Thursday, January 08, 2009

'திரைகடல் ஓடியும் துயரம் தேடு' நூல் அறிமுக விழா!

உலகமெங்கும் அயல்நாடுகளுக்கு வேலைக்காக புலம்பெயர்வு பெருமளவு அதிகரித்து வருகிறது. நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பான கிராமப் பகுதிகளிலிருந்து வேலை தேடி பெருமளவில் உடலுழைப்பு தொழிலாளர்கள் வெளியேறி வருகிறார்கள். தொழில்நுட்ப பின்புலம் குறைவான உடலுழைப்பு தொழிலாளர்கள் புலம்பெயரும் போது சந்திக்கிற அனுபவங்களையும், அவர்களது உரிமைகளின் நிலமைகளையும் ‘திரைகடல் ஓடியும் துயரம் தேடு’ என்னும் நூலில் தொகுத்து பதிவு செய்ய முயன்றிருக்கிறேன்.

கடந்த பத்து ஆண்டுகளாக தொழிலாளர் உரிமைக்கான இயக்கப் பணிகளுக்காக ஆசிய பசிபிக், ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்த போது புலம்பெயர் தொழிலாளர்கள் பலரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களது வாழ்க்கை இனிமையாக, வளமாக இருப்பது போன்ற காட்சியை மேலோட்டமாக ஏற்படுத்தியது. புலம்பெயர்வின் வேதனையான, அதிர்ச்சியான பகுதியை பலரது அனுபவங்களின் பகிர்வுகளில் உணர்ந்தேன். மலேசியாவில் 1998ல் இராணுவம் புலம்பெயர் தொழிலாளிகளை பிடித்து இந்தோனேசியாவிற்கு திரும்ப அனுப்புவதை கண்டேன். அவர்களில் பலர் சில வாரங்களில் திரும்பவும் மலேசியா வந்து சேர்ந்தனர். அவர்கள் இராணுவம் மற்றும் காவல்த்துறையிடம் பிடிபடாமல் தப்பிக்க உணவும், தங்குமிடமும் எதுவுமில்லாமல் அடர்ந்த மரக்காடுகளில் மறைந்திருந்து மிககுறைந்த ஊதியத்துக்கு உழைத்தனர். இவர்கள் என்ன காரணத்திற்காக இப்படிப்பட்ட துன்பங்களை அனுபவித்தும் புலம்பெயர்கிறார்கள் என்பதை இந்நூலில் ஆய்வு செய்ய முயன்றிருக்கிறேன்.

ஹாங்காங்ல் பணி செய்த காலத்தில் பிலிப்பைன்ஸ், இலங்கை, நேபாளம், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து வீட்டுவேலை செய்யும் பெண்கள் ஏமாற்றத்திற்குள்ளாவதை கண்டேன். எனது அலுவலகத்துக்கு அருகே அவர்களுக்கான அவசர பாதுகாப்பு நிலையம் ஒன்றும் இயங்கியது. வீட்டு உரிமையாளர்களின் கொடுமையிலிருந்து தப்பித்து பாதுகாப்பு நிலையத்தில் சேர்ந்த வீட்டுவேலைத் தொழிலாளர்கள் பகிர்ந்த அனுபவங்கள் மிக வேதனையானவை. உலகமெங்கும் பெண் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்திக்கிற பிரச்சனைகளை விரிவாக இந்நூலில் தொகுத்து அலசல் செய்ய முனைந்துள்ளேன்.

புலம்பெயரும் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுகிறார்கள். பணியிட விபத்துகள் அதிகம் நிறைந்த இந்த துறையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள், தங்குமிட வசதிகள், வேலைத்தன்மை பற்றிய ஆளமான பார்வையை பலரது அனுபவங்களிலிருந்து இந்நூல் வழங்க முனைந்துள்ளது.

புலம்பெயரும் போது பயண ஒழுங்குமுறைகளில் சந்திக்கிற நெருக்கடிகள், குடிபெயர்வு நடைமுறைகளை கடந்து செல்ல பயண முகவர்களின் சேவையை பயன்படுத்தும் போது ஆபத்தான மனிதக்கடத்தல் சூழலில் சிக்குவது, ஏமாற்றத்திற்குள்ளாகி ஆவணங்களில்லாமல் சிறைகளில் வாடுவது ஆகிய வேதனை மிக்க பகுதிகளை பலரது அனுபவங்களிலிருந்து விளக்கமாக இந்நூல் அலசுகிறது. இச்சூழல்களில் சிக்காமல் தற்காத்துக் கொள்ள இவை பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியமானது.

‘திரைகடலோடி திரவியம் தேடு’ என்னும் சொலவடையை பழந்தமிழர்களின் வாணிப வரலாற்றை விளக்க பயன்படுத்துவது உண்டு. தற்போது கிராமப்புறங்களில் இந்த சொலவடையை புலம்பெயர் தொழிலாளர்களை பற்றிக் குறிப்பிடுகின்றனர். அயல்நாட்டு வேலைகளுக்காக செல்லும் அவர்கள் அனைவரும் ‘திரவியத்துடன்’ வருகிறார்களா? இதற்கு இந்நூல் விடைகாண முயல்கிறது.

பிரச்சனைகளுக்கான தீர்வுகளை ஏற்படுத்த அரசுகளும், தொழிற்சங்கங்களும், மனித உரிமை அமைப்புகளும், புலம்பெயரும் தொழிலாளர்களும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய ஆய்வு மற்றும் சில ஆலோசனைகளை இந்நூலில் காணலாம்.

'திரைகடல் ஓடியும் துயரம் தேடு' நூல் கவிஞர்.இன்குலாப் வெளியிட, கவிஞர்.சுகிர்தராணி பெற்றுக்கொள்கிறார். இந்நூலுடன், பல எழுத்தாளர்கள் எழுதிய 20 நூல்களின் அறிமுக விழாவை ஆழி பதிப்பகத்தார் ஏற்பாடு செய்துள்ளனர். சென்னையிலுள்ள நண்பர்கள் கலந்து கொள்ள அழைக்கிறேன்.

நூல் அறிமுக விழா

ஜனவரி 10, 2009 சனிக்கிழமை, பிற்பகல் 3.30 மணி

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, 604, அண்ணா சாலை, டி.ஆர். சுந்தரம் அவென்யூ

நூல் வாங்க கிடைக்குமிடம்:

ஆழி பதிப்பகம்

12, பிரதான சாலை

யுனைட்டட் இந்தியா காலனி,

கோடம்பாக்கம்

சென்னை- 600024

தொலைபேசி: 91-44-4358 7585

மின்னஞ்சல்: aazhisales(at)gmail(dot)com

8 பின்னூட்டங்கள்:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

வாழ்த்துகள் திரு! இந்த வருட புத்தகத்திருவிழாவில் உங்களுடைய புத்தகம் வருவது ரொம்பவும் சந்தோஷமாகவிருக்கிறது.

விரைவில் புத்தகத்தை வாங்க எத்தனிக்கிறேன்.

மகிழ்ச்சியுடன்,
மதி

கானா பிரபா said...

மிக்க மகிழ்ச்சி திரு, அகிலனின் மரணத்தின் வாசனை நூலோடு உங்களுடைய நூலையும் சிட்னியில் அறிமுகம் செய்து வெளியீட்டு விழா வைக்கும் ஆசை இப்போது முகிழ்த்திருக்கின்றது. உங்களுக்கும் ஆட்சோபணை இல்லையென்றால் சொல்லவும், மேலதிக விபரங்களைப் பின்னர் பகிர்கின்றேன்.

butterfly Surya said...

அயல் நாடுகளுக்கு சென்று வேலைபார்ததலும், புலம் பெயர்தலும் எவ்வளவு வலி என்பதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

அதுவும் வளைகுடா நாடுகளில் ...

அதை அனுபவித்தவர்களுக்குதான் தெரியும். {அனுபவித்தவன்}}

இது மிக பயனுள்ள புத்தகமாக இருக்கும் என நம்புகிறேன்.

சரியான தருணத்தில் வெளியிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

விழாவில் சந்திப்போம்.

தருமி said...

இதுதான் தங்களின் முதல் நூலென்று எண்ணுகிறேன். இன்னும் இதுபோல் நல்ல பல முயற்சிகளைத் தொடர வாழ்த்துக்கள்.

வெற்றி said...

அன்பின் திரு,
வாழ்த்துக்கள்.

thiru said...

நண்பர்களுக்கு நன்றி!

படித்த பின்னர் கருத்துக்களை தெரிவியுங்கள்! தருமி அய்யா நீங்கள் குறிப்பிட்டபடி முதல் நூல் தான்.

வண்ணத்துப்பூச்சியார், உண்மை தான் புலம்பெயர் வேலை அனுபவம் வலி நிறைந்தது. முடிந்த வரையில் அவர்களது வலிமிக்க அனுபவங்களை தொகுத்திருக்கிறேன்.

HHN said...

திரு,

உங்களுடய நூல் வெளியீட்டு விழாவுக்கு எனது வாழ்த்துக்கள். உங்களுடய பதிவுகளை படித்து சிந்தித்து, பலருடன் பரிமாறியும் வருகிறேன். 'திரைகடல் ஓடியும் துயரம் தேடு' நிச்சயமாக புலம்பெயர் தொழிலாளர், வெளிநாடு வாழ் தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு ஒரு திருப்புமுனை உருவாக்கும் என நம்புகிறேன். விழிப்புணர்வு பயணம் வெற்றியடைய வாழ்த்துகள்.

அன்புடன்,
ஹெறின் நிஷா ஹென்றி

பத்மா அர்விந்த் said...

மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். வாங்கி படிக்க முயற்சிக்கிறேன். அதன் பின் கருத்துக்களை தெரிவிக்கிறேன்.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com