Wednesday, May 01, 2013

மேதினம்: உங்கள் சிந்தனைக்கு!

உழைப்பை மட்டும் மூலதனமாக கொண்டிருக்கும் மக்களுக்கு நிரந்தரமான, பாதுகாப்பான, தரமான வேலையில்லை. அமைப்புசாரா துறையில் வேலை செய்கிற சுமார் 94% உழைக்கும் மக்களுக்கு பணி பாதுகாப்பு, வேலை பாதுகாப்பு, சுகாதார மற்றும் பணியிட பாதுகாப்பு உட்பட எதுவுமில்லை. ஓய்வூதியம், மருத்துவ விடுப்பு, பேறுகால விடுப்பு, சேமநலநிதி, வேலையில்லா கால வருமான உத்தரவாதம் உள்ளிட்ட எந்த சமூக பாதுகாப்பு திட்டங்களும் இல்லை. வாழ்க்கை தரத்திற்கும், தேவைக்கும் ஏற்ற குறைந்தபட்ச ஊதியமும் இல்லை. சமூகத்தில் மனிதனாக அங்கீகாரமும் இல்லை. செய்கிற வேலையை வைத்து அடையாளப்படுத்தி சமூகத்தில் படிநிலை அடுக்குகளாக இழிவுபடுத்தப்படுகிற கொடுமை நிலவுகிறது.

முடிதிருத்தம் செய்கிறவர்களும், வீட்டுவேலை செய்கிறவர்களும், கடல்தொழில் செய்கிறவர்களும், வயல்வெளியில் வேலை செய்கிறவர்களும், கட்டிட வேலை செய்கிறவர்களும் இழிவாக, சமூகத்தில் அவமரியாதையாக, அங்கீகாரமற்றவர்களாக அவமானப்படுத்தப்படுகிறார்கள். ஆசிரியரா? மருத்துவரா? பொறியலாளரா?...செய்கிற வேலையை அடையாளமாக வைத்து சமூக அங்கீகாரம் மதிப்பாக கிடைக்கிறது. செய்கிற தொழிலை அடிப்படையாக வைத்து சாதீய ஒடுக்குமுறையை வகுத்தன் தொடர்ச்சியாக சமூகத்தில் ஆளமாக வேரூன்றியுள்ளது இந்த பாகுபாடும், சமத்துவமின்மையும். மேற்கு நாடுகளில் முடிதிருத்துபவரும், மருத்துவரும் சிவில் சமூகத்தில் செய்கிற வேலையின் அடிப்படையில் பார்க்கப்படுவதில்லை. அவர்கள் மனிதர்களாக சமூகத்தில் அங்கீகாரமும், மரியாதையும், கண்ணியமும் பெற்று வாழுகிறார்கள். இத்தகைய பாகுபாடும், சமத்துவமின்மையும் இந்தியாவில் உடல் உழைப்பிற்கான அங்கீகாரத்தை மறுக்கிறது. அதன் விளைவாக படைப்புத்திறனை அனுபவித்து ஈடுபாடுடன் வேலை செய்கிற மனமில்லாத போக்கையும் அதிகரிக்கிறது.

வீட்டுவேலைத் தொழிலாளர்களுக்கு பழைய அல்லது கெட்டுப்போன உணவுகளை வழங்குவதும், தனி உணவு பாத்திரங்களை வைத்திருப்பதும், பின்வாசல் வழியாக மட்டும் நுழைய அனுமதிப்பதும், அவர்கள் துவைத்த துணிகளையும், கழுவிய பாத்திரங்களையும் மீண்டும் தண்ணீர் தெளித்து அல்லது கழுவி "தூய்மை" சடங்கை செய்வதும், சமையல் செய்ய "உயர்சாதி" ஆட்களாக தேடுவதும்....எவ்வளவு கொடூரமான வன்முறையான மனங்களின் வெளிப்பாடுகள். இந்திய சமூகத்தின் வன்முறையை வரைமுறைப்படுத்துகிற போது எந்த வகை உணவை உட்கொள்ளுகிறார்கள் என்பதல்ல முக்கியம். வன்முறையை இப்படியான செயல்பாடுகளின் வழியாக நடைமுறை வாழ்க்கையில் கடைபிடிக்கிற அனைவரும் மிகப்பெரிய வன்முறையாளர்கள் தான். அவர்கள் ஒவ்வொருவரின் இந்த சாதீய, வேலை பாகுபாடு வன்முறையின் பெருக்கம் தான் சமூகத்தில் சாதீய தாக்குதல்களாக, கலவரங்களாக பலவகை வன்முறைகளாக உருவாகின்றன.

நீங்கள் எந்த சாமியை, கடவுள்களை, கார்ப்பரேட் சாமியாரை வழிபடுகிறீர்கள் அல்லது பின்பற்றுகிறீர்கள் என்பதெல்லாம் ஒன்றுமேயில்லை. நீங்கள் கார்ப்பரேட் முதலாளியாகவோ, ஆசிரியராகவோ, சமூகத்தில் அங்கீகாரம் பெற்ற பிரபலமாகவோ, மருத்துவராகவோ இருக்கலாம். ஆனால் உங்கள் ஆழ்மனதிலிருந்து ஒரு உடலுழைப்பு தொழிலாளியை எந்த கண்களால் என்ன பார்வை கொண்டிருக்கிறீர்கள் என்பதில் தான் நீங்கள் மனிதனா அல்லது மிக மோசமான வன்முறையும், வக்கிரமும் பிடித்தவரா என்பது உள்ளது. உலகத்தை ஏமாற்ற உங்கள் உடைகளும், தோற்றங்களும் உதவலாம். மனிதனாக மாறாத நிலையில் பரம்பரை பெருமை பேச்சுக்குள் மறைந்திருக்கும் அழுகிய மனத்திலிருந்து உங்களாலும் உங்களை மீட்க முடியாது. நீங்கள் சமத்துவமாக கண்ணியத்தோடு நடத்தாத அந்த உடலுழைப்பு தொழிலாளியின் மனசாட்சிக்குள் அசிங்கமும், அருவரும், அவமானமும் நிறைந்த ஏதோ ஒரு வகை உயிரியாக மட்டுமே இருப்பீர்கள். மரணத்திற்கு பின்னரும் உங்கள் அடையாளத்தை அப்படியே தான் விட்டுச்செல்வீர்கள்.

படைப்பூக்கமும், ஆக்கத்திறனும் கொண்டு வளர்ச்சிடைந்த சமூகமாக மாற வேண்டுமானால் இந்தியாவில் சாதி, வேலை அடிப்படையிலான பாகுபாடுகளையும், சமத்துவமின்மையையும் ஒழிக்காமல் வேறு வழியில்லை.  அனைவருக்கும் சமத்துவமும், சமூக பாதுகாப்பு திட்டங்களும், வேலை உத்தரவாதமும், வருமான பாதுகாப்பும் கிடைக்கிற சமூகமாக மாற மேதின வாழ்த்துகள்!