Saturday, September 15, 2012

இடிந்தகரை மக்களின் போராட்டம் ஆக்க சக்தி!


Indian Coast Guard flew very low to threaten the people who stood in the water for their right to live at Koodankulam. Koodankulam people braved the threat. This photo was published in the NBC News website which indicates Koodankulam movement is getting worldwide attention
தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும், நிறுவனங்களுக்கும் அவசியமான மின்சார தேவையில் தன்னிறைவை அடைய முடியும். அதற்கு அணு உலைகளே தேவையில்லை. சூரியசக்தி தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்திருக்கிற இக்காலத்தில் ஒவ்வொரு வீட்டிற்கு தேவையான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்ய முடியும். பஞ்சாயத்துகளில் இதற்கான திட்டங்களை வகுத்து, தேவையான தொழில்நுட்பம், நிதியை வழங்கினாலே போதுமானது. அப்படியான திட்டத்தை உருவாக்குகிற போது மின்கசிவு, மின்சேமிப்பு, மின்சார திருட்டு ஆகிய பிரச்சனைகளை கட்டுப்படுத்துவதும் எளிது. தற்போதைய மின் உற்பத்தி முறையானது மையப்படுத்தப்பட்டது. மையப்படுத்தப்படுகிற அதிகாரமும், உற்பத்தி முறையும் ஊழலையும், அடக்குமுறையையும் ஊக்குவிக்கவே பயன்படுகிறது. நமது உற்பத்திமுறையில் மாற்றம் உருவாக வேண்டுமென்று நம்புகிறேன்.

அணு உலை, அனல் உலை, நீர் மின்திட்டம் ஆகியவையெல்லாம் மையப்படுத்தப்பட்ட உற்பத்தி முறை. அவற்றில் ஊழல், பாதுகாப்பின்மை, சுற்றுச்சூழல் பாதிப்புகள், மின் விரயம் ஆகிய பல பிரச்சனைகளும் உள்ளன. தேவையான மின் உற்பத்திக்கான மிக தரமான சூரியசக்தி உபகரணங்களை ஒவ்வொரு வீடுகளிலும் பொருத்துகிற போது மாதந்தோறும் கட்டுகிற மின்கட்டணமும் மிச்சம். ஆனால் மின் உற்பத்தியில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களும், தயாரிப்பில் ஈடுபடுகிற நிறுவனங்கள் மற்றும் அவற்றிற்கு உரிமையாளர்களாக இருக்கிற அரசியல்வாதிகளும் இத்தகைய திட்டங்களுக்கு தடையாகவே இருப்பார்கள். இன்றைக்கு தனியார் பெருமுதலாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப டீசல், பெட்ரோல் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு மையப்படுத்தப்பட்ட உற்பத்தி, பரிமாற்ற, சந்தைமுறையும், விலையை நிர்ணயித்துக்கொள்ள எண்ணை நிறுவனங்களுக்கு காங்கிரஸ் அரசு வழங்கியுள்ள அனுமதியும் காரணமாகும்.

உலகவங்கி உட்பட பன்னாட்டு நிறுவனங்கள் அரசுகளின் வசமுள்ள மின்சாரம், போக்குவரத்து, குடிநீர் உட்பட அனைத்து சேவைத் துறைகளையும் அரசிடமிருந்து பறித்து தனியாருக்கு வழங்க நிர்பந்தத்தை உருவாக்குகிறது. இன்றைக்கு படிப்படியாக மத்திய, மாநில அரசுகள் சேவைத்துறைகளை தனியார் வசம் ஒப்படைக்கின்றன. உதாரணமாக போக்குவரத்து, மருத்துவம் ஆகியவற்றை குறிப்பிடலாம். சந்தையின் விதிகளை நிர்ணயிக்கவும், கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் அரசு தயாராக இல்லாமல் தனியாரிடம் வணிகமயமாக மாறுகிற போது சேவைகளின் விலையும் அதிகமாகிறது. இன்றைக்கு சந்தைப் பொருளாதாரத்தில் இந்தியாவில் மக்கள் சந்திக்கிற விலையேற்றம், சேவைகளின் தரமின்மை ஆகிய பல பிரச்சனைகளுக்கு கட்டுபாடற்ற இத்தன்மை முக்கிய காரணம். பொருளாதார கொள்கையில் மிகப்பெரிய மாற்றம் வராமல் போனால் இன்னும் பல பத்தாண்டுகளுக்கு அரசாங்கம் தனது பொறுப்புகளிலிருந்து விலகுகிற போக்கும் அதன் விளைவாக சேவை மற்றும் பொருட்களின் விலையேற்றமும் பன்மடங்காக அதிகரிக்க இருக்கிறது. குறிப்பாக குடிநீர், மின்சாரம் ஆகியவை தனியார் வசம் கைமாறப்போகிறது. இப்போதே நகர்புறங்களில் பெரும்பாலான வீடுகளில் தேவையான தண்ணீரை தனியார் நிறுவனங்கள் அல்லது தண்ணீர் மாபியாக்களிடமிருந்து வாங்குகிற நிலை. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகள் வினியோகம் செய்கிற குடிநீர் தனியாரிடம் போகும் போது தண்ணீர் உரிமை முற்றாக மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிடும். அதன் பிறகு அந்த நிறுவனங்கள் நிர்ணயம் செய்கிற விலைக்கு தண்ணீரை வாங்க வேண்டிய கட்டாயமான சூழலும் உருவாகும்.

எரிபொருட்களுக்கு நேர்ந்துள்ள நிலமை மின்சாரத்திற்கு மிக விரைவில் வருகிற அறிகுறிகள் தெரிகின்றன. அணுசக்தி நிறுவனம் இன்றைக்கு அரசின் துறையாக இருப்பினும், அவை உற்பத்தி செய்கிற மின்சாரத்தை மொத்தமாக ஒரு தனியார் நிறுவனத்திற்கு விற்றுவிட முடியும். ஏற்கனவே மின் உற்பத்தியில் முதலீடு செய்து, மின் வினியோகம் தனியாருக்கு அரசிடமிருந்து பறித்துக்கொள்ள தக்க நேரத்திற்காக அரசியல்வாதிகளும், நிறுவனங்களும் காத்திருக்கின்றன. இந்த கூட்டுக்கொள்ளையில் பாதிப்புகளை அடைய இருப்பது பயனாளர்களாகிய மக்கள் தான். இந்த பிரச்சனைகளிலிருந்து மீள வேண்டுமானால் நாம் மையப்படுத்தப்பட்ட உற்பத்தி, வினியோக முறையிலிருந்து மாற வேண்டும். நமது தேவைக்கான மின்சாரத்தை வீடுகளில் அல்லது கூட்டாக உள்ளூராட்சி அளவில் தயாரிக்கிற திட்டங்களை உருவாக்க அரசை கட்டாயப்படுத்த வேண்டும். இன்னொரு வகையில் சொன்னால் உற்பத்தியை மக்கள்மயப்படுத்துவது. உங்களுக்கு தேவையான மின்சாரத்தை உங்கள் வீடுகளில் சுலபமாக உற்பத்தி செய்ய முடியுமானால் சூரியசக்தி மின்சாரத்தை விரும்ப மாட்டீர்களா? அதற்கான வழிகள் இருக்கிற போது மின்சாரம் என்ற போர்வையில் நிலம், நீர், காற்றை மாசுபடுத்தி அழிவு தருகிற அணு உலைகளை உருவாக்க ஆதரிக்கலாமா?

தற்போதைய மின் உற்பத்தி முறையிலிருந்து நகர்ந்து வீடுகளில் மின் உற்பத்தியை உருவாக்குவதை மாநிலத்தின் இலட்சிய பெருங்கனவு திட்டமாக மாற முடியும். இக்கனவை பற்றிக்கொள்கிற தலைமை உருவாகுமானால் எவருக்கும் அடிமைப்படாத தன்னிறைவான மக்கள் சமூகத்தை தமிழகத்தில் கட்டியெழுப்ப முடியும். அப்துல்கலாமின் அணுகுண்டு கனவு போல அழிவிற்கான பாதையல்ல இக்கனவு.

உண்மையில், அணு உலையை எதிர்த்து போராடுகிற மக்கள் அத்தகைய லட்சிய கனவுடையவர்கள். அணு உலையை எதிர்த்து போராடுகிற மக்களுக்கு இந்த நாட்டின் மக்கள் மீது இருக்கிற சமூக அக்கறை மன்மோகனுக்கும், அணு விஞ்ஞானிகளுக்கும் இருப்பதாக தெரியவில்லை. அணு உலையை எதிர்க்கிற மக்கள் அனைத்து மக்களுக்கான அரசியலையும், தன்னிறைவான நாட்டையும் கட்டியெழுப்பவே போராடுகிறார்கள். அன்னிய நாடுகளின் நிர்பந்தங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாகவும் இந்த மண்ணை அனுமதிப்பதை எதிர்க்கிறார்கள். அழிவையும், பெரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் விளைவிக்கிற அணு சக்தியை எதிர்த்து அவர்கள் எழுப்புகிற முழக்கங்கள் ஒரு கோடி அணுகுண்டுகளை சேர்த்து வைத்தாலும் உருவாக்க முடியாத ஆக்க சக்தியை கொண்டுள்ளது. நீங்கள் அன்னிய நாடுகள் வழங்குகிற அணு அழிவின் பக்கமா? அல்லது அழிவை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கையாக வருமுன் காக்க போராடுகிற மக்கள் பக்கமா?

உங்கள் கருத்து என்ன?

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com