Wednesday, May 03, 2006

வாக்காள பெருமக்களே!

வணக்கத்திற்குரிய வாக்காள பெருமக்களே! பெரியோர்களே! தாய்மார்களே! இளைஞர்களே,

தமிழகத்தின் வீதிகளில் தேர்தல் திருவிழாவின் போது கீறிய கிராமபோன் போல கேட்கிற மேற்காணும் குரல்களில் மயங்கி அடையாளம் இழந்த என் உறவுகளுக்கு வணக்கம். கடந்த பல தேர்தலின் போது கேட்ட, படித்த தேர்தல் பரப்புரைகளின் வாசம் இன்னும் மனதில் பதிந்து கிடக்கிறது. பல தேர்தலில் சொந்த பணத்தை செலவிட்டு நல்லாட்சி வராதா என்ற ஆசையில் பணியாற்றிய அனுபவம் உள்ளவன் அடியேன். தமிழக, இந்திய மற்றும் உலக அரசியலின் போக்கை கண்டு மனம் வெதும்பும் பல்லாயிரக்கணக்கானவர்களில் ஒருவன் என்ற முறையில் உங்கள் சிந்தனைக்கு இந்த அவசர கடிதம்.

வேட்பாளர் உங்கள் சாதியா? உங்களது மதத்தை சார்ந்தவரா? பிடித்தமான தலைவரின்/தலைவியின் தொண்டனா? என பார்த்து வாக்களித்து பாழ்பட்டது போதும். கடந்த கால அரசியல் வரலாற்றில் சினிமா மோகத்திலும், தனிநபர் துதிபாடலிலும் நாம் முழ்கியதன் விழைவு இன்று இரு பெரும் கட்சிகளுக்கிடையில் மாநில வளர்ச்சி தொலைநோக்கு இல்லாமல் செத்துக்கிடக்கிறது. இரு பெரும் குடும்பங்கள் தேர்தலையும் மாநில அரசியலையும் தங்களுக்கிடையேயான மூலதனத்தின் தகராறாக பார்க்கிறது. திரு.கருணாநிதி-மாறன் குடும்பத்தினர், செல்வி.ஜெயலலிதா-சசிகலா நடராஜன் குடும்பத்தினரின் தொழிற்போட்டியாக இன்று அரசியல் அரங்கு சுழல்வது வேதனையானது. இந்த போட்டியில் தாழ்த்தப்பட்ட மக்களை அடிமையாக்குகிற பலம் பொருந்திய சாதி சமுதாயங்கள்; தங்களது அதிகாரபலத்தை பல வடிவங்களில் உறுதியாக்கி வருகிறது. இந்த நிலை தொடர்வது தமிழகத்தின் சமூக, பண்பாட்டு வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது. காட்டுமிராண்டி வாழ்க்கையிலிருந்து ஒன்றுபட்ட சமுதாயம் மீண்டும் நவீன காட்டுமிராண்டிகளாக ஒருவரை ஒருவர் எதிர்த்து நிற்பதா அழகு?

உங்கள் சிந்தனைக்கு நமது உயர்ந்து நிற்கும் தலைவர்களிடமிருந்து சில பண்புகளை வைக்கிறேன். இதை உரைகல்லாக வைத்து தலைவர்களின், வேட்பாளர்களின் தரத்தை உரசிப் பார்த்து வாக்களியுங்கள்.

மாடுமேய்க்கவும், காடுகழனியிலும் சட்டயில்லாமல் அலைந்து திரிந்த பல லட்சம் சிறார்களை அதிகம் படிக்காத ஒரு மனிதர் பார்க்கிறார். உருவத்தில் அழகானவர் இல்லை அவர். மனதில், குணத்தில் அழகான அந்த மாமனிதர் பள்ளிக்கூடங்களை கிராமங்கள் தோறும் அரசு செலவில் திறந்தார். குழந்தைகளை பள்ளிக்கு வர வைக்கவும், அவர்கள் ஒரு வேளை உணவாவது சாப்பிட்டு நல்ல உடல் மன வலிவுடன் திகழ மதிய உணவு திட்டத்தை பள்ளிக்கூடங்களில் கொண்டுவந்தார். பூங்காக்கள், விளையாட்டு அரங்கங்கள் அமைத்தார். தமிழகத்தின் குறிப்பிடத்தக்க நீர்த்தேக்கங்களை கட்டி கால்வாய்களை அமைத்து விவசாயம் பெருக்கி வேலைவாய்ப்பை உருவாக்கிய நவீன கரிகாலன் அந்த கருப்பு மனிதர். அவர் தந்த தொழிற்சாலைகள் நமது வாழ்வாதாரமாக இன்றும் உயர்ந்து நிற்கிறது. அவர் தான் எளிமையே வாழ்வாக கொண்ட காமராஜர். திருமணம் செய்யாமலே வாழ்வை மக்களுக்கு அளித்த அந்த மேதை அரசு பணத்தையோ, அதிகாரத்தையோ தனக்காக அல்லது குடும்பத்தினருக்காக செலவிட்டவரில்லை. இன்றைய நமது தலைவிகள்/தலைவர்கள்?

திசயிக்கும் அறிவு கொண்ட அந்த மனிதர், எளிமைக்கு ஒரு நல்ல உதாரணம். மாற்று கொள்கை கொண்ட பெரியாரின் அன்பு நண்பர். கடவுள் மறுப்பு கொண்ட பெரியாருக்கு திருநீறு கொடுக்கும் அளவு இருவருக்குள் நட்பை வளர்த்தவர். அவரது கொள்கைகள் சில எதிரானது என்றாலும் தமிழக வரலாற்றில் சிறந்த பண்பாளர்களில் ஒருவர். ஆம், காந்தியின் உறவான இராஜாஜி.

ருவத்தில் குள்ளம், சிந்தனையில் உயர்வு. பேச்சில் எழுச்சி, முகம் முழுதும் மலர்ச்சி. தமிழர்களின் கலாச்சார பண்பாட்டு அடையாளங்களை தேடி தந்தவர். 2 ஆண்டுகள் முதல்வராக இருந்த வேளை நாளெல்லாம் நாட்டிற்காக செலவிட்டவர். உழைப்பு ஓயாத உழைப்பு அதன் விளைவாக அவர் தீட்டிய திட்டங்கள் தான் இன்று பல சமூக நல திட்டங்களாகி பலன் பெறுகிறோம். முதியோர், விதவைகள், பெண்கள் நல திட்டங்கள் அவரின் கருத்தாக்கத்தில் உதித்தவை. அவர் கனவு கண்ட பல திட்டங்கள் இன்னும் நாம் நடைமுறைப்படுத்தவில்லை. அவரது கனவு இன்றைய அரசியல் சண்டைகளும், விதண்டாவாதங்களுமல்ல, கொள்கை வழி அரசியல் நடத்தினாலும் பண்பாக எதிர்கட்சியினரை நடத்த தெரிந்தவர். மாற்றுக் கருத்தாளர்களையும் மதித்த அந்த மாமனிதர் அறிஞர்.அண்ணா.

மேற்கண்ட தலைவர்கள் கண்ணியமான அரசியல் நடத்தியவர்கள். மக்கள் பணத்தில் பதவி சுகத்தை அனுபவித்தவர்களல்ல. எதிர்கட்சியினரையும் பக்குவமாக மரியாதையுடன் நடத்தியவர்கள். இந்த அரசியல் வரலாறு தமிழகத்திற்கு இன்று அவசர தேவை. காழ்ப்புணர்ச்சியும், பகைமையும், பழித்தலும், தூற்றுதலும் நிறைந்த நமது அரசியல் அரங்கை சுத்தம் செய்ய தேர்தல் ஒரு அரிய வாய்ப்பு.

நமது இன்றைய வேட்பாளர்களும் தலைவர்களுக்கும் கண்ணியமான முறையில் அரசியல் நடத்த தெரிகிறதா என்பதை தெரிந்து கொண்டு அவர்களை தேர்ந்தெடுப்பது நமது அரசியல் கடமை. வாக்களிக்க செல்லும் முன்னர் வருகிற இந்த நாட்களில் அவசரமாக, அவசியமாக தமிழக வாக்காளர்களுக்கான அரிய நேரம் காத்திருக்கிறது. உங்களது சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் முன்னர் சில கேள்விகளை வேட்பாளர்களிடமும் அவர்களது கட்சியினரிடமும் கேளுங்கள்.

மக்கள் பணியும், திட்டங்களும் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அவற்றில் முறைகேடுகள், ஊழல் நடந்துள்ளனவா? உங்கள் தொகுதியின் உறுப்பினரை கடந்த 5 ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுத்ததால் அரசு மற்றும் பொதுமக்களின் உடமைகளுக்கு சேதாரம் ஏற்பட்டிருக்கிறதா? மனிதனை மனிதனாக மதிக்கும் பக்குவம் மிக்கவராக அவரும் அவரது கட்சியினரும் நடந்து கொண்டார்களா? தவறுகள் நடந்திருந்தால் கட்சியினரும் தலைமையும் அதை எப்படி கையாண்டார்கள் என தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் தொகுதியின் வேட்பாளர் மற்றும் அவரது கட்சியினர்:

கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், மருத்துவம், சாலைகளை மேம்படுத்தல், மின்சார இணைப்புகள் வழங்க கவனம் செலுத்தல், விளையாட்டு அரங்கங்கள் மற்றும் பூங்காக்கள் அமைத்தல், சமய மற்றும் சமூகங்களிடையே நல்லிணக்கம், காடுகள் மற்றும் இயற்கையை பேணல், நீர்நிலைகளையும் அதன் ஆதாரங்களையும் பாதுகாத்தல் போன்ற சமூக நலன் கொண்ட திட்டங்களுக்காக பாடுபட்டக் கூடியவரா?

இயற்கை பேரழிவுகள் நடந்த வேளை மக்களோடு இணைந்து பணியாற்றி பொதுவான, நேர்மையான தலைவராக நடந்து கொள்பவரா?

பெண்கள், சிறார், முதியோர், உடல்நலன் பாதிக்கப்பட்டோர் நலனுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த சட்டமன்றத்திலும், வெளியேயும் பாடுபடுபவரா?

வேட்பாளர் சார்ந்துள்ள கட்சியின் தேர்தல் அறிக்கை, வாக்குறுதிகள் மேற்காணுகிற துறைகளில் கவனம் செலுத்துகிறதா? ஆளும் கட்சியெனில் கடந்த முறை தேர்தல் அறிக்கையில் சொன்னவற்றை நிறைவேற்றியவர்களா? இல்லை எதிர்கட்சி என்றால் அதற்காக குரல் கொடுத்து வாதாடியவர்களா? தலைமை பிறரை மதித்து பண்புடன் நடத்தக்கூடியதா? என அலசி ஆராயுங்கள்.

இந்த தேர்தலில் திட்டங்களை அடிப்படையாக கொண்டு அரசு நடத்த தலைவர்களை தேர்ந்தெடுப்போம். தேர்ந்தெடுக்கப்படுகிற சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் கடமை தவறாமல் செயல்பட வைப்போம். இதற்காக தேர்தலில் வாக்களிக்கும் முன்னரே கேள்விகளை கேட்க பழகுவோம்! கேள்வியிலிருந்து விடையும், விடியலும் பிறக்கும்.

இலவசங்களிலும், தேர்தல் விளம்பர மோகத்திலும், நடிகர் நடிகைகளின் கவர்ச்சியிலும் மயங்கி வருகிற 5 ஆண்டுகளின் அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதார வாழ்வை தொலைக்காமல் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுப்போம். சட்டமன்றத்திலும், வெளியேயும் நேர்மையாக மக்களுக்காக உழைப்பவர்களை தேர்ந்தெடுப்போம். தலைமைக்கு துதிபாடி கரவொலி எழுப்ப மட்டுமே சட்டமன்றத்துக்கு உறுப்பினர்களை அனுப்பியதை நிறுத்துவோம். சட்டமன்றம் கட்சிக் கூடாரமல்ல, அது தமிழக மக்களின் வாழ்வை கட்டியெழுப்ப திட்டங்கள் தீட்டவேண்டிய கருத்துப் பட்டறை.

செய்வீர்களா? தமிழகம் விழிப்புறுமா?

உங்களில் ஒருவன்,

திரு

9 பின்னூட்டங்கள்:

VSK said...

நல்லவர்கள் வந்து நல்லாட்சி தரவேண்டும் என்ற உங்களின் தணியாத தாகமும், நேர்மையும் இந்தப் பதிவில் புலனாகிறது.

தமிழகம் இன்னும் இரு வார காலத்தில் விழிப்புற்று தனிநடை பொடவேண்டும் என உங்களோடு சேர்ந்து நானும் வேண்டுகிறேன்.

Pot"tea" kadai said...

மிக நன்று!

//சட்டமன்றம் கட்சிக் கூடாரமல்ல, அது தமிழக மக்களின் வாழ்வை கட்டியெழுப்ப திட்டங்கள் தீட்டவேண்டிய கருத்துப் பட்டறை.//

சத்தியமான வார்த்தைகள.

வல்லிசிம்ஹன் said...

செய்யலாம் திரு. ஆராய்ந்து வொட் போடலாம். எல்லாம் உள்ளங்கலிலும் இது பதியும்படி எடுத்துரைக்கலாம்.
கால மகள் கண் திறக்கட்டும்.மனு

Anonymous said...

அன்புள்ள திரு,
வெறும் பொழுது போக்குக்காக இல்லாமல் சக வாக்காளர்களுக்கு சாட்டையால் அடித்து பாடம் சொல்லும் எழுத்துக்கள். மனம் திறந்து பாராட்டுகிறேன். உங்களின் ஒவ்வொரு பதிவின் மூலமும், மனதில் நல்ல அரசியல்வாதியை எப்படியாவது மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற ஆசை காட்டருவியாக புரண்டு ஓடுவது தெரிகிறது. நல்லவர்கள் யாரும் அரசியலுக்கு வருவதில்லையே திரு ..... என்றாவது கேப்டன் போன்றவர்கள் வந்தாலும் நம்புவதற்கு மனம் பயப்படுகிறது.....

thiru said...

// SK said...
நல்லவர்கள் வந்து நல்லாட்சி தரவேண்டும் என்ற உங்களின் தணியாத தாகமும், நேர்மையும் இந்தப் பதிவில் புலனாகிறது.

தமிழகம் இன்னும் இரு வார காலத்தில் விழிப்புற்று தனிநடை பொடவேண்டும் என உங்களோடு சேர்ந்து நானும் வேண்டுகிறேன்.//

நன்றி SK! நல்லாட்சி அமையட்டும் நமது வாழ்வில் அமைதியும் இன்பமும் சிறக்கட்டும். இது தான் தமிழக மக்கள் ஒவ்வொருவரின் மனதின் ஏக்கம்.

thiru said...

நன்றி பொட்டிக்கடை.

thiru said...

//manu said...
செய்யலாம் திரு. ஆராய்ந்து வொட் போடலாம். எல்லாம் உள்ளங்கலிலும் இது பதியும்படி எடுத்துரைக்கலாம்.
கால மகள் கண் திறக்கட்டும்.மனு//

நம்பிக்கையாய் பேசுகிறீர்கள் மனு. மக்கள் மனதில் நல்ல எண்ணங்களை, உயந்த கருத்துக்களை விதைப்போம். "இனி ஒரு விதி செய்வோம் அதை எந்நாளும் காப்போம்".

thiru said...

//chithi said...
அன்புள்ள திரு,
வெறும் பொழுது போக்குக்காக இல்லாமல் சக வாக்காளர்களுக்கு சாட்டையால் அடித்து பாடம் சொல்லும் எழுத்துக்கள். மனம் திறந்து பாராட்டுகிறேன். உங்களின் ஒவ்வொரு பதிவின் மூலமும், மனதில் நல்ல அரசியல்வாதியை எப்படியாவது மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற ஆசை காட்டருவியாக புரண்டு ஓடுவது தெரிகிறது. நல்லவர்கள் யாரும் அரசியலுக்கு வருவதில்லையே திரு ..... என்றாவது கேப்டன் போன்றவர்கள் வந்தாலும் நம்புவதற்கு மனம் பயப்படுகிறது.....//

சித்தி, நல்ல அரசியல்வாதிகள் உருவாக வேண்டும் என்ற தணியாத தாகம் எனக்கும் உண்டு. நல்ல அரசியல் தலைவர்களை உருவாக்கும் சமூககடமை நமக்கு உண்டு என நம்புகிறேன். காப்டன் பற்றி நோ கமெண்ட்ஸ். வெள்ளித்திரையில் தலைவர்கள் தேடும் நிலையிலிருந்து தமிழக அரசியல் மாற வேண்டும். மக்கள் பணி மையமாதல் காலத்தின் அவசியம் என்பது என் எண்ணம்.

கப்பி | Kappi said...

திரு,
நல்லவர்கள் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடம் இருந்தாலும் அவர்களிலும் ஜாதியைப் பார்த்து ஓட்டு போடுபவர்கள் இருக்கிறார்கள்...

ஜாதிக்காக ஓட்டு போடுபவர்கள் தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்கிறார்கள் என்றே கூற வேண்டும்...மற்ற வாக்காளர்களை விட இவர்களுக்கு ஏமாற்றப்படுவோம் என்ற விழிப்புண்ர்வும் குறைவாகத்தான் இருக்கிறது...

ஏற்கனவே '49ஓ' குறித்த என் பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்தபடி...நாம் போடும் வோட்டால் நம் தொகுதியில் போட்டியிட்ட ஒரு நல்லவர் (relative term தான்) ஜெயிக்க முடியாவிட்டாலும் அவருக்கு டெபாசிட்டாவது திரும்ப கிடைக்கட்டும்!!!!

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com