Friday, February 16, 2007

வரலாறு நம்மை விடுதலை செய்யும்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 48 நாடுகளிலிருந்து 96 இளம் பிரதிநிதிகள் கலந்துகொண்ட உலக அளவிலான கூட்டம் ஒன்று தென்அமெரிக்காவில் வெனிசுவேலாவில் நடந்தது. கலந்து கொண்ட அனைவரும் தனிப்பட்ட விதத்தில் நன்கு அறிமுகமான மனித உரிமை போராளிகள். ஒரு மாதம் நடந்த கூட்டத்தில் பல நாடுகளின் கலாச்சார நடனங்களும், இசையும் கலந்திருந்தது. ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த தோழி டிட்ஜெரிடூ என்கிற இசையை இசைத்தார். அருமையான இசை என வியந்து பலர் பாராட்டினர். இந்த இசைக்கு சொந்தக்கார பழங்குடி மக்களின் வரலாறை சுருக்கமாக சொன்னார் அந்த தோழி. சொல்லி முடிக்கும் போது கண்ணீருடன் இருந்த தோழி "போர்க் கைதிகளாக வந்த எங்கள் முன்னோர்களின் சந்ததி நாங்கள் வளமாக வாழ்கிறோம். ஆனால் எங்களுக்கு தனியாக கலை இல்லை. எங்கள் கலாச்சாரம், இசை அனைத்தும் ஐரோப்பிய வழியில் வந்தது. இது எங்களது நாட்டின் பழங்குடி மக்களின் கலை. இன்று பழ்ங்குடி மக்களின் கலை தான் ஆஸ்திரேலியாவிற்கு தனி அடையாளத்தை தருகிறது." என்றார்.

உறைபனி காலங்களுக்கு முன்னர் (40,000-50,000 ஆண்டுகளுக்கு முன்னர்)ஆஸ்திரேலியாவில் பழங்குடி மக்கள் வாழ்வை துவங்கியிருந்தனர். 1788ல் தான் ஐரோப்பியர்கள் காலனியாதிக்கம் செய்தனர். ஆஸ்திரேலியாவில் இன்றும் கறுப்பின மக்களின் வாழ்க்கை கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம்...என அனைத்திலும் பின்னுக்கு தள்ளப்பட்ட நிலையில் தான் இன்றும் இருக்கிறது. 2000 ஆண்டு ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் சிட்னி ஒலிம்பிக் மட்டுமல்ல பேசப்பட்டது, பழங்குடி மக்களின் சகவாழ்விற்கு எடுத்த முயற்சிகள் அதிகம் முக்கியத்துவம் பெற்றது. ஆஸ்திரேலிய பல்கலைகழகங்களும், சமூக அமைப்புகளும் பழங்குடி மக்களின் இசை, நடனம், ஓவியம், இயற்கையை நேசிக்கும் வாழ்வியல் முறை போன்றவற்றிற்கு முக்கியத்துவமளிக்க துவங்கியது.

தங்களது முன்னோர் போர் குற்றவாளிகளாக ஆஸ்திரேலியாவில் வந்து பழங்குடி மக்களின் வாழ்க்கையை சிதைத்த கதையை நண்பர்கள் கூற கேட்டிருக்கிறேன். 'வெள்ளையின' ஆதிக்கம் பழங்குடி மக்களை நகரங்களுக்கு செல்ல விடாமல் தடை வைத்திருந்ததும், குழந்தைகளை கவர்ந்து சென்ற கொடுமையையும் பகிர்ந்து கொள்ளும் வேளைகளில் மனிதாபிமானமற்ற ஒரு வரலாற்றை நிகழ்த்தியதற்காக அவர்கள் வருத்தமடைகின்றனர். வரலாற்றை உணர்ந்த நண்பர்கள் பழங்குடி மக்களின் உரிமைக்காகவும், அகதிகளின் உரிமைக்காகவும் தங்களது அரசோடு போராடுகின்றனர். பழங்குடி மக்கள் அனுபவித்த கொடுமைகளின் வரலாறு சொல்லப்படாமல்/திரிக்கப்பட்டு இருந்தால் என்றும் ஆஸ்திரேலியா வெள்ளை ஆதிக்கத்தில் (பழங்குடி மக்களுக்கு இன்னும் முழு விடுதலை பிறந்துவிடவில்லை) தான் மிதக்கும்.

கடந்து போன வரலாற்று நிகழ்வுகளை நாம் அறிவது அவசியமா? அவற்றை அறிவதால் இன்னும் பிளவுகள் வர வாய்ப்பிருக்கிறதே. பழையவற்றை மறந்து இன்றைய வாழ்க்கையில் கவனம் செலுத்துவது நலமில்லையா? இந்த கேள்விகள் நமது மனங்களில் அவ்வப்போது எழுவது இயற்கையே. பள்ளியில் ஆங்கிலம், தமிழ் படிக்க ஆரம்பிக்கும் போது இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என படிக்கிறோம். மனித சமூகத்தில் நிகழ்காலமும், எதிர்காலமும் வரலாற்றின் தொடர்ச்சியான பாதையில் தான் வருகிறது. மனித இனத்தின் பரிணாமவியல் வளர்ச்சி பற்றி அறிய வரலாற்றின் பக்கங்களில் அறிவியலை தேடுகிறோம். மருத்துவம், நெறிகள், பண்பாடு என எல்லாவற்றிலும் வரலாறு தொடர்புடையது. ஒடுக்கப்படுகிற இனங்களின் விடுதலை எழுச்சிகளுக்கு வரலாறு உந்து சக்தி. தங்களது முன்னோர்களின் வாழ்வை, வழிபாட்டுமுறையை, சமுதாய அமைப்பை...அறிந்து அதனடிப்படையில் தாங்கள் இந்த நாட்டின் பூர்வீக குடிகள் என்பதை நிலைநாட்ட வேண்டிய மோசமான நிலையில் தான் இன்று உலகம் இருக்கிறது. மனித உறவிற்கு சாதி, மத வேறுபாடுகள் அவசியமில்லை.

சாதி, மத வேறுபாடுகளே இந்தியாவில் இந்துமத வெறியின் அடித்தளமாக இன்று இயங்குகிறது. பிறப்பில் உயர்வு தாழ்வு என்பது தானாக நிகழ்ந்தது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி வைத்து அது தான் உயர்ந்த நெறி என கொண்டாடுவது எந்த விதத்தில் சரியானது? பார்ப்பனீய ஆதிக்கவெறிக்கு துணையாக கடவுள் கதைகளை புனைந்து பொய்யான புளுகு வரலாற்றை திணிக்கும் போது உண்மை வரலாறை சொல்ல அவசியம் ஏற்படுகிறது. தவறாக வரலாற்றை திரித்து எழுவது நடக்கும் வரை உண்மையை சொல்வதும் நடந்துகொண்டே இருக்கும்.

19 நூற்றாண்டின் அடக்குமுறை கோயிலுக்குள்ளே நுளையவோ, ஆதிக்கசாதியினரின் அருகில் செல்லவோ முடியாத அளவு தீட்டு இருந்தது. இன்று அவர்களது சவத்தை அடக்கம் செய்யவும், வயல்வெளிகளில் களையெடுக்கவும், பீ அள்ளவும் ஒடுக்கப்பட்ட மக்கள் அவசியம். ஆதிக்கசாதியினரின் உத்தரவுகளை மீறினால் திண்ணியத்தில் வாயில் மலம் திணித்தது, வடநாட்டில் செத்தமாட்டின் தோலை உரித்ததற்காக கொலையான 5 தலித்கள் நிலை தான் (இது தொடர்புடைய முந்தைய பதிவு ஒடுக்கப்படுகிற மக்களே ஒன்றுபடுங்கள்!). ஒடுக்குமுறையின் வடிவங்கள் மட்டுமே மாறியிருக்கிறது அடிமைத்தனம் இன்னும் தொடரவே செய்கிறது. கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் சமத்துவ சட்டத்தை பார்ப்பனீயவாதிகள் இன்றும் எதிர்த்து வருகிறார்களே ஏன். இந்த நிலையில் முன்னோர் மட்டும் அநீதி செய்தார்கள் நமது தலைமுறையினர் யோக்கியர்கள் என ஒதுங்கிவிட இயலுமா?

வேதங்கள், சாத்திரங்கள், ஆகமங்கள், இராமன், கண்ணன் கதைகள் என புனைந்த கதைகளை சொல்லி ஒடுக்கப்பட்ட மக்களை இன்றும் தீட்டாக வைப்பது ஏன்? ஆதிக்கம் நிறைந்த இந்த புராண குப்பைகளையும், கதைகளையும் எதற்காக ஆதிக்கச்சாதியினர் எல்லோருக்குமானதாக தூக்கிப்பிடிக்கிறார்கள்? பூசையறை சமாச்சாரங்கள் வீதிக்கு வந்து வெறியூட்டி நாட்டின் அரசியலை, வாழ்வை கூறுபோடுவது எதற்காக? ஒவ்வொருவரையும் அவரவரது வழியிலேயே வாழவிடுவதை விட்டுவிட்டு "நாங்க எல்லோரும் இந்து. அதுனால நீயும் இந்து, உங்க வீட்டு புளியமரத்தில இருக்கிற அணிலும் இந்து, பல்லி, பாச்சா, எலி எல்லாம் கூட இந்து தான். இதை ஏற்றுக்கொள்ளலைன்னா எல்லாமே தேசதுரோகி தான். நாங்க இப்படி சொல்லுறதை தப்புன்னு சொன்னா நீ அரபிகளின் ஆட்கள், மிசநரிகளின் ஆட்கள் etc..." எல்லாம் எதற்காக? மகாபாரதமும், இராமாயணமும், கீதையும் பழைய கதைகள் தானே. சாத்திரங்கள், வேதங்கள், ஆகமங்கள் எல்லாம் பழையவை தானே அவற்றை இன்றைய காலத்துக்கு ஏற்ப பரிசீலனை செய்யகூட மறுப்பது ஏன்? கதைகளை சொல்லி மக்களை அடிமைப்படுத்துவது தொடரும் போது, நமது தலைமுறைகள் விழிப்பாக இருக்க நடந்த பார்ப்பனீய கொடுங்கோன்மைகளை சொல்ல அவசியம் வருகிறது.

துவக்க பள்ளிகள் முதல் பல்கலைகழகங்கள் வரை வரலாற்றை பாடமாக படிப்பதும், ஆய்வு செய்வதும் எதற்காக? மனித நாகரீகம் எப்படியான பாதையை கடந்து வந்திருக்கிறது. எப்படிப்பட்ட வளர்ச்சியை, பிரச்சனைகளை சந்தித்திருக்கிறது. வரலாற்றிலிருந்து தான் அன்றைய கால அமைப்புமுறை, மொழி, நாகரீகம், கலைகள் பற்றி அறிகிறோம். இந்த தகவல்கள் இன்றைய மனித சமுதாய வளர்ச்சிக்கு மொழியியல், அறிவியல், அரசியல், கலாச்சார துறைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்றைய, எதிர்கால மாறுதல்களுக்கு வரலாறு அடிப்படையான காலக்கண்ணாடி (reference). வரலாற்றை தவறாக மாற்றினால் பார்ப்பனீயத்தின் நோக்கம் வெற்றியடையும். அதனால் தான் இன்று வரலாற்றை திரித்து எழுத பார்ப்பனீயம் ஆட்களை தயார்படுத்துகிறது.

இந்தியாவின் இன்றைய அனைத்து கொடுமைகளுக்கும் காரணம் அங்கிலேயனும், மொகலாயர்களும் என இன்னொருவனை கைகாட்டி நழுவிவிடும் பார்ப்பனீய தந்திரத்தை வரலாற்றை புரட்டி தான் வெளிச்சத்துக்கு கொண்டுவர முடியும். இந்தியாவில் இன்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கொடுமையான அடிமை வாழ்வு தான் மிஞ்சியிருக்கிறது. யார் இவற்றை செய்கிறார்கள் என்பதை அடையாளம் காட்டுவது அவசியம். உதைப்பவன் உணர்ந்து திருத்தப்படும் வரை உதைபடுபவனின் விடுதலைக் குரல்கள் ஒலிக்கவே செய்யும். அடிமைப்பட்டவனின் தலைமுறை வலிகள் தரும் உந்துசக்தியிலிருந்து தான் விடுதலை முழக்கங்கள் எழும்புகின்றன. ஒடுக்கப்பட்டவர்கள் இப்போது தான் தங்களது உண்மை வரலாற்றை ஆவணப்படுத்துகின்றனர். இதுவரை ஆதிக்கசாதியினரின் கைகளில் இருந்த வரலாறு இனி அடக்கப்பட்டவர்களால் உடைக்கப்படும். இடப்பங்கீடு கொள்கையால் எழுந்து வருகிற ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியால் இன்று சில மாற்றங்கள் எழுகின்றன. இந்த மாற்றம் உண்மையான மக்கள் நலன் கொண்ட ஆட்சியை எதிர்காலங்களில் கொண்டுவர உதவலாம். இந்த மாற்றங்களால் அதிகாரம் தன்னை விட்டு இடம்பெயர்ந்துவிடும் என்ற பதட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக பார்ப்பனீயம் தீவிர இந்துத்துவ வெறியை பரப்ப ஆரம்பித்திருக்கிறது.

"இந்துக்களே ஒன்றுபடுங்கள்" என்பதும் "இந்தியா இந்துக்களுக்கே" என்பதும் பார்ப்பனீயத்திற்கு அதிகாரத்தை தக்கவைத்து கொள்ள தந்திரமான முழக்கங்கள். ஒடுக்கப்பட்ட மக்களை இந்து என்ற போர்வையில் தனது அரசியல் இலக்குகளை அடைய ஒன்று சேர்த்தல் நடக்கிறது. கலவரங்களை உருவாக்கவும், குழப்பங்களை விளைவிக்கவும் அடியாள் படையாக மட்டுமே ஒடுக்கப்பட்ட மக்களை பார்ப்பனீயம் ஒன்றுதிரட்டுகிறது. ஆட்சி அதிகாரம், கல்வி, வேலைவாய்பு முதல் கோயில்கள் வரை எல்லா இடங்களிலும் சமஉரிமை பரவவிடுவதல்ல இந்த ஒன்று திரட்டலின் நோக்கம். ஆக்டபஸ் தனது இரையை விழுங்கும் போது அணைத்துக்கொள்வது போன்ற இந்த அணுகுமுறையில் ஒடுக்கப்பட்ட மக்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இந்துத்துவா என்கிற வெறித்தனமான கொள்கைக்கு கண்ணாடியாக கடந்த கால வரலாறு சாட்சியாக இருக்கும் போது ஒடுக்கப்பட்ட மக்கள் வருங்கால ஆதிக்கத்திலிருந்து தப்பித்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. அதனால் தான் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளங்களை பார்ப்பனீயம் தின்று அழிக்கிறது.

பௌத்த நெறியின் வளர்ச்சியால் காணாமல் போன பார்ப்பனீயம் கி.மு 185ல் பௌத்த மன்னனை கொன்று ஆட்சியை கைப்பற்றி சுங்க வம்ச ஆட்சியை நிறுவியது. மன்னனின் தளபதியாக அருகில் இருந்த பார்ப்பனீய ஆதிக்கசாதியை சார்ந்த ஒருவன் தான் கடைசி பௌத்த மன்னனை கொன்றான். தொடர்ந்து பௌத்தம் அழிக்கப்பட்டதும், பௌத்த விகாரைகளை எரித்தது, கல்வெட்டுகள் உடைக்கப்பட்டது. பௌத்த மதத்திற்கு எதிராக பார்ப்பனீயம் அரங்கேற்றிய கொடுங்கோன்மைகள் ஏராளம். இன்று பார்ப்பனீயம் எடுக்கிற இந்துத்துவ வேடமும், வரலாற்றை திரிப்பதுவும் சுங்க ஆட்சி முதல் அவர்கள் கற்ற பாடம். ஒடுக்கப்பட்ட மக்களும் பழைய வரலாற்றை உணர்ந்து எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

உயிர்களை கொல்லாமையை போதித்த பௌத்தத்தை அணுகுண்டு சோதனைக்கு காங்கிரஸ் அரசு "புத்தர் சிரித்தார்" என்ற பெயரை சூட்டி அரசு களங்கப்படுத்தியது. 1998ல் அணுகுண்டு சோதனையை ஒரு புத்த பௌர்ணமி நாளில் பா.ஜ.க அரசு நடத்தியது. பௌத்தர்களுக்கு பௌர்ணமி நாட்கள் சங்கம் கூடும் அடையாள நாள் என்பது கவனிக்கத்தக்கது.

1992ல் பாபர் மசூதியை இடிக்க அம்பேத்கார் நினைவு தினமான டிசம்பர் 6 தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்? மதவெறியை தூண்டி தங்களுக்குள் இந்துக்கள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று கொன்று குவிக்க ஒடுக்கப்பட்ட மக்களை கருவியாக பயன்படுத்த அண்ணல் அம்பேத்கார் நினைவு தினம் தேர்ந்தெடுத்தது தற்செயலான நிகழ்வு அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்று சேரவிடாமல் ஆதிக்கத்தை நிலைநிறுத்த பார்ப்பனீயம் எடுக்கிற புதிய தந்திரம். டிசம்பர் 6 அம்பேத்கார் நினைவு தினமாக அல்ல பாபர் மசூதி இடிப்பு தினமாகவே இன்று அடையாளப்படுத்தப்படுகிறது. அம்பேத்கார் நினைவு நாளின் அடையாளத்தை அழிக்கும் முயற்சியில் பார்ப்பனீயம் வெற்றி பெறுகிறது.

பார்ப்பனீயத்தை தனது மரணம் வரை எதிர்த்து "இந்துவாக சாகமாட்டேன்" என பௌத்தத்திற்கு மாறிய அம்பேத்கார் படத்தை இந்துத்துவ வெறி அமைப்புகள் தங்களது கூட்டங்களில் வைத்து சொந்தம் கொண்டாடுவது எதற்காக? பார்ப்பனீயத்திற்கு எதிராக இருந்த அண்ணல் அம்பேத்கார் ஒடுக்கப்பட்ட மக்களின் மாபெரும் தலைவர். அண்ணலை தங்களுக்குள் விழுங்குவதன் மூலம் அவரது கொள்கைகளை காவிமயப்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்களை தங்களுக்கு அடியாள் படையாக மாற்றுவதற்காக மட்டுமே. மனுஸ்மிருதியை கொழுத்த அழைப்பு விடுத்தவர் அண்ணல் அம்பேத்கார். மனுஸ்மிருதி இல்லாமல் இந்துத்துவா இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான சனாதான தர்மத்தையே இந்துத்துவா அடிப்படையாக கொண்டது.

ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளங்களை, வழிமுறைகளை அழிப்பதும், மாற்றுவதும் நடக்கும் போது விழிப்பை எற்படுத்த வரலாற்றின் மறைக்கப்பட்ட இருண்ட பக்கங்கள் அவசியமாகிறது. எந்த ஒரு சமூகமும் நீதியான சமத்துவ பாதையில் வளர வரலாற்றிலிருந்து ஒப்பீடுகளும், படிப்பினைகளும் அவசியமாகிறது. பொது விசயங்களை எழுதும் போது விதிவிலக்காக இருக்கிற நல்லவர்களை குற்றப்படுத்துவதாக அமைந்துவிடாது. சமூகத்தின் வளர்ச்சியை தீர்மானிப்பது தனிநபர், குடும்பம் மட்டுமல்ல. வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ளாத எந்த இனமும் தங்களது விடுதலையை அடைந்ததாக வரலாறு இல்லை. வரலாறு மனித நாகரீகத்தின் இயங்கு சக்தி. ஒடுக்கப்பட்ட மக்களும், அவர்களது அமைப்புகளும் கற்றுக்கொள்ளும் வரலாற்று படிப்பினைகள் தான் விடியலை தரும். "வரலாறு நம்மை விடுதலை செய்யும்".

படங்கள்: ididj

13 பின்னூட்டங்கள்:

ரவி ஸ்ரீநிவாஸ் said...

Before writing about history and doctoring it is better that you learn some facts and try not to give an onse-sided picture.Why blame Hinduism for all everything.
Was it not a fact that Muslims were also against Buddhism.What happened in Iran.How is that Jews and Parsis found a safe haven in
India.You are yet another 'secular'
fellow with a myopic perspective.

thiru said...

//ravi srinivas said...
Before writing about history and doctoring it is better that you learn some facts and try not to give an onse-sided picture.Why blame Hinduism for all everything.
Was it not a fact that Muslims were also against Buddhism.What happened in Iran.How is that Jews and Parsis found a safe haven in
India.You are yet another 'secular'
fellow with a myopic perspective.//

ரவி,

இந்துமதம் பௌத்தத்தை அழித்தொழித்த வரலாறை போகிற போக்கில் ஒத்துக்கொள்ளும் நேர்மைக்கு பாராட்டுக்கள்.

இஸ்லாமியர்கள் பௌத்தமதத்தை அழித்ததாக நீங்கள் குறிப்பிடும் வரலாறை பதிவு செய்ய உங்களுக்கு என்ன தயக்கம்?

மொகலாயர்கள் மீதும், காலனியாதிக்கம் மீதும் கையை காட்டிவிட்டு பார்ப்பனவாதிகளின் கொடுமைகளை தப்பிக்க வைக்கும் முயற்சியை நீங்களுமா செய்கிறீர்கள்? பார்ப்பனீயத்தின் பண்பாட்டு படையெடுப்பு; காலனியாதிக்க மற்றும் மொகலாய படையெடுப்புகளின் கொடுமைகளும் முன்னர் அளவில்லாதது. முதலில் இந்திய துணைக்கண்டத்தில் அடிமைத்தனத்தை புகுத்தியது பார்ப்பனீயம். இன்றும் அது தொடர்கிறது. காலனியாதிக்க காலத்திலும் பார்ப்பனீயம் பலனை அனுபவித்தது.

உங்கள் வருகைக்கு நன்றி!

கலை said...

திரு!

உண்மையைச் சொன்னால், நீங்கள் வரலாறுகள் பற்றி எழுதியவற்றை வாசிக்கும்போது, அவை அடக்கப்படும் மக்களின் பிரச்சனைகளை நமக்கு அறியத் தருகின்றதென்றாலும், தற்போது உலகில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்ட பின்னரும், இந்த பழைய விஷயங்களைப் பேசி பேசி, அடக்குமுறையை மறந்துவிட்ட நல்ல மக்களின் மனதில் சங்கடங்களை ஏற்படுத்த வேண்டுமா என்று என் மனதில் சில சமயங்களில் கேள்வி எழுந்தது உண்மைதான். அதையே மதுரா என்பவர் உங்களுடைய "அய்யன்காளி:ஒடுக்கப்பட்ட மக்களின் போராளி" என்ற பதிவில் கேட்டிருந்தார். அதற்கு நீங்களும் தனிப்பதிவில் பதில் சொல்வதாக எழுதி இருந்தீர்கள். அதனால் மதுரா போலவே நானும் ஆவலுடன் அதற்கான உங்கள் பதிலை எதிர் பார்த்திருந்தேன்.

இந்த உங்கள் பதிவு, பல விஷயங்களை தெளிவாக்கியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். நன்றி. நம்மைச் சுற்றியுள்ள உலகமே உலகம் என்று நாம் நினைப்பதால்தான் எனக்கு இப்படி கேள்வி வந்ததா என்று தெரியவில்லை. அதை மீறிய உலகமும், தற்காலத்திலும் நடந்து கொண்டிருக்கும் கொடுமைகளும் தீர வேண்டுமானால், வரலாற்று உண்மைகளை அறிந்து கொள்வதும், அதனடிப்படையில் விடயங்களை புரிந்து கொள்ள முயல்வதும்கூட அவசியம்தான் என்று தற்போது எண்ணுகின்றேன்.

வரலாற்று உண்மைகள் இன்னும் நல்ல மாற்றங்கள் நடக்கவும், அந்த மாற்றங்களை விரைவு படுத்தவும் உதவக் கூடும் என்பதை நம்புகின்றேன்.

அருமையான கட்டுரை.

கலை

ரவி ஸ்ரீநிவாஸ் said...

இஸ்லாமியர்கள் பௌத்தமதத்தை அழித்ததாக நீங்கள் குறிப்பிடும் வரலாறை பதிவு செய்ய உங்களுக்கு என்ன தயக்கம்?

Are you not aware of this.If so why are you not even mentioning
it.

thiru said...

/"மாசிலா" உங்கள் பின்னூட்டம் தவறான இடத்தில் பதிவானது. அது இங்கே/

விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் இன்கிற ஒரே நோக்கில... விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் இன்கிற ஒரே நோக்கில், கட்டுரை முழுதும் ஆதிக்க சக்திகளுக்கு எதிரான எதிர் அலைகளை மட்டுமே தரப்பட்டு இருக்கிறது. உண்மையில் இந்த அநியாயத்தை எத்தனை முறை எழுதினாலும் வீண் அல்ல. இருப்பினும் மறுபடி மறுபடியும் இதே போன்ற பதிவுகளை படிப்பதால், ஒரு வகையான மனச்சலிப்பு ஏற்படுகிறது. ஏதோ ஒப்பாரி வைப்பதுப்போல் இருக்கிறது. இது இதோடு நின்றுவிட கூடாது.

ஆக்கபூர்வ செயல்களில் ஈடுபட்டு ஆதிக்க(?) காரர்களின் திமிரை அடக்கலாம். இந்த ஆக்க செயல் ஒரு போராகவும் இருக்கலாம். சமுதாய காளான்களை ஒழிக்கும் போர் என்னை பொறுத்தவரை ஒரு ஆக்கச்செயலே.

விடுதலையை போல் அறிவையும் போரிட்டு பெறுவதுதான் அழகு. மற்றவர்கள் எப்போது என்ன தருவார்களோ என்ன காத்து கொண்டிருப்பது அழகல்ல. நம் மக்களுக்கு நாம் அவசரமாக தரவேண்டியது பணமும் அல்ல பந்தாவும் அல்ல. அறிவுதான். முக்கியமாக அவர்களுடைய வரலாற்றையும் சேர்த்தே. இதுதான் மக்களின் விடுலைக்கு நாம் கொடுக்கும் விலை. மற்றதெல்லாம் அவ்வளவாக எதுவும் சரியென்று படவில்லை.

நிற்க,

அமெரிக்கர்கள் சிகப்பு இந்தியர்களை அழித்ததுபோல், இவ்வாதிக்க சக்திகள்(?) இங்கத்திய பூர்வீக மக்களிடம் இருந்து அவர்களது வாழ்க்கைகளை திருடி அன்றும் சரி இன்றும் சரி இவனைவிட உயர்ந்தவனுக்கு சுரண்டிய அணைத்தையும் அடகு வைத்து இடையில் அதே மணி ஆட்டும் தொழிலைத்தான் செய்து வருகிறார்கள். உயர்ந்தவர்கள் என தனக்கு தானே முத்திரை குத்திகொண்ட இவர்கள் ஆண்டுவந்த நேற்று வரையிலான இந்தியாவின் நிலை மிகவும் கவலைக்கிடத்தில்தான்.
எதற்கும் இலாயக்கற்ற மருத்துவரை மாற்றவேண்டிய தருணம் வந்துவிட்டது.

குறிப்பு : ஒரு தலையாய ஆதிக்க சக்தி உருவாக்கி கொடுத்த பேரழிவு திட்டத்திற்கு இணங்க உள்நாட்டில் இருந்த ஏணைய ஆதிக்க சக்திகள் ஆடிய வெறி ஆட்டங்களை மறந்துவிட கூடாது. நாம் வாழும் இச்சமுதாயத்திற்கு தலையில் மட்டும் கேடு இல்லை. உடல் முழுக்கவே கேடு. சீரிய மருத்துவம் செம்மையாக செய்ய வேண்டி இருக்கிறது. பலமுனை தாக்குதல் செய்து தீர்க்கப்பட வேண்டிய நீண்டகாலத்திய நோய்.

உடைப்பு.Sri Rangan said...

//Why blame Hinduism for all everything.//

Ravi,You don't reject the past,
but you surmount it and learn from it.

Anonymous said...

இறைவன் திருப் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
அன்பு சகோதரர் திரு அவர்களுக்கு
எனது பெயர் நெய்னா முஹம்மது. கடந்த சில மாதங்கலாக இது போன்ற பல தமிழ் பேசும் சகோதரரர்களின் வலைப் பதிவுகளை பார்க்கிறேன். பெரும்பாலும் ஒருவருக்கொருவர் கடுமையான வார்த்தைகளால் சாடுவதை காணும் போது மனதுக்கு வேதனையாக இருக்கிறது. ஒருவருடைய தவறுகளை நாம் சுட்டிக்காட்டும் போது அவர் அந்த தவறிலிருந்து வெளியேற வேண்டுமென்ற நல்லெண்ணத்தோடு கூறவேண்டும். அன்றி அவர்களை புண்படுத்துவது, வெறுத்தொதுக்குவது என்பது எந்த வர்ணாசிரம தத்துவத்தால் நமது முன்னோர்களும் நாமும் வேதனையடைந்தோமோ? அதே போன்று அவர்களும் வேதனைபட வேண்டுமா? ஒரு தவறுக்கு இன்னொறு அதே போன்ற தவறு தீர்வாகுமா? உங்களுடைய வாக்கியங்களில் தான் உடன்பாடில்லையே தவிர உங்கள் கருத்துக்களில் உடன்படுகிறேன் சகோதரரே! எனவே வார்த்தைகளை நளினமாக கையாண்டால் மாற்றுக் கருத்து சகோதரர்களும் நமது பதிவுகளை படிக்க முன் வருவார்கள். அது தான் மாற்றத்தை கொண்டு வரும்.
எனது பதிவில் உண்மையிருக்குமானால் எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே. தவறுகள் இருக்குமானால் அது எனது சிறுமதியால் ஏற்பட்ட தவறாகும். அதற்காக மன்னிக்க வேண்டுகிறேன். அதை சுட்டி காட்டும் பட்சத்தில் திருத்தி கொள்ளுவேன்.
அன்புடன்
சகோதரன் நெய்னா முஹம்மது

ரவி ஸ்ரீநிவாஸ் said...

1998ல் அணுகுண்டு சோதனையை ஒரு புத்த பௌர்ணமி நாளில் பா.ஜ.க அரசு நடத்தியது. பௌத்தர்களுக்கு பௌர்ணமி நாட்கள் சங்கம் கூடும் அடையாள நாள் என்பது கவனிக்கத்தக்கது.

You can hate BJP but dont distort facts or try to make allegations without any evidence.Do you know atleast who fixed the dates and why.See the link below
http://nuclearweaponarchive.org/India/IndiaShakti.html
"On 28 March the BJP-led coalition passed a vote of confidence, 275 to 260. This was the milestone that had prevented tests from being conducted by the BJP in 1996. The way was now clear to go forward. On 9 April Vajpayee met again with Kalam and Chidambaram and asked how long it would take to conduct tests, Kalam indicated that tests could be conducted 30 days from the decision to go ahead, Vajpayee told them to fix a date and coordinate it with Brajesh Mishra, Principal Secretary to PM Vajpayee (and an ardent advocate of nuclear armament for India). The next day, the scientists reviewed preparations at Pokhran. Thirty days from 10 April was 10 May, but President Narayanan was scheduled to be touring Latin America from 26 April and 10 May. Narayanan was not in the loop on nuclear tests, and it would have been diplomatically awkward to have him surprised by the tests, and the inevitable controversy while abroad. Further, attempting to accelerate the tests by testing before 26 April would not work since Chidambaram's daughter was getting married on 27 April. Chidambaram's absence at his own daughter's wedding and preparations would have been a red flag that something was afoot. Kalam and Chidambaram provided Mishra with the date 11 May as the earliest practical date. Mishra checked the date with Vajpayee who then gave the authorization for the tests."

The date was fixed after taking into account various factors.
It was talibans who destroyed the Buddha statues in Bhamian.Of course you will turn a blind eye towrds such facts and will project Hinduism as the sole enemy of Buddhism.

தருமி said...

//ஆக்டபஸ் தனது இரையை விழுங்கும் போது அணைத்துக்கொள்வது போன்ற இந்த அணுகுமுறையில் ஒடுக்கப்பட்ட மக்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்//

மிக அழகான ஒரு உவமை.

புத்தத்தை இந்து மதம் அழித்தொழித்தது - அன்று.
பாமியன் - ஈராக - நேற்று நடந்தது.
இரண்டிற்கும் வேற்றுமையில்லையா; இல்ல ஒப்புக்கொள்ள மனமில்லையா மக்களுக்கு?

குழலி / Kuzhali said...

//ravi srinivas said...
Before writing about history and doctoring it is better that you learn some facts and try not to give an onse-sided picture.Why blame Hinduism for all everything.
Was it not a fact that Muslims were also against Buddhism.What happened in Iran.How is that Jews and Parsis found a safe haven in
India.You are yet another 'secular'
fellow with a myopic perspective.//
ரவி ஒருவேளை திரு ஈரானில் பிறந்திருந்தால் இந்த கட்டுரை இசுலாமிய மதத்தை சாடி இருக்கும், அடிக்கடி உங்களைப்போன்ற ஆட்களால் கேட்கப்படும் கேள்வி இது, இந்தியாவிலே, தமிழகத்திலே எது அடக்குமுறை செய்கிறதோ அதை எதிர்த்துதானே பேச வேண்டிய தேவை இருக்கிறது....

Amar said...

//ஆதிக்கசாதியை சார்ந்த ஒருவன் தான் கடைசி பௌத்த மன்னனை கொன்றான்//

யாருங்க அந்த பௌத்த மன்னன் ?

மகதநாட்டு மௌரிய வம்சத்தின் கடைசி வாரிசு ? அது நடந்தது கி.மு காலத்தில் இல்லையா?

ஓன்பதாம் நூற்றாண்டு என்று சொல்லியிருக்கிறீர்கள் ?

அணுகுண்டு சோதனை செய்த தேதிக்கும் புத்தருக்கு முடிச்சு போடாதீர். அதில் பல்வேறு influencing factorகள் இருந்தது.

உதாரனமாக ஜனாதிபதி வெளிநாட்டில் இருந்தது, அமெரிக்க செயற்கைகோள்களை ஏமாற்றுவது..etc etc.

அணுகுண்டு சோதனை செய்யும் முன்னர் இந்தியா மேற்கொண்ட அமைதி முயற்சிகளை பற்றி ரொம்ப நாள் முன்பு எழுதியிருந்தேன்.

thiru said...

சமுத்திரா,

//மகதநாட்டு மௌரிய வம்சத்தின் கடைசி வாரிசு ? அது நடந்தது கி.மு காலத்தில் இல்லையா?

ஓன்பதாம் நூற்றாண்டு என்று சொல்லியிருக்கிறீர்கள்//

வருகைக்கும் தகவல் பிழையை சுட்டியமைக்கும் நன்றி. திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

நண்பன் said...

தருமி,

//புத்தத்தை இந்து மதம் அழித்தொழித்தது - அன்று.
பாமியன் - ஈராக - நேற்று நடந்தது.
இரண்டிற்கும் வேற்றுமையில்லையா; இல்ல ஒப்புக்கொள்ள மனமில்லையா மக்களுக்கு? //

வாழ்ந்து கொண்டிருப்பதை அழித்தொழிப்பதை தான் குறிப்பிட முடியுமே தவிர, உயிரற்ற சிலைகளை உடைத்தெறிந்ததைக் கொண்டு, புத்த மத அழிப்பிற்கு, தாலிபான்கள் காரணம் என்று சொல்வது தவறானது.

தாலிபான்கள் பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே புத்த மதம் அழித்தொழிக்கப்பட்டு விட்டது. வெறும் சிலைகளாக நின்று கொண்டிருந்த அந்த புத்த சிலைகளை, இத்தனை நூற்றாண்டுகளாக விட்டு விட்டு, இவர்கள் மட்டும் அழித்தொழிக்க முற்பட்டது ஏன்?

World Heritage என்று கூறிக் கொண்டு, தாலிபான்கள் ஆட்சிக் காலத்தில் பல மில்லியன் மதிப்புத் தொகையை சிலைகளை செப்பனிடுகிறோம் என்று முனைந்தார்களே அப்பொழுது தான் சிக்கல் ஆரம்பித்தது. உயிரற்ற ஜடப் பொருட்களுக்கு செலவு செய்வதை விட, தங்களிடம் அந்தப் பணத்தைக் கொடுத்தால், மக்களுக்கு உதவக் கூடிய வகையில் செலவு செய்கிறோம் என்று கூறியதை ஏற்க மறுத்ததால், ஆத்திரப்பட்டு, தாலிபான்கள் எடுத்த முடிவு தான் அந்த சிலை உடைப்புகள்.

துரதிர்ஷ்டவசமான முடிவு. போராடுவதற்கு வேறு வழி வகைகளைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை தாலிபான்களிடம் எதிர்பார்க்க இயலாது. தங்கள் வரலாற்றைத் தாங்களாகவே அழித்துக் கொள்ள முனைந்தார்கள்.

ஆனால், இவர்கள் தான் புத்த மதத் தத்துவங்களையும், அதன் அடிப்படை கூறுகளையும், அதை பின்பற்றிய மக்களையும் அழித்தொழித்தார்கள் என்று ரவி போன்றவர்கள் கூறலாம். தங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களையும், தங்கள் தவறுகளையும் மூடி மறைப்பதென்பது, அவர்களுக்கு அத்தியாவசியமான தேவை. அதற்காக அன்று போலவே இன்றும் திசை திருப்பும் உத்தி முதற்கொண்டு, அனைத்து வகையான பித்தலாட்டங்களையும் செய்து வருபவர்கள்.

புத்தர் பிறந்த நாளை அணுகுண்டு வெடிக்க உகந்த தினமாக தேர்ந்தெடுத்தது ஏன் என்ற கேள்விக்கு அவரது வாதத்தைப் பாருங்களேன் - அது கலாம், சிதம்பரம் தேர்ந்தெடுத்தது என்று. அவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள 30 நாட்கள் அவகாசம் கேட்டார்கள். அது பலவித காரணங்களால் மே 11 ஆகிப்போனதென்றால், the state's executive chief - the PM should have advised them to go ahead on May 12 or some other date. அவ்வளவு தானே? 30 நாட்களைத் தாண்டினால், அணுகுண்டு வெடிக்காது, நமுத்துப் போய்விடும் என்றா சொன்னார்கள்.

இதைத் தான் பித்தலாட்டம் என்று சொல்வார்கள்.

அதே போல், மசூதி தகர்ப்பிற்குத் தேர்ந்தெடுத்த தினம் - அம்பேத்கர் பிறந்த தினம். இந்த கோணத்தில் இது நாள் வரையிலும் நான் சிந்திக்கவே இல்லை. இந்தப் புதிய கோணத்தில் வைத்த வாதம், இப்பொழுது பலவற்றைப் புரிய வைக்கிறது. ஒவ்வொரு வருடமும். அம்பேத்கரை நினைவு கூறும் அன்று கலவரம் வெடிக்க வேண்டும். நாட்டின் கவனம் அனைத்தும் அன்று நிகழும் பதட்டங்களின் மீது இருக்க வேண்டும் என்ற காரணம் அன்றி, வேறு என்னவாக இருக்க முடியும்?

சிலர் சலிப்புத் தட்டும் விதமாக ஒரே விஷயம் பேசப்படுகின்றது என்கின்றனர். உண்மை என்றாலும், ஒவ்வொரு முறையும் நிகழும் மறுபதிவுகளின் மூலம், யாராவது சிலர் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்கின்றனர் என்ற நிலைமையில் இது அத்தியாவசியமான தேவை. இது போன்ற பதிவுகளை எழுதுபவர்களை மிகவும் ஊக்குவிக்க வேண்டும்.

பதிவை எழுதிய திருவிற்கு பாராட்டுகளும், வந்தனமும்.

அன்புடன்
நண்பன்.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com