Friday, February 22, 2008

தமிழ்மொழி கல்வியும்! 'பிள்ளைபிடிகாரனும்'!


மிழ் மொழியை கற்பதை தமிழத்தின் பாடசாலைகளுக்கு கட்டாயமாக்கிய தமிழக அரசின் சட்டத்திற்கு தடை விதிக்காது, சட்டம் செல்லுமென்ற தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. வழக்கம் போலவே தமிழ் மொழி எதிர்ப்பாளர்களின் மந்திர முனகல்களும் கேட்க துவங்கியிருக்கின்றன.



தமிழ் மொழி கல்வியின் அவசியம் என்ன? தமிழ் மொழி கற்பதால் அப்படியென்ன சிறப்பு? தமிழக அரசு இதற்காக ஏன் சிறப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும்?

தமிழ்மொழி கல்வியின் முக்கியத்துவத்தை உணர ஆதிக்க அரசியல் கருத்தியலை புரிந்து கொள்வது அவசியம். இந்தி ஆதிக்கம், பார்ப்பனீய/இந்துத்துவ ஆதிக்கம் இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தே இயங்குகின்றன. ஆரியர்களது ‘வருகையின்’ பின்னர் பார்ப்பனர்களின் வேத பாடல்களை ஏற்காமல் மாற்று சிந்தனைகளை முன்வைத்த சிந்தனையாளர்களின் கருத்துக்கள் சிதைத்து அழிக்கப்பட்டன. பார்ப்பனர்களின் பாடல் வடிவிலான வேண்டுதல்களும், புலம்பல்களுமான வேதங்கள் எஞ்சியிருந்தன. அவை கூட சமஸ்கிருத மொழியில் இயற்றப்பட்டன. சமஸ்கிருதமும், வேதமும் பார்ப்பனரல்லாதவர்களுக்கு மறுக்கப்பட்டது. பின்னர் இடைக்காலத்தில் மாற்று சிந்தனை கருத்துக்கள் களவாடப்பட்டு வைதீக வைணவ (பார்ப்பன) மதத்தில் உட்சொருகப்பட்டு சொந்த சிந்தனைகள் போல மாற்றப்பட்டன.

மண்ணின் மக்களது இலக்கியங்களான தத்துவங்கள், சிந்தனைகளை அழித்ததன் வழி முதலில் கல்விக்கும், அறிவிற்கும், சிந்தனைக்கும் தடை செய்து, சிலரது ஆதிக்கத்தை நிறுவ வேதம் படிக்க, சமஸ்கிருதம் படிக்க தடை பயன்பட்டிருக்கிறது. அறிதலும், கற்றலும், சிந்தனையும் இணைந்த வளர்ச்சி விடுதலையான சுதந்திர பறவையாக மனிதனை செழுமைப்படுத்தும். இதற்கு மொழியின் பங்கு அவசியமானது. அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் மொழியின் சொற்கள், சொலவடைகள் சமூக, அரசியல் பின்னணியை கொண்டவை என்பதை கூர்ந்து கவனிக்கும் போது விளங்கும். குறிப்பாக நமது கிராமங்களில் சொல்லப்படும் பல வார்த்தைகளின் பின்னால் பல நூற்றாண்டின் வரலாற்றை உள்ளடக்கிய பெரும் சமூக அரசியலே இருக்கிறது. இன்று இத்தகைய வார்த்தைகள் எத்தகைய பின்னணியில், யாரால், எதற்காக பயன்படுத்தப்படுகிறது?

உதாரணமாக குமரிமாவட்டத்தில் குழந்தைகளை பயங்காட்ட (அச்சமூட்ட) ‘பிள்ளைபிடிகாரன் வாறான்’, ‘சாக்குக்காரன் வாறான்’, ‘மூக்கறுத்து போடுவேன்’ சொல்வார்கள். பள்ளிக்கு செல்லும் காலங்களில் எங்களிடையே ‘பிள்ளைபிடிகாரன்’ பற்றிய வதந்திகள்/செய்திகள் பரவி பயத்தை அதிகரிக்கும். அப்போதெல்லாம் ஆளரவமற்ற நல்லுச்சைக்கு (மதியம்) பள்ளியிலிருந்து வீட்டுக்கு சாப்பிட போக பெரிய கிளாஸ்ல படிக்கிற அக்காமாரோ, அண்ணன்மாரோ கூட தான் போவது வழக்கம். பெரிய மரங்கள், பாரம்தூக்கும் கற்கள் இவற்றின் பின்னால் யாராவது மறைந்திருக்கிறார்களோ என்ற பயமும் கலந்து ஓட்டமும், நடையுமாக வீட்டுக்கு வருவோம். இவ்வளவு அச்சமூட்டும் ‘பிள்ளைபிடிகாரன்’, ‘சாக்குக்காரன்’ யாரையும் அப்போதெல்லாம் நேரடியாக பார்த்ததில்லை. பிச்சையெடுத்தல், உடல் உறுப்பு கொள்ளை, குழந்தை தொழில், பாலியல் தொழில் போன்ற கொடுமைகளுக்காக இரக்கமற்று குழந்தைகளை கடத்துபவர்கள் இன்றைய காலத்து பிள்ளைபிடிகாரன்கள். பிள்ளைபிடிகாரன் என்ற சொல் தமிழ்மொழியில் எப்படி அன்றைய காலத்தில் உருவானது?

திருவிதாங்கூர் மன்னர்களது ஆட்சி பார்ப்பனீயத்தின் தொட்டிலாக விளங்கியது. கோயில்கள், அரண்மனைகள் போன்ற மிகப்பெரிய கட்டிடவேலைகள் நடைப்பெற்றது. பார்ப்பன மதத்தின் நம்பிக்கையான ‘பலிகொடுத்தல்’ என்னும் பெருங்கொடுமை இந்த மன்னர்களையும், அவர்களை சார்ந்த குடும்பங்கள், நம்பூதிரிகளையும் பிடித்திருந்த நோயாக இருந்தது. அரண்மனை, அணைகள், கோயில்கள் கட்டும் போது கட்டடம் நிற்கவேண்டுமென்றால் உயிர்பலி கொடுக்கவேண்டுமென்ற மூடநம்பிக்கை பல்லாயிரம் உயிர்களை ‘பலி’வாங்கியிருக்கிறது. பலியிடுதல் என்னும் சொல்லின் பின்னால் இருக்கும் சமூக அரசியலில் உயிரை காணாமல் போக்கப்பட்டு, உயிரை இழந்தவர்கள் அவர்ணர்களாக கருதப்பட்ட சூத்திர, பஞ்சம சாதியினர் என்பது வரலாறு. கட்டிடம் நிலைநிற்க உயிர்ப்பலி கொடுக்க பிள்ளைகளை, அதுவும் தலைப்பிள்ளைகளை ‘பிடிக்க’ (கடத்த) பிள்ளைபிடிகாரன்கள் சாக்குப்பைகளுடன் வருவார்களாம். அதன் தொடர்ச்சியாக பெற்றோர்கள் பேச்சுகளில் உருவான சொல் ‘பிள்ளைபிடிகாரன்’. (இன்று கட்டிடங்களை நிலைநிறுத்த, வளர்ச்சிபெற என்ற பெயரில் ‘வாஸ்து சாஸ்திரம்’ என்ற பெயரில் நடக்கிறது இன்னொருவகை மோசடி).

ஆக, தமிழ்மொழி கற்க அவசியமில்லையென்றால் தனது சமூகத்தின் வரலாற்றை, சமூக அரசியலை அறிந்து, கற்று, சிந்தித்து மனிதவிழுமியங்களுடன் சுதந்திரமான மனிதத்தை உருவாக்க இயலுமா? ‘பிள்ளைபிடிகாரன்’ போன்ற பல சொற்கள் நமது கிராமப்புற மக்களிடம் புதைந்து கிடக்கின்றன. அவற்றில் சமூக அரசியலை அறிய தேவை எழுகிறது. அடக்கப்பட்டு அடிமையாக இருந்த மக்களின் இவ்வகை சொற்களை இலக்கியகுருசாமி ஜெயமோகன் போன்ற ஆதிக்கசாதி கருத்தியலில் ஊறியவர்கள் எப்படி பயன்படுத்திவருகிறார்கள் என்பது அப்போது வெளிச்சத்திற்கு வரும். சாதி,மத ஆதிக்கத்திலிருந்து விடுபட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்மொழிவழி கல்வி அடிப்படை. தமிழ்மொழி கல்வியில் எதை படிப்பது, எப்படி படிப்பது, அதன்வழி என்ன வகையான சமூகத்தை கட்டமைப்பது என்பதில் கவனம் செலுத்துவதும் அவசியம். மூடநம்பிக்கையையும், மதவெறியையும், சாதிவெறியையும் உருவாக்காதாவகையில் தமிழ்மொழி கல்வி அமையவேண்டும்.

பல மாதங்களுக்கு முன்னர் “எனவே தமிழில் எழுதுவது, வலைப்பதிவில் எழுதுவது, பின்னூட்டங்கள் இடுவது, ஆகியவற்றை நிறுத்தி விட முடிவு செய்துவிட்டேன். தமிழில் நான் படிப்பது குறைவு, இப்போது அதை இன்னும் குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளேன். ஏற்கனவே எழுதி அரைகுறையாக இருக்கும் சில கட்டுரைகள் முடிக்கப்பட்டு வெளியாகலாம் அல்லது கணினியில் உள்ள குப்பைத் தொட்டியில் உயிரிழக்கலாம்.” என்று சபதமெடுத்த திரு. ரவி ஸ்ரீநிவாஸ் திண்ணைக்கு (தமிழில்) எழுதிய மடல் படித்தேன். இனி ரவியின் மடலின் பகுதிகளும் பதில்களும்.

“இங்கு மொழி என்பதை குறித்த அரசியல் ஒரு புறம் இருந்தாலும், அரசு எதைக் கட்டாயமாக்கலாம், எதற்காக என்ற கேள்விகள் எழுகின்றன. தடுப்பூசியை கட்டாயமாக்குவதை புரிந்து கொள்ள முடியும், ஆனால் ஒரு மொழியை பள்ளியிலும், கல்லூரிகளிலும் கட்டாயமாக்க வேண்டுமா, தனி நபர்/பெற்றோர் தெரிவுகள் முக்கியமானவை இல்லையா. தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும், கொண்டிருக்காவிட்டாலும் அவர்கள் தமிழை கட்டாயம் படித்துத்தான் ஆக வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது தனி நபர் உரிமையில் தலையிடுவதாகாதா போன்று பல கேள்விகள் எழுகின்றன.” என்கிறார் ரவி.

உடல்ரீதியாக நோய் வருகிறது மருத்துவரிடம் சென்று மருத்துவம் பார்த்து, ஓய்வெடுத்தால் குணமாகிவிடுகிறது. தொற்றுநோய் வந்து ஆபத்து வராமல் தடுக்க தடுப்பூசி போடப்படுகிறது. தொற்றுநோய் வந்து அதன் அழிவுகளின் பின்னர் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படுகிறது. நோய்க்கு எதிர்தன்மை கொண்ட பாக்டீரியாக்களை உருவாக்கும் மருத்துவ அணுகுமுறை தான் தடுப்பூசி. எனக்கு நோய் வந்தாலும் பரவாயில்லை, தடுப்பூசி போட்டுக்கொள்ளமாட்டேன் என்பவர் தன்னை மட்டுமல்ல, குடுப்பத்தினர் உள்ளிட்ட சமூகத்தின் மக்கள் அனைவருக்கும் ஆபத்தை உருவாக்கவே முனைகிறார். ஆக, தடுப்பூசி போடுவது என்பது தனிநபர் சுதந்திரம் சார்ந்த பிரச்சனையல்ல, சமூகத்தின் இருப்பையும், பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும் உள்ளடக்கியது.

நமது சமூகம் பார்ப்பனீயம் என்னும் தீராத தொற்றுநோயால் பீடிக்கப்பட்டிருக்கிறது. இந்த நோய் பிடித்தால் மட்டுமே சமூகத்தின் முக்கிய இடங்களை, வாய்ப்புகளை பெற இயலுமென்ற கண்ணோட்டமும், நிலையும் உருவாக்கப்பட்டிருக்கிறது. பார்ப்பனீயம் என்னும் தொற்றுவியாதி இன்று பல வகையினருக்கும் இந்த வியாதி பரவியிருக்கிறது. நோய் தொற்றிய அளவில் மாறுபாடு இருக்கலாம். பார்ப்பனீய கருத்தியலையும் ஒழித்தாலொழிய சமத்துவம், நீதி, மானுட விடுதலை என்ற இலக்குகளை அடைய இயலாது. உண்டு, உறங்கி, பதவியில் அமர்ந்து, பணம் சேர்த்து, திருமணம் செய்து, குழந்தை பெற்று, வாரிசுக்கு சொத்துக்களை கொடுத்து, செத்துபோகும் வாழ்க்கை மட்டுமல்ல மனித சமுதாயத்தின் இலட்சியம். விலங்கினத்திலிருந்து மனித இனம் வேறுபடுகிற உயரிய இலட்சியங்களை/விழுமியங்களை அடைய கல்வி முக்கிய பங்கு வகிக்கவேண்டும். அந்த வகையில், பார்ப்பனீய தொற்றுநோயின் காரணிகளை, பின்னணியை அறிவதும், அவற்றை எதிர்கொள்ளும் தடுப்பூசிகளை மட்டுமல்ல பார்ப்பனீய நோயை ஒழிக்கும் மருத்துவத்தையும் உருவக்கவேண்டும். பார்ப்பனீய நோய் நீங்கி மனிதர்களாக எல்லோரும் வாழ தமிழ்மொழி கல்வி தமிழர்களுக்கு அவசியம். சமூகத்தின் ஒட்டுமொத்த நன்மை கருதிய தமிழ் மொழி கல்வி அறிவிப்போடு நில்லாமல், தரமான மாற்றம் தரும் மாற்று கல்வியை உருவாக்க வேண்டும். தனிமனித சுதந்திரம் என்பது சமூக விடுதலையிலிருந்து தான் பிறக்க இயலும். தமிழ்மொழி கல்விக்கு எதிரான தனிநபர் சுதந்திரம் என்பதான சொத்தையான வாதங்கள் ஆதிக்க எண்ணம் கொண்டவையாக மட்டுமே இருக்க முடியும்.

“தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், தமிழைப் படித்தவர்களை அரசு சமமாக நடத்துகிறதா. இட ஒதுக்கீடு என்ற பெயரில் 69% இடங்களை சாதி,மத ரீதியாக ஒதுக்கி பாகுபாடு காட்டும் அரசுக்கும், அதை ஆதரிப்போருக்கும் தமிழை திணிக்க என்ன தார்மீக உரிமை இருக்கிறது.” என்கிறார் ரவி.

பார்ப்பனீய கொடுமைகளின் விளைவான ஏற்றதாழ்வான சமூகத்தில் செய்யப்படவேண்டிய கடமையான சமூகநீதிக்கான இடப்பங்கீடு கொள்கை பற்றிய தவறான கண்ணோட்டமும், திட்டமிட்ட இப்படியான பரப்புரைகளுமே தமிழ்மொழி கல்வியின் அவசியத்தை வலியுறுத்துகிறது. ஆதிக்கவாதிகளுக்கு அது அவசியமில்லாமல் இருக்கலாம். ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்மொழி கல்வி தரமான சிந்தனைகளை உருவாக்கும்.