Thursday, August 30, 2012

அகதிகள் முகாம் போராட்டம்: : செந்தூரனுக்கு வேண்டுகோள்!

உண்ணாநிலை ஒரு போராட்ட தந்திரமென்று நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம். அத்தகைய நம்பிக்கை மக்களின் ஆழ்மனங்களில் பதிந்திருப்பதை அரசதிகாரம் விரும்புகிறது. காந்தியின் உண்ணாநிலை ஒரு அறப்போர் என்று "மகாத்மா" புகழ்தலுக்காக சொல்லப்படுவது இருக்கட்டும். ஆனால் காந்தியின் உண்ணாநிலை அன்றைய காலனியாதிக்க அதிகாரத்திடம் எடுபடவில்லை. அம்பேத்காரையும், காங்கிரசையும் மிரட்ட ஒரு தந்திரமாக மட்டும காந்திக்கு உண்ணாநிலை பயன்பட்டது. காந்தியை கேள்விக்கு அப்பாற்பட்ட வழிபாட்டு நாயகனாக மாற்றியிருக்கிற இந்தியாவும், மாநில அரசுகளும் உண்ணாநிலையை மக்களின் எதிர்ப்பு குரலாக பார்க்கவில்லை. உண்ணாநிலை கோரிக்கைகளுக்காக உடனடி நடவடிக்கை எடுக்கிற நிலையும் இல்லை. அரசு எந்திரத்திற்கும், அதிகார வர்க்கத்திற்கும் உண்ணாநிலை மீது எந்த நம்பிக்கையும் இல்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது.

ஆனால் மக்களுக்கான உரிமைகளுக்காக போராடுகிறவர்கள் தொடர்ந்து
உண்ணாநிலையை யுக்தியாக பல போராட்டங்களில் பயன்படுத்தியே வருகிறார்கள். அரசு எந்திரத்திற்கு எந்த நெருக்கடியும் இல்லாமல் தன்னையே வருத்தி சாகக்கொடுக்கிற எந்த முயற்சியையும் போராட்ட வடிவமாக தொடர்வது பயனற்றது. இந்தியாவிடம் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாமல் உயிரை காலத்திற்கு தின்னக்கொடுத்த திலீபனின் எந்த கோரிக்கையையும் காந்தீயம் "பேசுகிற" இந்தியாவும், அதன் அதிகார வர்க்கமும் ஏற்கவில்லை. முத்துகுமார் முதல் செங்கொடி வரையில் பலரும் தீயில் தனது உயிரை வேக வைத்து கோரிக்கைகளை அரசு அதிகாரத்திற்கு வைத்த போதும் அரசு அதன் போக்கிலேயே போகிறது.  

உண்ணாநிலை இருப்பவர்களது கோரிக்கைகளை முறையாக, சரியான நேரத்தில் அரசு கேட்டு, நடவடிக்கை எடுத்திருக்கிறதா என்றால் இல்லை. திரட்சி பெற்று வலுவான மக்கள் போராட்டங்களாக மாறுவதற்கான சாத்தியம் அல்லது அரசியல் காரணங்கள் இல்லாத போது உண்ணாநிலையை ஒரு சம்பிரதாய சடங்காக மட்டுமே அரசு எந்திரம் பதிவு செய்து "அவசர ஊர்தியுடன்" காவலர்கள் சூழ காத்திருக்கிறது. உண்ணாநிலை போராட்டங்களை எவ்வகையிலும் கண்டுகொள்ளாத அரச அதிகாரங்களை கொண்ட நாடு இந்தியா என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

உடலை வருத்தி உண்ணாவிரதமிருப்பதையும், உயிர்துறத்தலையும் போராட்ட வடிவமாக நம்புவதிலிருந்து தமிழ் சமூகம் மாற வேண்டும். செந்தூரனின் கோரிக்கைகள் மிக மிக நியாயமானவை. ஆனால் அவற்றை கேட்கும் நிலையில் அரசு அதிகாரம் இருந்திருந்தால் எப்போதோ கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டிருக்கும்.

இந்நிலையில், செந்தூரனும், அகதிகள் முகாம்கள் குறித்த கோரிக்கைகளுக்காக போராடுபவர்களும் போராட்ட வடிவத்தை மாற்றுவதே சிறந்தது. செந்தூரனின் உயிர் காப்பாற்றப்பட வேண்டும்!

உங்கள் கருத்து என்ன?

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com