Monday, June 01, 2009

ஈழம்: மனித உரிமை சபை அரசியலும், முன்னிருக்கும் கடமையும்!


வன்னியில் 20 ஆயிரத்திற்கும் அதிமான மக்களை படுகொலை செய்து தடையங்களை அழித்துள்ளது ராஜபக்சே அரசு. சிறீ லங்காவில் மனித உரிமை மற்றும் மனிதாபிமான பிரச்சனைகளை விவாதிக்க உடனடியாக ஐ.நா மனித உரிமை சபையின் 11வது சிறப்பு கூட்டத்தை கூட்டுமாறு ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா ஆதரவுடன் ஜெர்மனி அழைப்பு விடுத்திருந்தது.

அக்கூட்டத்தில் அணிசேரா நாடுகளின் பெயரில் சிறீலங்கா தன்னைத்தானே பாராட்டும் தீர்மானத்தை கொண்டுவந்தது. இதில் ராணுவ வெற்றி, ராஜபக்சேயின் திறமை, வாக்குறுதிகள் ஆகிய சுயபுகழ்ச்சி மட்டுமே நிறைந்திருந்தது. சிறீ லங்கா அரசு நடத்துகிற ‘வதை முகாம்களில்’ ராணுவத்தின் காவலில் அச்சுறுத்தலில் இருக்கிற சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களின் சுதந்திரமாக வாழும் உரிமைகளையும், பேச்சுரிமையையும், பாதுகாப்பையும் இந்த தீர்மானம் குறிப்பிடவில்லை. போரினால் உள்நாட்டில் இடம்பெயரும் மக்களுக்கான முகாம்கள் பற்றி ஐ.நா ஏதிலிகள் ஆணையாளர் அலுவலகம் வரையறுத்துள்ள நடைமுறைகளையும் சிறீ லங்கா கடைபிடிக்கவுமில்லை.

முட்கம்பி வேலியால் அடைத்துள்ள முகாம்களில், ராணுவத்தின் எந்திர துப்பாக்கிகளின் காவலில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் சுமார் 3 லட்சம் தமிழ் மக்களை திறந்தவெளி சிறையில் தற்காலிக கூடாரங்களில் அடைத்து வைத்திருக்கிறது. செஞ்சிலுவை சங்கம், ஐ.நா அமைப்புகளை அனுமதிக்கவுமில்லை. 9,100 போராளிகள் தங்களிடம் சரணடைந்ததாக சிறீ லங்கா படைகளின் பேச்சாளர் உதய நாணயக்கரா தெரிவித்த தகவல்கள் வந்துள்ளன. கோத்தபாய ராஜபக்சே 5 ஆயிரம் விடுதலைப்புலிகள் சரணடைந்துள்ளனர் என்று தெரிவித்ததாக செய்திகள் வந்தன. அப்படியானால் அரசிடம் சரணடைந்ததாக சொல்லுகிற மீதம் 4,100 பேர் என்ன ஆனார்கள்? சந்தேகத்தின் பேரில் இளவயதினர்களை கடத்தி, சித்திரவதை, ரகசிய விசாரணை நடத்தி காணாமல் போக செய்கிறது சிறீ லங்கா. போராளிகளாக சந்தேகப்படுபவர்களை ராணுவம் கொண்டு சென்ற பிறகு அவர்களது நிலைமை பற்றி எவருக்கும் தகவல்கள் இல்லை. ஐ.நா அமைப்புகளுக்கும் அவர்களைப் பற்றி அறிந்துகொள்ள முடியவில்லை.

வன்னியில் இறுதிக்கட்ட போரில் 20 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சிறிலங்கா படையினரின் பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிகளுக்கு உயிரிழந்திருக்கின்றனர் என்று கணிப்பிடுகிறது டைம்ஸ் நாளிதழ். “மனித உரிமைகள் சபையின் உறுப்புரிமை நாடுகளில் சில இந்த சிறப்பு விவாதத்தை பலவந்தமாக திணித்துள்ளன. ஆனால், இது தேவையற்றது. சிறிலங்கா தொடர்பான விவாதத்தை சாதாரண கூட்டத்தில் விவாதிக்கலாம்,” என சிறீ லங்காவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவரும் இந்தியாவுக்கான தூதுவர் தெரிவித்திருக்கின்றார். இந்தியாவுடன் இணைந்து சீனாவும், ரஸ்யாவும் சிறிலங்காவுக்கு ஆதரவு திரட்டின. சிறீ லங்காவின் தீர்மானம் 30 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியுள்ளது. அப்பாவி மக்கள் மீது ராணுவ தாக்குதல்களை நடத்துவது உள்நாட்டு பிரச்சனையல்ல என்பதை இந்தியாவின் அதிகார வர்க்கத்திற்கும் தெரியும். ஐ.நா மனித உரிமை சபை கூட்டத்தில் சிறீ லங்காவின் தீர்மானத்திற்கு எதிராக ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் சுவிட்சர்லாந்து ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது. செஞ்சிலுவை சங்கத்தை முகாம்களில் அனுமதித்தல், இவ்வருட இறுதிக்குள் பெரும்பான்மை மக்களை மீளக் குடியமர்த்தல், மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச தரத்துடன் சிறீ லங்கா விசாரணை செய்தல் ஆகிய அம்சங்கள் அத்தீர்மானத்தில் இருந்தன. சுவிட்சர்லாந்தின் தீர்மானமும் போர்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க வலுவான கோரிக்கையை வைக்கவில்லை. மாறாக மனித உரிமை மீறல் குற்றங்களை சிறீலங்கா சர்வதேச தரத்தில் விசாரணை செய்ய வலியுறுத்தியது.

20 ஆயிரம் தமிழ் மக்களை படுகொலை செய்து, தடையங்களை அழித்த சிறீ லங்காவின் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களையும், போர் குற்றங்களையும் விசாரிக்க மனித உரிமை சபை தீர்மானம் எடுக்காததற்கு அங்கு நடக்கிற அரசியல் தான் பிரதான காரணம். அந்த அரசியலை சிறீலங்காவும் அதன் ஆதரவு நாடுகளும் சாதகமாக பயன்படுத்தியது.

முன்னர் இருந்த ‘மனித உரிமை ஆணைக்குழு’ மனித உரிமை சம்பந்தமாக முறையாக செயல்படவில்லை. மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டங்களில் அதிகமாக அரசியல்மயமானதால் முக்கிய மனித உரிமை பிரச்சனைகளில் கவனம் செலுத்தவில்லை. அதனால், முன்னாள் ஐ.நா பொதுச்செயலாளர் கோபி அன்னான் 2005ல் மனித உரிமை ஆணைக்குழுவை மாற்றி அமைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய அடிப்படையில் 2006ல் ஐ.நா பொதுச்சபையின் தீர்மானத்தில் ‘மனித உரிமை சபை’ உருவாக்கப்பட்டது. ஐ.நா பொதுச்சபையில் தேர்ந்தெடுத்த 47 நாடுகள் 3 ஆண்டு காலம் உறுப்பினராக மனித உரிமை சபையில் இடம்பெறுகின்றன. ஆசிய நாடுகளுக்கு 13, ஆப்பிரிக்கா நாடுகளுக்கு 13, கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு 6, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கு 8, மேற்கு ஐரோப்பா மற்றும் இதர குழுவிற்கு 7 எண்ணிக்கையில் உறுப்பு நாடுகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. மனித உரிமை மீறல்கள் காரணமாக 2008 தேர்தலில் சிறீ லங்காவை மனித உரிமை சபைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கவில்லை.

மனித உரிமை சபையின் முதல் சிறப்புக் கூட்டம் அரபு நாடுகளின் அழைப்பினால் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ராணுவ தாக்குதல்கள் சம்பந்தமாக ஜூலை 5, 2006ல் கூடியது. அக்கூட்டத்தில் இஸ்லாமிய நாடுகளும், கியூபாவும் இணைந்து இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானமொன்றை கொண்டு வந்தன. அந்த தீர்மானத்தை எதிர்த்து ஐரோப்பிய நாடுகள் வாக்களித்தன. இஸ்லாமிய நாடுகளும், கியூபா, இந்தியா, சீனா, ரஷ்யா மற்றும் சிறீ லங்கா உட்பட அணிசேரா நாடுகள் தீர்மானத்தை ஆதரித்து நிறைவேற்றின. இரண்டாவது சிறப்புக் கூட்டம் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை விவாதித்து ஆகஸ்டு 11, 2006ல் தீர்மானம் நிறைவேற்றியது. அப்போதும் தீர்மானத்தை எதிர்த்து இஸ்ரேலுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகளும், கனடாவும் வாக்களித்தன. மியான்மர், சூடான் மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசு நாடுகளின் பிரச்சனை மற்றும் உலகளாவிய உணவுப் பஞ்சம் ஆகிய பிரச்சனைகளை விவாதித்த சிறப்புக் கூட்டங்களில் மட்டுமே மனித உரிமை சபை ஒழுங்காக செயலாற்றின. மற்ற எல்லா சிறப்புக் கூட்டங்களிலும் இஸ்ரேல் மற்றும் மேற்குலக நாடுகளுக்கு எதிரான இஸ்லாமிய நாடுகள் மற்றும் அணிசேரா நாடுகளின் பலமான அணி உருவானது. உறுப்பினராக இல்லாமல் பார்வையாளராக மட்டுமே இருந்த அமெரிக்கா, மனித உரிமை சபையில் நடக்கிற அரசியலை காரணமாக வைத்து 2008ல் ச்ச்மனித உரிமை சபையியிலிருந்து வெளியேறியது. ஜார்ஜ் புஸ்ஸின் இந்த நடவடிக்கை ஒரு வகையில் கியூபா, சீனா, இந்தியா மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு பலமாக ஆகிவிட்டது. சிறீ லங்காவும் அந்த அணியில் உள்ளது. சிறீ லங்காவின் தீர்மானத்தை ஆதரித்த 30 நாடுகளும் இந்த அணியில் உள்ளவர்கள்.

மனித உரிமை அமைப்புகளும், அரசு சார்பற்ற நிறுவனங்களும் சிறீ லங்காவின் போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை குற்றங்களை விசாரிக்க சர்வதேச குழுவை ஏற்படுத்த வலியுறுத்தின. சிறீ லங்காவின் தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விடுவதற்கு முன்பு ஜெர்மனி தீர்மானத்தில் பல திருத்தங்களை முன்வைத்தது. ‘இறுதி கட்டத்தில் செய்யும் ஜெர்மனியின் திருத்தங்கள் சிறீ லங்காவின் தீர்மானத்தை முற்றாக மாற்றிவிடும் என்பதால் ஏற்கக்கூடாது’ என உடனடியாக கியூபா மறுப்பு தெரிவித்தது. வாக்கெடுப்பில் அந்த மறுப்பு ஏற்கப்பட்டது. அதற்கு பிறகு சிறீ லங்காவின் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் மேற்குலக நாடுகளும், அவற்றின் ஆதரவு நாடுகளும் தீர்மானத்தை எதிர்த்து வக்களித்தன சில நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. இறுதி நேரத்தில் ஜெர்மனி முன்வைத்த திருத்தங்களாவது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால் குறைந்தபட்சம் முகாம்களிலிருக்கும் வன்னி மக்களுக்கான உடனடி பிரச்சனைகளுக்கு தீர்வுகளை ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால் அவற்றை கியூபா வழியாக தடுத்ததில் இந்தியாவின் மறைமுக பங்கு அதிகமாக உள்ளது.

ஏற்கனவே, மனித உரிமை சபையில் நடக்கிற அரசியலை உணர்ந்து பரக் ஒபாமாவின் நிர்வாகம் அமெரிக்கா உறுப்பினராக இணையும் முடிவு எடுத்துள்ளது அதனடிப்படையில் பெல்ஜியம், நார்வே ஆகிய நாடுகளுடன் அமெரிக்காவுடன் மனித உரிமை சபையில் ஜூன் முதல் உறுப்பினர்களாக இடம்பெறும். மனித உரிமை சபையில் பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும் மனம் சளைக்காது வதை முகாம்களிலுள்ள வன்னி மக்களின் உரிமைக்காகவும், உடனடி தேவைகளுக்காகவும் தமிழ்மக்கள் போராடியாக வேண்டும். வன்னி மக்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மையமாக இருந்து பாதுகாத்தவர்கள். அனைத்தையும் அதற்காக இழந்தவர்கள். அவர்களை உடனடி தேவைகளுக்கான உதவிகளை தேடும் நிலைக்கு சிறீ லங்கா அரசு ஆளாக்கியிருக்கிறது. அந்த தேவைகளை நிறைவேற்றும் வேசத்தை எடுக்கவும், அதன்மூலம் தமிழர்களின் உரிமைக்கான குரலை அடக்கவும் சிறீலங்கா அரசு தயாராக இருக்கிறது. வன்னி மக்கள் மீது பல்முனை குண்டு தாக்குதல்களை சிறீ லங்கா அரசு நடத்தி, வன்னி மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்காமல் தடுத்து பேரவலத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மக்கள் குடியிருப்புகள், மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள், வழிபாட்டுத்தலங்கள் மீது குண்டுகள் வீசுவதை சர்வதேச மனித உரிமை சட்டங்களும், ஜெனிவா பிரகடனங்களும் குற்றமாக கருதுகின்றன. சிறீ லங்கா அரசுகள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வடக்கு, கிழக்கு மக்களுக்கு இந்த குற்றங்களை செய்திருக்கிறது. ஆயுதங்களில்லாமல், வெள்ளைக் கொடிகளுடன் ராணுவத்திடம் சரணடைந்த பா.நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட போராளி தலைவர்களை சர்வதேச போர் விதிமுறைகளை மீறி கொலைசெய்திருக்கிறது. மகிந்த ராஜபக்சே அரசின் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களையும், போர் குற்றங்களையும் சர்வதேச அளவில் விசாரணைக்கு உட்படுத்தும் கடமையும், பொறுப்பும் முன்னெப்போதும் இல்லாத அளவு புலம்பெயர் தமிழர்களுக்கு உள்ளது.

நீதிக்காகவும், விடுதலைக்காகவும் போராடும் எந்த போராட்டங்களும் எளிதானதாக இருந்ததில்லை. உதாரணமாக, 1994 ஏப்பிரல் முதல் ஜீலை வரையில் ருவாண்டாவில் ஹூட்டு இன மக்களுக்கும், டுட்சி இன மக்களுக்கும் நடந்த கலவரங்களில் சுமார் 8 லட்சம் முதல் 10 லட்சம் டுட்சி இன மக்கள் கொல்லப்பட்டனர். அப்படுகொலைகள் நடந்தபோது ருவாண்டாவிலிருந்த ஐ.நாவின் படையை விலக்க ஐ.நா பாதுகாப்புச்சபை தீர்மானம் எடுத்தது. அப்படுகொலைகளை விசாரிக்க ஐ.நா பாதுகாப்புசபை 1994ல் தீர்மானத்தை நிறைவேற்றியது. இதுவரையில் 21 விசாரணைகள் முடிந்து 29 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இன்னும் பல வழக்குகள் தொடர்கின்றன.

தமிழர்களின் நீதிக்கான போராட்டத்திலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. கடந்து மூன்று மாதங்களில் ஐ.நா பாதுகாப்புச் சபையில் இலங்கையின் தாக்குதல்கள் பற்றிய கருத்துப்பரிமாற்றங்கள் நடந்துள்ளன. பாதுகாப்புச் சபையில் அலுவலக ரீதியான விவாதங்கள் உருவாகாமல் நிரந்தர உறுப்பு நாடுகளான சீன, ரஸ்யா எதிர்த்தன. ஐ.நா பாதுகாப்புச் சபையில் விவாதிக்க மேற்குலக நாடுகளும் காத்திரமாக முயற்சிக்கவில்லை. தமிழர்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்கும் அரசியல் சக்திகளை, அமைப்புகளை, நாடுகளை அடையாளம் காணவும், உறவுகளை வளர்க்கவும் தேவையுள்ளது. தற்போது தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல் குற்றங்களை உலகம் பேசத் துவங்கியிருக்கிறது. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை சர்வதேச சட்டங்களுக்குட்பட்ட, சர்வதேச தரத்துடன் கூடிய சுயாதீனமான சர்வதேச விசாரணை தேவை என்பதை வலியுறுத்தினார். கூட்டம் முடிந்த பிறகும் வலியுறுத்தி வருகிறார். வன்னியில் தமிழர்கள் படுகொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்பு அலுவலகத்தின் பேச்சாளர் எலிசபத் பையர்ஸ் ‘அண்மைய மாதங்களாக இலங்கையில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உயர்வாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளார். தற்போது சிறீலங்காவின் தீர்மானம் நிறைவேறியதால் மனித உரிமை சபையில் முயற்சி எடுப்பதை நிறுத்தலாகாது.

தற்போது மேற்குலக நாடுகளின் அறிக்கைகளில் தமிழர்கள் பிரச்சனை பற்றிய அணுகுமுறை மாற்றத்தை காணமுடிகிறது. புலம்பெயர் தமிழர்கள் கடந்த ஆறு மாதங்களாக நடத்தும் போராட்டங்கள், அரசியல் முயற்சிகளின் பலனிது. அவை அரசியல் பலமாக செயலாக்கப்படவேண்டும். புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களின் அரசியல் முயற்சிகளையும், நீதிக்கான போராட்டங்களையும் நம்பிக்கையற்றதாக மாற்றி தனது மனித உரிமை குற்றங்களிலிருந்து தப்பிக்க பார்க்கிறது மகிந்த ராஜபக்சே அரசு. வன்னியில் நடந்த பேரவலமும், இழப்புகளும், அழிவுகளும் ஏற்படுத்துகிற கவலையும், வேதனையும் புலம்பெயர் தமிழர்களின் நேர்மையான நீதிக்கான செயல்பாடுகளையும், நம்பிக்கைகளையும் சிதைக்கக்கூடாது. வன்னியில் நடத்திய மனிதப் படுகொலைகளையும், போர் குற்றங்களையும் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்துவதற்கு ஐ.நா பாதுகாப்புச் சபையில் தீர்மானம் கொண்டுவர போராடும் கடமையும், பலமும், திறமையும் புலம்பெயர் வாழ் தமிழர்களுக்குண்டு. உலகின் வல்லரசுகள், பிராந்திய வல்லரசு, ஐ.நாவில் உறுப்பு நாடு என்ற அனைத்து பலத்தையும் வைத்து சிறீலங்கா சர்வதேச அரங்கில் எடுக்கிற அனைத்து நடவடிக்கைகளும் தமிழர்களின் சட்டப்பூர்வமான, அறப்போராட்டங்களால் எதிர்கொள்ள முடிந்தது பிரமிப்பிற்குரிய பலம். கவலைகளையும், வேதனைகளையும், கண்ணீரையும், வேறுபாடுகளையும், விமர்சனங்களையும் கழைந்து பலமிக்க மக்களாக நீதிக்காக ஒன்றுபட வேண்டும்.

மனித உரிமைகள் மற்றும் வன்னி மக்களுக்கான மனிதாபிமான கோரிக்கைகளை வைத்து சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நாவுக்கும் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களும், தமிழ்நாட்டு தமிழர்களும் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.

  • வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு அனைத்துலக மனிதாபிமான நிறுவனங்கள் கட்டுப்பாடற்ற வகையில் நேரடியாக உதவி செய்வதற்கு அனுமதி.
  • இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் தமது சொந்த வீடுகளுக்கு செல்ல அனுமதி.
  • மனித உரிமை மீறல் குற்றச் செயல்கள், போர்க்குற்றங்கள் மீது சுதந்திரமான சர்வதேச விசாரணைகள் நடத்தல்.
  • மனித உரிமை அமைப்புகளும், சர்வதேச ஊடகங்களும் தடையில்லாமல் தகவல்களை சேகரிக்க அனுமதி.
  • தமிழர் பகுதிகளில் ராணுவ ஆக்கிரமிப்பு மையங்களையும், சிங்கள குடியேற்றங்களையும் ஏற்படுத்தாது தடுத்தல்.
  • சுயாதீனமான சூழ்நிலையில் தமிழர்களின் விருப்பத்தை அறியாத அரசியல் தீர்வுகளையும் திணிக்காது இருத்தல்.
சடங்குகளையும், அழுகுரல்களையும் விடவும் நீதிக்கான செயல்களே வன்னியில் படுகொலை செய்யப்பட்ட அனைவருக்கும் செலுத்தும் அர்த்தமுள்ள வணக்கமாக இருக்க முடியும்.
_______________
4தமிழ்மீடியா இணையத் தளத்திற்காக எழுதப்பட்டது.
படம்: nicholsoncartoons