Sunday, August 06, 2006

ஆப்பு பிடுங்கும் அமெரிக்கா!

குரங்கு ஆப்பை பிடுங்கிய கதை, புலி வாலை பிடித்த கதை இவை யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ பெரியண்ணன் சாட்சாத் அமெரிக்காவிற்கும் அதன் அதிகாரத்தை கையில் வைத்திருக்கிற ஜார்ஜ் டபிள்யூ புஸ் வகையறாக்களுக்கும் துல்லியமாக பொருந்தும். செப்டம்பர் 11ம் 2001ற்கு பின்னர் உலக பயங்கரவாதத்தை ஒழிக்காமல் விடுவோமா பார் என முழக்கமிட்டு உலக மக்கள் மீது அமெரிக்கா யுத்தத்தை திணித்திருக்கிறது. பிரித்தானியா, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளின் ஆதரவுடன் அமெரிக்கா துவங்கிய பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம் வேதாளம் சொல்லும் கதை போல ஆப்கானிஸ்தான், ஈராக், லெபனான், பாலஸ்தீனம் என நீண்டு கொண்டே போகிறது. இந்த யுத்த நடவடிக்கைகளுக்கு காரணமாக அமெரிக்கா மற்றும் கூட்டு நாடுகள் குறிப்பிடுவது செப்டெம்பர் 11 தாக்குதல்கள்.

செப்டெம்பர் 11 தாக்குதல் எப்படி நடந்திருக்கலாம்? கடத்தல்காரர்கள் விமானங்களை மோதியதில் மட்டுமே இரட்டைக்கோபுரங்கள் தகர்க்கப்பட்டதா? அல்லது வேறு சம்பவங்களும், நடவடிக்கைகளும் துணையாக இருந்ததா? (இந்த கேள்விகளுக்கு விடைகாண ஒளிப்படங்களை பாருங்கள்) http://video.google.com/videoplay?docid=6545313046180631815&q=september+11


செப்டெம்பர் 11 தாக்குதல் தற்செயலானதா? திட்டமிடப்பட்டதா? யார் இதன் பின்னணியில்? எதற்காக இந்த கொடூர வன்முறை? இந்த கேள்விகளுக்கு விடை தேடி சலிப்படைந்திருந்தாலும், விடை கிடைக்காமல் மனதில் மீண்டும் மீண்டும் இந்த கேள்விகள் அலைமோதும். செப்டெபர் 11ற்கு பின்னர் அமெரிக்க அரச அதிபர் ஜார்ஜ் புஸ் முழக்கமிட்ட வார்த்தைகள், World will never be the same! கவனியுங்கள்! “உலகம் இதே நிலையில் இருக்காது”. செப்டெம்பர் தாக்குதலில் இறந்த 3000ற்கும் மேலான அப்பாவிகள் ஏதுமறியாதவர்கள். இந்த தாக்குதல் கண்டிக்கப்படவேண்டிய மனிதநேயமற்ற செயல். அதே வேளை “உலகம் இதே நிலையில் இருக்காது” என்பதன் பொருள் என்ன? அந்த புதிய உலக நடைமுறையை உருவாக்குவதும் தீர்மானிப்பதும் யார்? இந்த கேள்விக்கு விடை காண சீனியர் ஜார்ஜ் புஸ் அவரது ஆட்சியில் முழக்கமிட்ட வார்த்தைகளை கவனியுங்கள் “A new world order will emerge!”. ஆகா, செப்டெம்பர் 11ம் 2001 தாக்குதலுக்கு பத்து வருடங்களுக்கு முன்னர் ஜார்ஜ் புஸ் சீனியர் உதிர்த்த இந்த வார்த்தைகளில் தான் எத்தனை பெரிய தீர்க்கதரிசனம்?

அந்த புதிய உலக ஒழுங்குமுறை என்ன? உலகை அமெரிக்காவின் காலடியில் பணிய வைப்பதா? அமெரிக்கா போதிப்பது மட்டுமே ஜனநாயகம் என்பதா? அமெரிக்க குடிமக்களை ஒரு சில தனியார் முதலாளிகளுக்கும், அவர்களது கருத்தியலுக்கும் சிறைப்படுத்தி வைத்து இது தான் விடுதலை, சுதந்திரம், சமஉரிமை என்பதா? இதற்கு எதிராக குரல் கொடுத்தால் ஆபத்தானவர்களாக சட்டத்தை காட்டி மக்களை முட்டாளாக்கி வைத்திப்பதா? இந்த ஆதிக்கத்தை கென்னடி, ஜிம்மி கார்ட்டர், ரீகன், சீனியர் ஜார்ஜ் புஸ், பில் கிளிண்டன், ஜூனியர் ஜார்ஜ் புஸ் என அனைவரும் தொடர்கின்றனர். அமெரிக்காவின் அரச அதிபர்கள் மாறுவார்கள் ஆனால் அதன் கொள்கைகள், திட்டங்கள், நடைமுறைகள் மாறாது. மக்களுக்காக அல்ல முதலாளிகளுக்காக உருவாக்கப்பட்டது தான் அமெரிக்க அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் அனைத்தும். சாதாரண மக்களிலிருந்து அரச தலைவர்களாக அமெரிக்காவில் வருவது இயலாத அளவுக்கு அமெரிக்க ஜனநாயகம் தளைத்தோங்குகிறது. பல வியாபார நிறுவனங்களில் பங்கு வகிக்கிற ஜார்ஜ் புஸ், கேன்டலிசா ரைஸ், டிக் செனாய், ரொனால்ட் ரம்ஸ்பீல்ட் இவர்கள் தான் இன்று அமெரிக்காவின் உயர் பதவிகளில் கொள்கைகள், வெளியுறவு, இராணுவ நடவடிக்கைகள், பொருளாதார திட்டங்களை தீர்மானிப்பவர்கள். பாவம் அமெரிக்க குடிமக்கள் இவர்களின் சூழ்நிலை கைதிகளாகி வியாபாரிகளினால் வழிநடத்தப்படும் ஊடகங்களின் உளறல்களே உண்மை என நம்ப வைக்கப்படுகிறார்கள். இதற்கு சரியான உதாரணம் ஈராக் பற்றிய அமெரிக்க மக்களின் நிலை!

*******

உலகை இரசாயன மற்றும் உயிரியல் தாக்குதலிலிருந்து காக்க சதாம் உசேனை அழித்து அங்உ ‘ஜனநாயகத்தை உருவாக்கினால் தான் தீர்வு என செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு பின்னர் முழக்கமிட்டார் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஸ். ஈராக் முழுவதும் மிக கொடிய உயிரியல், இரசாயன ஆயுதக்குவியல் இருப்பதாக மீண்டும் மீண்டும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகள் பரப்புரை செய்தது. அதற்கு துணையாக தொலைக்காட்சி, பத்திரிக்கை ஊடகங்கள் கதைகள் எழுதி வாசித்தன. உலக நாடுகள்ம் ஐ.நா.சபை அனைத்தின் எதிர்ப்பையும் மீறி ஈராக் மீது படையெடுத்த சில வாரங்களில் இரசாயனம் உயிரியல் ஆயுதங்கள் பற்றிய பேச்சுகள் கூட இல்லாமல் யுத்தத்தின் காரணத்தை திசைதிருப்பியது அமெரிக்கா. அமெரிக்கா அறிவித்தது போல எந்த ஆயுதங்களும் ஈராக்கில் இல்லை என்பது தான் உண்மை. ஈராக் பொருளாதாரத்தை, வளங்களை சிதைத்து அமெரிக்க இராணுவ நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு அடிமையாக அந்நாட்டு மக்களை வைத்திருக்கிறது. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கைகள் மற்றும் மனிதநேயமற்ற செயல்கள் வழி அபுகிரேப் சிறைக்கொடுமைகள் முதல் பாலியல் வன்முறைகள் என அதன் மானம் ஈராக்கில் அம்மணமாகி அலங்கோலக் காட்சியளிக்கிறது. அதன் தொடர்ச்சி சகோதர யுத்தத்தை ஈராக்கிய மக்கள் மீது திணித்திருக்கிறது. இந்த இழப்புகளை உருவாக்கியது யார்? பொய்யான காரணம் சொல்லி பல லட்சம் மகக்ளை கொன்று குவித்து அந்நாட்டு வளங்களை அழித்து கொலைக்களமாக மாற்றிய போர்க்குற்றம் புரிந்த நாட்டின் தலைவர்களுக்கு ஹேக், சர்வதேச நீதிமன்றத்தில் எப்போது விசாரணை துவங்கும்?


திரு

4 பின்னூட்டங்கள்:

Santhosh said...

நல்ல பதிவு திரு,
அதிகாரம் கையில் இருக்கிறது என்று அமெரிக்கா போட்டும் ஆட்டம் ரொம்ப நாள் நீடிக்காது பார்ப்போம் எவ்வுளவு நாள் என்று.

திருவடியான் said...

வாங்க திரு... இப்பத்தான் உங்களுக்குத் தெரிஞ்சுதா...??

ஏன் Axis of Evil என்று குறிப்பிட்ட மற்ற நாடுகளையும் விட்டுவிட்டீர்கள்.. மத்தியக் கிழக்கு நாடுகளின் அமைப்பு OPEC ஈரோ (EURO) நாணயத்தில் வர்த்தகம் நடத்தவேண்டும் என்ற தீர்மானத்திற்கு வலு சேர்வதைத் தடுக்க நடத்தப்பட்ட நாடகம்தான் ஈராக்கின் குவைத் ஆக்கிரமனம்... இந்த ஆக்கிரமனத்தை அமெரிக்காவே து[ண்டிவிட்டு பின் ஈராக் மேல் படையெடுத்தது. பெட்ரோல் உலகெங்கும் தேவைப்படுகிறது. அனைத்து நாடுகளின் பெட்ரோல் வர்த்தகம் அமெரிக்க டாலரில் நடந்தால் அமெரிக்க டாலர் வலுவாக இருக்கும்.. அமெரிக்கப் பொருளாதாரம் வீழாது. அதுதான் தந்தை புஷ் மற்றும் மகன் புஷ் சொல்லி வரும் NEW WORLD ORDER.

மாசிலா said...

உலக பார்ப்பனன்தான் அமெரிக்கா. இவர்களை ஆதரிக்கும் மேலசாதியினர்தான் வெள்ளைக்கார நாடுகள். முஸ்லிம் நாடுகள்தான் தலித்துக்கள். ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா : ஆதிவாசிகள், இந்தியா, ஜப்பான், பாக்கிஸ்தான் : கூலிகள்! ரஷ்யா, சீனா : பகுத்தறிவாளர்கள்.

இதுதானோ நியூ வேல்ட் அர்டர்?

மாசிலா said...

//சந்தோஷ் said : அமெரிக்கா போட்டும் ஆட்டம் ரொம்ப நாள் நீடிக்காது பார்ப்போம் எவ்வுளவு நாள் என்று.//
வேடிக்கைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்து இருக்கக்கூடதய்யா திரு. சந்தோஷ் சார். நம்மால் முடிந்த மாற்று நடவடிக்கைகளை எடுத்து செய்ய வேண்டும். உதாரணத்திற்கு இப்போது திரு சார் செய்வதுபோல் பொதுமக்களின் கவனத்திற்காகவது கொண்டுவரவேண்டும். இல்லையென்றால் நாளைக்கே அமெரிக்கன் நம் வீட்டு கதவை தட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com