Saturday, August 18, 2012

ஜெயமோகனின் காந்தி பக்தியும், அவதூறும்!

"காந்தி: புறவயநோக்கில்" என்னும் கட்'டுரையில் ஜெயமோகன்,

காந்தியைக் கிட்டத்தட்ட ஒரு மதநிறுவனர் இடத்துக்குக் கொண்டு சென்று உட்காரச்செய்துவிட்டது இந்தியமனம். அவரை வழிபடுதெய்வமாக்கி வாழ்க்கையில் இருந்து விலக்கிவைத்துவிட்டது. ’அவர் மகான்’ என்ற ஒரே வரி வழியாகக் காந்தியைக் கடந்து செல்லப் பழகிவிட்டோம்.
 என்கிறார்.

ஆனால் ஜெயமோகனும் காந்தியைக் கடவுளாக, விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட அவதாரமாக மிகநுட்பமாக புனைந்து வருகிறார்.
இதே கட்டுரையில்,
அவர் இந்தியதேசிய அடையாளமாக முன்வைக்கப்படுவதனாலேயே இந்திய மைய அரசின் மீதான எதிர்ப்புகள் அனைத்துக்கும் அவர் இலக்காகிறார். அவர் விழுமியங்களின் அடையாளமாக ஆவதனாலேயே அவர் மீறுவதும் மறுப்பதும் கலகம் எனப்படுகிறது. இன்றும் இந்த தேசத்தை ஒரு ஜனநாயக அமைப்பாக நிலைநிறுத்தும் சக்தி அவர் என்பதனால் எல்லா தேசவிரோதக் கூட்டத்துக்கும் அவர் எதிரியாகிறார். அவர் மீதான அவதூறுக்காகக் கோடானுகோடி பணம் அள்ளி இறைக்கப்படுகிறது.
என்கிறார் ஜெயமோகன்.

இந்திய மைய அரசுகளின் மீதான எதிர்ப்புகளை காந்தி மீது தொடுப்பதில்லை. பல்வேறு பிரச்சனைகளில் காந்தியின் அணுமுறையைகள், நிலைபாடுகள் காரணமாகவே விமர்சிக்கப்படுகிறார். சாதி குறித்த காந்தியின் நிலைபாடு, அதையொட்டி அம்பேத்காரை மிரட்ட ஏர்வாடா சிறையில் உண்ணாவிரதமிருந்தது, வைக்கம் வீதி நுழைவுப் போராட்டத்தில் காந்தியின் அணுகுமுறை.... இப்படி பல நிகழ்வுகளை காந்தி குறித்த விமர்சனமாக சொல்ல முடியும். ஆனால் இத்தகைய விமர்சனங்களை வசைகளும், அவதூறுகளும் நிறைந்த மாயக்கம்பளத்தால் மறைத்துவிடுகிறார் ஜெயமோகன்.

அம்பேத்காரையும், பெரியாரையும், நேதாஜியையும், பகத்சிங்கையும் அவர்களது போராட்ட வரலாற்றையும் கணக்கிலெடுக்காமல் காந்தியைச் சுற்றி விமர்சனமற்று எழுப்புகிற எந்த பிம்பமும் அவதாரமாக்குகிற புனைவு முயற்சியே. ஜெயமோகன் செய்துவருவதும் இந்துத்துவத்திற்கு ஆதரவான அத்தகைய ஒரு புனைவு முயற்சி. 1990க்கு பிந்தைய பகுதி வரையில் இந்துத்துவம் காந்தியையும், அம்பேத்காரையும் எதிர்த்தது, மறைத்தது, மறுத்தது. 1990களின் இறுதியில் ஒடுக்கப்படுகிற மக்களை இந்துத்துவக் கருத்தியலில் இழுப்பதற்கான நுண்ணரசியல் யுக்தியாக இறுதியில் அம்பேத்காரையும், காந்தியையும் பயன்படுத்தி வருகிறார்கள். அதே நோக்கத்திற்காக இன்று இந்துத்துவ “பிரச்சாரக்களில்” சிலர் அம்பேத்கரை வசதியாக பெயர்த்தெடுத்து மேற்கோள் காட்டவும், தனக்கு பிடித்தவராக முன்னிறுத்தவும் செய்யத்துவங்கியுள்ளனர். ஜெயமோகனின் கட்டுரைகளில் இந்துத்துவத்திற்கு ஆதரவான நுட்பமான போக்குகள்

ஜெயமோகன் கட்டுரையில் //அவர் மீதான அவதூறுக்காகக் கோடானுகோடி பணம் அள்ளி இறைக்கப்படுகிறது.// என்கிறார். நானறிந்த வரையில் அயல்நாடுகளில் காந்தியை சர்வரோக நிவாரணியாக முன்னிறுத்துவதையும், நூலகங்களில் இந்தியா சம்பந்தப்பட்ட பகுதியில் காந்தியின் வாழ்க்கை நூல்களும் நிரம்பியிருக்கிறது. காந்தி குறித்த உரையாடல்கள் நடைபெறுகின்றன. காந்தியை நேசிப்பவர்களாகவே இருக்கிறார்கள்.

//அவதூறுக்காகக் கோடானுகோடி பணம் அள்ளி இறைக்கப்படுகிறது.// என்று எந்த ஆதாரமுமில்லாமல் அவதூறை கிளப்புகிறார் ஜெயமோகன். ஜெயமோகனின் இத்தகைய அவதூறுகளும், இந்துத்துவ பிரச்சாரமும் ஒரே புள்ளியில் சந்திக்கின்றன. போகிற போக்கில் "அயல்நாட்டு சதி" என்பது இந்துத்துவ பிரச்சார தந்திரம். இந்த தந்திரம் மக்களுக்கு அச்சத்தை ஊட்டவும், மற்ற நாடுகளின் மக்கள் குறித்த வெறுப்பை விதைக்கவும், தாங்கள் தாக்குதலுக்குளாவது போன்ற பிரமையில் இருக்கவும் பயன்படுகிற மோசமான வலதுசாரி அரசியல் ஆயுதம். பல கட்டுரைகளிலும் இந்துத்துவ அரசியல் பிரச்சாரத்திற்கு சார்பாக ஜெயமோகன் இந்த அவதூறு பிரச்சார ஆயுதத்தை நுட்பமாக இலக்கியம் என்ற பெயரில் பயன்படுத்துகிறார்.

இந்துத்துவ கனவின் எதிரியாக காந்தி இந்துத்துவக் கூட்டத்தால் கொல்லப்பட்ட 60 ஆண்டுகளுக்கு பிறகு அதே இந்துதுவக் கனவிற்கு காந்தி இன்று கதாநாயகனாக்கப்படுகிறார். இந்துத்துவத்தின் எதிரியாக அடையாளப்படுத்தப்பட்டு கொலைசெய்யப்படுவதும், மரணத்தின் நீண்ட காலத்திற்கு பிறகு கதாயாகனாக பலியாக்கப்படுவதும் காந்தியின் ஆளுமைக்குள் இருக்கிற இருவேறு கூறுகளின் மிகப்பெரிய முரண்.
//இன்றும் இந்த தேசத்தை ஒரு ஜனநாயக அமைப்பாக நிலைநிறுத்தும் சக்தி அவர் என்பதனால் எல்லா தேசவிரோதக் கூட்டத்துக்கும் அவர் எதிரியாகிறார்.// என்று காந்தியை விமர்சிப்பவர்களை "தேசவிரோத கூட்டமாக" சித்தரிக்கிறார் ஜெயமோகன். இந்த நிலப்பரப்பையும், இதில் வாழுகிற பல்வேறு தேசிய இன மக்கள் சமூகங்களையும், அவர்களது மொழி, பண்பாடு, கலாச்சாரம், அரசியல் உரிமைகளையும் ஆதரிக்கவும், பேணவும், வளர்க்கவும், பாதுகாக்கவும் துடிப்போடும், உண்மையான உள சுத்தியோடும் எந்த எதிர்பார்ப்புகளுமில்லாமல் அன்றாடம் உழைக்கிற, போராடுகிற பலர் காந்தியின் மீதான விமர்சனங்களை நேர்மையுடன் வைக்கிறார்கள். அத்தகைய விமர்சனங்களை வசைகளாலும், அவதூறுகளாலும் கடந்துவிட முடியாது. காந்தி பக்தியை பரப்புவது ஒருபுறமும் மக்களையும், நாட்டையும் அச்சுறுத்துகிற பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களின் கொள்ளைகளை, அரசியல், பொருளாதார பிரச்சனைகளை, இனப்படுகொலைகளை மொழியின் கோர்வைக்குள் மறைப்பது மறுபுறம். இதைத் தான் ஜெயமோகன் செய்துவருகிறார்.

/இன்றும் இந்த தேசத்தை ஒரு ஜனநாயக அமைப்பாக நிலைநிறுத்தும் சக்தி அவர்// என்கிறார் ஜெயமோகன். இந்தியா உண்மையிலேயே ஒரு சனநாயக அமைப்பாக செயல்படுகிறதா? காந்தி என்கிற பிம்பத்தை முன்னிறுத்துவதால் மக்களுக்கான சனநாயகத்தை உருவாக்க முடியுமா?

1 கருத்துக்கள்:

Anonymous said...

காந்தியை வசை பாடும் அமைப்புகளும்,நபர்களும் இருக்கிறார்கள்.இவர்களால் காந்தி/காந்தியத்தை முற்றாக நிராகரிக்கவே முடியும்.மதிமாறன்,ம.க.இ.க,பெரியாரியவாதிகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.இதற்கு நேர் எதிர் ஜெயமோகன் கும்பல்.அவர்களால் காந்தியை விமர்சிப்பதைக் கூட அறிவு நேர்மையுடன் அணுக முடியாது.இரு தரப்புமே பிரச்சாரம்தான் செய்கிறார்கள்,அறிவார்ந்த அணுகுமுறை இல்லை.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com