Thursday, April 30, 2009

ஈழம்: வீரகேசரிக்கு வழங்கிய பழைய நேர்காணல்!

வீரகேசரி நாளிதழுக்கு 11 பெப்ருவரி 2007ல் வழங்கிய எனது நேர்காணலை இங்கு பதிவு செய்கிறேன்

வீரகேசரி: பொதுவான கேள்வி தங்களைப்பற்றி சொல்லுங்கள்?

திரு: தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமம் எனது பிறப்பிடம். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர் உரிமை, மனித உரிமை சம்பந்தமான பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்.

வீரகேசரி: ஈழத்தமிழர் பிரச்சினை பற்றிய பரிச்சயம் எப்படி ஏற்பட்டது?

திரு: எட்டாம் வகுப்பில் மாணவனாக படித்துக் கொண்டிருந்த காலத்தில் (1983) ஈழப்பிரச்சினை கறுப்பு ஜூலை கலவரங்களின் விளைவாக பெரியதாக வெடிக்க ஆரம்பித்திருந்தது. தமிழர்கள் மீது இலங்கை அரசும், சிங்களவர்களும் நடத்திய கொடூரமான 1983 ஜூலை தாக்குதல்களை எதிர்த்து தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டங்கள் வெடித்தன. தமிழகத்தில் கண்டன ஊர்வலங்கள், பள்ளிகளில் வேலைநிறுத்தங்கள் நடந்தன. எங்களது பகுதியில் நடந்த பல போராட்டங்கள் சிறுவனாக இருந்த என்னை பாதித்தது.

தமிழக பத்திரிக்கைகள் ஈழத்தின் செய்திகளை அப்போது தாங்கி வந்தன. அப்பா தினமும் பத்திரிக்கை செய்திகளை எங்களோடு பகிர்ந்துகொள்ளும் பழக்கம் உள்ளதால் எனக்கும் ஈழத்தின் அவலச் செய்திகள் வந்து சேர்ந்தன. எங்களது பகுதியின் பகுத்தறிவு இயக்கத்தினர் சேர்ந்து ஒரு பெரிய கருப்பு, வெள்ளை நிற கார்ட்டூன் தட்டியை வைத்திருந்தனர். அந்த பணியை முன்னின்று செய்தவர்களுடன் எனது அப்பாவும் முக்கியமானவர். அந்த தட்டியை பார்க்க சென்ற போது நான் கண்ட காட்சி என்னை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியது. அதில் "தமிழர்களின் கறி இங்கு கிடைக்கும்" என எழுதப்பட்டு சிங்களவர்கள் தமிழர்களை கொலை செய்த காட்சிகளை சித்திரங்களாக வரையப்பட்டிருந்தன.

விடுதலைப்புலிகள் இயக்கமும் பிற போராளி இயக்கங்களும் இந்தியாவில் அரச ஆதரவுடன் இயங்கிய காலம் அது ஆதலால் எங்கள் பள்ளியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தினரின் குறும்படங்கள் திரையிடப்பட்டன. ஒளிப்படங்கள் வழியாக ஈழத்தமிழர்களது வேதனைகளையும், சிங்கள அடக்குமுறையை, கண்டு கவலையடைந்தோம். போராளிகளது அளப்பரிய போராட்டம் எங்களுக்கு நம்பிக்கையை தந்தது. இராமேஸ்வரம் நோக்கி கடல்வழியாக படகுகளில் ‘அகதிகளாக’ தமிழகம் நோக்கி வந்த குடும்பங்களது கண்ணீர் செய்திகளை அப்பா எங்களுக்கு சொல்ல சிறுவனாக அதை கேட்கையில் மனம் வேதனைப்பட்டிருக்கிறேன். அப்போது ஒரே நாளில் சுமார் 28 ஆயிரம் ‘அகதிகள்’ வந்த நாட்களும் உண்டு.

வீரகேசரி: இந்தப்பிரச்சினை உங்களின் அதீத காரணம் பெற ஏதாவது பிரத்தியேக காரணங்கள் இருக்கிறதா?

திரு: மனிதனாக பிறந்த எல்லோரும் முழு விடுதலை பெற்றவர்களாக மானமும், சுயமரியாதையும் பெற்று சுதந்திரமாக வாழவேண்டும் என்னும் எண்ணம் எனக்கு உண்டு. இது மனித உரிமை அனைத்திற்கும் அடிப்படையான விடுதலை கருத்து. இந்தியாவில் தந்தை பெரியார் அவர்களும் அண்ணல் அம்பேத்கார் அவர்களும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தபட்ட மக்களின் விடுதலைக்காக கொண்டிருந்த அடிப்படையான கருத்து இந்த முழுமனித விடுதலை சார்ந்தது.

எல்லைக்கோடுகளை வைத்து நாடுகளின் இறையாண்மையை வரையறுப்பது அறியாமையின் வெளிப்பாடு. ஒரு நாட்டின் இறையாண்மை அந்த நாட்டில் வாழுகிற மக்கள் முழு உரிமையுடன், விடுதலையடைந்தவர்களாக வாழுகிறார்களா என்பதை அடிப்படையாக வைத்து மட்டுமே தீர்மானிக்க முடியும். இந்த விதத்தில் ஒற்றை நாடு என்ற கோட்பாட்டில் பெரும்பான்மையினர் சிறுபான்மை இன மக்களை அடிமைப்படுத்துவதும் அவர்களை உரிமையுள்ளவர்களாக வாழ அனுமதிக்காததும் இறையாண்மையற்ற செயல். இப்படி இறையாண்மை மீறப்படுகிற வேளைகளில் சிறுபான்மை இனங்கள் சர்வதேச பிரகடனங்களின் அடிப்படையில் தங்களது விடுதலையை தாங்களே தீர்மானிப்பது உலக நடைமுறை. இலங்கையில் பெரும்பான்மை அரசியல் பலத்தை வைத்திருக்கும் சிங்கள இனம் தமிழர்களை அடக்குவதும் அழித்தொழிப்பதும் இறையாண்மைக்கும், மனித உரிமைக்கும் எதிரானது. மனித விடுதலை என்ற உன்னதமான மதிப்பீட்டிற்கு அது முரணானது. அந்த விதத்தில் மனிதனாக தமிழீழ மக்களின் பிரச்சனையில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டது.

வீரகேசரி: இந்தப்பிரச்சினையில் உங்களுக்கு இருக்கிற கள அனுபவங்கள் குறித்து சொல்லுங்கள்?

திரு: மிகப்பெரிய கள அனுபவங்கள் எதுவும் எனக்கில்லை. 1984ல் நான் எனது முதல் கட்டுரையை ‘இதுவும் ஒரு நாடா?’ என்ற தலைப்பில் எனது பள்ளி மாணவர் மலருக்காக எழுதினேன். அது ஈழத்தமிழர்கள் நிலை, ‘அகதிகள்’ பிரச்சனை பற்றிய கட்டுரை. பள்ளியில் ஆங்கில கவிதைப் போட்டியில் 'I wandered lonely as a cloud among the fires and smokes of Eelam..' என்ற தலைப்பில் 1987ல் எழுதினேன். இப்படி மாணவ பருவத்தில் ஈழம் பற்றிய ஆர்வம் உருவானது. தொடர்ந்து ஈழம் பற்றி கையெழுத்து பத்திரிக்கைகள், மாணவர்மலர் போன்றவற்றில் எழுதியும், மேடைகளில் பேசியும் வந்தேன்.

1997 ல் இலங்கை தமிழ் மக்களுக்கு ஆதரவாக உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கம் தலைமையில் பல மக்கள் அமைப்புகள் சேர்ந்து உண்ணாவிரதத்தை திருச்சி மலைக்கோட்டை பேருந்து நிலையம் முன்பு நடத்தினர். தடா சட்டம் அமலில் இருந்ததால் அப்போது ஈழத்தமிழர் பற்றி வெளிப்படையாக பேச அச்சமான சூழல் இருந்தது. என்னை அந்த போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி அமைப்பாளர்கள் அழைத்தனர். அந்த அடையாள உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டு விடுதலைப்புலிகள் மீதான தடைகளை இந்தியா நீக்க வேண்டும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என பேசினேன்.

அதற்கடுத்ததாக வட அமெரிக்கா மற்றும் கனடா தமிழ்சங்கத்தின் தலைவர்கள் கலந்துகொண்ட அரங்க கூட்டத்தை உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கம் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது நமது கடமை என்பதை பற்றி பேசினேன். தொடர்ந்து நண்பர்கள் இணைந்து விவாத அரங்கங்கள், கலந்துரையாடல்களில் ஈழம் பற்றி பேசியும், கருத்துக்களை பரப்பியும் வந்தோம்.

ஈழம் செல்லும் ஆர்வம் தணியாது இருந்தது. 2002 டிசம்பர் ஈழம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. வவுனியா, கிளிநொச்சி, சாவகச்சேரி, கோப்பாய், யாழ்ப்பாணம் என பல இடங்களுக்கு சென்று யுத்தத்தினால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை நேரடியாக கண்டுணர்ந்தேன். யுத்தம் கொடியது, அது நம் தலைமுறைகளுக்கும் பாதிப்பை தருவது. இதை மனித சமூகம் உணரவேண்டும்.

புலம்பெயர் தமிழ் மக்களுடன் ஏற்பட்ட தொடர்பால் அவர்களது வேதனைகள் பல தெரிந்து கொண்டதும், பல செய்தி ஊடகங்கள் வழி தினமும் ஈழச்செய்திகள் அறிவதும் ஈழம் பற்றி எனக்கு ஒரு அரசியல் பார்வையை தந்திருக்கிறது. அதை தொடர்ந்து எனது வலைப்பதிவில் ஈழம் பற்றி அவ்வப்போது கட்டுரைகள் எழுதி வருகிறேன்.

வலைப்பதிவு செய்யும் பல நண்பர்களுடன் கலந்துரையாடிய போது தமிழக அகதிகள் முகாம் செல்ல ஆர்வம் வந்தது. அதன் தொடர்ச்சியாக திருநெல்வேலி மாவட்டம் தாழையுத்து அகதிகள் முகாமை வலைப்பதிவு செய்யும் நண்பர்கள் இருவருடன் டிசம்பர் 2006ல் பார்வையிட்டோம்.


வீரகேசரி: நீங்கள் செயற்படத் தொடங்கியபோது இருந்த தமிழகச்சூழல் இப்போது இருக்கிற தமிழக சூழல் இரண்டையும் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

திரு: 1983ல் ஈழத்தமிழர்களுக்கான அமைப்பு ரீதியான மற்றும் அரச ஆதரவு வெளிப்படையாக இருந்தது. அன்றைய புதுடில்லி அரசியல் பார்வையும் இதற்கு எதிராக இல்லை. இந்திராகாந்தி அம்மையார் படுகொலை செய்யப்பட்ட பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தில் வெளியுறவு கொள்கையில் மாற்றத்தை நிகழ்த்தியிருந்தது. தொடர்ந்து இராஜீவ் காந்தியின் படுகொலையால் பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டு தடைகள் உருவாகின. அப்போதெல்லாம் ஈழம் பற்றி பேசுவதே அடக்கப்பட்டிருந்தாலும் தமிழக மக்கள் தங்கள் ஈழ ஆதரவை மாற்றிக்கொள்ளாமல் தங்களுக்குள் பாதுகாத்தனர்.

இப்போது ஈழப்பிரச்சனையில் இந்திய அரசியல் அணுகுமுறையில் சில மாற்றம் நிகழ்கிறது. இந்திய பாராளுமன்றத்தில் புதுடில்லி மீதான அரசியல் பலத்தை தமிழகம் பெற்றிருக்கிறது. மத்திய அரசில் மாநில கட்சிகளின் பங்கு அதிகமாக இருக்க கூடிய காலம் இது. தமிழக அரசியல் அமைப்புகளின் ஒன்றுபட்ட குரல்கள் புதுடில்லியின் இலங்கை கொள்கையில் மாற்றத்தை நிச்சயமாக கொண்டுவரும்.

ஈழத்தமிழர்களின் துயரங்களை அறியும் வேளை தமிழகத்து மக்கள் வேதனையடைகிறார்கள் அதன் விளைவான செயல்பாடுகளும் எழுகின்றன. அரசியல் ரீதியாக தனது பலத்தை இன்னும் தமிழக அரசியல் சக்திகள் எந்த பிரச்சனையிலும் ஒன்று திரட்டவில்லை. அது ஈழப்பிரச்சனையிலும் ஒலிக்கிறது. தனித்தனி அமைப்புகளாக குரல் கொடுப்பதும் தங்களுக்குள் போட்டியிட்டு கொள்வதுமாக இருக்கிற அரசியல் நிலைமை மாறி பிரச்சனைகளில் ஒன்றுதிரண்ட குரலாக ஒலித்தால் மட்டுமே இந்திய அரசாங்கத்தின் வாக்குறுதிகளை செயல் வடிவமாக பெற இயலும்.

வீரகேசரி: ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்தியா அதிலும் குறிப்பாக தமிழகம் என்ன நிலைப்பாட்டை கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறிர்கள்?

திரு: இலங்கை அரசு மற்றும் அது சார்ந்த நிறுவனங்களுக்கு செய்யும் அனைத்து இராணுவ தளவாடங்கள், போர் பயிற்சிகள், வெடிமருந்து பொருட்கள் போன்ற உதவிகளும் முற்றிலும் நிறுத்தப்படவேண்டும். தனது நாட்டிலுள்ள மக்கள் மீது வான்வெளி தாக்குதலை தொடுக்கிற ஒரு அராஜக அரசிற்கு செய்யும் எந்த உதவிகளும் மறைமுகமாக அதன் அடக்குமுறைகளை ஆதரிப்பது ஆகிவிடும்.

இந்தியாவில் ஈழத்தமிழர் அகதிகள் முகாமிற்கு பன்னாட்டு அமைப்புகள் உதவியுடன் வீடு, உணவு, குடிநீர், கழிப்பறை, கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். முகாமில் வாழுகிற மக்களுக்கான தொழிற்பயிற்சிகள், கூட்டுறவு முறையிலான வேலைகளை உருவாக்குவது அவசியம்.

இந்தியாவின் ஈழப்பிரச்சனை பற்றிய அரசியல் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்வது அவசியம். இந்தியா தனது சொந்த திட்டங்களை திணிப்பதோ, இந்திய மாதிரிகளை தீர்வாக வைப்பதோ இந்த பிரச்சனைக்கு முடிவாக அமையாது. வடகிழக்கு இலங்கையில் வாழுகிற மக்களின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார உரிமைகளின் அடிப்படையிலான தீர்வுகள் என்ன என்பது பற்றி ஆராய வேண்டியது இந்தியாவின் கடமை. தமிழ் மக்களது உரிமைகளை 'இலங்கையின் இறையாண்மை' என்ற பெயரில் எல்லைக் கோட்டிற்குள் குறுக்கும் பார்வை நீங்க வேண்டும். இறையாண்மை என்பது எல்லைக்கோடுகள் மட்டுமல்ல; அதில் வாழும் மக்களின் உரிமை வாழ்வும் சேர்ந்தது.

தமிழகத்தில் பல துருவங்களாக ஒலிக்கிற ஈழ ஆதரவு குரல்கள் சேர்ந்து ஒலிக்க வேண்டும். அரசியல் ரீதியாக தமிழக அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் ஈழத்தமிழர் உரிமைக்காக குரல் கொடுக்க தார்மீக கடமையுண்டு. தமிழக அரசியல் நிலைப்பாடு ஒருமுகப்படுத்தப்பட்டால், இந்திய அரசு இலங்கை அரசிற்கு ஆதரவாக எதையும் செய்துவிட முடியாது.

வீரகேசரி: புலம் பெயர்ந்து வாழுமிடங்களின் தமிழர்களின் பிரச்சினையை எந்தளவுக்கு உலகம் புரிந்து கொண்டதாய் உணர்கிறீர்கள்?

திரு: புலம்பெயர் தமிழர்களின் பிரச்சனை பற்றிய அறிவும், பார்வையும் மிக குறைவாகவே காணப்படுகிறது. அப்படி இருக்கிற ஆதரவும் தனிநபர்களுக்கான அல்லது குடும்பங்களுக்கான உதவியுடன் முடிந்து விடுகிறது. அதற்கு காரணம் ஈழத்தமிழர்களின் வாழ்வில் ஏற்படுகிற அடக்குமுறைகளை, அவலங்களை உலகமக்களுக்கு சரியாக கொண்டு செல்ல பிறமொழி ஊடகங்களில் தமிழர்களது ஈடுபாடு அதிகமில்லை. தமிழர்கள் தங்களது பிரச்சனையை தங்களுக்குள்ளேயே பேசி, செயல்படுகிறார்கள். புலம்பெயர் தமிழர்கள் ஊடகங்கள் கூட பெரும்பாலும் தமிழ் மொழியில் மட்டுமே செய்திகளை பரப்பி வருகிறது. தமிழ் மொழியில் மட்டுமே இருந்தால் எத்தனை அயல்நாட்டினருக்கு இந்த செய்திகளை கொண்டு செல்ல முடியும்? புலம்பெயர் தமிழர்கள் அந்த நாடுகளின் மொழிகளிலுள்ள ஊடகங்களில் தங்களது பிரச்சனைகளை எழுதுவது அவசியம்.

தமிழ் ஊடகங்களில், விழாக்களின் நிகழ்ச்சிகளில் தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் தாக்கமும், திரைப்படத்தின் தாக்கமும் மிகுதியாக இருக்கிறது. வாகரையில், யாழ்ப்பாணத்தில் பட்டினிச்சாவை எதிர்நோக்கி தமிழன் செத்துக் கொண்டிருக்கையில் அது பற்றிய செய்தியை சர்வதேச அளவில் பரப்ப தமிழர்களின் ஊடகங்கள் தவறியது. பலமுறை தொடர்ந்து முறையிட்ட போதும் புலம்பெயர் தமிழர்களது வலிமையான ஊடகங்கள் கூட ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு கையெழுத்து இயக்கம் பற்றிய தகவலை வெளியிட முன்வரவில்லை. திரைப்படத்துறை செய்திகளை, பாடல்களை தாங்கி வருகிற அதே வேளை தமிழர்களுக்கான ஆதரவு குரலை கவனிக்காமல் விடும் முரண்பாட்டில் இன்று புலம்பெயர் தமிழர்களது ஊடகங்கள் இருக்கின்றன. தமிழ் ஊடகங்களும், புலம்பெயர் தமிழர்களும் எடுக்கிற பரப்புரைகளும், முறையீடுகளும் இன்னும் வலுப்பெறவேண்டும் அப்போது மட்டுமே உலக மக்களின் பார்வை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மாறும். பெரும்பான்மை உலக மக்களுக்கு ஈழமக்களின் பிரச்சனை பற்றிய தகவல்கள் சென்று சேர்வதில்லை. அவர்களது ஆதரவை தனது பக்கமாக திருப்ப தமிழர்கள் இன்னும் ஆர்வமாக உழைக்க வேண்டும்.

வீரகேசரி: இந்த கையெழுத்து வேட்டை பற்றி?

திரு: வாகரை பகுதியில் உணவு, மருந்து பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்காமல் இலங்கை அரசு விதித்த பொருளாதார தடையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் ஒன்றை இணையத்தளங்கள் மூலமாக நண்பர்கள் உதவியுடன் நடத்த துவங்கினேன்.

  1. ஏ9 சாலையை திறந்து பொருளாதார தடைகளை நீக்குதல்.
  2. மக்கள் மீது தொடுக்கப்படுகிற அனைத்து ஆயுத தாக்குதல்களையும் நிறுத்துவது.
  3. மக்கள் சுதந்திரமாக நடமாடவும், கல்வி, வேலைகளில் ஈடுபடவுமான சூழ்நிலையை உருவாக்குதல்.

ஆகிய மூன்று கோரிக்கைகளை வைத்து கையெழுத்து இயக்கம் ஆரம்பமானது. இதற்கு ஏராளமான நண்பர்களின் ஆதரவு இந்த கையெழுத்து இயக்கத்திற்கு கிடைத்தது. இதுவரை சுமார் 5200 கையெழுத்துக்கள் சேர்ந்துள்ளன. இவை அனைத்தும் ஐ.நா சபை, இந்திய அரசு, தமிழக அரசு, இலங்கை அரசு, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். பாதிப்பிற்குள் வாழுகிற மக்களின் உரிமைகளுக்காக எங்களால் முடிந்தவரை குரல் கொடுப்போம்.

ஈழத்தமிழர்களின் உரிமைகள் வெல்லட்டும்!

படம்: ஐரோப்பிய ஒன்றியம் நோக்கிய தமிழர்களின் உரிமைப் பேரணி, பிரஸ்ஸல்ஸ்
நேர்காணல்: வீரகேசரி நாளிதழ், 11பெப்ருவரி 2007

Tuesday, April 28, 2009

கேள்வி பதில்: தூங்குவது போல நடித்தல்!



கேள்வி: முடிவெடுக்கும் இடத்தில் கலைஞர் எங்கே இருக்கிறார்? காங்கிரசும், பாமகவும், மதிமுகவும், கம்யூனிஸ்டுகளும், அதிமுகவும் தானே இருக்கிறது? தமிழக சட்டமன்றத்தில் 95 இடங்களை வைத்துக்கொண்டு அவர் எதை பிடுங்க முடியும்? ஈழத்து செல்லப்பிள்ளை, தமிழ்நாட்டின் கைப்பிள்ளை வைகோ அவர்களால் வந்த வினை இது. கடந்த 2006 தேர்தலில் கடைசி நிமிடத்தில் ஒரு சீட்டுக்காக அதிமுகவிடம் சோரம் போன அவரது கோழைத்தனமான நயவஞ்சகத்தால் மாநிலத்தில் தமிழுணர்வாளர்களின் பலம் மட்டுப்படுத்தப்பட்டது?

பதில்: முடிவெடுக்கும் இடத்தில் முதல்வர். கருணாநிதி இல்லை என்பது மாயை. 95 இடங்களை சட்டமன்றத்தில் இருப்பதால் ஒன்றும் செய்யமுடியாது. அப்படி செய்தால் ஆட்சி கவிழ்ந்து ஜெயலலிதா பலம் பெற்றிருப்பார் என்பதும் மேலோட்டமாக உண்மையாக தெரியும். உண்மை அதுவல்ல. மத்திய அரசு திமுக தயவில் நாட்களை உருட்டியதையும் இங்கு பார்க்க வேண்டும். கடந்த வருடம் திமுக எடுத்த நிலைபாட்டில் உறுதியாக இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. ராமதாசையும், ஜெயலலிதாவையும் கண்டு அச்சமடைந்து அவர்களை எப்படி எதிர்கொள்ளலாமென்று கவனம் செலுத்திய முதல்வர், மத்திய அரசை தான் சொல்லியபடியெல்லாம் வைத்திருக்கும் வாய்ப்புகளிருந்தும் எதையும் செய்யவில்லை. ஈழத்தமிழர்களுக்கு எதிராக 5 வருடங்களாக மத்திய அரசு கொடுத்த ஆயுதங்கள், உதவிகள், சதிவேலைகள் எவற்றிற்கும் எதிராக ஒரு வார்த்தையும் பேசாமல் மத்திய அரசில் பங்குபெற்றது திமுக. ராமதாசும் பேசவில்லை அதனால் நான் பேசவில்லை என்னும் வாதம் பெரிய கட்சியான திமுகவுக்கும், தமிழினத்தலைவர் பட்டம் சூட்டியவருக்கும் அழகல்ல. அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்க கருணாநிதியின் காலைப்பிடித்து கெஞ்சியது காங்கிரஸ். அதை ஒரு துருப்புச்சீட்டாக வைத்து அப்போதாவது ஈழப்பிரச்சனையில் கொள்கை மாற்றம் உருவாக்க முனைப்பெடுத்தாரா? இல்லை. ஏன்?

ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காங்கிரஸ் கட்சி முழுக்காரணம். அந்த கட்சியோடு யார் கூட்டணி வைத்தால் என்ன? அவர்கள் தமிழர்களின் எதிரிகளே! காங்கிரஸ் இன்று சட்டச்சபையில் இவ்வளவு எண்ணிக்கையில் இடங்களை வைத்திருக்க யார் காரணம்? சட்டமன்ற தேர்தலில் தொகுதி உடன்பாட்டின் போது வைகோ எப்படி முறைத்துக்கொண்டு போனாரோ அதே அளவு வைகோவை இழிவுபடுத்திய பங்கு கருணாநிதிக்கு உண்டு. சட்டசபைத் தேர்தலில் காங்கிரசுக்கு இடங்களை அள்ளிக்கொடுத்தார். அதன் விளைவை அனுபவிக்கிறார்.

ஈழப்பிரச்சனைக்காக என்ன செய்வதென்று சொல்கிறார் இன்று கருணாநிதிக்கு அருகிலிருந்து ஆலோசனை வழங்கும் தமிழுணர்வாளர் ஒருவர். அவரது பெயரை சொல்ல விரும்பவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் ஒருவரால் போகுமிடத்துக்கு வழிகாட்ட இயலாது. அப்படிப்பட்ட தலைமை அவசியமும் இல்லை.


கேள்வி : கொத்துகுண்டுகள், ரசாயன ஆயுதங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி கொடூர இனயுத்தம் செய்துகொண்டிருந்த இலங்கை அரசு இனி கொல்லும் ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என்ற அளவுக்கு இறங்கி வந்திருப்பதற்கு கலைஞரே காரணம். இத்தகைய ஒரு வாக்குறுதியை இலங்கை அரசிடம் இருந்து பெருவதே குதிரைக்கொம்பாக இருந்தது. இனி வாக்குறுதியை மீறும் பட்சத்தில் இலங்கை அரசுக்கு எதிரான சர்வதே ராணுவநடவடிக்கையை கோரமுடியும்.

பதில் : உண்ணாவிரத நாடகத்தினாலொன்றும் சிறீலங்கா அரசு இத்தகைய அறிவிப்பை வெளியிடவில்லை. உண்ணாவிரதமிருந்த பிறகும் ‘சொக்கத்தங்கம் சோனியா’ அசையவில்லை. கருணாநிதியை அண்ணா சமாதியிலிருந்து பத்திரமாக மதிய உணவிற்கு அனுப்ப பா.சிதம்பரத்தை வைத்து அறிவிக்க ஒரு நாடகம் அரங்கேறியது. கருணாநிதிக்கு பா.சிதம்பரம் வழியாக கொடுத்த வாக்குறுதிகளை வைத்து எதையும் செய்யமுடியாது.

அப்போது சிறீலங்கா ஏன் கனரக ஆயுதங்களைப் பாவிக்கப் போவதில்லையென்று அறிவித்தது? அமெரிக்காவும், பிரிட்டனும், பிரான்சும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து பல முயற்சிகளை எடுக்கின்றன. அதை எதிற்கும் சீற்றம் சிங்கள அமைச்சர்களின் அறிக்கைகளில் காணமுடியும். R2P அதாவது Right to Protect என்று ஒரு கோட்பாடு உலகத்தில் இருக்கிறது. வன்னியில் நடப்பது போன்ற இனப்படுகொலைகளை தடுக்க R2P கோட்பாட்டை பயன்படுத்தி உலகநாடுகள் தலையிடமுடியும். அந்த தலையீடுகள் இராணுவ நடவடிக்கை, பொருளாதார தடைகள், இராஜதந்திர உறவுகளை முடக்குதல் போன்ற எதுவாகவும் இருக்கலாம். மேலும் 29 ஏப்பிரலில் ஐ.நா பாதுகாப்புச்சபை கூட்டம் கூடுவதாகவும் தகவலுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் சிறீலங்கா மீதான அழுத்தத்தை எதிர்கொள்ள ராஜபக்சே & சோனியா company எடுத்த தந்திர நடவடிக்கையது. அப்படி அயல்நாடுகளோ, மனித உரிமை அமைப்புகளோ வன்னியில் புகுந்தால் இனப்படுகொலைக்கு ஆதரவாக இந்தியா செய்த குட்டுகளும், போர்க்குற்றங்களும் அம்பலமாகுமல்லவா? அந்த கவலையில் புதுடில்லியும், கொழும்புவும் உலக நாடுகளை ஏமாற்ற அரங்கேற்றும் நாடகம் இந்த கனரக ஆயுதம் பயன்படுத்தமாட்டோமென்ற அறிவிப்பு. அதற்கு பிறகும் விமானத்தாக்குதல் நடந்ததே. அந்த அறிவிப்பிற்கு பிறகும் ஐய்யன். வாழும் வள்ளுவர் என்ன செய்தார்? கருணாநிதியின் உண்ணாவிரதம் பற்றி அலட்ட அவசியமில்லை. தமிழக அரசியல்வாதிகள் அனைவரின் தேர்தல் நாடகங்களில் இதுவுமொன்று.


கேள்வி : சரி. புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கு கலைஞர் மீது புழுதிவாரித் தூற்றுகிறார்களா?

பதில்: முதலில் கேள்வியே தவறு. ஈழத்தமிழர்கள் எந்த புழுதியையும் தூற்றவில்லை. அவர்களுக்கு சொந்தபந்தங்களின் இழப்புகளிலும், கருணாநிதி-சோனியாவின் துரோக-வஞ்சக கூட்டணியால் ஈழமும், போராட்டமும் சந்திக்கிற அழிவுகளை கண்டும் கண்ணீர்விட்டு கதறியழுது, வீதிகளிலும், அதிகாரபீடங்களிலும், ஊடகங்களிலும் போராடவே நேரமில்லை. இதற்கிடையில் பாவம் புள்ள கருணாநிதியையா தூற்ற நேரம்? இன்னொன்று தமிழகத்திலுள்ள தமிழர்களான வழக்கறிஞர்கள், மாணர்வர்கள், பெண்கள், வணிகர்கள், கலைத்துறையினர், மாற்று சிந்தனையுள்ளவர்கள், இனஅழிப்பை எதிர்க்கும் ஊடக நண்பர்கள் கருணாநிதியால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து களத்தில் குதித்துள்ளனர். அது தான் உண்மை. பழியை ஈழத்தமிழர்கள் மீதும் பிரபாகரன் மீதும் சுமத்தி கோழையின் நடிப்பிற்கு நாம் உதவிடக்கூடாது.

தமிழினத்தலைவர் பட்டத்தையும், தமிழகத்தின் ஆட்சியையும், மத்தியில் அதிகாரபலத்தையும் வைத்திருந்தும் தமிழர்கள் கொல்லப்படும் போது அண்ணா துவங்கிய திமுகவை தனது சுயநலத்திற்காக பயன்படுத்தி கோழையாக நாடகங்களை நடத்துவதோடு, உணர்வாளர்களின் போராட்டங்களை அடக்குவதாலும், அவர்களை பொய்வழக்குகளில் சிறைப்படுத்துவதாலும், உண்ணாவிரதமிருந்த பெண்களை 4 நாட்கள் சென்னை முழுவதும் ஒவ்வொரு இடமாக துரத்தியதாலும் வருகிற நியாயமான கோபம்.

கேள்வி : பிரபாகரன் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவளிக்காமல் ராஜபக்சேவை கொண்டு வந்ததால் தனது தலைமையின் தோல்வியை மறைக்க கருணாநிதியை பழி சொல்கிறார்களா?

பதில்: அடடா… ரணில் விக்கிரமசிங்கே கருணாவை (இந்தியாவின் துணைகொண்டு) பிரித்ததாக சொன்னதும் ராஜபக்சே அரசாங்கத்தின் இன்றைய போர் வெற்றிகளுக்கு தாங்கள் தான் காரணமென்று ரணிலும் அவர் கட்சியினரும் சொன்னதை கவனிக்கலையா? போர் நிறுத்த காலத்தில் ‘பிஸ்கோத்துகளை’ கொடுத்தவர் அவர். இடைக்கால நிர்வாகம் ஒன்றை புலிகள் முன்வைத்த போது அதை கூட பரிசீலிக்கவில்லை. விரிவாக இங்கு அதை விளக்க நேரமில்லை. சுருக்கமாக அவரை நம்புவது சொக்கத்தங்கம் சோனியாவை தமிழர்கள் நம்பியது போன்றது. ஈழத்தமிழர்களும், உணர்வாளர்களும் தெளிவாக இருக்கிறார்கள். உடன்பிறப்புகளே இன்னுமா முதல்வர்.கருணாநிதியை நம்புகிறீர்கள்?