Tuesday, February 27, 2007

தமிழக சிறுநீரக மோசடி அதிர்ச்சியான தகவல்கள்

மூன்று குழந்தைகளுக்கு தாயான 32 வயதான கலா சுனாமியால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையை நடத்த போராடும் சென்னையின் சேரிப்பகுதி பெண். கலாவை சென்னை காளியப்பா மருத்துவமனை வளாகத்தில் சந்தித்து பேரம் பேச ஆரம்பித்தான் தரகன். கலாவின் சிறுநீரகத்தை விற்றால் ஒன்றரை லட்சம் ரூபாயும்,
மாதம் தோறும் 3000 ரூபாய் செலவுகளுக்கும், அனைத்து மருத்துவ செலவுகளையும் அவர்களே கவனிப்பதாகவும் சொன்னான். தரகனின் பேச்சில் மயங்கி கடன்தொல்லையால் வாடும் கலா மயங்கிப்போனார். ஒரு வழக்கறிஞர், பேரம் பேச அறிமுகமான தரகர், மருத்துவர் முன்னிலையில் அவசர அவசரமாக கையெழுத்துக்கள் பெறப்பட்டன. கலாவின் சிறுநீரகம் பொருத்தப்பட காத்திருக்கும் இந்திய மேட்டுக்குடி பெண்மணிக்கு வயது 80 (செய்தியில் சாதியால் அடையாளப்படுத்தப்பட்டு இருந்தாலும், இந்த பதிவில் சாதியை குறிப்பிட விரும்பவில்லை). அமெரிக்காவில் வாழும் தனது பேரப்பிள்ளையை பார்க்க நீண்ட நாள் வாழ ஆசைப்படும் அந்த பெண்மணியின் சுமை கலாவிற்கு ஒரு ஒப்பந்தத்தில் இடம்மாறியது. கலாவுக்கு கிடைத்தது 35000 ரூபாயும் மருத்துவ சிகிச்சையில் செலவாகி, மேலும் வேதனை ஒட்டிக்கொண்டது.

கடந்த ஆறு மாதங்களில் கலா போல சுனாமியால் பாதிக்கப்பட்ட சுமார் 51 பெண்களிடமிருந்து சிறுநீரகம் கொள்ளையடிக்கப்பட்டதாக பிரிட்டனிலிருந்து வெளிவரும் அப்சர்வர் நாளிதழ் குறிப்பிடுகிறது. "எங்களுக்கு தெரிந்த அளவில் சுமார் எண்பது பேரிடமிருந்து சிறுநீரகங்கள் பெறப்பட்டுள்ளது, ஆனால் இந்த எண்ணிக்கை பத்து மடங்கு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. பெண்களே அதிகமாக இதனால் பாதிக்கப்படுகிறார்கள்" என்கிறார் எர்ணாவூர் சுனாமி மீனவர் அமைப்பின் தலைவர் மரிய சில்வா. "எங்களது சமூகம் ஒரு அகதிகள் முகாமை விட சற்று பெரியது, சுனாமியால் பாதிக்கப்பட்ட 8 கிராமங்களை உள்ளடக்கியது. சுனாமிக்கு பிறகு 'கார்கில் நகர்' என்ற தற்காலிக குடியிருப்பு பகுதிக்கு மாற்றப்பட்டோம். அந்த குடிசைகள் தீக்கிரையானதால் எங்களது படகுகளிலிருந்து 14 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் இந்த பகுதிக்கு தள்ளப்பட்டோம். மீனவ மக்களுக்கு எந்த பொருள் வசதியும் இல்லாமல் இருப்பதால் படகுகள் இருக்கும் பகுதிக்கு செல்ல வசதியில்லை. எங்களது பெண்கள் தான் சாப்பாட்டிற்கான வருமானத்தை தேடுகிறார்கள். எங்கள் பெண்கள் விறகு, கொட்டாங்கச்சி போன்றவற்றை அதிகாலை முதல் மாலை வரை விற்றும் பட்டினியால் இருக்கிறார்கள் அல்லது சிறுநீரகத்தை விற்று வயிற்றுப்பிழைப்பு நடத்துக்கிறார்கள்" என்று தங்களது வேதனையை பகிர்ந்துகொள்கிறார் மரிய சில்வா.

சமுதாய சமத்துவத்திற்கான சென்னை மருத்துவர் சங்கத்தை சார்ந்த டாக்டர் ரவீந்த்ரநாத் சேப்பன் 'மனித உறுப்புகள் வியாபாரத்தை 1994 சட்டத்தின் வழி இந்திய அரசு தடை செய்திருந்தாலும், சென்னையின் கிராமப் பகுதியில் ஒரு நிழல் வியாபாரமாக உறுப்பு வியாபார சந்தை புழங்குகிறது. இந்தியாவின் பணக்காரர்கள் நீண்ட நாள் வாழ ஏழைகளை பயன்படுத்துகிறார்கள். பொருளாதார வளர்ச்சி பெருகும் போது இந்த மாதிரியான வேதனைகளும் பெருகும்' என்கிறார். அவர் தருகிற அமெரிக்க மருத்துவ சங்கத்தின் அறிக்கையின் தகவல் இன்னும் கவலையை அதிகரிக்கிறது. 'சிறுநீரகங்களை விற்பனை செய்த 305 பேர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 96 சதவிகிதம் பேர் கடன் தொல்லையிலிருந்து விடுபட விற்பனை செய்தவ்வர்கள். சிறுநீரக விற்பனைக்கு பின்னரும் மூன்றில் இரண்டு பகுதியினரின் கடன் தொல்லை இன்னும் மாறாமலே இருக்கிறது. அவர்களில் 86 சதவிகிதம் பேர் உடல்நிலை அறுவை சிகிச்சையின் பின்னர் மோசமான நிலையில் இருக்கிறது' என புள்ளிவிபரங்களுடன் அவலத்தை விளக்குகிறார் டாக்டர் சேப்பன்.

சில வாரங்களுக்கு முன்னர் சென்னையின் சேரிப்பகுதி ஒன்றில் 15 பேரிடம் ஏமாற்றி சிறுநீரகம் விற்பனை செய்த பிரகாஸ் பாபு என்கிற தரகரை கைது செய்யுமாறு மக்கள் முற்றுகையிட்டனர். ' திரும்பவும் அவனை இந்த பகுதிக்கு வரவே விடமாட்டோம். நாங்கள் அவனது வீட்டுக்கு போனதும் தப்பியோடிவிட்டான். பாபு தான் என்னை சிறுநீரகம் விற்க தூண்டியவன். எனக்கு 35000 ரூபாய் தந்தான். அவனுக்கு 8000 கமிசன் கிடைப்பதாக சொன்னான், ஆனால் அவனுக்கு பத்து மடங்கு அதிகமாக கமிசன் கிடைத்திருக்கும்' என வேதனையாக சொல்கிறார் மேரி. தனக்கு கிடைத்த பணத்தில் கந்துவட்டிக்காரனுக்கு கொடுத்தது போக மீதி பணத்தை கணவன் குடித்து அழித்ததாக சொல்லும் மேரியின் குடிசை வீடு மோசமான நிலையில் இருக்கிறது. 5 பேர் அடங்கிய அந்த குடும்பத்தின் வாழ்வு இது.

மேரியின் பக்கத்து வீடு ராணி (36 வயது) கடுமையான வேதனையில் இருக்கிறார். "26 வயசான என் பொண்ணுக்கு வைத்தியம் பார்க்க ஆஸ்பிட்டல்ல கட்ட பணத்திற்காக என் கிட்னியை வித்தேன். எனக்கு பேரப்பிள்ள பொறந்தப்போ அவளுக்கு ஆப்பரேசன் பண்ணினாங்க அதுல நிறைய இரத்தம் போயிடுச்சி. ஒரு மாசம் ஆஸ்பத்திரியில இருந்து 30000 ரூபா செலவானது. மருமகன் குடும்பம் வேற 20000 ரூபா வரதட்சணை பணத்த குடுக்க சொல்லி தொந்தரவு பண்ணுனாங்க. எம்புருசன் என்ன விட்டுட்டு ஓடிப்போயிட்டர். அந்த சமயத்துல ஆஸ்பத்திரி வாசல்ல புரோக்கரை தேடி போனேன். ஒரு மாசத்துல வேற ஒரு ஆஸ்பத்திரியில ஆப்பரேசன் பண்ணி கிட்னிய எடுத்தாங்க. ஆப்பரேசன் நேரத்துல 2 தடவை எழுந்திருச்சேன், ரெண்டு நாள் கழிச்சு கையில மருந்து தந்து அனுப்பி வச்சாங்க."

"என்னோட புரோக்கர் தனலட்சுமி கூட கிட்னிய வித்திருக்கா. இப்போ மத்தவங்க கிட்னிய விக்க ஒதவுறா. எனக்கு ஒண்ணரை லட்சம் ரூபா தறதா சொல்லி எனக்கு 40000 தான் தந்தா. பணத்த இரயில்வே ஸ்டேசன்ல வச்சு குடுத்தப்போ எனக்கு வலி தாங்க முடியாம சண்டை போடாம வாங்கிட்டு வந்தேன். இப்போ என்னால நடக்க முடியல." வேதனையை சொல்லி ராணி முடிக்கும் முன்னர் யின் தாயாரின் மருத்துவ ஆங்கில குறிப்புகளை படித்து விளக்குமாறு பரிதாபமாக மகள் கேட்கிறாள்.

சிறுநீரக விற்பனை பிரச்சனையில் சென்னையின் காளியப்பா மருத்துவமனை, தேவகி மருத்துவமனை போன்ற பெயர்கள் வெளிப்படையாக உலவுகிறது.

"இது உங்களுக்கு மோசடியாக தெரியலாம், ஆனால் அந்த அளவு மோசமானதல்ல. ஒரு குடும்பம் பட்டினியால் வாடுது. இன்னொருவருக்கு உயிர்வாழ கிட்னி அவசியம். இது வியாபாரம் இல்லன்னு புரிஞ்சுக்கோங்க, ஒருத்தர் இன்னொருத்தருக்கு செய்யும் உதவி அவ்வளவு தான். பணமில்லாம பட்டினியால் சாகிறவனும், பணமிருந்தும் வாரம் 4 முறை டையாலிசிஸ் பண்ணும் ஒருவரும் சேர்ந்து ஒருத்தருக்கு ஒருத்தர் உதவிக்கிறாங்க. ரெண்டு பேரையும் காப்பாத்திக்கிறோம்" என்கிறார் சிறுநீரக தரகரை தேடி காளியப்பா மருத்துவமனையில் காத்திருக்கும் நோயாளி ஒருவர்.

இந்தியாவிலேயே சிறுநீரக மாற்று அறுவை மருத்துவத்தில் முதல் இடம் பிடிக்கும் மையமாக சென்னை விளங்குகிறது. சில லட்சம் ரூபாய்களை செலவளித்தால் சிறுநீரகங்களை சென்னையில் எளிதாக பெற்றுவிடலாம் என்கிறார்கள் இந்த சந்தையை பற்றி அறிந்த பலர். அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் சேர்ந்து, அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கொண்டால் மட்டும் போதுமானது. மற்ற எல்லாவற்றையும் தரகர்கள் கவனிப்பார்கள். கடந்த சில ஆண்டுகளில் சென்னை மற்றும் மதுரையில் மட்டும் இலங்கை, நேபாளம், வட இந்தியாவை சார்ந்தவர்கள் சுமார் 50 பேர் சிறுநீரக மாற்று அறுவை மருத்துவம் செய்துள்ளனர். அதிகமான சிறுநீரக மாற்று அறுவை மருத்துவம் செய்யும் மருத்துவமனைகளின் பெயர்களில் அப்பல்லோ மருத்துவமனை, மதுரை மீனாட்சி மருத்துவமனை, காளியப்பா மருத்துவமனை, தேவகி மருத்துவமனை போன்றவற்றின் பெயர்கள் இடம் பெறுகிறது. "சில மருத்துவமனைகளில் சிறுநீரகம் உட்பட மாற்று அறுவை மருத்துவத்திற்கு 5 லட்சம் வசூலிக்கப்படுகிறது" என சுகாதாரத்துறை செய்தி ஒன்று தெகல்கா இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளது.

நாமக்கல் பகுதியில் 28 வயதான சுரேஸ் ராஜு இரத்ததானம் செய்ய நண்பரால் கோயம்புத்தூர் அழைத்து செல்லப்பட்டபோது மயக்கமருந்து கொடுக்கப்பட்டது. கண்விளித்த போது அவரது ஒரு சிறுநீரகம் திருடப்பட்டிருந்தது. கடந்த சில வருடங்களில் நாமக்கல் பகுதியை சார்ந்த குமாரப்பாளையம், பள்ளிப்பாளையம் போன்ற இடங்களில் சுமார் 500 பேர் சிறுநீரகம் விற்பனை செய்துள்ளதாக காவல்த்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த வெங்கட லட்சுமியை சிறுநீரக தரகர்கள் இருவரும், சிறுநீரகத்தை பெற இருந்தவரும் பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக கோவை காவல்நிலையத்தில் நவம்பர் 2006ல்வழக்கு தொடுத்தார். உறுப்பு மாற்று மருத்துவத்தை அனுமதியளிக்கும் குழுவின் முன்னர் லட்சுமியை மனைவியாக நடிக்குமாறு வற்புறுத்தி அழைத்து சென்றிருந்தனர். பாலியல் வன்புணர்ச்சியின் போது ஒளிப்படமெடுக்கப்பட்டு அதை வைத்தே மிரட்டியதாக தெரிவிக்கிறார் லட்சுமி.

சென்னை தண்டையார் பேட்டையை சார்ந்த 34 வயதான மல்லிகா ஜனவரி 19 அன்று வடசென்னை காவல் நிலையம் ஒன்றில் சிறுநீரக தரகர் தன்னை ஏமாற்றியதாக வழக்கு தொடுத்தார். மல்லிகாவிற்கு 1.5 லட்சம் பணம் தருவதாக சொல்லி அவரது சிறுநீரகத்தை எடுத்த பின்னர் 30000 ரூபாய் மட்டும் கொடுத்ததாக புகாரில் மல்லிகா தெரிவித்துள்ளார்.

சென்னை திடீர்நகரை சார்ந்த 29 வயதான புவனேஸ்வரியையும் சிறுநீரக தரகர் பெரும் தொகை பேசி பிறகு 45000 ரூப்பாய் மட்டும் கொடுத்து ஏமாற்றியதாக குறிப்பிடுகிறார். தன்னை சிறுநீரகம் பெற்றுக்கொள்பவர்களது குடும்பம் நிரந்தரமாக கவனித்துக்கொள்ளும் என்ற வார்த்தையில் ஏமாறியதாக வருத்ததுடன் தெரிவிக்கிறார் புவனேஸ்வரி.

திருநெல்வேலி வ. உ.சி நகரை சார்ந்த முருகனது நிலையும் இது போன்றது தான். திருநெல்வேலியில் மருத்துவமனையில் அறுவை மருத்துவத்திற்கு முன்னர் அவருக்கும் இப்படி கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் சொல்லப்பட்டன. அவருக்கு கொடுத்திருந்த முகவரியில் தேடியபோது யாருமே இல்லை.

சென்னை MTH சாலையை சார்ந்த குமார் அருகிலுள்ள சேரியில் 10 பேர் சிறுநீரகம் விற்பனை செய்ததாக பெயரை குறிப்பிட்டு சொல்கிறார். அவர்கள் அனைவரும் வில்லிவாக்கம் பகுதியின் பாரதி நகரை சார்ந்தவர்கள். "இந்த பகுதியில் மட்டும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராவது சிறுநீரகத்தை விற்பனை செய்துள்ளாகள்ர். சுமார் 10 தரகர்கள் இந்த பகுதியில் மட்டும் இருக்கிறார்கள் பிரச்சனை பெரியதாக வெளி உலகிற்கு தெரிய வந்ததும் அனைவரும் தலைமறைவாகவும் உள்ளனர்" என்கிறார் அந்த பகுதி வாசியான விஜி.

பெரும்பாலானவர்கள் கடன் தொல்லையிலிருந்து விடுபடவே சிறுநீரகத்தை விற்பனை செய்வதாக கருணாலயா தொண்டு நிறுவன தலைவர் குறிப்பிடுகிறார். காசிமேடு பகுதியை சார்ந்த தேவி கணவன் தடுத்ததையும் மீறி கடனை அடைப்பதற்காக சிறுநீரகம் விற்றார். அண்ணாநகர் மருத்துவமனை ஒன்றின் ஊழியர் அவரிடம் பேரம் பேசியிருக்கிறார். 'அவர் டாக்டரா இல்லை தரகரா என எனக்கு தெரியாது. ஆனால் தினமும் மதியம் ஆஸ்பத்திரிக்கு அவர் வருவார்" என்கிறார் தேவி.

சென்னை ஐ.ஐ.டியின் Centre for Sustainable Development நடத்திய தமிழ்நாட்டின் சிறுநீரக விற்பனை பற்றிய ஆய்வு அறிக்கை தரகர்கள் சிறுநீரகம் தேடி அலைபவர்களையும் மருத்துவமனைகளுக்கு பிடித்து கொடுப்பதாக குறிப்பிடுகிறது. வங்கல் ஆர்.முரளீதரன், S.ராம் நடத்திய இந்த ஆய்வில் தரகர்கள் சிறுநீரக விற்பனையை நடத்துகிற மருத்துவமனைகளின் வளாகத்தினுள்ளே பாதுகாப்பாக வாழ்வதாக குறிப்பிடுகிறது.

தமிழ்நாடு சி.பி.சி.ஐ.டி காவல்த்துறை ஜனவரி 23ல் மூன்று தரகர்களை தண்டையார் பேட்டை மல்லிகாவின் புகாரின் பேரில் கைது செய்தது. பெரும்பாலான மாற்று சிறுநீரகங்கள் முன்பின் தெரியாத பலரிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது. சி.பி.சி.ஐ.டி காவல்த்துறையினருக்கு சிறுநீரக விற்பனை பற்றிய முழுவிசாரணை செய்ய அனுமதி அல்லது அதிகாரம் கொடுக்கப்படவில்லை. உறுப்பு மாற்று அறுவை மருத்துவத்திற்கு அனுமதி கொடுப்பது Authorisation Committee மற்றும் Appropriate Authority (AA) என்னும் இரண்டு குழுக்களின் முக்கிய பணி. இந்த குழுக்களில் முன்பின் தெரியாதவர்களது சிறுநீரகத்தை பெற எப்படி அனுமதி அளித்தன என விசாரணை மேற்கொள்வது மிக அவசியம். தரகர்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யும் போதே இதற்கான வழிகளை ஏற்படுத்துவதாக தெரிகிறது. இவ்வளவு மோசடிகள் நடப்பது தெரிந்தும் AA குழு இன்னும் எந்த மருத்துவமனைகள் மீதும் நடவடிக்கைகள் எடுக்காதது குழுவின் மீதான நம்பிக்கையை கேள்வியெழுப்புகிறது. இந்த பிரச்சனைகள் சம்பந்தமாக சிறுநீரக அறுவை மருத்துவர்களும், சிறப்பு வல்லுநர்களும் கருத்து தெரிவிக்காமல் மௌனம் சாதிப்பததயே கொள்கையாக கொண்டுள்ளனர்.

வறுமையால் வாடும் மக்களை ஏமாற்றி பிழைக்கும் கூட்டம் கடுமையாக தண்டிக்கப்படுவது அவசியம். சுனாமி புனரமைப்பு என்ற பெயரில் கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்த அரசியல்வாதிகள், அதிகாரிகள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் போன்றவை இந்த மக்களுக்கு துரோகம் செய்தவர்கள். ஏழைகளிடமிருந்து திருடப்படும் அல்லது ஏமாற்றி பெறப்படும் சிறுநீரகங்கள் மேற்கத்திய மற்றும் இந்தியாவை சார்ந்த பணக்காரர்களுக்கு பொருத்தப்படுகிறது. வர்ண பேதங்கள் மட்டுமல்ல, வர்க்க பேதங்களும் சமுதாயத்திற்கு தீங்கானவையே. வர்க்க பேதங்கள் தனிநபர்களுக்கும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே இந்த பேதங்கள் ஆதாயத்தை தரலாம்.

2015 வறுமையை பாதியாக குறைப்பதாக ஐ.நா சபை தீர்மானத்தில் ஒப்புக்கொண்ட இந்தியா வறுமையால் வாடும் மக்களை ஒழித்து வறுமையை இல்லாமல் செய்யப்போகிறதா என கேள்வி வருகிறது. தமிழக மற்றும் இந்திய அரசு இந்த பிரச்சனையில் சிறப்பு கவனம் செலுத்தாமல் அப்பாவிகளில் உயிரில் மெத்தனமாக இருப்பதாக தெரிகிறது.

அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் சில:

  • காவல்த் துறையையும், சுகாதாரத் துறையையும் நிர்வாகம் செய்பவர்கள் கடுமையான நடவடிக்கைகள் வழி காவல்த் துறைக்கு முழு சுதந்தரம் கொடுத்து குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும் பாரபட்சமில்லாத நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
  • Authorisation Committee மற்றும் Appropriate Authority (AA), நகரங்களின் மிகப்பெரிய மருத்துவமனைகள், சிறுநீரக அறுவை மருத்துவர்கள் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் வருமான வரித்துறையின் விசாரணைகள் மேற்கொண்டு குற்றம் நடக்கும் முறைகளை ஆய்வு செய்து அவற்றை கழைவது அவசியம்.
  • கந்துவட்டிகாரர்களை கடுமையாக தண்டிப்பதும், கிராமப்புற, சேரி வாழ் ஏழைகளுக்கான வேலைவாய்ப்பு திட்டங்களை உருவாக்குவதும் மேலும் உறுப்பு மோசடி வியாபாரம் அதிகரிக்காமல் தடுக்க வழி செய்யும்.
  • உறுப்பு வியாபாரத்தை தடுக்க உடல் தானம் செய்யுமாறு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். குறிப்பாக வளரும் தலைமுறைக்கு இந்த நன்னெறிகள் பாடமாக வைப்பது காலத்தின் அவசியம். தானம் செய்ய வருவோரின் தகவல்களும் தானம் பெறும் முறைகளும் ஒழுங்கமைக்கப்படல் அவசியம். செய்யுமா அரசு?

இந்த பிரச்சனையில் அரசை முறையாக செயல்பட வைக்க வலைப்பதிவாளர்களான சகமனிதர்கள் என்ன செய்யப்போகிறோம்?

தகவல் உதவிய தளங்கள்:
nzherald
observer.guardian
tehelka

படம்: boston:com

குறிப்பு:
முந்தைய கட்டுரையில் விடுபட்டவற்றை எழுதவே இந்த பதிவு. பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் ஆய்வுகள் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

5 பின்னூட்டங்கள்:

மாசிலா said...

வறுமையை ஒழித்தால் எல்லாமே ஒழிந்துவிடும். வறுமையை ஒழிப்பது என்றால் மக்களுக்கு வேலை வேண்டும். மேலும் இக்காலத்திய பொருளாதார வளர்ச்சியால் அரசாங்கதிற்கு கிடைக்கும் சக்திகளை ஏழைகளுடன் பகிர்ந்து கொள்ள வேணடும். புதிதாக சமுதாய பாதுகாப்பு சட்டங்கள் இயற்றப் படவேண்டும்.

தருமி said...

ஓரளவு இந்தப் பிரச்சனை பத்திரிகைகளில் வந்து விட்டமையால் இனி ஏமாற்றப் படுபவர்களின் எண்ணிக்கை குறைய வழி இருக்குமென நினைக்கிறேன்.

//காவல்த் துறைக்கு முழு சுதந்தரம் கொடுத்து குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும் பாரபட்சமில்லாத நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். //

இதென்னவோ வெறும் கனவென்றே நினைக்கிறேன். (1)இப்படி அறுவை சிகிச்சை செய்பவர்கள் பணம் செலவழிக்க தயங்குவதில்லை.(2) மருத்துவ மனைகளுக்கு நல்ல வியாபாரம் (3) தப்பிக்க நிறைய வழிகள் வைத்துக் கொண்டு மருத்துவ மனைகள் இந்த 'கேடுகெட்ட வியாபாரத்தை' இதுவரை செய்திருப்பார்கள். ஆகவே மிஞ்சிப் போனால் ஓரிரு சின்ன புரோக்கர்களை உள்ளே ரெண்டு வருசத்துக்கு அனுப்பிட்டு கேசை மூடி விடுவார்கள் என்றுதான் நினைக்கிறேன்.

ஏழை மக்கள் இந்த விஷயத்தில் விழிப்புணர்வு பெற வைக்க வேண்டும் . அதுதான் அவர்களைக் காப்பாற்ற வழி.

பொன்ஸ்~~Poorna said...

திரு,

மாசிலா சொல்வது போல் வறுமையை மொத்தமாக ஒழிப்பதோ, கந்துவட்டியை ஒழிப்பதோ, அரசு வெகு சீக்கிரத்தில் செய்யக் கூடிய ஒன்றாகத் தெரியவில்லை.

அத்தோடு, சிறுநீரகம் கொடுப்பவர்களுக்குப் பணமும் உடனடியாகக் கொடுத்துவிடுகின்றனர்.

பொதுவாக சிறுநீரக தானம் என்பது நம் ஊரில் பெரிதாக உடல்நலப் பிரச்சனைகள் இல்லாததாகவே முன்நிறுத்தப்படுகிறது.

அப்படி இருக்கையில், இவ்விதமாக சிறுநீரகம் கொடுத்த (விற்ற) மக்களுக்கு என்ன விதமான உடல்நலக் குறைபாடுகள் வருகின்றன? விற்று வந்த பணத்தை சிகிச்சைகளுக்கே திரும்பவும் கொடுக்கும் அளவுக்கு, உடல்நலக் குறைபாடுகள் அதிகமாக இருக்க என்ன காரணம்?

உதாரணத்திற்கு, இரத்த தானம் செய்பவர்கள் ஆறுமாதத்திற்குள் மீண்டும் இரத்தம் கொடுப்பது, சிவப்பணுக்களில் குறைபாடுள்ளவர்கள் இரத்தம் கொடுப்பது, மாதவிடாய் காலங்களில் அல்லது நோயுற்றிருக்கும் போது இரத்தம் கொடுப்பது போன்றவை அவ்விதம் இரத்தம் இழப்பவரின் உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும்.

இதே போல், சிறுநீரகம் கொடுக்க முன்வருபவர்களுக்கு, என்னென்ன நோய்கள், அல்லது குறைபாடுகள் இருந்தால், அவர்கள் சிறுநீரகம் கொடுத்த பின்னர் உடல்நலக் கேடு உருவாக்கும் என்பதை அவர்களுக்குத் தெளிவிக்க வேண்டும்.

சிறுநீரகம் எடுத்துக் கொள்ளும் அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும், கொடையாளர் பின்பற்ற வேண்டிய மருந்து, உணவுக் கட்டுப்பாடுகள், இது போல் வெளியே சிறுநீரகம் கொடுப்பதால் ஏற்படக் கூடிய பிரச்சனைகள், அதாவது எந்த விதத்தில் எல்லாம் பாதிப்புகள் ஏற்படலாம் என்பன போன்ற விவரங்கள் - இவற்றை விளக்குவதைச் சட்டமாக்க வேண்டும்.

அத்தோடு, தன்னார்வலர்கள் இது போன்ற தகவல்களை அதிகமாக எடுத்துச் சொன்னால், சிறுநீரகம் இழப்பதைப் பற்றிய விழிப்புணர்வு பெருகும்.

"சிறுநீரகத்தை விற்பதால், இன்னின்ன பிரச்சனைகள் வரக் கூடும். நீங்கள் எதிர்பார்க்கும் பணலாபத்திற்கும் அதிகமான நஷ்டம் ஏற்படக் கூடும்" என்று தெளிவாக்கினால், சிறுநீரக விற்பனை கண்டிப்பாக குறையும்.

முக்கியமாக, இந்தப் பெண்கள் எல்லாருக்கும், சிறுநீரகம் விற்று வந்த பணம் மொத்தமும் மீண்டும் சிகிச்சைகளுக்கே செலவானது தான் ஆச்சரியமாக இருக்கிறது. அப்படியானால் மேட்டுக் குடி மக்களுக்குச் செய்வது போல் சரியான முறையில் தான் இவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப் பட்டதா? அல்லது பணம் மிச்சம் பிடிக்க ஏதும் குளறுபடி செய்துவிட்டார்களா? என்ற சந்தேகம் எழுகிறது...

இந்த விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கு இடையிலேயே இந்தப் பெண்களுக்கும் இப்பகுதி ஆண்களுக்கும் சுயதொழில் செய்ய உதவுதல், சுய உதவிக் குழுக்கள் அமைத்துத் தருதல் என்று நீண்டகால நோக்கிலான உதவியும் செய்ய முயல வேண்டும்.

சிவபாலன் said...

திரு,


உண்மையில் ஏழைகள் எவ்வளவு எளிமையாக ஏமாற்றப்படுகிறார்கள் என்பது அதிர்ச்சியும் வேதனையும்.

தருமி அய்யா சொல்வது போல் இது ஓரளவு பத்திரிக்கைகளில் செய்தியாக வருவதன் மூலம் இது போன்ற செயல்கள் குறைய வாய்ப்புள்ளது.

சரியான ஒரு செயல் திட்டம் தேவை..

கலை said...

வேதனை நிறைந்த தகவல்கள்.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com