Wednesday, August 16, 2006

எனக்கு நாடுமில்லை, கொடியுமில்லை-(சுதந்திர தின)மீள்பதிவு

2000 ஆண்டின் தொடக்க காலம் அது... அந்த குளிர் காலையில் புது டில்லியிலிருந்து புறப்பட்ட எங்கள் புகையிரதம் (ரயில் வண்டி தான்!) அமிர்தசரசு மண்ணில் நின்றதும் நான் வைத்த முதல் காலடியில் என் கால்கள் கூசின. என் எண்ணங்கள் பகத்சிங்கின் நினைவில்...

யார் இந்த பகத்சிங்?
பிரிட்டிஷ்காரனிடமிருந்து விடுதலைக்காக இந்திய மக்கள் கிளர்ந்தெழுந்த நேரமது. அந்த 28 வயது நிரம்பிய வாலிபன் தனது சக தோழர்களுடன் விடுதலைக்கு கவனத்தை ஈர்க்க நாடளுமன்றத்தில் வெடிகுண்டுகளை எறிந்தான். துண்டறிக்கைகளும், கோசங்களும் ஆங்கிலேயனை வெறி கிளப்பியது. கைது செய்யப்பட்டு சிறைக்கொட்டடியில் அடைக்கப்பட்டான். இராணுவ நீதிமன்றம் தூக்குத்தண்டனை வழங்கியது. கடைசி ஆசை என்ன என்று கேட்டார்கள், அவனிடமிருந்து வந்த பதில் உயிர் வாழ ஆசை என்பதல்ல! அந்த விடுதலை வீரன் "என் தாய் மண்ணுக்கு விடுதலை வேண்டும்...என் கண்களை திறந்தபடி என்னை தூக்கி கொல்லுங்கள்! என் தாய் மண்ணை பார்த்த படியே சாக வேண்டும்!" என்றான்.

இன்று நாங்கள்? "உயிர் மண்ணுக்கு! உடல் குஷ்புவுக்கு!" என்கிறோம்... விடுதலைத் தாயே! எங்கே தவறு செய்தோம்? சின்ன வயதில் எங்களுக்கு பேய் கதைகளும், கடவுள் புராணங்களையும், மன்னர்களையும் மண்டைக்குள் திணித்த எங்கள் "விடுதலை பெற்ற இந்தியா"! காந்தி உட்பட சிலரைத் தவிர வீரர்கள் எல்லோரையும் எங்களுக்கு மறைத்ததாலா?

அப்போதெல்லாம் விடுதலை நாள் என்றதும் என் மனதில் வருவதெல்லாம் அந்த ஆறஞ்சு சுளையின் சுவை கொண்ட இனிப்பும், அன்று மட்டும் எங்கள் கைகளில் திணிக்கப்பட்ட வண்ணக் காகித கொடியும். இது தான் விடுதலை என நினைத்து விடுதலையை (அந்த இனிப்பைத்தான்) வாங்க காசு தேடிய நாட்கள் தான் எத்தனை! வளர்ந்த போது தான் தெரிந்தது விடுதலை என்பது வேறு சமாச்சாரம் என்பது! அதைத் தான் இன்னும் தேடுகிறேன்!...

அன்றைய நாள் மாலைப்பொழுது.... சீக்கிய மதத்தின் புனிததலமான பொற்கோவிலில் நின்ற வேளை. எமது இராணுவத்தின் "நீல நட்சத்திர நடவடிக்கையின் விளைவுகள்" நெஞ்சை அடைத்தது. ஒன்றாக கூடி வாழ வந்த எமக்குள் எது தனி தேசங்களை கேட்கத் தூண்டியது? இராணுவத்தின் கொட்டடிகளில் சிதைக்கப்பட்ட உயிர்களை திருப்பித்தர இயலுமா?

தேசபற்று என்பது ஒருவகையில் ஒரு வெறி தான்! சேர்ந்து வாழ்வதால் வஞ்சிக்கப்படும் என் சகோதரனுக்கு பிரிந்து போய் தனி வாழ்க்கை அமைக்க அவனுடைய பங்கை கொடுக்க எப்படி விருப்பமில்லையோ அதே வெறி! தொடர்ந்த பயணத்தில் பாகிஸ்தான் - இந்தியா "வாகா எல்லையில்" நின்ற கணத்தில் விடுதலை தான் என்ன என ஆயிரம் கேள்விகள்! என் பாகிஸ்தானிய சகோதரனையும், என்னையும் பிரிக்கும் அந்த இராணுவ வேலியிலும், துப்பாக்கி குண்டுகளிலும் விடுதலை தேவதையின் கற்பு களங்கப்படுகிறதை கண்டேன்! இரு பகுதிகளின் மக்களையும் எளிதாக பழக விடாத இராணுவம் என் தேசதுக்கே சொந்தமானாலும் அது ஆக்கிரமிப்பு படைகளே!

கலங்கிய கண்களுடன் பாகிஸ்தானிய முகம் தெரியா என் உறவுகளை பார்வைகளால் தொட்டு கனத்த மனதுடன் திரும்பினேன். அப்போது தான் புரிந்தது இராணுவத்தின் தொல்லைகள். அதோடு அழித்துப் போட்டேன் ஒருகாலத்தின் என் இராணுவ கனவுகளையும், மாணவ பருவத்தின் "தேசிய மாணவர் படை" (இராணுவ) பயிற்சியின் சான்றிதழையும்.

அப்பொது உதித்தது என் சிந்தையில் "எனக்கு நாடுமில்லை, கொடியுமில்லை, எல்லைகளுமில்லை, நான் மனிதன்". யார் இந்த சில மனிதர்கள் என்னை இந்த நாட்டில் அனுமதிக்கலாமா அல்லது கூடாதா என்ற முடிவை எடுக்க? யார் இவர்களுக்கு இந்த உரிமையை தந்தது? எல்லைகளற்ற தேசங்களும், அடக்குமுறையில்லா அமைப்புகளும் இல்லாமல் போனது ஏன்? உலகில் இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள் தான் எத்தனை விதங்களில்?தேசங்கள் தோறும் விடியலைத் தேடி அலையும் மக்களுக்கு நம்பிக்கை ஒளிகீற்று என்று தான் வருமோ? நினைவுகளை சுமந்தபடியே...

நினைவுகளுடன்...
திரு

6 பின்னூட்டங்கள்:

Ram said...

திரு,

ஒரு சில ராணுவ அடக்குமுறைகளை மனிதில் வைத்துக்கொண்டு, இந்த பதிவு இடப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன்.!

//அதோடு அழித்துப் போட்டேன் ஒருகாலத்தின் என் இராணுவ கனவுகளையும், மாணவ பருவத்தின் "தேசிய மாணவர் படை" (இராணுவ) பயிற்சியின் சான்றிதழையும்.//

I cudnt understand what made you to have such a wrong impression on Army.One or Two incidents are noway the benchmarks of Army.

//இரு பகுதிகளின் மக்களையும் எளிதாக பழக விடாத இராணுவம் என் தேசதுக்கே சொந்தமானாலும் அது ஆக்கிரமிப்பு படைகளே!//

I cud not agree with this.yenna solla vareengannu puriyala...I think neenga ilangai raanuvathaiyum inthiya raanuvathaiyum confuse pannikureenga nnu nenaikiren :)

thiru said...

வருகைக்கு நன்றி ஆறுமுகம், ராம்,

ராம் நமது இராணுவத்தையும் நினைவில் வைத்த சிந்தனையும் எழுத்தும் தான். காஸ்மீர் பகுதில் நமது இராணுவத்தின் மனித உரிமை மீறல் பற்றி படியுங்கள் அப்போது இலங்கை மட்டுமல்ல இந்திய இராணுவம் பற்றியும் தெரியும். இலங்கையில் இந்திய இராணுவம் செய்த அட்டூழியங்கள் தெரியுமா? இது ஒரு நாட்டு இராணுவம் என்பதல்ல. இஸ்ரேல், அமெரிக்கா என இந்த பட்டியல் நீழுகிறது...புரியவில்லையா இன்னும்? எல்லைக் கோடுகளை விடம் மனித விழுமியங்களும், உரிமைகளும் உயர்ந்தவை என்கிற ரகம் நான். எனக்கு தேசமில்லை... நான் இந்தியன் என சொல்லும் போது என் இரத்தம் ஒன்றும் சிலிற்க்கவில்லை. நான் மனிதன் எனிகிற போது கொடுமைகளை பார்த்து சிலிற்கிறேன்.

Anonymous said...

If so who was this Periyar to tell
who was Tamil and who was not.You hate brahmins for no reason.You are a psuedo-humanist.

thiru said...

என்னய்யா அனானி ஆத்திரத்தில பதிவு மாறி பின்னூட்டம் போடுறதா? நல்லா படிச்ச பிறகு கவனமா போடக்கூடாதா? தவறான இடத்தில ஆத்திரப்படாதீங்க :)

மணியன் said...

அன்புள்ள திரு,
தேசப் பற்று என்பது இராணுவ நடவடிக்கைகளை ஆதரிப்பதல்ல. இந்திய இராணுவம் அராஜகங்கள் மட்டுமல்ல ஊழலும் நிறைந்ததாகவே காணப்படுகிறது. அவை நமது குறைகள். தேசபக்தி நீங்கள் பகத்சிங்கிற்காக அஞ்சலி செலுத்தியதும் அமிர்தசரஸ் பொற்கோவிலில் சீக்கியர்களின் வலியை உணர்ந்ததுமே யாகும்.

அருந்ததிராய் சொன்னது போல நாடு என்ற எல்லைக்கோடுகளைத் தாண்டி உலகப் பிரஜையாக தங்களை இனம் கண்டு கொண்டிருந்தால் மிக உயர்ந்த சிந்தனை. அது சாத்தியப்பட நாயகன் கமல் சொல்வதுபோல் "அவனை நிறுத்தச் சொல்,நான் நிறுத்துகிறேன்" என்றில்லாமல் உலகநாடுகள் அமைதி காக்க வேண்டும்.

வேண்டுவோம் உலக அமைதி!
வாழ்த்துவோம் மனிதம் தழைக்க!

Anonymous said...

//If so who was this Periyar to tell who was Tamil and who was not.You hate brahmins for no reason.You are a psuedo-humanist.//

திரு எழுதியுள்ள பதிவுகளில், எந்த ஒரு இடத்தில் பிராமணர்களை அவர் வெறுக்கிறார் என்பதை நீங்கள் கண்டு பிடித்தீர்கள். ஒரே ஒரு இடத்தை சுட்டிக் காட்ட முடியுமா? திருவின் எழுத்துக்களில் பிராமனீயமும், அதன் கொள்கைகளும் வெறுக்கப்படுவதை காண முடிகிறதே தவிர பிராமணர்களை வெறுப்பதை காண முடியவில்லை.
உங்கள் பார்வையில்தான் தவறு.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com