Thursday, January 29, 2009

தீக்குளிக்கும் முன்னர் முத்துகுமாரின் இறுதி அறிக்கை!

தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு:

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்‘ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.

இவ்வாறு அந்த துண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது...

செய்தி: விகடன்

படம் கோ.சுகுமாரன்

68 பின்னூட்டங்கள்:

Sridharan said...

நெஞ்சு பொறுக்குதில்லையே..ரத்தம் கொதிக்கிறது. ... நண்பருக்கு கண்ணிர் அஞ்சலி.............

ஆதித்தன் said...

சகோதரா! எங்கள் நெஞ்சில் நீ நீடூழி வாழ்வாய். வாயடைத்துப் போனேன். வேறு வார்த்தைகள் வரக்காணேன்.

Anonymous said...

நடந்த நிகழ்ச்சியை கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன், மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது.

Anonymous said...

can someone translate this..we should circulate laksh of copies...
it should reach all over the world

MUTHU said...

இன்று முத்துகுமரன் என்னும் விதை விதைக்கபட்டு இருக்கிறது .விரைவில் அது ஆலமரமாய் வளர்ந்து உங்களை வேரறுக்கும்

வளர்மதி said...

திரு,

மிகுந்த வேதனையாக இருக்கிறது.

செய்தியைக் கேள்விப்பட்டபோது விவரம் அறியாத உணர்ச்சிவயப்பட்ட இளைஞரின் செயலோ என்று எண்ணினேன்.

இவ்வறிக்கையை வாசித்ததும் அவ்வெண்ணம் நீங்கியது.

இத்துணை தெளிந்த சிந்தனை கூடிய இளைஞர் தன்னை மாய்த்துக்கொள்ள எடுத்த முடிவு ... என்ன சொல்வதென்றே தெரியவில்லை ...
எனது இயலாமை கூனிக்குறுகச் செய்கிறது ... அறிவுஜீவி பட்டத்தை சுமந்து என்னத்த மயிராப்போக என்று :(

முத்துக்குமாரின் இவ்விறுதி அறிக்கையை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்வதும் விரிவாக வினியோகம் செய்வதும் உடனடி வேலை.

Anonymous said...

இந்திய அரசு இனியாவது யதார்த்தத்தை உணர்ந்து இலங்கைக்கான தனது ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும்.இல்லையேல் கன்னியாகுமாரி காஷ்மீர் ஆவதைத் தடுக்க முடியாது.
தமிழன் என்பதாலேயே புறக்கணிக்கப் படுகிறோம் என்ற விதை தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் விழுந்துவிட்டது.அது மரமானால் இந்தியாவுக்கு வெளியிலிருந்து தீவிரவாதம் பரவ வேண்டியதில்லை

வாசு said...

சகோதரனுக்கு என் கண்ணீர் அஞ்சலி.

இன்னும் எப்படி சொன்னாலும் இந்த கேடு கெட்ட அரசியல்வாதிகள் திருந்தபோவதில்லை. மக்கள் புரட்சிதான் இதற்கு சரியான தீர்வாகும்.

ஒன்றுபடுவோம். உரிமை காப்போம்.

தமிழ் ஓவியா said...

முத்துக் குமாரின் உணர்வை மதிக்கிறேன். அதே வெளை இது போன்ற குறிப்பாக தீக்குளிப்பு போன்ற போராடங்கள் தேவையில்லாதது. அருள்கூர்ந்து யோசித்து மாற்றுப் போரட்ட வடிவத்தை கையிலெடுங்கள்.

இது குறித்து தி.க.தலைவர். கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள செய்தி இதோ:

"அந்தோ! கொடுமை! கொடுமை!! ஈழத் தமிழர் பிரச்சினை:
சென்னையில் இளைஞர் தீக்குளித்து மரணம்

தற்கொலைப் போராட்டத்தைக் கைவிட்டு
அறப்போர்பற்றி சிந்தியுங்கள்!
தமிழர் தலைவர் கி. வீரமணி அன்பு வேண்டுகோள்

ஈழத் தமிழர் படுகொலையைத் தடுக்க வேண்டி மாணவர்கள் உண்ணாவிரதம் போன்ற அறப்போர்களில் ஈடுபட்டதைத் தாண்டி, இன்று சென்னை சாஸ்திரி பவன் முன்பு தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் தனக்குத்தானே தீக்குளித்து இறந்து விட்டார் என்ற செய்தி மிகுந்த வேதனைக்குரியது; ஆழ்ந்த துன்பத்தைத் தருவது.
இந்தியப் பேரரசு இதுபோன்ற கொடுமைகள் நடக்காவண்ணம் மேலும் போர் நிறுத்தத்திற்கு வற்புறுத்த முன்வாருங்கள்.

ஈழத் தமிழர் படுகொலையைத் தடுக்க இங்குள்ள நாம் உயிர்த் தியாகம் செய்வது என்பதனால் முழுப் பயன் அடைந்து விட முடியாது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு போராடிட உயிருடன் இருப்பது அவசியமாகும்.

எனவே, மாணவத் தோழர்களே, இளைஞர்களே அருள்கூர்ந்து இம்மாதிரி தற்கொலைப் போராட்ட முயற்சியைக் கைவிட்டு, வேறு ஆக்க ரீதியான அறப்போர்கள் பற்றி சிந்தியுங்கள் என்று அன்புடனும், உரிமையுடன் மாணவத் தோழர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
---------நன்றி "விடுதலை" 29-1-2009

கிரி said...

இந்த பாழாய் போன அரசியல்வாதிகளை நினைத்து மனம் வெதும்புவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

Anonymous said...

மக்களே சோகம். இது பெரும் சோகம்.
தவிர்க்க முடியாததை எண்ணி இயலாமையால் கண்கள் பனிகின்றன.
அரசியல் வியாபாரிகள் இனியாவது திருந்த வேண்டும். பத்திரிகைகள் இந்த அறிக்கையை இருட்டடிப்பு செய்யும் என எதிர்பார்க்கிறேன். தமிழக முதல்வரையும் விமர்சிக்கிறது. இந்திய அரசையும் விமர்சிக்கிறது.
முதுஹெலும்பு இல்லாத இன்றைய பத்திரிக்கைகள் இந்த அறிக்கையை மட்டுறுத்தியாவது வெளியிடுமா என்பதே சந்தேகம்.
இந்த அறிக்கை மக்களை சென்றுஅடைய நம்மலான முயற்சியை எடுக்க வேண்டும் அதுதான் தியாக செம்மல் முத்து குமரனின் மரணத்தை நாம் கை கட்டி பார்த்து கண் மூடி இருந்ததற்கு ஒரு சிறிய பரிகாரம் ஆகும். ஊரார் அவருடைய தியாகத்தை அறிவீனமான செயல் என்று அவசர கருத்து எடுக்குமுன் விரைந்து செயல்பட பதிவுலகை சேர்ந்த தமிழ் கூறும் நல்லுலகை கேட்டுக்கொள்கிறேன்.

Anonymous said...

மக்களே சோகம். இது பெரும் சோகம்.
தவிர்க்க முடியாததை எண்ணி இயலாமையால் கண்கள் பனிகின்றன.
அரசியல் வியாபாரிகள் இனியாவது திருந்த வேண்டும். பத்திரிகைகள் இந்த அறிக்கையை இருட்டடிப்பு செய்யும் என எதிர்பார்க்கிறேன். தமிழக முதல்வரையும் விமர்சிக்கிறது. இந்திய அரசையும் விமர்சிக்கிறது. முதுஹெலும்பு இல்லாத இன்றைய பத்திரிக்கைகள் இந்த அறிக்கையை மட்டுறுத்தியாவது வெளியிடுமா
என்பதே சந்தேகம். இந்த அறிக்கை மக்களை சென்றுஅடைய நம்மலான முயற்சியை எடுக்க வேண்டும் அதுதான் தியாக செம்மல் முத்து குமரனின் மரணத்தை நாம் கை கட்டி பார்த்து கண் மூடி இருந்ததற்கு ஒரு சிறிய பரிகாரம் ஆகும். ஊரார் அவருடைய தியாகத்தை அறிவீனமான செயல் என்று அவசர கருத்து எடுக்குமுன் விரைந்து செயல்பட பதிவுலகை சேர்ந்த தமிழ் கூறும் நல்லுலகை கேட்டுக்கொள்கிறேன்.

Anonymous said...

எங்களுக்காக உயிர் நீத்த unkalukku எதுவுமே செய்ய முடியாத நிலையில்...

யட்சன்... said...

உணர்ச்சி மேலீட்டால் நடைபெறும் இத்தகைய இழப்புகள்...தவிர்க்கப்படுதல் அவசியம்.

:((

Anonymous said...

முத்துக்குமாரின் ம‌ர‌ண‌ம் ம‌ன‌தை மிக‌வும் நெருட‌ச்செய்கிற‌து.
....
வ‌ள‌ர், உண்மையில் எங்க‌ளில் கையாலாக‌த்த‌ன‌த்தை நினைக்க‌ வெறுப்பாய்த்தானிருக்கிற‌து. அறிவையும் உண‌ர்ச்சியையும் தெளிவாக‌ப் பிரிக்க‌ வ‌கையிருக்கா என்ன‌? ப‌ல‌ விட‌ய‌ங்க‌ள் ப‌ற்றி மிக‌ உறுதியாய்ப் பேசும் என‌து ந‌ண்ப‌ர் கூட‌, ஈழ‌த்தில் ந‌டைபெறும் கொலைக‌ளைச் செய்தியாய்க் கேட்டு க‌ண்ணீர் விட்டுக் க‌ல‌ங்கிப்போன‌போது அறிவென்ன‌ உண‌ர்வென்ன‌? இப்போது முத்துக்குமாரின் செய்தியை அறிகின்ற‌போதும் இந்நிலையே சூழ்கிற‌து.

chandru / RVC said...

முத்துகுமரன் என்ற தமிழ் வீரனுக்கு ஒரு வீரவணக்கம்...!
தமிழீழம் உலக சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற ஒரு அரசியல் ரீதியிலான தீர்வுக்காகத்தான் புலிகள் காத்திருப்பதாகத் தோன்றுகிறது. போரை முன்னடுத்து தென்னிலங்கைக்கு நகர்த்துவது அவர்களுக்கு ஒரு பெரிய விடயமாக இருக்க முடியாது. இன்றைய முத்துகுமரனின் மரணம் சர்வதேச சமுதாயத்தாலும் முக்கியமாக இந்திய அரசாலும் சரியான நோக்கில் புரிந்துகொள்ளப்படவேண்டும். இந்தியா இனிமேலும் வாளாவியிருப்பது நல்லதல்ல. மாணவர்கள் உணர்ச்சிவசப்பட்டு இத்தகைய முடிவுகளை எடுத்துவிடக்கூடாது.

பிரான்சிஸ் சைமன் said...

முத்துக்குமாரின் மரணம் என் மனதை மிகவும் பாதித்தது!
இந்திய அரசியலில் ஆக்கிரமித்து கொண்டிருக்ககும் நரிக் கூட்டத்தை சாடி இந்த கவிதையை முத்துக்குமாருக்காக சமர்பிக்கிக்றேன்
நரிக் கூட்டம்

சிந்தித்துப் பார்த்தேன்
குபிரென்று வந்த சிரிப்பை அடக்கமுடியவில்லை
அன்று.....
தமிழன் என்ற பினைப்பில்
எங்கள் கூட்டணி உதயமானது
அரசியல் என்ற கலத்தில்
உங்களை முத்திரை பதிக்கவைத்தோம்
இன்று.....
பாலஸத்தினத்தில் நடக்கும் போர்க் கொடுமை
உங்களுக்கு தெரிந்த அளவு
இங்குள்ள தமிழனின்
அவநிலையை தெரிந்துக் கொள்ள முடியவில்லை
பார்க்க முடியாத குருடர்களாய்
நீங்கள் இருப்பது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது!
பாலஸத்தினத்திற்கு கொடி தூக்கிய நீங்கள்
இலங்கையில் நடக்கும் கொடுமைகளுக்கு
ஏன் கொடி தூக்கவில்லை என்று
நான் கேட்க மாட்டேன்
கேட்டாலும் ஒன்றும் நடக்கபோவதில்லை

-பிரான்சிஸ சைமன்,
பினாங்கு, மலேசியா.
http://bryanisaac.blogspot.com

sathiri said...

சகோதரனிற்கு வீரவணக்கங்கள்

பிரான்சிஸ் சைமன் said...

இனிமேலாவது...
"ஜெய் இண்ந்" என்று சொல்வதை தமிழ் நாட்டில் வாழும் ஒவ்வொரு தமிழனும் உறுதி கொள்வது சாலச் சிறந்தது என்று நான் கருதுகிறேன்.

தமிழனுக்கு நடக்கும் கொடுமையைக் தட்டிக் கேட்க இயலாத
இந்திய அரசாங்கத்திற்கு
"ஜெய் தமிழன்"

பிரான்ஸிஸ் சைமன், மலேசியா

சுப.நற்குணன்,மலேசியா. said...

நெஞ்ச உலுக்கும் துயர நிகழ்வு. ஈழ மக்களின் உயிராதாரத்திற்குத் தன்னுடைய உயிரையே பணயம் வைத்துப் போராடியிருக்கும் தமிழகப் போராளி முத்துக்குமார் பொன்னடிகளைப் போற்றுகிறேன்.

அதேவேளையில், மற்றுள்ள இளையோர்கள் இத்தகு முடிவை நாடலாகாது என வேண்டுகிறேன்.

முத்துக்குமார் ஆதன் அமைதிபெற இறைமையை இறைஞ்சுகிறேன்.

அவரின் உயிராயுதம் தமிழீழத்தை மீட்டெடுக்கும்..!!

Voice on Wings said...

ஒரு சேர வரலாறு, இலக்கியம் எல்லாம் படைத்து விட்டுச் சென்று விட்டார் இந்த வீரச் சகோதரர். இது போன்ற ஒரு தெளிவான ஆவணத்தை இது வரை தமிழில் வாசித்ததில்லை. அவருக்கு எனது வீர வணக்கங்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது அஞ்சலிகள்.

பலரும் குறிப்பிட்டது போல், இது பல மொழிகளில் (முடிந்தால் இந்தியிலும்) மொழிபெயர்க்கப்பட்டு பரவலாகச் சென்றடைய வேண்டும். எல்லா முக்கிய தேசிய / பிராந்திய அரசியல் கட்சித் தலைமைகள், தொலைக்காட்சிகள், அச்சு ஊடகங்கள் ஆகிய எல்லாருக்கும் அனுப்பப் பட வேண்டும்.

றஞ்சினி said...

மிகவும் வேதனையான நிகழ்வு.. அந்த சகோதரருக்காகவும் அவரின் குடும்பத்தினருடனும் உறவுகளுடனும் என் ஆழ்ந்த துக்கத்தையும் பகிர்ந்துகொள்கிறேன் .
இப்படியான உணர்ச்சிவசப்பட்ட நிகழ்வுகள் மேலும் நடக்ககூடாது ..
இதனால் இலங்கை அரசுக்கோ ,இந்திய அரசுக்கோ எந்த இழப்பும் இல்லை ஒரு உயிரை நாம் பறிகொடுத்ததைத்தவிர ..

ISR Selvakumar said...

சகோதரா,

உனது தாய்-தந்தையர்
உனது சகோதரன்-சகோதரிகளை
நினைத்தால் கவலையாக இருக்கிறது.

சிதையில் உனது கனவுகளை விதைத்தாயா?
உனது குடும்பத்தார் கனவுகளை சிதைத்தாயா?

உனது முடிவு
ஈழப் பிரச்சனையின் முடிவாக மாறட்டும்.

TamilBloggersUnit said...

மனிதன் சொல்கின்ற நியாயங்கள் என்ன? பிரம்மன் உண்டாக்கும் மாயங்கள் என்ன பார்! தீமையின் வேர்தனை அழித்திட தொடங்கும் தர்மத்தின் பயணம் இது...... ஈழ தமிழர்களுக்காக தன் உயிரை மாய்த்துக்கொண்ட முத்துகுமாரனுக்கு மரியாதை செலுத்துகின்றோம்.
நண்பருக்கு கண்ணிர் அஞ்சலி....

Unknown said...

காலம் உனக்கொரு பாட்டெழுதும்

Anonymous said...

Muthukumar Photo
http://kelvi.net/wp-content/uploads/2009/01/muthukumar1.jpg

-/சுடலை மாடன்/- said...

நெஞ்சை உலுக்கும் துயர நிகழ்வு. முத்துக்குமார் உணர்ச்சிவயப்பட்டு இதைச் செய்யவில்லை. உலகத்தமிழருக்கும், மனிதாபிமானிகளுக்கும் தன்னுடைய செய்தியைத் தெளிவாக எழுதிக் கொண்டு சேர்க்கும் உயரிய நோக்கத்துடன் இதைச் செய்திருக்கிறார்.

ஆனாலும், அவர் ஏன் இதைச் செய்ய வேண்டும்? தமிழர்களிடம் எந்த மதிப்புமில்லாத செல்லாக் காசுகளும், இந்தியதேசியப் பாசிசப் பயங்கரவாதிகளுமான சோ, இராம் போன்ற மிருகங்கள் இந்தியத் தொலைக்காட்சிகளில் தோன்றி தமிழ்நாட்டின் பிரதிநிதிகளாகக் கொக்கரித்துக் கொண்டிருக்க முத்துக்குமார் போன்ற இளைஞர்கள் ஏன் கருகிச் சாகவேண்டும்? பாவம், எப்படி துடிதுடித்துப் போயிருக்கும் அந்த உடல், என்ன பாடுபட்டிருக்கும் அவரைப் பெற்றவர்களுடைய மனம்? அவர்களுக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் என்று யோசிக்க வேண்டும்.

இன்னும் எத்தனை தமிழ் உயிர்களைப் பலிகேட்கப் போகிறதோ இந்தியதேசியப் பயங்கரவாதம்?

நன்றி - சொ.சங்கரபாண்டி

கலை said...

:( என்ன சொல்வதென்றே தெரியவில்லை. :((

Anonymous said...

சகோதரனுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்

Aravinthan said...

நாம் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது உங்கள் ஆதரவுக்கரத்தை மட்டுமே, உங்களினது மத்திய மாநில அரசுகளின் அசைவுகளையே! மாறாய் உயிர்களை அல்ல!

நம் மக்களுக்காக உயிரை தியாகம் செய்த தியாகிக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்

தமிழ் மதுரம் said...

திரு இனியும் வேண்டாம் இந்த அவலம்.. எங்கள் தமிழர்களுக்கு எப்போது தான் விடிவோ??
எங்களால் எதுவும் கூற முடியவில்லை...மனம் நொருங்கி அழுகின்றோம்.

Anonymous said...

Indian government machinery is against Tamils.The Congress Party must be wiped out from Tamil Nadu.We must take lessons from the Yugoslavia history.This arrogant accident called 'INDIA' is the root cause for all evils in the society. Tamils must sharpen their minds and start a non-cooperation movement immediately on the lines of Gandhiji. The government which conspires against its people doesn't have have any moral authority to rule.Should we continue under the 'India' banner any longer? Every tamil family must discuss this issue collectively in their homes and take the right decision and should implement the same without fear.

Anonymous said...

இவ்வாறு சிந்தித்து விரித்து எழுதியிருப்பவர் அடையாளத்துக்காகவேனும் தன்னைத் தீமூட்டிக் கொண்டிருக்கக்கூடாது. கொளுத்தப்படவேண்டிய கொழுப்பேறியவர்கள் இருக்கையிலே தன்னைத் தானே கொளுத்தியது முறையுமல்ல, சிறந்த எடுத்துக்காட்டுமல்ல.

பாக்குநீரணைக்கு அந்தப்புறம் உயிர்தப்பவேண்டுமேயென்று துடிக்கும் வேறுவழியற்ற இளைஞர்களின் குழந்தைகளின் வயோதிபர்களின் உடல்களை எறிகணை கருக்கக் காண்கிறோம். இந்த இளைஞருக்கோ எவ்வளவோ எடுத்துச் செய்ய வாய்ப்பிருந்தும் தன்னைக் கருக்கிக்கொண்டாரே. இது முறையல்லை. இதைக்கூடக் கிண்டல் செய்யும் கூட்டம் இருக்கிறது. பத்திரிகைகளிலே, இணையத்திலே, காணொளி வானொலி ஊடகங்களிலே
கருத்து எள்ளி நகையாடிச் சொல்லப்போகிறது. அதை எப்படியாக எதிர்கொள்வதென்பதை நாம் தீர்மானிக்கவேண்டும். தன்னை உருக்கி இறக்கும் செயலை ஊக்கிவிக்கக்கூடாது. அதேநேரத்திலே அதைக் கிண்டல் செய்யும் இழிபிறவிகளையும் உணரச் செய்யாது விடக்கூடாது.

ஆனால் இவரது இறப்பு வெறுமனே தீக்குளித்தார் என்று சொல்லப்படுவதுக்கு மாறாக வீரமரணம் என்று இங்கே இயல்பாகவே சொல்லப்படுவது ஈழக்கனவை அழித்து, இந்திய அரசும் சில பிறவிகளும், தணலைக் கனல்கமிழத் தமிழகத்திலே கொண்டுவந்து கொட்டிவிட்டுப்போயிருக்கின்றார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.

Anonymous said...

தமிழ்மக்களே... வணக்கம்.
கள்ள மௌனம் சாதிக்கிற இந்திய ஏகாதிபத்தியம் அழிக்க பட வேண்டியதுதான் என்று
தோன்றுகிறது.

கலைஞர் கள்ள அறிக்கை அரசியல் நடத்தி வரு்கிறார்.இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? மாணவர்களே... நீங்கள் போராடி் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடிக்க , வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். ஜாதியை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது.அகிலஇந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும்.

Thamira said...

இவற்றையெல்லாம் படித்துக்கொண்டே நிம்மதியாக உண்டுறங்கிக் கொண்டிருப்பதற்காக வெட்கித் தலைகுனிகிறேன். முத்துக்குமரனை வணங்குகிறேன்.

Anonymous said...

4 Indian military experts wounded in Vanni
[TamilNet, Friday, 30 January 2009, 07:01 GMT]
Four Indian military experts, assisting the Sri Lankan military, were wounded this week in Vanni and are undergoing treatment in Colombo, reliable sources told TamilNet Friday. The story, first broke by the Australia based Global Tamil Vision (GTV) on Thursday, had said the wounded were Indian soldiers who were undergoing treatment at a military hospital in Colombo. Although TamilNet was able to confirm through reliable sources on Friday that there are at least 4 Indian military experts undergoing treatment, specific details were not obtainable due to the prevailing threat on the right to know information in the island.

The wounded Indians were 'expert military personnel' who have been providing 'special field assistance' to the Sri Lankan military, the sources told TamilNet.

The report comes amid protests in TamilNadu over unconfirmed reports that alleged shipment of tanks were on they way to Sri Lanka as military aid from India.

In September 2008, two Indian radar operators working for Sri Lankan Air Force (SLAF) had sustained injuries in an attack carried out by the Liberation Tigers of Tamileelam (LTTE) on Sri Lankan forces Vanni Headquarters (Vanni SF-HQ) located in Vavuniyaa.

Anonymous said...

Let Tamils will decide their destiny not only the people of Eelam but also from the Tamilnadu.


Tamilnadu should be free from betraying Indian Nation.Now onwards try to identify yourself as Tamil not an Indian .

Unknown said...

இதற்க்கு அரசு செவி சாயத்ததுபோல் தெரியவில்லை ....
இவரின் மரணத்தை பத்தோடு பதினொன்னாக கணக்கில் சேர்த்துதான் மிச்சம் ....
இவரின் எறிந்த சூடு தணிந்தாலும் ... இவரின் ரத்தத்தின் சூடு தணியவில்லை .. அதை அவர் மடலாக விட்டுச்சென்றுள்ளார் ... அதற்கான தீர்வு கிடைத்தே ஆகவேண்டும்...

இம்மடலை அவர் எழுதும்போது அவரின் ரத்தச்சூடு அளவையில் அடங்கா சூரியனை விட பன்மடங்கு இருந்திருக்கும் ...." முத்தை இழந்தோம் ..... முடிவு தெரிய...
விடை கிடைக்குமா ... விழிகள் இயங்க ...."


தலை வணங்குகிறேன் தமிழா.....

Anonymous said...

வர போற தேர்தல்ல எந்த பன்னாடைக்கும் ஒட்டு போடதிங்க

அருள் said...

செய்வ‌த‌றியாது த‌வித்து நிற்கின்ற‌து உல‌க‌த் த‌மிழின‌ம்........
க‌ண்டிப்பாக‌ அர‌சிய‌ல் க‌ட்சி த‌லைவ‌ர்க‌ளைத் த‌விர‌ ஒவ்வொரு த‌மிழினும் குமுறிக்கொண்டிருகிறான் ஈழ‌த்த‌மிழின‌த்தின் நிலைக் க‌ண்டு........முத்துகும‌ரா ஏன‌ப்பா இப்ப‌டி செய்தாய், அறிவு த‌ள‌த்தில் போரிடும் போர்வீர‌ன் உம்மை இழ‌ந்த‌து த‌மிழின‌த்தின் பெரிய‌ இழ‌ப்பு இல்லையா?

எப்ப‌டிய‌ப்பா உன‌க்கு இவ்வ‌ள‌வு துனிச்சல் வ‌ந்த‌து உம‌து உயிரை மாய்த்துக்கொள்ள‌?
வாய்ச்ச‌வ‌டால் விட்டுக்கொண்டு ஒரு துரும்பைக்கூட‌ கிள்ளி போடாத‌வ‌ர்க‌ள் ம‌த்தியில் நீ உன் உயிரை துச்ச‌மாய் நினைத்து தீக்கு இரையாகியிருகிறாய்.........விய‌க்க‌ வைக்கின்ற‌து உம் இன‌ப்ப‌ற்று!!!
உன்னை ந‌ம்பி இருக்கும் உம் குடும்ப‌த்தின‌ரை மீளாத்துய‌ரில் விட்டுவிட்டு நீ மீளாம‌ல் போய்விட்ட‌யே!
அவ‌ர்க‌ளுக்கு அறுத‌ல் யாரால் சொல்ல‌முடியும்?

நீ இட்ட‌ தீ திக்கெட்டும் ப‌ர‌வ‌ட்டும் த‌மிழின‌ எழுச்சி தீயாக!
அது பெற்ற‌டுக்க‌ட்டும் ந‌ம் இன‌ விடுத‌ல‌யை..........

இன‌த்திற்க்காக‌ இன்னுயிரை ஈந்த‌ ம‌ற‌வ‌ர்குல‌ த‌மிழா!
உம‌க்கு என் வீர‌ வ‌ண‌க்க‌ங்க‌ள்!!!

Anonymous said...

உங்கள் பேர் உள்ளத்தின் தமிழ் ஈழ தாயக தாகம் உண்மையில் மலரும்..அமையும்.. ஒப்பிலா அர்ப்பணிப்பு.. இப்ப‌டி இனி எவ‌ருமே செய்துவிடாதீர்கள்.. நம் உறுதியான வாழ்வே மெய்யான போர்..
வீரவணக்கம் நண்பா..

G.T.Arasu said...

தமிழரே,உமது தியாகம் வாழும்.
தாய்த்தமிழுக்கு நூற்றுக்கணக்கில் உரிர் கொடுத்தது இளஞ்சிங்கங்கள்.அந்த அலைமீது ஏறி உப்பரிகைகளில் இடம் பிடித்தோர் வடித்த போலிக்கண்ணீர்
கணக்குகளில் நம்பிகையிழந்து
என்ன செய்து உரங்கும் சோதரர்களை உலுக்கலாம் என்று திட்டமிட்டனையோ?
தமிழர்களை சாதியுணர்வில் சாய்து வைத்திருக்கும் கொடுமைக்கு வழி காண துடித்தனையோ?
தமிழ்த்தாயின் புதல்வர்கள் வீறு கொள்வர்.சாதி,சமய பிரிவுகளை ஒதுக்கி சோதரர்களாய் ஆழிப்பெரலையாய் எழுவர். ஒட்டுப்பொறுக்கிகளை ஒரு வீச்சில் பிடுங்கிஎறிவர்.
என்னவாயினும் உன் முடிவு எனது கண்களை குளமாக்குகின்றதே.
எரிவதற்கு முன் உன் எழுத்துகளையல்லவா நாங்கள் பார்த்து
கொஞ்சம் சூடு சொரணை பெற்றிருக்கவேண்டும்.உன்னது முடிவல்ல்.பெரிய துவக்கமாகும்.
அன்புடன்
அரசு

Richard.R said...

உன் இழப்பை கண்டு எழுதப்படும் வாசங்களை காண நீ இல்லை,
உன் உயிர் தியாகத்திற்கு முன் உனது வாக்குமூலத்தின் மூலம் உனது எண்ணங்களை கோரிக்கைகளை
வைத்துள்ளாய், உன்னை தலை வணங்குகிரேன்,

உன் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிரேன் அதோடு ஈழமக்களுக்கும்
விடுதலை பெற

Richard.R said...

உன் இழப்பை கண்டு எழுதப்படும் வாசங்களை காண நீ இல்லை,
உன் உயிர் தியாகத்திற்கு முன் உனது வாக்குமூலத்தின் மூலம் உனது எண்ணங்களை கோரிக்கைகளை
வைத்துள்ளாய், உன்னை தலை வணங்குகிரேன்,

உன் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிரேன் அதோடு ஈழமக்களுக்கும்
விடுதலை பெற

துஷா said...

என் இனத்தின் விடுதலைக்கு அக உன்னையே மாய்த்துக்கொண்ட உன் ஆத்மா சந்திக்கு பிரார்த்திக்கின்றேன்

Anonymous said...

நனிவளஞ்சூழ் தமிழகமும் தமிழீழமும் தனியரசு எய்தும்நாள் வாராதோ? - அன்பன்

Anonymous said...

திரு,
முத்துகுமாரின் இறுதி அறிக்கை இங்கே ஆங்கிலத்தில் மொழி பெயர்கபடுளது. இதையும் ஒரு பதிவாக இடுங்களேன்.

http://www.tamilnet.com/art.html?
catid=79&artid=28208

நன்றி

Anonymous said...

A supreme sacrifice!!!! Every Tamil holds you in the Highest regard!! No use , relying on India to help. 70 Million tamils on TN, a half a million Tamils ready to be trained on warfare can settle the Eelam issue once and for all.

New Delhi Govt!! Keep it in mind , you have earned the curses of the Tamil people, Wish in the next war with Pak you would lose!!

தேவன் மாயம் said...

ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.///

என்ன செய்வது பின்னூட்டமோ கருத்தோ எழுதக்கூட நமக்கு தகுதி இல்லையோ என்று தோன்றுகிறது...
இறந்து புகழ் பெற்றான் முத்துக்குமார் தமிழக மக்கள் சார்பாக/

Anonymous said...

நெஞ்சு பொறுக்குதில்லையே..ரத்தம் கொதிக்கிறது....
சகோதரனுக்கு என் கண்ணீர் அஞ்சலி.

KRISHMANIVEL said...

Kanneer varukinnradhu. Veru ethuvum Ezhudha mudiyavillai. Veeranukku Vanakkam.

Manivel

Anonymous said...

இந்தியாவின் துரோகத்தை வரலாறு மன்னிக்காது.

நம் சகோதரனை இழந்துள்ளோம், மனம் வலிக்கிறது, இது சரியா தவறா என்று பட்டிமன்றம் நடத்த முடியாது.

முத்துக்குமார் கேட்ட கேள்விக்கு பதில்?

ஒவ்வொரு இளைஞனின் கேள்வி அது பதில் சொல்லட்டும் தமிழகத்தின் தலைவர்கள்


கண்ணீருடன்

முகமது பாருக்

Anonymous said...

முத்துக்குமார் ஈழத்திற்க்காக தன்னுயிர் ஈந்து தமிழ் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய். அன்பான தமிழ் பேசும் அன்னிய தேச தமிழர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன், இனியும் தமிழ் நாட்டிலிருக்கும் அரசியல் வாதிகளின் சித்துவிழையாட்டுகளை நம்பி ஏமாந்துவிடாதீர்கள். இவர்கள் சுயனலவாதிகள். சுயநலத்திற்க்காக தமிழையும் தமிழ்மக்களையும் கூறுபோட்டுவிற்றுவிடுவார்கள். இவர்கள் இந்திய அரசிடமும், சிங்கள அரசிடமும் விலை போனவர்கள். தமிழை சோற்றுக்காகவும், சுகபோக வாழ்விற்க்கும் பயன்படுத்திவிட்டு எச்சில் இலை போல் தூக்கி எறிந்து விட்டார்கள். இன்று இந்தியம், தேசியம் பேசுகிறார்கள். இவர்கள்தான் காரணம் இன்று தமிழன் வீடிழந்து, மானமிழந்து நிற்ப்பதற்க்கு. பாவம் விடுதலைப்புலிகள் இவர்களின் அரசியல் சித்துவிழையாட்டிற்கு பலியாகி விட்டனர். இனிமேல் தமிழுக்கு ஒரு தலைவன் என்றால் அது மாவீரன் பிரபாகரனாக மட்டுமே இருக்க முடியும். தமிழ் நாட்டில் தமிழர்களோ, தமிழ்த்தலைவர்களோ இல்லை. தமிழினமே போராடு தன்காலில் நின்று. இந்திய தமிழனின்? ஊன்று கோல் வேண்டாம்.
முத்துக்குமார் சிவனடி எய்திவிட்டார்.
கண்ணீருடன்.
பாலாஜி....

kishore said...

வெறும் கண்ணீர் அஞ்சலி மட்டுமே நாம் அவருக்கு செய்யும் மரியாதை ஆகாது ..

kankaatchi.blogspot.com said...

இந்த சோகம் பல தமிழர்களின் கோபத்தை கிளப்பியிருக்கிறது.
அது ஆக்கபூர்வமான முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு ஈழ தமிழர் மக்களின் வாழ்வில் துயரங்கள் நீக்கப்பட்டு நல்வாழ்வு வாழ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.அதை விடுத்து வன்முறையில் இறங்குவதோ ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைத்து கொள்வதாலோ எந்த பயனும் ஏற்படபோவதில்லை. இந்த நிலையிலும் கூட அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு பிரச்சினையை கையிலெடுக்காமல் இன்னும் தனித்து வெவ்வேறு போக்கில் போய்கொண்டிருப்பது வேதனையான உண்மை. சிதறிப்போன படைகளால் எந்த காலத்திலும் வெற்றியை அடையமுடியாது.ஒருவர்மீது ஒருவர் குற்றஞ் சொல்லுவதை விடுத்து,அனைத்து வேறுபாடுகளையும் மறந்து ஒருமித்த குரலில் உலக அரங்கில் குரல் எழுப்பி இந்த கொடூர செயலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்

kankaatchi.blogspot.com said...

இந்த சோகம் பல தமிழர்களின் கோபத்தை கிளப்பியிருக்கிறது.
அது ஆக்கபூர்வமான முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு ஈழ தமிழர் மக்களின் வாழ்வில் துயரங்கள் நீக்கப்பட்டு நல்வாழ்வு வாழ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.அதை விடுத்து வன்முறையில் இறங்குவதோ ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைத்து கொள்வதாலோ எந்த பயனும் ஏற்படபோவதில்லை. இந்த நிலையிலும் கூட அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு பிரச்சினையை கையிலெடுக்காமல் இன்னும் தனித்து வெவ்வேறு போக்கில் போய்கொண்டிருப்பது வேதனையான உண்மை. சிதறிப்போன படைகளால் எந்த காலத்திலும் வெற்றியை அடையமுடியாது.ஒருவர்மீது ஒருவர் குற்றஞ் சொல்லுவதை விடுத்து,அனைத்து வேறுபாடுகளையும் மறந்து ஒருமித்த குரலில் உலக அரங்கில் குரல் எழுப்பி இந்த கொடூர செயலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்

kankaatchi.blogspot.com said...

இந்த சோகம் பல தமிழர்களின் கோபத்தை கிளப்பியிருக்கிறது.
அது ஆக்கபூர்வமான முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு ஈழ தமிழர் மக்களின் வாழ்வில் துயரங்கள் நீக்கப்பட்டு நல்வாழ்வு வாழ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.அதை விடுத்து வன்முறையில் இறங்குவதோ ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைத்து கொள்வதாலோ எந்த பயனும் ஏற்படபோவதில்லை. இந்த நிலையிலும் கூட அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு பிரச்சினையை கையிலெடுக்காமல் இன்னும் தனித்து வெவ்வேறு போக்கில் போய்கொண்டிருப்பது வேதனையான உண்மை. சிதறிப்போன படைகளால் எந்த காலத்திலும் வெற்றியை அடையமுடியாது.ஒருவர்மீது ஒருவர் குற்றஞ் சொல்லுவதை விடுத்து,அனைத்து வேறுபாடுகளையும் மறந்து ஒருமித்த குரலில் உலக அரங்கில் குரல் எழுப்பி இந்த கொடூர செயலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்

Anonymous said...

வெறும் கண்ணீர் அஞ்சலி மட்டுமே நாம் அவருக்கு செய்யும் மரியாதை ஆகாது ..

Anonymous said...

nanba endum engaludan vazhukirai
nangal un ninaivodu poraduvom

Anonymous said...

anbu thambi! analil viluntha anayatheebamey !!! aavigslukku sakthi abarithamai vundu endru kaalam kaalamai namba vaiththu nallathu(?) seiyum aandrorey! intha veera thamilanin aathmaavirku extraordinary power-rinai koduththu antha jeeva aaviyin aavesa manathukkum karuththukkum vidai kidaikka valhzi pirakka seiyungal...because vuyirudan vaalum manithargalaal yethuvum seithu thamilinathathai kaappatra mudiyathu...kanneer anjali.....

Anonymous said...

Government has Closed All Colleges and Hostels, Now what can be done:
1. Students will return to their Native Places
2. In each and every Towns and Villages, these students should form “College Going Students Association”
3. Irrespective of their colleges, be it Law or Arts or Medical and locations i.e Chennai College, Madurai College etc , All the Students from one native place to become part of that Association.
4. By this way of Associating College students at Native Place itself, they can take forward their agitation and spread the news in nearby places.
5. This will ensure the spreading of Tamils Agitation in each and every place in Tamil Nadu and teach lessons for Congress, it’s slave DMK and ADMK in the Coming Parliament Election.
6. Note: At native places, there is chance for Caste and religions gaps. Students should trash those gaps and unite for this Tamil Nobel Cause.

Anonymous said...

Boycott Tamil Nadu Medias, which Boycotts Eelam related News and act as mouthpiece of Shingala Sri Lankan Govt & it’s co-brother Indian Govt headed by Cong, supported by the back-stabber DMK.

Need to boycott Sun Picture Movies & TV all across World by Tamils, until they cover Eelam related news and Tamil’s Protests all across World.

NRI Tamils and Eelam Tamils living abroad and their organizations should communicate this to SUN TV. If their business get affected, and sure they’ll change their stand.

Anonymous said...

இந்தியா ஒரு கோழை நாடு. தன் நாட்டு மக்களையும் பொருளாதாரத்தையும் நாசம் செய்யும் பாக்கிஸ்தானை ஒன்றும் செய்ய இயலாமையின்றி, நிராதரவற்ற ஈழத்தமிழர்களிடம் வீரத்தைக் காட்டுவது பேடித்தனமானது. ஒரு இத்தாலியப் பெண்மணியான சோனியாவிடம் இந்திய இரத்தங்களை பாதுகாக்க சொல்வது ஓநாயைக் கூப்பிட்டு ஆடுகளைப் பாதுகாக்க சொல்வதாகும்.முதலில் தமிழகத் தமிழர்கள் காங்கிரஸ் போன்ற ஏகாதிபத்திய கட்சிகளைத் தமிழ்நாட்டில் இருந்தே புறந்தள்ள வேண்டும். ..இது முடியாது...சுயநல அரசியல்வாதிகள் உள்ளவரை தமிழனுக்கு எதிரி தமிழன்தான்.....நண்பா...உனக்கு என் கண்ணீர் அஞ்சலி....

கந்தப்பு said...

என் கண்ணீர் அஞ்சலிகள்

Anonymous said...

its a heart breaking words from our brother....

we must unity to stop the illegal activities on our family members in eelam

Anonymous said...

கண்ணீருடன் சகோதரனுக்கு வீர வணக்கம்
தமிழனே உனக்கு ஒரு அஞ்சலி செய்யக்கூட எமக்கு வழியில்லையே
கொதிக்கிறது நெஞ்சு


ஈழத்திலிருந்து
எஸ்.சத்யன்

Anonymous said...

மக்களே சோகம். இது பெரும் சோகம்.
தவிர்க்க முடியாததை எண்ணி இயலாமையால் கண்கள் பனிகின்றன.
அரசியல் வியாபாரிகள் இனியாவது திருந்த வேண்டும். பத்திரிகைகள் இந்த அறிக்கையை இருட்டடிப்பு செய்யும் என எதிர்பார்க்கிறேன். தமிழக முதல்வரையும் விமர்சிக்கிறது. இந்திய அரசையும் விமர்சிக்கிறது.
முதுஹெலும்பு இல்லாத இன்றைய பத்திரிக்கைகள் இந்த அறிக்கையை மட்டுறுத்தியாவது வெளியிடுமா என்பதே சந்தேகம்.
இந்த அறிக்கை மக்களை சென்றுஅடைய நம்மலான முயற்சியை எடுக்க வேண்டும் அதுதான் தியாக செம்மல் முத்து குமரனின் மரணத்தை நாம் கை கட்டி பார்த்து கண் மூடி இருந்ததற்கு ஒரு சிறிய பரிகாரம் ஆகும். ஊரார் அவருடைய தியாகத்தை அறிவீனமான செயல் என்று அவசர கருத்து எடுக்குமுன் விரைந்து செயல்பட பதிவுலகை சேர்ந்த தமிழ் கூறும் நல்லுலகை கேட்டுக்கொள்கிறேன்.

Suresh said...

arumaiyana pathivu thalaiva
pathirikkaigal ithai iruttadippu seithu vettathu

Ungalai pondravargalin asirvathathudan nanum pathivu poda arambithu ullan. Pudichu iruntha oru vote panunga :-)

Kandipa ungaluku pidikum endru nambugiran.

http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_02.html

கருணாநதி அரசு மருத்துவமனையில் ?

அன்புள்ள முதல் அமைச்சர் அவர்களே,

உங்களுக்கு உடம்புக்கு முடியவில்லை என்று நீங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று இருந்தால் என்ன லாபம் என்று கிழே பதிவு செய்து இருகிறேன்.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com