Sunday, August 14, 2011

ராஜீவ் கொலை வழக்கும் நீதிமன்றக் கொலையும்!

நீதிக்கான போராட்டங்கள் எப்போதுமே வலியும், துயரமும் நிறைந்த பயணங்களாக இருக்கின்றன. நீதியற்றவர்கள் அதிகார பீடங்களின் போதையை சுவைப்பதற்காக பலியிடப்படுவது குற்றமற்றவர்களும், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை உடைக்கிற வாய்ப்பற்றவர்களும்.

தடா சட்டத்தில் படி நடந்த ராஜீவ் கொலை வழக்கு மற்ற வழக்குகள் போன்றதல்ல. இந்திய குற்றவியல் சட்டத்தின் அடைப்படையிலான மற்ற வழக்குகளைப் பொறுத்த வரையில் ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டால், காவல்த்துறை பெற்ற வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் மறுத்து உடைக்க முடியும். சம்பந்தப்பட்டவர் தான் குற்றம் செய்தார் என்பதை சாட்சிகள் மற்றும் தரவுகளின் மூலம் சட்டப்படியான வாதங்களின் அடிப்படையில் நிரூபிப்பது குற்றம் சுமத்துபவரது கடமை. அப்படி நிரூபிக்காமல் போகிற போது குற்றம் சுமத்தப்பட்டவர் விடுதலை ஆகிவிடுவார். இது சாதாரண குற்றவியல் நடைமுறை. இதை தான் ஆங்கிலத்தில் innocent until proven guilty என்பது.

ஆனால் தடா வழக்கு அப்படியானது அல்ல. அதற்கு நேர்மாறானது. காவல்த்துறையால் பதிவு செய்யப்படுகிற வாக்குமூலங்கள் அவை பெறப்பட்ட சூழ்நிலைகளை (சித்திரவதை, அச்சுறுத்தல், ஆசைகாட்டுதல்...) கருத்தில் எடுக்காமல் அப்படியே ஏற்கப்படும். அவற்றை மறுத்து, திரும்ப பெறுகிற வாய்ப்பு கிடையாது. ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சிறப்பு புலனாய்வுத்துறையின் கடும் சித்திரவதைகளில் கட்டாய வாக்குமூலம் பெறப்பட்டவர்கள். நீதிமன்றத்தில் அவற்றை திரும்ப பெறுகிற வாய்ப்பை இழந்தவர்கள். மற்றொரு முக்கியமான விசயம், தடா வழக்கை பொறுத்த வரையில் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டால் அவரே தான் குற்றவாளி அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும். குற்றம் சுமத்துகிற தரப்பிற்கு வேலை எளிது. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் கடுமையான பாதுகாப்பிற்குள், கடுமையான சட்டத்தின் பிடியில் வாய்ப்புகளும், நீதியான உரிமையும் மறுக்கப்பட்ட நிலையில் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை உடைப்பது சாத்தியமானதோ, எளிதானதோ அல்ல. தடா வழக்கைப் பொறுத்த வரையில் வழக்கமான சட்ட நடைமுறைக்கு மாறாக guilty until proven innocent என்கிறது.

ராஜீவ் கொலை வழக்கை இந்திய குற்றவியல் மற்றும் தண்டனை சட்டங்களில் விசாரித்திருக்க வேண்டும். தடா வழக்கில் விசாரித்தது அப்பட்டமான மனித உரிமை மறுப்பு செயல். சிபிஐ புலனாய்வைப் பொறுத்த வரையில் முடிவை எழுதிவிட்டு காதாப்பாத்திரங்களை உருவாக்குவது போல சிபிஐ குழறுபடியும், குழப்பமும், வெளிப்படையின்மையும், புரட்டும் நிறைந்த புனைவுகளை விசாரணை ஆக ஆக்கியது.

நீதிமன்றம் தடா சட்டத்தின் அடிப்படையில், சிபிஐ புனைந்த புலனாய்வு தகவல்கள் அடிப்படையில் விசாரித்து தீர்ப்பெழுதியது. அதனடிப்படையில் சிறப்பு நீதிமன்றம் 21 பேருக்கு நீதிமன்றக் கொலை(தூக்குதண்டனை) விதித்தது.

மேல்முறையீட்டில், உச்சநீதிமன்றம் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தனுக்கு தண்டனையை உறுதி செய்தது. மற்றவர்களுக்கு தண்டனை குறைப்பு செய்தது. சோனியா 4 பேரின் தண்டனையை குறைக்குமாறும் "தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் அவர்கள் 4 பேரும் கொல்லப்படுவது விருப்பமல்ல" என்றும், குறிப்பாக நளினியின் தண்டனையை குறைக்குமாறும் கடிதம் ஒன்றை 05.12.1999 அன்று குடியரசுத் தலைவருக்கு எழுதியிருந்தார். அதனடிப்படையில், நளினிக்கு மட்டும் தண்டனை குறைக்கப்பட்டது. இந்திய மக்கள் பார்வையில் சோனியாவும், ராகுலும், பிரியங்காவும் தண்டனை குறைப்பு வழங்கியிருக்கிறார்கள். ஆனால் ஆளுகின்ற காங்கிரசும், பிரதமரும், குறிப்பாக 3 பேரின் தண்டனை குறைப்பு மனுவை நிராகரித்து நீதிமன்றக்கொலையை உறுதிசெய்ய பரிந்துரைத்த உள்துறையும் சோனியாவின் வழிகாட்டுதலில் தான் இயங்குகின்றனர். நீண்டகால காங்கிரஸ் உறுப்பினரான குடியரசு தலைவர் சோனியா வழிகாட்டுகிற அரசிற்கு இணக்கமாக இயங்குபவர் என்பதையும் குறிப்பிட அவசியமில்லை.


வன்னிப்படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணையை தமிழர்கள் கோருகிற அழுத்தம் ஒருபக்கமும், ஊழலில் குளித்து கும்மாளம் போடுகிற அரசுக்கு நெருக்கடிகள் மறுபக்கமுமாக இருக்கிற மிகவும் நேர்மையற்ற, வெளிப்படையற்ற அரசு சிலரை கொலை செய்தாவது பிரச்சனைகளிலிருந்து தப்பித்து ஓட முனைகிறது. தவறான சட்டத்தின் அடிப்படையில், தவறான விசாரணை மூலம் தவறான தீர்ப்பை எழுதி குற்றமற்றவர்களை கொலை செய்வது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.

இத்தண்டனை நிறுத்தப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து ராஜீவ் கொலை வழக்கு தடா சட்டத்தின் பிடியிலிருந்து விலக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
அது வரையில் குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர்களை தண்டிப்பது எவ்வகையிலும் நீதியானது அல்ல. நீதிக்கு புறம்பானவையே.