Wednesday, September 15, 2004

குழந்தைகளுக்கான உலகை உருவாக்குவோம்!

சிலருக்கு சுகங்களையும், பலருக்கு வேதனையையும் அள்ளி தெளிக்கிற வாழ்க்கை கோலம் புதிரானது. மழலைகளை நினைக்கையில் அழகு வண்ண சிறகடிக்கும் பட்டாம்பூச்சியின் நினைவு வருவதும், இறக்கையில்லா தேவதைகளை காணும் சுகமும் தனே வருகிறது. நம்மால் சோகமான முகத்துடனிருக்கும் தேவதையை நினைத்து பார்க்க முடிகிறதா?

வாழ்வில் மனதை உருக்கும் காலங்கள் சிலவேளைகள் மட்டும் வரும். எனக்கும் அப்படி வந்தது ஒரு பொழுது 2002 டிசம்பரில். அது எனது தமிழீழ பயண வேளை. குழந்தைகள் காப்பகம் சென்ற நேரம். யுத்தத்தின் கொடிய வலியையும் இழப்பையும் தாங்கி "குருகுலம்" என்ற அந்த காப்பகத்தில் மட்டும் 100 க்கும் அதிகமான குழந்தைகள் இருந்தனர். ஒவ்வொரு குழந்தையிடமும் ஒரு சோக பின்னணி இருந்தது. அம்மா, அப்பா, அக்கா, அண்ணா என எல்லா உறவுகளையும் யுத்த்தில் தொலைத்தவர்கள். வாழ்வில் இடி இடியாக துன்பங்கள் தொடர்ந்து வந்ததால் யாருமற்றவர்களாக ஆக்கப்பபட்டவர்கள்.

அவர்களது குடும்பம் "குருகுலம்" என்ற குழந்தைகள் இல்லம். நாங்கள் சென்றபோது எங்களை மாமா, அத்தை என உறவு சொல்லி சுற்றி வந்து அவர்களது இடங்களை ஆசையோடு காட்டினார்கள். அவர்களோடு அங்கேயே வாழ நான் துடித்த துடிப்பு சொல்லமுடியாதது. அவர்களில் மிகவும் சின்னவர்கள் கூட எங்களுக்கு மழலை மொழியில் விளக்கியது நெஞ்சை தொட்டது. அவர்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கும் திறமைகளை நேரடியாக காணமுடிந்தது. பல மேடைகளில் பேசிய அனுபவம் இருந்த போதிலும் அந்த குழந்தைகள் முன்னால் பேச இயலாமல் மௌனமாய் நின்றேன். அந்த நாள் நெஞ்சில் எப்போதும் ஈரமாய் தொடரும்.

கரண் என்ற சுமார் 4 வயது நிரம்பிய மழலை, அவர்கள் வாழுகிற "குருகுலம்" வீட்டையும், மற்ற குழந்தைகளையும் அறிமுகப்படுத்தியது இன்னும் நீங்காமல் என் மனதில். அவர்களுக்குள் இருக்கும் தன்னம்பிக்கை மிகவும் பெரியது. சிறுவயதில் உறவினர்கள் அனைவரையும் இழந்து குடும்பத்தில் தான் மட்டுமே மிஞ்சிய குழந்தை ஒன்று தைரியமாகவும், திடமாகவும் வளர்வதை கண்டபோது பராமரிப்பாளர்களையும், "குருகுலம்" வீட்டை உருவாக்கி காப்பாற்றுகிற அந்த நல்ல மனிதர்களையும் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.

ஒரு அறையில் வயதில் சிறிய குழந்தைகளுக்கென தொட்டில் படுக்கைகள் வைக்கபட்டிருந்தது. ஒவ்வொருவருக்கும் ஒரு படுக்கை, தலையணை, கொசுவலை என வழங்கப்பட்டிருந்தது. அதில் வயதுக்கு ஏற்றவாறு தொட்டிலின் உயரம் இருந்தது. காரணம் அறிந்தபோது வியந்துபோனேன். அந்த குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை தொட்டிலில் துவங்குகிறது. மற்றவர்களை எல்லாவற்றிற்கும் எதிர்பார்க்கும் உலகில், திடமாக தன்னம்பிக்கையுடன் அவர்கள் எடுத்துவைக்கும் முதல் அடி தொட்டிலில் துவங்குகிறது.

கரண் எங்களுக்கு ஒரு அழகிய குருவிகூட்டை காட்டினார். (தமிழீழ மக்கள் குழந்தைகளையும் மரியாதையுடன் தான் அழைக்கிறார்கள்! இதனால் மற்றவர்களுக்கு மரியாதை தரும் குணம் சிறுவயதிலிருந்தே வளர்கிறது.)அவருடன் மற்ற குழந்தைகளும் அந்த குருவிகூட்டை கலைக்காமல் பாதுகாத்து வருகிறார்களாம். குருவியின் கூட்டை கலைக்காமல் பாதுகாக்கும் இந்த குழந்தைகளின் கூட்டையும், வாழ்வையும் கலைத்தது நீதியா? மனிதநேயத்தின் பிறப்பு குருவிகூட்டை பாதுகாக்கும் பண்பிலிருந்து பிறக்கின்றது என்பதை எங்களுக்கு உணர்த்தியது அந்த குழந்தைகள் (சிறுவர்கள் என அவர்களை அழைக்க முடியவில்லை... காரணம் சில பண்புகளில் அவர்கள் எங்களை விடவும் பெரியவர்கள்). அங்கே ஒரு வீட்டை சேர்ந்த பெற்றோரை இழந்த ஐந்து குழந்தைகளையும் கூட பார்க்க முடிந்தது.

இந்த அப்பழுக்கற்ற மழலைகளுக்கு எதை நாம் திருப்பி தர இயலும்? கொஞ்சும் மொழி பேசி, துள்ளி திரிய வேண்டிய இவர்களது மழலை வாழ்வை பறித்த கொடிய யுத்தம் மீண்டும் வராமல் தடுப்பது இனியும் இழப்புகளை தடுக்க உதவும்.

குழந்தைகளுக்கு இணக்கமான உலகை பற்றி பேச நம்மில் பலர் தயங்குவது ஏன்? தத்தி தவழ்ந்து, தாவி பிடித்து, கிடைத்ததை வாயில்வைத்து மெல்ல அடியெடுத்துவைத்து, பொக்கை வாயால் சிரிக்க வைத்து, திடீரென அழுது, மெல்ல பஞ்சு பொம்மையாய் நித்திரையாகி, செல்லமாக கிறங்கடிக்கும் மழலைகளுக்கு இந்த உலகம் எப்படி இருக்கிறது?

குழந்தைகளுக்கான அந்த அழகிய உலகை திருப்பி தர முடியுமா? ஒவ்வொரு யுத்தமும் வந்து போகிறது, மழலைகளையும் அவர்களது வாழ்வையும் விழுங்கியபடியே.

பலவித வேதனையான பின்னணியிலிருந்து வருகிற குழந்தைகளுக்கு "குருகுலம்" ஒரு பரந்துவிரிந்த பண்பாட்டு இல்லம். இங்கு குழந்தைகள் வாழமட்டுமல்ல, "மனிதர்களாக" பண்பாட்டு விழுமியங்களுடன் கல்வியும் அனுபவமும் பெற்று வளர்கிறார்கள். நாம் போகவேண்டிய புண்ணியதலமது!

இன்னொருமுறை வருகிறேன் என் தமிழீழ பயண நினைவுகளை சுமந்தபடி!

நினைவுகளுடன்...
திரு

உங்கள் கருத்து என்ன?

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com