Wednesday, February 07, 2007

அய்யன்காளி: ஒடுக்கப்பட்ட மக்களின் போராளி!

புழுதியை கிழப்பியபடியே கழுத்தில் கட்டியிருந்த பெரிய வெண்கல மணியொலியெழுப்பியபடி இரண்டு வெள்ளை காளைகளும் வண்டியை இழுத்து செல்கிறது. முழுநீள வேட்டியும், தோழில் சுற்றப்பட்ட துண்டும், தலைப்பாகையும் அணிந்த உயரமான அழகிய வாலிபனின் கோபம் காளைகளை வேகப்படுத்துகிறது. பாய்ந்து ஓடும் காளையின் இழுப்பில் வண்டி சந்தையின் பாதையில் மீண்டும் மீண்டும் ஓடுகிறது. ஆண்டாண்டு காலமாக தனது சொந்தங்கள் நடமாட முடியாத சாலையில் வேங்கையாய் அலையும் இந்த இளைஞன் யார் தெரியுமா?

19ம் நூற்றாண்டில் புலையன் சாதியில் பிறந்ததால் இவனுக்கும், சகமனிதர்களுக்கும் தெருவில் நடக்கக்கூட உரிமை மறுக்கப்பட்டவன். அடிமையாக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து வந்த இவனோ மாட்டு வண்டியில், முழுவேட்டி கட்டி, தோழில் துண்டும் தலைப்பாகையுமாக வருவது கண்டு ஆதிக்கச்சாதி நாயர்கள் வெறிகொண்டனர். அவனுக்கு கொடுக்கும் தண்டனையை பார்த்து எந்த புலையனும் எதிர்த்து எழும்ப கூடாது என திட்டமிட்ட நாயர்கள் கும்பல் சேர்த்து அவனை வழிமறித்தார்கள். அவனோ சிலிர்த்தெழும் வேங்கையாக இடுப்பில் சொருகியிருந்த நீண்ட கத்தியை உருவினான். அவனை தொடுபவன் எவனையும் வெட்டுவதாக அடவு கட்டி நின்றான். கோபத்திலும் உறுதியாக அடவு கட்டி காலை பரவி கையை வீசி நின்ற அவனை கண்டதும் விலகியதுஆதிக்க வெறி கும்பல். எதிர்த்து நின்ற மாவீரன் அய்யன்காளி என்னும் மாபெரும் ஒடுக்கப்பட்ட மக்கள் போராளி. போராளிகளுக்கு உயிர் பயமில்லை என்பதற்கு சாட்சியாக நின்றவன். தன்னலமில்லாத விடுதலை வேட்கையென்னும் நெருப்பில் குளித்து எழும் இந்த நெருப்புப்பறவைகள் எழுந்தால் விடுதலை பிறக்கும். அய்யன்காளி என்ற மாபெரும் நெருப்புக்கனல் வளர்த்த விடுதலை நெருப்பில் புலையர்கள் எழுந்தனர். திருவிதாங்கூரில் பார்ப்பனீய அடிமைத்தனத்திலிருந்து தலித் மக்களை மீட்ட மாபெரும் மக்கள் தலைவன் அய்யன்காளி.

28 ஆகஸ்டு 1863ல் திருவிதாங்கூரில் (கேரளா) திருவனந்தபுரத்தை அடுத்த வெங்கனூரில், பெருங்காட்டுவிளா என்ற ஊரில் 7 பிள்ளைகளில் ஒன்றாக கூலி விவசாய குடும்பத்தில் மகனாக பிறந்தார் அய்யன்காளி. இளவயதில் கட்டுடலும், அழகும், வலிமையும் நிறைந்தவராகவே வளர்ந்தார். அய்யன்காளி சிறுவனாக இருக்கும் போது தனது குடும்பத்தினரும், உறவினர்களும் உரிமை மறுக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்படுவதை உணர்ந்தார். புலையர் சாதியில் பிறந்த அவர்களுக்கு சாலையில் நடக்க அனுமதியில்லை. உடலை மறைக்க நல்ல உடையணிய அனுமதி மறுக்கப்பட்டது. செருப்பு போட அனுமதியில்லை. தலைப்பாகை கட்டக்கூடாது என பல அடக்குமுறைகளை அனுபவித்தனர். பார்ப்பனீய வர்ணாஸ்ரம அடுக்கில் கீழே இருந்ததால் புலையர்களை மிருகத்திற்கு இணையாக ஏரில் பூட்டி வயலை உழுதனர். அடிமைகளாக இருந்த அவர்களது உழைப்பில் நாயர்களும், நம்பூதிரிகளும், மன்னனும் உண்டு கொழுத்து கிடந்தனர். இவை அனைத்தையும் உணர்ந்த அய்யன்காளி விளையாடிய பந்து நாயர் ஒருவனது வீட்டின் அருகே விழுந்தது. கோபம் கொண்ட நாயர் அய்யன்காளியை மிரட்டினான். பல நாட்கள் யோசித்து, தெளிவடைந்த மனதுடன் புறப்பட்ட அய்யன்காளி எது மறுக்கப்பட்டதோ அந்த உரிமையை பெற தடையை மீற எழுந்தார். அந்த எழுச்சி தான் தனியொருவனாக நடத்திய மாட்டுவண்டிப் போராட்டம். முதல் முறையாக அன்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட உரிமையை நிலைநாட்டினார். தொடர்ந்து அந்த சாலையில் மாட்டுவண்டியின் மணிசத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

அய்யன்காளி பெற்ற வெற்றி ஒடுக்கப்பட்ட மக்களை விழிப்புணர்வு பெற செய்தது மட்டுமல்லாமல் ஆதிக்கசாதியினரை ஆத்திரமடைய வைத்தது. அய்யன்காளி மாட்டுவண்டி ஓட்ட முடிந்தாலும், மற்ற ஒடுக்கப்பட்ட மக்கள் தெருவில் நடக்க அனுமதி மறுக்கப்பட்டது. தனது விடுதலை மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூகத்தின் விடுதலையே உண்மையான விடுதலையாக இருக்க முடியுமென்பதை அய்யன்காளி உணர்ந்தார். ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி எந்த தெருக்களில் நடக்க உரிமை மறுக்கப்பட்டதோ அதே தெருக்களின் வழியாக புத்தன் சந்தைக்கு 'விடுதலை ஊர்வலம்' போனார். ஊர்வலம் பாலராமபுரத்தில் சாலியார் தெருவை அடைந்ததும் மறைந்திருந்த ஆதிக்கசாதி கும்பல் ஒடுக்கப்பட்ட மக்களை தாக்கியது. ஒடுக்கப்பட்ட மக்களும் தங்களது மேல் தொடுக்கப்பட்ட தாக்குதலை எதிர்கொண்டு பதில் தாக்குதலை தொடுத்தனர். திருவிதாங்கூரின் ஒடுக்கப்பட்ட மக்களின் முதல் ஆயுதப்போராட்டத்தில் இருதரப்பிலும் காயம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்கள் காயமடைந்தனர். தளராமல் அய்யன்காளி தலைமையில் போராடி ஆதிக்க சாதியினருக்கு பயத்தை ஏற்படுத்தினார்கள் ஒடுக்கப்பட்ட மக்கள்.

சாலியார் வீதி கலகம் பற்றிய செய்திகள் மணக்காடு, கழக்கூட்டம், கன்னியாபுரம் போன்ற பகுதியில் தீயாக பரவ இளைஞர்கள் தெருக்களில் இறங்கி உரிமைகக்காக போராட துவங்கினர். ஒடுக்கப்பட்ட இளைஞர்களின் கலகத்தை அடக்க ஆதிக்க சக்திகள் எடுத்த முயற்சி பலனளிக்காமல் மேலும் கலவரத்தை பரவச்செய்தது. விவசாய வேலைகளை புறக்கணித்து மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக ஒடுக்கப்பட்ட மக்கள் போராடத் துவங்கினர். போராடிய மக்களை பயமுறுத்த ஆதிக்கசாதியினர் தாக்குதலை தொடுத்தனர். அதன் விளைவு போராட்டத்தை மீண்டும் வலுவடைய வைத்து ஆதிக்கச்சாதி பண்ணைகளை பதற வைத்தது. தாக்குதலிலிருந்து காப்பற்ற ஒடுக்கப்பட்ட மக்கள் சிறு ஆயுதக்குழுக்களை உருவாக்கினர். விடுதலைக்கான பாதையும் விரிவடைந்தது...

(தொடரும்) அய்யன்காளி போன்ற தலைவர்கள் உருவாக காரணமான சூழல் பற்றிய முந்தைய பதிவு


தகவல் உதவி: அம்பேத்கார் இணையத்தளம்
படம் உதவி: தட்ஸ்மலையாளம் இணையத்தளம்

18 பின்னூட்டங்கள்:

சிவபாலன் said...

திரு

மிக அருமையான பதிவு!

மிகவும் தேவையான பதிவு!

நன்றி!

சிவபாலன் said...

திரு,

// அடிமையாக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து வந்த இவனோ மாட்டு வண்டியில், முழுவேட்டி கட்டி, தோழில் துண்டும் தலைப்பாகையுமாக வருவது கண்டு ஆதிக்கச்சாதி நாயர்கள் வெறிகொண்டனர் //

படிக்கும் போது கோபம் வருகிறது..

இன்றும் சமூகப் பார்வையில் பெரிய மாற்றம் வந்ததாக தெரியவில்லை..

தொடருங்கள்..

நாமக்கல் சிபி said...

அரியதொரு வரலாறு! அறியத்தந்தமைக்கு நன்றி திரு சகா அவர்களே!

மாசிலா said...

அரியதொரு வரலாற்றை தந்திருக்கிறீர்.

வர்ணாஸ்ரம் எனும் கொடிய ஆயுதத்தை முழு சக்தியுடன் பிரயோகித்து, தமது காட்டுமிராண்டி தனத்திற்கு எளிய மக்களை பலி கடாவாக்கியவர்கள் இந்த "ஆதிக்க சாதியனரே". ஒருவன் கோட்பாடு அமைத்து கோடிட்டு அக்கிரமத்திற்கு வழி கோளியவன். மற்றொருவன் அக்கோட்பாடுக்கு உட்பட்டு, போட்ட கோட்டில், காட்டிய வழியில் சென்று சவ வெறி பிடித்த சண்டாள படையென எளிய மக்களை அழித்து புதிய சமுதாயம் படைத்தனராம்...

வஞ்சிக்கப்பட்ட அம்மக்கள் சிந்திய இரத்தம் ஊறிய இம்மண்ணில், ஆலமரமென ஆழ்வேர்கொண்டு பலதிசைகளில் பாய்ந்து அனைத்து வரலாற்று நிகழ்வுகளை உறிந்து பலமுடன் திடமான வேர்பிடித்து புத்துயிர் பெறுவோம்.

கலை said...

மனிதர்கள் அனைவரும் சமமாக வாழும் காலம் வருமா?

ஜோ/Joe said...

வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டமாகாது தம்பி!
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பி!

சுந்தரவடிவேல் said...

ஐயன் காளிக்கு நன்றி :)

Deepa said...

ரொம்ப organised ஆ இருக்கு :)

குழலி / Kuzhali said...

பார்ப்பனியத்தின் வழக்கமான பார்ப்பனியத்தை எதிர்ப்பவர்களை உள்வாங்கும் போக்கு அய்யன்காளி அவர்கள் மீதும் நடத்த ஆர்.எஸ்.எஸ். முயல்வது தெரிகின்றது, இந்த உள்ளிழுக்கும் போக்கை உடைக்கவும் இந்த கட்டுரை தேவைப்படுகிறது.

நன்றி

thiru said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சிவபாலன், சிபி

thiru said...

நன்றி மாசிலா!

கலை,

மனிதர்கள் அனைவரும் சமமான உரிமை பெற்ற உலகை நோக்கியே நமது பயணம். அது அமையும் கால எல்லை நமது செயலிலும் இருக்கிறது.

thiru said...

நன்றி ஜோ, சுந்தர்

thiru said...

குழலி,

அய்யன்காளியை விழுங்கி ஏப்பம் விட தேடி நவீன பார்ப்பனீயர்கள் அலைகிறார்கள். அய்யன்காளி போன்ற தலைவர்களோ பார்ப்பனீய பீடத்தையே அசைத்தவர்கள். அய்யன்காளி பெற்றுக்கொடுத்த விடுதலையை தட்டிப்பறிக்க ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வலைவீச பார்ப்பனீய கூட்டம் அலைகிறது. அய்யன்காளி யாரை, எந்த கருத்தியலை எதிர்த்தாரோ இன்ன்று அவர்கள் அய்யன்காளியை உரிமை கொண்டாடுவது வேடிக்கை.

thiru said...

குழலி,

அய்யன்காளியை விழுங்கி ஏப்பம் விட தேடி நவீன பார்ப்பனீயர்கள் அலைகிறார்கள். அய்யன்காளி போன்ற தலைவர்களோ பார்ப்பனீய பீடத்தையே அசைத்தவர்கள். அய்யன்காளி பெற்றுக்கொடுத்த விடுதலையை தட்டிப்பறிக்க ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வலைவீச பார்ப்பனீய கூட்டம் அலைகிறது. அய்யன்காளி யாரை, எந்த கருத்தியலை எதிர்த்தாரோ இன்ன்று அவர்கள் அய்யன்காளியை உரிமை கொண்டாடுவது வேடிக்கை.

Anonymous said...

திரு, உங்ககிட்ட கேக்கலாம்னு தோணுது ஒரு இக்கட்டான கேள்வி! நீங்க பேசும் தலைப்புகளுக்கு ஏற்ற கேள்விதான். நீங்க பின்னூட்டங்களை கையாளும் விதம் பக்குவம் அருமையா இருக்கதுனால இக்கட்டான கேள்வி தைரியமா கேட்டு வைக்கலாம்னு தோணுது.
இது நக்கலோ, எதிர் கருத்தோ இல்ல, நிஜமான கேள்வி, பதில் தேடி.

இந்த மாதிரி பதிவுகளை எந்த கண்ணோட்டத்தில படிக்கணும் கலப்பு மணம் செய்தவங்க? உதாரணத்துக்கு நீங்க நம்பூதரியும், நாடாரும், நாயரும் பத்தி எழுதிருக்கீங்க - எனக்கு ஒண்ணொன்லையும் ஒரு மதினின்னு வச்சிக்குங்க (கிட்டத்தட்ட நிஜம்தான்!) எனக்கு உங்க பதிவோட நோக்கம் புரியலையே. இந்த மூணு மதினி கூட சேந்து காய்கறி வெட்டி கதையடிக்கிற ஒருத்தி, என்ன நினைக்கணும், என்ன தெரிஞ்சு என்ன சாதிக்கணும், இந்த ஜாதிகளின் அன்றைய நிலைகள் பற்றி?
வரலாற்றினை மாற்றுவதும் மறப்பதும் தவறுன்ற கருத்து புரியுது. ஆனால் சரியாக நினைவு படுத்தலின் நோக்கம் என்ன? கத்திரிக்கா வெட்டின மதினியோட தாத்தாவும், உருளைக்கிளங்கு வெட்டின மதினியோட தாத்தாவும், செஞ்ச தப்பு அவியலை கசக்க வைக்குமா?

இல்ல, என்னை சுத்தி மட்டும்தான் உலகம் மாறியிருக்கா? கலப்பு மணக் குடும்ப பதிவர்கள் பின்னூட்டம் விட சங்கோஜப் படுவாங்கன்னு நினைச்சிருக்கீங்களா?

thiru said...

மதுரா,

முதல் வருகைக்கு நன்றி!

உங்களுக்கான பதிலை கொஞ்சம் விரிவாக சொல்லவேண்டியதால் விரைவில் ஒரு தனிப்பதிவாக எழுதுகிறேன். பொறுத்துக்கொள்ளுங்கள்

Anonymous said...

திரு, ஆவலுடன் காத்திருக்கிறேன்! நன்றி!

thiru said...

மதுரா உங்களுக்கான கேள்வி "வரலாறு நம்மை விடுதலை செய்யும்" என்ற பதிவில் இருக்கிறது.

உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com