Saturday, November 11, 2006

முற்றத்தில் கூடும் உறவுகள்...

சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னால் சென்று உங்கள் குடும்பத்தை நினைத்துப் பாருங்கள். எவ்வளவு எளிமையாக, ஒவ்வொருவர் மீதும் கவனம் செலுத்தி அன்புடன் கூடி, குலவி மகிழ்வுடன் கொண்டாடியது நமது குடும்பங்கள். சிறு சண்டைகள் வரினும் அதன் பின்னர் உறவாடுதலில் தனி சுகமான பண்பு நிறைந்தவை அந்த காலம். கூட்டுக்குடும்பமாக கூடி உறவாடியதில் தான் எவ்வளவு நன்மைகள். பிரிவின் துயரங்களில் அருகிருந்து ஆறுதல் தர அப்பா, அம்மா, சகோதர/ரிகள், சித்தப்பா,பெரியப்பா, தாத்தா, பாட்டி என உறவுகள் கூடி விழாக்களை கொண்டாடுவதில் தான் எத்தனை சுகம்.

ஒரே வீட்டிற்குள் மட்டுமா இந்த உறவு பிணைப்பு? அண்டை வீட்டில் இருக்கும் அனைவருடனும் இறுக்கமான தொடர்புகள், ஊரே உறவான காலம். நம் வீட்டில் விசேசமாக பண்டம் பலகாரங்கள் செய்தால் ஊரே சுவைப்பதும், அடுத்த வீட்டில் பணியாரம், கொழுக்கட்டை மணத்தால் நமக்கு வருவதும் என எவ்வளவு ஒரு பாசப்பிணைப்பு. இது வெறும் வாயை நிரப்பும் நடைமுறையா? இல்லை இது உணர்வுகளின் பிணைப்பில் உறவுகளின் சங்கமம். அந்த காலங்களில் வீடுகளை சுற்றி பெரும்பாலும் சுற்றுச்சுவர்கள் இல்லை. வேலிப்படல்கள் கூட இருக்காது. வீட்டின் முன்னால் அல்லது பல வீடுகளுக்கு பொதுவான முற்றம் இருக்கும். இந்த முற்றம் தான் சுற்றத்தினர் அன்றாடம் கூடுமிடம்.

சுற்றத்தினர் அனைவரும் ஒன்று சேரா விடினும் அவர்கள் பற்றிய கதைகள் அந்த கூடலில் வரும். அந்த கதைகள் நல்லவையோ கெட்டவையோ அனைத்தும் அம்பலமாகும். வாய் நிறைய வெற்றிலையுடன் பாட்டிமார்கள் கதையளப்பது பார்க்க அது ஒரு தனி சுகம். இன்று வீட்டை கட்டும் முன்னரே சுற்றுச்சுவரை எழுப்புகிறோம். முற்றங்கள் துண்டாக்கப்பட்டு மனைகளாக பணம் பார்க்கிறோம். முதியோர்களுக்கு தொலைக்காட்சி பெட்டிகளும், முதியோர் இல்லங்களும் தந்திருக்கிறோம். அண்டை வீட்டில் நடப்பாது என்ன என தெரியாத தனி உலகங்களில் தனி மனிதர்களாக நடக்கிறோம். இந்த வளர்ச்சி/வீழ்ச்சி ஒரே வீட்டினுள்ளும் தொடர்கிறது. தனி மனிதர்களாக மாறும் நாம் என்று எப்படி ஒன்று சேர்வோம்?

முற்றத்தின் மறுமுனையில் வாண்டுகளின் விளையாட்டுக் களம். விளையாட்டுகளில் தான் எத்தனை வகைகள். கபடி, பட்டம் விடுதல், பந்தாட்டம், கில்லி, கோலி, வண்டி உருட்டல், வீடு செய்தல், வட்டு விளையாட்டு, சீட்டுக்கட்டெறிதல், ஆடு புலி ஆட்டம், பல்லாங்குழியாட்டம் என பல வகை விளையாட்டுகள். இவை அனைத்தும் கூடி ஒன்று சேர்ந்து விளையாடும் சுகம் தந்தது. நமது சமூகத்தின் கட்டமைப்பிலிருந்து, தேவைகளிலிருந்து பிறந்தவை. இன்று கிரிக்கெட், டி.வி தொடர்கள் என முடங்கிக் கிடக்கிறது விளையாட்டு. எதிர்கால தலைமுறையினர் கூடி உறவாட எந்த களம் நமக்கு இருக்கிறது? இணையத்தளம்? தொழில்நுட்ப சாதனங்கள்? இவை மட்டுமா நம் உறவு? செய்திகளை பரிமாறுவதற்கும் உணர்வுகளை புரிந்து உணர்வதற்கும் வேறுபாடுகள் உண்டு. இதை நம் எதிர்கால தலைமுறை எப்படி எதிர்கொள்ளுமோ.

நோய்வாய்ப்பட்டால் உறவுகள் அனைவரும் வந்து பார்த்து ஆறுதல் சொல்ல வருவார்கள். அந்த ஆறுதல்களும் அருகிருப்பும் மனதை திடப்படுத்தி சுகமாக்கும். பேராபத்தெனில் ஊரே துடித்து துன்புறும். இன்ப விழாக்கள் சொற்கமான கொண்டாட்டங்களாக சிரிப்பும் கழிப்புமாக நடைபெறும். இன்று விழாக்களும் சம்பிரதாய சடங்குகளாகி வறண்டு போனது. நோயெனில் பக்கத்து வீட்டார் வந்து போவதே வீண் தொந்தரவாக பார்க்கிறோம். அருகிருந்து ஆறுதல் சொல்ல ஆட்கள் அவசியமில்லாதது போல மருத்துவமனையின் சொகுசு அறையில் நாட்கள் நகர்கிறது.

நம் சமூகம் மாறி வருகிறது. அவசியமான பல மாற்றங்களாக இருப்பினும், வாழ்வில் இருந்த நல்ல பல விடயங்களை சந்தைப் பொருளாதாரத்தில் தொலைத்து வருகிறோம். பணம்/பொருள் சேர்ப்பது மட்டுமே மனித மனங்களில் இலக்கா வளர்கிறது. கடல் கடந்து கடினமாக உழைத்து வீடு வந்து சேர்கிற செல்வம் நம்மை பல விதமாக மாற்றுகிறது. பல நல்லவை தான், இருப்ப்பினும் இருந்த நல்லவைகளையும் தொலைக்கிறோம். எங்கேப் போகிறோம் மனிதர்கள் நாம்?

வீடு பாதுகாப்பு என்ற பெயரில் சுவர் கட்டி நம்மை நாமே சிறைபடுத்தும் இந்த முறை சரி தானா? சமூகத்தை, உறவை கட்டியெழுப்ப நாம் என்ன செய்யப்போகிறோம்?

8 பின்னூட்டங்கள்:

வசந்த் said...

தேவையற்ற சொகுசும், சமுதாய கவுரவமும் மனித உறவுகளுக்கு இடையே இருக்கும் இணக்கத்தையும் அன்பையும் தொலைக்கின்றன. பல வருடங்களாக என் அடி மனதில் உறுத்திக் கொண்டு இருந்ததை உங்கள் பதிவில் பார்க்கிறேன்.

// எவ்வளவு எளிமையாக, ஒவ்வொருவர் மீதும் கவனம் செலுத்தி அன்புடன் கூடி, குலவி மகிழ்வுடன் கொண்டாடியது நமது குடும்பங்கள் //

இது போன்ற பலதை இழக்க வைத்துள்ளது இந்த நாகரீக வாழ்க்கை.

அருகாமையில் இருந்து அனைத்து வீடுகளில் இருந்தும் வருவார்கள் ஆகாசவானி செய்திகள் கேட்க. கேட்டு முடிந்தவுடன் பலவற்றை விவாதிப்பார்கள். உண்மையாகவே அருமையான காலங்கள் அவை. அப்பொழுது எல்லாம் வீட்டின் முக்கியமான முடிவுகளுக்கு முன் இது போன்ற சுற்றத்தாருடன் ஒரு விவாதம் இருக்கும். இன்றோ ஜோசியம் மட்டுமே முடிவுகளை எடுகின்றது.

தொலைக்காட்சிப் பெட்டிகள் வாழ்க்கையின் பெரும்பாலன நேரத்தை ஆக்கிரமிக்கின்றன. நீங்கள் குறிப்பிட்ட அத்தனை இழப்புகளுக்கும் பெரும்பான்மை காரணம் என்று ஒன்றை சுட்ட முடியும் என்றால் அது தொலைக்காட்சிப் பெட்டியே.

இதனால் பெரிதும் பாதிப்பது பெரியவர்கள்தான். அவர்களுக்கு விவாதம் என்றாளே அலாதிப் பிரியம். இன்று அவர்கள் வாயைத் திறந்தாலே (கூட்டு குடும்பத்தில் கூட) "கிழடு பொழம்ப ஆரம்பித்து விட்டது" என்கிறார்கள், தாங்களும் ஒரு நாள் முதுமை அடையப் போகிறோம் என்பதை உணராமல். முதியவர்களோ தனிமையில் வாடுகிறார்கள்.

இத்தனை அன்பை, பாசத்தை தொலைத்து என்ன தேடப் போகிறோம் என்று யோசித்தபோது தான் உணர்ந்தேன். (வெற்று) கவுரவம் எனும் வார்த்தைக்கு இதில் எவ்வளவு முக்கியத்துவம் உள்ளது என்பதை.


//ஊரே உறவான காலம். // சத்தியமான வார்த்தைகள்.. சிறு சிறு பினக்குகள் இருந்தாலும் அனைவருக்கும் இடையே ஒரு ஆத்மார்த்த உணர்வு இருப்பதை காணலாம். இதுவும் கிராமத்தில் மட்டுமே. ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும் போகும் போதும் பார்க்கும் அனைவரும் "வாப்பா, எப்படி இருக்க..." என்பார்கள்.

அரை நகரங்களாக மாறிவரும் கிராமங்களில் இன்னும் மிச்சம் இருக்கும் ஒன்று இரண்டையும் தொலைத்து விட்டு நூறு சதவிகித தொலைக்காட்சி யுகத்திற்குள் நுழைந்தவுடன், வீடு முழுவதும் புரஜக்டரும், ஐபாடும், எச்டி டிவியும் மனதிற்கு வெறுமையை மட்டுமே தருமே அன்றி மகிழ்ச்சியை அல்ல.

வசந்த்

bala said...

//என்றால் அது தொலைக்காட்சிப் பெட்டியே.//

திரு அய்யா,

சினிமாவுக்கும் இதில் பெரிய பங்கு இருக்கிறது.

ஆமாம்,திரு அய்யா, இந்த சமூக சீரழிவிற்க்கு காரணம் எது என்பதில் குழப்பம் நீடிக்கிறது.அமெரிக்க பார்ப்பனீய முதலாளித்துவம் தூண்டிவிடும் consumerism அல்லது இந்திய பார்ப்பனீய முதலாளித்துவத்துக்கு அடிவருடும் அதிகார வர்க்கமா? இல்லை, பகவத் கீதையா?
கொஞ்சம் விளக்கமா சொன்னா கேட்டுக்கிறேன்.

பாலா

Hariharan # 03985177737685368452 said...

எல்லோருக்குமே எல்லாப் பொருட்களும் அவசியமானதாகிப் போனதில் மாதாந்திர EMI, பட்ஜெட் என வாழ்வை பொருளாதாரத்தை மட்டும் முன்னிறுத்திய பாலான்ஸ் அற்ற Balance sheet ஆக்கியிருக்கிறோம்.

வாழ்க்கைக்க்குப் பொருள் என்பது போய் பொருளுக்கு வாழ்க்கை என்பதை பிரதானப்படுத்தி இருக்கிறோம். இதுமாதிரி வாழ்க்கை பொருளற்றது என்பதை உணராது இருக்கிறோம்.

எல்லாமே over head costs என்று ஆக்கியபின் வீட்டின் old heads சுமையாவதில் வியப்பேதும் இல்லை!

மனிதன் உயர்திணை என்று இலக்கணம் சொல்கிறது. மனிதன் உயர்ந்தவன் என்பது அவன் வசமுள்ள அஃறிணைப் பொருட்களால் என்கிறது இன்றைய சமூக வாழ்வுமுறை!

பொருளீட்டி, பொருட்கள் சேர்த்துப் பொருளற்ற வாழ்க்கை வாழ்கிறோம்!

வருத்தம் தான் திரு. இதை இந்த உணர்வை அடிக்கடி வெளிப்படுத்தினால்
அப்சலீட் ஆன பெர்சனாலிட்டி ஆகும் அபாயம் உள்ளது!

Anonymous said...

தொலைக்காட்சி பெட்டிகள் வாழ்க்கை முறையையே புரட்டி போட்டுவிட்டது. ஒர்வருக்கொருவர் பேசுவதே குறைந்து போய்விட்டது.

யாராவது தற்கொலை எண்ணிக்கையை கணக்கெடுத்திர்க்கிறார்களா? எனக்கென்னவோ தொ.பெ வரவால் மன அழுத்தமும் அதன் தொடர்பான தற்கொலை எண்ணிக்கையும் அதிரிக்கும் என்றே தோன்றுகிறது.

மெகா சீரியல் கொடுமை வேறு. மக்களை ஒரு சைக்கோ நிலைக்கு கொண்டு செல்கிறது.

bala said...

//மெகா சீரியல் கொடுமை வேறு. மக்களை ஒரு சைக்கோ நிலைக்கு கொண்டு செல்கிறது//

கொட்டாங்கச்சி அய்யா,

மிகவும் சரியாக சொன்னீர்கள். மெகா சீரியல்கள் கொடுமையைவிட மோசமான கொடுமை எதுவும் இல்லை.

பாலா

thiru said...

//அரை நகரங்களாக மாறிவரும் கிராமங்களில் இன்னும் மிச்சம் இருக்கும் ஒன்று இரண்டையும் தொலைத்து விட்டு நூறு சதவிகித தொலைக்காட்சி யுகத்திற்குள் நுழைந்தவுடன், வீடு முழுவதும் புரஜக்டரும், ஐபாடும், எச்டி டிவியும் மனதிற்கு வெறுமையை மட்டுமே தருமே அன்றி மகிழ்ச்சியை அல்ல.

வசந்த்//

உண்மை தான் வசந்த்.

thiru said...

// Hariharan # 26491540 a dit…
எல்லோருக்குமே எல்லாப் பொருட்களும் அவசியமானதாகிப் போனதில் மாதாந்திர EMI, பட்ஜெட் என வாழ்வை பொருளாதாரத்தை மட்டும் முன்னிறுத்திய பாலான்ஸ் அற்ற Balance sheet ஆக்கியிருக்கிறோம்.

வாழ்க்கைக்க்குப் பொருள் என்பது போய் பொருளுக்கு வாழ்க்கை என்பதை பிரதானப்படுத்தி இருக்கிறோம். இதுமாதிரி வாழ்க்கை பொருளற்றது என்பதை உணராது இருக்கிறோம்.//

மிகவும் உண்மை ஹரிகரன். நம் வாழ்வு எங்கே செல்கிறதோ...ம்ம்

//எல்லாமே over head costs என்று ஆக்கியபின் வீட்டின் old heads சுமையாவதில் வியப்பேதும் இல்லை!//

இது வேதனை.

//மனிதன் உயர்திணை என்று இலக்கணம் சொல்கிறது. மனிதன் உயர்ந்தவன் என்பது அவன் வசமுள்ள அஃறிணைப் பொருட்களால் என்கிறது இன்றைய சமூக வாழ்வுமுறை!//
பொருள் சார்ந்த வாழ்வின் முடிவு தற்கொலை, விரக்தி, அழுத்தம் என தொடர்கிறது. இதற்கு பல நாடுகளில் உதாரணங்களை காணலாம். நாமும் மேற்கத்திய உலகின் பொருளாதார நடைமுறையை தான் வளர்ச்சி என கொண்டாடுகிறோம். :(

//பொருளீட்டி, பொருட்கள் சேர்த்துப் பொருளற்ற வாழ்க்கை வாழ்கிறோம்!//
வேதனையான உண்மை

//வருத்தம் தான் திரு. இதை இந்த உணர்வை அடிக்கடி வெளிப்படுத்தினால்
அப்சலீட் ஆன பெர்சனாலிட்டி ஆகும் அபாயம் உள்ளது!//
என்ன செய்வது விழிப்பாக இருக்க வேண்டுமே!

thiru said...

//கொட்டாங்கச்சி a dit...
தொலைக்காட்சி பெட்டிகள் வாழ்க்கை முறையையே புரட்டி போட்டுவிட்டது. ஒர்வருக்கொருவர் பேசுவதே குறைந்து போய்விட்டது.

யாராவது தற்கொலை எண்ணிக்கையை கணக்கெடுத்திர்க்கிறார்களா? எனக்கென்னவோ தொ.பெ வரவால் மன அழுத்தமும் அதன் தொடர்பான தற்கொலை எண்ணிக்கையும் அதிரிக்கும் என்றே தோன்றுகிறது.//
கேரளாவில் தற்கொலைகள் அதிகரித்திருக்கிறதாக புள்ளிவிபரம் சொல்லுகிறது

//மெகா சீரியல் கொடுமை வேறு. மக்களை ஒரு சைக்கோ நிலைக்கு கொண்டு செல்கிறது. //
அழவேண்டியே பார்க்கிற தொடர்கள் இவை :(

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com