங்குமா? கணவன் என்கிற ஆணாதிக்க அடையாளத்தை இழந்து விட்டால் பெண்கள் சுகமான வாழ்வை இழக்கவேண்டும் என கற்பிக்கிற நமது வேதங்கள், எந்த வகையில் பெண்களுக்கு நீதியாக இருக்க முடியும்? கணவன் இறந்து விட்டால் மனைவி உடன்கட்டை ஏற வேண்டும் என்ற விதியை மாற்ற சட்டங்கள் இயற்றி ஆண்டுகள் தான் கடந்தன, இன்னும் சதி என்கிற உடன்கட்டை இந்தியாவில் தொடர்கிறது. உடன்கட்டை ஏறுவதை ஆதரிக்கிற கூட்டம் இந்த நாட்டில் இன்னும் அமைப்புகளின் பின்னால் ஒளிந்து கொண்டு நிமிர்ந்து நடக்கிறது என்பது வெளிப்படையான உண்மை. தன்னோடு வாழ்ந்து துணையாக இருந்த ஒரு உயிர் பிரிந்தால் இருக்கிற இன்னொரு உயிரையும் கொலை செய்யும் இந்த வழியை காட்டுமிராண்டிகள் கூட கடைபிடிக்கமாட்டார்கள்.

பழமைவாத இந்துக் குடும்பங்களில் சொத்துரிமை பெரும்பாலும் ஆண்களுக்கு மட்டுமாகவே இருந்து வந்திருக்கிறது. அப்பாவிடமிருந்து மகனுக்கு சொத்துரிமை கிடைக்கிறது. ஆனால் விதவையான பெண் சாப்பாடு முதல் அனைத்திற்கும் பிள்ளைகளை சார்ந்திருக்கும் பொருளாதார அடிமை சூழல். இந்த பொருளாதார அடிமைத்தனம் விதவையான பெண்களின் வாழ்வை சுழலாய் சுற்றி அடக்கிவைக்கிறது. பொருளாதார அடிமைத்தனத்திலிருந்து பல விதமான அடிமைத்தனத்தில் தள்ளப்படுகிறார்கள். அவர்களுக்கான எந்த சுதந்திர முடிவையும் எடுக்க முடியாத அளவுக்கு குடும்பத்தினரின் கட்டுப்பாடுகளும் தொந்தரவுகளும் விதவைகள் மீது குடும்பம், பாதுகாப்பு என்ற பெயரில் சுமத்தப்படுகிறது. குடும்ப விழாக்களில் அவர்களை ஒதுக்கி வைத்து புறக்கணிக்கிறோம். சகுனம், சாத்திரம் என்ற பெயரில் விதவைகள் எதிரில் வரக்கூடாது, தொடக்கூடாது என பல உளவியல் சித்திரவதைகள். மனித இனத்தில் பாதிக்கப்பட்ட ஒரு உயிரை இழி பிறவியாக, தன்னை விட கேவலமாக நடத்தி காயப்பட்ட இதயத்தில் மீண்டும் துன்பத்தை உருவாக்குகிற நடைமுறை கேவலமானது.

இந்தியாவில் மட்டும் 40 மில்லியன் விதவைகள் இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் எந்த விதமான நிரந்தர வருமானமும் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். பிருந்தாவனத்தின் வீதிகளில் ஒலிக்கிற பஜனை பாடல்களின் குரல்கள் இந்த பெண்களுக்கு சொந்தமானது. கண்ணனின் லீலையை, பாடலாய் கோவில்கள் தோறும் பாடுகிற இவர்கள் பெறும் கூலி மாதம் 500 ரூபாய்க்கும் குறைவானது. பாடலில் சிலாகித்து உருகி கண்ணனை நினைத்து பக்தர்கள் உண்டியலில் நிரப்புகிற பணம் யார் வயிற்றை நிரப்புகிறது? கோவிலுக்கு சென்று சட்டென திரும்பும் நீங்கள் கோவில் வாசலில் பிச்சையெடுக்கும் கூட்டத்தில், கடைத்தெருக்களில், கோவில் மாடங்களில் என பல இடங்களில் இவர்களை காணலாம். இந்திய சமூகத்தில் எளிதில் நம் கண் பார்வைக்கு தெரியாத இவர்கள் வாழ்வை முன்னேற்ற எந்த அக்கறையும் அரசுகள் எடுப்பதில்லை. விதவைகள் மறுமண திட்டம், உணவு திட்டம் என சில மாநில அரசுகள் கொடுக்கிற தொகை சில நாட்களுக்கு கூட போதாது என்பது தான் உண்மை. இதனால் பெரும்பாலான விதவைப் பெண்கள் தங்களது உணவிற்கும் தேவைக்கும் பிறரிடம் கையேந்தும் நிலையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பெரும்பாலான விதவைகள் குழந்தைப் பருவத்திலேயே திருமணம் செய்விக்கப்பட்டவகள். குழந்தைப்பருவ திருமணங்கள் இவர்களுக்கு கிடைக்கவேண்டிய அடிப்படைக்கல்வி, தொழிற்கல்வி, வேலை முதலியவற்றை பறித்து பொருளாதார சூன்யத்தில் நிறுத்தி கைகொட்டி சிரிக்கிறது.

வல்லரசுக் கனவில் வாழ்ந்து அமெரிக்க டாலரில் கண்விழிக்கிற நமது நிக்கர் இந்திய தேசியவாதிகள் கண்களுக்கும், அவர்கள் உடம்பில் ஒட்டிப் பிறந்த டிஜிட்டல் சமாச்சாரங்களிலும் தென்படாத இந்த பாதுகாப்பற்ற பெண்கள் இந்தியா ஒளிர்கிறது என்பதன் அடையாளமா? விதவைகள் வாழ்வின் வேதனையை water என்ற பெயரில் படமாக்க சென்ற தீபா மேத்தாவும் அவரது படக்குழுவினரும் சங்பரிவார கலாச்சார தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளாகி, படப்பிடிப்பை இடைநிறுத்தம் செய்ய நிற்பந்திக்கப்பட்டனர். இது தான் இந்து மதமும் அதன் வேதங்களும் இந்த பண்டாரங்களுக்கு சொல்லித்தருகிறதா?

விதவைகள் மறுமணம் என்பது சட்ட வடிவில் மட்டுமல்ல சமுதாய வடிவிலும் அவசியமான கருத்தாக்கத்தை ஏற்படுத்தல் மிக அவசியமாகிறது. விதவைகளுக்கான தொழிற்பயிற்சிகளும், வேலைவாய்ப்பு மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களும் இன்றைய காலத்தில் மிக அவசியமான தேவை. சொந்தமாக தொழில் செய்து அல்லது வேலை மூலம் வருவாய் ஈட்டி தன்னம்பிக்கையுடன் வாழ வழியை ஏற்படுத்திக் கொடுத்தால் இந்திய நாட்டின் பெண்களின் வாழ்வில் ஒளி வீசும். பெண்களுக்கு பல சூழல்களை எதிர்கொள்ளும் விதத்திலான கல்வி ஆணாதிக்க கட்டுகளிலிருந்து பெண்ணின விடுதலையை பெற்றுத் தரும் அருமருந்து.

இறப்பை ஏற்றுக்கொண்டு வாழ்கிற நமக்கு அதன் வழியாக வருகிற இழப்பையும் வாழ்வியல் மாற்றத்தையும் ஏற்று வாழ்கிற இயற்கையான முறையை இந்துமதம் சொல்லித்தராதது ஏன்? கணவன் இறந்ததும் இயற்கைக்கு எதிராக பெண்களை உடன்கட்டை ஏற்றி கொலைகள் புரிய வைத்ததும், சமுதாயத்திலிருந்தும், குடும்பத்திலிருந்தும் ஒதுக்கி வைக்க வைத்ததும் யார்? இதற்கு கடவுள் காரணமா இல்லை கடவுளை கற்பித்தவர்கள் காரணமா? யாராக இருப்பினும் சமூகநீதியின் முன் நிறுத்தி திருந்த வைப்போம். விதவைகளும் மனித உரிமை நிறைந்த பெண்கள். அவர்களுக்கான நீதியான உலகை உருவாக்க முயல்வோம். சமூகத்தின் திட்டங்கள் பாதிக்கப்பட்ட இவர்களுக்காகவும் திரும்பட்டும்.

(நவம்பர் 25 பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்க்கும் அடையாள நாள். இந்த நாளில் நமது குடும்பங்களில், சுற்றத்தில், சமூகத்தில், பணியிடங்களில் பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை சிந்தித்து மாற்ற பிரச்சாரத்திற்கான நாள் )

திரு

Wednesday, November 01, 2006

வறுமை! ஒரு ஆயுதமா?

இளமையில் வறுமை கொடியது!!! அனுபவித்திருக்கிறீர்களா? நான் அனுபவித்திருக்கிறேன்! உண்ண சரியாக உணவில்லாமல், உடுக்க மாற்று உடையில்லாமல் வாடுவது கொடுமையிலும் கொடுமை. துவைத்த உடையை காய வைத்து மாற்று உடை உடுக்க வசதியில்லாமல் காற்றில் சேலைத் தலைப்பை காயவைத்து மறுமுனையை கட்டியபடியே நின்ற பெண்ணின் வறுமையை பார்த்து காந்தியடிகள் எளிமையான உடைக்கு மாறியது வரலாறு.

இதே மாதிரியான நிலையில் எனது மாணவப் பருவத்தை கடந்திருக்கிறேன். மாற்று உடையில்லாமல் துவைத்த அரைக்கால் சட்டையை ஈரமாக அணிந்து உடலின் வெப்பத்தில் காய வைத்த வறிய காலம் அது. வசதியான வீட்டுப் பிள்ளைகள் சாப்பாடு பொட்டலம் கொண்டு வர, வறுமையில் வாடியவனுக்கு வயிறு நிரப்பியது கஞ்சித்தண்ணியும், சுட்ட வற்றல் மிளகாயும் நிரம்பிய தூக்குப்பாத்திரம். சகமாணவர்கள் உணவருந்த, எனது பாத்திரத்தை திறக்கும் வேளைகளில் ஒரு விதமான வெட்கத்தால் மனம் கூனிப்போகும். வறுமை கேவலமானதா? இல்லை ஏளனமாக பார்க்கிற சமுதாயம் கேவலமானதா? இந்த கேள்விகள் எழ அன்று வாய்ப்பில்லாமல் போனதால் படிப்பில் மட்டுமே கவனம் போனது. காலம் உருண்டோடி சமூகத்தின் சாளரங்கள் கண்ட ஒளிக்கீற்றில் என்னை நான் பார்த்த வேளைகளில் வறுமையை அனுபவித்தது ஒரு சுமையாக இல்லை. வறுமையின் அனுபவங்கள் என்னை பண்படுத்தியது. இந்த அனுபவங்கள் வறுமை பற்றிய கலந்துரையாடல்கள், அரங்க அமர்வுகளில் உறுதியாக பேசும் மனதை தந்தது. வளமை வந்து வாழ்க்கையை மாற்றினாலும் வறுமை பதித்த தடங்கள் சமூகப் பார்வைக்கான விலாசமளித்திருக்கிறது.

சமூக பாதுக்காப்பு (Social Protection) பற்றிய உலக அளவிலான ஒரு கூட்டத்தில் வறுமை, கல்வியின்மை, சுகாதாரம், குடிநீர், அடிப்படை வசாதிகள், மருத்துவ வசதி பற்றிய ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பித்தேன். அந்த அறிக்கையில் உலக வங்கியின் வறுமை ஒழிப்பு திட்டங்கள் (Poverty Eradication Strategy Paper - PRSP) மக்களின் வாழ்வில் மோசமான நிலையை உருவாக்கியதை சுட்டியிருந்தேன். வறுமையை ஒழிப்பதற்கு பதிலாக வறியவர்களை ஒழிப்பது என்பதை முடிவாக கொண்டிருக்கிறது இந்தியாவில் நிறைவேற்றப்பட்டு வருகிற பல திட்டங்கள். அவற்றில் ஒன்று பெரிய நகரங்களில் குடியிருக்கிற குப்பத்து மக்களை அப்புறப்படுத்தி நகரை அழகுபடுத்துவது. சுமார் 20 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டும், சுருக்கப்பட்டும் வருகிற அரசு மருத்துவமனைகள், மருத்துவ திட்டங்கள். மூடப்பட்ட பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்து நிலையங்களும் அதன் விளைவாக கொல்லப்பட்ட பல ஆயிரம் குழந்தைகள் என பட்டியல் நீளமானது. அந்த கூட்டத்தில் உலக வங்கி சார்பில் ஒரு இளம் அதிகாரி கலந்துகொண்டார். அவருடனான விவாதத்தில் பல உண்மை களநிலைகளை விளக்கி உலக வங்கியின் கொள்கை, திட்டங்களை கேள்வியெழுப்பிய போது அந்த அதிகாரி தனிப்பட்ட பதிலை மட்டும் வழங்கி சமாளித்தார். தேனீர் இடைவெளியில் அவர் சொன்ன வார்த்தை "தொடர்ந்து ஆய்வுகளை அரங்குகளிலும் உலக வங்கியின் பார்வைக்கும் கொண்டு செல்லுங்கள்".

இந்தியாவில் வறுமையொழிப்பு என்பதை கொள்கை அளவிலும் உரைகளாகவும் தொடர்ந்து மத்திய அரசு அறிவித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பட்டினிச்சாவுகள், கடன் தொல்லையால் தற்கொலை சாவு என எண்ணிக்கை பல ஆயிரக்கணக்கில் அதிகரித்திருக்கிறது. குடும்பம் குடும்பமாக தற்கொலை செய்வது என்பது வாடிக்கையான வேதனை நிகழ்வாக மாறியிருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி 8% வளரும் என கணிப்பிடுபவர்கள் யாருடைய பொருளாதாரம் வளர்கிறது என்று சொல்வதில்லை. கடந்த பாரதீய ஜனதா ஆட்சியின் போது ஆந்திராவின் ஹை டெக் முதல்வர் ஆட்சியின் போது அமெரிக்காவின் தனியார் நிறுவனங்களின் ஆலோசனைகளை கொண்டு "கார்ப்பரேட் பார்மிங்" என்ற முறையில் இஸ்ரேல் நாட்டு நிறுவனங்களுக்கு விவசாயம் செய்யும் அனுமதி வழங்கியது. அதன் விளைவாக விவசாயிகள் விதை முதல் உரம் வரை வெளிநாட்டு நிறுவனம் வழங்கியதை வாங்கி தங்களது நிலத்தை 99 வருட குத்தகைக்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கொடுத்து விவசாயம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். எதிர்பார்த்த வருமானம் கிடைக்காததால் நிலத்தையும் இழந்து, வீடு, கால்நடைகள் என அனைத்தையும் விற்று கடனை அடைக்க வேண்டிய நிலை. தாங்க முடியாத பொருளாதார சுமையால் சொந்த மண்ணை விட்டு அகதிகளாக பெங்களூர், சென்னை, மும்பை என குடும்பம் குடும்பமாக இடம் பெயர்ந்து கூலிவேலை செய்து பிழைக்கும் அவலத்தில் தள்ளப்பட்டனர். தொடர்ந்து வந்த இராஜசேகர ரெட்டியின் அரசும், இப்போதைய மத்திய அரசும் பட்டினிச்சாவு, விவசாயிகள் தற்கொலை பற்றிய பிரச்சனையில் தவிக்கிறது.

உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கை வறுமையை ஒழிக்குமோ இல்லையோ வறியவர்களை கூண்டோடு ஒழிக்கும். அதிகார வர்க்கமும், நடுத்தர வர்க்கத்தினரும் கொட்டி குவித்து செல்வம் சேர்க்க உலகமயமாக்கல் பொருளாதாரம் உதவுகிறது. அவர்களது வீட்டின் வெளிப்புறங்களில் எச்சிலுக்காக காத்திருக்கும் நாய்களோடு சண்டையிட்டு பசியாற ஒரு கூட்டம் மனிதர்கள் தள்ளப்படுகிறார்கள். இந்த மனிதர்களின் பார்வை நாய்களை விட்டு; அதிகாரத்தின் மீது திரும்பினால்? புரிந்துகொள்வார்களா சம்பந்தப்பட்ட திட்ட வரைவாளர்களும், பொருளாதார மேதைகளும்? வறியவர்கள் ஒன்று திரண்டால் சமூகத்தை திருப்ப வல்லமை கொண்ட ஒரு ஆயுதம் வறுமை!

தமிழீழத்தில் சமாதானம் வருமா?

இலங்கை அரசும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் ஜெனிவாவில் நடத்திய பேச்சுவார்த்தை இணக்கமான முடிவுகள் எதுவுமற்று முடிந்துள்ளது. தங்களது ஆலோசனை குழுவின் கூட்டத்தை ரத்து செய்துவிட்டு புலிகளின் பிரதிநிதிகள் கிளிநொச்சி விரைந்தனர். இலங்கை அரசு தரப்பும் நாடு திரும்பியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையிலாவது மக்களின் அன்றாட அவலங்கள் தீர்ந்து நிம்மதி கிடைக்குமா என ஏங்கிய மக்கள் மீண்டும் தொடர்ந்து அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பேச்சுவார்த்தைக்கு சென்றவர்கள் நாடு திரும்பும் முன்னரே விமானத்தாக்குதலை தொடுத்து தனது இராணுவ வெறியை காட்டுகிறது இலங்கை அரசு. பேச்சுவார்த்தையில் தீர்வை உருவாக்கவேண்டும் என்பதில் இரு தரப்பும் நம்பிக்கை வைத்திருக்கிறதா? இனப்பிரச்சனைக்கு தீர்வு வருமா? என பல கேள்விகள் மீண்டும் எழுகிறது.

2001, ஜூலை 24 இல் கட்டுநாயகா விமானதளத்தில் தாக்குதலை தொடுத்து 12 விமானங்களை தகர்த்து இலங்கை அரசை கதிகலங்க வைத்தனர் விடுதலைப்புலிகள். இந்த இழப்பு இலங்கையின் விமானப் படைக்கு மட்டுமல்ல, இலங்கை பயணியர் விமான சேவை நிறுவனத்திற்கும் பலத்த பொருளாதார நட்டத்தை தந்தது. சுற்றுலா வருமானம் குறைந்து பொருளாதாரத்தில் ஓட்டை விழுந்த பிறகு யுத்த நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. உலகமே எதிர்பாராத விதத்தில் முதலில் வேலுபிள்ளை பிரபாகரன் வன்னியிலிருந்து யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதனால் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிலைக்கு தள்ளப்பட்டார். ரணில் விக்கிரமசிங்கே வவுனியாவிற்கு சென்று யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன் வழி புலிகள் இராஜதந்திர அரங்கில் தங்களது தடங்களை ஆழமாக பதிய துவங்கினர். ஓஸ்லோ, கொழும்பு, புது தில்லி, வன்னி, லண்டன் என முக்கிய நகரங்களுக்கு பறந்து இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை உருவாக்கிய நார்வே நாடும் அதில் முக்கிய பங்கெடுத்த நார்வே அமைச்சர் எரிக் சோல்ஹெம் அவர்களும் யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்களின் பாராட்டுதலை பெற்றனர். புலிகள் இயக்கம் பெரிய வெற்றியை இராணுவ ரீதியாக பெற்றும் எதற்காக சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்?

செப்டம்பெர் 11 அமெரிக்காவின் இரட்டைக்கோபுர தாக்குதல்களுக்கு பின்னர் உலகில் விடுதலைப் போராட்டங்களையும் தீவிரவாத கண்ணாடியில் உலக ஆதிக்க அரசுகள் பார்க்க துவங்யிருந்த நேரமது. இராணுவ தாக்குதல் நடவடிக்கையில் தொடர்ந்து புலிகள் இயக்கம் ஈடுபட்டு வந்தால் "பயங்கரவாதிகள்" என்ற இலங்கை அரசின் பரப்புரைக்கு உலக அரங்கில் ஆதரவு பெருக வாய்ப்பிருந்தது. அதனால் புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகள், ஆதரவு அமைப்புகள், வாய்ப்புகள் இலங்கை அரசின் இராஜதந்திர வலையில் இறுக்கப்பட வாய்ப்பிருந்தது. பிரச்சனைகளை எதிர்கொண்டு தங்களது இலட்சியத்தில் செல்ல புலிகள் இயக்கத்திற்கு புதிய அணுகுமுறைகள் அவசியமானது. இனப்பிரச்சினையின் துவக்க காலம் முதல் பேச்சுவார்த்தைக்கு சென்றிருந்தாலும் புதிய அணுகுமுறையை இந்த முறை புலிகள் இயக்கம் கடைபிடிக்க துவங்கியது. இராணுவ ரீதியாக இலங்கை அரசை சமநிலையில் கொண்டுவந்து சமாதான மேசைக்கு இழுத்துச் சென்றது பிரபாகரன் இட்ட கையெழுத்து.

தாய்லாந்து, ஜப்பான், ஐரோப்பா என தொடர்ந்த பயணங்களை தங்களது இராஜதந்திர நடவடிக்கை களங்களாக புலிகள் மாற்றுவதை கண்ட இலங்கை அரசு கதிகலங்கியது. ஐரோப்பா பயணங்களின் போது பல நாட்டு அமைச்சர்கள், நிறுவனங்களை சந்தித்தது மட்டுமல்லாமல், ஆப்பிரிக்க பயணங்களையும் புலிகளின் பிரதிநிதிகள் மேற்கொண்டனர். சர்வதேச அரங்கில் தமிழர்களின் பிரச்சனை பற்றி பேசக்கூடிய ஒன்றான நிலைக்கு தள்ளப்பட்டது. புலம்பெயர் தமிழ் மக்களும் பலவித நிகழ்ச்சிகளால் பரப்புரைகளை மேற்கொண்டனர்.

இந்த பிரச்சனைகளால் பதறிய படியே இந்திய அரசின் உதவியை நாடிய இலங்கை அரசு அதில் வெற்றியும் கண்டது. ஐரோப்பாவின் முக்கிய நகரான பிரஸ்ஸல்ஸ் நகரில் அமைந்துள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மாற்றப்பட்டு இலங்கை அரசுக்கு உதவக்கூடிய அதிகாரிகள் அமர்த்தப்பட்டனர். ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இலங்கைக்கு ஆதரவான நடவடிக்கைகளை உருவாக்கும் பணிகள் வேகமாக நடந்தன. இந்திய உளவு அமைப்பான 'ரா' இந்த நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியதாக ஆய்வாளர்கள் கருதப்படுகிறது. இலங்கை தனது உளவு வேலைகளை நகர்த்தி பேச்சுவார்த்தைக்கு சென்று வந்த புலிகளின் கிழக்கு மாகாண தளபதி கருணா அம்மானை வளைத்துப் போட்டு புலிகள் இயக்கத்தில் பிரச்சனையை உருவாக்க துவங்கியது. தொடர்ந்து கருணா புலிகள் இயக்கத்தால் நீக்கப்பட்டு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டர்.

கருணாவை தனது துருப்புச் சீட்டாக பயன்படுத்தி அரசியல் விளையாட்டை துவக்கிய இலங்கை அரசு புலிகளின் முக்கிய தளபதிகள், ஆதரவாளர்கள் என பலரை கொன்று குவித்தது. யுத்தகாலத்தில் இழக்காத புலிகள் ஆதரவாளர்களின் உயிர் சமாதான ஒப்பந்த காலத்தில் பறிக்கப்பட்டது. மறைந்திருந்த தாக்குதலுக்கு பலியான புலிகளின் முக்கிய தளபதிகள் பலர் அவர்களில் கௌசல்யன் குறிப்பிடத்தக்கவர். கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத் திருப்பலியில் பங்குகொண்ட போது தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்ட பாரளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம். கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இராணுவ ஆய்வாளரும் பத்திரிக்கையாளருமான தராக்கி என்கிற சிவராம். பல வழிமுறைகளில் இராணுவம் மற்றும் துணைக்குழுக்களின் தாக்குதலில் படுகொலை செய்யாப்பட்ட பல ஆயிரம் பொதுமக்கள். படுகொலைக்கும் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளான இளம்பெண்கள். விமான தாக்குதலுக்கு பலியான செஞ்சோலைக் குழந்தைகள் என தமிழர் தரப்பில் பாதிப்பின் பட்டியல் நீளமானது.

பதிலுக்கு இலங்கை சிங்கள தரப்பில் கொல்லப்பட்ட இராணுவ தளபதிகள், இராணுவ பல நூறு சிப்பாய்கள், பொதுமக்கள், லட்சுமண் கதிர்காமர் என பாதிப்பின் பட்டியல் நீளுகிறது. யுத்தத்தினால் இலங்கை அரசின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுக்கொண்டிருக்கிறது. இலங்கை அரசினால் புலிகள் இயக்கத்தை இராணுவ ரீதியாக வெல்லும் ஆற்றல் இலங்கை இராணுவத்திடம் இல்லை என்பதை போர்க்கள நிலமைகள் விளக்குகிறது. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உலக நாடுகளும் நிறுவனங்களும் வழங்கிய நிதியைக் கூட பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வழங்காமல் ஊழலில் திளைக்கிறார்கள் தென்னிலங்கையின் அதிகார மற்றும் அரசியல் வர்க்கம். சுனாமி நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்படுத்த உருவாக்க ஒத்துக்கொண்ட அமைப்புமுறையை உருவாக்கவிடாமல் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து அரசியல் மாற்றம் உருவாக்கினார் சந்திரிகா குமாரதுங்கா. ரணிலின் ஆட்சி அப்புறப்படுத்தப்பட்டு இலங்கை இனப்பிரச்சினையில் தீவிர இனவாத அணுகுமுறையை கடைபிடிக்கிற மகிந்தா ராஜபக்சாவின் ஆட்சி உருவானது. யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை கேள்வியெளுப்பும் விதமாக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவு, இனப்பிரச்சினையில் சிக்கலை உருவாக்கியது. இடையில் மாவிலாறு அணை, சம்பூர் என பல முக்கிய பிரச்சினைகள் போராக வெடித்தது. இருந்தும் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை இருதரப்பும் முறித்ததாக அறிவிக்கவில்லை. வடகிழக்கு இலங்கையில் நடந்துவந்த தாக்குதல்கள் தென்னிலங்கைக்கும் விரிவாக தொடங்கியது.

இந்த சூழலில் தான் சமாதான மேசைக்கு இருதரப்பையும் அழைத்து வந்தது நார்வே தரப்பினர். மனிதாபிமான பிரச்சனைகளை தீர்க்காமல் இனப்பிரச்சனையின் முக்கிய விடயங்கள் பற்றி பேச தமிழர் தரப்பினர் மறுத்தனர். தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் முக்கிய பாதையான A9 நெடுஞ்சாலையை மூடி தமிழர் பகுதிகளுக்கு உணவு, கட்டுமான பொருட்கள், விவசாயப் பொருட்கள் செல்லாதவாறு தடுத்து வைத்துள்ளது இலங்கை அரசு. இலங்கைத்தீவு முழுதும் தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதி, ஒற்றை நாடு என்ற இலக்கில் தான் தீர்வு என சொன்னதையே சொல்லி வருகிறது இலங்கை அரசு. அதற்கு ஆதரவாக புதுதில்லியின் அதிகாரவர்க்கமும் சில பார்ப்பனீய பத்திரிக்கைகளும் உண்மை நிலையை மறைத்து தனது அதிகாரப்பசிக்கு பொய்மூட்டைகளை பரப்பிவருகிறது. இலங்கை முழுவதும் ஒரே நாடாக தான் இருக்கிறதா? அப்படியானால் தனது ஆளுகைக்கு உட்பட்ட நாட்டின் மக்களை விமானத்தாக்குதல், பொருளாதாரத் தடைகள் என கொன்று குவிப்பது ஏன்? இலங்கைக்கும், வடக்கு பகுதிக்குமாக பல தடவைகள் சென்று வந்ததில் கண்ட உண்மை இலங்கை என்கிற தீவில் இரண்டு ஆட்சிகள், நிர்வாகம், சட்டம் செயல்படுகிறது. ஒன்று தென்னிலங்கையை ஆளுகிற மகிந்தராஜபக்சா அரசு. வடக்கிலும் கிழக்கிலுமாக கணிசமான பகுதியை உள்ளடக்கிய தமிழீழ விடுதலைப்புலிகளின் அதிகாரமும் ஆட்சியும் இன்னொன்று. சுமார் 15 அண்டுகளாக தனது கட்டுப்பாட்டில் இல்லாமல் வேறு ஒரு அறிவிக்கப்படாத நாடாக காவல்த்துறை, நீதிமன்றம், கல்வி நிலையங்கள், அமைப்புகள், இராணுவ பலம் என எழுந்து நிற்கிற மக்களை அங்கீகரிப்பது தான் இலங்கையின் சமாதானத்திற்கான தொடக்கமாக அமையமுடியும்.

இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வாக இந்தியாவின் பஞ்சாயத்து அமைப்புமுறையை காட்டி இலங்கை இனவாத அரசு தப்பிக்கப் பார்க்கிறது. பசியின் கொடுமையில் பதறுபவனுக்கு பஞ்சு மிட்டாய் கடையை காட்டும் இந்த வித்தை இந்தியாவின் பார்ப்பனீய அதிகாரவர்க்கத்திடமிருந்து இலங்கைக்கு இடம்பெயர்ந்திருக்கிறது. சுயாட்சி அதிகாரம் கூட பகிர்ந்து கொள்ள மனமில்லாத சிங்கள இனவாதம் இலங்கைத் தீவை பிரிந்து தமிழீழத்தை உருவாக்க முன் வருமா என்கிற கேள்வி சுனாமி அலையாய் எழுகிறது. அடக்குமுறையை கையாண்டவர்கள் எந்த நாட்டிலும் தாமாக முன் வந்து சுதந்திரநாட்டை உருவாக்கினார்களா? வரலாற்றில் அப்படிப்பட்ட நிகழ்வுகள் மிகவும் அரியது. போராட்டமும், மக்களின் எழுச்சியும் அடக்குமுறையாளர்களை பணிய வைத்திருக்கிற வரலாறுகள் தான் ஏராளம். தாமதமாக இருந்தாலும் காலச்சக்கரம் இப்போது தமிழர்கள் பக்கம் சுழல்கிறது. முந்தைய காலங்களை விட தற்போது உலகநாடுகள் கவனம், ஐக்கிய நாட்டு சபையின் அமைப்புகளின் பார்வை என இலங்கைத் தீவில் மையம் கொள்கிறது. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவதாக பல அறிக்கைகளும், கண்டனங்களும் எழுகிறது. ஐ.நா மனித உரிமை கண்காணிப்பு மையம் ஒன்றை இலங்கையில் நிரந்தரமான திறக்க கோரிக்கைகள் எழுகின்றன. இவை அனைத்தும் இலங்கை அரசு மீது உலகம் தனது பார்வையை வைத்திருப்பதன் அறிகுறி.

தமிழர்களின் ஊடகங்களும், மனித உரிமை மையங்களும் பல மொழிகளில் உலக நாடுகளின் மக்களுக்கு தங்களது அவலங்களை கொண்டு செல்வது இன்றைய காலத்தின் அவசியம். ஐ.நா அமைப்புகள், ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமை குழுவினருக்கு தமிழ் மக்களின் அவலங்களை தொடர்ந்து முறையிடல் இன்றைய உலக அரசியல் சூழலில் மிகவும் அவசியமாகிறது. நவம்பர் 27ல் மாவீரர் நாளில் பிரபாகரன் ஆற்றுகிற உரைக்காக தமிழீழ மக்கள் மட்டுமல்ல நாடுகளின் தலைமையும் காத்திருக்கிறது. உலகமெங்கும் தமிழர்கள் தங்களது மண்ணின் விடுதலைக்காக மடிந்த வீரர்களை வணங்க ஆயத்தமாகி வருகிறார்கள். அவர்களது ஏக்கமும் கனவும் சுதந்திர தமிழீழமும், சமதான வாழ்வும். ஈழத்தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் இந்த மாவீரர் நாள் முக்கியத்துவம் பெறுமா?