Friday, June 30, 2006

ஜெனிவா சர்வதேச தொழிலாளர் மாநாட்டில்...

ஜூன் முதல் வாரம் ஜெனிவா சென்று ஐ.நா வின் தொழிலாளர் நலன் பற்றிய அமைப்பான International Labour Organisation (http://www.ilo.org) நடத்திய “சர்வதேச தொழிலாளர் மாநாட்டில்” கலந்துகொண்டேன். அந்த மாநாட்டில் employment relationship பற்றிய தலைப்பில் விவாத கூட்டத்தில் பங்கெடுத்து, உலக அளவில் இளம் வயது தொழிலாளிகளது பிரச்சனை பற்றி 5 நிமிடங்கள் உரையாற்றினேன். இந்த கூட்டத்தில் அனைத்து நாடுகளின் அரச பிரதிநிதிகள், தொழிற்சங்கவாதிகள், முதலாளிகளின் பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வ குழுக்கள் பிரதிநிதிகள் என சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் முக்கிய விவாதம் ஒப்பந்த தொழிலாளர்கள், நிறுவனங்களால் வேலைக்கு அமர்த்தப்பட்டு எந்தவிதமான பாதுகாப்புகளும் அற்ற தொழிலாளர்களது உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பற்றியதான சூடான விவாதமாக இருந்தது. வழக்கம் போல தொழிலாளர் உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் வண்ணமாக அமெரிக்க அரச பிரதிநிதிகளின் பேச்சு அமைந்திருந்தது. அதற்கு துணையாக நியூசிலாந்து, கானடா, சுவிஸர்லாந்து என பணம் படைத்த நாடுகளின் கூட்டணி அமைந்தது. அதற்கு நேர்மாறாக ஆப்பிரிக்க நாடுகள் தென்னாப்பிரிக்கா மற்றும் நைஜீரியா தலைமையில் தொழிலாளர் உரிமைக்காக முழக்கமிட்டன. தனியாக லெபனான் தொழிலாளர் உரிமைக்கு குரல் கொடுத்து திறந்த சந்தை பொருளாதாரத்தை வார்த்தைகளில் கடுமையாக சாடியது.

விவாதத்தின் இடைவேளையில் தென்னாப்பிரிக்க அரச பிரதிநிதிகளை சந்தித்து உரையாடினேன், மனநிறைவான ஒரு சிறு உரையாடலில் அவர்களது மனிதமாண்பு கண்டு வியந்தேன். இந்திய அரச பிரதிநிதிகளை சந்தித்த வேளை வழக்கத்திற்கு மாறான மாற்றம் தெரிந்தது. இந்த விவாதத்தில் தொழிலாளர்கள் சார்பாக பேச்சாளராக திரு.பட்டேல் என்ற இந்திய வம்சாவழி தென்னாப்பிரிக்க தொழிற்சங்கவாதி நேர்த்தியான புள்ளி விபரங்களுடன் ஓயாது கருத்துக்களை வைத்து வாதாடினார். அமெரிக்க பிரஜையான முதலாளிகள் தரப்பு பேச்சாளர் விடாப்பிடியாக தனது கருத்துக்களை வைத்து முதலாளித்துவத்திற்கான சேவையை செய்தார். மிகவும் சிக்கலான, கடுமையான இந்த விவாதத்தை நெறிப்படுத்திய தலைமையை நெதர்லாந்து நாட்டின் அரச பிரதிநிதியான பெண்மணி மிகவும் நேர்த்தியாக நகைச்சுவையுடன் நடத்தினார்.

மூன்று ஆண்டுகளாக இந்த மாநாட்டில் கலந்து கொண்டு வந்தாலும் இந்த முறை முந்தைய தமிழக அரசின் அரசு ஊழியர் பிரச்சினை மனதில் வர Freedom of Association என்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் சார்ந்த பிரிவின் உயர் அதிகாரியை சந்தித்து உரையாடினேன். சட்ட வல்லுநரான அவருடன் கலந்துரையாடியதில் திரட்டிய தகவலில் முந்தைய தமிழக அரசின் சர்வதேச தொழிலாளர் விதி மீறல் பற்றிய வழக்கில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தீர்ப்பு பற்றிய தகவல் கிடைத்தது. செல்வி. ஜெயலலிதாவின் முறைகேடான இந்த நடவடிக்கையை இன்னும் மனதார பாராட்டி தன்னைத்தானே தட்டிக் கொடுக்கிறவர்களுக்காக இந்த வழக்கின் தகவல்கள் பற்றி விரிவாக இன்னொரு பதிவில் பார்க்கலாம்... தொழிலாளர் உரிமையும் வாழ்வும் சிறக்கட்டும்!

திரு

2 பின்னூட்டங்கள்:

சந்திப்பு said...

திரு. மனம் திறந்த வாழ்த்துக்கள் - பாராட்டுக்கள். தாங்கள் ஒரு சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் பங்கேற்றது மிக சிறப்புக்குரியது. உலக அளவில் மனித உரிமைகளை பற்றி பேசும் அமெரிக்கா எப்போதும் தொழிலாளர்களை மனிதர்களாக மதித்ததே இல்லை. இங்கேயும் அதுதான் நடந்துள்ளது. உங்களிடம் இருந்து மிகவும் விரிவான கட்டுரையை எதிர்பார்க்கிறேன். உலகமயமாக்கல் சூழலில் முறைசாரா தொழிலாளர்களின் பிரச்சினை தீவிரமடைந்து வருகிறது. எந்தவிதமான பாதுகாப்பும் இன்றி அவர்கள் தங்களது தொழில்களில் ஈடுபட வேண்டியுள்ளது. உலகமயமாக்கல் ஹைர் அண்ட் பயர் கொள்கையை பின்பற்றி வருகிற சூழலில், முறைசாரா - அணிதிரட்டப்படாத தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகாரித்தே வருகிறது. எனவே இத்தகைய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் மருத்துவ காப்பீடு, பென்ஷன், தொழில் பாதுகாப்பு, சம வேலைக்கு சம கூலி போன்ற பிரச்சினைகள் தீர்த்திட வேண்டியுள்ளது. இவற்றில் உலகம் முழுவதும் தற்போது நிலவும் சூழல்கள் பற்றி விரிவாக எழுதினால் தமிழ் உலகிற்கு மிகப் பயனுள்ளதாக இருக்கும்.
வாழ்த்துக்கள்.

Anonymous said...

கட்டுரைக்கு நன்றி திரு. நல்ல தகவல்கள். அடுத்த தொடரும் பதிவையும் எதிர் பார்க்கிறேன்.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com