Saturday, April 29, 2006

நடுநிலையும் தினமலர் நாளிதழும்

தினமலர் பத்திரிக்கையின் நடுநிலை பற்றி இன்று வந்த வலைப்பதிவுகள் படித்த பின்னர் சில பழைய நினைவுகளும் வருகிறது.

1980களின் இறுதியில் திடீரென தமிழகம் முதல் உலகமெங்கும் தமிழர்கள் மத்தியில் பரபரப்பு தோன்றியது. காரணம் தினமலர் வெளியிட்ட 'உண்மை உண்மையைத் தவிர வேறில்லை' பாணியிலான ஒரு செய்தி. அந்த செய்தி விடுதலைப் புலிகள் தலைவர் பிராபகரன் அவரது தளபதிகளில் ஒருவரால் கொல்லப்பட்டதாக முதல் பக்கத்தில் வெளிவந்தது. இந்த செய்தியை முதலில் வெளியிட்டது தினமலர் என அறிவிப்பு வேறு. மறுநாள் பத்திரிக்கையில் பிரபாகரன் அன்றைய தினமலர் பத்திரிக்கையை கையில் வைத்திருக்கும் படம் வெளிவந்ததும் இந்த முறை தினமலரில் அல்ல. இந்த உறுதிப்படுத்தாத செய்தியை ஒரு போராளி இயக்கத் தலைவரை பற்றி வெளியிட தினமலருக்கு வந்த அவசரம் என்னவோ? இன்னும் விளங்கவில்லை! அதற்கு வருத்தம் தெரிவித்ததா தினமலர்? பத்திரிக்கை தர்மம் இது தான்!

பாபர் மசூதி x இராமர் கோவில் பிரச்சனையில்ம் தடையை மீறி திரு.அத்வானி அவர்கள் இரதயாத்திரை சென்ற போது பீகார் அரசால் கைது செய்யப்பட்டார். கலவரம் வருமோ? என்ன நடக்கப் போகிறதோ என நாடே பதட்டத்தில் இருந்தது. அந்த அந்திசாயும் வேளை தினமலர் வழக்கத்தை மீறி மாலைப்பதிப்பு வெளியிட்டு இலவசமாக தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் வீசியது. தொடர்ந்து மக்கள் மனங்களில் வெறி பரவியது.

தினமலர் தலைப்பில், செய்திகளில் இருக்கிற ஆதிக்க எண்ணமும், அவசரக் குடுக்கைத் தனமான கருத்து திணிப்புகளும் என்று தான் முடிவுக்கு வருமோ? சார்புத்தன்மையிலிருந்து விலகும் வரை தினமலருக்கு நடுநிலை நாளிதழ் என்ற அடைமொழி அவசியமா?

அதுவரை, எழுதுகோலின் அடையாளத்தை சிதைக்கும் வரிசையில் தினமலரும் ஒரு ஊடகம் அவ்வளவே!

மதத்தை வேரறுத்த தோள்சீலைப் போராட்டம்

உன் சாதி என்ன? எத்தனை பேர் உனக்கு ஆதரவாக ஓட்டளிப்பார்கள்? சாதியின் உட்பிரிவுகளில் எத்தனை பிரிவுகள் உனக்கு ஆதரவாய் உள்ளன? என்பன போன்ற கேள்விகள் அனைத்துத் தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் வேட்பாளர்களுக்கான நேர்காணலில் கேட்கப்பட்டவை. சென்னை ஐ.ஐ.டியில் தாழ்த்தப்பட்டவர் என்பதற்காகவே ஆதிக்கச் சக்திகளால் பந்தாளப்படும் பேராசிரியர் வசந்தா கந்தசாமி, தமிழகச் சாதிய ஒடுக்குமுறையின் கோரமுகத்தைக் காட்டி நிற்கும் பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டகாச்சியேந்தல் ஊராட்சிகள், இந்தியக் குடியரசு நாளின் போது கொடியேற்றிய குற்றத்திற்காக தாழ்த்தப்பட்ட ஊராட்சித் தலைவருக்கு விழுந்த செருப்படிகள், மலத்தைத் தின்னச் செய்த திண்ணியங்கள், தாழ்த்தப்பட்ட சாதிக் கட்சிகளுக்கு தமிழகத்தின் பெருங்கட்சிகள் வழங்கிய தேர்தல் தொகுதி ஒதுக்கீட்டுக் கூத்துக்கள், ஆகியவை சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் இரண்டாயிரம் ஆண்டுகளாய் தமிழகத்தில் நிகழும் சாதிய வன்கொடுமையின் வெளித் தெரியும் எச்சங்களாகும்.

தமிழகத்தின் உள்ளடங்கிய சிற்றூர்களில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் சில பொழுதுகளில் மட்டுமே ஊடகங்களால் வெளிக் கொணரப்படுகின்றன. சமூக அமைதி என்பதைக் காரணம் காட்டி பெரும்பாலான நிகழ்வுகள் ஆட்சியாளர்களாலும், ஆதிக்க சக்திகளால் நடத்தப்படும் ஊடகங்களாலும் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன. மனுவின் வர்ணாசிரமக் கொடுமையை முன்னிறுத்திய இந்தியச் சட்டங்களும், நீதிமன்றங்களும், அதிகார மையங்களும் சாதிய அடையாளங்களை ஊக்குவிப்பதிலும், அதன் அடிப்படைக் கருத்தியலை நீர் ஊற்றி வளர்ப்பதிலும்தான் முழுமூச்சுடன் அக்கறை காட்டுகின்றன.

சாதியத்தின் கொடுங்கிளைகளை வெட்டி எறிவதற்கு, வெகு சில முற்போக்கு சக்திகள் முனைந்து போராடிக் கொண்டிருக்கின்றன. இரண்டு படி முன்னேறினால், நான்கு படிகள் பின்னே சரிகின்றன நமது முயற்சிகள். வரலாற்றின் போக்கில் ஆங்காங்கு நிகழ்ந்த பல்வேறு எதிர்க்குரல்களும், கலகங்களும் தான் சமூகத்தை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கின்றன. என்பதையும் நாம் மறந்துவிடலாகாது. எத்தனையோ தடைகள் நம்மை நிலைகுலைய வைத்தபோதும் தொடர்ச்சியான போராட்டங்களும், எழுத்து மூலமான கருத்துப் பரவல்களும் ஆங்காங்கு நிகழ்ந்து கொண்டிருக்கின்றன எனும் போது மாபெரும் மலையையும் மடுவாக்க இயலும் என்ற நம்பிக்கை ஒன்றுதான் முற்போக்கு இயக்கங்களையும், சக்திகளையும் இன்னும் இயங்கச் செய்து கொண்டிருக்கிறது; இனியும் இயங்கச் செய்யும்.

முற்போக்கான பல்வேறு செயல்பாடுகளுக்கு முன்னுதாரணமாய்த் திகழும் தமிழகம், பொது நலத்துடன் சமூக நீதிக்குப் பாடுபட்ட பல்வேறு தலைவர்களைத் தற்போது சாதிய அடையாளங்களுக்குள் அடைத்து வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இது நிகழ்காலத் தமிழகத்தின் அவலப்போக்கிற்கு மிகச் சிறந்த சான்றாகும். சாதிய ஏற்றத்தாழ்வுகளால் சிக்கிச் சீரழிந்து கொண்டிருந்த தமிழகம், அவ்வப்போது எதிர் கொண்ட கலவரங்களால் பல்வேறு வரலாற்றுப் பக்கங்களை தனக்குள் பதிந்து வைத்திருக்கிறது. உயிர்களை உடமைகளை உரிமைகளை இழந்து பிறந்த மண்ணில் அகதிகளாய் தமிழ்ச் சமூகத்தின் பெரும்பகுதி வாழ்ந்த கொடுமையை எண்ணிப்பார்த்தால், உயிர்போயினும் அந்தக் கொடுமை இனி ஒருக்காலும் நடக்க அனுமதிக்கக்கூடாது என்பதாகவே நமது வைராக்கியம் இரும்பு உருக்கொள்கிறது.

ஒரு காலத்தில் ஒவ்வொரு சாதியினரும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? எங்ஙனம் ஆடைகள் உடுத்த வேண்டும்? என்றெல்லாம் விதிகள் வகுத்து பார்ப்பதும, தொடுவதும் தீட்டு என்ற தீண்டாமைக் கொடுஞ்செயலை அங்கீகரித்து, அவற்றுக்கு அரச மரியாதையை அளித்த மன்னர் இராஜதானிகளும் இருந்தன. எண்ணற்ற அடக்குமுறைகள் தமிழகத்தில் நிழ்ந்த காலம் ஒன்றுண்டு. அதுபோன்ற சாதியக் கொடும் வரலாற்றுத் தடங்களில் ஒன்றுதான் இன்றைய குமரி மாவட்டத்தில் 18-19ஆம் நூற்றாண்டுகளில் நடைபெற்ற தோள்சீலைப் போராட்டம்.

18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மிகப் பெரும் மக்கள் போராட்டம் அன்றைய கேரளப் பகுதியிலிருந்த தென் திருவிதாங்கூரிலும், தமிழக எல்லைப் புறத்திலும் நடைபெற்றது. சாணார் என்றழைக்கப்பட்ட நாடார் சாதி மக்கள் நம்பூதிரிகள், நாயர்கள், வேளாளர்கள் உள்ளிட்ட ஆதிக்க சாதிகளால் கடுமையான இன்னலுக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்டனர். இந்து உயர் சாதி மக்களிடம் ஒடுக்கப்பட்ட இந்து வகுப்பினரான பள்ளர், பறையர், புலையர், ஈழவர் ஆகியோர் எத்தனை அடி தூரத்திலிருந்து நின்று பேச வேண்டும் என்றெல்லாம் அடிக்கணக்கு வைத்து தீண்டாமையைப் போற்றி இருக்கிறார்கள். சாணார் போன்ற கண்ணில் படக்கூடாத சாதி மக்களும் இருந்திருக்கிறார்கள். (உலகில் எங்கும் இப்படி ஒரு கொடுமை நடந்தது கிடையாது. இனி நடக்கவும் கூடாது) ஆதிக்க சாதிகளால் நிர்ணயிக்கப்பட்ட இந்தத் தீட்டுத்தூரத்தை எவரேனும் மீறினால் கடுமையான தண்டனைக்கு ஆளாக்கப்பட்டார்கள்.

இதில் கொடுமையான இன்னொரு விசயம் என்னவென்றால், பனந்தோப்புகளைச் சொந்தமாக வைத்துள்ள, வசதி படைத்த சாணார்கள், தங்கள் தோப்புகளில் கூலி வேலை செய்யும் சாணார்களை மேல் சாதி ஆதிக்க மனப்பான்மையிலேயே நடத்தி வந்தனர் என்பதும் இங்கு குறிக்கத்தக்கது. இதனை சாமித்தோப்பு அய்யா வைகுண்ட சாமி தனது அகிலத்திரட்டில், துரியோதனனும், பஞ்சவரும் சேர்ந்து ஒரு வயிற்றில் பிறக்கக் கண்டேனே சிவனே ஐயா என்று வேதனையோடு பதிவு செய்திருக்கிறார். சாதி ஒடுக்குமுறையோடு வர்க்க ஒடுக்கு முறையும் சேர்ந்ததன் காரணமாக, தமிழகத்தின் பிற பகுதிகளில் வசித்த சாணார் சமூக மக்களைக் காட்டிலும் பல மடங்கு இழிவான நிலையிலேயே குமரி மாவட்டச் சாணார்கள் வாழ்ந்து வந்தனர். கீழ்ச்சாதி என்று சொல்லப்பட்டவர்கள் அரசாங்கத்திற்கு சம்பளமின்றி வேலை செய்தாக வேண்டும் என்று திருவாங்கூர் அரசாங்கம் 1814ல் உத்தரசே போட்டது.

திருவிதாங்கூர்ப் பகுதிகளில் வாழ்ந்த சாணார் சமூக மக்களின் உழைப்பு அதிகார வர்க்கத்தினரால் மிகக் கொடுமையான அளவில் சுரண்டப்பட்டது. கூலி மறுக்கப்பட்ட அடிமைகளாய் சாணார்கள், விலங்குகளை விடக் கேவலமாக வாழ்ந்தனர். அரசுக்கும், ஆதிக்க சாதிகளுக்கும் அடங்க மறுத்தவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். உழைப்பிற்கான ஊதியத்தை தர மறுக்கின்ற வேலையை ஊழியம் என்று அழைத்து அவ்வேலைகளையெல்லாம் சாணார் மக்களைச் செய்யப் பணித்தனர். இதனை உப்பு ஊழியம் என்றும், அரசு அலுவலகங்களில் எழுதுவதற்காக வழங்கப்படுகின்ற பனை ஓலைகளை இலவசமாகத் தருகின்ற வேலைக்கு ஏட்டோலை ஊழியம் என்றும் அழைத்து அந்த வேலைகளையெல்லாம் சாணார் மக்களைச் செய்ய வைத்தனர். அது மட்டுமன்றி, கோயில்களில் எண்ணெய், விளக்குத்திரி கொடுக்கின்ற ஊழியம் உட்பட பல்வேறு ஊழியங்களைப் பட்டியலிடலாம். உழைக்கின்ற சாணார் சமூக மக்கள் குடைப்பிடிக்கக்கூடாது, செருப்பு அணிதல் கூடாது, மாடி வீடு கட்டக்கூடாது, தங்க நகைகள் அணியக் கூடாது, பெண்கள் தங்களது மார்பினை மேலாடைகளால் மறைக்கக்கூடாது, முழங்காலுக்குக் கீழே உடுத்தக்கூடாது, பசு மாடுகள் வளர்க்கக்கூடாது என்று பல்வேறு கூடாதுகளுக்கு ஆளாக்கப்பட்டனர். இதற்கு பணக்கார சாணார்களும் உடந்தையாக இருந்தனர்.

18ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டங்களில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் வரிவசூல், நீதி, நிர்வாக முறைகளில் பெரும்பாலும் நாயர்களே இருந்தனர். வானாளாவிய அதிகாரத்தின் காரணமாய், அடித்தட்டு மக்களை ஒடுக்குவதில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். அதிலொன்றுதான் வரி. உயிரோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வரி செலுத்த வேண்டும். இதற்குத் ‘தலைவரி’ என்று பெயர். தப்பித் தவறி எவரேனும் தொழில் செய்தால் அதற்குத் தொழில் வரி. பெண்கள் மேலாடை அணிந்து வருவதற்கு ‘தலைவரி’ என்று பல்வேறு வரிகளை ஒடுக்கப்பட்ட மக்கள் மீது திணித்து அவர்களின் வாழ்வியலைக் கேள்விக்குள்ளாக்குவதில் முனைந்து நின்றார்கள் இந்து ஆதிக்க சாதியினர்.

வழக்கமாகத் திருவிதாங்கூரில் உயர்ந்த அந்தஸ்துடையவர்களின் முன்னிலையில் தாழ்ந்த அந்தஸ்துடையவர்கள் மரியாதையின் அடையாளமாகத் தங்கள் மார்பைத் திறந்து போடுவது வழக்கம். சாதி வரிசையின் நீண்ட படிகளில், உதாரணத்துக்கு நாயர்கள், நம்பூதிரி பிராமணர்களின் முன்னிலையில தங்கள் மார்பைத் திறந்து போட்டார்கள். பிராமணர்களோ தெய்வங்களின் முன்னிலையில் தங்கள் மார்பைத் திறந்து போட்டார்கள்.... இந்த வழக்கத்தின்படி மற்ற தாழ்ந்த சாதிகளைப் போல நாடார்களும் எந்த நேரத்திலும் தங்கள் மார்பை மூடுவதினின்றும் தடுக்கப்பட்டார்கள்... நாடார் ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிய உடை அரையில் முழங்கால் வரை ஒரு முரட்டுத் துணியைச் சுற்றிக் கொள்ளுவதாகும் (ஹாட்கிரேவ் 59, தெற்கிலிருந்து என்ற நூலில்) 1829ஆம் ஆண்டு சாணார் சமூகப் பெண்கள் மேலாடை அணியக் கூடாது என்று திருவிதாங்கூர் அரசாங்கமே உத்தரவிட்டது.

1801 முதல் 1809 வரை திருவாங்கூர்த் தளவாயாக இருந்த வேலுத்தம்பி, அடித்தட்டு மக்களின் மேம்பாட்டிற்காக எண்ணற்ற பணிகளைச் செய்தார். தன்னுடைய எல்லாவிதமான போராட்டங்களுக்கும் பொது மக்களின் ஒருங்கிணைப்பையே பெரிதும் நம்பினார். இதனால் மக்கள் ஒன்றுபட்டுப் போராடும் எண்ணத்தை வளர்த்துக் கொண்டனர். இந்த எண்ணம் பின்னர் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களுக்கு உந்து சக்தியாக இருந்தது. நாடார் சமூகத்தினரும், இதர ஒடுக்கப்பட்ட வகுப்பினரும் அணி திரண்டனர். ஆதிக்க சக்திகளின் எல்லைக் கோடுகள் தகர்த்தெறியப்பட்டன. இந்தியத் துணைக்கண்டத்தில் ஆரியர் படையெடுப்பால் நிகழ்த்தப்பட்ட வர்ணாசிரமக் கொடுஞ்சட்டங்கள், இசுலாமியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், போர்த்துக்கீசியர்கள், ஆங்கிலேயர்களின் படையெடுப்புகளால் மிகப் பெருமளவில் ஆட்டம் கண்டன. அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் மேற்கண்டவர்களின் படையெடுப்பால் சற்றேனும் மாற்றம் நிகழ்ந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

வெள்ளை ஏகாதிபத்தியத்தால் இந்தியா பல்வேறு இன்னல்களுக்கு ஆளானபோதிலும், அவர்கள் காலத்தில் அடித்தட்டு மக்களின் ஒடுக்குமுறைகளுக்கு சிற்சில நேரங்களில் தீர்வுகள் கிடைத்தன என்பதும் மறுக்க முடியாத உண்மை. கிறித்தவத்தைப் பரப்பும் முகத்தான் இந்தியா வந்திருந்த கிறித்தவ மிஷனரிகள், சாதிய வன்கொடுமையின் கோரத்தாக்கத்தால் நிலைகுலைந்திருந்த மக்களுக்கு ஆதரவாய்க் குரலெழுப்பினர். அவர்களின் தேவாலயங்களும், பள்ளிகளும் உரத்துக் குரல் கொடுத்தன. 1812இல் திருவிதாங்கூரில் ஆங்கிலப் பிரதிநிதியாகப் பணியாற்றிய கர்னல் மன்றோ ‘கிறிஸ்தவராக மாறிய பெண்கள்’ மற்ற தேசக் கிறிஸ்தவப் பெண்களைப் போலத் தாங்கள் மார்பை மறைத்துக் கொள்ள உரிமை அளிக்கும் என்ற ஆணையைப் பிறப்பித்து, சாணார் பெண்களின் சமூக மறுமலர்ச்சிக்க வித்திட்டார். மிஷனரிகளின் அணுக்கமான தன்மையினாலும், அன்புக் கருணையாலம் ஈர்க்கப்பட்ட மக்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறி கிறித்தவ மதத்தைத் தழுவினர். கொத்துக் கொத்தாய் நிகழ்ந்த இந்த மத மாற்றமே சாணார் மக்களுக்கும், இந்து மதத்திலிருந்த சாணார்களுக்கும் தீர்வாய் அமைந்தன. இதன் பயனாக கிறித்தவ மதத்தினைத் தழுவாத இந்துச் சாணார் பெண்களுக்கும் துணிச்சல் பிறந்தது. துணிந்து அவர்களும் மார்பை மறைத்து தோள் சீலை அணியத் தலைப்பட்டனர்.

தாங்கள் வகுத்திருந்த விதிகளும், தங்களது ஆதிக்கமும் கண் முன்னே சிதைவதைக் கண்ட நாயர்கள் 1828ஆம் ஆண்டு பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கிறித்தவத்திற்கு மதம் மாறிய நாடார்களை அச்சுறுத்தினர். தோள் சீலை அணிந்து கொண்டு வரும் பெண்களின் ஆடைகள் கிழித்தெறியப்பட்டன. அடித்து உதைக்கப்பட்டார்கள். கிறித்தவ நிறுவனங்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டன. திருவிதாங்கூர் அரசு ஆதிக்க சாதிகளின் அடிவருடியாகவே இருந்து நாடார்களுக்கு எதிராகப் பல்வேறு ஆணைகளைப் பிறப்பித்த வண்ணம் இருந்தது. நாடார்களிடம் பீறிட்டெழுந்த சுதந்திர உணர்விற்கு முன்பாக அரசின் அடக்குமுறைகள் பிசுபிசுத்துப் போயின. இதன் விளைவாக ஒடுக்கப்பட்டு வாழ்ந்த பிற இந்து சாதிப் பெண்களும் மேல் சாதி இந்துப் பெண்கைளப் போன்றே ஆடைகளை அணியத் தொடங்கினர். தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாக 1855ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானம் அடிமை முறையை ஒழித்து சட்டம் இயற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

“பறையனைத் தொட்டால் தீட்டு, சாணானைப் பார்த்தாலே தீட்டு” என்று சொல்லி அடக்குமுறையின் உச்சத்தில் கிடத்தி வைக்கப்பட்டிருந்த நாடார் சமூகம் எண்ணற்ற தடைகளைக் கடந்து இன்று பல்வேறு தளங்களில் தன்னை சமூக வளர்ச்சிக்கான காரணியாக நிரூபித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் தற்போதைய சூழலில் சாதிய வன்கொடுமைகள் ஆங்காங்கு அரங்கேறிய வண்ணம் இருக்கின்றன. வடுக்களாய்க் கிடக்கும் நாடார் சமூக மக்களின் வேதனைகள், பிற சமூகத்தையும் கைதூக்கி மேம்படுத்துவதில் காட்டப்படுமேயானால், சமத்துவ சமூகம் மலர்வதற்கு மாபெரும் பங்களிப்பாக அமையும். சாதிகளற்ற தமிழ்ச் சமூகம் உருவாவதற்கு அனைத்து சாதியினரும் பங்களிப்பார்களேயானால், வர்ணாசிரமக் கொடுங்கோட்டை தகர்த்தெறியப்படும். சாதிகளற்ற சமூகம் அமைப்பதென்பது நமது தொலைநோக்குச் செயல்திட்டம்.

ஆனால் அதே சமயத்தில் சமூகத்தின் அடித்தட்டில் உழன்று கொண்டிருக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் எல்லாவித உரிமைகளுக்கும் உடமைப்பட்டவர்களாக உருவாக்க வேண்டிய பெருங்கடமை தமிழ்ச்சாதிகளுக்கு இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஒரு காலத்தில் கோவிலில் கடவுளை வழிபட உரிமை மறுக்கப்பட்ட ஒரு சமூகம் இன்று தாங்கள் கட்டிய கோவில்களில் யாரால் தங்களின் கடவுளை வழிபடும் உரிமை மறுக்கப்பட்டதோ, அந்த பிராமணர்களையே அர்ச்சகராக வைத்துக் கொண்டு அவர்கள் மூலம் கடவுளை வழிபடுவது போராடிய வரலாற்றை மறப்பதாக உள்ளது. இது மிகவும் வேதனை தரும் ஒன்றாகும். நாமெல்லாம் அறிவார்ந்தவர்கள். உண்மையான முகங்களையும், கோரத்தை மறைத்துக் கொண்டிருக்கும் முகமூடிகளையும் அடையாளம் கண்டு உணரத் தொடங்கினால், சாதிகளற்ற தமிழினத்தின் தலைநிமிர்வு என்பது வெகு விரைவில் சாத்தியமே.

மேலாடை மீண்ட வரலாறு

சாணார், ஈழவர், காவேரிநாவிதர், பறையர், புலையர், சாம்பவர், வள்ளுவர், சேரமர் போன்ற சாதிகளில் உள்ள பெண்கள், மேலாடை அணிவதிலிருந்து இந்து ஆதிக்க சாதிகளான நம்பூதிரிகள், நாயர்கள், வேளாளர்கள், தமிழ்ப் பார்ப்பனர்களால் தடை செய்யப்பட்டனர். அரசில் பெரும் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் முன்பு திறந்த மார்போடுதான் இருக்க வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் மேலாடை கொண்டு மூடுவது சாதிக் குற்றமாகக் கருதப்பட்டது. தாழ்த்தப்பட்ட இந்துச் சாதியினர் இந்துக் கோயில்களுக்குச் செய்ய வேண்டிய ஊழியங்களை கிறித்தவ மதத்திற்கு மாறினாலும் கூடச் செய்தாக வேண்டும் என்பதைச் சட்டமாகவே வலியுறுத்தினர். மேற்காணும் இரண்டு ஒடுக்குமுறைகளும் தான் தாழ்த்தப்பட்ட மக்களிடையே பெரும் எழுச்சியைக் கொண்டு வந்ததாக திருவிதாங்கூர் வரலாற்றாசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்.
சமூகத்தில் பெரும் மரியாதைக்குரிய ஒரு மனிதரிடம் ஒரு பெண் தனது மார்பைக் காட்டுவது என்பது அந்நபருக்கு சமூகம் அளிக்கும் மரியாதையாகவே கருதப்பட்டது என்று சாமுவெல் மேட்டீர் திருவிதாங்கூரின் இயல்பு வாழ்க்கை என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். 1865இல் திருவிதாங்கூர் மன்னர் ஆயில்யம் திருநாள் வெளியிட்ட அரசு ஆவணம் ஒன்றில், நாயர் பெண்கள் அரசாங்க அலவலர்களைக் கண்டு உரிமையைப் பெறுவதற்கு நடைபெற்ற போராட்டங்களை 1822-23, 1823-30, 1855-59 என மூன்று காலகட்டங்களாகப் பிரித்துக் காட்டுகிறார் வரலாற்றாசிரியர் கே.ஏ.ஜார்ஜ். 1822 மே மாதம் தேவாலயத்திற்கு மேலாடை அணிந்து சென்ற பெண்ணைத் தடுத்து சிலர் கிண்டல் செய்தனர். இதனை எதிர்த்து நிகழ்ந்த கலவரத்தால் மீட் பாதிரியார் திருவிதாங்கூர் ரெசிடென்டுக்கு விண்ணப்பம் செய்தார். பத்மநாபுரம் நீதிமன்றத்தில் விசாரணைக்காக வந்த இவ்வழக்கில் கிறித்தவப் பெண்கள் மட்டும் மேலாடை அணியலாம் என்று தீர்ப்புக் கிடைத்தது.

இரண்டாவது கலவரமும் கிறித்தவப் பெண்களுக்கு எதிராகவே நடைபெற்றது. இதற்கு எதிராய்க் குரலெழுப்பிய மீட் பாதிரியாரைக் கொலைசெய்ய பெரும் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் புறப்பட்டுச் சென்றது. முடிவில் முதலில் வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்பபை ஒட்டியே மதத்திற்குச் செல்வதில் தடையில்லை என்பதையும் அறிவித்தார். மூன்றாவதாக ஆற்றுங்கல்லில் நடைபெற்ற போராட்டம் காக்ஸ் என்ற பாதிரியார் முன்னிலையில் வலுப்பெற்றது. திருவிதாங்கூர் மற்றும் நாகர்கோவிலின் பெரும்பாலான பகுதிகளிலும் மிகத் தீவிரமாய் எதிரப்புப் போராட்டங்கள் பரவின. பொதுச்சொத்துக்களும், உயிர்களும், உடமைகளும் கடுமையான சேதத்திற்க உள்ளாயின. சென்னையில் வெள்ளை ஆளுநரிடம் கலவரம் தொடர்பாக மனு கொடுக்கப்பட்டது. இதன் விளைவாக திருவாங்கூர் மன்னர் உத்திரம் திருநாள், 1847ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் நாள், நீதிமன்றத் தீர்ப்பு வெளியிடப்பட்டது.

ஒடுக்கப்பட்ட இந்துக்கள் மேலாடை அணியவோ, நகைகள் அணியவோ உரிமை அளிக்கப்பட மாட்டாது. ஆனால் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் கிடையாது என்பதாகத் தீர்ப்புக் கூறியது. ஆங்கிலேய அரசின் வற்புறுத்தலால் சொல்லப்பட்ட அந்தத் தீர்ப்பு வேறு விதமான விளைவு ஏற்படுத்தியது. அதன் பின் கன்னியாகுமரியில் ஏற்பட்ட மாற்றங்கள் யாரும் எதிர்பாராதது. அனைவரும் கூடிப் பேசினர். மதங்களையும் கடவுள்களையும் விட உரிமைதான் முக்கியம் என்று முடிவெடுத்தனர். 80%க்கும் அதிகமான நாடார் இன மக்கள் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறினர். பல்வேறு போராட்டங்களின் மூலம் கிடைக்கப் பெறாத தோள்சீலை அணியும் உரிமை கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதன் மூலமே அங்குள்ள நாடார்களுக்குக் கிடைத்தது. இன்றும் குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ மதம் வேரூன்றி இருப்பதற்கு இதுவே காரணம்.

சார்லஸ் மீட் என்ற பாதிரியார் கிறித்தவ ஆலயங்களுக்கு வரும் பெண்களுக்கென்றே ஆடை ஒன்றை வடிவமைத்து அதனை அணியச் செய்தார். பெண்களின் மேலாடைப் போராட்டத்திற்கு பெருமளவில் இவரும் இவரது துணைவியாரும் ஆதரவு தெரிவித்தனர். வரலாற்றாசிரியர் சங்குண்ணி மேனம், மேலாடைப் போராட்டத்திற்குத் தலைவராக மீட் அவர்களே இருந்தார். அவரே இதற்குக் காரணகர்த்தா என்று கூறியுள்ளார்.
திருவிதாங்கூர் மகாராணியின் முன் ஒரு சாணார் சாதிப் பெண் ரவிக்கை அணிந்து வந்தார் என்பதற்காக அவரது மார்பை வெட்ட திருவிதாங்கூர் நிர்வாகம் உத்தரவிட்டது.

********

நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வந்த சாணார் உட்பட அனைத்து தாழ்த்தப்பட்ட சாதி நபர்களும் நீதிபதி அமரும் இருக்கையிலிருந்து 64 அடி தொலைவில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

கன்னியாகுமரி அருகேயுள்ள கொட்டாரத்தில் திருமணமான சில நாட்களில் தாலி, மேலாடையுடன் வந்த பெண் அரசாணையை எதிர்த்த குற்றத்துக்காக பொது இடத்தில் தாலியறுத்து உடை களைந்து அரசுப் படையால் கொலை செய்யப்பட்டார். அந்த இடம் இன்றும் தாலியறுத்தான் சந்தை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

ஏறக்குறைய இதே காலகட்டத்தில் பிறந்த வைகுண்ட சாமிக்கு, அவரது பெற்றோர் இடம் பெயர் முடிசூடும் பெருமாள். மேநிலைச் சாதியினரின் பெயரை தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த வைகுண்ட சாமிக்கு வைத்ததால் உள்ளூர் ஆதிக்க சாதியினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதன் விளைவாக முடிசூடும் பெருமாள் முத்துக்குட்டி ஆனார் என்பது அன்றைய சாதி ஒடுக்குமுறையின் அவலப் பக்கங்களில் ஒன்றாகும்.

******************

கேரளாவின் ஒரு பகுதியாக இருந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த அன்றைய குமரி மாவட்டம் சுதந்திரத்திற்குப் பின் அம்மாவட்ட மக்களின் பல போராட்டங்கள் உயிர்த் தியாகத்திற்குப் பிறகு 1956ல் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.

குறிப்பு நூல்கள்:
1. பொன்னீலன் எழுதிய தெற்கிலிருந்து
2. பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் மையம் வெளியிட்ட பண்பாட்டு வேர்களைத் தேடி
3. அ.கா.பெருமாள் எழுதிய தென் குமரியின் கதை.

நன்றி: இக்கட்டுரை இரா. சிவக்குமார் அவர்கள் எழுதி 'விழிப்புணர்வு' இதழில் வந்தது, கீற்று.காம் இணையத்தில் வெளியிட்டது.

Friday, April 14, 2006

சென்னை ஐ.ஐ.டி.யில்...அம்பலம்!

சென்னை ஐ.ஐ.டி.யில் நசுக்கப்படும் தலித்கள்அம்பலப்படுத்துகிறது "தலித் குரல்"
இந்த கட்டுரை கீற்று.காம்-ல் வெளிவந்தது!

இந்திய நாடாளுமன்றத்தால் அமுல்படுத்தப்பட்ட இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி 1961 (Act 59/61) சட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள ஆறு நிறுவனங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் என்று 1961இல் அறிவிக்கப்பட்டன. சென்னை அய்.அய்.டியும் அப்படிப்பட்ட ஒரு நிறுவனமே. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசிடமிருந்து இந்நிறுவனங்கள் ஆயிரம் கோடி ரூபாய் பெறுகின்றன. சென்னை அய்.அய்.டி. 300 ஏக்கர் நிலப்பரப்பில் சென்னையில் கவர்னர் மாளிகைக்கு அருகில் அமைந்துள்ளது. சென்னையில் இந்த அய்.அய்.டி. அமைவதற்கான காரணம் முன்னாள் முதலமைச்சர் காமராசர் அவர்களே. தமிழ்நாட்டில் அய்.அய்.டி. இருந்தாலும் இங்குத் தமிழர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.

அறிவியல் துறையில் உலகிலேயே முன்னணியில் உள்ள பார்ப்பனக் கோட்டையாக இந்த அய்.அய்.டி. மாறியுள்ளது. கடந்த 45 ஆண்டுகால வரலாற்றில் இயக்குநர்கள், டீன்கள் போன்ற முடிவெடுக்கும் தலைமைப் பதவிகளில் பார்ப்பனர்களே அமர்ந்து இங்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இத்தனை ஆண்டுகால வரலாற்றில் இந்த நிறுவனத்திற்கு இயக்குநராக ஒரு தலித்தோ, ஒரு பிற்படுத்தப்பட்டவரோ வந்தது கிடையாது. சென்ற பத்தாண்டுகளில் மிகப்பெரும் அளவில் நடந்த பொருளாதாரக் குளறுபடிகளால் மற்றும் பொது நிதியைத் தவறான விதத்தில் கையாண்டதால் பத்திரிகைகள் மற்றும் பாமரமக்களின் கவனத்தை இந்த அய்.அய்.டி. ஈர்த்துள்ளது. ஆசிரியர் பதவிகளுக்கு நடந்த தேர்ச்சி முறைகளைப் எதிர்த்துப் பல ரிட்மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்டுச் சொல்லுவோமேயானால் கடந்த பத்தாண்டுகளில் 200 க்கும் மேற்பட்ட வழக்குகள் இந்த நிறுவனத்திற்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மனித உரிமை மீறல்கள்:
கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்டோருக்கும், தலித்துகளுக்கும் அரசியல் சட்டத்தால் கொடுக்கப்பட்டிருக்கிற இடஒதுக்கீடு (மனித உரிமை) இங்கே மாணவர் சேர்க்கையிலோ ஆசிரியர் தேர்விலோ கொடுக்கப்படுவதில்லை. இங்கே பணிபுரியும் மொத்த ஆசிரியர் எண்ணிக்கை 450 பேர் அதில் 2 பேர் தான் தலித்துகள் (இப்போது 4 பேர் என்பது கணக்கு). ஆனால், அரசியல் சட்டமோ 22.5% இடங்களைத் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு (குறைந்த பட்சம் 100 தலித்துகள் ஆசிரியர்களாகப் பணியாற்ற வேண்டிய இடத்தில் நான்குபேர் பணியாற்றுகிறார்கள்).

இங்கே பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் 50 பேர் தான். மற்ற ஆசிரியர்களோ உயர்சாதிக்காரர்கள். முக்கியமாகப் பார்ப்பனர்கள். ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீடு சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தில் பதிவாகி நிலுவையில் கிடக்கும் வழக்குகளின் சில விவரங்கள்.

(W.P.No. 5415/ 95, W.P.No. 16528/95, W.P.No. 16863/95, W.P.No. 17403/95, W.P.No. 4242/97, W.P.No. 4256/97, W.P.No. 4257/97, W.P.No.37020/2003)

அரசியல் சட்ட ஆணையில் இருந்து தப்பிப்பதற்காக இந்த அய்.அய்.டி, காண்ட்ராக்ட் முறையிலும் (ஒப்பந்தமுறை) அடாக் (தற்காலிகம்) முறையிலும் ஆசிரியர்களை நியமனம் செய்து கொண்டிருக்கிறது. காலப் போக்கில் உயர்சாதியைச் சார்ந்த இந்த ஆசிரியர்களின் தற்காலிக வேலை, நிரந்தர வேலையாக ஆக்கப்படுகிறது. சட்ட திட்டங்களிலிருந்து தப்பிப்பதற்காக இந்த அய்.அய்.டி யில் விளம்பரத்தை வெளியிடுகிறார்கள். ஆனால், எந்த விளம்பரமும் சட்டநிலைக்கு முன் நிற்காது. ஏன் என்றால் வேலைவாய்ப்பிற்குரிய எல்லாச் செய்தி விபரங்களும் அதில் முற்றிலுமாகக் காண முடியாது. காலியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இடஒதுக்கீடு அளிக்கப்பட்ட காலியிடங்கள் போன்றவற்றை அந்த விளம்பரங்களில் காணமுடியாது.

மாணவர் சேர்க்கை:
ஆசிரியர் நியமனங்கள் போலவே மாணவர்கள் சேர்க்கையிலும் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. முதன் முதலில் 1978 ஆம் ஆண்டில் தான் தலித் மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டைப் பற்றி யோசித்தார்கள். ஆனால் இந்த 22.5 சதவிகிதத்தைக் கூட முழுமையாக இங்கு நிரப்புவதில்லை. அதற்குப் பதிலாகக் கண்துடைப்பு வேலையான கட் ஆப் மார்க் முறையைப் பின்பற்றுவதாகக் கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் அடிப்படை உரிமையான சமத்துவத்தை மீறும் விதத்தில் பி.டெக் பட்டப்படிப்பிற்குத் தேர்ச்சி பெறும் தலித் மாணவர்களை ஓராண்டு தயாரிப்பு வகுப்பில் சேர்த்து அதன் பிறகு தான் பி. டெக் படிப்பிற்கு அனுமதிக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அய்.அய்.டி.யில் இட ஒதுக்கீடே கிடையாது. இவர்களுக்கு என்று தேர்ச்சிக்குரிய விதிகளைக் குறைக்கவும் மாட்டார்கள். தகுதி என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்களின் நியாயமான உரிமைகள் பறிக்கப்படுகின்றன. 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சென்னை உயர்நீதி மன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவிகிதம் அய்.அய்.டியில் இட ஒதுக்கீடு கூறி ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

என்.வி.சி. சாமியின் பதவிக் காலத்தில் நடைபெற்ற முறைகேடுகள்:
1995 ஆம் ஆண்டில் அய்.அய்.டியின் இயக்குநராக இருந்தவர் டாக்டர். என்.வி.சி. சாமி. ஏப்ரல் 1995இல் அவர் ஓய்வு பெற்றிருந்தாலும் கூட இயக்குநர் பதவியிலேயே 30 சூன் 1996 வரை நீடித்தார். எப்படியென்றால் தனது பதவிக்கால நியமனம் நீட்டிப்புப் பெற்றதாக பொய்க்காரணம் சொல்லி, அந்த நேரத்தில் அவர் 60 வயதுக்கு மேலாகவும் இருந்தார். ஒரு அய்.அய்.டியின் இயக்குநர் பதவி நியமனம் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் தான் நடைபெற முடியும். ஏனென்றால் அனைத்து அய்.அய். டிக்கும் விசிட்டர் என்பவர் குடியரசுத் தலைவரே. ஆனால் குடியரசுத் தலைவரின் அனுமதி இல்லாமலேயே அப்போதிருந்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை கல்விச் செயலாளர் ஒரு கடிதத்தின் மூலம் (DO Letter No. 12-17/95 TSI Dated Oct – 31, 1995) என்.வி.சி. சாமிக்கு மூன்று மாதக் காலம் நீட்டிப்பு கொடுத்தார். இதை எதிர்த்து சென்னை அய்.அய்.டியின் ஆசிரியர் சங்கம் உயர்நீதி மன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. ரிட்மனு அனுமதிக்கப்பட்ட பின்னர் என்.வி.சி. சாமி ராஜினாமா செய்தார்.

80 ஆசிரியர்களின் நியமனம்:
சட்டத்திற்குப் புறம்பான விதத்தில் தான் இயக்குநராக இருந்த காலத்தில் டாக்டர். என்.வி.சி. சாமி அவசர அவசரமாக விளம்பரங்கள் வெளியிட்டு ஆசிரியர் பதவிகளை நிரப்பினார். மூன்றே மாதத்திற்குள் 80 உயர்சாதிக்காரர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டார்கள். இட ஒதுக்கீட்டுக் கொள்கை குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது.

தனக்கு விருப்பமான நபர்களைத் தேர்ச்சி செய்வதற்காகவே என்.வி.சி.சாமி வெளிவந்த விளம்பரங்களை மாற்றங்களுடன் மறுபடியும் வெளியிட்டார். உதாரணமாக கணிதத் துறையில் அசோசியேட் பேராசிரியர் பதவிக்கான விளம்பரத்தில், (No.IITM/R/8/94) தெளிவாகக் கூறியிருந்தது.

விண்ணப்பதாரருக்கு கணக்கில் அடிப்படை முதுகலைப் பட்டம் இருக்க வேண்டும் என்று இந்த விதிமுறையை ஒழுங்காகப் பின்பற்றியிருந்தால் ஒரே ஒரு உயர் சாதிக்காரர்கூட தேர்ச்சி பெற்றிருக்கமாட்டார். அதனால் அவருக்கு வேண்டியவரான முனைவர் எஸ்.ஜி. காமத்தை (இவர் பௌதிக பட்டதாரி) தேர்ச்சி செய்வதற்கு இந்த அடிப்படைத் தேர்வு விதிமுறையையே மாற்றினார்கள். இதற்கென்றே மறு விளம்பரம் ஒன்றை வெளியிட்டார்கள். (No. IITM/R/1/95) இதில் விதிமுறைகளைத் தளர்ச்சி செய்து கணிதத்தில் அடிப்படை பட்டம் தேவை என்பதை எடுத்துவிட்டார்கள். அந்த விளம்பரமும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்தே விண்ணப்பங்களைக் கேட்டது. ஆனால், இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற முனைவர் ஏ. ரெங்கன் என்பவர் அசோசியேட் பேராசிரியராக கணிதத்துறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பார்ப்பனர். அதேசமயம், முதல் வகுப்பில் வெற்றி பெற்று மிகவும் தகுதிவாய்ந்த பேராசிரியர் டாக்டர் வசந்தா கந்தசாமி பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த காரணத்தினால் தேர்ச்சி செய்யப்படவில்லை.

இடஒதுக்கீடு அமுல்படுத்தப்படவில்லை:
சென்னை அய்.அய்.டியின் 145 வது கமிட்டிக் கூட்டத்தில் தீர்மானம் 11/1994 வாயிலாக மனித வள மேம்பாட்டுத் துறையினுடைய கடிதத்தின் அடிப்படையில் (Dt. 01.11.1993) இடஒதுக்கீட்டை அய்.அய்.டியில் அமுல்படுத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. மேலும் (Department of Personnel & Training) அலுவலக ஆணை இடஒதுக்கீட்டைப் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு அரசு ஊழியர்களின் வேலைவாய்ப்பிலும் அய்.அய்.டி. போன்ற நிறுவனங்களுக்கும் இடஒதுக்கீடுகள் அமுல் செய்யக் கோரியது. டாக்டர். என்.வி.சி. சாமியின் 5 ஆண்டு பதவி காலத்தில் நடைபெற்ற அத்தனை ஆசிரியர் நியமனங்களிலும் அரசியல் சட்ட ஆணையான இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. இதை எதிர்த்து அய்.அய்.டி. பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நலச் சங்கத் தலைவர் கே.என். ஜோதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை (W.P.No. 5415/95) தாக்கல் செய்தார். இந்த ரிட் மனு தாக்கல் செய்த பின்பு உதவிப் பேராசிரியர், துணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பதவிகளுக்கான நியமன அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்கள். (Please note that the High Court of Madras by its order dated 17.4.1995 in W.M.P. No. 8893 in W.P. No. 5415 of 1995 has made the following order: the offer of appointment is subject to the result of the writ petition).

பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அமுல்படுத்தப்படாததால் வன்னியர் சங்கமும் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. இது போலவே மற்றொரு ரிட் மனுவும் (W.P.No.17403/95) தாக்கல் செய்யப்பட்டது.

ஃபெரா மீறல்கள் (Foreign Exchange Regulation Act) :
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்திடுவதாகச் சொல்லி அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் செய்தவர் என்.வி.சி.சாமி. இந்தப் பயணங்களின் போது அமைச்சகங்களிடமிருந்தோ ரிசர்வ் வங்கியிடமிருந்தோ இவர் ஒப்புதல் பெற்றுச் சென்றதே இல்லை. வெளிநாட்டில் வசிக்கும் அய்.அய்.டி.யின் முன்னாள் மாணவர்களிடமிருந்து டாலர்களில் நன்கொடை பெற்றார். ஆனால் இந்தப் பணத்தை அய்.அய்.டி.யின் கணக்கிலே வரவு வைக்கவில்லை. இவர் சேகரித்த பணம் பலகோடி என்று அய்.அய்.டி.யின் உள்ளேயே சொல்லப்படுகிறது.

தொடரும்
நன்றி: கீற்று.காம்

Tuesday, April 11, 2006

தேச ஒற்றுமையும் ரத யாத்திரையும்

"வாரணாசி குண்டு வெடிப்பை கண்டித்து நான் நடத்த இருக்கும் பாரத் கரக்ஷா ரத யாத்திரையால் எந்த கலவரமும் ஏற்படாது. நாட்டு ஒற்றுமையை வலியுறுத்தவே இந்த யாத்திரை நடக்கிறது. காங்கிரஸ் மற்றும் சில கட்சிகள்தான் தவறான பிரசாரம் செய்து பீதியை ஏற்படுத்துகிறார்கள்." என்கிறார் பா.ஜ.கா முன்னாள் தலைவர் அத்வானி. நாட்டின் பாதுகாப்பிற்காக என ரதயாத்திரைக்கு திரு.அத்வானி அவர்கள் புறப்படுகையில் ஏன் இப்படி ஒரு 'பீதி' அவரை குறிவைத்து கிளப்பப்படுகிறது?

கடந்த காலங்களில் அத்வானி ரதயாத்திரை சென்ற போது ஏதாவது குழப்பங்களோ அல்லது கலவரங்களோ நடந்ததுண்டா? இல்லை யாருடைய உடமைகளாவது சூறையாப்பட்டதா? பாலியல் வன்முறைகள், கொலைகள் நடந்தனவா?

1990ல் பிரதமர் திரு.வி.பி.சிங் அவர்கள் மண்டல் கமிசன் அறிக்கையை ஏற்று பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுகீடு சட்டமாக்கினார். இந்த இடஒதுக்கீடு சட்டம் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களை கல்வி, வேலைவாய்ப்பில் சமநிலைக்கு கொண்டுவருவதற்கான் ஒரு முயற்சி. இடஒதுக்கீட்டு திட்டத்தால் உயர்சாதியினர் காலங்காலமாக அனுபவித்து வந்த கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அதிகார பீடங்களில் தாழ்த்தப்பட்ட மக்களா? இதை அனுமதிப்பது உயர்சாதியினருக்கு இயலாத விடயமானது. வடமாநிலங்களின் கல்வி நிலையங்களில் கலவரங்களும், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கெதிரான அடக்குமுறையும் உயர்வகுப்பு மாணவர்களால் துவங்கப்பட்டது. அரசு தனது திட்டத்தில் விடாப்பிடியாக இருந்தது.

இந்த அரசியல் மாற்றங்களை திசை திருப்பவும், ஆட்சியை ஆட்டம் காண வைக்கவும் திரு.அத்வானி அவர்கள் ராம ரத யாத்திரை துவங்கினார். அதற்கு அவருக்கு கிடைத்த ஆயுதம் பல ஆண்டுகளாக சர்ச்சையிலிருந்த பாபர் மசூதி X இராமர் கோவில் விவகாரம். அயோத்தி நகரில் (உத்தரபிரதேசம்) இராமர் பிறந்த இடமாக கருதப்படுகிற இடத்தில் இருந்த கோவிலை இடித்து பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பாபர் என்ற மொகலாய மன்னர் மசூதி கட்டியதாக சர்ச்சை. நீதிமன்றத்தில் பாபர்மசூதி X ராமர் கோவில் வழக்கு நடைபெற்று வந்தது. (இந்த கட்டுரையின் நோக்கம் கருதியும் நீண்ட பதிவாகிவிடும் என்பதாலும் வழக்கு மற்றும் சர்ச்சை பற்றி இங்கு பதியவில்லை)

கன்னியாகுமரி முதல் மாநில எல்லைகளை கடந்து சென்ற ராம ரத யாத்திரையில் ஒளிபரப்பப்பட்ட குறும்படங்களும், செய்திகளும், உரைகளும் மக்களை மதப்பிரிவினையில் கூறுபோட துவங்கியது என்பது மறக்க முடியாத உண்மை. சகோதரர்களாக இருந்த மக்களிடம் "பாபர் மசூதியை இடித்து இராமர் கோவில் கட்ட வேண்டும்" என்ற பெயரில் மதவெறியை விதைத்தது திரு. லால் கிசன் அத்வானியின் ரதயாத்திரை. ரத யாத்திரை மாநிலங்கள் பல கடந்து பீகாரில் நுளைந்தபோது அன்றைய முதல்வர் திரு. லல்லு பிரசாத் அவர்களது அரசால் கைது செய்யப்பட்டார். இந்த கைது அரசியலாக்கப்பட்டு கலவரங்கள் வெடித்தது. திரு.வி.பி.சிங் ஆட்சியும் கவிழ்ந்தது. திரு.அதிவானி அவர்களின் கைதை தமிழகத்தின் நடுநிலை நாளிதழ் ஒன்று சிறப்பு பதிப்பு வெளியிட்டு மூன்று சக்கர வண்டியில் வைத்து மூலை முடுக்கெல்லாம் இலவசமாக கட்டு கட்டாக பத்திரிக்கை வீசி மதவெறிக்கு மேலும் உரமூட்டியது.

இந்த ரதயாத்திரையின் முடிவும் அதன் தொடர்ந்த நிகழ்வுகளும் இந்து மற்றும் பிறமத மக்களிடம் ஒருவருக்கொருவர் எதிரி போன்ற மனப்பான்மையும், பிற மதங்கள் தங்கள் நம்பிக்கைகளுக்கு எதிரானது என்ற பார்வையும் வலுப்பெற வைத்தது. இராமாயண காதையை நம்பிக்கைக்காக இல்லாவிடினும் அதன் சொற்சுவை, பரவச தன்மைக்காக படித்தவர்கள் கூட இந்த ரதயாத்திரையின் தொடர் நிகழ்வுகளின் பின்னர் இராமன் கதை என்றாலே மனம் சுழிக்கவும், புண்படவும் செய்தனர்.

தொடர்ச்சியாக பகை, அச்சம் என பிளவுபட்டுகிடக்கிறது இந்தியா. 1990 ராம ரத யாத்திரையின் விளைவாக நடந்த கலவரங்களில் மட்டும் சுமார் 564 பேர் கொல்லப்பட்டனர். திரு.அத்வானி, திரு.அசோக்சிங்கால், திரு.முரளிமனோகர் ஜோசி, செல்வி.உமாபாரதி தொடர்ச்சியாக எடுத்த போராட்டங்களும், பேச்சுக்களும் மக்களை சட்டத்தை தன் கயில் எடுக்க வைத்தது. டிசம்பர் 6, 1992ல், திரு அத்வானி, சிங்கால், ஜோசி, உமாபாரதி அவர்களது நேரடிப்பார்வையில் வழி நடத்தப்பட்ட பக்தர்கள் கடப்பாரைகளுடன் சென்று 400 ஆண்டுகள் பழமையான மசூதியை இடித்தனர். (ரத யாத்திர, பாபர் மசூதி இடிப்பு இவை அனைத்தின் உண்மை நிலையை In the name of God என்ற குறும்படம் வெளியிடுகிறது, காண கிடைப்பின் பாருங்கள்). அன்று ஆட்சியில் இருந்த திரு.கல்யாண் சிங் தலைமையிலான மாநில பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகம், காவல்துறை வேடிக்கை பார்த்தது. திரு. நரசிம்மநாவ் அவர்களை பிரதமராக கொண்ட மத்திய காங்கிரஸ் அரசும் வேடிக்கைப் பார்த்தது. இவை அனைத்தும் நீதிமன்றத்தில் வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்னரே நடந்து முடிந்திருக்கிறது. தொடர்ந்து நாடெங்கும் நடந்த கலவரங்களில் பல்லாயிரம் இஸ்லாமிய மற்றும் இந்து மத நம்பிக்கை கொண்ட மக்கள் கொல்லப்பட்டனர். பாலியல் வன்முறைகள், சூறையாடல், குண்டுவெடிப்பு என பம்பாய் கலவரம் துவங்கி குஜராத், கோயம்புத்தூர், பாராளுமன்றம், டெல்லி, வாரணாசி என நாடெங்கும் மத தீவிரவாதம் தேசியமாக்கப்பட்டிருக்கிறது.

"இதற்கு முன்பும் நான் ரத யாத்திரை நடத்தி இருக்கிறேன். அப்போது சிறு அசம்பாவிதம் கூட ஏற்பட்டது இல்லை." பா.ஜ.கா முன்னாள் தலைவர் அத்வானி (மாலைமலர் 02.04.2006). என்று திரு.அதிவானி அவர்கள் கூறினாலும் பழைய நினைவுகள் வரத்தானே செய்கிறது.

அன்னை பூமியே கலவரத்தாலும் குண்டுவெடிப்புகளாலும் வெடித்து சிதற, அன்னையின் மக்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் கொல்லவும் பாலியல் வன்முறையில் ஈடுபடவும், மதப்பிரிவினை பேசியும் சிதறிக்கிடக்கிறார்கள். இது தான் அத்வானி அவர்கள் தந்த ரதயாத்திரையின் பலனான தேச ஒற்றுமை.

திரு

Sunday, April 09, 2006

டெஸ்மா வீராங்கனை!

தமிழகத்தில் டெஸ்மா (Tamil Nadu Essential Services Maintenance Act (TESMA), 2002) என்கிற கொடிய சட்டத்தை 2002ல் இயற்றியது அ.தி.மு.க அரசு. இந்த சட்டத்தின் படி வேலைநிறுத்தம் தடை செய்யப்பட்டது, வேலை நிறுத்தம் செய்ய தூண்டுபவர்கள் சிறையிலடைக்கப்படுவார்கள். போராட்டங்களில் கலந்து கொள்பவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். அரசு இந்த சட்டத்தை அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களை குறிவைத்து கொண்டு வந்தது. துவக்கத்திலேயே சட்டவல்லுனர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தொழிற்சங்கங்கள் என அனைவரும் எதிர்த்தனர். (TESMA), 2002, considered one of the most repressive pieces of legislation in labour history என்கிறது ஹிந்து நாளிதழ்.

ஜெயலலிதாவின் இந்த சட்டமானது நமது நாட்டின் தொழிலாளர் சட்டங்களுக்கு மட்டுமல்ல சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (International Labour Organisation - ILO) International Labour Convention க்கும் எதிரானது. ILOவின் Declaration on Fundamental Principles and Rights at Work என்ன சொல்கிறது?
http://www.ilo.org/dyn/declaris/DECLARATIONWEB.static_jump?var_language=EN&var_pagename=DECLARATIONTEXT

Freedom of association and the effective recognition of the right to collective bargaining ஐ நிறைவேற்ற அரசுகளுக்கு கடமையுண்டு என்பதை மேற்காணும் பிரகடனம் வலியுறுத்துகிறது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள சங்கம் அமைத்தல், ஒருங்கிணைந்து உரிமைக்காக போராடுதல் என்பது தொழிற்சங்க நடவடிக்கை சார்ந்த உரிமை. இது தொழிலாளர்களுக்கே உரிய போராட்ட வழிமுறை. இந்த உரிமையில் அரசு பணியாளர், தனியார் பணியாளர் என்ற வாதத்திற்கே இடமில்லை. இந்த கோரிக்கைகளுக்கான போராட்டங்களை முன்னெக்க தொழிலாளர்களது பிரதிநிதிகளுக்கு (representatives of employees) உண்டு. இந்தியாவும் ILO வில் ஒரு உறுப்பினர் நாடு என்ற அடிப்படையில் இந்த சர்வதேச விதிமுறைகளை செயல்படுத்த இந்தியா கடமையுடையது. ஜெயலலிதா இந்த உரிமையை பறிக்கும் விதமாக வேலை நிறுத்தங்களையும் தொழிலாளர் போராட்டங்களையும் தடை செய்யும் டெஸ்மா சட்டமியற்றி நீதியையும், உரிமையையும் அதிகாரம் என்ற காலில் போட்டு மிதித்தார்.

தமிழகத்தில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் முறையாக தங்களது கோரிக்கைகளுக்காக போராட்டம் அறிவித்து அரசுக்கும் தெரிவித்தார்கள். அரசுக்கு பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பையும் வழங்கினார்கள். ஆனால் நமது அதிகாரத்திறன் (!) படைத்த முதல்வர் ஜெயலலிதா போராடும் அமைப்புகளுடன் பேசி தீர்க்காமல் வீண் பிடிவாதத்துடன் ஏற்கனவே இருந்த உரிமையையும் பிடுங்கினார். அதன் விளைவு இழந்த உரிமைகளுக்காக ஜூலை 2003 ல் போராட்டங்களை நடத்தியது அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள். டெஸ்மா சட்டத்தை காட்டி போராடுவபர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என மிரட்டியது அரசு.

30, ஜூன் 2003ல் ஜாக்டோ-ஜியோ மற்றும் கோட்டா-ஜியோ கூட்டமைப்புகளின் தலைவர்களை கைது செய்தது அரசு. அந்த மிரட்டல்களை மீறி 2, ஜூலை 2003 முதல் வேலைநிறுத்த போராட்டம் துவங்கியது. வேலைநிறுத்த போராட்டங்களில் கலந்து கொள்ளாவிட்டாலும் பணிக்கு வராத அரசு உழியர்கள் மற்ரும் ஆசிரியர்களை அனைவரையும் பணிநீக்கம் செய்யும் விதமாக அவசரமாக டெஸ்மா சட்டத்தை திருத்தியது அரசு. சில நாட்களிலேயே 2 லட்சத்திற்கும் மேல் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஒரு உத்தரவில் ஒரே நாளில் எந்த வித விளக்கமும் கேட்கபடாமல் பணிநீக்கம் செய்யப்பட்டனர். டெஸ்மா சட்டத்தை பயன்படுத்தி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு இந்த உலக சாதனையை செய்தது. அரசு அதிகாரத்தை வைத்திருந்த ஜெயலலிதாவின் ஆணவத்தின் ஒரு கையெழுத்தில் 2 லட்சம் குடும்பங்கள் தெருவுக்கு வந்தது. போராட்டக்களங்களில் இருந்த சங்கத் தலைவர்களையும், ஊழியர்களையும் கள்வர்களைப் போல காவலர்களை வைத்து கைது செய்தது அரசு. குடும்பங்களை குடியிருப்புகளை விட்டு வெளியேற்றியது, குடிநீர், மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. அரசு அதிகாரத்தின் சித்திரவதை தொடர்ந்தது.

தொழிலாளர் நல சட்ட விதிப்படி ஒருவரை பணிநீக்கம் செய்ய முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். பணிநீக்கம் செய்வதற்கு முன்னர் 14 நாட்கள் கால வரையறையுடன் கடிதம் கொடுத்து விளக்கம் தர வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர் தரும் விளக்கம் சரியில்லாவிட்டால், மீண்டும் பதில் கூற கால வரையறை கொடுக்கப்பட வேண்டும். அதற்கு பின்னர் நிறுவனத்தின் விதிகளின் படி அந்த ஊழியரை முறைப்படியாக கடிதம் வழி தகவல் தெரிவித்து பணிநீக்கம் செய்யலாம். இந்த முறைப்படி பணிநீக்கத்தை எதிர்த்து வழக்கு போட அந்த தொழிலாளருக்கு வாய்ப்பு உண்டு. இத்தனை பாதுகாப்புகளும் எதற்காக என்றால், தொழிலாளர்களின் பணி பாதுகாப்பிற்காக. இது அரசு மற்றும் தனியார் துறைகளுக்கும் பொருந்தும். இந்த பாதுகாப்பு மட்டும் இல்லாவிட்டால் நாளை வேலையிருக்குமா இல்லையா என்பதை அனைவரும் அறிவிப்பு பலகையில் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும். யார் வேண்டுமானாலும் விருப்பம் போல் வேலையை விட்டு எந்த உத்தரவாதமும் இல்லாமல் நீக்கலாம் என்ற நிலை ஆகிவிடும்.

பாதிக்கப்பட்ட ஊழியர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். விளக்கம் எதுவும் கேட்காமல் ஆணவத்துடன் அதிகார வரம்பு மீறல்கள் செய்ததன் பலன் அரசுக்கு இன்னும் அதிகபடியான செலவும் நீதீமன்ற நடவடிக்கைகளுமே. உயர்நீதிமன்றம் வழங்கிய அறிவுரைகள் புறக்கணிக்கப்பட்டு, அடக்குமுறையை தொடர்ந்தது அரசு. வருகை பதிவேடுகள் அனைத்தும் மாவட்ட ஆட்சித்தலைவரின் கட்டுப்பாடில் வைக்கப்பட்டு, ஜூலை 3 முதல் பணிக்கு வந்தவர்களை வருகைப்பதிவேட்டில் கையொப்பமிடாதவாறு பார்த்துக்கொண்டது. வார விடுமுறையில் கூட முறையீட்டை வீட்டில் வைத்து கேட்டு வழக்கில் கவனம் செலுத்தி ஊழியர்களை வேலைக்கு திரும்பவும், பணிநீக்கத்தை கைவிடவும் ஊழியர்களை விடுதலை செய்யவும் உயர்நீதிமன்ற அறிவுறுத்தியது. அந்த உத்தரவை மதிக்காமல் உயர்நீதிமன்ற முதன்மை பெஞ்சில் அரசு முரையிட்டது, தொடர்ந்து சட்டத்தின் போராட்டம் துவங்கியது. டெஸ்மா சட்டத்தை செல்லுபடியாகாது என உச்சநீதிமன்றம் பின்னர் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு டெஸ்மா சட்டம் நமது நாட்டின் தொழிலாளர் நடைமுறை சட்டங்களுக்கு முரணானது அல்லது எதிரானது என்ற முடிவை தருகிறது. படிப்படியாக் மீண்டும் ஊழியர்களை வேலையில் சேர்க்க நிற்பந்ததிற்குள்ளானது அரசு விளைவு வேலைநிறுத்தத்தை தூண்டியதாக 999 பேரை நிரந்தர பணிநீக்கம் செய்தது. பணிநீக்கத்திலும் ஜெயலலிதாவின் இராசி எண் 9 கூட்டுத்தொகை வரும்படி பார்த்துக்கொண்டது அரசு. ஜோதிடர்களுக்கு இருக்கும் சிறப்பும் மரியாதையும் மக்களுக்கும் ஊழியர்களுக்கும் இல்லை என்று வெளிப்படுத்துகிறதா ஜெயலலிதா அரசு?

இந்த காலகட்டத்தில் ஹிந்து நாளிதள் தலையங்கம் ‘substance of the ruling in this landmark case amounts to denial of justice’. It described the AIADMK government’s actions as “an extraordinary case of deployment of State power against its own employees” and “summary dismissal and the overnight arrest of hundreds of thousands of employees … are in profound conflict with fundamental rights, the basic norms of democracy, and enlightened self-interest” என்கிறது. ஜெயாலிதாவின் ஜனநாயகம், அரசியல் சட்டத்தை மதித்து நடக்கும் தன்மைக்கு இது ஒரு உதாரணம் மட்டுமே.

இவை அனைத்தையும் நிதிப்பற்றாக்குறை என காரணம் காட்டி செய்தது அதிமுக அரசு. நிதிப்பற்றாக்குறை என்பதை ஏற்றுக்கொண்டால் கூட அந்த காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஊதியம் அதிகரிக்கப்பட்டது ஏன் என்கிற கேள்வியும் சேர்ந்து வருகிறது. அதே கால கட்டத்தில் ஆடம்பர அரசு விழாக்கள் நடத்தப்பட்டன. சென்னையிலிருந்து செங்கல்பட்டு அளவு தூரத்தில் கூட ஹெலிகாப்டரில் பறந்தார் ஜெயலலிதா. அப்படியானால் எதற்காக ஜெயலலிதா இந்த முறைகேடான கடும் நடவடிக்கை எடுத்தார்?

அது தான் ஜெயலலிதாவின் அதிகார துஸ்பிரயோகம், ஈகோ. உரிமைகளை எச்சரித்து காலில் போட்டு மிதிக்க யாருக்கும் அதிகாரமில்லை என்பது கவனத்தில் கொள்ளவேண்டும். ஜெயலலிதா என்ற தனிநபரை விட மக்களின் உரிமை மரியாதைக்குரியது, அதை மதித்து நடக்கவேண்டிய கடமை முதல்வருக்கு உண்டு. மக்களுக்காக தான் முதல்வரே தவிர, முதல்வருக்காக மக்களில்லை. அதற்கு இது மன்னர் குடும்ப ஆட்சிமுறையுமில்லை, மக்களாட்சி முறை. ஜெயலலிதா அரசின் அதிகாரத்தின் முன் அடிப்படை உரிமைகளும், ஜனநாயகமும் கால்பந்தாக உதை படுகிறது.

மீண்டும் வாக்குகள் கேட்டு வீதியில், குடிசையில், வயற்பரப்பில் என வலம் வருகிறார் ஜெயலலிதா. வெற்றிபெற்றால் 4 ஆண்டுகளுக்கு மக்களை நசுக்கும் காட்சியும், கடைசி வருடத்தில் திருந்தியது போன்ற நடிப்பாட்சியும் காத்திருக்கும். தமிழ் மக்கள் மறதி மிக்கவர்களாயிற்றே. உதைக்கப்பட்ட பந்து அதற்கு இணையான அல்லது அதைவிட வேகமாக ஆடுகளத்தில் மேலெளும்பும், உதை வாங்கிய மக்கள்? மீண்டும் தேர்தலில் வீதிகளில் வருகிறார் டெஸ்மா வீராங்கனை.

கட்டுரையும் படமும்: திரு

Saturday, April 08, 2006

என்ன பண்பாடு ஆகா!

பார்ப்பனீயத்தின் முன்னர் மண்ணியிட்ட மன்னர்கள் முதல் குடியரசு தலைவர்கள் வரை இந்த நாட்டில் சாதாரணமானது தான். அதிகாரம் கையில் இருக்கையில் மடாதிபதிகள் ஆட்சிகளை அசைத்து விளையாடிய சித்து விளையாட்டுக்களை கண்டு தமிழ்நாடு பழக்கப்பட்டது தான்.

இதை நன்றாக புரிந்து வைத்திருப்பதால் தானோ ஜெயலலிதா கட்சியின் முதல் மட்ட தலைவர்கள் முதல் கடைக்கோடி தொண்டன் வரையில் மண்டியிட்டு காளை மாடு போல தலையாட்ட வைக்கிற வித்தையை கடந்த 15 ஆண்டுகளாக சிறப்பாக செய்கிறார். கடந்த காலங்களில் மேடைகளில் ஒரே ஒரு இருக்கை மட்டும் இருக்க மகாராணியார் வீற்றிருக்க வேட்பாளர்கள் பவ்வியமாக 180 டிகிரியில் வளைந்திருந்த காட்சி அதிகாரத்தின் ஆணவமாக தெரிந்தது. இந்த தேர்தலில் வண்டிக்கு முன்னால் குந்தவைக்கபட்ட நந்திகளாக வேட்பாளர்கள் இருக்க, காவல்தெய்வம் வண்டியில் அமர்ந்திருக்கிறார். எவ்வளவு மரியாதை, பண்பு, கண்ணியம். இது தான் நாட்டை நல்வழிப்படுத்த புறப்பட்டவர்களுக்கு அழகு.

ஜெயலலிதா கார் கூட கொடுத்து வச்சது தான் மண்டியிட வைக்க கரன்சியும், அதிகாரமும், அதற்கு வாலாட்டும் கூட்டமும் இருக்கும் வரை. மண்டியிடவும், காலில் விழுந்து கால்தூசாய் கிடக்க மீண்டும் தேர்வு செய்வோம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு. அதன் பின்னர் மண்டியிடுவது தமிழகத்தின் காலக்கடமையாகட்டும்.

திரு

படம் உதவி: தட்ஸ்தமிழ்.காம்

வைகோவிற்கு பகிரங்க கேள்விகள்

அரசியல் அரங்கில் தாங்கள் தற்போது எடுத்து வைக்கும் விதண்டா வாதங்கள் தாங்கள் இன்னும் ஒரு தலைவராக பக்குவப்படவில்லையோ என எண்ண வைக்கிறது.

உங்களது கட்சியும், கூட்டணியும் வெற்றி பெறவேண்டும் என்பதில் எந்த தவறுமில்லை. அது இயல்பானதே. சமீப காலங்களாக மேடைகளில் உண்மை நிலையை மறைக்கும் விதமாக முழங்குகிறீர்கள். அதன் தொடர்ச்சியாக தான் இந்த கேள்விகள்.

//வல்லரசான அமெரிக்காவில் கூட இயற்கைப் பேரழிவு பாதித்தபோது நிவாரண பணிகளை உடனடியாக மேற்கொள்ள முடியவில்லை. ஆறு மாத காலத்திற்குப் பின்பே சுனாமி நிவாரணப் பணிகளை அவர்களால் தீவிரப்படுத்த முடிந்தது.

ஆனால் தமிழ்நாட்டில் சுனாமி பாதித்த பகுதிகளில் மறு நாளே நிவாரணப் பணிகளை முதல்வர் தீவிரப்படுத்தி எந்த ஒரு முதல் அமைச்சரும் செய்ய முடியாத சிறப்பான ஆட்சியை செய்துள்ளார்.// என உங்களது மனம் கவர்ந்த தலைவியை குளிர்விக்க முழக்கமிடுகிறீர்கள்.


நீங்கள் அடிக்கடி மனசாட்சி என முழக்கமிடுவீர்களே அந்த மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் இது உண்மையா? சுனாமி நேரத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றில் கலந்துகொண்டவன் என்ற முறையில் கேட்கிறேன்.

மூன்று நாட்களுக்கும் மேலாக அழுகிய மனித உடல்கள் தமிழக கடற்கரைகளில் அவலமாக கிடந்து நாய்கள் கடித்து குதறியது. அரசின் மீட்பு பணிகள் கூட 3 நாட்களுக்கு பிறகு தான் நடந்தன என்பது கண்கூடான உண்மை. அதற்கு முன்னரே மக்களும் அவர்களது தலைவர்களுமே மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதும் நாடறிந்தது. மதத்தலைவர்கள் முதல் மக்கள் வரை கண்ணீர் விட்டு கதறிய வேளை அரசு என்ன செய்தது?

அ.தி.மு.க கரைவேட்டிகளிடம் அதிகாரத்தை கொடுத்து அரசு அதிகாரிகளை கட்டுப்பாட்டில் வைத்து தனக்கு வேண்டியவர்களுக்கு 500 ரூபாய் நோட்டுகள், அரிசி, பருப்பு என வழங்கி அரசியல் பார்த்தது அதிமுக அரசு. பாதிக்கப்பட்ட மக்கள் உடனடி உதவிக்காக பல கிலோமீட்டர் தொலைவு அலைக்கழிக்கப்பட்டனர். மன்னர் மாளிகையில் பிறந்த முதலமைச்சர் செல்வி ஹெலிகாப்டரில் பறந்தவாறு ஆறுதல் (!) வழங்கினார். பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல அரசியல் தலைவர்கள் நேரடியாக தரைவழியாக ஆறுதல் சொல்ல வந்ததை பார்த்து தங்கத்தாரகை (!) பாதிக்கப்பட்ட மக்களை தேர்வு செய்த மையங்களில் பார்த்தார்.

அறிவிக்கப்பட்ட மறுவாழ்வு திட்டங்களை முறைப்படி செயல்படுத்த மக்கள் அமைப்புகள், அரசியல் தலைவர்கள் அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழுக்களை உருவாக்க பலர் அறிவுறுத்தினர். அதை சற்றும் பொருட்படுத்தாமல் மறுபடியும் அ.தி.மு.க கரைவேட்டிகள் சொன்ன ஆட்களுக்குத் தான் நிவாரணம். கணிசமான தொகையை அ.தி.மு.க கட்சியின் கரைவேட்டிகள் கொள்ளையிட்டனர். அதன் பங்கு போயஸ் தோட்டம் முதல் மன்னார்குடி கும்பல் வரை போனதும் மறைக்கமுடியாத உண்மை.

கடற்கரை பகுதிகளின் நீண்டகால திட்டமிடலுக்காக தமிழ்நாட்டிற்கு மட்டும் உலக வங்கி கொடுத்த தொகை $434 மில்லியன். தமிழ்நாட்டு, பாண்டிச்சேரி வாழ் கடற்கரை மக்களின் கல்வி மற்றும் பயிற்சிக்காக $2.5 மில்லியன் வழங்கியது. ஆசிய வளர்ச்சி வங்கி (உலக வங்கி கிளை) $143.75 மில்லியன் தொகை மறுவாழ்வு திட்டங்களுக்காக போக்குவரத்து கட்டுமானங்கள், கிராம சீரமைப்பு, வாழ்வாதாரங்களை மீட்கும் திட்டங்களுக்கு தமிழ்நாட்டிற்கு வழங்கியது. ஜப்பான் நிதியிலிருந்து $2.5 மில்லியன் தொகை வழங்கப்பட்டது. இது தவிர மத்திய அரசு நிதி மற்ரும் பொதுமக்கள் கொடுத்த நிதி ஏராளம். இந்த பணத்தின் கணக்கு அல்லது அது சார்ந்த திட்டங்கள் எங்கே? வெளிப்படையான தன்மையே ஒரு நல்லாட்சிக்கு அடிப்படை (transparancy is the basis of good governance). அதனால் இந்த தகவல்களை உங்களால் ஆதாரத்துடன் விளக்கமுடியுமா? வீரச்சவடால்களை கேட்டு தமிழ்மக்கள் வாழ்வு புண்ணாகியது மட்டுமே மிச்சம்.

( கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமியால் கோடிமுனை பகுதியில் பாதிக்கப்பட்ட மகக்ளுக்காக குளச்சல் களிமார் பகுதியில் உப்பளத்தை நிரப்பி வீடுகட்ட சரிசெய்யப்படுகிற நிலம். படம் எடுக்கப்பட்டது டிசம்பர் 29, 2005ல். இதில் வைகோ சொன்ன படி அரசு வேகமான நடவடிக்கை எடுத்து கட்டிய வீடு எங்கே? வீடு கட்ட பணம் கொடுப்பதும் அரசு அல்ல, காரித்தாஸ் மற்றும் கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள்)

மக்கள் அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும் திரட்டிய உள்நாட்டு வெளி நாட்டு நிதியில் தான் அதிகமான புனரமைப்புகள் நடந்தன. இன்றும் நடைபெறுகிறது. மக்கள் இன்னும் தகரம், ஓலைக்கிற்று கொட்டகைகளிலும், வெலையில்லாமலும், மனதிடம் பாதிக்கப்பட்ட நிலையிலும் வாடும் அவலம் இன்றும் கடற்கரை கிராமங்களில் நிதர்சனம். கடந்த டிசம்பரில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீண்டும் ஆய்வு செய்ததில் நான் கண்ட உண்மையும் இதுவே. மக்களின் கண்ணீரை வார்த்தை பசப்புரைகளால் மறைத்துவிட முனைகிறீர்களா?

மக்கள் பசியில், வறுமையில், வேலையில்லாமல், பேரழிவுகளால் செத்துக்கொண்டிருக்கையில் ஹெலிகாப்டரில், குளிர்சாதன மேடைகளில் வலம் வருவது தான் முதல்வரின் சிக்கனமும், மக்கள் பணம் மீதுள்ள அக்கறையா? ரோம் பற்றி எரிந்தவேளை பிடில் வாசித்த சார் மன்னன் வரலாறு நீங்கள் மறந்திருக்கலாம்.

மக்கள் வாழ்விற்கு செல்ல வேண்டிய வரிப்பணம், உலக வங்கி கடன், மத்திய அரசு நிதி முதல்வர் செல்லும் வழியெங்கும் அலங்காரம் செய்யவும், அவருக்கு பிடித்தமான பச்சை நிறத்தில் கழிப்பறை கட்டவும் என வீணடிப்பது தான் உங்கள் பார்வையில் நல்லாட்சியா?

அய்யாவும், அண்ணாவும் தந்த வழியில் நடப்பதாக முழங்கும் நீங்கள் எங்காவது அய்யாவோ, அண்ணாவோ, மக்கள் தலைவர் காமராசரோ இப்படிப்பட்டவைகளை ஏற்றதாக படித்ததோ பார்த்ததோ உண்டா?
மக்கள் வாழ்வு மீது அக்கறை இருந்தால் கிராமப்புற வளர்ச்சி, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், கலாச்சாரம், போக்குவரத்து இவற்றில் கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை புள்ளிவிவர கணக்குடன் வெளியிடுங்களேன். அதில் தமிழகம் வாங்கிய கடன் தொகை, நிவாரண நிதி, மத்திய அரசு நிதி இவற்றையும் அது செலவிடப்பட்ட விதத்தையும் வெளியிடும் தைரியமும், நேர்மையும், யாருக்கும் வணங்காத தன்மையும் உங்களுக்கு உண்டா?

மக்களை ஏமாற்ற உணர்ச்சிகளை வீரச்சவடால்களில் குழைத்து சொல்லெறியும் உங்களுக்கு அரசியலில் நீடிக்க, கட்சியை தக்க வைக்க இதெல்லாம் தேவைப்படுகிறது. என்ன செய்வது, தமிழ்மக்களும் உணர்ச்சி வசப்படும் மக்கள், உங்கள் பேச்சில் மயங்கி விடலாம் என கனவு காண்கிறீர்கள். கனவு பலிக்குமா தேர்தல் பதில் சொல்லும்.

கேள்விகள் தொடரும்...

திரு