Saturday, December 30, 2006

ஈராக்: சுருக்கு கயிற்றில் உலக சமாதானம்

குளிர்படர்ந்த டிசம்பர் 30, 2006 அதிகாலை நேரம் பாக்தாத் நகரில் பரபரப்பான இராணுவ கெடுபிடிகள் நிறைந்த இடம். கடந்த சில நாட்களாகவே அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளும், ஈராக்கிய படையினருமாக ஏற்பாடு செய்து வைத்திருந்த பாதுகாப்பான ஒரு இடத்தில் முக்கிய நபர் ஒருவரின் வருகைக்காக காவலாளிகள், ஒளிப்பதிவு கருவிகள், தூக்குமேடை, தூக்கு கயிறு என அனைத்து ஏற்பாடுகளும் தயாரான நிலையில் இருந்தது.

*****
வாசிங்டன் நகரில் அமைந்துள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் ஜார்ஜ் புஸ் இன்னும் சில மணி நேரங்களில் ஈராக்கில் நடைபெற போகிற தூக்கிக்கொலை செய்யும் சட்டரீதியான நடவடிக்கை பற்றிய செய்தியை அறிந்த பின்னர் ஆழ்ந்த நித்திரைக்கு செல்கிறார். அமெரிக்க அதிபரின் உறக்கம் கலையும் வேளை அமெரிக்கா மட்டுமல்ல உலகமே ஒரு வித அமைதியில் விழித்திருக்கும்.

*****

மணித்துளிகள் கடந்து காலை நேரம் நெருங்கி வர துவங்குகிறது. ஈராக்கிய (முன்னாள்) அதிபர் சதாம் உசேன் பாதுகாப்பு படையினரின் கெடுபிடிகளுடன் அமைதியாக ஏற்பாடாக இருந்த அறையில் கையில் தனது புனித நூலான குரானுடன் நடந்து வருகிறார். தூக்குதண்டனைக்கான வழக்கமான நடவடிக்கைகள் துவங்குகிறது. சுற்றியிருக்கும் காவலாளிகள் அடையாளம் தெரியாமல் இருக்க தலை மூடப்பட்டிருக்கிறது. ஒளிப்பதிவு கருவிகள் இயங்க துவங்கிவிட்டது. சதாமுக்கு அணிவிக்க முகமூடி ஒன்றை காவலாளி எடுத்து நடக்க போவதை விவரிக்க துவங்க, முகமூடி அணிவதை நிதானமாக உறுதியுடன் மறுக்கிறார். கழுத்தை சுற்றி மட்டும் கருப்பு துணி கட்டப்படுகிற வேளையிலும், அதன் மீது சுருக்கு கயிற்றை வைத்து இறுக வைக்கும் நேரத்திலும் அதே நிதானத்துடன் அதிபருக்கான மிடுக்கான உடையில் சதாம். சிறிது நேரத்தில் எல்லாம் முடிந்தது.

கடைசிவரை தானே ஈராக்கிய அதிபர். ஈராக்கை சூழ்ந்துள்ள அமெரிக்க ஆக்கிரமிப்பு படைக்கு அதிகாரமில்லை என முழங்கிய சதாமின் குரல் சட்டத்தின் உள்ளே சுருக்கு கயிற்றில் அடக்கப்பட்டது.

*****

பேரானந்தம் கொள்ளுங்கள் இனி உலகில் அமைதி துவங்கிவிட்டது! உலகையே பேரழிவு பாதைக்கு கொண்டு செல்ல இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஸ்ஸால் அடையாளம் காட்டப்பட்ட சதாம் உசேனை தூக்கிலிட்டால் அமைதி வராமல் என்ன வரும்?

மனித குலத்தையே அழிக்க வல்லமை கொண்ட பேரழிவு ஆயுதங்களை சதாம் உசேன் வைத்திருப்பதாக கூறி ஈராக் மீது 2003 மார்ச். 20ல் அமெரிக்கா போர் தொடுத்தது. இந்த யுத்தத்தை ஜார்ஜ் புஸ், டோனி பிளேயர், ஜான் ஹவார்ட் வகையறாக்கள் துவங்கியதை அதிகாரம் இல்லாத ஐக்கிய நாடுகள் சபையும் பிற நாடுகளும் வேடிக்கை பார்த்தன. எந்தவித ஆதாரமும் இல்லாமல் அரசியல் பேச்சாளர்களை போல ஜார்ஜ் புஸ் அடுக்கடுக்காக சொன்ன பொய்களில் உலகமே மூழ்கியது. யுத்தம் துவங்கி சில மாதங்களிலேயே ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் எதுவுமில்லை. தவறான உளவுத் தகவல்களால் ஈராக் மீது தொடுக்கப்பட்டது இந்த ஆக்கிரமிப்பு யுத்தம் என்ற செய்தி வெளியானது. அதன் பின்னரும் தனது தவறை திருத்த அமெரிக்க அரசும் அதன் இராணுவ வல்லமையும் முன்வரவில்லை.

ஜார்ஜ் புஸ் தொடுத்த ஆக்கிரமிப்பு யுத்தத்தால் இதுவரை ஈராக்கில் சுமார் 6 லட்சம் மக்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

148 ஷியா இன மக்களை கொன்று குவித்த வழக்கில் சதாமிற்கு மரணதண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த மரணதண்டனையை "பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நீதி", "ஈராக்கியர்களது வாழ்வில் ஒரு மைல்கல்" என கொண்டாடுகிற மேற்கத்திய உலகம் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டது. ஒரு நாட்டை சீரழித்து சின்னா பின்னமாக்கி 6 லட்சம் மக்களை கொன்றவர்களுக்கு எப்போது தண்டனை? இந்த சர்வதேச கொலைக் குற்றவாளிகளை எந்த நீதிமன்றத்தில் விசாரிப்பது?

ஈராக்கை கைப்பற்றிய சில மாதங்களில் மரணதண்டனையை ஒழித்ததாக அறிவிப்பு செய்தது அமெரிக்கா. பாக்தாத் நகரை கைப்பற்றிய நாளில் சதாமின் சிலையை டாங்கிகளை வைத்து இழுத்து ஈராக்கிய மக்களை வைத்தே ஒரு நாடகத்தை அரங்கேற்றியது அமெரிக்கா. இந்த நிகழ்வு மூலம் அமெரிக்காவிடம் பிடிபட்டால் சதாமின் மரணம் தீர்மானிக்கப்பட்டு விட்டதை அனைவரும் கணித்தனர்.காட்டிக்கொடுத்தவன் உதவியால் பாதாள அறையில் பதுங்கி இருந்த சதாம் உசேனை 2003 டிச. 14 அன்று அமெரிக்கா பிடித்தது முதல் சதாமின் மரணம் பற்றிய சர்ச்சைகள் பலமாக எழுந்தது. தானே ரத்து செய்த மரணதண்டனையை தனது பொம்மை அரசாங்கம் வழியாக கொண்டுவந்து கோமாளித்தனமான நீதிமன்றத்தில் வெள்ளை மாளிகையின் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. ஈராக்கிய பொம்மை பிரதமர் மாலிக்கி கையெழுத்திட்டு அதற்கு தலையாட்டினார்.

இந்த நாடகத்தை அரங்கேற்றியதன் மூலம் சர்வதேச நீதிமன்றத்தையும் அதன் தேவைகளையும் கேலிக்குள்ளாக்கியிருக்கிறார்கள் ஜார்ஜ் புஸ், டோனி பிளேயர் வகையறாக்கள். பாரபட்சமில்லாத நீதி வழங்கவும், குற்றத்தின் உண்மை நிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வரவும் விடாது தடுத்து சதாம் உசேனோடு உண்மைகளும் புதைகுழிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. முறையான விசாரணை இல்லாத ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பினால் மரணதண்டனை கொடுக்கப் போகிறார்கள் என தெரிந்தும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஈராக்கிய அதிபர் சதாமை சில நாட்களுக்கு முன்னர் தான் ஈராக் பொம்மை அரசின் கையில் ஒப்படைத்தது. ஈராக்கியர்களை வைத்தே சட்டரீதியான கொலையை செய்து முடித்திருக்கிறது அமெரிக்க ஆதிக்கம்.

அமெரிக்க ஆதிக்கத்திற்கு தனஹு எதிரிகளை கொலை செய்வது ஒன்றும் புதியதல்ல! ஆப்கானின் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அதிபர் நஜிபுல்லாவை செப்டம்பர் 2, 1996ல் காபூல் நகர மின்சார கம்பத்தில் தலிபன்களை வைத்து தூக்கிலேற்றி கொன்றது. சிலி அதிபர் அலண்டேவை அவரது இராணுவத்தை வைத்து கொன்றது. குயூபா புரட்சியாளன் சேகுவேராவை உயிருடன் பிடித்த பின்னரும் துப்பாக்கியால் சுட்டு சி.ஐ.ஏ கொன்றது என அமெரிக்க வல்லாதிக்கதின் வரலாறு நீளமானது. தனது கட்டுப்பாட்டில் இயங்க மறுக்கிற நாடுகளின் தலைவர்களை கொன்ற வரலாற்றில் சதாமின் கொலை சட்டரீதியாக பதிவு செய்யப்பட்டு வளர்ந்த தொழில்நுட்ப உதவியால் ஒளிப்பதிவுடன் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. முறையான விசாரணை இல்லாத மரணதண்டனை வழி சதாமிற்கு வரலாற்றில் அழுத்தமான இடத்தை வழங்கியிருக்கிறது அமெரிக்கா. சதாம் கடைசி வரை அமெரிக்க வல்லாதிக்கத்தை எதிர்த்த வீரன் என்ற அளவுகோலில் உயர்ந்து நிற்கிறார்.

சதாமை ஒழித்தால் உலகம் அமைதியாகும் என்றது அமெரிக்கா. சதாம் கொல்லப்பட்ட ஈராக்கியர் வாழ்வில் தொடர்ந்து வரும் நாட்கள் சமாதானத்தை தருமா?

அமெரிக்காவின் அடுத்த குறி எந்த நாட்டின் தலைவர் மீது? காலம் பதில் சொல்லும்.

13 பின்னூட்டங்கள்:

லக்கிலுக் said...

அரக்கன் ஜார்ஜ்புஷ் ஒழிக!

த.அகிலன் said...

ம் மனதை நெருடும் சொற்களாலான ஒரு அரசியற்கட்டுரை திருஅண்ணா உலகம் எப்போது அதிகாரவர்க்கங்களிடம் கேள்வி கேட்கத்துவங்கும்

Jafar ali said...

அநியாயமான இந்த கொலையின் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் தன் அடிவருடி நாடுகளுக்கும், இன்னும் தனக்கு அடிவருட மறுக்கும் நாடுகளுக்கும் வல்லரசான என்னை எதிர்த்தால் என்ன ஆகும் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள் என்ற எச்சரிக்கையும் அதில் இருக்கிறது.

சல்மான் said...

நீதிமன்றம் பேரில் நிறைவேற்றப்பட்ட சதாமுடைய கொலை பற்றி இங்கு எழுதும் பலரும்
முஸ்லிம், இடதுசாரி, ஜன்ரஞ்சக, ஏழை, ஈழ, உட்பட மிகிதமானோர்
அவருடைய குற்றங்கள் பற்றி மாற்றுக் கருத்துக் கொள்ளவில்லை.

தனிநிலை பாதுகாக்கப்பட்ட, ஏகாதிபத்திய பின்புலன் இல்லாத, இறையான்மை கொள்கைகளை தாங்கிகளாக கொண்டியங்கும் மன்றத்தால் விசாரிக்கப்பட்டு
தகுந்த தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதே மனிதர்கள் மீது சார்பில்லாத நல்லெண்ணம் கொண்டோர்களின் விருப்பம்.

எழுப்படும் கேள்வி என்னவென்றால், இந்த 'விருப்பத்தை' ஒரு noble appeal ஐ
தன்னுடைய தனிப்பெரும் சுயநலத்துக்காக - ஒரு ஏகாதிபத்திய சக்தி - சர்வதேச பிரச்சினைகளில் சுயநல அடிப்படையில் பலநிலைப்பாடுகள் கொண்ட சுயநலதேச சக்தி - பகடைக்காயாக பயன்படுத்தி,
தன்னுடைய கோரமுகத்தை இதன் பின்னால் ஒளித்துக்கொண்டு வன்முறை அடக்குமுறை கொள்ளை ஆணவம் போன்ற கொள்கைகளை சத்தமில்லாமல் பரப்புகிறதே...
இதனை அனுமதிக்கலாமா? என்பதே.

இந்த நிகழ்வில் தமிழ்மணம் ஊடாக மேலும் எழும் கேள்விகள்:

1. இதே ஏகாதிபத்திய சக்தி, கொடூர கொலை கற்பழிப்புகளை நடத்தியதன் காரணம் காட்டி, இனப்படுகொலைகாரன் நரேந்திரமோடிக்கு நுழைவு மறுத்த போது - இன்று சதாம் கொல்லப்பட்டதை நரகாசுரன் வதமாக மறுஒலிபரப்பும் 'ஒரு வர்க்கம்', அன்றைக்கு, சார்பு ஊடகங்கள் மூலம், இந்தியா அவமானப்படுத்தப்பட்டதாக பிரச்சாரம் செய்தார்கள்.
இதுதான் பேச நா இரண்டுடையார் போற்றி என்பதா?

2. எத்தனையோ செய்திகள் மூலம், உலகின் பல்வேறு கொடூரங்களுக்கு மூலகுசும்பன் 'பெரியரக்கன்' (காட் ப்லெஸ் பெரியரக்கன்) என காண்பித்தும், - இன்று சதாம் கொல்லப்பட்டதை நரகாசுரன் வதமாக மறுஒலிபரப்பும் 'ஒரு வர்க்கம்', அதை பற்றி பகல் நோன்பு வைத்திருக்கிறார்கள். ஒருவேளை 'உயிர்களை கொல்வது பாவம் - அவை சிறியளவில் இருக்கும் வரை' என்ற புதுக் கருத்தை தாங்கள் நம்பும் இறைக் கொள்கைகள் புதிதாக சுவீரகரித்து கொண்டதாலா?

3. கார்டூன் மூலம் குசும்பு செய்து பின் எழுந்த ஆர்ப்பாட்ட நிலைக்கு ஆத்திரச் சாயம் பூசிய - நாகரீகமிக்க அடுத்தவர் நாகரீகம் மதிக்கும், அப்பாவியுமான 'உலக சமாதான தூதுவன்' (பொதுவாக, இவர் புகுந்த இடம் உருப்படாது) - ஈராக்கிய மக்கள் 'தியாகத் திருநாளில்' எழும்போது அதை 'வன்முறைத் திருநாளாக' வாழ்நாலெல்லாம் நினைக்கும்படி ஒரு ஏற்பாட்டை கார்டூன் கணக்காக செய்திருக்கிறது.
இன்று சதாம் கொல்லப்பட்டதை நரகாசுரன் வதமாக மறுஒலிபரப்பும் 'ஒரு வர்க்கம்', இதையும் கார்டுனிற்கு பல்லை காமிப்பதுதான் நாகரீகம் என்று அன்று பாடம் சொன்னது போல, இன்று இந்த சம்பவத்தை 'வந்து எங்களை காத்தாய் வடிவேலா!!' என இருகரம் சேவித்துக் கொண்டாடவேண்டுமென பாடம் சொல்வது ஏன்?

ஒருவேளை, மனிதர்கள் மீது சார்பில்லாத நல்லெண்ணம் என்பது பேசும் விஷயத்தை பொருத்ததா?

சல்மான்

this will show up in other related posts too.

சத்தியா said...

"148 ஷியா இன மக்களை கொன்று குவித்த வழக்கில் சதாமிற்கு மரணதண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

ஒரு நாட்டை சீரழித்து சின்னா பின்னமாக்கி 6 லட்சம் மக்களை கொன்றவர்களுக்கு எப்போது தண்டனை? இந்த சர்வதேச கொலைக் குற்றவாளிகளை எந்த நீதிமன்றத்தில் விசாரிப்பது?"...

இதையேதான் நானும் கேட்கின்றேன்.

Anonymous said...

அமெரிக்க ஆதிக்கத்திற்கு தனஹு எதிரிகளை கொலை செய்வது ஒன்றும் புதியதல்ல! ஆப்கானின் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அதிபர் நஜிபுல்லாவை செப்டம்பர் 2, 1996ல் காபூல் நகர மின்சார கம்பத்தில் தலிபன்களை வைத்து தூக்கிலேற்றி கொன்றது.

1,How many Muslim bloggers oppose
Talibans?. Many support Taliban
and justify its actions.
2,Now they raise a hue and cry
when Saddam is hanged.They are
hypocrites.They will ally with
US to dislodge any left government
in the world.
3,Both US and islamic fundamentalism are equally
dangerous.
4,Yet the stupid left is supporting
Islamic fundamentalism and admirers
of Talibans (e.g.TMMK,Madani).

Are you going to be part of the
stupid left and psedu-secularists
who keep mum about genocide in
Sudan but shed tears for Saddams
and Afzals.

கலை said...

//ஒரு நாட்டை சீரழித்து சின்னா பின்னமாக்கி 6 லட்சம் மக்களை கொன்றவர்களுக்கு எப்போது தண்டனை? இந்த சர்வதேச கொலைக் குற்றவாளிகளை எந்த நீதிமன்றத்தில் விசாரிப்பது?"...//
இந்தக் கேள்வி அமெரிக்க மக்களுக்கு வருமா????

Anonymous said...

Migavum arpudhamaana katturai..
irudhiyil kettapattula kelviyin badhil.. IRAN. Ahmedijinad..

thiru said...

நன்றி லக்கிலுக், அகிலன், ஜாபர் அலி, சல்மான், சத்தியா, கலை.

சதாம் உசேனின் கொடுங்கோன்மையை தண்டிக்க அமெரிக்கா என்கிற வல்லாதிக்க நாட்டின் அதிபருக்கு என்ன தகுதி இருக்கிறது? அமெரிக்கா கொன்று குவித்திருக்கிற 6 லட்சம் ஈராக்கிய மக்களுக்கு நீதி எப்போது என்பது தான் இந்த பதிவின் அடிப்படை கேள்வி. அதை திசைதிருப்பும் விதமாக அமைகிற சில பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்பட்டுள்ளன.

thiru said...

//Anonymous said...
அமெரிக்க ஆதிக்கத்திற்கு தனஹு எதிரிகளை கொலை செய்வது ஒன்றும் புதியதல்ல! ஆப்கானின் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அதிபர் நஜிபுல்லாவை செப்டம்பர் 2, 1996ல் காபூல் நகர மின்சார கம்பத்தில் தலிபன்களை வைத்து தூக்கிலேற்றி கொன்றது.

1,How many Muslim bloggers oppose
Talibans?. Many support Taliban
and justify its actions.
2,Now they raise a hue and cry
when Saddam is hanged.They are
hypocrites.They will ally with
US to dislodge any left government
in the world.//

அனானி நீங்கள் இஸ்லாமிய வலைப்பதிவாளர்களை எதற்காக இங்கு இழுக்கிறீர்கள்? அமெரிக்க அராஜகத்தை அதனால் ஆதரிக்கவேண்டும் என்கிறீர்களா? மற்றபடி இடதுசாரி அரசுகளை கவிழ்ப்பது பற்றிய உங்களது கடைசி வரிகள் சிரிப்பை தான் தருகிறது.

//3,Both US and islamic fundamentalism are equally
dangerous.//
அமெரிக்க வல்லதிக்கமே ஆபத்தானது, அமெரிக்கா என்கிற நாட்டில் வாழும் மக்களல்ல. இஸ்லாமிய அடிப்படைவாதம் மட்டுமல்ல, இந்துத்துவ அடிப்படைவாதம் உட்பட எல்லா அடிப்படைவாதங்களுக்கும் இது பொருந்தும்.

//4,Yet the stupid left is supporting
Islamic fundamentalism and admirers
of Talibans (e.g.TMMK,Madani).//

உங்களது வெற்றுக் கூச்சலுக்கு என்ன ஆதாரத்துடன் பேசுகிறீர்கள்? சிறுபான்மை மக்களின் உரிமையும், மத அடிப்படைவாதமும் ஒன்றா?

//Are you going to be part of the
stupid left and psedu-secularists
who keep mum about genocide in
Sudan but shed tears for Saddams
and Afzals//

நீங்கள் அத்வானி என்கிற இந்துத்துவாத குழப்பவாதியின் ஆதரவாளரா என கேட்க எனக்கு எவ்வளவு நேரமாகும்? இன்று போய் வாருங்கள்! :)

தருமி said...

நம் பதிவர்கள் பதிவின் அடக்கத்தைப் பற்றி மட்டும் பேசினால் எவ்வளவு நன்றாயிருக்கும்? இப்பதிவில் அத்வானியும் வரத் தேவையில்லை; அப்சலும் வரத் தேவையில்லை. கார்ட்டூன் விவகாரத்திற்கும், நரேந்திர மோடிக்கும் இப்பதிவில் என்ன வேலை என்றும் தெரியவில்லை.

thiru said...

தருமி அய்யா,

சரியான கருத்து. என்ன செய்வது சிலருக்கு எல்லையை கடந்து பின்னூட்டமிடுவதே வாடிக்கை. அவர்களுக்கு இப்படியான பதில்கள் சொல்லவேண்டிய நிலை. இனி தவிர்க்க முயல்கிறேன்

╬அதி. அழகு╬ said...

நடுநிலையான பதிவு; பாராட்டுகள்.

எனக்கு நெடுநாளாக ஓர் ஐயம்.

இராக்கில் வாழும் ஷியா-ஸுன்னீ முஸ்லிம்கள் தமக்குத் தாமே அடித்துக் கொண்டு செத்துப் போவதற்கு வெடி மருந்து சப்ளை எங்கிருந்து கிடைக்கிறது?

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com