Friday, February 22, 2008

தமிழ்மொழி கல்வியும்! 'பிள்ளைபிடிகாரனும்'!


மிழ் மொழியை கற்பதை தமிழத்தின் பாடசாலைகளுக்கு கட்டாயமாக்கிய தமிழக அரசின் சட்டத்திற்கு தடை விதிக்காது, சட்டம் செல்லுமென்ற தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. வழக்கம் போலவே தமிழ் மொழி எதிர்ப்பாளர்களின் மந்திர முனகல்களும் கேட்க துவங்கியிருக்கின்றன.தமிழ் மொழி கல்வியின் அவசியம் என்ன? தமிழ் மொழி கற்பதால் அப்படியென்ன சிறப்பு? தமிழக அரசு இதற்காக ஏன் சிறப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும்?

தமிழ்மொழி கல்வியின் முக்கியத்துவத்தை உணர ஆதிக்க அரசியல் கருத்தியலை புரிந்து கொள்வது அவசியம். இந்தி ஆதிக்கம், பார்ப்பனீய/இந்துத்துவ ஆதிக்கம் இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தே இயங்குகின்றன. ஆரியர்களது ‘வருகையின்’ பின்னர் பார்ப்பனர்களின் வேத பாடல்களை ஏற்காமல் மாற்று சிந்தனைகளை முன்வைத்த சிந்தனையாளர்களின் கருத்துக்கள் சிதைத்து அழிக்கப்பட்டன. பார்ப்பனர்களின் பாடல் வடிவிலான வேண்டுதல்களும், புலம்பல்களுமான வேதங்கள் எஞ்சியிருந்தன. அவை கூட சமஸ்கிருத மொழியில் இயற்றப்பட்டன. சமஸ்கிருதமும், வேதமும் பார்ப்பனரல்லாதவர்களுக்கு மறுக்கப்பட்டது. பின்னர் இடைக்காலத்தில் மாற்று சிந்தனை கருத்துக்கள் களவாடப்பட்டு வைதீக வைணவ (பார்ப்பன) மதத்தில் உட்சொருகப்பட்டு சொந்த சிந்தனைகள் போல மாற்றப்பட்டன.

மண்ணின் மக்களது இலக்கியங்களான தத்துவங்கள், சிந்தனைகளை அழித்ததன் வழி முதலில் கல்விக்கும், அறிவிற்கும், சிந்தனைக்கும் தடை செய்து, சிலரது ஆதிக்கத்தை நிறுவ வேதம் படிக்க, சமஸ்கிருதம் படிக்க தடை பயன்பட்டிருக்கிறது. அறிதலும், கற்றலும், சிந்தனையும் இணைந்த வளர்ச்சி விடுதலையான சுதந்திர பறவையாக மனிதனை செழுமைப்படுத்தும். இதற்கு மொழியின் பங்கு அவசியமானது. அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் மொழியின் சொற்கள், சொலவடைகள் சமூக, அரசியல் பின்னணியை கொண்டவை என்பதை கூர்ந்து கவனிக்கும் போது விளங்கும். குறிப்பாக நமது கிராமங்களில் சொல்லப்படும் பல வார்த்தைகளின் பின்னால் பல நூற்றாண்டின் வரலாற்றை உள்ளடக்கிய பெரும் சமூக அரசியலே இருக்கிறது. இன்று இத்தகைய வார்த்தைகள் எத்தகைய பின்னணியில், யாரால், எதற்காக பயன்படுத்தப்படுகிறது?

உதாரணமாக குமரிமாவட்டத்தில் குழந்தைகளை பயங்காட்ட (அச்சமூட்ட) ‘பிள்ளைபிடிகாரன் வாறான்’, ‘சாக்குக்காரன் வாறான்’, ‘மூக்கறுத்து போடுவேன்’ சொல்வார்கள். பள்ளிக்கு செல்லும் காலங்களில் எங்களிடையே ‘பிள்ளைபிடிகாரன்’ பற்றிய வதந்திகள்/செய்திகள் பரவி பயத்தை அதிகரிக்கும். அப்போதெல்லாம் ஆளரவமற்ற நல்லுச்சைக்கு (மதியம்) பள்ளியிலிருந்து வீட்டுக்கு சாப்பிட போக பெரிய கிளாஸ்ல படிக்கிற அக்காமாரோ, அண்ணன்மாரோ கூட தான் போவது வழக்கம். பெரிய மரங்கள், பாரம்தூக்கும் கற்கள் இவற்றின் பின்னால் யாராவது மறைந்திருக்கிறார்களோ என்ற பயமும் கலந்து ஓட்டமும், நடையுமாக வீட்டுக்கு வருவோம். இவ்வளவு அச்சமூட்டும் ‘பிள்ளைபிடிகாரன்’, ‘சாக்குக்காரன்’ யாரையும் அப்போதெல்லாம் நேரடியாக பார்த்ததில்லை. பிச்சையெடுத்தல், உடல் உறுப்பு கொள்ளை, குழந்தை தொழில், பாலியல் தொழில் போன்ற கொடுமைகளுக்காக இரக்கமற்று குழந்தைகளை கடத்துபவர்கள் இன்றைய காலத்து பிள்ளைபிடிகாரன்கள். பிள்ளைபிடிகாரன் என்ற சொல் தமிழ்மொழியில் எப்படி அன்றைய காலத்தில் உருவானது?

திருவிதாங்கூர் மன்னர்களது ஆட்சி பார்ப்பனீயத்தின் தொட்டிலாக விளங்கியது. கோயில்கள், அரண்மனைகள் போன்ற மிகப்பெரிய கட்டிடவேலைகள் நடைப்பெற்றது. பார்ப்பன மதத்தின் நம்பிக்கையான ‘பலிகொடுத்தல்’ என்னும் பெருங்கொடுமை இந்த மன்னர்களையும், அவர்களை சார்ந்த குடும்பங்கள், நம்பூதிரிகளையும் பிடித்திருந்த நோயாக இருந்தது. அரண்மனை, அணைகள், கோயில்கள் கட்டும் போது கட்டடம் நிற்கவேண்டுமென்றால் உயிர்பலி கொடுக்கவேண்டுமென்ற மூடநம்பிக்கை பல்லாயிரம் உயிர்களை ‘பலி’வாங்கியிருக்கிறது. பலியிடுதல் என்னும் சொல்லின் பின்னால் இருக்கும் சமூக அரசியலில் உயிரை காணாமல் போக்கப்பட்டு, உயிரை இழந்தவர்கள் அவர்ணர்களாக கருதப்பட்ட சூத்திர, பஞ்சம சாதியினர் என்பது வரலாறு. கட்டிடம் நிலைநிற்க உயிர்ப்பலி கொடுக்க பிள்ளைகளை, அதுவும் தலைப்பிள்ளைகளை ‘பிடிக்க’ (கடத்த) பிள்ளைபிடிகாரன்கள் சாக்குப்பைகளுடன் வருவார்களாம். அதன் தொடர்ச்சியாக பெற்றோர்கள் பேச்சுகளில் உருவான சொல் ‘பிள்ளைபிடிகாரன்’. (இன்று கட்டிடங்களை நிலைநிறுத்த, வளர்ச்சிபெற என்ற பெயரில் ‘வாஸ்து சாஸ்திரம்’ என்ற பெயரில் நடக்கிறது இன்னொருவகை மோசடி).

ஆக, தமிழ்மொழி கற்க அவசியமில்லையென்றால் தனது சமூகத்தின் வரலாற்றை, சமூக அரசியலை அறிந்து, கற்று, சிந்தித்து மனிதவிழுமியங்களுடன் சுதந்திரமான மனிதத்தை உருவாக்க இயலுமா? ‘பிள்ளைபிடிகாரன்’ போன்ற பல சொற்கள் நமது கிராமப்புற மக்களிடம் புதைந்து கிடக்கின்றன. அவற்றில் சமூக அரசியலை அறிய தேவை எழுகிறது. அடக்கப்பட்டு அடிமையாக இருந்த மக்களின் இவ்வகை சொற்களை இலக்கியகுருசாமி ஜெயமோகன் போன்ற ஆதிக்கசாதி கருத்தியலில் ஊறியவர்கள் எப்படி பயன்படுத்திவருகிறார்கள் என்பது அப்போது வெளிச்சத்திற்கு வரும். சாதி,மத ஆதிக்கத்திலிருந்து விடுபட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்மொழிவழி கல்வி அடிப்படை. தமிழ்மொழி கல்வியில் எதை படிப்பது, எப்படி படிப்பது, அதன்வழி என்ன வகையான சமூகத்தை கட்டமைப்பது என்பதில் கவனம் செலுத்துவதும் அவசியம். மூடநம்பிக்கையையும், மதவெறியையும், சாதிவெறியையும் உருவாக்காதாவகையில் தமிழ்மொழி கல்வி அமையவேண்டும்.

பல மாதங்களுக்கு முன்னர் “எனவே தமிழில் எழுதுவது, வலைப்பதிவில் எழுதுவது, பின்னூட்டங்கள் இடுவது, ஆகியவற்றை நிறுத்தி விட முடிவு செய்துவிட்டேன். தமிழில் நான் படிப்பது குறைவு, இப்போது அதை இன்னும் குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளேன். ஏற்கனவே எழுதி அரைகுறையாக இருக்கும் சில கட்டுரைகள் முடிக்கப்பட்டு வெளியாகலாம் அல்லது கணினியில் உள்ள குப்பைத் தொட்டியில் உயிரிழக்கலாம்.” என்று சபதமெடுத்த திரு. ரவி ஸ்ரீநிவாஸ் திண்ணைக்கு (தமிழில்) எழுதிய மடல் படித்தேன். இனி ரவியின் மடலின் பகுதிகளும் பதில்களும்.

“இங்கு மொழி என்பதை குறித்த அரசியல் ஒரு புறம் இருந்தாலும், அரசு எதைக் கட்டாயமாக்கலாம், எதற்காக என்ற கேள்விகள் எழுகின்றன. தடுப்பூசியை கட்டாயமாக்குவதை புரிந்து கொள்ள முடியும், ஆனால் ஒரு மொழியை பள்ளியிலும், கல்லூரிகளிலும் கட்டாயமாக்க வேண்டுமா, தனி நபர்/பெற்றோர் தெரிவுகள் முக்கியமானவை இல்லையா. தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும், கொண்டிருக்காவிட்டாலும் அவர்கள் தமிழை கட்டாயம் படித்துத்தான் ஆக வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது தனி நபர் உரிமையில் தலையிடுவதாகாதா போன்று பல கேள்விகள் எழுகின்றன.” என்கிறார் ரவி.

உடல்ரீதியாக நோய் வருகிறது மருத்துவரிடம் சென்று மருத்துவம் பார்த்து, ஓய்வெடுத்தால் குணமாகிவிடுகிறது. தொற்றுநோய் வந்து ஆபத்து வராமல் தடுக்க தடுப்பூசி போடப்படுகிறது. தொற்றுநோய் வந்து அதன் அழிவுகளின் பின்னர் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படுகிறது. நோய்க்கு எதிர்தன்மை கொண்ட பாக்டீரியாக்களை உருவாக்கும் மருத்துவ அணுகுமுறை தான் தடுப்பூசி. எனக்கு நோய் வந்தாலும் பரவாயில்லை, தடுப்பூசி போட்டுக்கொள்ளமாட்டேன் என்பவர் தன்னை மட்டுமல்ல, குடுப்பத்தினர் உள்ளிட்ட சமூகத்தின் மக்கள் அனைவருக்கும் ஆபத்தை உருவாக்கவே முனைகிறார். ஆக, தடுப்பூசி போடுவது என்பது தனிநபர் சுதந்திரம் சார்ந்த பிரச்சனையல்ல, சமூகத்தின் இருப்பையும், பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும் உள்ளடக்கியது.

நமது சமூகம் பார்ப்பனீயம் என்னும் தீராத தொற்றுநோயால் பீடிக்கப்பட்டிருக்கிறது. இந்த நோய் பிடித்தால் மட்டுமே சமூகத்தின் முக்கிய இடங்களை, வாய்ப்புகளை பெற இயலுமென்ற கண்ணோட்டமும், நிலையும் உருவாக்கப்பட்டிருக்கிறது. பார்ப்பனீயம் என்னும் தொற்றுவியாதி இன்று பல வகையினருக்கும் இந்த வியாதி பரவியிருக்கிறது. நோய் தொற்றிய அளவில் மாறுபாடு இருக்கலாம். பார்ப்பனீய கருத்தியலையும் ஒழித்தாலொழிய சமத்துவம், நீதி, மானுட விடுதலை என்ற இலக்குகளை அடைய இயலாது. உண்டு, உறங்கி, பதவியில் அமர்ந்து, பணம் சேர்த்து, திருமணம் செய்து, குழந்தை பெற்று, வாரிசுக்கு சொத்துக்களை கொடுத்து, செத்துபோகும் வாழ்க்கை மட்டுமல்ல மனித சமுதாயத்தின் இலட்சியம். விலங்கினத்திலிருந்து மனித இனம் வேறுபடுகிற உயரிய இலட்சியங்களை/விழுமியங்களை அடைய கல்வி முக்கிய பங்கு வகிக்கவேண்டும். அந்த வகையில், பார்ப்பனீய தொற்றுநோயின் காரணிகளை, பின்னணியை அறிவதும், அவற்றை எதிர்கொள்ளும் தடுப்பூசிகளை மட்டுமல்ல பார்ப்பனீய நோயை ஒழிக்கும் மருத்துவத்தையும் உருவக்கவேண்டும். பார்ப்பனீய நோய் நீங்கி மனிதர்களாக எல்லோரும் வாழ தமிழ்மொழி கல்வி தமிழர்களுக்கு அவசியம். சமூகத்தின் ஒட்டுமொத்த நன்மை கருதிய தமிழ் மொழி கல்வி அறிவிப்போடு நில்லாமல், தரமான மாற்றம் தரும் மாற்று கல்வியை உருவாக்க வேண்டும். தனிமனித சுதந்திரம் என்பது சமூக விடுதலையிலிருந்து தான் பிறக்க இயலும். தமிழ்மொழி கல்விக்கு எதிரான தனிநபர் சுதந்திரம் என்பதான சொத்தையான வாதங்கள் ஆதிக்க எண்ணம் கொண்டவையாக மட்டுமே இருக்க முடியும்.

“தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், தமிழைப் படித்தவர்களை அரசு சமமாக நடத்துகிறதா. இட ஒதுக்கீடு என்ற பெயரில் 69% இடங்களை சாதி,மத ரீதியாக ஒதுக்கி பாகுபாடு காட்டும் அரசுக்கும், அதை ஆதரிப்போருக்கும் தமிழை திணிக்க என்ன தார்மீக உரிமை இருக்கிறது.” என்கிறார் ரவி.

பார்ப்பனீய கொடுமைகளின் விளைவான ஏற்றதாழ்வான சமூகத்தில் செய்யப்படவேண்டிய கடமையான சமூகநீதிக்கான இடப்பங்கீடு கொள்கை பற்றிய தவறான கண்ணோட்டமும், திட்டமிட்ட இப்படியான பரப்புரைகளுமே தமிழ்மொழி கல்வியின் அவசியத்தை வலியுறுத்துகிறது. ஆதிக்கவாதிகளுக்கு அது அவசியமில்லாமல் இருக்கலாம். ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்மொழி கல்வி தரமான சிந்தனைகளை உருவாக்கும்.

16 பின்னூட்டங்கள்:

Anonymous said...

திரு அவர்களே, ஐயா ராம.கி ஆங்கிலத்தின் தாக்கத்தால் தமிங்கலமும், தமிலங்லரும் பெருகுவதால் தமிழுக்கு பின்னடைவு என்கிறார். நீங்கள் பார்பனீயம் என்கிறீர்கள். பார்பனீயம் சம்ச்கிருதத்துடன் இணைத்து
பார்க்கப்படுகிறது, ஆங்கிலத்துடன்
அல்லவே. ஆங்கிலத்திற்கு முன்னுரிமை கொடுப்பதே
பார்பனீயம் என்கிறீர்களா.
எனக்கு புரியவில்லை.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

திரு,

தடுப்பூசி, தாய்மொழி வழிக்கல்வி - நல்ல உவமை.

பலரும் இந்த வழக்கின் தாய்மொழி வழிக் கல்விக்கான ஆதரவுத் தீர்ப்பாக குறிப்பிடுகிறார்கள். ஆனால், இது தமிழை ஒரு மொழிப்பாடமாக கற்பிப்பது குறித்த வழக்கு அல்லவா? தவிர, முன்பு இது தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்க்கு மட்டுமே கட்டாயம் என்பது போல் படித்து இருந்தேன். தற்போது இது அனைவருக்கும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதா? பிற மொழியினருக்குத் தங்கள் மொழிப் பாடங்களைக் கூடுதலாகப் படிக்கும் வாய்ப்பு உள்ளதா? அல்லது, காலப்போக்கில் இந்தத் தெரிவுகள் நீக்கப்பட்டு விடும் என்று அஞ்சுகிறார்களா? இது குறித்து தெளிவான விவரங்களைத் தர வேண்டுகிறேன். நன்றி.

Anonymous said...

திரு. திரு அவர்களுக்கு. தமிழை கட்டாயம் படிக்கவேண்டுமெனச் சொல்வதற்கு நீங்க யார்? கட்டாய மதமாற்றத்திற்கும் இதுக்கும் குறைந்தபட்சம் ஆறு வித்தியாசங்களாவது இருக்குதா? கட்டாயமாய் தமிழைப் படிக்கவைத்து ஆனந்த விகடனுக்கும், ஆடுவோம் பாடுவோம் டி.வி நிகழ்ச்சிகளுக்கும் நுகர்வுச் சந்தையை உருவாக்கித் தருவதை விட வேறென்ன சாதிச்சீங்க?
கட்டாயம் தமிழ் படிக்கணும்னு சொல்லும்போது எழவு இதுல பாஸ் பண்ணினா போதும்டா என ஒரு வெறுப்புணர்வு ஏற்படுதா இல்லியா? இதுவரைக்கும் கட்டாயமில்லாம தமிழ் படிச்சவங்கிட்டேர்ந்து கத்துக்கிறதுக்கு ஒண்ணுமில்லியா? பார்ப்பனர்கள் தமிழ் படிக்கலியா? போங்கப்பா கை வலிக்குது...

இனி கட்டாய சேலை கட்டும் சட்டமும், கட்டாயம் துவைத்த அண்டர்வேர் போடும் சட்டமும் எப்ப வருமோண்ணு பயமாயிருக்கு..

பின் குறிப்பு: என்னுடைய அண்டர்வேர்கள் பலவும் அழுக்கானவை

thiru said...

அனானி,

இராம.கி அய்யாவின் பதிவிற்கும் இந்த பதிவிற்கும் எந்த முரணுமில்லை. சமூக அரசியல் பார்வையில் ஒரு கோணத்தில் இந்த பதிவு தமிழ் மொழி கல்வியின் அவசியத்தை பற்றி அமைகிறது. இராம.கி அய்யா ஆங்கில மோகத்தில் அலையும் மத்தியதர தங்கிலிஸ்காரர்கள் மொழியை சிதைப்பதை பற்றிய பார்வையை தருகிறார். தங்கிலிஸ்காரர்களாக முதலில் உருவெடுத்தவர்கள் யார் என்று சிந்தியுங்கள் சில உண்மைகள் தெரியும்.

ஆங்கிலமோகம் தவிர்க்கப்பட வேண்டியது. அவசியத்திற்காக எந்த மொழியையும் கற்றுக்கொள்ளலாம், ஆனால் அதற்காக தாய்மொழியை படிக்கமாட்டோம், படிக்கவிடமாட்டோமென அடம்பிடிப்பது ஆபத்தான போக்கு. தமிழ் கட்டாய பாடம் சட்டத்திற்கு எதிராக கன்னியாகுமரியிலிருந்து வழக்கு தொடுத்த மலையாள சமாஜம், யோகஷேமா சபா ஆகிய சங்கங்களை இன்று நடத்துபவர்களுக்கும், தாய்தமிழகத்தோடு குமரிமாவட்டம் இணைய நடந்த போராட்டதை 1956ல் எதிர்த்தவர்களுக்கும் இருந்த அரசியல் என்ன என்பதையும் அறியவேண்டும்.

மலையாள சமாஜம் வைத்து எதிர்க்குமளவு மலையாள மொழி பற்று அவர்களுக்கு இருக்கிறது. நான் படித்த பள்ளியில் சுமார் 3000 மாணவர்கள் படித்து வந்தனர். 10 மாணவர்கள் கூட மலையாளம் படிக்க இல்லை. அப்படியிருந்தும் இரு மலையாள ஆசிரியர் நியமிக்கப்பட்டிருந்தார். இன்றுவரையில் அப்படித்தான் தொடர்கிறது. ஆக மலையாளத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் மலையாளத்தையும் கற்பதற்கு எதிர்ப்புகள் இல்லை. வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

Anonymous said...

”ஆக மலையாளத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் மலையாளத்தையும் கற்பதற்கு எதிர்ப்புகள் இல்லை. வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.”


மலையாளம் அல்லது தமிழ் என்று இல்லாமல் தமிழ்,ஆங்கிலம் (இரண்டும் கட்டாயம்) விருப்ப
மொழியாக மலையாளம் என்று
இருப்பதை அவர்கள் எதிர்க்கிறார்கள்.

thiru said...

ரவி,

தமிழ் மொழியை தமிழகத்தின் அனைத்து துவக்கப்பள்ளிகள், இடைநிலை பள்ளிகள் மற்றும் உயர்நிலை பள்ளிகளில் ஆங்கில மொழியோடு கட்டாயபாடமாக கற்பிக்க 2006ல் ஜூன் மாதம் தமிழக சட்டமன்றத்தால் கொண்டுவரப்பட்டதே இச்சட்டம் (Tamil Nadu Learning Act, 2006).

நீங்கள் குறிப்பிட்டது போல தமிழை ஒரு மொழிப்பாடமாக கற்பிப்பது பற்றியதே இச்சட்டம். சட்டத்தில் தமிழ் மொழிவழி அனைத்து பாடங்களையும் கற்க வலியுறுத்தவில்லை. ஆங்கில மொழிவழி பாடசாலை அதிபர்கள் தமிழ் மொழியை கற்பிக்க எதிர்ப்புகள் தெரிவித்ததனால் உருவானதே இச்சட்டம், பதிவில் தமிழ் மொழிவழி கல்வி என்று அமைந்துள்ளதை திருத்தம் செய்கிறேன்.

இச்சட்டத்தின் படி;
தமிழகத்தில் இயங்குகிற தனியார் மற்றும் அரசு துவக்கப் பாடசாலைகள், இடைநிலை பாடசாலைகள், உயர்நிலை மற்றும் மேல்நிலை பாடசாலைகள் இச்சட்டத்தின் ஆளுகைக்கு உட்ப்பட்டது. இச்சட்டம் அரசு உதவி பெறாத பாடசாலைகள் மற்றும் சிறுபான்மையினர் பாடசாலைகளுக்கும் பொருந்தும்.

ஆங்கில மொழிவழி பாடசாலைகள், ஆங்கிலோ-இந்தியன் அல்லது ஓரியண்டல் பாடசாலைகள், மெட்ரிக்குலேசன் பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்து பாடசாலைகளையும் இச்சட்டம் கட்டுப்படுத்துகிறது.

ஒன்றாம் வகுப்பில் 2006-2007 கல்வியாண்டிலிருந்து தமிழை கட்டாய பாடமாக பயிற்றுவிப்பது. 2007-2008 கல்வியாண்டு முதல் அதையே இரண்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் நீட்டிப்பது. கல்வியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் கட்டாய மொழிப்பாடங்களாக அமையும். கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்கள் வழக்கம் போலவே பயிற்றுவித்தல்.

தமிழ் அல்லது ஆங்கிலம் தாய்மொழியில்லாத மாணவர்களுக்கு அவர்களது தாய்மொழியை விருப்பபாடமாக தேர்வு செய்யலாம்.

சட்டத்தில் உள்ள சாராம்சம் இதுதான். ஆக தமிழ் மற்றும் ஆங்கிலம் அல்லாத பிறமொழிகளை தாய்மொழியாக கொண்ட மாணவர்களுக்கு விருப்ப பாடமாக அவர்களது மொழியை தேர்வு செய்யும் உரிமை உண்டு. சட்டத்தில் // Students who do not have either Tamil or English as their mother tongue can study their mother tongue as an optional subject.// குறிப்பிடப்பட்டுள்ளபடி இது பிறமொழி மாணவர்களின் உரிமை. இதில் அச்சத்திற்கு இடமில்லை. அவர்களது மொழி தாய்மொழியாக அமைவதால் படிப்பதில் அதிக சிரமம் இருக்காது, இருப்பினும் மற்ற மாணவர்களை விட அதிகமாக ஒரு மொழியை படிக்க வேண்டியது வரலாம். இது குறையாக தெரியவில்லை. தாய்மொழியை வீட்டில் பேசுவதால் இந்த மாணவர்களுக்கு இது பெரிய பிரச்சனையில்லை.
நான் படித்த பாடசாலையில் எனது வகுப்பில் படித்த மாணவர்களில் இருவர் மலையாளம் படித்து வந்தனர். அதேவேளையில் இன்னொரு மாணவி தாய்மொழி மலையாளமாக இருந்தும் தமிழையே முதல் மொழியாக படித்தார். மற்ற மலையாள மாணவர்களோடு சரளமாக மலையாளம் எழுதவும், பேசவும் அவரால் முடிந்தது. மலையாளம் தாய்மொழியாக கொண்டு, மலையாளம் படிக்க வாய்ப்புகள் பாடசாலைகளில் இருந்தும் பல மாணவர்கள் அந்த பள்லியில் அப்போது தமிழையே படித்து வந்தனர்.

குமரி மாவட்டத்தை பொறுத்தவரையில் பெரும்பாலான கல்விநிலையங்களில் மலையாள மொழிவழி கல்வி தான் நாடு விடுதலை பெறும் வரையில் இருந்து வந்தது. எனது அப்பா மலையாள மொழிவழியில் கல்வி கற்றவர். மலையாளம் பேச, எழுத, படிக்க அவரால் முடியும். தமிழை தனது சொந்த ஆர்வத்தின் காரணமாக முயன்று படித்ததால் தமிழ் நாளிதழ்கள் துவங்கி, புத்தகங்கள் வரை படித்தார். எனக்கு தெரிந்து எங்களது தாய்மொழி தமிழாகவே இருந்தது, இன்றும் இருக்கிறது. இருந்தாலும் 1956க்கு முந்தைய சமூக அரசியல் அப்போதைய கல்வியில் மலையாள மொழி கொள்கையை கொண்டு இயங்கியது. சொத்து விற்பனை உள்ளிட்ட பரிமாற்றங்களின் பத்திரபதிவுகள் மலையாளத்தில் தான் நடந்தன. 1956ற்கு பின்னர் மெல்ல மெல்ல நடைபெற்ற மாற்றங்கள் மொழி அடையாளத்தை மாற்றியிருக்கிறது. உதாரணமாக 1980களில் தனியார்மயமாக்கல் கல்வியில் உருவான போது ஆங்கில மொழிவழி கல்வி பரவலாக உருவானது. ஆங்கில மொழிவழியில் கற்பது முன்னேற்றத்திற்கான அடையாளமாக/வாய்ப்பாக கருதப்பட்டது. பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஆங்கில மொழிவழி கல்விக்கு ஆதரவை வழங்கினர். ஆங்கில மொழிவழி கல்வி தமிழையும் பறித்துவிட்டது போல மலையாள மொழிவழி கல்வியும் ஆங்கில மொழிவழி கல்வியால் காணாமல் போன நிலைக்கு வந்துவிட்டது. ஆனால் மலையாளம் இரண்டாவது மொழியாக பல பாடசாலைகளில் பயிற்றுவிக்கப்படுகிறது. இன்னும் இரண்டாம் மொழியாக பயிற்றுவிக்கும் அரசினரால் நடத்தப்படும் பாடசாலைகள், அரசு உதவிபெறும் தனியார் பாடசாலைகள், சுயநிதி பாடசாலைகள் அனைத்தும் உண்டு. அரசே நேரடியாக மலையாளம் பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கான நிதியை பல பள்ளிகளுக்கு தொடர்ந்து வழங்கியும் வருகிறது. அவை இன்னும் தொடருமென நினைக்கிறேன். அவர்களது மொழியுரிமையை பாதிக்காத விதத்தில் இது தொடரவேண்டும்.

தமிழ் மற்றும் ஆங்கிலம் தாய்மொழியல்லாத மாணவர்களுக்கு அவர்களது மொழியையும் விருப்பபாடமாக கற்றுக்கொள்ள அடிப்படையான வசதிகளை உருவாக்கி தரவேண்டும். உதாரணமாக ஆசிரியர்கள், நூலகங்களில் புத்தகம் போன்றவற்றில் அரசும் கல்வி நிறுவனங்களும் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த சட்டத்தை பொறுத்தவரையில் மலையாளம் மொழிவழி கல்வி பாடசாலைகளில் தமிழையும், ஆங்கிலத்தையும் கட்டாயபாடமாக கற்றுக்கொடுக்க வழிகாட்டுகிறதேயொழிய, மலையாளம் கற்றுக்கொடுக்க தடையேற்படுத்தவில்லை. ஆக, அச்சத்திற்கு அவசியமுமில்லை.

இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்ட மலையாள சமாஜம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடுத்த பொதுநல வழக்கு நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, கே.வெங்கட்ராமன் விசாரணைக்கு வந்து அரசு பதில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை தொடுத்த மலையாள சமாஜத்தின் தலைவர் கே.சந்திர சேகர பிள்ளையின் மனுவில் மலையாளம்/தெலுங்கு/கன்னடம் மொழிவழி பாடசாலைகளில் பயில விரும்பும் மாணவர்களுக்கு இச்சட்டம் தடையாக அமைந்துவிடும் என்று அஞ்சுவதாக தெரிவித்திருந்தார். ‘மொழி சிறுபான்மையினர் தங்களது மொழிவழி கல்வி கற்பதற்கு இச்சட்டம் தடையானது’ ஆகவே இச்சட்டத்தை தடைசெய்ய வேண்டுமென்பது மலையாள சமாஜத்தின் வாதம். மொழி சிறுபான்மையினருக்கு எதிரான சட்டம் என்பதால் அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்ற வாதம் உயர்நீதிமன்றத்தில் ஏற்கப்படவில்லை. சட்டத்திற்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுத்தது. ‘இச்சட்டம் பாரபட்சமற்றது, சிறுபான்மை நிறுவனங்களது உரிமையில் தலையிடவில்லை’ என்ற கருத்தையும் உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

உச்சநீதிமன்றத்தில் மலையாள சமாஜம், யோகக்ஷேமா சபா, நாயர் சர்வீஸ் சொசைட்டி ஆகிய அமைப்புகள் வழக்கை மேல்முறையீடு செய்தன (மலையாள சமாஜம், நாயர் சர்வீஸ் சொசைட்டி என்ற அமைப்புகளின் தமிழ்மொழி எதிர்ப்பு அரசியலை அறிய ஆர்வமுள்ளவர்கள் தெற்குதிருவிதாங்கூர் சமூக அரசியலையும், தாய்தமிழகத்தில் இணையும் போராட்ட வரலாறு, அதன் பின்னர் மத கலவரங்களும், மதவெறி அமைப்புகள் உருவாக்க களமமைத்தது ஆகிய சமூக வரலாற்று பின்னணியை படிக்கலாம்.).

உச்சநீதிமன்றத்தில் நீதிபதி. அரிஜித் பசயாத் தலைமையில் வழக்கு வந்தது. அரசியல் சட்டத்தின் சரத்து 29 (1) மற்றும் 30(1)ல் சிறுபான்மையினரது நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையை இச்சட்டம் எந்த விதத்திலும் கட்டுப்படுத்தவில்லை என்று தீர்ப்பு சொல்லபட்டது. இந்த வழக்கில் இன்னொரு நீதிபதியான ஜெ.எம். பஞ்சால் மகாராஸ்டிரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் மராத்தியும், கன்னடமும் கட்டாயமொழி பாடமாக ஏற்கனவே சட்டமுள்ளதை சுட்டிக்காட்டியிருந்தார்.

வழக்கினை தொடுத்தவர்கள் சார்பாக வாதாடிய வழக்குரைஞர்கள் சி.எஸ்.ராஜன், யு.ஆர். லலித் ‘குழந்தைகளுக்கு சிறுவயதில் வேற்றுமொழியை பயிற்றுவிப்பது விரும்பத்தக்கதல்ல’ என்று குறிப்பிட்டிருந்ததோடு மராத்தி, கன்னட மொழிகளை 5ம் வகுப்பிலிருந்து கட்டாயமொழியாக பயிலும் குழந்தைகள் பற்றி உதாரணம் காட்டினர். குறுக்கிட்ட நீதிபதி பசயாத் ‘ஐந்தாம் வகுப்பிலிருந்து மராத்தியும், கன்னடமும் குழந்தைகள் படிக்க இயலுமென்றால், ஒன்றாம் வகுப்பிலிருந்தே தமிழை படிப்பதில் என்ன சிக்கல்?’ என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.

*****

ஆங்கில மொழிவழி கல்வி பயிலும் 4ம் வகுப்பு மாணவன் ஒருவன் தமிழ் பாடத்தில் வார்த்தைகளுக்கு பொருள் கூறும் பயிற்சிக்கு ‘சாலை’ என்ற வார்த்தையை எழுதியுள்ளான். அதற்கு பொருளாக ஆசிரியர் தனது கைப்பட எழுதியது ‘ரோடு’ ‘Road’. இதைப் படித்தபோது ஆசிரியரின் அறியாமை மற்றும் சோம்பேறித்தனம் மீது கோபமும் எரிச்சலும் வந்ததோடு ஆங்கில மொழிவழி கல்வியின் மீதான கேள்வியும் எழுகிறது. இப்படி இருக்கிறது நமது கல்வியின் தரமும், ஆசிரியர்களின் கவனமும்.

கல்வித்தரமும், ஆசிரியர்களது ‘அறிவுப்பெருங்கடலும்’ பற்றி தனியாக உரையாட, விவாதிக்க வேண்டும்.

மிகவும் நீண்ட பதிலுக்கு பொறுத்துக்கொள்ளவும்!

பிறைநதிபுரத்தான் said...

அய்யா! பதிவும் - அனானி பின்னூட்டத்துக்கான தங்களின் பதிலும் மிகவும் அருமை.

Anonymous said...

தமிழ்நாட்டில் இப்படி தமிழ்த் கட்டாயமாக்கப்படுவதை ஆதரிக்கும் நீங்கள் கர்நாடகத்தில்
கன்னடமும்,மகாராஷ்டிரத்தில்
மராத்தியும் கட்டாயமாக்கப்படுவதை
ஆதரிக்கிறீர்கள் என்று புரிந்து கொள்ளலாமா.
தமிழ்,ஆங்கிலம், மலையாளம்
மூன்று மொழிகள் படிக்க வேண்டும் என்று வரும் போது மலையாளம்,
அதாவது தாய் மொழியைப் படிப்பதில் உள்ள ஆர்வம் குறைந்து விடும். அது
கூடுதல் சுமையாக நினைக்கப்படும்.
மாணவர் எண்ணிக்கை குறையும்,
அதைக் காரணம் காட்டி ஆசிரியர்கள்
நியமனம் போன்றவை குறையும்.
கொஞ்சம் கொஞ்சமாக மலையாளத்தினை குமரி மாவட்டத்து கல்வி நிலையங்களிலிருந்து ஒழித்துக் கட்டவே இது உதவும்.

thiru said...

//Anonymous Anonymous said...
தமிழ்நாட்டில் இப்படி தமிழ்த் கட்டாயமாக்கப்படுவதை ஆதரிக்கும் நீங்கள் கர்நாடகத்தில் கன்னடமும்,மகாராஷ்டிரத்தில் மராத்தியும் கட்டாயமாக்கப்படுவதை
ஆதரிக்கிறீர்கள் என்று புரிந்து கொள்ளலாமா.//

அனான நண்பருக்கு,

மராட்டியத்திலும், கர்நாடகாவிலும் இப்போதே அத்தகைய சட்டங்கள் இருக்கின்றன. அந்த மாநிலங்களின் மொழிகளல்லாத தமிழ் உள்ளிட்ட மொழிகளை தாய்மொழியாக கொண்டவர்கள் தங்களது தாய்மொழியை கற்றுக்கொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட்டு அந்த மொழிகள் கட்டாயபாடமாக அமைந்தால் அதை தடுப்பது எந்தவிதத்தில் நியாயம்?

//தமிழ்,ஆங்கிலம், மலையாளம் மூன்று மொழிகள் படிக்க வேண்டும் என்று வரும் போது மலையாளம்,அதாவது தாய் மொழியைப் படிப்பதில் உள்ள ஆர்வம் குறைந்து விடும். அது கூடுதல் சுமையாக நினைக்கப்படும்.//

ஆங்கிலம் அல்லாத மொழிகள் பேசும் அயல்நாடுகளில் பிரெஞ்சு/யெர்மானிய/இதர மொழிகள் பேசும் நாடுகளில் உள்ளவர்கள் அந்தந்த மொழிகளை படிக்கிறார்கள். அதோடு ஆங்கிலம் படிக்கிறார்கள். தமிழை சிறப்பு வகுப்புகளில் படிக்கிறார்கள். மூன்று மொழிகளை சிறுவயதில் கற்பதில் சுலபமாக இருக்கிறதே தவிர பிரச்சனையாக இருக்கிறதா என்ன?

//மாணவர் எண்ணிக்கை குறையும், அதைக் காரணம் காட்டி ஆசிரியர்கள் நியமனம் போன்றவை குறையும்.
கொஞ்சம் கொஞ்சமாக மலையாளத்தினை குமரி மாவட்டத்து கல்வி நிலையங்களிலிருந்து ஒழித்துக் கட்டவே இது உதவும்.//

மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தால் ஆசிரியர் நியமனம் நடக்காது என்பது தவறான பார்வை. பத்துக்கும் கீழ எண்ணிக்கையில் மாணவர்கள் மலையாள மொழியை படித்த நேரத்தில் கூட ஒரே பள்ளியில் இரண்டு மலையாள ஆசிரியர்கள் இருந்தனர். சிறுபான்மை மொழி பேசும் மாணவர்கள் கற்றுக்கொள்ள விரும்பும் வரையில் அதற்கான ஏற்பாடுகளை அரசு செய்துதரவேண்டும். அதன்வழி பன்முகதன்மையும் வளரும்.

இந்த சட்டத்தை இயற்ற காரணம் புறக்கடை வழியாக குமரிமாவட்டத்திலிருந்து மலையாள மொழியை ஒழித்துவிடும் நோக்கமுடையதல்ல.

மனம் புண்படாதீர்கள்! ஒரு கேள்வி உங்களுக்கு. இவ்வளவு நல்ல கேள்விகளை கேட்கும் நீங்கள் அனானியாக வர சிறப்பு காரணம் எதாவது?

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

விளக்கமான பதிலுக்கு நன்றி, திரு

ரவி ஸ்ரீநிவாஸ் said...

என்னுடைய கடிதம் ஒரு மொழியை
கட்டாயமாக்குவது பற்றி, தமிழ்வழிக்
கல்வி பற்றியதல்ல. மனம்போன போக்கில் எதையாவது பார்பனிய
பூச்சாண்டி காட்டி எழுதும் பழக்கத்தினை எப்போது கைவிடப்
போகிறீர்கள். ஒருவர் எதைப் பற்றி
எழுதியிருக்கிறார் என்பதை புரிந்து
கொள்ளாமல் இன்னும் எத்தனை
காலம்தான் பார்பனியம் பார்பனியம்
என்று ஜல்லியடிப்பீர்கள்.
என் கடிதத்திற்கும் நீங்கள் எழுதியுள்ள
பிள்ளைபிடி என்பதற்கும் என்ன தொடர்பு. குழந்தைகளை பிள்ளை பிடிக்காரன், பூச்சாண்டி அது இது
என்று பயமுறுத்துவது தமிழ் நாட்டில்
பல மாவட்டங்களில் இருக்கிறது.
இன்றும் குழந்தைகள் கடத்தப்படுவதும், கட்டாயப்படுத்தப்பட்டு பிச்சை எடுக்க்
வைக்கப்படுவதும், வேலை செய்ய
நிர்பந்திக்கப்படுவதும் நடக்கிறது,
இதையும் பார்பனீயம் என்று நீங்கள்
எழுதினால் ஆச்சரியமடைய ஒன்றுமில்லை. உங்கள்
வாதங்கள் வலுவற்றதை மறைக்க
அதை சகட்டு மேனிக்கு பயன்படுத்துகிறீர்கள்.உங்களை பகுத்தறிவாளர் என்று சொல்வது
பகுத்தறிவு என்ற சொல்லிற்கு
இழுக்கு.

thiru said...

ரவிஸ்ரீநிவாஸ்,

இப்பதிவு உங்கள் கடிதத்திற்கு சொல்ல மட்டுமே எழுதப்பட்டதல்ல. தமிழ் மொழியை படிக்கவேண்டிய சமூக அரசியல் பின்னணியை பற்றியது. உங்களது கடிதத்திற்கும் பதில் எழுதவேண்டிய அவசியம் எழுந்தது.

தமிழ் மொழியை கட்டாயமாக்கிய சட்டத்திற்கும் நீங்கள் எழுதியுள்ள வரிகளுக்குமான தொடர்பை யோசியுங்கள் //“தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், தமிழைப் படித்தவர்களை அரசு சமமாக நடத்துகிறதா. இட ஒதுக்கீடு என்ற பெயரில் 69% இடங்களை சாதி,மத ரீதியாக ஒதுக்கி பாகுபாடு காட்டும் அரசுக்கும், அதை ஆதரிப்போருக்கும் தமிழை திணிக்க என்ன தார்மீக உரிமை இருக்கிறது.”//

தமிழ்மொழியை கற்றவர்கள் எல்லோரையும் சமமாக நடத்தவில்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி இடப்பங்கீடு கொள்கையை எதிர்க்க காரணமென்ன? வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இடப்பங்கீடு கொள்கையை எதிர்க்கும் போக்கு பார்ப்பனீயத்தின் அடையாளமில்லாமல் வேறென்ன?

மற்றபடி உங்கள் பகுத்தறிவு தரக்கட்டுப்பாடு சான்றிதழை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்!

Anonymous said...

திரு, நல்ல பதிவும், தெளிவான பின்னூட்டங்களும். நன்றி.

தமிழ்வழிக் கல்வி, தமிழ் ஆட்சி மொழி என்பன தமிழோடு தொடர்புடையன என்று கருதுவதைவிட மக்களோடு தொடர்புடைய ஒரு அரசியல் செயல்பாடு என்றே கருதப்படவேண்டும். ஒரு அரசு தனது நலத்திட்டங்கள், சட்டங்கள், ஆணைகள் இவைகளை மக்களது மொழியில் செயல்படுத்துதலும், மக்கள் தங்கள் தேவைகள், தொடர்பாடல்கள், நீதி/குடிமை/பொருளாதார செயல்பாடுகளை தங்களது மொழியில் எளிதாகச் செய்ய ஏதுவான சூழலைக் காப்பாற்றவும், நவீனப்படுத்தவும் செய்யவேண்டிய பொறுப்பும் இயல்பானது. எனவே இதை தமிழ்மொழி என்ற நோக்கில் பார்பதை விட ஒரு அரசியல் செய்லபாடாகப் பார்ப்பதே பொருந்தும். அப்படியே மக்கள் நல அரசுகள் (உ.தா. ஐரோப்பிய அரசுகள்) கூட செயல்படுகின்றன.

இந்தியாவில் மக்கள் நலம், மக்களின் உரிமைகளை முன்வைத்து செயல்படுதல், அவர்களது சுதந்திரம், வசதி இவைகளுக்கு முன் உரிமை கொடுத்தல் என்பவைகளை விட ஒரு சாராரின் நலனை பாதுகாப்பதும், அதை காப்பாற்ற எதையும் அழிப்பதும் வக்கமான ஒன்றே. சுதந்திரத்துக்குப் பிறகு நடந்த அரசியல் போர் என்பது இந்த அதிகாரத்தை அப்படியே தொடர்வதா அல்லது மக்கள் மயப்படுத்துவதா என்பதே. அந்தப்போரில் மக்கள் மயப்படுத்தும் அரசியலுக்கு எதிரான முயற்சிகளை ஒருசாராரின் நலன் பேணும் குழு எதிர்ப்பதும், முடக்க முயல்வதும், கொச்சைப்படுத்தித் திரிப்பதும் கண்கூடு.
இந்தச் சூழலில் ரவி எழுதி இருப்பதை சரியாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

தனது மக்கள் பேசும் மொழியை கற்பதை அரசியல் காரணங்களுக்காக ஒரு அரசு வலியுறுத்துவது ஒரு மதத்தை வலியுறுத்துவதற்கு ஒப்பானதாக அறிந்தே பொய் சோல்லும் அறிஞர்கள் ஒரு குழ்ந்தையை அது பிறந்த உடனேயே அதன் மேல் தேசிய முத்திரை குத்தி அதை ஒரு குறிப்பிட்ட நாட்டினன் ஆக்குவதை எப்படிப் புரிந்துகொள்வர் என்று ஆர்வமாக உள்ளது?

இப்படி எத்தனைக் கோடிக்கணக்கான மக்கள் இப்படி வாய்ப்புகள் மறுக்கப்பட்டு கட்டாய மதமாற்றம் போல கட்டாய நாட்டுரிமை வழங்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்று வருந்தி எங்காவது எழுதி இருந்தால் அதை வெளிப்படுத்துவது நலம்.

நன்றி

Anonymous said...

மதத்தின் பெயரால் தமிழை அழிக்க நடத்தப்பட்ட- பார்பனியத்தின் முயற்சிகளையும் - ஆங்கில மோகம் கொண்ட தமிழ் எதிர்ப்பாளர்களின் அத்தனை முயற்சிகளையும் முறியடித்து
தமிழை ஒரு கட்டாயப்பாடமாக அரசு அறிவித்ததை ‘சீரணிக்க' முடியாமல் - 'முற்போக்கு' அவதாரம் எடுத்து
நுகர்வு சந்தை ஏற்படுத்துகிறீர்கள் - அது கட்டாய மதமாற்றத்திற்கு ஒப்பானது
என்றெல்லாம் முத்திரைக்குத்தி - விரக்தியின் உச்சானியில் நின்றுகொண்டு உச்சஸ்தாயில் ஒலிக்கும் ‘குடுமிகளின்' -
புலம்பலுக்கு தக்க பதிலடி கொடுத்த திரு வின் கருத்து நிறைந்த கட்டுரைக்கும் - பின்னூட்டத்திற்கும் நன்றி.

மதத்தின் பிரதிநிதியாக நடித்து வீழ்ந்தவர்கள் -
தமிழை எதிர்க்க- மக்களின் பிரதிநிதியாக அவதரித்திருக்கிறார்கள்..

தமிழை பாதுகாக்க எது செய்தாலும் அரசியல் செயல்பாடாக பார்க்கும் ‘தேவபாடை' வாதிகள் -
பெரும்பாலன மக்கள் அறிந்த தமிழை தவிர்த்து- ஒரு சாதிக்காரனுக்கு மட்டும் உரிய 'தேவபாடைக்கு' வக்காலத்து வாங்குபர்களை ‘கண்டுக்க' மாட்டார்கள்.

மக்கள் நலம் மக்கள் உரிமை என்று என்னதான் புரட்டுவாதம்
பேசினலும் - இனிமேல் ‘பருப்பு வேகாது'.

தமிழர்களின் அடையாளங்களை - பறிக்க முயற்சிகள் தொடர்ந்தால் - அவர்களின் 'அண்டர்வேர்கள்' மட்டுமல்ல - புனிதமாக கருதும்
‘அப்பர் (upper) நூல்களும்' கழட்டப்படவும் நிச்சயம் சட்டம் கொண்டு வரப்படும் என்று சொல்லி வையுங்கள்..

Lakshminarayanan S said...

நாட்டில் அமைதியாக வாழும் பிராமணர்களுக்கு எதிராக துவேஷம் செய்யும் உங்களைப் போன்ற ஆட்களை என்ன செய்வது. பிராமணன் வேதம் ஓதுவதை தவிர வேறு எந்த பதவியும் வகிக்க கூடாது என்றே இந்து மத கோட்பாடுகள் சொல்கின்றன. பிறப்பால் எவனும் பிராமணன், சூத்திரன், வைசியன், சத்திரியன் அல்ல என்றும் அனைத்து வேதங்களும், இந்து மத கொள்கைகளும் முழங்குகின்றன. பிராமணீயம் அல்லது பார்ப்பனீயம் என்ற ஒரு கோட்பாடே வேதங்களிலோ, இந்து மத நூல்களிலோ கிடையாது.
இது தெரியாமல், யாரோ நாலு பேர் சொன்ன கருத்தக்களை உண்மை என்று நம்பி, உங்கள் பொழுதையும் வீணாக்கி, படிக்கும் அப்பாவிகளின் மனதிலும் பிராமண துவேஷம் என்னும் விஷத்தை ஏற்றிக் கொண்டிருக்கும் உங்களைப் போன்ற விஷமிகளை என்ன செய்வது?

thiru said...

// Lakshminarayanan S said...
நாட்டில் அமைதியாக வாழும் பிராமணர்களுக்கு எதிராக துவேஷம் செய்யும் உங்களைப் போன்ற ஆட்களை என்ன செய்வது.//

லட்சுமிநாராயணன்,

மனிதர்களாக நினைத்து நடப்பவர்களுக்கு எதிராக பதிவுகள் எழுதியிருக்கிறேனா? அதென்ன 'பிராமணன்', A, B, C, D, 1, 2, 3, 4, 0 என்று மனிதர்களுக்குள் தரப்படுத்தல்? இவை எந்த அடிப்படையில், யாரால் செய்யப்பட்டன?

//பிராமணன் வேதம் ஓதுவதை தவிர வேறு எந்த பதவியும் வகிக்க கூடாது என்றே இந்து மத கோட்பாடுகள் சொல்கின்றன.//

அவ்வாறு தான் நடைமுறையில் இருக்கிறதா? பார்ப்பனர் அல்லாதவர்கள் வேதம் படிக்க ஏன் தடுக்கப்பட்டனர்? சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் தமிழில் தேவாரம், திருவாசகம் பாடசென்றவர்களை தடுத்தது ஏன்?

//பிறப்பால் எவனும் பிராமணன், சூத்திரன், வைசியன், சத்திரியன் அல்ல என்றும் அனைத்து வேதங்களும், இந்து மத கொள்கைகளும் முழங்குகின்றன.//

ஓகோ! அப்படியா? முழுவதும் படித்து விட்டீர்களா? மனுசாத்திரமும், வேதமும் பிறப்பால் சாதியை கற்பிக்கவில்லையா? மறைந்து போன காஞ்சி பெரிய சங்கராச்சாரியார் எழுதிய தெய்வத்தின் குரல் படித்தீர்களா? கோயில்களில் நுழையும் உரிமையும், அர்ச்சகர் உரிமையும் பார்ப்பனர்களது சொத்தாக இருந்தது எப்படி? ஏன்?

//பிராமணீயம் அல்லது பார்ப்பனீயம் என்ற ஒரு கோட்பாடே வேதங்களிலோ, இந்து மத நூல்களிலோ கிடையாது.
இது தெரியாமல், யாரோ நாலு பேர் சொன்ன கருத்தக்களை உண்மை என்று நம்பி, உங்கள் பொழுதையும் வீணாக்கி, படிக்கும் அப்பாவிகளின் மனதிலும் பிராமண துவேஷம் என்னும் விஷத்தை ஏற்றிக் கொண்டிருக்கும் உங்களைப் போன்ற விஷமிகளை என்ன செய்வது?//

நான் உட்பட யார்ர் சொல்வதையும் அப்படியே நம்பிட அவசியமில்லை. பகவத்கீதையை, வேதங்களை, மனுசாத்திரத்தை மீண்டும் படியுங்கள். படித்து சிந்திக்கவும் செய்யுங்கள். சமுதாய அமைப்புமுறையில் இவை எப்படி நடைமுறையில் இருக்கிறது என்பதையும் கவனியுங்கள்.

சகமனிதர்களை சமமாக நடத்த இயலாத, அனுமதிக்காத கொலைக்கருவியின் கோர வடிவம் மேல் குறிப்பிட்டுள்ள நூல்களில் காண்பீர்கள்!

'பார்ப்பனீயம்' பற்றி நேர்மையான உரையாடல் செய்ய எப்போதுமே தயாராக உள்ளேன். தாங்கள்?

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com