Wednesday, November 01, 2006

வறுமை! ஒரு ஆயுதமா?

இளமையில் வறுமை கொடியது!!! அனுபவித்திருக்கிறீர்களா? நான் அனுபவித்திருக்கிறேன்! உண்ண சரியாக உணவில்லாமல், உடுக்க மாற்று உடையில்லாமல் வாடுவது கொடுமையிலும் கொடுமை. துவைத்த உடையை காய வைத்து மாற்று உடை உடுக்க வசதியில்லாமல் காற்றில் சேலைத் தலைப்பை காயவைத்து மறுமுனையை கட்டியபடியே நின்ற பெண்ணின் வறுமையை பார்த்து காந்தியடிகள் எளிமையான உடைக்கு மாறியது வரலாறு.

இதே மாதிரியான நிலையில் எனது மாணவப் பருவத்தை கடந்திருக்கிறேன். மாற்று உடையில்லாமல் துவைத்த அரைக்கால் சட்டையை ஈரமாக அணிந்து உடலின் வெப்பத்தில் காய வைத்த வறிய காலம் அது. வசதியான வீட்டுப் பிள்ளைகள் சாப்பாடு பொட்டலம் கொண்டு வர, வறுமையில் வாடியவனுக்கு வயிறு நிரப்பியது கஞ்சித்தண்ணியும், சுட்ட வற்றல் மிளகாயும் நிரம்பிய தூக்குப்பாத்திரம். சகமாணவர்கள் உணவருந்த, எனது பாத்திரத்தை திறக்கும் வேளைகளில் ஒரு விதமான வெட்கத்தால் மனம் கூனிப்போகும். வறுமை கேவலமானதா? இல்லை ஏளனமாக பார்க்கிற சமுதாயம் கேவலமானதா? இந்த கேள்விகள் எழ அன்று வாய்ப்பில்லாமல் போனதால் படிப்பில் மட்டுமே கவனம் போனது. காலம் உருண்டோடி சமூகத்தின் சாளரங்கள் கண்ட ஒளிக்கீற்றில் என்னை நான் பார்த்த வேளைகளில் வறுமையை அனுபவித்தது ஒரு சுமையாக இல்லை. வறுமையின் அனுபவங்கள் என்னை பண்படுத்தியது. இந்த அனுபவங்கள் வறுமை பற்றிய கலந்துரையாடல்கள், அரங்க அமர்வுகளில் உறுதியாக பேசும் மனதை தந்தது. வளமை வந்து வாழ்க்கையை மாற்றினாலும் வறுமை பதித்த தடங்கள் சமூகப் பார்வைக்கான விலாசமளித்திருக்கிறது.

சமூக பாதுக்காப்பு (Social Protection) பற்றிய உலக அளவிலான ஒரு கூட்டத்தில் வறுமை, கல்வியின்மை, சுகாதாரம், குடிநீர், அடிப்படை வசாதிகள், மருத்துவ வசதி பற்றிய ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பித்தேன். அந்த அறிக்கையில் உலக வங்கியின் வறுமை ஒழிப்பு திட்டங்கள் (Poverty Eradication Strategy Paper - PRSP) மக்களின் வாழ்வில் மோசமான நிலையை உருவாக்கியதை சுட்டியிருந்தேன். வறுமையை ஒழிப்பதற்கு பதிலாக வறியவர்களை ஒழிப்பது என்பதை முடிவாக கொண்டிருக்கிறது இந்தியாவில் நிறைவேற்றப்பட்டு வருகிற பல திட்டங்கள். அவற்றில் ஒன்று பெரிய நகரங்களில் குடியிருக்கிற குப்பத்து மக்களை அப்புறப்படுத்தி நகரை அழகுபடுத்துவது. சுமார் 20 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டும், சுருக்கப்பட்டும் வருகிற அரசு மருத்துவமனைகள், மருத்துவ திட்டங்கள். மூடப்பட்ட பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்து நிலையங்களும் அதன் விளைவாக கொல்லப்பட்ட பல ஆயிரம் குழந்தைகள் என பட்டியல் நீளமானது. அந்த கூட்டத்தில் உலக வங்கி சார்பில் ஒரு இளம் அதிகாரி கலந்துகொண்டார். அவருடனான விவாதத்தில் பல உண்மை களநிலைகளை விளக்கி உலக வங்கியின் கொள்கை, திட்டங்களை கேள்வியெழுப்பிய போது அந்த அதிகாரி தனிப்பட்ட பதிலை மட்டும் வழங்கி சமாளித்தார். தேனீர் இடைவெளியில் அவர் சொன்ன வார்த்தை "தொடர்ந்து ஆய்வுகளை அரங்குகளிலும் உலக வங்கியின் பார்வைக்கும் கொண்டு செல்லுங்கள்".

இந்தியாவில் வறுமையொழிப்பு என்பதை கொள்கை அளவிலும் உரைகளாகவும் தொடர்ந்து மத்திய அரசு அறிவித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பட்டினிச்சாவுகள், கடன் தொல்லையால் தற்கொலை சாவு என எண்ணிக்கை பல ஆயிரக்கணக்கில் அதிகரித்திருக்கிறது. குடும்பம் குடும்பமாக தற்கொலை செய்வது என்பது வாடிக்கையான வேதனை நிகழ்வாக மாறியிருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி 8% வளரும் என கணிப்பிடுபவர்கள் யாருடைய பொருளாதாரம் வளர்கிறது என்று சொல்வதில்லை. கடந்த பாரதீய ஜனதா ஆட்சியின் போது ஆந்திராவின் ஹை டெக் முதல்வர் ஆட்சியின் போது அமெரிக்காவின் தனியார் நிறுவனங்களின் ஆலோசனைகளை கொண்டு "கார்ப்பரேட் பார்மிங்" என்ற முறையில் இஸ்ரேல் நாட்டு நிறுவனங்களுக்கு விவசாயம் செய்யும் அனுமதி வழங்கியது. அதன் விளைவாக விவசாயிகள் விதை முதல் உரம் வரை வெளிநாட்டு நிறுவனம் வழங்கியதை வாங்கி தங்களது நிலத்தை 99 வருட குத்தகைக்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கொடுத்து விவசாயம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். எதிர்பார்த்த வருமானம் கிடைக்காததால் நிலத்தையும் இழந்து, வீடு, கால்நடைகள் என அனைத்தையும் விற்று கடனை அடைக்க வேண்டிய நிலை. தாங்க முடியாத பொருளாதார சுமையால் சொந்த மண்ணை விட்டு அகதிகளாக பெங்களூர், சென்னை, மும்பை என குடும்பம் குடும்பமாக இடம் பெயர்ந்து கூலிவேலை செய்து பிழைக்கும் அவலத்தில் தள்ளப்பட்டனர். தொடர்ந்து வந்த இராஜசேகர ரெட்டியின் அரசும், இப்போதைய மத்திய அரசும் பட்டினிச்சாவு, விவசாயிகள் தற்கொலை பற்றிய பிரச்சனையில் தவிக்கிறது.

உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கை வறுமையை ஒழிக்குமோ இல்லையோ வறியவர்களை கூண்டோடு ஒழிக்கும். அதிகார வர்க்கமும், நடுத்தர வர்க்கத்தினரும் கொட்டி குவித்து செல்வம் சேர்க்க உலகமயமாக்கல் பொருளாதாரம் உதவுகிறது. அவர்களது வீட்டின் வெளிப்புறங்களில் எச்சிலுக்காக காத்திருக்கும் நாய்களோடு சண்டையிட்டு பசியாற ஒரு கூட்டம் மனிதர்கள் தள்ளப்படுகிறார்கள். இந்த மனிதர்களின் பார்வை நாய்களை விட்டு; அதிகாரத்தின் மீது திரும்பினால்? புரிந்துகொள்வார்களா சம்பந்தப்பட்ட திட்ட வரைவாளர்களும், பொருளாதார மேதைகளும்? வறியவர்கள் ஒன்று திரண்டால் சமூகத்தை திருப்ப வல்லமை கொண்ட ஒரு ஆயுதம் வறுமை!

14 பின்னூட்டங்கள்:

Sivabalan said...

திரு

மிக அருமையான பதிவு.

இளமையில் வருமை கடினமானது.


//உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கை வறுமையை ஒழிக்குமோ இல்லையோ வறியவர்களை கூண்டோடு ஒழிக்கும். //

இந்த வரிகள் சிந்திக்க வேண்டிய வரிகள்.

சிறில் அலெக்ஸ் said...

ரெம்ப நல்ல பதிவுங்க திரு. பகிர்ந்தமைக்கு நன்றி.

மாசிலா said...

உலக வங்கி வெள்ளையர்களால் வெள்ளையர்களுக்கு என உருவாக்கப்பட்டது. வெள்ளையர்கள் தங்களுக்கு தம் இனம் வாழ என்ன என்னவெல்லாம் தேவைப்படுகிறதோ அதை எங்கும் எப்படியும் யாரை வைத்தேனும் உற்பத்தி செய்து, சுரண்டி, ஏமாற்றி சாப்பிட போட்ட திட்டம்தான் இந்த உலக வங்கி என்னும் பித்தலாட்டம். தன் நலன் கருதாமல் காரியத்தில் ஒருகாலும் இறங்க மாட்டான் வெள்ளையன். அவன் செய்யும் ஒவ்வொரு காரியத்தின் பின்னால் கட்டாயம் ஒரு சுயநலம் இல்லாமல் இராது. குறுகிய காலத்தில் அவனுக்கு பலண் இல்லை என்றாலும், நீண்ட கால திட்டம் என்ற போக்கில் பார்த்தால் அதில் அவன் விஷமத்தனம் தெரியும். தன் சுய நலத்திற்கு பெற்ற தாயையே அடகு வைக்கக் கூட தயங்காதவன். அவன் ஏழ்மையை சொல்லி செய்யும் அத்தனை காரியங்களும் ஏமாற்று வேலைகளே. பதிவில் நீர் எழுதியதுபோல், உள் நாட்டு அரசின் துணையுடன் ஏழைகளை அழிக்கவே அவன் திட்டம்போட்டு செயல்படுகிறான். சேரிகள், கிராமங்கள் போன்றவைகளை அழித்து அங்கு பயிர் செய்வான், ஆலைகள், தொழிற்பேட்டைகள் கட்டுவான், அவன் நாட்டுக்கு நம் நாட்டிலேயே பள்ளிகள் கட்டுவான்...... இதெல்லாம் ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளுக்கு ஒரு கவலையே இல்லை. மாறாக இவைகளை தங்கள் சாதனைகளாக பறைசாற்றிக்கொள்வார்கள். உலகி வங்கி என்ற அகில உலக சுரண்டல் கம்பெனியிடம் பணத்தை வட்டிக்கு வாங்கிகொண்டு நாட்டை, அதன் வளங்களை கூர்போட்டு ஏலம்விடும் வித்தைதான் இந்த நூதன திட்டங்கள். எதிர் வரும் சந்ததிகளை கடனாளி ஆக்க பிறந்த கந்துவட்டி கும்பல்தான் இவ்வங்கி.
பெரியார் கடவுளைப்பற்றி என்ன சொன்னாறோ, அது அத்தனையும் இந்த உலக வங்கி எனும் பூதத்திற்கும் பொருந்தும்.
இப்போதே விழித்துக்கொள்வது சாலச்சிறந்தது. காலம் தாழ்ந்துவிடவில்லை. அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டிருக்கும் நமது அரசியல் புலிகளுக்கு இது விளங்கி இருக்குமா? அல்லது அவன் போடும் பிச்சையை வாங்கிக்கொண்டு நாட்டையே விற்று நம் எல்லோரையும் பழையபடி அடிமையாக்கிவிட்டு அழிந்துவிடுமா?

கலை said...

மிகவும் அருமையான பதிவு திரு.

Thangamani said...

நல்ல பதிவு திரு.

பூங்குழலி said...

அருமையான பதிவு....

Anonymous said...

Excellent.

Pavi.

துளசி கோபால் said...

வறுமை ரொம்பக் கொடியது.
இளமையில் வறுமை இன்னும் கொடியதுதான். ஆனால்...

முதுமையில் வறுமை ரொம்பவே கொடியதுங்க.

இளவயதுன்னா ஓடியாடி எப்படியாவது சமாளிக்க முடியும்.
வயது போன ஆட்கள் ????

திரு said...

கருத்துக்களுக்கு நன்றி சிவபாலன். ரொம்ப நாளா கேட்க நினைத்தது. அது எப்படி நீங்க எப்போதும் முதல் ஆளா என் பதிவில்? :)

திரு said...

//சிறில் அலெக்ஸ் said...
ரெம்ப நல்ல பதிவுங்க திரு. பகிர்ந்தமைக்கு நன்றி.//

நன்றி நண்பர் சிறில்

திரு said...

மாசிலா,

//உலகி வங்கி என்ற அகில உலக சுரண்டல் கம்பெனியிடம் பணத்தை வட்டிக்கு வாங்கிகொண்டு நாட்டை, அதன் வளங்களை கூர்போட்டு ஏலம்விடும் வித்தைதான் இந்த நூதன திட்டங்கள். எதிர் வரும் சந்ததிகளை கடனாளி ஆக்க பிறந்த கந்துவட்டி கும்பல்தான் இவ்வங்கி.........

காலம் தாழ்ந்துவிடவில்லை. அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டிருக்கும் நமது அரசியல் புலிகளுக்கு இது விளங்கி இருக்குமா? அல்லது அவன் போடும் பிச்சையை வாங்கிக்கொண்டு நாட்டையே விற்று நம் எல்லோரையும் பழையபடி அடிமையாக்கிவிட்டு அழிந்துவிடுமா?//

உண்மை வரிகள்.

திரு said...

கலை, தங்கமணி, பூங்குழலி வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

திரு said...

வருகைக்கு நன்றி பவி!

திரு said...

//துளசி கோபால் said...
வறுமை ரொம்பக் கொடியது.
இளமையில் வறுமை இன்னும் கொடியதுதான். ஆனால்...

முதுமையில் வறுமை ரொம்பவே கொடியதுங்க.//

உண்மை தான் துளசிக்கா. வறுமையில் உளலும் முதியவர்கள் எந்த ஆதரவும் இல்லாமல் இருப்பது வேதனை.

//இளவயதுன்னா ஓடியாடி எப்படியாவது சமாளிக்க முடியும்.
வயது போன ஆட்கள் ????//
எல்லோருக்கும் சமாளிக்கும் அளவு சுற்றியிருப்போரின் ஆதரவு கிடைக்கிறதா தெரியவில்லை. உடல் வலு, மன திடன் இளமையில் அதிகமாக இருப்பதால் எதிர்கொள்ளும் ஆற்றல் அதிகம் என கொள்ளலாம். எப்படியாயினும் வறுமை கொடியது!

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com