Sunday, September 16, 2012

படைப்பாளிகள் கையெழுத்து இயக்கம் சம்பந்தமாக என் நிலைபாடு!


கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டங்கள் மீது அரசு வன்முறையை ஏவியுள்ளதை கண்டித்தும், அணு உலை எதிர்ப்பாளர்களின் கோரிக்கையை ஆதரித்தும் படைப்பாளிகள், கலைஞர்கள், பத்திரிக்கையாளர்களிடம் கையெழுத்து கேட்டு கவின்மலர் முகநூலில் அறிவித்திருந்தார். இவ்வகை அடையாளங்களில் இல்லாமல் போனாலும் அணு உலை எதிர்ப்பவன் என்ற வகையில் எனது கையெழுத்தை நானாகவே பதிவு செய்ய கேட்டேன்.

பின்னர், அவ்வறிக்கையில் கோரிக்கைகளில் பகுதியில் கீழே நீல நிறத்தில் இருக்கிற பத்தியை சேர்க்க குறிப்பிட்டேன். அது சேர்க்கப்பட்டது. அதன் பிறகும், இவ்வறிக்கையில் போராட்டத்தின் வரலாற்று சுருக்கத்தையும், அரசியல் நிலைபாட்டையும் தெளிவுபடுத்தாத பெருங்குறையை உணர்ந்து நேற்று அதை கவின்மலருக்கு முகநூல் செய்தியில் தெரிவித்து, அதற்கான பகுதியை இணைக்க கேட்டிருந்தேன். பரிந்துரைக்கிற சேர்க்கையை அனுப்ப சொன்னார் கவின்மலர். அதனடிப்படையில் அறிக்கையில் சேர்க்க இன்று நான் அனுப்பிய பகுதி கீழே சிகப்பு நிறத்தில் உள்ளது.

அதற்கு,

//நீங்களனுப்பிய குறிப்பில் வரலாற்றுத்தகவல்கள் இருந்ததால் தொடங்கிய காலத்தில் இருந்தே எதிர்த்துவரும் ஞாநி அல்லது மார்க்ஸ் யாரிடமாவது கருத்து கேட்கச் சொல்லியிருந்தார் கவிதா. அதன்படி அவருக்கு உங்கள் குறிப்பை அனுப்பியிருந்தேன். அவரிடமிருந்து வந்த பதில் இதோ..குறிப்பை சரிபாருங்களேன்.// என்று கவின்மலர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

அந்த மின்னஞ்சலில்: "1986-87ல் திட்டம் அறிவிக்கப்படதுமே எதிர்ப்பு தொடங்கிவிட்டது. நான் இடிந்தகரை கூட்டத்தில் பேசியதே செப்டம்பர் 22, 1987ல். எனவே 1989 என்பது தவறு." என்று ஞானி குறிப்பிட்டதாக இருந்தது. 

முதற்கட்ட போராட்டம் நடந்த காலத்தில் பங்காற்றிய என் நினைவிலிருந்து எழுதியதில் ஏற்பட்ட தகவல் பிழை என்பதை தெரிவித்திருக்கிறேன்.

அனுப்பியுள்ள சேர்க்கைக்கு குழுவின் நிலைபாடு பற்றி முகநூல் செய்தியில் கேட்ட போது முதல் மூன்று பத்திகளை சேர்க்கலாமென்று தோழர். பா.ஜெயபிரகாசம் சொன்னதாக கவின்மலர் தெரிவித்தார்.  

அதற்கு "அரசியல்கட்சிகளின் நிலைபாடு குறித்த பத்தியும் முக்கியமானதாக கருதுகிறேன். அத்தகைய நிலைபாட்டை எடுக்காத அறிக்கையில் இணைய எனக்கு விருப்பமில்லை. மற்ற பகுதிகளும் மக்களின் கேள்விகள் குறித்த முக்கியமானவை." என்ற பதிலளித்திருக்கிறேன்.

அணு உலை எதிர்ப்பு என்பது அரசியல் நிலைபாடாக கருதுகிறேன். அதனடிப்படையில் தெளிவான ஒரு பார்வையை வழங்குவது "படைப்பாளிகள், கலைஞர்கள், பத்திரிக்கையாளர்கள், செயல்பாட்டாளர்களின்" சமூகக் கடமை. அந்த வகையில் இந்த சேர்க்கையை முக்கியமாக உணர்கிறேன். அதனடிப்படையில் எனது நிலைபாடு அமைகிறது.

இக்குழுவில் யார் செயல்படுகிறார்கள் என்பதும் தெரியவில்லை. இந்த நிலையில், அனுப்பியுள்ள பகுதிகளை இணைக்காது அரசியல் நிலைபாட்டை தெளிவுபடுத்தாத அறிக்கையாக இருக்கும் பட்சத்தில் எனது பெயரை விலக்கிக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.

அணு உலையை எதிர்க்கிற எனது நிலைபாடு எப்போதும் போல தொடரும். 

- யோ. திருவள்ளுவர்

----------------------------------------------------------------------------

கவின்மலருக்கு அனுப்பியுள்ள சேர்க்கை (சிகப்பு வண்ணத்தில்) அறிக்கை:
 (போராட்டம் துவங்கிய ஆண்டு பிழை திருத்தம் செய்வதற்கு முந்தைய நிலையில்) 


"நவம்பர் 20, 1988ல் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி அரசு சோவியத் ரசிய சோசலிச குடியரசுடன் ஒப்பந்தம் செய்து கூடங்குளம் அணு உலை திட்டத்தை அறிவித்தது. அப்போது முதல் அத்திட்டத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் பல கட்டங்களாக மக்களால் நடத்தப்பட்டன. அணு உலையினால் ஏற்படுகிற கதிரியக்க ஆபத்தின் அழிவுகள் மற்றும் வாழ்வாதார பாதிப்புகள் மக்களுக்கு கவலைதருகிற முக்கிய பிரச்சனைகளாக உள்ளன. அதனால் ஆபத்தான அணு உலை திட்டத்தை கைவிட்டு, மாற்று மின் திட்டங்களை முன்னெடுக்க ஆரம்ப காலம் முதல் மக்களும், மாற்று அறிவியலாளர்களும் அரசுக்கு கோரிக்கையாக முன்வைத்து வருகின்றனர். மக்களின் நியாயமான கோரிக்கைகளையும், சனநாயகக் குரலையும் துவக்கம் முதல் அரசு கண்டுகொள்ளவில்லை. அணு உலைக்கு அடிக்கல் நாட்டும் விழாவை நடத்த முயற்சித்து மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக கூடங்குளத்திற்கு செல்லாமல் மதுரையில் திரு. ராஜீவ் காந்தி அடிக்கல் நாட்டி திரும்பினார். 1987ல் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கன்னியாகுமரியில் நடைபெற்ற பல்லாயிரம் மக்கள் கலந்துகொண்ட பேரணியில் தமிழக அரசு காவல்த்துறையை ஏவி துப்பாக்கிச்சூடு நடத்தியது. பின்னர் 1991ல் சோவியத் ரசியாவின் உடைவினால் அத்திட்டம் தொடராமல் இருந்த நிலையில் மக்களின் எதிர்ப்பும் தணிந்திருந்தது. பின்னர் 2001ல் மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசு ரசிய கூட்டமைப்புடன் கூடங்குளம் அணு உலை திட்டத்தை மீண்டும் துவங்கியதும் அதற்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் துவங்கின. இத்திட்டத்தை துவக்கம் முதல் இடிந்தகரையிலும், இடிந்தகரைக்கு வெளியேயும் மக்கள் எதிர்த்து போராடியதை மறைக்க பொய் பிரச்சாரங்கள் அணு உலை ஆதரவாளர்களால் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. 

கூடங்குளம் அணு உலையை சுற்றியுள்ள பகுதிகளில் வாழுகிற மக்களின் கருத்துக்களையும், ஒப்புதலையும் பெறாமலே எதிர்ப்பு குரல்களை கண்டுகொள்ளாமல் ரசிய கூட்டமைப்பின் உதவியுடன் 1000 மெகா வாட் உற்பத்திக்கான 2 அணு உலைகளை இந்திய அரசு கட்டியது. நேரடியான பாதிப்பிற்குள்ளாகிற அம்மக்களின் கேள்விகளுக்கு இதுவரையில் உரிய தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் இல்லை. இந்த அணு உலைகளின் தினசரி கதிரியக்க அளவு, அணு உலை கழிவுகளின் அளவு மற்றும் அவற்றை பாதுகாக்கிற முறை, அணு உலைக்கு தேவைப்படுகிற நீரின் அளவு, அணு உலையிலிருந்து வெளியேறி கலக்கும் நீரினால் கடல் மற்றும் கடல் உணவில் ஏற்படும் விளைவுகள், அணு உலையை செயலிழக்க ஆகும் செலவு மற்றும் அதன் விளைவுகள், ரசியாவின் பொறுப்பு ஆகியவை சம்பந்தமான மக்களின் கேள்விகள் மிகவும் நியாயமானவை. அக்கேள்விகளுக்கு எந்த வெளிப்படையான பதிலையும் வழங்காமல் அரசு அடக்குமுறையையும், பொய் பிரச்சாரங்களையும் கொண்டு அணு உலையை திறக்க முயற்சிக்கிறது. 

ஜப்பான், புக்குசிமாவில் மார்ச் 11, 2011ல் நடைபெற்ற அணு உலை வெடிப்பும், பாதிப்புகளும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை மேலும் வலுவடைய வைத்தது. இதனிடையே ஜூலை 1, 2011ல் கூடங்குளம் முதல் உலையில் சோதனை ஓட்டம் செய்த போது மிகப்பெரிய சத்ததுடன், புகை கக்கியது. அதோடு சேர்ந்து அரசு நிர்வாகம் மக்களிடையே நடத்திய முறையற்ற அவசரகால பயிற்சிகளும் அப்பகுதில் வாழுகிற மக்களின் அச்சத்தையும், கவலையையும் மேலும் அதிகமாக்கியது. அதன் விளைவாக ஆகஸ்டு 11, 2011 அன்று கூடங்குளம் மற்றும் இடிந்தகரை பகுதி மக்கள் அணு உலைக்கு எதிராக தானாகவே போராட்டத்தை துவக்கினார்கள். மக்களின் போராட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில் எதிர்ப்பு குரல்களை கண்டுகொள்ளாமல் ஆகஸ்டு 2011ல் அணு சக்தி நிறுவனம் முதல் அணு உலையை செப்டெம்பர் 2011ல் இயக்க இருப்பதாக அறிவித்தது. இந்த நிலையில் செப்டெம்பர் 11, 2011 முதல் தொடர் உண்ணாவிரதம் இடிந்தகரையில் துவங்கியது.

செப்டெம்பர் 21, 2011ல் போராட்டக்குழுவின் பிரதிநிதிகளை மாநில முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்த பிறகு மக்களின் அச்சம் மற்றும் கவலைகளை போக்குவது வரையில் அணு உலையின் பணிகளை நிறுத்திவைக்க தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. பின்னர் இந்திய பிரதமரோடு நடந்த பேச்சுவார்த்தையிலும் மக்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. மாநில அமைச்சரவை தீர்மானம் இயற்றிய நிலையிலும் அணுசக்தி நிறுவனம் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டது. மாநில அரசும் மற்றும் மாவட்ட நிர்வாகமும் அதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல்வேறு கட்டமாக மாவட்ட நிர்வாகத்தோடு நடைபெற்ற பேச்சுவார்த்தையும் மக்களின் கோரிக்கையை அரசு ஏற்காத நிலையில் தோல்வியில் முடிந்தன. 

அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்கு முன்னர் நிறைவேற்ற அணுசக்தி வாரியம் விதித்திருந்த 17 நிபந்தனைகளையும் கூடங்குளம் அணு உலையில் இதுவரையில் செயல்படுத்தவில்லை. அப்பகுதி மக்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்களுடன் முறையான பாதுகாப்பு நடைமுறை பயிற்சிகள் வழங்கப்படவில்லை. அவசரகால பாதுகாப்பு மற்றும் உதவிகளுக்கான பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்படவும் இல்லை. தமிழக அரசு நியமித்த குழுவும் போராடுகிற மக்களை சந்திக்காமல் அரசுக்கு சார்பான அறிக்கையை வழங்கியது. அணு உலையை சுற்றியுள்ள பகுதிகளில் வாழுகிற மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிப்புகள் குறித்த எந்த ஆய்வுகளும் மேற்கொள்ளவோ, அவை குறித்த தகவல்களோ வெளிப்படுத்தபடவில்லை. இப்படி மக்களின் எந்த கோரிக்கைகளையும், பிரச்சனைகளையும் கண்டுகொள்ளாமல் கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்ப அரசு தயாராவது மக்கள் மீது தொடுக்கிற சனநாயக மறுப்பும், வன்முறையுமாகும். 

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் 1989 முதல் வன்முறையில்லாத மக்கள் போராட்டமாக நடைபெற்று வருகிறது. ’’கடந்த ஓராண்டாக அறவழியில்  நடந்துகொண்டிருக்கும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான இடிந்தகரை மக்களின் போராட்டம் தற்போது ஒரு முக்கிய கட்டத்தை அடைந்திருக்கிறது. சுதந்திர இந்தியா சந்தித்த மக்கள் திரள் போராட்டங்களில் முக்கியமான ஒன்று கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இந்திய தேசத்தின் ஆன்மாவை நோக்கி வலிமையான கேள்விகளை எழுப்பிய இந்தப் போராட்டம் இன்று அதிகாரத்தின் வன்கரங்களால் நசுக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கியிருக்கிறது. இந்த நிலையில் மக்கள் விடுதலையில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் போராடும் கூடங்குளம் மற்றும் இடிந்தகரை மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியது தார்மீக கடமை என்று நம்புகிறோம்.

எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்களாகிய நாங்கள் இடிந்தகரை மக்களுடன் நிற்கிறோம் என்பதை தெரிவிக்க விரும்புகிறோம். மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மக்கள் அரசாங்கம் என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. ஆனால் ஜனநாயக விழுமியங்களை காற்றில் பறக்கவிட்டு, அறவழியில் நின்று போராடிய இடிந்தகரை மக்கள் மீது இன்று மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் சர்வாதிகார அடக்குமுறையை ஏவியிருப்பதும் , கடந்த செப்டம்பர் 10 அன்று நடந்த முற்றுகைப் போராட்டத்தில் அந்த மக்கள் மீது கண்ணீர்ப் புகைகுண்டு வீசியும், தடியடி நடத்தியும் தாக்குதல் நடத்திய காவல்துறையினரின் அராஜகமும், குலசேகரப்பட்டினத்தில் அந்தோணி என்கிற மீனவர் பலியாகக் காரணமான துப்பாக்கிச்சூடும் கடும் கண்டனத்துக்குரியது. போராடும் மக்களின் ஒருங்கிணைப்பாளராகிய சுப உதயகுமாரையும் போராட்டக்குழுவினரையும் மனித உரிமைகளுக்கு புறம்பான முறையில் காவல்துறை நடத்துவதையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். பெண்களின் அதிகபட்ச பங்கேற்புடன் நடந்துவரும் இந்தப் போராட்டத்தில் பெண்கள் முன்னணியில் இருப்பதை தொடர்ந்து கொச்சைப்படுத்தும் ஆணாதிக்கப் பேச்சுகளுக்கும் எங்களது கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.

“கூடங்குளம் அணு உலைகள் இரண்டும் கட்டப்பட்டுள்ளதால் அவற்றை திறக்க வேண்டும்” என்கிற நிலைபாடு எவ்வகையிலும் ஏற்க கூடியதல்ல. மக்களின் எதிர்ப்பையும் மீறி அணு உலைகளை கட்டிய அரசின் தவறுக்கான தண்டனையை அம்மக்கள் மீது திணிப்பது சரியல்ல. கூடங்குளம் அணு உலை பிரச்சனையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு போன்ற அரசியல் கட்சிகள் மக்களின் நியாயமான இப்போராட்டத்தை ஆதரிப்பதற்கு பதிலாக மத்திய, மாநில அரசுகளின் சனநாயக மறுப்புக்கு துணையாக இருப்பது வருத்தத்திற்கும், கண்டனத்திற்குரியது. இத்தகைய போராட்டங்கள் சனநாயகத்தின் குரல்கள் என்பதை உணர்ந்து மக்களின் பக்கமாக நிற்பதே முற்போக்கான அரசியல் வெளியை உருவாக்கும்.

தமிழக அரசும் இந்திய அரசும் இந்த அராஜகப் போக்கை உடனடியாகக் கைவிட்டு போராடும் மக்களின் தார்மீக உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் உரிய மதிப்பும் அங்கீகாரமும் அளிக்க முன்வரவேண்டும் என்றும், இடிந்தகரை பகுதி மக்களின் வாழ்வாதாரங்களைச் சிதைக்கும் வகையில், காவல்துறையினர் நடத்திவரும் அத்துமீறல்களையும், தாக்குதல்களையும் கைவிடவேண்டும் என்றும் மக்களின் கோரிக்கையை ஏற்று அணு உலையில் எரிபொருள் நிரப்பும் முயற்சிகளைக் கைவிட்டு, அணு உலையை மூடவேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இடிந்தகரை மக்களின் மீது போடப்பட்டுள்ள பொய்வழக்குகளை விலக்கிக்கொள்ளவும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவும், காவல்துறையினரின் தாக்குதல்களால் உண்டான சேதங்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவும், வன்முறையை ஏவிய காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு தொடுக்கப்படவேண்டும் என்றும் வற்புறுத்துகிறோம்''

உங்கள் கருத்து என்ன?

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com