Wednesday, February 28, 2007

மனு சாத்திரம் ஓர் அறிமுகம்

திண்ணையில் மலர்மன்னன் பார்ப்பனீய பார்வையில் மனுசாத்திரத்தை பற்றி எழுதிய கட்டுரையை ஜடாயு என்கிற பதிவர் ஒரு பதிவு செய்திருந்தார். ஆறாம்திணையில் மனுசாத்திரம் பற்றி திரு. ஆ. சிவசுப்பிரமணியன் "மனு சாஸ்திரம் ஓர் அறிமுகம்" என எழுதிய கட்டுரையில் மலர்மன்னனுக்கு பதில் இருக்கிறது என்பதால் எந்த மாற்றமும் செய்யாமல் அந்த கட்டுரையை பதிவு செய்கிறேன். நல்ல ஒரு கட்டுரையை எழுதிய திரு. ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களுக்கும், ஆறாம்திணைக்கும் மனமார்ந்த நன்றிகள்.

-000-

காலத்தால் முந்திய வடமொழி நூல்களாக வேதங்கள் அமைந்திருக்கின்றன. வேதங்களில் இடம் பெற்றுள்ள கருத்துக்களை மையமாகக் கொண்டு உருவான நீதி நூல்கள் 'ஸ்மிருதிகள்' என்றழைக்கப்படுகின்றன. இவை முனிவர்களால் கூறப்பட்டவை என நம்புகிறார்கள்.

தர்ம சாத்திரங்கள்
நித்திய கருமங்கள்
ஆசாரம்
விவகாரம்
பிராயச்சித்தம்
இராச தர்மம்
வருணாசிரமம்
அக்நி கார்யம்
விரதம்

ஆகியன தொடர்பான விதிமுறைகளை இவை குறிப்பிடுகின்றன. ஸ்மிருதிகள் மொத்தம் பதினெட்டாகும். (19 என்ற கருத்தும் உண்டு) இவற்றுள் மிகப் பரவலாக அறிமுகமாகி இன்றளவும் பேசப்படுவது 'மனு தர்ம சாஸ்திரம்' என்ற மனுஸ்மிருதி ஆகும்.

மனுஸ்மிருதி

இந்த நூலானது இதை இயற்றியவரின் பெயராலேயே பெயர் பெற்றுள்ளது. மனு என்ற பெயரில் ஏழு பேர் இருந்தனர் என்றும் ஏழாவது மனுவே இந்நூலை இயற்றியவர் என்றும் கூறப்படுகிறது. மேலும் மனு என்பது ஒரு தனி மனிதனின் பெயர் அல்லவென்றும் நீதிநெறிகளை வகுக்கும் பதவியின் பெயரென்றும் சிலர் கூறுவர்.

ஒரு லட்சம் சுலோகங்களைக் கொண்ட 'மாணவ தர்ம சாஸ்திரம்' என்ற நூல் வாய்மொழியாக வழங்கி வந்துள்ளது.

அந்நூலை மூல நூலாகக் கொண்டு மனுதர்ம சாஸ்திரம் உருவாகியுள்ளது. 12 அத்தியாயங்களாகப் பகுக்கப்பட்ட இந் நூலில் 2684 சுலோகங்கள் இடம் பெற்றுள்ளன.

நூல் நுவலும் செய்தி

வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் மேற்கொள்ள வேண்டிய கடமைகள், மன்னன் ஆட்சி புரிய வேண்டிய முறையும், தண்டனையும், வழங்க வேண்டிய முறையும், பல்வேறு சாதிகளைச் சேர்ந்த ஆண் பெண்களிடையே நிலவும் சமூக உறவுகள், கணவன் மனைவியர் ஒழுக்க நியதி, பிறப்பு இறப்புச் சடங்குகள், குற்றங்களும் அவற்றிற்கான கழுவாய்களும், மறுபிறவி போன்றவை அந்நூலில் இடம் பெற்றுள்ளன. இந்த நூல் பின்வரும் ஐந்து கருத்துக்களை அழுத்தமாக வலியுறுத்துகின்றது.

1. நால் வருணப்படி நிலை
2. இதில் பிராமணிய மேலாண்மையும், கீழ் வருணங்களின் −ழிநிலையும்
3. உடல் உழைப்பு இழிவானது. எனவே அதை மேற்கொள்வோரும் இழிவானவர்.
4. நால் வருணத்திற்கு வெளியில் உள்ள சண்டாளர்கள் என்ற பிரிவினர் பின்பற்ற வேண்டிய கொடூரமான கட்டுப்பாடுகள்.
5. பெண்ணடிமை

நூலின் காலம்

இந் நூலானது கி.மு. 170 க்கும் 150 க்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்றும், மெளரியர்களின் புத்த மத அரசுக்கு எதிரான பிராமணப் புரட்சியின் கோட்பாடுகளைப் பாதுகாக்கும் பிராமணியச் சட்டத் தொகுப்பாகவே இது வெளிவந்துள்ளது என்றும் அம்பேத்கர் (1995:165-166) கூறுகிறார்.

நூல் உருவான வரலாறு
சுவாயம்பு மநுவான பிரம்மனிடம் முனிவர்கள் சென்று ''ஞான நிறைவும், வல்லமையும், செல்வமும், வீறும், திறலும், ஒளியும் பெற்றுத் திகழும் பெருமானே, நால்வருணந்தரும் மற்றோரும் கடைபிடிக்கத்தக்க அவரவர் செயல்கள், கடமைகளை எமக்கு உணர்த்துவீராக! என்று வேண்ட, பிரம்மா இவ்வுலகம் உருவான முறையையும் நாராயணன் என்ற பரம்பொருள் குறித்தும் உயிர்களின் தோற்றம் குறித்தும் கூறி விட்டு (சூத்திரம் 5 முதல் 56 முடிய) பின் ''எனது குமாரரான பிருகு இந்தத் தர்ம சாத்திரத்தைச் சற்றும் பிறழாமல் உங்கட்கு உபதேசிக்கக் கடவர். ஏனெனில் முறையாக என்னிடம் பிருகு முனிவரே இதனைப் பயின்று கைவரப் பெற்றவராகிறார்'' என்று கூற, பிருகு முனிவர் முனிவர்களை நோக்கிக் கூறிய செய்திகளே மநு தர்ம சாஸ்திரத்தில் இடம் பெற்றுள்ளன.

இக் கருத்தை அம்பேத்கர் (1995 : 165-166) ஏற்றுக் கொள்ளவில்லை.

''மனு என்ற பெயருக்கு இந்தியாவின் பண்டைக்கால வரலாற்றில் பெரும் மதிப்பு இருந்தது. சட்டத் தொகுப்புக்கு இந்த மதிப்பின் மூலம் பெருமை சேர்க்கும் நோக்கத்துடனேயே அதை மனு வெளியிட்டதாகக் கூறப்பட்டது. இது மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு மோசடி என்பது சந்தேகத்துக்கு இடமில்லாதது. சட்டத் தொகுப்பில் அதை இயற்றுபவரின் பெயரைக் குறிப்பிடும் இடத்தில் பண்டைக்கால வழக்கப்படி பிருகு என்ற குடும்பப் பெயர் கூறப்பட்டுள்ளது. 'மனு தர்ம சாஸ்திரம்' என்ற தலைப்பில் பிருகு இயற்றிய நூல்'' என்பதே அதன் உண்மையான தலைப்பு ஆகும். தொகுப்பின் ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் பிருகு என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நமக்கு அதை இயற்றியவரின் குடும்பப் பெயர் தெரிகிறது. அவருடைய சொந்தப் பெயர் நூலில் தெரிவிக்கப்படவில்லை. நாரத ஸ்மிருதியை எழுதியவருக்கு மனு ஸ்மிருதியை இயற்றியவரின் பெயர் தெரிந்திருந்தது. அவர் அந்த இரகசியத்தை வெளியிடுகிறார். மனு சாஸ்திரத்தை இயற்றியவர் சுமதி பார்கவா என்பது கட்டுக்கதைகளில் வரும் பெயர் அல்ல. அவர் வரலாற்றில் இடம்பெற்ற ஒருவராகவே இருக்க வேண்டும். ஏனென்றால் மனுவின் சட்டத் தொகுப்புக்கு உரை எழுதிய மேதாதிநே கூட இந்த மனு ஒரு குறிப்பிட்ட நபர் என்ற கருத்தைக் கொண்டிருந்தார். எனவே மனு என்பது மனுஸ்மிருதியின் உண்மையான ஆசிரியரான சுமதி பார்கவாவின் புனை பெயராகும். இந்நூல் வேதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. இதைப் பின்வரும் சூத்திரங்களால் அறியலாம்.

தர்மங்களுக்கு ஆதாரமாக இருப்பவை வேதமும், ஸ்மிருதிகளும் தொன்று தொட்டு வந்த ஒழுக்க மரபும் கவலையற்ற மன நிறைவுமாகும். (2 : 6)

மனுவினால் கட்டளையிடப்பட்ட நீதிகள் அனைத்தும் வேதத்தில் விதிக்கப்பட்டவையே. ஏனெனில் அவர் வேதசாரமுணர்ந்த பிரம்ம ஞானி. (2 : 7)

வேத சத்யத்தை அடிப்படையாகக் கொண்டெழுந்தவையென்று தனது ஞானத்தால் உணர்ந்து அவ்வறத்தாறு ஒழுகுவோனே உண்மையான கல்விமான். (2 : 8)

சுருதி, ஸ்மிருதிகளில் சொல்லப்படா நின்ற அறங்களை மேற்கொண்டு ஒழுகுவோன் யாரோ, அவனே இம்மையில் புகழையும் மறுமையில் சுத்தமான சுகத்தையும் பெறுவான். (2 : 9)

வேதமே சுருதியென்றும் அறத்துணிபுகளே ஸ்மிருதியென்றும் உணர்க.... (2 : 10)

மனு தர்ம சாஸ்திரம் வேதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானது என்ற செய்தியும் பிரம்மன் மற்றும் பிருகு முனிவர் ஆகியோரால் இது கூறப்பட்டது என்ற செய்தியும் மனுதர்ம சாஸ்திரம் புனிதமானது, உயர்வானது, ஆய்வுக்கு அப்பாற்பட்டது என்ற கருத்தை நிலை நாட்ட உதவுகிறது. இனி மனு தர்ம சாஸ்திரத்தின் சுலோகங்கள் சிலவற்றைக் காணலாம்.

பிராமணர் உயர்வு

''மனிதராசி பல்கும் பொருட்டாகவே, பிரம்ம, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர என்ற நால் வருணத்தையும் வேதஞானம், புவிபுரத்தல், செல்வமீட்டல், ஏவல் புரிதல் என்ற கடப்பாடுகளின் வழியே வகுத்து வைத்தார். இவர்கள் இறைவனுடைய முகம், தோள், தொடை, பாதம் ஆகிய பகுதிகளினின்றும் தோற்றமுற்றனர் (மனு 1 : 31).

இந்தச் சூத்திரத்தின் அடிப்படையில் இறைவனுடைய முகத்தில் பிராமணர் தோன்றியுள்ளனர். இதன் காரணமாகப் பிராமணர்கள் உயர்ந்தவர்கள் என்பதைப் பின்வரும் சுலோகங்களில் வலியுறுத்துகிறார்.

''புருஷ தேகம் சுத்தமானது. இடைக்கு மேல் மிகவும் தூய்மையாகும். எனவே பிரம்மாவின் முகம் பெரிதும் தூயது (1 : 92).

மிக்க தூயதான முகத்திலிருந்து வெளிப்பட்டமையினாலும், வேதங்களைப் பெற்றிருப்பதனாலும், முதலில் தோன்றியமையாலும், படைக்கப்பட்ட யாவற்றினும் அந்தணன் சிறந்து விளங்குகின்றான். (1 : 93)

சுயம்புவான பிரம்மா, தேவர்களுக்கு அவி சொரிந்து மகிழ்விக்கவும், பிதுரர்களுக்குச் சிரார்த்தம் செய்யவும் தக்கவனாகப் பிராமணனைத் தமது முகத்தினின்றும் முன்னம் படைத்தார் (1 : 94).

மாந்தரின் சமூக ஒழுக்கங்களை நன்கு புரிந்து, நிலை நிறுத்தும் பொருட்டாகவே ஜீவராசிகள் அனைத்திலும் மேலானதொரு தலைமையை அவன் பெற்றிருக்கிறான் (1 : 99).

பிறவி மேன்மையினாலும், முகத்திலிருந்து உதித்த தகுதியினாலும், படைப்புலகில் காணப்படும் சகலத்தையும் தனது செல்வமாகக் கொள்ளத்தக்கவனாக அவன் விளங்குகின்றான் (1 : 100).

எனவே அவன் பிறரிடமிருந்து பெறுகின்ற உணவு, உடை, பொருள் யாவும், அவனுடைமையை அவன் பெறுவதாகவும் ஏனையோர் அவனுடைமையைப் பெற்றுய்யவராயுமிருக்கிறார்கள் (1 : 101).


இவ்வாறு பிராமணர்களின் சமூக மேலாண்மையை வலியுறுத்தும் மனு அதை நிலைநாட்டும் வகையில் பல்வேறு கருத்துக்களைக் குறிப்பிடுகின்றார். மங்களம் மற்றும் மேன்மையைக் குறிக்கும் வகையில் பிராமணனது பெயர் அமைய வேண்டும் (2:31, 32) என்றும் பிராமணர் உணவு அருந்தும்போது மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்றும் (2 : 176-178) வலியுறுத்துகிறார். தவறு செய்யும் பிராமணர்களுக்கு விதிக்க வேண்டிய தண்டனைகள் குறித்து மனு கூறும் செய்திகள் வருமாறு.

'பிராமணனுக்குத் தலையை முண்டனம் செய்தல் உயிர்த்தண்டனையாகும். ஏனையோருக்கு உயிர்த்தண்டனையே உண்டு (8 : 378).

எந்தப் பாவம் செய்த போதிலும், பிராமணனைக் கொல்லாமல், காயமின்றி அவன் பொருளுடன் ஊரை விட்டுத் துரத்துக (8 : 379).

பிரம்மஹத்தியை விடப் பெரும் பாவம் உலகில் இல்லையாகையால், பிராமணனைக் கொல்ல மன்னன் எண்ணவும் கூடாது (8 : 379).

அந்தணனுடன் அவனுக்குரிய உயர்ந்த ஆசனத்தில் அகங்கரித்துச் சமதையாக அமர்ந்த நாலாம் வருணத்தவனை, அவனது உயிர்க்கு ஊறு நேராத வகையில் இடுப்பிற் சூடு போட்டோ, உட்கார்ந்த உறுப்பிற் சிறிது சேதப்படுத்தியோ ஊரை விட்டு ஓட்ட வேண்டியது (8 : 281).

அந்தணர் ஏவலுக்கென்றேயுள்ள நாலாம் வருணத்தானிடம், கூலி கொடுத்தோ, கொடுக்காமலோ அந்தணன் வேலை வாங்கலாம் (8 : 412).


சத்திரியர் - வைசியர் - சூத்திரர் நிலை
இவ்வாறு பிராமணர்களின் சமூக மேலாண்மையை வலியுறுத்தும் மனு, சத்திரியர், வைசியர், சூத்திரர்களின் பணி மற்றும் சமூகநிலை குறித்துப் பின்வருமாறு வரையறை செய்துள்ளார்.

''பிரஜா பரிபாலனம் செய்வது, ஈகை, வேள்விகள் புரிவது வேத பாராயணம் செய்விப்பது, விடிய சுகங்களில் மனதை அலைய விடாமல் உறுதியாக நிற்பது மன்னர் கடமையாகும். (1 : 89)

வாணிபர்க்கு ஆநிரைகளைக் காத்தல், தானம் கொடுத்தல், கடலாரம், மலையாரம், கனிப்பொருள், விளைபொருள், தானியங்கள் இவற்றை வியாபாரம் செய்தல், வட்டிக்கு விடுதல், பயிர்த்தொழில் செய்தல் ஆகியவற்றை விதித்தார். (1 : 90)

ஏவலான மக்கள் மேலே சொன்ன மூவர்க்கும் பொறாமையின்றிப் பணிபுரிதல் ஒன்றையே முதன்மையாகக் கொள்ளக் கடவரென்றும், ஈதல் முதலிய சத்கருமங்களும் அவர்களுக்கு உண்டென்றும் பணித்தார் (1 : 91).

நான்கு வருணத்தாரின் கடைசி வருணமான சூத்திர வருணத்தவர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக் கூடாது என்ற கருத்தை மனு உறுதிபடக் கூறுகிறார்.

''நாலாம் வருணத்தோன் அரசனாகயிருக்கும் நாட்டிலும் அறம் அறியாதோரும், தீயழுக்கமுடையோரும் வசிக்கும் கிராமத்திலும், பாவிகள் அருகுறையும் ஊரிலும் வசிக்கக் கூடாது. (4 : 61).

மன்னன் இயற்ற வேண்டிய விசாரணைகள் எந்த நாட்டில் நான்காம் வருணத்தானால் நடைபெறுகின்றதோ, அந்நாடு சேற்றில் அகப்பட்ட பசுவைப் போல், கண் முன்னே துன்பமுறுகின்றது. (8 : 21)

நாலாம் வருணத்தாரும் நாத்திகருமே மிகுந்து, இரு பிறப்பாளர் இல்லாமற் போகின்ற நாடு வறுமை வாய்ப்பட்டு விரைவில் அழிந்து போகும் (8 : 22).

அனுஷ்டானங்களில்லாத அந்தணன் மன்னன் சார்பாகத் தீர்மானங்களைச் செய்யவும் கூடும். நாலாம் வருணத்தவன் செய்யக்கூடாது.

வைசியனையும், நாலாம் வருணத்தானையும் தன் தன் தொழிலைச் செய்யுமாறு மன்னன் கட்டளையிடுக. இல்லையெனில், வேலையற்ற இவர்கள் உலகையே அழித்து விடுவார்கள். (8 : 417)

...... இழி பிறப்பாளர் பெருகி வரும் நாடு விரைவில் குடிமக்களுடன் அழியும் (10 : 61).

பிராமணனின்றி சத்திரியனுடைய சதகருமங்களும் சத்திரியனின்றி அந்தணனின் ஜீவனமும் நடைபெறாதாகையால், ஒருவரை ஒருவர் சார்ந்து நின்றால் இம்மை மறுமைகளின் இன்பங்களை அடையக் கடவர் (9 : 322).

வருணமற்றவர்
நான்கு வருணத்திற்கும் அப்பால், சண்டாளர் என்ற சாதியை மனு குறிப்பிடுகின்றார்.

தேர்ப்பாகர், இரண வைத்தியர், மீன் பிடிப்பவர், எலி, உடும்பு பிடிப்பவர், தச்சு வேலை செய்பவர் ஆகியோர் நால் வருணத்திற்கு வெளியில் உள்ளவர்களாவர். (10 : 47 - 49)

இவர்கள் வாழும் இடமாக ''இவர்களனைவரும் நகரத்திற்கும், ஊருக்கும் வெளியில் மரத்தடி, தோப்பு, இடுகாட்டின் அருகில், மலை, மலர்ச்சோலை ஆகிய இடங்களில் தங்கள் தொழிலைப் பலரறிய இயற்றி வாழ்ந்திருக்கவும்'' (10 : 50) என்று குறிப்பிடுகின்றார்.

சண்டாளர்களின் இருப்பிடம், மற்றும் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய தொழில், வாழ்க்கைமுறை தொடர்பாக மிகவும் இழிவான கட்டுப்பாடுகளை மனு விதித்துள்ளார்.

''ஊருக்கு வெளியில் சண்டாளனும், ஸ்வபாகனும் குடியிருக்கவும், இவர்கள் உலோகத்தாலான பாத்திரங்கள் உபயோகிக்கக் கூடாது. இவர்கள் தீண்டிய பாத்திரங்கள் துலக்கினாலும் தூய்மையாகா. நாய், கழுதை இவற்றை இவர்கள் வளர்க்கலாம். மாடு முதலியவை வைத்துப் பிழைக்கக் கூடாது'' (10 : 52)

''இவர்கள் பிணத்தின் ஆடையை அணிய வேண்டும். உடைந்த சட்டியில் சோறுண்ண வேண்டும். இரும்பு பித்தளை நகைகளை அணிய வேண்டும். எப்போதும் தொழிலுக்காகச் சஞ்சரிக்க வேண்டும்'' (10 : 52).

''நற்கருமங்கள் நடைபெறுகையில், இவர்களைக் காண்பதோ, பேசுவதோ கூடாது. இவர்கள் தங்கள் வகுப்பிலேயே பெண் எடுக்கவும் கொடுக்கவும், கடன் கோடலும் வேண்டும்'' (10 : 53).

''இவர்களுக்கு நேரே உணவு பரிமாறல், ஏவலாளரைக் கொண்டு, உடைந்த சட்டியில், அன்னமிட்டு வைக்க வேண்டும். இவர்கள் ஊரிலும், நகரிலும் இரவில் திரியக்கூடாது'' (10 : 54).

''அரசன் கொடுத்த அடையாளத்துடன், தங்களிடமுள்ள பொருளை விற்கவும், ஒன்றை வாங்கவும், பகலில் ஊர்த்தெருக்களில் திரியலாம். அனாதைப் பிணத்தை அகற்றுதலும் இவர்கள் கடன்'' (10 : 55).

''மரண தண்டனை பெற்றவரைக் கொல்லுதலும் இவர்கள் தொழில். தண்டனை நிறைவேற்றப்பட்டவரின் உடை, அணி, படுக்கைகளை இவர்கள் தங்களுக்கு எடுத்துக் கொள்ளலாம்'' (10 : 56).

இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்துவிட்டு, இவர்கள் சொர்க்கம் போவதற்கான வழியையும் மிக எளிதாகக் காட்டுகிறார்.

''அந்தணன், ஆ, பசு, பெண், பாலர் இவர்களைக் காக்கும் பொருட்டுக் கூலி பெறாமல் உயிரைத் தியாகம் செய்வதே தீண்டத்தகாத பிறப்பினர் சுவர்க்கம் புகும் நல்லாறு'' (10 : 62).

பெண்கள்
அடுத்து பெண்கள் குறித்த மனுவின் கருத்துக்களைக் காண்போம்.

''எந்தப் பருவத்தினவளாயினும், தனது இல்லத்திலே கூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச் செயலும் இயற்றலாகாது'' (10 : 147)

''இளமையில் தகப்பன், பருவத்தில் கணவன், விதவையான பின் மக்கள் இவர்கள் காவலிலன்றிப் பெண்கள் தன்னிச்சையாக இயங்கலாகாது'' (10 : 148).

''இழி நடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணமின்மை இவற்றையுடையவனாயினும், கற்பினளான பெண் தன் கணவனைத் தெய்வமாகப் பேணுக'' (10 : 154).

''அன்றாட வேள்விகள் ஐந்தும், உண்ணாமை, நோன்பு முதலியனவும் மாதர்க்குத் தனிப்பட யாதுமிலது. கணவனைப் பேணுதலே அவர்க்கு மறுமையின்பிற்குரிய நல்லாறு'' (9 : 14).

''நிறை பிறழ்தலும், நிலையில் மனமும், நண்பின்மையும், மாதர் தம் இயல்பாவதால், கணவனால் நன்கு போற்றிப் புரக்கப்படும்போதும், அவர்கள் கணவரின் காவலை விரும்புவதில்லை'' (9 : 15).

இவ்வித இயல்புகள் மாதர்க்குப் பிறப்புடன் வருவதாகையால் மாதர் ஒழுக்கம் கேடுறாமற் பேணும் முயற்சியில் ஆடவர் கவனமாக இருக்க வேண்டியது (9 : 17).

'படுக்கை, ஆசனம், அழகு செய்தல், காமம், சினம், பொய், துரோக எண்ணம் இவற்றை மாதரின் பொருட்டே மனு படைத்தார்' (9 : 17).

மாதர்க்குப் பிறவியைத் தூய்மையாக்கும் சமஸ்காரங்கள் மந்திரப்பூர்வமாகச் செய்வித்தல் யாதுமின்று. இவர்களுக்கு வெள்ளையுள்ளமும் இல்லை. பாவம் நீக்கும் மந்திர உபதேசமும் கிடையாது. எனவே பொய்யைப் போல் மாசு வடிவினராக மாதர் இயன்றிருக்கின்றனர் (9 : 18).

மனு தர்ம எதிர்ப்பு
இத்தகைய அதர்ம சாஸ்திரத்திற்கு எதிரான கருத்துக்கள் தமிழ்நாட்டிலும் இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் சித்தர்களும், வடபுலத்தில் தாந்திரிகர்களும் மனுதர்மத்தின் நால்வருணக் கோட்பாடுகளுக்கு எதிராக உரக்கக் குரல் எழுப்பியுள்ளனர். மனு - மனு தர்மம் என்ற சொற்களைப் பயன்படுத்தாவிட்டாலும் இந் நூலின் வருணக்கோட்பாடுகளுக்கு மாறான கருத்துக்களை முன்மொழிந்துள்ளனர். மகாராஷ்டிரத்தில் மஹத் என்னும் நகரில் நடந்த தலித்துகள் மாநாட்டில் 1927 டிசம்பர் 25 - ஆம் நாள் மனு தர்ம சாஸ்திரத்தை எரிக்கும் பின்வரும் தீர்மானம் நிறைவேறியது. (அம்பேத்கர் 1997 : 197, 198)

''இந்துச் சட்டங்களின் பிதா எனக் கருதப்படும் மனுவின் பெயரால் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பவையும், மனு ஸ்மிருதியில் அடங்கியிருப்பவையும், இந்துக்களின் சட்டத்தொகுப்பான அங்கீகரிக்கப்பட்டிருப்பவையுமான இந்துச் சட்டங்கள், கீழ்ச்சாதியினரை அவமதிப்பவையாக இருக்கின்றன. மனித உரிமைகளை அவர்களுக்கு மறுப்பவையாக உள்ளன. அவர்களது ஆளுமையை நசுக்குபவையாக இருக்கின்றன. நாகரிக உலகம் முழுவதிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ள மனித உரிமைகளுடன் இவற்றை ஒப்பிடும்போது இந்த மனு ஸ்மிருதி எத்தகைய நன்மதிப்பையும் பெற அருகதையற்றது. ஒரு புனிதமான நூல் எனப் போற்றப்படுவதற்குத் தகுதியற்றது என இந்த மாநாடு கருதுகிறது. இதன்பால் தனக்குள்ள ஆழமான அளவிட முடியாத வெறுப்பை வெளிப்படுத்தும் பொருட்டும், மதம் என்ற போர்வையில் அது சமூக ஏற்றத் தாழ்வைப் போதித்து வருவதைக் கண்டித்தும் மாநாட்டு நடவடிக்கைகளின் முடிவில் இதன் பிரதி ஒன்றை எரிப்பதென இம் மாநாடு தீர்மானிக்கிறது''.

இதன்படி இரவு ஒன்பது மணிக்கு மாநாடு நடக்கும் இடத்தில் பலிபீடம் போல் அமைக்கப்பட்டு மனு நீதி நூல் அதன் மேல் வைக்கப்பட்டது. தீண்டத்தகாத சாதிச்சாமியார்கள் சிலர் முறைப்படி அதற்கு நெருப்பு மூட்டித் தகனம் செய்தனர். மனுநூலின் தகனம் முடிந்த பின் அம்பேத்கர் எழுந்து ''ஏற்றத்தாழ்வை வற்புறுத்தும் நீதிநெறி இனி பாரதத்தில் செல்லாது என உலகம் தெரிந்து கொள்ளட்டும்'' என்று முழங்கினார். (வசந்த்தின் 1995:56)

இந் நிகழ்ச்சி குறித்து அம்பேத்கர் பின்வருமாறு எழுதினார்:
''இந்து சமூக அமைப்பு என்னும் கட்டுமானம், மனு ஸ்மிருதி என்ற அடித்தளத்தின் மீது நிர்மாணிக்கப்பட்டிருந்தது. இந்த மனுஸ்மிருதி இந்து சமய நூல்களின் ஒரு பகுதி. எனவே அது எல்லா இந்துக்களுக்கும் புனிதமாக உள்ளது. புனிதமானது என்பதால் பிழைபாடற்றதாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு இந்துவும் அதன் புனிதத்தில் நம்பிக்கை வைக்கிறான். அதன் ஆவணங்களை ஏற்று நடக்கிறான். மனு, சாதியையும் தீண்டாமையையும் ஆதரித்து நிற்பதோடு அதற்குச் சட்ட வலுவையும் தருகிறார். எனவே, ஒரு அபகீர்த்தி வாய்ந்த மனுஸ்மிருதியை எதிர்த்தது ஒரு துணிகரமான செயலாகும். இந்து சமயம் என்ற கொத்தளத்தின் மீதே தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். பிரான்சில், பாஸ்டில் சிறை எவ்வாறு கொடுங்கோன்மையின் உருவகமாக இருந்ததோ அவ்வாறே இந்து வாழ்க்கை முறைக்கும் சிந்தனைப்போக்குக்கும் அடிநாதமாக இருந்த ஏற்றத்தாழ்வுகளின் உருவகமாக இருந்தது மனுஸ்மிருதி. பாஸ்டிலின் வீழ்ச்சி பிரான்சிலும் ஐரோப்பாவிலும் பரந்த மக்கள் பகுதியினரின் விடுதலையையும் வெற்றியையும் எவ்விதம் குறித்ததோ அவ்விதமே 1927 ஆம் ஆண்டு மஸத்தில், மனுஸ்மிருதி எரிக்கப்பட்ட நிகழ்ச்சி தீண்டப்படாத மக்களின் விடுதலை வராற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாகத் திகழ்ந்தது.''

மனு தர்மத்தின் மீது இத்தகைய எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவதற்கு முக்கியக் காரணம் என்ன? என்பதை அப்பேத்காரே (1997-232) குறிப்பிடுகிறார்.

''சதுர்வருணமாக சமுதாயத்தை நான்கு வகுப்புகளாகப் பிரிப்பது மனுவுக்கும் பிரதானமானதாக இருக்கவில்லை. ஓர் அர்த்தத்தில், அது அவருக்கு இரண்டாம்பட்சமானதாகவே இருந்தது. சதுர் வருணத்திற்குள் இருப்போரிடையேயான ஓர் ஏற்பாடாகவே இதனை அவர் கருதினார். ஒருவன் பிராமணனா, சத்திரியனா, வைசியனா அல்லது சூத்திரனா என்பது பலருக்கு முக்கியமானதல்ல. இது அவருக்கு முன்பே இருந்து வருகின்ற ஒரு பிரிவினை. −ந்தப் பிரிவினையை மேலும் தீவிரப்படுத்தி அதற்கு மிகுந்த அழுத்தம் கொடுத்தார். இந்தப் பிரிவினை அவரிடமிருந்து தோன்றியதல்ல. மாறாக மனுவிடமிருந்து ஒரு புதிய பிரிவினை தோன்றியது.

1. சதுர் வருண அமைப்புக்குள் இருப்பவர்கள்.
2. சதுர் வருண அமைப்புக்கு வெளியே இருப்பவர்கள்

என்பதே இந்தப் பிரிவினை. இந்தப் புதிய சமூகப் பிரிவினை மனுவிடமிருந்து உதித்ததாகும். இந்துக்களின் பண்டைத் தர்மத்துக்கு அவரது புதிய சேர்ப்பு இது. இந்தப் பிரிவினை அவருக்கு அடிப்படையானதாக, மூலாதாரமானதாக, இன்றியமையாததாக இருந்தது. ஏனென்றால் அவர்தான் இந்தப் பிரிவினையை முதலில் உருவாக்கியவர். அதற்குத் தனது அதிகார முத்திரை அளித்து அதனை அங்கீகரித்தவர்!

இக் கூற்றின் உண்மைத் தன்மையை இதுவரை நாம் பார்த்த மனு தர்ம சூத்திரங்கள் உணர்த்துகின்றன.

மனு தர்ம ஆதரவாளர்கள்
ஆனால் இன்றும் மனுவைப் போற்றுபவர்கள் நம்மிடையே உள்ளனர். இந்தியா விடுதலை பெற்றவுடன் உச்ச நீதிமன்றம் உருவாகும் நிலையில் அந் நீதிமன்ற வளாகத்தில் மனுவின் சிலையை நிறுவ வேண்டுமென்று வேண்டுகோள் முன் வைக்கப்பட்டது. அவ்வாறு மனுக்குச் சிலை நிறுவினால் அதைத் தாமே முன்னின்று இடிப்பதாக அம்பேத்கர் கூறினார். ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தை பா.ஜ.க. ஆட்சி புரிந்தபோது ஜெய்ப்பூரில் உள்ள உயர் நீதிமன்ற வளாகத்தில் மனுவுக்குச் சிலை நிறுவப்பட்டது. இதற்கு மாநில காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் சிலை மேற்கூரை எதுவுமின்றி வீதியில் உள்ளது. பாரதிய ஜனதா ஆட்சி புரிந்தபோது இமாசலப் பிரதேசத்தில் மனாலி என்னுமிடத்தில் ஏற்கனவே உள்ள மனு கோயிலைப் பல லட்சம் செலவு செய்து புதுப்பித்துள்ளனர்.

''1992 ஏப்ரல் 18, 19 தேதிகளில் மதுராவில் உத்தரப்பிரதேச மாநில இந்து வழக்கறிஞர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் மாநில பா.ஜ.க. அரசின் அட்வகேட் ஜெனரல் வி.கே.என். சவுதாரி பேசுகையில் எல்லாக் காலங்களுக்கும் ஏற்ற சட்ட நூல் மனுஸ்மிருதிதான் என்று குறிப்பிட்டார். இதனை ஆர்.எஸ்.எஸ். சின் அதிகாரப்பூர்வமான பத்திரிகையான 'ஆர்கனைசர்' (மே 10, 1992) வெளியிட்டுள்ளது''. (மார்க்ஸ்).

இந்து தர்மாச்சாரியார்களும் மத அடிப்படைவாத இயக்கங்களும் மனுவைப் புறக்கணிக்க விரும்பியதில்லை. விசுவ இந்து பரிஷத் 1982 −ல் நிகழ்த்திய ஊர்வலத்தில் மனு தர்ம சாஸ்திரத்தின் ஒரு பிரதி எடுத்துச் செல்லப்பட்டது. (அஸ்கர் அலி இன்ஜினியர்) இவற்றுக்கெல்லாம் காரணம் இந்து மதத்துடன் இரண்டறக் கலந்துவிட்ட சாதிய அமைப்புதான். திலிப்போஸ் (1984 : 146) கூறுவது போல ''சர்ச் இல்லாமல் கிறிஸ்துவ மதம் இல்லை. அதுபோல் சாதி அமைப்பு இல்லாமல் இந்துமதம் இல்லை.'' இந்தச் சாதிய அமைப்பை நிலை நிறுத்தும் மனுதர்ம சாஸ்திரத்தை ஓர் உண்மையான இந்துவால் புறக்கணிக்க முடியாது. எனவே சமூக நீதியை இவர்களால் ஏற்றுக் கொள்ளவும் முடியாது. நிலை நாட்டவும் முடியாது. இந்துக்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்று மக்கள் என்று உரக்கப் பேசி வருபவர்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள்!

ஏனைய சமயங்களைப் போன்றே கத்தோலிக்கத் திருச்சபையும் பல்வேறு தவறுகள் மற்றும் பிழைகளைச் செய்துள்ளது. விவிலியக் கருத்துடன் முரண்படும் அறிவியல் கருத்துக்களைக் கூறியமைக்காகக் கலிலியோவைச் சிறையிலடைத்தது. புரூனோவை உயிருடன் கொளுத்தியது. இசுலாமியர்களுக்கு எதிராகச் சிலுவை யுத்தம் என்ற பெயரில் நீண்ட கால யுத்தத்தை நடத்தியது. பாசிஸ்ட் முசோலினியை ஆதரித்தது. ஆனால் இன்றைய போப் இச் செயல்கள் எல்லாம் தவறு என்று வெளிப்படையாக ஒத்துக்கொண்டதுடன் கடந்தகால வரலாற்றுப் பிழைகளுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார். இதை முன்மாதிரியாகக் கொண்டு அனைத்து சங்கராச்சாரியார்களும் ஏனைய துறவிகளும் காசியிலோ, மதுராவிலோ கூடி, 'மனுவின் வருணக் கோட்பாடுகளை முற்றிலும் புறந்தள்ளுகிறோம். சமூக நீதிக்கும் மனிதநேயத்திற்கும் மனுநீதி எதிரானது என்பதை உணருகிறோம்' என்று வெளிப்படையாக அறிவியுங்களேன்!

=====

இக்கட்டுரையை ஆறாம்திணையில் படிக்கலாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

Tuesday, February 27, 2007

தமிழக சிறுநீரக மோசடி அதிர்ச்சியான தகவல்கள்

மூன்று குழந்தைகளுக்கு தாயான 32 வயதான கலா சுனாமியால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையை நடத்த போராடும் சென்னையின் சேரிப்பகுதி பெண். கலாவை சென்னை காளியப்பா மருத்துவமனை வளாகத்தில் சந்தித்து பேரம் பேச ஆரம்பித்தான் தரகன். கலாவின் சிறுநீரகத்தை விற்றால் ஒன்றரை லட்சம் ரூபாயும்,
மாதம் தோறும் 3000 ரூபாய் செலவுகளுக்கும், அனைத்து மருத்துவ செலவுகளையும் அவர்களே கவனிப்பதாகவும் சொன்னான். தரகனின் பேச்சில் மயங்கி கடன்தொல்லையால் வாடும் கலா மயங்கிப்போனார். ஒரு வழக்கறிஞர், பேரம் பேச அறிமுகமான தரகர், மருத்துவர் முன்னிலையில் அவசர அவசரமாக கையெழுத்துக்கள் பெறப்பட்டன. கலாவின் சிறுநீரகம் பொருத்தப்பட காத்திருக்கும் இந்திய மேட்டுக்குடி பெண்மணிக்கு வயது 80 (செய்தியில் சாதியால் அடையாளப்படுத்தப்பட்டு இருந்தாலும், இந்த பதிவில் சாதியை குறிப்பிட விரும்பவில்லை). அமெரிக்காவில் வாழும் தனது பேரப்பிள்ளையை பார்க்க நீண்ட நாள் வாழ ஆசைப்படும் அந்த பெண்மணியின் சுமை கலாவிற்கு ஒரு ஒப்பந்தத்தில் இடம்மாறியது. கலாவுக்கு கிடைத்தது 35000 ரூபாயும் மருத்துவ சிகிச்சையில் செலவாகி, மேலும் வேதனை ஒட்டிக்கொண்டது.

கடந்த ஆறு மாதங்களில் கலா போல சுனாமியால் பாதிக்கப்பட்ட சுமார் 51 பெண்களிடமிருந்து சிறுநீரகம் கொள்ளையடிக்கப்பட்டதாக பிரிட்டனிலிருந்து வெளிவரும் அப்சர்வர் நாளிதழ் குறிப்பிடுகிறது. "எங்களுக்கு தெரிந்த அளவில் சுமார் எண்பது பேரிடமிருந்து சிறுநீரகங்கள் பெறப்பட்டுள்ளது, ஆனால் இந்த எண்ணிக்கை பத்து மடங்கு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. பெண்களே அதிகமாக இதனால் பாதிக்கப்படுகிறார்கள்" என்கிறார் எர்ணாவூர் சுனாமி மீனவர் அமைப்பின் தலைவர் மரிய சில்வா. "எங்களது சமூகம் ஒரு அகதிகள் முகாமை விட சற்று பெரியது, சுனாமியால் பாதிக்கப்பட்ட 8 கிராமங்களை உள்ளடக்கியது. சுனாமிக்கு பிறகு 'கார்கில் நகர்' என்ற தற்காலிக குடியிருப்பு பகுதிக்கு மாற்றப்பட்டோம். அந்த குடிசைகள் தீக்கிரையானதால் எங்களது படகுகளிலிருந்து 14 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் இந்த பகுதிக்கு தள்ளப்பட்டோம். மீனவ மக்களுக்கு எந்த பொருள் வசதியும் இல்லாமல் இருப்பதால் படகுகள் இருக்கும் பகுதிக்கு செல்ல வசதியில்லை. எங்களது பெண்கள் தான் சாப்பாட்டிற்கான வருமானத்தை தேடுகிறார்கள். எங்கள் பெண்கள் விறகு, கொட்டாங்கச்சி போன்றவற்றை அதிகாலை முதல் மாலை வரை விற்றும் பட்டினியால் இருக்கிறார்கள் அல்லது சிறுநீரகத்தை விற்று வயிற்றுப்பிழைப்பு நடத்துக்கிறார்கள்" என்று தங்களது வேதனையை பகிர்ந்துகொள்கிறார் மரிய சில்வா.

சமுதாய சமத்துவத்திற்கான சென்னை மருத்துவர் சங்கத்தை சார்ந்த டாக்டர் ரவீந்த்ரநாத் சேப்பன் 'மனித உறுப்புகள் வியாபாரத்தை 1994 சட்டத்தின் வழி இந்திய அரசு தடை செய்திருந்தாலும், சென்னையின் கிராமப் பகுதியில் ஒரு நிழல் வியாபாரமாக உறுப்பு வியாபார சந்தை புழங்குகிறது. இந்தியாவின் பணக்காரர்கள் நீண்ட நாள் வாழ ஏழைகளை பயன்படுத்துகிறார்கள். பொருளாதார வளர்ச்சி பெருகும் போது இந்த மாதிரியான வேதனைகளும் பெருகும்' என்கிறார். அவர் தருகிற அமெரிக்க மருத்துவ சங்கத்தின் அறிக்கையின் தகவல் இன்னும் கவலையை அதிகரிக்கிறது. 'சிறுநீரகங்களை விற்பனை செய்த 305 பேர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 96 சதவிகிதம் பேர் கடன் தொல்லையிலிருந்து விடுபட விற்பனை செய்தவ்வர்கள். சிறுநீரக விற்பனைக்கு பின்னரும் மூன்றில் இரண்டு பகுதியினரின் கடன் தொல்லை இன்னும் மாறாமலே இருக்கிறது. அவர்களில் 86 சதவிகிதம் பேர் உடல்நிலை அறுவை சிகிச்சையின் பின்னர் மோசமான நிலையில் இருக்கிறது' என புள்ளிவிபரங்களுடன் அவலத்தை விளக்குகிறார் டாக்டர் சேப்பன்.

சில வாரங்களுக்கு முன்னர் சென்னையின் சேரிப்பகுதி ஒன்றில் 15 பேரிடம் ஏமாற்றி சிறுநீரகம் விற்பனை செய்த பிரகாஸ் பாபு என்கிற தரகரை கைது செய்யுமாறு மக்கள் முற்றுகையிட்டனர். ' திரும்பவும் அவனை இந்த பகுதிக்கு வரவே விடமாட்டோம். நாங்கள் அவனது வீட்டுக்கு போனதும் தப்பியோடிவிட்டான். பாபு தான் என்னை சிறுநீரகம் விற்க தூண்டியவன். எனக்கு 35000 ரூபாய் தந்தான். அவனுக்கு 8000 கமிசன் கிடைப்பதாக சொன்னான், ஆனால் அவனுக்கு பத்து மடங்கு அதிகமாக கமிசன் கிடைத்திருக்கும்' என வேதனையாக சொல்கிறார் மேரி. தனக்கு கிடைத்த பணத்தில் கந்துவட்டிக்காரனுக்கு கொடுத்தது போக மீதி பணத்தை கணவன் குடித்து அழித்ததாக சொல்லும் மேரியின் குடிசை வீடு மோசமான நிலையில் இருக்கிறது. 5 பேர் அடங்கிய அந்த குடும்பத்தின் வாழ்வு இது.

மேரியின் பக்கத்து வீடு ராணி (36 வயது) கடுமையான வேதனையில் இருக்கிறார். "26 வயசான என் பொண்ணுக்கு வைத்தியம் பார்க்க ஆஸ்பிட்டல்ல கட்ட பணத்திற்காக என் கிட்னியை வித்தேன். எனக்கு பேரப்பிள்ள பொறந்தப்போ அவளுக்கு ஆப்பரேசன் பண்ணினாங்க அதுல நிறைய இரத்தம் போயிடுச்சி. ஒரு மாசம் ஆஸ்பத்திரியில இருந்து 30000 ரூபா செலவானது. மருமகன் குடும்பம் வேற 20000 ரூபா வரதட்சணை பணத்த குடுக்க சொல்லி தொந்தரவு பண்ணுனாங்க. எம்புருசன் என்ன விட்டுட்டு ஓடிப்போயிட்டர். அந்த சமயத்துல ஆஸ்பத்திரி வாசல்ல புரோக்கரை தேடி போனேன். ஒரு மாசத்துல வேற ஒரு ஆஸ்பத்திரியில ஆப்பரேசன் பண்ணி கிட்னிய எடுத்தாங்க. ஆப்பரேசன் நேரத்துல 2 தடவை எழுந்திருச்சேன், ரெண்டு நாள் கழிச்சு கையில மருந்து தந்து அனுப்பி வச்சாங்க."

"என்னோட புரோக்கர் தனலட்சுமி கூட கிட்னிய வித்திருக்கா. இப்போ மத்தவங்க கிட்னிய விக்க ஒதவுறா. எனக்கு ஒண்ணரை லட்சம் ரூபா தறதா சொல்லி எனக்கு 40000 தான் தந்தா. பணத்த இரயில்வே ஸ்டேசன்ல வச்சு குடுத்தப்போ எனக்கு வலி தாங்க முடியாம சண்டை போடாம வாங்கிட்டு வந்தேன். இப்போ என்னால நடக்க முடியல." வேதனையை சொல்லி ராணி முடிக்கும் முன்னர் யின் தாயாரின் மருத்துவ ஆங்கில குறிப்புகளை படித்து விளக்குமாறு பரிதாபமாக மகள் கேட்கிறாள்.

சிறுநீரக விற்பனை பிரச்சனையில் சென்னையின் காளியப்பா மருத்துவமனை, தேவகி மருத்துவமனை போன்ற பெயர்கள் வெளிப்படையாக உலவுகிறது.

"இது உங்களுக்கு மோசடியாக தெரியலாம், ஆனால் அந்த அளவு மோசமானதல்ல. ஒரு குடும்பம் பட்டினியால் வாடுது. இன்னொருவருக்கு உயிர்வாழ கிட்னி அவசியம். இது வியாபாரம் இல்லன்னு புரிஞ்சுக்கோங்க, ஒருத்தர் இன்னொருத்தருக்கு செய்யும் உதவி அவ்வளவு தான். பணமில்லாம பட்டினியால் சாகிறவனும், பணமிருந்தும் வாரம் 4 முறை டையாலிசிஸ் பண்ணும் ஒருவரும் சேர்ந்து ஒருத்தருக்கு ஒருத்தர் உதவிக்கிறாங்க. ரெண்டு பேரையும் காப்பாத்திக்கிறோம்" என்கிறார் சிறுநீரக தரகரை தேடி காளியப்பா மருத்துவமனையில் காத்திருக்கும் நோயாளி ஒருவர்.

இந்தியாவிலேயே சிறுநீரக மாற்று அறுவை மருத்துவத்தில் முதல் இடம் பிடிக்கும் மையமாக சென்னை விளங்குகிறது. சில லட்சம் ரூபாய்களை செலவளித்தால் சிறுநீரகங்களை சென்னையில் எளிதாக பெற்றுவிடலாம் என்கிறார்கள் இந்த சந்தையை பற்றி அறிந்த பலர். அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் சேர்ந்து, அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கொண்டால் மட்டும் போதுமானது. மற்ற எல்லாவற்றையும் தரகர்கள் கவனிப்பார்கள். கடந்த சில ஆண்டுகளில் சென்னை மற்றும் மதுரையில் மட்டும் இலங்கை, நேபாளம், வட இந்தியாவை சார்ந்தவர்கள் சுமார் 50 பேர் சிறுநீரக மாற்று அறுவை மருத்துவம் செய்துள்ளனர். அதிகமான சிறுநீரக மாற்று அறுவை மருத்துவம் செய்யும் மருத்துவமனைகளின் பெயர்களில் அப்பல்லோ மருத்துவமனை, மதுரை மீனாட்சி மருத்துவமனை, காளியப்பா மருத்துவமனை, தேவகி மருத்துவமனை போன்றவற்றின் பெயர்கள் இடம் பெறுகிறது. "சில மருத்துவமனைகளில் சிறுநீரகம் உட்பட மாற்று அறுவை மருத்துவத்திற்கு 5 லட்சம் வசூலிக்கப்படுகிறது" என சுகாதாரத்துறை செய்தி ஒன்று தெகல்கா இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளது.

நாமக்கல் பகுதியில் 28 வயதான சுரேஸ் ராஜு இரத்ததானம் செய்ய நண்பரால் கோயம்புத்தூர் அழைத்து செல்லப்பட்டபோது மயக்கமருந்து கொடுக்கப்பட்டது. கண்விளித்த போது அவரது ஒரு சிறுநீரகம் திருடப்பட்டிருந்தது. கடந்த சில வருடங்களில் நாமக்கல் பகுதியை சார்ந்த குமாரப்பாளையம், பள்ளிப்பாளையம் போன்ற இடங்களில் சுமார் 500 பேர் சிறுநீரகம் விற்பனை செய்துள்ளதாக காவல்த்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த வெங்கட லட்சுமியை சிறுநீரக தரகர்கள் இருவரும், சிறுநீரகத்தை பெற இருந்தவரும் பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக கோவை காவல்நிலையத்தில் நவம்பர் 2006ல்வழக்கு தொடுத்தார். உறுப்பு மாற்று மருத்துவத்தை அனுமதியளிக்கும் குழுவின் முன்னர் லட்சுமியை மனைவியாக நடிக்குமாறு வற்புறுத்தி அழைத்து சென்றிருந்தனர். பாலியல் வன்புணர்ச்சியின் போது ஒளிப்படமெடுக்கப்பட்டு அதை வைத்தே மிரட்டியதாக தெரிவிக்கிறார் லட்சுமி.

சென்னை தண்டையார் பேட்டையை சார்ந்த 34 வயதான மல்லிகா ஜனவரி 19 அன்று வடசென்னை காவல் நிலையம் ஒன்றில் சிறுநீரக தரகர் தன்னை ஏமாற்றியதாக வழக்கு தொடுத்தார். மல்லிகாவிற்கு 1.5 லட்சம் பணம் தருவதாக சொல்லி அவரது சிறுநீரகத்தை எடுத்த பின்னர் 30000 ரூபாய் மட்டும் கொடுத்ததாக புகாரில் மல்லிகா தெரிவித்துள்ளார்.

சென்னை திடீர்நகரை சார்ந்த 29 வயதான புவனேஸ்வரியையும் சிறுநீரக தரகர் பெரும் தொகை பேசி பிறகு 45000 ரூப்பாய் மட்டும் கொடுத்து ஏமாற்றியதாக குறிப்பிடுகிறார். தன்னை சிறுநீரகம் பெற்றுக்கொள்பவர்களது குடும்பம் நிரந்தரமாக கவனித்துக்கொள்ளும் என்ற வார்த்தையில் ஏமாறியதாக வருத்ததுடன் தெரிவிக்கிறார் புவனேஸ்வரி.

திருநெல்வேலி வ. உ.சி நகரை சார்ந்த முருகனது நிலையும் இது போன்றது தான். திருநெல்வேலியில் மருத்துவமனையில் அறுவை மருத்துவத்திற்கு முன்னர் அவருக்கும் இப்படி கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் சொல்லப்பட்டன. அவருக்கு கொடுத்திருந்த முகவரியில் தேடியபோது யாருமே இல்லை.

சென்னை MTH சாலையை சார்ந்த குமார் அருகிலுள்ள சேரியில் 10 பேர் சிறுநீரகம் விற்பனை செய்ததாக பெயரை குறிப்பிட்டு சொல்கிறார். அவர்கள் அனைவரும் வில்லிவாக்கம் பகுதியின் பாரதி நகரை சார்ந்தவர்கள். "இந்த பகுதியில் மட்டும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராவது சிறுநீரகத்தை விற்பனை செய்துள்ளாகள்ர். சுமார் 10 தரகர்கள் இந்த பகுதியில் மட்டும் இருக்கிறார்கள் பிரச்சனை பெரியதாக வெளி உலகிற்கு தெரிய வந்ததும் அனைவரும் தலைமறைவாகவும் உள்ளனர்" என்கிறார் அந்த பகுதி வாசியான விஜி.

பெரும்பாலானவர்கள் கடன் தொல்லையிலிருந்து விடுபடவே சிறுநீரகத்தை விற்பனை செய்வதாக கருணாலயா தொண்டு நிறுவன தலைவர் குறிப்பிடுகிறார். காசிமேடு பகுதியை சார்ந்த தேவி கணவன் தடுத்ததையும் மீறி கடனை அடைப்பதற்காக சிறுநீரகம் விற்றார். அண்ணாநகர் மருத்துவமனை ஒன்றின் ஊழியர் அவரிடம் பேரம் பேசியிருக்கிறார். 'அவர் டாக்டரா இல்லை தரகரா என எனக்கு தெரியாது. ஆனால் தினமும் மதியம் ஆஸ்பத்திரிக்கு அவர் வருவார்" என்கிறார் தேவி.

சென்னை ஐ.ஐ.டியின் Centre for Sustainable Development நடத்திய தமிழ்நாட்டின் சிறுநீரக விற்பனை பற்றிய ஆய்வு அறிக்கை தரகர்கள் சிறுநீரகம் தேடி அலைபவர்களையும் மருத்துவமனைகளுக்கு பிடித்து கொடுப்பதாக குறிப்பிடுகிறது. வங்கல் ஆர்.முரளீதரன், S.ராம் நடத்திய இந்த ஆய்வில் தரகர்கள் சிறுநீரக விற்பனையை நடத்துகிற மருத்துவமனைகளின் வளாகத்தினுள்ளே பாதுகாப்பாக வாழ்வதாக குறிப்பிடுகிறது.

தமிழ்நாடு சி.பி.சி.ஐ.டி காவல்த்துறை ஜனவரி 23ல் மூன்று தரகர்களை தண்டையார் பேட்டை மல்லிகாவின் புகாரின் பேரில் கைது செய்தது. பெரும்பாலான மாற்று சிறுநீரகங்கள் முன்பின் தெரியாத பலரிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது. சி.பி.சி.ஐ.டி காவல்த்துறையினருக்கு சிறுநீரக விற்பனை பற்றிய முழுவிசாரணை செய்ய அனுமதி அல்லது அதிகாரம் கொடுக்கப்படவில்லை. உறுப்பு மாற்று அறுவை மருத்துவத்திற்கு அனுமதி கொடுப்பது Authorisation Committee மற்றும் Appropriate Authority (AA) என்னும் இரண்டு குழுக்களின் முக்கிய பணி. இந்த குழுக்களில் முன்பின் தெரியாதவர்களது சிறுநீரகத்தை பெற எப்படி அனுமதி அளித்தன என விசாரணை மேற்கொள்வது மிக அவசியம். தரகர்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யும் போதே இதற்கான வழிகளை ஏற்படுத்துவதாக தெரிகிறது. இவ்வளவு மோசடிகள் நடப்பது தெரிந்தும் AA குழு இன்னும் எந்த மருத்துவமனைகள் மீதும் நடவடிக்கைகள் எடுக்காதது குழுவின் மீதான நம்பிக்கையை கேள்வியெழுப்புகிறது. இந்த பிரச்சனைகள் சம்பந்தமாக சிறுநீரக அறுவை மருத்துவர்களும், சிறப்பு வல்லுநர்களும் கருத்து தெரிவிக்காமல் மௌனம் சாதிப்பததயே கொள்கையாக கொண்டுள்ளனர்.

வறுமையால் வாடும் மக்களை ஏமாற்றி பிழைக்கும் கூட்டம் கடுமையாக தண்டிக்கப்படுவது அவசியம். சுனாமி புனரமைப்பு என்ற பெயரில் கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்த அரசியல்வாதிகள், அதிகாரிகள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் போன்றவை இந்த மக்களுக்கு துரோகம் செய்தவர்கள். ஏழைகளிடமிருந்து திருடப்படும் அல்லது ஏமாற்றி பெறப்படும் சிறுநீரகங்கள் மேற்கத்திய மற்றும் இந்தியாவை சார்ந்த பணக்காரர்களுக்கு பொருத்தப்படுகிறது. வர்ண பேதங்கள் மட்டுமல்ல, வர்க்க பேதங்களும் சமுதாயத்திற்கு தீங்கானவையே. வர்க்க பேதங்கள் தனிநபர்களுக்கும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே இந்த பேதங்கள் ஆதாயத்தை தரலாம்.

2015 வறுமையை பாதியாக குறைப்பதாக ஐ.நா சபை தீர்மானத்தில் ஒப்புக்கொண்ட இந்தியா வறுமையால் வாடும் மக்களை ஒழித்து வறுமையை இல்லாமல் செய்யப்போகிறதா என கேள்வி வருகிறது. தமிழக மற்றும் இந்திய அரசு இந்த பிரச்சனையில் சிறப்பு கவனம் செலுத்தாமல் அப்பாவிகளில் உயிரில் மெத்தனமாக இருப்பதாக தெரிகிறது.

அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் சில:

  • காவல்த் துறையையும், சுகாதாரத் துறையையும் நிர்வாகம் செய்பவர்கள் கடுமையான நடவடிக்கைகள் வழி காவல்த் துறைக்கு முழு சுதந்தரம் கொடுத்து குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும் பாரபட்சமில்லாத நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
  • Authorisation Committee மற்றும் Appropriate Authority (AA), நகரங்களின் மிகப்பெரிய மருத்துவமனைகள், சிறுநீரக அறுவை மருத்துவர்கள் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் வருமான வரித்துறையின் விசாரணைகள் மேற்கொண்டு குற்றம் நடக்கும் முறைகளை ஆய்வு செய்து அவற்றை கழைவது அவசியம்.
  • கந்துவட்டிகாரர்களை கடுமையாக தண்டிப்பதும், கிராமப்புற, சேரி வாழ் ஏழைகளுக்கான வேலைவாய்ப்பு திட்டங்களை உருவாக்குவதும் மேலும் உறுப்பு மோசடி வியாபாரம் அதிகரிக்காமல் தடுக்க வழி செய்யும்.
  • உறுப்பு வியாபாரத்தை தடுக்க உடல் தானம் செய்யுமாறு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். குறிப்பாக வளரும் தலைமுறைக்கு இந்த நன்னெறிகள் பாடமாக வைப்பது காலத்தின் அவசியம். தானம் செய்ய வருவோரின் தகவல்களும் தானம் பெறும் முறைகளும் ஒழுங்கமைக்கப்படல் அவசியம். செய்யுமா அரசு?

இந்த பிரச்சனையில் அரசை முறையாக செயல்பட வைக்க வலைப்பதிவாளர்களான சகமனிதர்கள் என்ன செய்யப்போகிறோம்?

தகவல் உதவிய தளங்கள்:
nzherald
observer.guardian
tehelka

படம்: boston:com

குறிப்பு:
முந்தைய கட்டுரையில் விடுபட்டவற்றை எழுதவே இந்த பதிவு. பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் ஆய்வுகள் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

Sunday, February 25, 2007

சிறுநீரகம் வாங்கலையோ சிறுநீரகம்!

வீதியில் காய்கறி வண்டிக்காரர் "கீரை, தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய்:.."ன்னு கூவி விற்பதை பார்த்திருப்போம். பேருந்தில் பிரயாணம் செய்யும் வழியில் வெள்ளரிக்கா..பிஞ்சு வெள்ளரிக்கா...ன்னு விற்பதையும் பார்த்திருப்போம். ஒரு தொழிலை கடினமாக செய்து பிழைக்கும் வறுமையின் பிடியில் இருக்கும் இந்த மக்களை பார்க்கும் போது பலமுறை சலனமில்லாது கடந்து செல்வோம். சிலவேளை மனது இறுக்கமடையும் இது இயல்பு. உள்ளூரில் தான் இப்படி காய்கறி வியாபாரம். உலகச் சந்தையில் தாய்மையையும், உடல் உறுப்புகளையும் விற்க கூறு கட்டி அழைப்பு விடுக்க வளர்ந்திருக்கிறது இந்தியா.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலையை வெளியே கொடுத்தல் (outsourcing) என்னும் அடிப்படையில் பன்னாட்டு சேவைகளை வழங்கும் நாடாக இந்தியா உலக அரங்கில் கவனிக்கத்தக்க இடத்தை பிடித்து வருகிறது. 1990களில் மருத்துவ குறிப்புகளை கணனி கோப்பாக்கும் பணிகள் அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு மாறியது. படித்து வேலை தேடிய பலருக்கு இந்த வேலை தற்கால தீர்வாக அமைந்தது. இந்த வேலைகளை எடுத்து நடத்திய நிறுவனங்களும், தனிநபர்களும் பெரும் வளர்ச்சியடைந்தனர். தொடர்ந்து சேவை அழைப்பு மையங்கள் (கால் சென்டர்) என்று சொல்லப்படும் சேவை வழங்கும் பணிகள் இந்தியாவிற்கு இடம் மாற்றம் பெற்றது. அயல்நாடுகளில் சேவை அழைப்புகளை கவனித்து வந்த பல நிறுவனங்கள் இந்தியாவில் கிளைகளை நிறுவியது. இந்தியர்கள் பலர் புதிய சேவை அழைப்பு மையங்களை உருவாகினர். பல இலட்சம் இளைஞர்களுக்கு வேலையை உருவாக்கிய புதிய துறையாக சேவை அழைப்பு மையங்கள் உருவானது. அதைப் போல மருத்துவ சுற்றுலா பெருஞ்செல்வம் கொழிக்கும் துறையாக வளர்ந்து வருகிறது.

மருத்துவம் செய்துகொள்ள இந்தியாவிற்கு வெளிநாட்டினர் வருகை கடந்த பல வருடங்களாக அதிகரித்து வருகிறது. இந்தியாவின் தலைசிறந்த தனியார் மருத்துவ மையங்களில் ஒன்றான அப்பல்லோ மருத்துவமனைகளில் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 60,000 வெளிநாட்டினர் மருத்துவ சேவையை பெற்றுள்ளனர். இதய அறுவை, சிறுநீரக மாற்று அறுவை, எலும்பு முறிவு, எலும்பு மஜ்ஜை மாற்று, ஈரல் மாற்று அறுவை, மகப்பேறு சம்பந்தமான மருத்துவம், கான்சர் மருத்துவம் என நவீன மருத்துவ வசதிகளுடன் இந்திய மருத்துவமனைகள் அயல்நாட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன. தேர்ச்சி பெற்ற மருத்துவர்களை உருவாக்குவதில் சுமார் 247 மருத்துவக்கல்லூரிகள் இந்தியா முழுமையும் செயல்பட்டு வருகின்றன. பொதுமருத்துவம், குழந்தை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், இதயம், சிறுநீரகம், எலும்பு, ஈரல், பல், கண் என தனி சிறப்பு மருத்துவங்களில் திறமையான பல மருத்துவர்கள் உருவாகி வருகிறார்கள். இதற்கான சிறப்பு மருத்துவ மையங்கள் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இயங்குகின்றன. பல்லாயிரம் செவிலியர்களை உருவாக்கும் கல்விநிலையங்கள், ஆயிரக்கணக்கான மருந்து உற்பத்தி நிறுவனங்கள் என இந்தியாவின் மருத்துவ சந்தை பலமானது.உலகெங்கும் 180 நாடுகளுக்கு மருந்து விற்பனை செய்யும் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவிடம் இருக்கிறது.

அலோபதி மருத்துவம் தவிர ஆயூர்வேத சிகிச்சை, இயற்கை மருத்துவம், மூலிகை மருத்துவம் போன்றவையும் களைகட்டுகிறது. இந்த வகை மருத்துவத்தில் வெளிநாட்டினரை கேரளத்து ஆயூர்வேத மருத்துவம் வெகுவாக கவர்ந்து வருகிறது. அருமையான காலநிலை, மனதை கவரும் இயற்கையான இடங்கள், மருத்துவ குணமுடைய மூலிகைகள், திறமையான வைத்தியர்கள், பழமையான கலைநயம் என வெளிநாட்டினரை வியக்க வைக்கும் திறனுடன் இருப்பது இதற்கு அடிப்படை காரணம். உள்ளூர்வாசிகளும் இந்த இயற்கை மருத்துவ ஓய்வுகளுக்காக கேரளா செல்வதும், நட்சத்திர வசதி கொண்ட இயற்கை மருத்துவ ஓய்வில் புத்துணர்வு பெறுவதுமாக செய்திகள் வருகின்றன.

வெளிநாட்டு வாடிக்கையாளர்களை கவர இந்திய சுற்றுலா மையமும், தூதரகங்களும் விளம்பரங்கள், கூட்டங்கள் போன்றவற்றை அயல்நாடுகளில் செய்து வருகின்றன. இப்படி அனைத்து நடவடிக்கககளளயும் எடுத்து மேற்கு உலகின் மருத்துவ சுற்றுலா மையமாக விளங்கி டாலரும், பவுண்டும், யூரோவும் குவிக்க இந்திய மருத்துவத்துறை தன்னை மாற்றிக்கொள்ள ஆரம்பித்துள்ளது. நட்சத்திர வசதிகள் கொண்ட மருத்துவமனைகள், அதிநவீன தொழில்நுட்ப வசதிகள், திறமைமிக்க மருத்துவர்கள், இதமான காலநிலை, அழகான இடங்கள், விலைகுறைந்த மருத்துவம் மற்றும் இதர வசதிகள் என வெளிநாட்டினரை கவரும் அனைத்து விசயங்களும் அமைவது இதற்கான சிறப்பு காரணம். அப்பல்லோ போன்ற தனியார் மருத்துவ நிறுவனங்கள் நாட்டின் எந்த பகுதியிலும் 2 மணி நேரத்தில் ஆகாயம் வழி அவசர மருத்துவ உதவிகளை வழங்குமளவு உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து சேவைகளும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளை விட குறைந்த விலையில் பெற்றுவிட இயலும் என்பதால் குறைந்த மருத்துவ செலவு உலக வாடிக்கையாளர்களை கவர்ந்திருக்கிறது. அமெரிக்காவில் 30,00 முதல் 80,000 அமெரிக்க டாலர் வரை செலவிடும் இதய அறுவை சிகிச்சைக்கு வெறும் 6,500 அமெரிக்க டாலரில் இந்தியாவின் சிறந்த தனியார் மருத்துவமனைகளில் ஒன்றான அப்பல்லோவில் சிகிச்சையை முடித்துக்கொள்ளலாம். வெளிநாட்டு பணமதிப்பில் ஒப்பிடும் போது இந்தியாவில் மருத்துவம் செய்ய அயல்நாட்டினருக்கு மிக குறைந்த செலவே. இந்திய ரூபாயின் மதிப்பு அயல்நாட்டவருக்கு சாதகமாக இருப்பதால் உயர்ந்த மருத்துவ வசதிகளை குறைந்த செலவில் சொகுசான வசதிகளுடன் பெற்றுக்கொள்கிறார்கள். மருத்துவப் பணிகள் முடிந்ததும் இந்தியாவின் பன்முக கலைகளை, கலாச்சாரங்களை, கண்ணை கவரும் சுற்றுலா தலங்களை அனுபவித்து பார்க்க வாய்ப்பு அமைவது இன்னும் சிறப்பான காரணம்.

சுமார் 15 பில்லியன் இந்திய ரூபாய்கள் மதிப்பிலுள்ள இந்திய மருத்துவ சந்தை ஒவ்வொரு வருடமும் 30 சதவிகித வளர்ச்சியை காண்கிறது. வெளிநாட்டினரின் மருத்துவ சுற்றுலா வழியாக இந்தியாவிற்கு ஆண்டுக்கு 1200 - 1500 கோடி ரூபாய் வருமானம் வருகிறது. 2012ஆம் ஆண்டிற்குள் மருத்துவ சுற்றுலா வழியா வரும் வருமானம் 5,000-10,000 கோடி ரூபாயை எட்டுமென கணக்கிடப்பட்டுள்ளது. ஆண்டிற்கு ஒரு மில்லியன் அயல்நாட்டினர் மருத்துவ சுற்றுலாவிற்காக இந்தியா வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுடில்லி, சென்னை, ஹைதராபாத், மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் இவர்கள் தங்குவதற்கான வசதிகள் கொண்ட வீடுகள் அல்லது விடுதிகளில் தேவை அதிகரிக்குமென்பதால் இப்போத அதற்கான முதலீடுகளும் அதிகரிக்கின்றன.

உடல் உறுப்பு மாற்று அறுவை செய்து கொள்பவர்களுக்கு மலிவு விலையில் உடல் உறுப்புகளை பெற்றுத்தர நிழல் உலகமே இயங்குகிறது. போதிய வருமானம் இல்லாதவர்கள், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், இயற்கை பேரழிவுகளில் துன்பமடைந்தவர்கள், அநாதைகள் போன்றோர் ஆசைவார்த்தைகளால் உறுப்புகளை தானம் செய்ய வைக்கப்படுகிறார்கள். சிறுநீரகம் தானம் செய்யும் இவர்களுக்கு வெறும் பத்தாயிரம் ரூபாயை கொடுத்து பல இலட்சம் ரூபாய் சம்பாதிக்கிறது இந்த கும்பல். உறுப்பு தானம் செய்வதால் வரும் உடல் பிரச்சனைகளைப் பற்றி இவர்களுக்கு சரியான தகவல்கள் வழங்கப்படுவதில்லை. மருத்துவர்களுக்கும்/ மருத்துவமனை நிர்வாகத்திற்கும் உறுப்புகளை பெற்றுத்தரும் தரகர்களுக்கும் இடையிலான தொடர்புகள் பரம இரகசியமாகவே இருக்கிறது. அப்பாவிகளிடமிருந்து சிறுநீரகத்தை திருடி காவல்துறையினர், மருத்துவ துறையினர், அயல்நாட்டினர், தூதரக அதிகாரிகளுக்கு பொருத்திய குற்றத்தில் மும்பை மருத்துவமனை ஒன்று ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து உறுப்பு மாற்று சட்டம் 1994 இயற்றப்பட்டது. இருந்தும் குற்றங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
15 ஜனவரி 1995ல் டில்லி சுங்க அதிகாரிகள் சிறுநீரகம் தானம் செய்வதற்காக வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்ட பலரை பிடித்தது. விசாரணையில் நூற்றுக்கணக்கானவர்கள் சிறுநீரக விற்பனைக்காக அயல்நாடுகளுக்கு சுற்றுலா என்ற பெயரில் அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 23, ஜனவரி 1995ல் சென்னை வில்லிவாக்கம் தொழுநோயாளிகள் மறுவாழ்வு காலனியில் வசித்தவர்களது சிறுநீரகம் பண ஆசை காட்டப்பட்டு திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 29 ஜனவரி 1995ல் பெங்களூரில் காவல்த்துறை நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 1000 பேரிடம் 'வேலை வாங்கி தருவதாக' ஆசைகாட்டி, இரத்தம் எடுப்பதாக பொய் சொல்லி சிறுநீரகத்தை அவர்களுக்கு தெரிவிக்காமலே திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. நகரின் பிரபலமான மருத்துவமனையும், பிரபல மருத்துவர்களும் இவற்றை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த சிறுநீரகங்கள் மத்திய கிழக்கு நாடுகளிலும், மேற்கத்திய நாடுகளிலும் உள்ளவர்களுக்கு பொருத்தப்பட்டது. சமீபத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சிறுநீரகம் எடுக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. உறுப்பு மாற்று சட்டத்தை செயல்படுத்துவதில் மருத்துவமனைகள், மருத்துவர்க்ள் ஒத்துழைப்பு இன்னும் வளரவில்லை என்பது இதன் வழி தெரிகிறது. மக்களுக்கு உறுப்பு திருட்டு பற்றிய விழிப்புணர்வும், குற்றம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் அவசியம்.

உலக அரங்கில் மருத்துவ சுற்றுலா வர்த்தகத்தை கவர்ந்தாலும் இந்திய ஏழைகளுக்கு மருத்துவ வசதி இன்னும் எட்டாமலே இருக்கிறது. 2000 இந்தியர்களுக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் இந்தியா இருக்கும் போது சுமார் 60,000 இந்திய மருத்துவர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பணி செய்கின்றனர். உலக அளவில் அதிக எண்ணிக்கையில் மருத்துவர்களை பிற நாடுகளுக்கு இந்தியா வழங்குகிறது. இந்தியாவின் மருத்துவர்களில் 10 சதவிகிதம் பேர் பல நாடுகளுக்கு குடிபெயர்ந்து செல்கின்றனர் என்பது வேதனையான உண்மை. "இந்திய அரசின் சுகாதாரத்துறை 1,45,000 துணை மையங்களையும், 23,000 பொது சுகாதார மையங்களையும், 3,222 சமூக சுகாதார மையங்களை கொண்டு இயங்குகிறது. நாட்டின் சுகாதார தேவையில் இது வெறும் 20 சதவிகிதம் மட்டுமே. நாட்டின் சுகாதார தேவையில் 80 சதவிகிதம் தனியாரால் இயக்கப்படுகிறது. போதுமான வசதியில்லாத ஏழைகளுக்கு இந்த மருத்துவ வசதிகள் எட்டாமலே இருக்கிறது. இதனால் தவிர்க்கப்பட வேண்டிய மரணங்கள், கடன் தொல்லை, ஆபத்தான நோய்கள் ஏழைகளையே அதிகம் நெருங்குகிறது. தொடரும் வறுமையும், எட்டாத மருத்துவமும் கிராமப்புற ஏழைகளை பெரிதும் பாதிக்கிறது." என சில ஆண்டுகளுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்தார் இந்திய சுகாதாரத்துறை அமைச்சர்.

உலக நாடுகளின் சுகாதார தேவைக்கு மருந்து, மருத்துவர்கள், செவிலியர்கள், வல்லுநர்களை உருவாக்கும் இந்தியா சொந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவம் கிடைக்க வளர்வது எப்போது? அன்று தான் இந்திய மருத்துவ தூறையின் வளர்ச்சியை ஒரு ஏழை இந்தியனால் பெருமிதமாக பார்க்க முடியும்.


-o0O0o-

மருந்துகளை மனிதர்கள் மீது சோதனை செய்து ஆய்வு செய்வதில் மருந்து நிறுவனங்கள் இந்தியாவை பெரிதும் விரும்புகின்றன. இது பற்றி இன்னும் விரிவாக அடுத்த பதிவில்...

Friday, February 16, 2007

வரலாறு நம்மை விடுதலை செய்யும்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 48 நாடுகளிலிருந்து 96 இளம் பிரதிநிதிகள் கலந்துகொண்ட உலக அளவிலான கூட்டம் ஒன்று தென்அமெரிக்காவில் வெனிசுவேலாவில் நடந்தது. கலந்து கொண்ட அனைவரும் தனிப்பட்ட விதத்தில் நன்கு அறிமுகமான மனித உரிமை போராளிகள். ஒரு மாதம் நடந்த கூட்டத்தில் பல நாடுகளின் கலாச்சார நடனங்களும், இசையும் கலந்திருந்தது. ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த தோழி டிட்ஜெரிடூ என்கிற இசையை இசைத்தார். அருமையான இசை என வியந்து பலர் பாராட்டினர். இந்த இசைக்கு சொந்தக்கார பழங்குடி மக்களின் வரலாறை சுருக்கமாக சொன்னார் அந்த தோழி. சொல்லி முடிக்கும் போது கண்ணீருடன் இருந்த தோழி "போர்க் கைதிகளாக வந்த எங்கள் முன்னோர்களின் சந்ததி நாங்கள் வளமாக வாழ்கிறோம். ஆனால் எங்களுக்கு தனியாக கலை இல்லை. எங்கள் கலாச்சாரம், இசை அனைத்தும் ஐரோப்பிய வழியில் வந்தது. இது எங்களது நாட்டின் பழங்குடி மக்களின் கலை. இன்று பழ்ங்குடி மக்களின் கலை தான் ஆஸ்திரேலியாவிற்கு தனி அடையாளத்தை தருகிறது." என்றார்.

உறைபனி காலங்களுக்கு முன்னர் (40,000-50,000 ஆண்டுகளுக்கு முன்னர்)ஆஸ்திரேலியாவில் பழங்குடி மக்கள் வாழ்வை துவங்கியிருந்தனர். 1788ல் தான் ஐரோப்பியர்கள் காலனியாதிக்கம் செய்தனர். ஆஸ்திரேலியாவில் இன்றும் கறுப்பின மக்களின் வாழ்க்கை கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம்...என அனைத்திலும் பின்னுக்கு தள்ளப்பட்ட நிலையில் தான் இன்றும் இருக்கிறது. 2000 ஆண்டு ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் சிட்னி ஒலிம்பிக் மட்டுமல்ல பேசப்பட்டது, பழங்குடி மக்களின் சகவாழ்விற்கு எடுத்த முயற்சிகள் அதிகம் முக்கியத்துவம் பெற்றது. ஆஸ்திரேலிய பல்கலைகழகங்களும், சமூக அமைப்புகளும் பழங்குடி மக்களின் இசை, நடனம், ஓவியம், இயற்கையை நேசிக்கும் வாழ்வியல் முறை போன்றவற்றிற்கு முக்கியத்துவமளிக்க துவங்கியது.

தங்களது முன்னோர் போர் குற்றவாளிகளாக ஆஸ்திரேலியாவில் வந்து பழங்குடி மக்களின் வாழ்க்கையை சிதைத்த கதையை நண்பர்கள் கூற கேட்டிருக்கிறேன். 'வெள்ளையின' ஆதிக்கம் பழங்குடி மக்களை நகரங்களுக்கு செல்ல விடாமல் தடை வைத்திருந்ததும், குழந்தைகளை கவர்ந்து சென்ற கொடுமையையும் பகிர்ந்து கொள்ளும் வேளைகளில் மனிதாபிமானமற்ற ஒரு வரலாற்றை நிகழ்த்தியதற்காக அவர்கள் வருத்தமடைகின்றனர். வரலாற்றை உணர்ந்த நண்பர்கள் பழங்குடி மக்களின் உரிமைக்காகவும், அகதிகளின் உரிமைக்காகவும் தங்களது அரசோடு போராடுகின்றனர். பழங்குடி மக்கள் அனுபவித்த கொடுமைகளின் வரலாறு சொல்லப்படாமல்/திரிக்கப்பட்டு இருந்தால் என்றும் ஆஸ்திரேலியா வெள்ளை ஆதிக்கத்தில் (பழங்குடி மக்களுக்கு இன்னும் முழு விடுதலை பிறந்துவிடவில்லை) தான் மிதக்கும்.

கடந்து போன வரலாற்று நிகழ்வுகளை நாம் அறிவது அவசியமா? அவற்றை அறிவதால் இன்னும் பிளவுகள் வர வாய்ப்பிருக்கிறதே. பழையவற்றை மறந்து இன்றைய வாழ்க்கையில் கவனம் செலுத்துவது நலமில்லையா? இந்த கேள்விகள் நமது மனங்களில் அவ்வப்போது எழுவது இயற்கையே. பள்ளியில் ஆங்கிலம், தமிழ் படிக்க ஆரம்பிக்கும் போது இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என படிக்கிறோம். மனித சமூகத்தில் நிகழ்காலமும், எதிர்காலமும் வரலாற்றின் தொடர்ச்சியான பாதையில் தான் வருகிறது. மனித இனத்தின் பரிணாமவியல் வளர்ச்சி பற்றி அறிய வரலாற்றின் பக்கங்களில் அறிவியலை தேடுகிறோம். மருத்துவம், நெறிகள், பண்பாடு என எல்லாவற்றிலும் வரலாறு தொடர்புடையது. ஒடுக்கப்படுகிற இனங்களின் விடுதலை எழுச்சிகளுக்கு வரலாறு உந்து சக்தி. தங்களது முன்னோர்களின் வாழ்வை, வழிபாட்டுமுறையை, சமுதாய அமைப்பை...அறிந்து அதனடிப்படையில் தாங்கள் இந்த நாட்டின் பூர்வீக குடிகள் என்பதை நிலைநாட்ட வேண்டிய மோசமான நிலையில் தான் இன்று உலகம் இருக்கிறது. மனித உறவிற்கு சாதி, மத வேறுபாடுகள் அவசியமில்லை.

சாதி, மத வேறுபாடுகளே இந்தியாவில் இந்துமத வெறியின் அடித்தளமாக இன்று இயங்குகிறது. பிறப்பில் உயர்வு தாழ்வு என்பது தானாக நிகழ்ந்தது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி வைத்து அது தான் உயர்ந்த நெறி என கொண்டாடுவது எந்த விதத்தில் சரியானது? பார்ப்பனீய ஆதிக்கவெறிக்கு துணையாக கடவுள் கதைகளை புனைந்து பொய்யான புளுகு வரலாற்றை திணிக்கும் போது உண்மை வரலாறை சொல்ல அவசியம் ஏற்படுகிறது. தவறாக வரலாற்றை திரித்து எழுவது நடக்கும் வரை உண்மையை சொல்வதும் நடந்துகொண்டே இருக்கும்.

19 நூற்றாண்டின் அடக்குமுறை கோயிலுக்குள்ளே நுளையவோ, ஆதிக்கசாதியினரின் அருகில் செல்லவோ முடியாத அளவு தீட்டு இருந்தது. இன்று அவர்களது சவத்தை அடக்கம் செய்யவும், வயல்வெளிகளில் களையெடுக்கவும், பீ அள்ளவும் ஒடுக்கப்பட்ட மக்கள் அவசியம். ஆதிக்கசாதியினரின் உத்தரவுகளை மீறினால் திண்ணியத்தில் வாயில் மலம் திணித்தது, வடநாட்டில் செத்தமாட்டின் தோலை உரித்ததற்காக கொலையான 5 தலித்கள் நிலை தான் (இது தொடர்புடைய முந்தைய பதிவு ஒடுக்கப்படுகிற மக்களே ஒன்றுபடுங்கள்!). ஒடுக்குமுறையின் வடிவங்கள் மட்டுமே மாறியிருக்கிறது அடிமைத்தனம் இன்னும் தொடரவே செய்கிறது. கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் சமத்துவ சட்டத்தை பார்ப்பனீயவாதிகள் இன்றும் எதிர்த்து வருகிறார்களே ஏன். இந்த நிலையில் முன்னோர் மட்டும் அநீதி செய்தார்கள் நமது தலைமுறையினர் யோக்கியர்கள் என ஒதுங்கிவிட இயலுமா?

வேதங்கள், சாத்திரங்கள், ஆகமங்கள், இராமன், கண்ணன் கதைகள் என புனைந்த கதைகளை சொல்லி ஒடுக்கப்பட்ட மக்களை இன்றும் தீட்டாக வைப்பது ஏன்? ஆதிக்கம் நிறைந்த இந்த புராண குப்பைகளையும், கதைகளையும் எதற்காக ஆதிக்கச்சாதியினர் எல்லோருக்குமானதாக தூக்கிப்பிடிக்கிறார்கள்? பூசையறை சமாச்சாரங்கள் வீதிக்கு வந்து வெறியூட்டி நாட்டின் அரசியலை, வாழ்வை கூறுபோடுவது எதற்காக? ஒவ்வொருவரையும் அவரவரது வழியிலேயே வாழவிடுவதை விட்டுவிட்டு "நாங்க எல்லோரும் இந்து. அதுனால நீயும் இந்து, உங்க வீட்டு புளியமரத்தில இருக்கிற அணிலும் இந்து, பல்லி, பாச்சா, எலி எல்லாம் கூட இந்து தான். இதை ஏற்றுக்கொள்ளலைன்னா எல்லாமே தேசதுரோகி தான். நாங்க இப்படி சொல்லுறதை தப்புன்னு சொன்னா நீ அரபிகளின் ஆட்கள், மிசநரிகளின் ஆட்கள் etc..." எல்லாம் எதற்காக? மகாபாரதமும், இராமாயணமும், கீதையும் பழைய கதைகள் தானே. சாத்திரங்கள், வேதங்கள், ஆகமங்கள் எல்லாம் பழையவை தானே அவற்றை இன்றைய காலத்துக்கு ஏற்ப பரிசீலனை செய்யகூட மறுப்பது ஏன்? கதைகளை சொல்லி மக்களை அடிமைப்படுத்துவது தொடரும் போது, நமது தலைமுறைகள் விழிப்பாக இருக்க நடந்த பார்ப்பனீய கொடுங்கோன்மைகளை சொல்ல அவசியம் வருகிறது.

துவக்க பள்ளிகள் முதல் பல்கலைகழகங்கள் வரை வரலாற்றை பாடமாக படிப்பதும், ஆய்வு செய்வதும் எதற்காக? மனித நாகரீகம் எப்படியான பாதையை கடந்து வந்திருக்கிறது. எப்படிப்பட்ட வளர்ச்சியை, பிரச்சனைகளை சந்தித்திருக்கிறது. வரலாற்றிலிருந்து தான் அன்றைய கால அமைப்புமுறை, மொழி, நாகரீகம், கலைகள் பற்றி அறிகிறோம். இந்த தகவல்கள் இன்றைய மனித சமுதாய வளர்ச்சிக்கு மொழியியல், அறிவியல், அரசியல், கலாச்சார துறைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்றைய, எதிர்கால மாறுதல்களுக்கு வரலாறு அடிப்படையான காலக்கண்ணாடி (reference). வரலாற்றை தவறாக மாற்றினால் பார்ப்பனீயத்தின் நோக்கம் வெற்றியடையும். அதனால் தான் இன்று வரலாற்றை திரித்து எழுத பார்ப்பனீயம் ஆட்களை தயார்படுத்துகிறது.

இந்தியாவின் இன்றைய அனைத்து கொடுமைகளுக்கும் காரணம் அங்கிலேயனும், மொகலாயர்களும் என இன்னொருவனை கைகாட்டி நழுவிவிடும் பார்ப்பனீய தந்திரத்தை வரலாற்றை புரட்டி தான் வெளிச்சத்துக்கு கொண்டுவர முடியும். இந்தியாவில் இன்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கொடுமையான அடிமை வாழ்வு தான் மிஞ்சியிருக்கிறது. யார் இவற்றை செய்கிறார்கள் என்பதை அடையாளம் காட்டுவது அவசியம். உதைப்பவன் உணர்ந்து திருத்தப்படும் வரை உதைபடுபவனின் விடுதலைக் குரல்கள் ஒலிக்கவே செய்யும். அடிமைப்பட்டவனின் தலைமுறை வலிகள் தரும் உந்துசக்தியிலிருந்து தான் விடுதலை முழக்கங்கள் எழும்புகின்றன. ஒடுக்கப்பட்டவர்கள் இப்போது தான் தங்களது உண்மை வரலாற்றை ஆவணப்படுத்துகின்றனர். இதுவரை ஆதிக்கசாதியினரின் கைகளில் இருந்த வரலாறு இனி அடக்கப்பட்டவர்களால் உடைக்கப்படும். இடப்பங்கீடு கொள்கையால் எழுந்து வருகிற ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியால் இன்று சில மாற்றங்கள் எழுகின்றன. இந்த மாற்றம் உண்மையான மக்கள் நலன் கொண்ட ஆட்சியை எதிர்காலங்களில் கொண்டுவர உதவலாம். இந்த மாற்றங்களால் அதிகாரம் தன்னை விட்டு இடம்பெயர்ந்துவிடும் என்ற பதட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக பார்ப்பனீயம் தீவிர இந்துத்துவ வெறியை பரப்ப ஆரம்பித்திருக்கிறது.

"இந்துக்களே ஒன்றுபடுங்கள்" என்பதும் "இந்தியா இந்துக்களுக்கே" என்பதும் பார்ப்பனீயத்திற்கு அதிகாரத்தை தக்கவைத்து கொள்ள தந்திரமான முழக்கங்கள். ஒடுக்கப்பட்ட மக்களை இந்து என்ற போர்வையில் தனது அரசியல் இலக்குகளை அடைய ஒன்று சேர்த்தல் நடக்கிறது. கலவரங்களை உருவாக்கவும், குழப்பங்களை விளைவிக்கவும் அடியாள் படையாக மட்டுமே ஒடுக்கப்பட்ட மக்களை பார்ப்பனீயம் ஒன்றுதிரட்டுகிறது. ஆட்சி அதிகாரம், கல்வி, வேலைவாய்பு முதல் கோயில்கள் வரை எல்லா இடங்களிலும் சமஉரிமை பரவவிடுவதல்ல இந்த ஒன்று திரட்டலின் நோக்கம். ஆக்டபஸ் தனது இரையை விழுங்கும் போது அணைத்துக்கொள்வது போன்ற இந்த அணுகுமுறையில் ஒடுக்கப்பட்ட மக்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இந்துத்துவா என்கிற வெறித்தனமான கொள்கைக்கு கண்ணாடியாக கடந்த கால வரலாறு சாட்சியாக இருக்கும் போது ஒடுக்கப்பட்ட மக்கள் வருங்கால ஆதிக்கத்திலிருந்து தப்பித்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. அதனால் தான் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளங்களை பார்ப்பனீயம் தின்று அழிக்கிறது.

பௌத்த நெறியின் வளர்ச்சியால் காணாமல் போன பார்ப்பனீயம் கி.மு 185ல் பௌத்த மன்னனை கொன்று ஆட்சியை கைப்பற்றி சுங்க வம்ச ஆட்சியை நிறுவியது. மன்னனின் தளபதியாக அருகில் இருந்த பார்ப்பனீய ஆதிக்கசாதியை சார்ந்த ஒருவன் தான் கடைசி பௌத்த மன்னனை கொன்றான். தொடர்ந்து பௌத்தம் அழிக்கப்பட்டதும், பௌத்த விகாரைகளை எரித்தது, கல்வெட்டுகள் உடைக்கப்பட்டது. பௌத்த மதத்திற்கு எதிராக பார்ப்பனீயம் அரங்கேற்றிய கொடுங்கோன்மைகள் ஏராளம். இன்று பார்ப்பனீயம் எடுக்கிற இந்துத்துவ வேடமும், வரலாற்றை திரிப்பதுவும் சுங்க ஆட்சி முதல் அவர்கள் கற்ற பாடம். ஒடுக்கப்பட்ட மக்களும் பழைய வரலாற்றை உணர்ந்து எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

உயிர்களை கொல்லாமையை போதித்த பௌத்தத்தை அணுகுண்டு சோதனைக்கு காங்கிரஸ் அரசு "புத்தர் சிரித்தார்" என்ற பெயரை சூட்டி அரசு களங்கப்படுத்தியது. 1998ல் அணுகுண்டு சோதனையை ஒரு புத்த பௌர்ணமி நாளில் பா.ஜ.க அரசு நடத்தியது. பௌத்தர்களுக்கு பௌர்ணமி நாட்கள் சங்கம் கூடும் அடையாள நாள் என்பது கவனிக்கத்தக்கது.

1992ல் பாபர் மசூதியை இடிக்க அம்பேத்கார் நினைவு தினமான டிசம்பர் 6 தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்? மதவெறியை தூண்டி தங்களுக்குள் இந்துக்கள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று கொன்று குவிக்க ஒடுக்கப்பட்ட மக்களை கருவியாக பயன்படுத்த அண்ணல் அம்பேத்கார் நினைவு தினம் தேர்ந்தெடுத்தது தற்செயலான நிகழ்வு அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்று சேரவிடாமல் ஆதிக்கத்தை நிலைநிறுத்த பார்ப்பனீயம் எடுக்கிற புதிய தந்திரம். டிசம்பர் 6 அம்பேத்கார் நினைவு தினமாக அல்ல பாபர் மசூதி இடிப்பு தினமாகவே இன்று அடையாளப்படுத்தப்படுகிறது. அம்பேத்கார் நினைவு நாளின் அடையாளத்தை அழிக்கும் முயற்சியில் பார்ப்பனீயம் வெற்றி பெறுகிறது.

பார்ப்பனீயத்தை தனது மரணம் வரை எதிர்த்து "இந்துவாக சாகமாட்டேன்" என பௌத்தத்திற்கு மாறிய அம்பேத்கார் படத்தை இந்துத்துவ வெறி அமைப்புகள் தங்களது கூட்டங்களில் வைத்து சொந்தம் கொண்டாடுவது எதற்காக? பார்ப்பனீயத்திற்கு எதிராக இருந்த அண்ணல் அம்பேத்கார் ஒடுக்கப்பட்ட மக்களின் மாபெரும் தலைவர். அண்ணலை தங்களுக்குள் விழுங்குவதன் மூலம் அவரது கொள்கைகளை காவிமயப்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்களை தங்களுக்கு அடியாள் படையாக மாற்றுவதற்காக மட்டுமே. மனுஸ்மிருதியை கொழுத்த அழைப்பு விடுத்தவர் அண்ணல் அம்பேத்கார். மனுஸ்மிருதி இல்லாமல் இந்துத்துவா இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான சனாதான தர்மத்தையே இந்துத்துவா அடிப்படையாக கொண்டது.

ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளங்களை, வழிமுறைகளை அழிப்பதும், மாற்றுவதும் நடக்கும் போது விழிப்பை எற்படுத்த வரலாற்றின் மறைக்கப்பட்ட இருண்ட பக்கங்கள் அவசியமாகிறது. எந்த ஒரு சமூகமும் நீதியான சமத்துவ பாதையில் வளர வரலாற்றிலிருந்து ஒப்பீடுகளும், படிப்பினைகளும் அவசியமாகிறது. பொது விசயங்களை எழுதும் போது விதிவிலக்காக இருக்கிற நல்லவர்களை குற்றப்படுத்துவதாக அமைந்துவிடாது. சமூகத்தின் வளர்ச்சியை தீர்மானிப்பது தனிநபர், குடும்பம் மட்டுமல்ல. வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ளாத எந்த இனமும் தங்களது விடுதலையை அடைந்ததாக வரலாறு இல்லை. வரலாறு மனித நாகரீகத்தின் இயங்கு சக்தி. ஒடுக்கப்பட்ட மக்களும், அவர்களது அமைப்புகளும் கற்றுக்கொள்ளும் வரலாற்று படிப்பினைகள் தான் விடியலை தரும். "வரலாறு நம்மை விடுதலை செய்யும்".

படங்கள்: ididj

Wednesday, February 07, 2007

அய்யன்காளி: ஒடுக்கப்பட்ட மக்களின் போராளி!

புழுதியை கிழப்பியபடியே கழுத்தில் கட்டியிருந்த பெரிய வெண்கல மணியொலியெழுப்பியபடி இரண்டு வெள்ளை காளைகளும் வண்டியை இழுத்து செல்கிறது. முழுநீள வேட்டியும், தோழில் சுற்றப்பட்ட துண்டும், தலைப்பாகையும் அணிந்த உயரமான அழகிய வாலிபனின் கோபம் காளைகளை வேகப்படுத்துகிறது. பாய்ந்து ஓடும் காளையின் இழுப்பில் வண்டி சந்தையின் பாதையில் மீண்டும் மீண்டும் ஓடுகிறது. ஆண்டாண்டு காலமாக தனது சொந்தங்கள் நடமாட முடியாத சாலையில் வேங்கையாய் அலையும் இந்த இளைஞன் யார் தெரியுமா?

19ம் நூற்றாண்டில் புலையன் சாதியில் பிறந்ததால் இவனுக்கும், சகமனிதர்களுக்கும் தெருவில் நடக்கக்கூட உரிமை மறுக்கப்பட்டவன். அடிமையாக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து வந்த இவனோ மாட்டு வண்டியில், முழுவேட்டி கட்டி, தோழில் துண்டும் தலைப்பாகையுமாக வருவது கண்டு ஆதிக்கச்சாதி நாயர்கள் வெறிகொண்டனர். அவனுக்கு கொடுக்கும் தண்டனையை பார்த்து எந்த புலையனும் எதிர்த்து எழும்ப கூடாது என திட்டமிட்ட நாயர்கள் கும்பல் சேர்த்து அவனை வழிமறித்தார்கள். அவனோ சிலிர்த்தெழும் வேங்கையாக இடுப்பில் சொருகியிருந்த நீண்ட கத்தியை உருவினான். அவனை தொடுபவன் எவனையும் வெட்டுவதாக அடவு கட்டி நின்றான். கோபத்திலும் உறுதியாக அடவு கட்டி காலை பரவி கையை வீசி நின்ற அவனை கண்டதும் விலகியதுஆதிக்க வெறி கும்பல். எதிர்த்து நின்ற மாவீரன் அய்யன்காளி என்னும் மாபெரும் ஒடுக்கப்பட்ட மக்கள் போராளி. போராளிகளுக்கு உயிர் பயமில்லை என்பதற்கு சாட்சியாக நின்றவன். தன்னலமில்லாத விடுதலை வேட்கையென்னும் நெருப்பில் குளித்து எழும் இந்த நெருப்புப்பறவைகள் எழுந்தால் விடுதலை பிறக்கும். அய்யன்காளி என்ற மாபெரும் நெருப்புக்கனல் வளர்த்த விடுதலை நெருப்பில் புலையர்கள் எழுந்தனர். திருவிதாங்கூரில் பார்ப்பனீய அடிமைத்தனத்திலிருந்து தலித் மக்களை மீட்ட மாபெரும் மக்கள் தலைவன் அய்யன்காளி.

28 ஆகஸ்டு 1863ல் திருவிதாங்கூரில் (கேரளா) திருவனந்தபுரத்தை அடுத்த வெங்கனூரில், பெருங்காட்டுவிளா என்ற ஊரில் 7 பிள்ளைகளில் ஒன்றாக கூலி விவசாய குடும்பத்தில் மகனாக பிறந்தார் அய்யன்காளி. இளவயதில் கட்டுடலும், அழகும், வலிமையும் நிறைந்தவராகவே வளர்ந்தார். அய்யன்காளி சிறுவனாக இருக்கும் போது தனது குடும்பத்தினரும், உறவினர்களும் உரிமை மறுக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்படுவதை உணர்ந்தார். புலையர் சாதியில் பிறந்த அவர்களுக்கு சாலையில் நடக்க அனுமதியில்லை. உடலை மறைக்க நல்ல உடையணிய அனுமதி மறுக்கப்பட்டது. செருப்பு போட அனுமதியில்லை. தலைப்பாகை கட்டக்கூடாது என பல அடக்குமுறைகளை அனுபவித்தனர். பார்ப்பனீய வர்ணாஸ்ரம அடுக்கில் கீழே இருந்ததால் புலையர்களை மிருகத்திற்கு இணையாக ஏரில் பூட்டி வயலை உழுதனர். அடிமைகளாக இருந்த அவர்களது உழைப்பில் நாயர்களும், நம்பூதிரிகளும், மன்னனும் உண்டு கொழுத்து கிடந்தனர். இவை அனைத்தையும் உணர்ந்த அய்யன்காளி விளையாடிய பந்து நாயர் ஒருவனது வீட்டின் அருகே விழுந்தது. கோபம் கொண்ட நாயர் அய்யன்காளியை மிரட்டினான். பல நாட்கள் யோசித்து, தெளிவடைந்த மனதுடன் புறப்பட்ட அய்யன்காளி எது மறுக்கப்பட்டதோ அந்த உரிமையை பெற தடையை மீற எழுந்தார். அந்த எழுச்சி தான் தனியொருவனாக நடத்திய மாட்டுவண்டிப் போராட்டம். முதல் முறையாக அன்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட உரிமையை நிலைநாட்டினார். தொடர்ந்து அந்த சாலையில் மாட்டுவண்டியின் மணிசத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

அய்யன்காளி பெற்ற வெற்றி ஒடுக்கப்பட்ட மக்களை விழிப்புணர்வு பெற செய்தது மட்டுமல்லாமல் ஆதிக்கசாதியினரை ஆத்திரமடைய வைத்தது. அய்யன்காளி மாட்டுவண்டி ஓட்ட முடிந்தாலும், மற்ற ஒடுக்கப்பட்ட மக்கள் தெருவில் நடக்க அனுமதி மறுக்கப்பட்டது. தனது விடுதலை மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூகத்தின் விடுதலையே உண்மையான விடுதலையாக இருக்க முடியுமென்பதை அய்யன்காளி உணர்ந்தார். ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி எந்த தெருக்களில் நடக்க உரிமை மறுக்கப்பட்டதோ அதே தெருக்களின் வழியாக புத்தன் சந்தைக்கு 'விடுதலை ஊர்வலம்' போனார். ஊர்வலம் பாலராமபுரத்தில் சாலியார் தெருவை அடைந்ததும் மறைந்திருந்த ஆதிக்கசாதி கும்பல் ஒடுக்கப்பட்ட மக்களை தாக்கியது. ஒடுக்கப்பட்ட மக்களும் தங்களது மேல் தொடுக்கப்பட்ட தாக்குதலை எதிர்கொண்டு பதில் தாக்குதலை தொடுத்தனர். திருவிதாங்கூரின் ஒடுக்கப்பட்ட மக்களின் முதல் ஆயுதப்போராட்டத்தில் இருதரப்பிலும் காயம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்கள் காயமடைந்தனர். தளராமல் அய்யன்காளி தலைமையில் போராடி ஆதிக்க சாதியினருக்கு பயத்தை ஏற்படுத்தினார்கள் ஒடுக்கப்பட்ட மக்கள்.

சாலியார் வீதி கலகம் பற்றிய செய்திகள் மணக்காடு, கழக்கூட்டம், கன்னியாபுரம் போன்ற பகுதியில் தீயாக பரவ இளைஞர்கள் தெருக்களில் இறங்கி உரிமைகக்காக போராட துவங்கினர். ஒடுக்கப்பட்ட இளைஞர்களின் கலகத்தை அடக்க ஆதிக்க சக்திகள் எடுத்த முயற்சி பலனளிக்காமல் மேலும் கலவரத்தை பரவச்செய்தது. விவசாய வேலைகளை புறக்கணித்து மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக ஒடுக்கப்பட்ட மக்கள் போராடத் துவங்கினர். போராடிய மக்களை பயமுறுத்த ஆதிக்கசாதியினர் தாக்குதலை தொடுத்தனர். அதன் விளைவு போராட்டத்தை மீண்டும் வலுவடைய வைத்து ஆதிக்கச்சாதி பண்ணைகளை பதற வைத்தது. தாக்குதலிலிருந்து காப்பற்ற ஒடுக்கப்பட்ட மக்கள் சிறு ஆயுதக்குழுக்களை உருவாக்கினர். விடுதலைக்கான பாதையும் விரிவடைந்தது...

(தொடரும்) அய்யன்காளி போன்ற தலைவர்கள் உருவாக காரணமான சூழல் பற்றிய முந்தைய பதிவு


தகவல் உதவி: அம்பேத்கார் இணையத்தளம்
படம் உதவி: தட்ஸ்மலையாளம் இணையத்தளம்

Sunday, February 04, 2007

ஆடு நனைகிறது ஓநாய் அழுகிறது!

ஆடு நனைகிறது என ஓநாய் அழுது வடிப்பதாக கிராமங்களில் பழமொழி ஒன்று உண்டு. இன்று ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைமுறை, தெய்வங்கள் அனைத்தையும் விழுங்கிவிட்டு பார்ப்பனீயம் ஓநாயாக அழுது புலம்புகிறது. ஓநாய்களிடமிருந்து ஆடுகளுக்கு விடுதலை தானாக வருவதில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையும் அது போல தானாக கிடைப்பதில்லை. நீண்ட நெடிய போராட்டங்களின் விளைவாகவே ஒடுக்கப்பட்ட மக்கள் விடியலைப் பெற முடியும்.

பாதிக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான வழிமுறைகள் அந்த மக்களிடமிருந்தே உருவாகின்றன. விடுதலைக்கான சமூக இயக்கங்களின் துவக்கம் மக்களின் பிரச்சனைகளிலிருந்தே பிறந்திருக்கிறது. தென்தமிழகத்தில் பார்ப்பனீய அடக்குமுறையிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்களை காப்பாற்ற அய்யாவழி தோன்றியது. பிரச்சனையின் உச்சநிலையில் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்தே அய்யாவழி பிறந்தது. எந்த பார்ப்பனீயத்தை எதிர்த்து அய்யாவழி பிறந்ததோ அதே பார்ப்பனீயம் இன்று அய்யாவழியை விழுங்கி ஏப்பம் விட துடிக்கிறது. அய்யாவழி மதம் தோன்றிய காரணத்தை புரிந்துகொள்ள அன்றைய திருவிதாங்கூர் பற்றி அறிவது அவசியம்.

திருவிதாங்கூர் சங்ககாலத்தில் ஐந்திணைகளாக பிரிக்கப்பட்டு சமஉரிமை படைத்த திராவிடர்களின் பூமியாக இருந்துள்ளது. கி.மு மூன்றாம் நூற்றாண்டு முதல் திருவிதாங்கூரில் துவங்கிய ஆரிய பண்பாட்டு படையெடுப்பு கி.பி 8ம் நூற்றாண்டில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது (தமிழக வரலாறும் பண்பாடும்: டாக்டர் A.சாமிநாதன்). இந்த காலகட்டத்தில் சாதி அமைப்பை உருவாக்க துவங்கியது. "சாதி அமைப்பில்லாத சமத்துவ சமுதாயத்தில் குடியேறிய ஆரியர்கள் சதுர்வர்ண அடிப்படையில் ஆரிய சித்தாந்த சாதி அமைப்பை உருவாகினர்" (மேற்கோள்: வரலாற்றாசிரியர் திரு. ஸ்ரீதரமேனன்). 19ம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் பார்ப்பனீய கொடுங்கோன்மையின் உச்சநிலையில் இருந்தது. பார்ப்பனீயவாதிகளால் விதிக்கப்பட்ட இந்துமத விதிகள் ஒடுக்கப்பட்ட மக்களை தீண்டாமை தீயில் வேக வைத்தது.

கன்னியாகுமரியில் அடக்குமுறையாளர்கள் பெரும்பாலும் நாயர் சாதியினர். திருவிதாங்கூர் அரசகுடும்பத்திற்கு விசுவாசமாக இருந்ததற்காக, போரில் அபரிதமாக செயலாற்றியதற்காக நாயர்களுக்கு பிள்ளை, பணிக்கர், நம்பியார், மேனன், கர்தா, கைமால்... என பட்டங்களை மன்னன் வழங்கியிருந்தான். இந்த பட்டங்களை நாயர் குடும்பங்கள் நிரந்தரமாக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. காலப்போக்கில் இந்த பட்டங்கள் துணைசாதிகளாக அடையாளம் காணப்பட்டன. நம்பூதிரிகளின் நிழல் அதிகார மையங்களாக நாயர் குடும்பங்கள் விழங்கியது. திருவிதாங்கூரில் சாதி அடுக்கில் நம்பூதிரிகளுக்கு அடுத்த இடம் நாயர்களுக்கு இருந்தது. நம்பூதிரிகளின் ஆதரவு நாயர்களுக்கு தடையில்லாமல் கிடைக்க முக்கிய காரணம் அவர்களுக்கிடயிலான morganatic மணஉறவுகள். சிலநேரங்களில் பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக, நிலவுடமையாளர்களாக இருந்த நம்பூதிரிகளின் செல்வத்தை பெற இந்த மண உறவுகள் ஏற்படுத்தப்பட்டன. நாயர் பெண்ணின் வீட்டிற்கு நம்பூதிரி "வரலாம்"; அந்த வேளை அவளது கணவனை விட நம்பூதிரிக்கே முதலிடம் என்ற வழக்கம் இருந்தது. இவ்வகை உறவுகளினால் நம்பூதிரிகளின் நிழலில் நாயர்கள் பதவி, அதிகாரம், சொத்து, படைபலம் என அனைத்தையும் அனுபவித்தனர். மன்னனின் படைகளில் முக்கிய பதவிகளில் நாயர்கள் இடம்பெற்றனர். விளைநிலங்களான வயல், தென்னந்தோப்புகள் நாயர்களிடமிருந்தது. வழிபாட்டு முறைகளிலும் நாயர்கள் சூரியவணக்கம் முதல் பெரும்பாலும் நம்பூதிரிகளின் வழிபாட்டுமுறைகளை தழுவியே இருந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் நாயர்களை நேரில் காணும் போதும், பேசும் போதும் அழைக்க "ஏமானே (எஜமானே)" என குறிப்பிடுவது வழக்கமாக இருக்கிறது. 'எஜமான்' நிலையில் இருந்த இவர்களை அப்படி அழைத்த சொல் யாமான், ஏமான் என்று மருவி சொல் வழக்காக இருக்கிறது. அதே நாயர் நேரில் கண்ணில் படாத வேளை சூத்திரன் என திட்டுவதும் உண்டு. அடக்குமுறையை அனுபவித்த வலியின் வெளிப்பாடு சூத்திரன் என நாயரை ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்குள் சொல்ல வைத்தது. பண்ணையார்களாக இருந்த நம்பூதிரிகளும், நாயர்களும் ஒடுக்கப்பட்ட மக்களை அடிமைகளாக வைத்திருந்தனர்.

கொல்லம் திவான் எழுதிய மடலில் திருவிதாங்கூரில் 1,64,864 பேர் அடிமைகளாக இருந்துள்ளனர் என்பதை குறிப்பிடுகிறார். அடிமைகளாக இருந்த மக்கள் ஆங்கிலேய காலனியாத்திக்க பிரதிநிதிக்கு எழுதிய கடிதத்தில் "பரம்பரை பரம்பரையாக நாங்கள் விவசாய கூலிகள், வேலையும் சமூக அடக்குமுறையும் சேர்ந்து எங்களை விவசாய கூலி அடிமையாக பண்ணையார்களிடம் வைத்திருக்கிறது. நாங்கள மன, வாழ்வு அடிப்படையில் சுதந்திர மனிதர்களாக பண்ணையார்கள் எதிராக உள்ளனர். ஆதிக்க சாதியினர் அனுபவித்து வருகிற உரிமைகள் எங்களுக்கு மறுக்கப்படுகிறது. நில உரிமையாளர்களின் பிடியில் சிக்குண்டு மழையிலும், வெயிலிலும் மிருகமாக உழைத்து எஜமானர்கள் சொத்தை பெருக்க நாங்கள் அரை வயிற்றில், அழுக்கு சாக்கில் அவதிப்பட வைக்கப்பட்டுள்ளோம்" என எழுதினர். அடிமைகளை வாங்குவதும், விற்பதும் ஆதிக்கசாதி நில உடமையாளர்களுக்கு உரிமையாக இருந்தது. இரணியல், தொடுவெட்டி, படந்தாலுமூடு போன்ற பகுதிகளில் அடிமைகளை விற்க சந்தைகள் இருந்துள்ளன. அடிமைகளை சக்கையாக பிளிந்து வேலை வாங்கிய பின்னர் வதைப்பதும், கொலைசெய்வதும், மீண்டும் விற்பது என கொடுங்கோன்மையின் உச்சகட்டம் நிலவியது. திருவிதாங்கூர் பார்ப்பனீய அரண்மனை, கோட்டைகளின் அழகிலும், கோயில்களின் சுவர்களிலும் இந்த அடிமைகளின் இரத்தமும் சதையும் கலந்த வரலாறு செல்வ செழிப்பாக கலந்திருக்கிறது.

பார்ப்பனீயம் உச்சநிலையில் ஈடுபட்ட அரசுகளில் நம்பூதிரிகளும், நாயர்களும் இணைந்து ஆதிக்கம் செலுத்திய திருவிதாங்கூர் மன்னராட்சி குறிப்பிடத்தக்கது. நம்பூதிரிகளும், நாயர்களும் சேர்ந்து கோவில்கள், வீதிகள் எங்கும் கட்டுப்பாடுகள் அமைத்து தங்களுக்கு சாதகமான அமைப்பை உருவாகி வைத்திருந்தனர். அதிகார மையங்களில் தங்களுக்கு சாதகமான சட்டங்களை உருவாக்கி வைத்திருந்தனர். ஈழவ சாதியில் பிறந்தவர்கள் நம்பூதிரிகளிடமிருந்து 32 அடி தூரம் விட்டும், நாயர்களிடமிருந்து 16 அடி தூரம் தள்ளியும் நடக்கவேண்டும் என்ற சட்டங்கள் நடைமுறையில் இருந்தது. கண்ணால் பார்த்தாலே தீட்டு என சில சாதிகளை ஒதுக்கி வைத்திருந்தனர். ஒடுக்கப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேல் உடையணிய தடையும், அபராதமும் விதித்திருந்தனர். நாயர் வீடுகளின் அருகில் பிற சாதியினர் செல்லக்கூடாது. நாயர்கள் குளிக்கும் பொது இடங்களில் பிற சாதியினர் குளிக்கக்கூடாது. நாயர்கள் போல மேலாடை அணியக்கூடாது. கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது. கோவிலில் நுழையக்கூடாது. இருபதாம் நூற்றாண்டு வரையிலும் இப்படியான கொடுமைகள் தொடர்ந்தன. கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த கொடுமைகளை அதிகம் அனுபவித்தவர்கள் பள்ளர், பறையர், சாணார், முக்குவர் சாதி மக்கள்.

இந்த கொடுமைகளை எதிர்த்து ஒவ்வொரு காலகட்டத்திலும் பல இடங்களில் கிளர்ச்சிகள் எழுந்து கலவரங்களாக வெடித்தது. அந்த போராட்டங்களில் மூழ்கி எழுந்த முத்தாக சமூகப்புரட்சியாளர்கள் பலர் உருவாகினர். திருவிதாங்கூரில் உருவான வீரம் செறிந்த மாமனிதர்களில் அய்யங்காளி, நாராயணகுரு, அய்யா வைகுண்டர் (முத்துக்குட்டி சாமிகள்) என பலர். அன்றைய வர்ணாஸ்ரம சாக்கடையான திருவிதாங்கூரை சீர்படுத்திய இந்த மாமணிகளின் வரலாறு இன்றைய தலைமுறை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தெரியவில்லை. பள்ளிப்பாடங்களிலும், வரலாற்று புத்தகங்களிலும் இவற்றை அறியாமல் வளர்ந்துவிட்டோம்.

மன்னர் ஆட்சியில் நம்பூதிரிகளும், நாயர்களும்அனுபவித்து வந்த பதவி சுகங்கள், அதிகாரம் அனைத்தும் காலனியாதிக்கத்தில் இடம் மாற துவங்கியது. கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு மாறிய மக்கள் தங்களது உரிமையை அனுபவிக்க ஆரம்பித்தனர். மேலாதிக்கத்தின் பிடி மெல்ல நழுவ துவங்கியது. பார்ப்பனீய மதத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் மதம் மாறினால் கிடைக்குமென நம்பி அதிக எண்ணிக்கையில் மக்கள் மதம் மாற துவங்கினர். வாழ்வுரிமையையும், கலாச்சாரத்தையும், வழிபாட்டு உரிமையையும் மீட்டெடுக்க தெற்கு திருவாங்கூரில் சமூகநீதி போராட்டங்கள் மதத்தை மையமாக வைத்து உருவானது.

ஈழவ மக்களுக்கு கோவிலில் வழிபட, சாலைகளில் நடமாட தீட்டு என தள்ளி வைத்தனர் ஆதிக்க சாதியினர். வைணவ இந்துகோயில்களில் ஒடுக்கப்பட்ட மக்களை தீட்டாக வைத்து வழிபாட்டு உரிமையை மறுத்ததை எதிர்த்த நாராயணகுரு ஈழவ மக்களுக்காக தனியாக கோயில்களை உருவாக்கினார். நம்பூதிரிகளும், நாயர்களும் அதை எதிர்த்தனர். எதிர்த்த நம்பூதிரி ஒருவனிடம் "இது நம்பூதிரி சிவனுக்கான கோயிலல்ல, இது ஈழவ சிவன் கோவில்" என்றாராம் நாராயணகுரு. எங்களை எங்கள் வழியில் வாழவிடு என்பதாக அமைந்த நாராயணகுருவின் பாதை அணுகுமுறை பார்ப்பனீயத்தை உலுக்கியது.

பார்ப்பனீய கொடுங்கோன்மையில் சாலையில் நடக்க கூட உரிமையில்லாதவர்களாக புலையர் சாதி மக்கள் நடத்தப்பட்டனர். கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பின்னரும் தங்களது பொருளாதாரமும், வாழ்க்கையும் முன்னேறாமல் இருந்த புலையர் சாதி மக்கள் சாலைகள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட பொது வசதிகளுக்காக இயக்கமாக போராட்ட துவங்கினர். 1893ல் புலையர் சாதியினர் வெங்கனூர் என்னும் இடத்தில் பள்ளிக்கூடம் ஒன்றை துவங்கினர். இந்த பள்ளிக்கூடம் ஆதிக்கசாதியினரால் தகர்க்கப்பட்டது. புலையர் சாதி மக்களிடமிருந்து பிறந்த ஒருவர் அதை எதிர்த்து கடுமையாக போராடினார். ஆதிக்க சாதியினர் நிலங்களில் விவசாய வேலைகள் செய்வதை புறக்கணிக்க அழைப்பு விடுத்தார் அந்த மனிதர். மாட்டு வண்டியில் பொது சாலையில் சென்று போராட்டம் துவங்கினார். 1898ல் அவர் தலைமையில் பொது சாலையில் புலையர்கள் நுழையும் போராட்டத்தை நடத்தினார். புலையர் சாதி மக்களுக்கும் ஆதிக்க சாதியினருக்கும் மோதல்கள் வெடித்தன. கன்னியாகுமரி, நெய்யாற்றின்கரை, வைக்கம் முதலான இடங்களில் வெடித்த போராட்டங்களை அரசு அடக்கியது. இந்த போராட்டத்தை முன்னின்று நடத்திய மாபெரும் மனிதர் தான் அய்யன்காளி. அய்யன்காளி, வலிக்கர சோதி முதலிய தலைவர்களின் போராட்டங்களின் பலனாக புலையர் சாதி மக்களுக்கு கல்வி உரிமைக்கான சட்டத்தை 1914ல் திருவிதாங்கூர் அரசு உருவாக்கியது. இந்த சட்ட உரிமையை ஆதிக்க சாதியினர் கடுமையாக எதிர்த்தனர். புல்லத்து என்ற இடத்தில் புலையர் சாதி குழந்தைகள் படித்த பள்ளிக்கூடத்தை நாயர்கள் தீவைத்து கொழுத்தினர். இந்த பிரச்சனையில் காலனியாதிக்க அரசு தலையிட்டது.

நாடு முழுவதும் கலனியாதிக்கத்தின் பிடி அழுத்தமாக இருந்த வேலையிலும் பார்ப்பனீய கொடுங்கோன்மை ஆதிக்க சாதிகளால் நடத்தப்பட்டே வந்தன. குறுநில மன்னர்கள் போல திருவிதாங்கூரின் பல பகுதிகளின் பல கிராமங்களை நம்பூதிரிகள், நாயர்கள் கூட்டணி ஆட்சி செய்து வந்த அதிகார மையங்களே இதற்கு அடிப்படை காரணம். இந்த அதிகார மையங்கள் மன்னனுடன் தொடர்பை வைத்திருந்தது. கோவிலை சுற்றி அமைந்த பல கிராமங்களை உள்ளடக்கி ஆளப்பட்ட இந்த பகுதிகள் சங்கேதம் என்று அழைக்கப்பட்டன. சட்டம் ஒழுங்கை கவனிக்க தனியாக படைகள் எதுவும் இல்லாமல் இருந்தாலும் இவை அதிகார மையங்களாக விளங்கியது (தகவல்: கொச்சி இராச்சியம், K.P.மேனன், 1911)

நாடார் பெண்கள் தங்கள் உடலின் மேல்பகுதியில் (இடுப்புக்கு மேலே) மார்பை மறைக்க இடுப்புக்கு மேல் துணி அணிய உரிமை மறுக்கப்பட்டது. மீறி ஜாக்கட் அணிந்த பெண்கள் கொடும் துயரத்துக்கு ஆளாயினர். நாடார் சாதி மக்களின் போராட்டங்களும், ஐரோப்பிய மிஷனரிகள் ஆங்கிலேய அரசாங்கத்திற்கு கொடுத்த அழுத்தத்தின் விளைவாகவும் 1829-ம் ஆண்டு திருவிதாங்கூர் அரசு நாடார் பெண்கள் குப்பாயம் எனப்படும் ஒருவித ரவிக்கையை மட்டும் அணியலாம் என்று அனுமதித்தது. ஆனால் அவர்கள் மேல்சாதி பெண்களைப் போல நல்ல உடை அணியக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாயர்களின் எதிர்ப்பு காரணமாக அந்த உத்தரவை நடைமுறைபடுத்த முடியவில்லை. 1859ல் தெற்கு திருவிதாங்கூரில் (குமரிமாவட்டம்) இரணியல், கோட்டார், திட்டுவிளை, தொடுவெட்டி மற்றும் பல ஊர்களில் நாடார் சாதி மக்களை நாயர்கள் கடுமையாக தாக்கி வீடுகளை எரித்தனர். அவர்களது ஜாக்கெட்களை நாயர்கள் கிழித்தெறிந்த கொடுமை தொடுவெட்டி (மார்தாண்டம்), அருமனை என கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் நடந்தது.

1870ல் குமாரகோவில் திரு.வெள்ளையன் நாடார் தலைமையில் 12000 சாணார் சாதி மக்கள் கோவிலில் நுழைந்தனர். ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலில் அனுமதிக்காது நாயர்கள் தாக்கியதில் 150 சாணார் சாதியினர் கொல்லப்பட்டனர். இதுபோல பார்ப்பனீய இந்து கோவில்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் நுழையவிடாத நிலை திருவிதாங்கூர் முழுவதும் இருந்தது.

அய்யாவழி இப்படியான காலச்சூழலில் ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து தாழக்கிடப்பாரை தற்காப்பதுவே தர்மம் என அந்த மக்களின் உரிமைக்காக அய்யாவழி தனி மதமாக பிறந்தது. இல்லறமே உயர்ந்த அறமாக போதித்த அய்யா வைகுண்டர் இல்லறத்தையே கடைபிடித்தார். இயற்கையான வழியும், வாழ்வுமே அய்யாவழியின் அடிப்படை என்பதற்கு துறவறமின்மை, கண்ணாடியில் தன்னையே கண்டு வணங்குதல், சுயமரியாதைக்கு அடையாளமான தலைப்பாகை, ஒரே கிணற்றில் எல்லோரும் சமமாக தண்ணி அருந்துவது, சாதி பாகுபாடின்மை என பல அடையாளமாக உள்ளன (அய்யாவழி பற்றி முந்தைய பதிவுகள் இங்கே: அய்யாவழி மதத்தின் வரலாறு, பார்ப்பனீய பிடரியை உலுக்கிய அய்யாவழி!). ஒடுக்கப்பட்ட மக்களின் மாமனிதர்களில் அய்யாவும் ஒருவர்.

பார்ப்பனீய கொடுங்கோன்மை திட்டங்களையும், கொள்கைகளையும் அறவே எதிர்த்து பல தளங்களில் போராடியவர்கள் தான் அய்யா, நாராயணகுரு, அய்யன்காளி போன்ற எண்ணற்ற மாவீரர்கள். இன்று அவர்களை பார்ப்பனீய இந்துவெறி ஆர்.எஸ்.எஸ் சொந்தமாக்க முனைவது ஓநாய் அழுவதை தான் நினைவுபடுத்துகிறது. நம்பூதிரிகளும், நாயர்களும் நடத்திய கொடுங்கோன்மை கோரத்தாண்டவத்தை திருத்தி எழுத பார்ப்பனீயவாதிகள் முயல்கிறார்கள். இதன் பின்னணியில் சமகால சமூக அரசியல் காரணங்கள் இருக்கின்றன. கன்னியாகுமரியிலும், கேரளாவிலும் சங்பரிவாரங்களை 1970, 1980 களில் உருவாக்கி களம் அமைத்ததும், கலவரங்களை தூண்டியதும் நாயர்கள். தங்களது இழந்த அதிகாரம் ஆர்.எஸ்.எஸ் வழியாக கிடைக்குமா என அலையும் ஆதிக்கசாதிகளுக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் இன்றைய தலைமுறை பலிக்கடாவாக ஆக்கப்படுகிறது காலத்தின் சுழற்சி. ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை அழிப்பது, திருத்துவதன் வழி பார்ப்பனீயவாதிகள் தங்கள் தவறுகளை ஆங்கிலேயர்கள், கிறிஸ்தவ மிசனரிகள் மீது போட்டு தப்பிக்க முயல்கிறார்கள். இதற்காக ஒடுக்கப்பட்ட மக்களின் வழிபாட்டு முறைகளில் சங்கப்பரிவாரங்களின் ஊடுருவலும், ஆர்.எஸ்.எஸ் கிளைகளும் உருவாக்கப்படுகின்றன. மாற்றத்தை உருவாக்கும் அமைப்புகளின் தனித்தன்மையை அதிக்கசக்தியினர் அழித்து, வரலாற்றை திரித்து குற்றப்பழியிலிருந்து தப்பிக்க பார்ப்பனீயம் துடிக்கிறது.

_________________
உதவிய நூல்கள்

  1. A Caste and Social Change in Colonial Kerala - essay by: D.Damodaran Namboodiri. Perspectives on Kerala History - The Second Milennium, P.J.Cherian (Ed)
  2. Religion and Sub-altern Agency - Dr. G.Patrick : University of Madras
  3. Slavery in Travancore, 1973, K.K. Kusuman
  4. Dr. Sobhanan, Temple Entry Movement and Sivakasi Riots, K.Kesavan, கோவில் நுழைவுப் போராட்டங்கள்
இந்த கட்டுரையை பூங்கா வலையிதழில் படிக்க இங்கே அழுத்தவும்