Sunday, April 15, 2007

சே குவேரா: வரலாற்றின் நாயகன்-3

ர்ஜென்டினாவில் 1930ல் ஏற்பட்ட புரட்சியின் பின்விளைவாக பொருளாதாரம் பாதிப்புக்குள்ளானது. அர்ஜென்டினாவிலிருந்து மாட்டிறைச்சி, கோதுமை முதலியவை ஐரோப்பியாவிற்கு ஏற்றுமதியை மையமாக உற்பத்தி நடைபெற்றது. உள்நாட்டில் மக்களுக்கு தேவையான பொருட்கள் கடுமையாக விலையேறியது. பல்லாயிரக்கணக்கில் விவசாயிகள் தங்களது வாழ்விற்காக வேலை தேடி நகரங்களுக்கு குடிபெயர்ந்தனர். புயெனெஸ் எயர்ஸ்ல் மட்டும் சுமார் 1.4 மில்லியன் பேர் கிராமப்புறங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்தார்கள். ஏழைகள், நடுத்தர வர்க்கம், பணக்காரர்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரிக்க துவங்கியது. பாதிப்புக்குள்ளான மக்கள் சமூக போராட்டங்கள், கருத்தியல் அடிப்படையில் அணிசேர்வது என அல்டா கிரேசியாவின் காலச்சாரச் சூழலும் மாறியது. இதன் தாக்கம் ஏர்னெஸ்டோவின் குடும்பத்திலும் காணப்பட்டது. அவர்கள் குடியிருந்த வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு மாற்றம் அடிக்கடி நடந்தது. சிறுவயது ஏர்னெஸ்டோவுக்கு இடம் விட்டு இடம் மாறுவது என்பது பழக்கமாகியது.

அவர்கள் வசித்த வீடு கடல் மட்டத்திலிருந்து 600 மீட்டர் உயரமான இடம். உடல்நிலைக்கு ஏற்ற சுத்தமான, இனிமையான காலநிலையுள்ள சிறிய நகரம் தான் அல்டா கிரேசியா. ஏர்னெஸ்டோவின் தந்தையார் அந்த நகரின் பணக்கார, மத்தியதர குடும்பத்தினர்களுக்கு வீடு கட்டும் வேலை செய்துகொண்டிருந்தார். ஏர்னெஸ்டோவின் தந்தையார் மிகவும் நட்பாகவும் பொறுப்புடனும் பழகக்கூடியவர். கடினமான வேலை செய்துகொண்டிருந்தாலும் அவர் குழந்தைகளை பாசமுடன் கவனித்தார். ஏர்னெஸ்டோவுடன் நீச்சல், கோல்ப்(golf) விளையாடுதல் என இனிமையாக தனது ஓய்வு நேரங்களை செலவிட்டார். ஏர்னெஸ்டோவுக்கு தனது செல்ல நாயின் முதுகில் அமர்ந்து விளையாடுவது, உடன்பிறந்தவர்களுடன் விளையாடுவது என குழந்தைப்பருவம் இனிதாக இருந்தது. தொடர்ந்த மருத்துவம், இதமான சூழல், அன்னையின் அரவணைப்பு அனைத்துமாக ஏர்னஸ்டோவின் குழந்தைப்பருவம் நகர்ந்தது. மற்ற எல்லா குழந்தைகளையும் விட தாயின் அரவணைப்பு ஏர்னெஸ்டோவுக்கு அதிகமாகவே அமைந்தது. அன்னையின் அன்பான பார்வையில் விளையாட்டும், கரங்களை பிடித்தபடியே நடப்பது வருவது என இருவருக்குமிடையே பாசப்பிணைப்பு அதிகமாக இருந்தது.

புத்தகம் படிபதில் அடங்காத அறிவுப்பசியுடன் வளர்ந்தார் ஏர்னஸ்டோ. ஆஸ்துமாவின் அழுத்ததினால் 9 வயது வரை தாயின் கவனிப்பில் வீட்டிலேயே படித்தார் ஏர்னெஸ்டோ. 2 வது மற்றும் 3வது வகுப்புகள் மட்டுமே முறையாக பள்ளிக்கூடத்தில் கற்றார். அவரது உடன்பிறந்தவர்கள் 5வது, 6வது வகுப்பறை பாடங்களை எழுதிக்கொண்டுவந்து கொடுக்க வீட்டிலிருந்தவாறு படித்துவந்தார். ஆஸ்துமாவை எதிர்கொள்ள மனபலம் அவசியம் என்பதையுணர்ந்த அவரது பெற்றோர் அதற்கான உடற்பயிற்சிகளை கற்றுக்கொடுத்தனர். மலையேறுதல், ஓட்டப்பயிற்சி, நீச்சல், குதிரையேற்றம் என பயிற்சிகள் வழியாக ஒரு அசாதாரணமான மன உறுதியை சிறுவயதிலேயே பெற்றிருந்தார். உடல் பலவீனத்தை எதிர்கொள்ள அவர் எடுத்த முயற்சிகள் அவரை ஒரு ஆளுமை மிக்கவராக வளர்த்தியது. சிறு வயதிலேயே பல தரப்பட்ட மக்களிடம் குறிப்பாக தன்னையொத்த வயதினரிடம் பழகியதில் ஏர்னெஸ்டோவுக்கு பல நண்பர்கள் கிடைத்தனர். கட்டிடவேலை செய்த உதவியாட்களின் பிள்ளைகள் முதல் நடுத்தர வீட்டு பிள்ளைகள் வரை அனைவரிடமும் தொடர்புகள் கொண்டிருந்தார் ஏர்னெஸ்டோ. அவர்களிடம் பழகுவதோ நட்புடன் விளையாடுவதோ அவருக்கு கடினமாக இல்லை. சிறுவயதிலேயே அவரிடம் தலைமைக்கான ஆளுமை இருந்தது. அல்டா கிரேசியாவின் சிறுவயது நண்பர்கள் மத்தியில் ஏர்னெஸ்டோ தனித்தன்மையுடனே இருந்தார்.
லத்தீன் அமெரிக்காவில் புகழ் வாய்ந்த விடுதலைக் கவிஞர் பாப்லோ நெருடாவின் கவிதைகள், ஸ்பானிய கவிதைகள், கதைகள் என பலவிதமான புத்தகங்கள் படித்தார். ஸ்பெயினிலிருந்து மாமா அனுப்பிய செய்தி ஏடுகள், புத்தகங்களில் யுத்தச் செய்திகளை படிப்பது சிறுவயது ஏர்னெஸ்டோவுக்கு விருப்பம். ஸ்பெயின் உள்நாட்டு யுத்தம் சிறுவயது ஏர்னெஸ்டோவிற்குள் மாற்றங்களை உருவாக்கியது. மேட்ரிட் (Madrid), டெருயெல்(Teruel), குயுரென்சியா(Querencia) நகரங்களின் வீரம் செறிந்த இராணுவ போராட்டங்கள் அவரை வெகுவாக கவர்ந்தது. அவரது அறையில் ஸ்பெயின் நாட்டு வரைபடம் வைத்து அதில் படைகளை நகர்த்தி விளையாடினார். வீட்டு தோட்டத்தில் யுத்தகளங்கள், பதுங்குகுழிகள் மலைகள் போல அமைத்து வைத்திருந்தார் சிறுவயது ஏர்னெஸ்டோ.
~o00o~
கியூபாவில் நடந்த இராணுவ புரட்சிக்கு பின்னர் புதிய அரசியல் சட்டம் உருவானது. புதிய அரசியல் அமைப்பு சட்டம் குடிமக்களுக்கான சமூக உரிமைகள், வேலைவாய்ப்பு, சம ஊதியம், சமூக பாதுகாப்பு திட்டங்கள் என நல்ல பல திட்டங்களை உள்ளடக்கியிருந்தது. தனிநபர்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் கட்டுப்பாட்டில் குவித்து வைத்திருந்த பெரிய பண்ணை நிலங்களை சட்டத்துக்கு புறம்பானதாக்கியது. வெளிநாட்டு நிறுவனங்களின் தலையீட்டை அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி, நிலசீர்திருத்தத்தை வலியுறுத்தியது புதிய அரசியல் சட்டம். அதன் பின்னர் 1940ல் நடந்த தேர்தலில் பாடிஸ்டா அதிபராக போட்டியிட்டார். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் அந்த தேர்தலில் தனது பழைய எதிரி சன் மார்டினை தோற்கடித்து கியூபவின் 14வது அதிபராக பதவியேற்றார் பாடிஸ்டா. பாடிஸ்டாவின் அரசு 1943 இல் கம்யூனிஸ்டு கட்சியை சட்டப்படி செயல்பட அனுமதித்தது. அமெரிக்காவுடன் வியாபார தொடர்புகள் அதிகரித்தன. யுத்தவரி என்ற பெயரில் கியூபா மக்கள் மீது கடும் வரிச்சுமை உருவானது. இதன் பிரதிபலிப்பு அடுத்து 1944இல் நடந்த தேர்தலில் சன் மார்டின் வெற்றிபெற்று பாடிஸ்டாவை பதவியிலிருந்து இறக்கினார். வெற்றிபெற்று வந்த புதிய அதிபர் அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை எதிர்த்தார். பதவிக்கு வந்ததும் அரசியல் சட்டத்தை முறையாக செயல்படுத்த துவங்கியது. அதனால் அமெரிக்காவின் ஆதிக்கம் கியூபாவில் தளர துவங்கியது. அமெரிக்காவின் நிழல் விளையாட்டுக்கள் மீண்டும் கியூபாவில் ஆரம்பமானது.

(வரலாறு வளரும்)
திரு

3 பின்னூட்டங்கள்:

வெற்றி said...

திரு,
மிகவும் சுவாரசியமாகப் போகிறது தொடர். மிக்க நன்றி.

தொடருங்கள்.

Bart said...

சே குவாரா பற்றி தெரிந்துக் கொள்ள ஆவலாக இருந்தேன். இந்தத் தொடர் ஒரு வரப்பிரசாதம். தங்களின் நற்செயலுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.

வினையூக்கி said...

சுவாரசியத்துக்கும், விபரங்களுக்கும் பஞ்சமில்லாமல் விறுவிறுப்பால செல்கிறது
நன்றி.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com