Thursday, January 29, 2009

சென்னையில் ஈழத்தமிழருக்காக தீக்குளித்த பத்திரிகை ஊழியர் மரணம்!

ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடியை சேர்ந்த வாலிபர் சென்னையில் தீக்குளித்த சம்பவம் தமிழகத்தைத் தாண்டியும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அருகே புலியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன். இவருடைய மகன் முத்துக்குமரன். இவர் பாமக நிறுவனர் ராமதாஸ் மகள் கவிதா நடத்தும் பெண்ணே நீ மாத இதழில் டி.டீ.பி. ஆப்பரேட்டராக பணிபுரிந்து வந்தார்.

இவர் இன்று காலை 10.45 மணி அளவில் நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரிபவன் அலுவலகம் அருகே 10 லிட்டர் மண்ணென்ணெய்யோடு சென்றார். அப்போது 10 லிட்டர் மண்ணென்ணெய்யையும் தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. விஜயலட்சுமி, தீக்குளித்த முத்துக்குமரனை தடுத்து நிறுத்தி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

ஆனால் முத்துக்குமரனின் உடல் தீக்குளித்ததில் பெரும் காயங்கள் ஏற்பட்டு, தீவிர சிக்கிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முத்துக்குமரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

முத்துக்குமரனின் இந்த தீக்குளிப்புச் சம்பவம் ஈழத்தமிழர்களுக்காக போராடும் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தமிழகத்தில் தமிழ் உணர்வாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், பொதுமக்கள், மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பிலும் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் முத்துக்குமரனின் தீக்குளிப்புச் சம்பவம் தமிழகத்தைத் தாண்டியும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், பெரும் அதிர்ச்சியையும் தந்திருக்கிறது.


ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் தீக்குளித்த தூத்துக்குடி வாலிபர் மரணம்

இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் முத்துக்குமரன் சென்னையில தீக்குளித்தார்.

இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஈழத்தமிழர்கள் படுகொலையை கண்டித்தும் தூத்துக்குடியை சேர்ந்த் வாலிபர் முத்துக்குமரன் என்பவர் சென்னை சாஸ்திரி பவன் அருகே (பாஸ்போர்ட் அலுவலகம்), ஈழத்தமிழர்களுக்காக ஆதவான கோஷங்களை எழுப்பிக்கொண்டே மண்ணென்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. விஜயலட்சுமி அவரை காப்பாற்றி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டது. முத்துக்குமரன் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார்.


செய்தி: நக்கீரன்

Tuesday, January 27, 2009

தமிழீனம்: ஒரு இனத்தின் அழிவு!


வன்னி நிலப்பரப்பில் கொல்லப்படும் தமிழர்களுக்காக குரல்கொடுத்து தசைகளில் வாயு பிடிப்பு அழுத்த ‘தமிழீனத்தலைவர்’ மருத்துவமனையில் ஓய்வெடுக்கிறார். தமிழர்கள் கொல்லபட்ட பிறகு பிப்ருவரி 15 தி.மு.க செயற்குழுவில் அறிக்கையில் கண்ணீரை கொட்டவும், கவிதையில் நீலிக்கண்ணீர் வடிக்கவும் தொல்காப்பியம், சங்கத்தமிழில் சொற்கள் ஆய்வில் இருக்கிறார் தலைவர். உடன்பிறப்புகளுக்கு எழுதும் கடிதத்தில் சோனியா அம்மையார் மௌனமாக தமிழர்களை படுகொலை செய்தாலும், மகள் கனிமொழியிடம் அணுக்கமாக குசலம் விசாரித்ததையும் எழுதுவார்.

பாராளுமன்ற தேர்தலில் கோடிகளை கொட்டி, பிறகு மொத்தமாக தமிழக மக்களின் வளங்களை கொள்ளையடிப்பது எப்படி என்னும் ஆழ்ந்த யோசனையில் ஜெயலலிதா. ‘தமிழின படுகொலை தமிழக மக்களிடமிருந்து கருணாநிதி அனுப்பிய அரிசியிலிருந்த கற்கள் தலையில் விழுந்து செத்துப்போனார்கள்’ என்று தலைவியின் அறிக்கை வரும்.

சோனியாவும், மன்மோகனும் ஈரோடு வழியாக கொழும்புவிற்கு அனுப்பிய டாங்கிகள் பற்றிய செய்தி அம்பலமானதால் தமிழகத்தில் கிளர்ச்சி வராமல் ‘படம் காட்ட’ (தமிழகத்தின் வற்புறுத்தலுக்கு பிறகும் கொழும்பு சென்று போர் நிறுத்தம் செய்ய தேதி குறிப்பிடாமல் இருந்தவர்) பிரணாப் முகர்ஜி அவசர பயணம் புறப்பட்டிருக்கிறார். ‘போரை நிறுத்த அவசியமில்லை. எப்படி உலகத்தின் கண்களையும், ஊடகங்களையும் மறை(று)த்து பெருமளவில் தமிழ் மக்களை கொல்வது’ என்று கோத்தபாய ராஜபக்சேவுக்கும், பொன்சேகாவுக்கும் பாடம் நடத்துவார். ‘நாடகத்தை’ நடத்துவது எப்படி என்பது பற்றி தலைவர் கருணாநிதியிடம் தொலைபேசியில் பாடம் பெற்றிருக்கிறார்.

செத்துக்கொண்டிருக்கும் தமிழர்களுக்கு வெற்று அறிக்கைகளை எழுதி குவித்து, பிப்ருவரி 13ல் உண்ணாவிரதம் இருந்து முக்கி முக்கி உரையாற்றுவார் புரட்சிப்புயல் வைகோ. 2 வருடங்களாக இன அழிப்பை தடுக்க தமிழகத்தில் மக்களமைப்பு எதையும் உருவாக்க தவறியதில் தனது பங்கு பற்றி பேசாமாட்டார் அண்ணன் என்பதையும் நம்பலாம். உண்ணாவிரதம் முடிந்த கையோடு ஜெயலலிதாவின் தமிழின விரோத அரசியலுக்கு ஆள்பிடிக்க துவங்கிவிடுவார்.

ஈழத்தமிழர்கள் பற்றிய அறிக்கைகளும், பேச்சுக்களும் தந்து நாளேடுகளையும், தொலைக்காட்சிகளையும் பரபரப்பாக வைத்திருப்பார் மருத்துவர் அய்யா.

‘எந்த போராட்டம் ‘கலைஞரையும்’, சோனியாவையும் அசைக்கும்? சிறுத்தைகள் புலியாக மாறலாமா?’ சிந்தனையில் திருமா.

‘தேர்தலில் கூட்டணி இல்லை’ தமிழர்கள் படுகொலைக்கு தீர்வாக அறிவிப்பார் விஜயகாந்த்.

‘ஆங்! நாங்க அப்பவே சொன்னம். நீங்க தான் கேக்கலை. இதுக்கு புலியள் தான் காரணம். புலியளை விடுங்கோ! எங்கள்ட்ட வாங்கோ! நாங்க காப்பாத்துறோம். 1917 அக்டோபர் புரட்சியில….’ பக்கங்களை நிறைப்பார்கள் நேரத்தை பயன்படுத்தும் ‘புலியெதிர்ப்பாளர்கள்’.

‘வாங்கோ! கருணாநிதி வாங்கோ. எங்கட கூட வாங்கோ. தமிழீழத்துக்காக இதுவரை 10000245 தடவை நான் கடிதம் எழுதிப் போட்டன். இந்தியா செய்த ஒப்பந்தத்தில தான் எங்கட சீவன் இருக்குதுன்னு காட்டுறன். புலிகளை ஒழிச்சா தமிழீழம் கிடைச்ச மாதிரி. அதுவரை எங்கட சனம் செத்தாலும் கண்டுக்காதைங்கோ…’ கருணாநிதிக்கு கடிதம் எழுதி தினமலருக்கு அனுப்புவார் ஆனந்தசங்கரி.

‘நான் அமைச்சராகி போட்டனல்லோ. சனத்துக்கு வேற என்ன பிரச்சனையாம்?...’ டக்ளசின் அறிக்கை வரும்.

‘நான் எம்.பி ஆகி போட்டனல்லோ. இனி எங்கட கிழக்கு சனத்துக்கு என்ன பிரச்சனையாம்? நாங்க சிங்களவன்ற கூட போன பின்னக்கெ தான் நெறய சனத்த கொல்றுத பத்தி சொல்லி கொடுத்தம். உதுக்கெல்லாம் பயப்படாம சனம் ஆர்மி கூட….’ கருணாவின் கதை தினமலரில் நேர்காணலாக வரும்.

‘தமிழன் எல்லாவனும் பயங்கரவாதி. நானும், நீங்களும் மட்டும் காந்திக்கு கைபிடிச்சு பிரிட்டிஸ்காரனுக்கு அறிமுகம் செஞ்சவங்க. மிச்சமிருக்க தமிழனுகளையும் அழிச்சிப் போடுவம். அதுவும் சொலபம்….’ இராஜபக்சேயின் நேர்காணலை ‘மவுண்ட்ரோடு மார்க்சிஸ்ட்டின்’ நாளேட்டில் பிரதான செய்தியாக சப்புக்கொட்டி வரும்.

‘ஆயுதங்களை ஒப்படைக்க மாட்டோம்! தொடர்ந்து போராடுவோம்!’ நடேசனின் அறிக்கை வரும்.

தமிழ் மக்கள் நூற்றுக்கணக்கில் இனப்படுகொலையில் அழிந்து கொண்டிருப்பர்!

000

Nimalka Fernando, Human Rights Lawyer, Colombo to BBC

“From the manner in which the Sri Lankan government developed its military strategy over the past few years, it was very clear that they were not interested in coming to any political negotiation.


There was never any hope from my side that President Mahinda Rajapaksa would deliver any political solution to the ethnic conflict because the whole psyche of the Rajapaksa regime is a psycho of being a victor.

If you look at the songs that were written about him during his election campaign - they were calling him the king. If you have a king, you must have a kingdom.

The latest developments can be described as a geographical victory. But this is not the end of the struggle for Tamil nationalism in Sri Lanka.

Nor will this provide a solution to the aspirations of the Tamil people as well as the aspirations of the Sinhala people who want a democratic country, democratic values, media freedom, human rights protected.

The actual struggle for Tamil nationalism will take a different form. Those who are lighting crackers in celebration have been given crackers for free by the civil defence corps. I am yet to find a poor Sinhalese family go into a shop to buy crackers.

This will definitely not bring security to Sri Lanka. This is a short-term military strategy that has gained access to certain territories that the army couldn't go hitherto. That has not given a solution to the ethnic conflict in this country.

We will see another cycle of violence.”

Thursday, January 15, 2009

ஈழம்: பொத்தக சந்தையில் ஒரு உரையாடல்

சென்னை 'பொத்தக சந்தை' கடையொன்றில் பொத்தகங்களை புரட்டிய வேளை, கடைக்காரரோடு முதியவர் ஒருவரின் உரையாடல் காதில் விழுந்தது. கவனிக்க ஆரம்பித்தேன்.

'அது தான் யுத்தம் முடிஞ்சு போச்சு இல்ல. அப்புறமென்ன?'

'சார் யுத்தம் எங்கே நின்றது?' கடைக்காரர்.

'அப்படியா! அது தான் கிளிநொச்சியை பிடிச்சிட்டாங்கள்ல' விடாப்பிடியாக முதியவர்.

‘சார்! கிளிநொச்சி பிடிச்சது எல்லம் சரி. ஆனா இன்னும் துவங்கவே இல்ல சார்!’ மீண்டும் கடைக்காரர்.

முதியவர் விடுவதாக இல்லை. ‘என்ன சார் பஞ்சம் பொழைக்க தேயில தோட்டத்துக்கு வேலைக்கு போனவா எதுக்கு சார் அவங்க நாட்ல பங்கு கேக்குறாங்க. அது சரியா சார்? இப்ப என்னோட மக, பேத்தி எல்லாம் அமெரிக்கால இருபது வருசமா இருக்கா. அவா எல்லாம் எங்களுக்கும் அமெரிக்கால பங்கு குடுண்ணு கேக்க முடியுமா சார்?’

‘சார்! நீங்க சொல்லுறது சரியில்ல சார். அது அவங்க சொந்த நாடு சார். பஞ்சம் பொழைக்க போனவங்க இல்ல சார்.’

முதியவர் விடுவதாக இல்லை. மௌனமாக இருப்பதை விட பேசுவதே மேல். முதியவரோடு உரையாட ஆரம்பித்தேன். இலங்கையில் வாழ்ந்த/வாழு(டு)ம் பூர்வீக தமிழர்கள், மலையகத்தில் காலனியாதிக்க காலத்தில் அடிமைத்தனமான வேலைக்கு குடியேற்றப்பட்ட தமிழக (இந்தியத்) தமிழர்கள் பற்றி புரிய வைக்க முனைந்தும் முதியவர் பழைய நிலையை விடுவதாக இல்லை. தொடர்ந்தது உரையாடல்…

‘ஈழத்தின் இன்றைய இனப்படுகொலைக்கும், போருக்கும் இந்தியா மிகமுக்கிய காரணம்’ என்ற போது முதியவரின் தேசப்பற்றும், ‘இந்திய தேசியமும்’ ஏற்றுக்கொள்ள மறுத்தது. இலங்கையில் அமைதி உருவாக்க இந்தியப் படை சென்றதாகவும், ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க இராசீவ் காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் உருவாகியதாகவும் நம்பும் ‘அப்பாவி இந்தியர்களில்’ இவரும் ஒருவர். தமிழகத்திலும்/இந்தியாவிலும் ஊடகங்கள் ஈழம் பற்றி உருவாக்கி வைத்துள்ள கற்பிதங்களும், கற்பனைகளும் முட்டாள்த்தனமாக பொதுக்கருத்தை உருவாக்கியுள்ளது. ஊடகங்களின் இந்த போக்கு பாசிசம் வளர ஆதரவாகவுள்ளது. முதியவர் விரும்பி வாசிக்கும் ‘த இந்து’, ‘பிரண்ட்லைன்’ சொல்லும் செய்தியை நம்பியிருக்கிறார். ‘ஈழத்தில் இனப்படுகொலை பற்றிய செய்திகளை மறைத்து பொய்களை புனைவதில் வடநாட்டு ஊடகங்களுடன், ‘த இந்து’, ‘பிரண்ட்லைன்’ முன்னணியில் இருக்கிறது’ என்றதும் பெரியவர் அதிர்ந்து போனார்.

இந்திய ஊடகங்களின் அடிநாதமாக விளங்கும் ஆதிக்கச்சாதி அரசியல் ஈழத்தின் நியாயங்களை மறுத்து, எதிர்த்து, அபாயகரமாக கட்டுக்கதைகளை உற்பத்தி செய்கிறது. பேரினவாத ஒடுக்குமுறைக்கு ஆதரவாக செயல்படும் இந்த ஆதிக்க தேசியத்தின் அரசியலை எதிர்கொள்ளாமல் விடுதலை சாத்தியமாகுமா?

Thursday, January 08, 2009

'திரைகடல் ஓடியும் துயரம் தேடு' நூல் அறிமுக விழா!

உலகமெங்கும் அயல்நாடுகளுக்கு வேலைக்காக புலம்பெயர்வு பெருமளவு அதிகரித்து வருகிறது. நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பான கிராமப் பகுதிகளிலிருந்து வேலை தேடி பெருமளவில் உடலுழைப்பு தொழிலாளர்கள் வெளியேறி வருகிறார்கள். தொழில்நுட்ப பின்புலம் குறைவான உடலுழைப்பு தொழிலாளர்கள் புலம்பெயரும் போது சந்திக்கிற அனுபவங்களையும், அவர்களது உரிமைகளின் நிலமைகளையும் ‘திரைகடல் ஓடியும் துயரம் தேடு’ என்னும் நூலில் தொகுத்து பதிவு செய்ய முயன்றிருக்கிறேன்.

கடந்த பத்து ஆண்டுகளாக தொழிலாளர் உரிமைக்கான இயக்கப் பணிகளுக்காக ஆசிய பசிபிக், ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்த போது புலம்பெயர் தொழிலாளர்கள் பலரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களது வாழ்க்கை இனிமையாக, வளமாக இருப்பது போன்ற காட்சியை மேலோட்டமாக ஏற்படுத்தியது. புலம்பெயர்வின் வேதனையான, அதிர்ச்சியான பகுதியை பலரது அனுபவங்களின் பகிர்வுகளில் உணர்ந்தேன். மலேசியாவில் 1998ல் இராணுவம் புலம்பெயர் தொழிலாளிகளை பிடித்து இந்தோனேசியாவிற்கு திரும்ப அனுப்புவதை கண்டேன். அவர்களில் பலர் சில வாரங்களில் திரும்பவும் மலேசியா வந்து சேர்ந்தனர். அவர்கள் இராணுவம் மற்றும் காவல்த்துறையிடம் பிடிபடாமல் தப்பிக்க உணவும், தங்குமிடமும் எதுவுமில்லாமல் அடர்ந்த மரக்காடுகளில் மறைந்திருந்து மிககுறைந்த ஊதியத்துக்கு உழைத்தனர். இவர்கள் என்ன காரணத்திற்காக இப்படிப்பட்ட துன்பங்களை அனுபவித்தும் புலம்பெயர்கிறார்கள் என்பதை இந்நூலில் ஆய்வு செய்ய முயன்றிருக்கிறேன்.

ஹாங்காங்ல் பணி செய்த காலத்தில் பிலிப்பைன்ஸ், இலங்கை, நேபாளம், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து வீட்டுவேலை செய்யும் பெண்கள் ஏமாற்றத்திற்குள்ளாவதை கண்டேன். எனது அலுவலகத்துக்கு அருகே அவர்களுக்கான அவசர பாதுகாப்பு நிலையம் ஒன்றும் இயங்கியது. வீட்டு உரிமையாளர்களின் கொடுமையிலிருந்து தப்பித்து பாதுகாப்பு நிலையத்தில் சேர்ந்த வீட்டுவேலைத் தொழிலாளர்கள் பகிர்ந்த அனுபவங்கள் மிக வேதனையானவை. உலகமெங்கும் பெண் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்திக்கிற பிரச்சனைகளை விரிவாக இந்நூலில் தொகுத்து அலசல் செய்ய முனைந்துள்ளேன்.

புலம்பெயரும் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுகிறார்கள். பணியிட விபத்துகள் அதிகம் நிறைந்த இந்த துறையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள், தங்குமிட வசதிகள், வேலைத்தன்மை பற்றிய ஆளமான பார்வையை பலரது அனுபவங்களிலிருந்து இந்நூல் வழங்க முனைந்துள்ளது.

புலம்பெயரும் போது பயண ஒழுங்குமுறைகளில் சந்திக்கிற நெருக்கடிகள், குடிபெயர்வு நடைமுறைகளை கடந்து செல்ல பயண முகவர்களின் சேவையை பயன்படுத்தும் போது ஆபத்தான மனிதக்கடத்தல் சூழலில் சிக்குவது, ஏமாற்றத்திற்குள்ளாகி ஆவணங்களில்லாமல் சிறைகளில் வாடுவது ஆகிய வேதனை மிக்க பகுதிகளை பலரது அனுபவங்களிலிருந்து விளக்கமாக இந்நூல் அலசுகிறது. இச்சூழல்களில் சிக்காமல் தற்காத்துக் கொள்ள இவை பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியமானது.

‘திரைகடலோடி திரவியம் தேடு’ என்னும் சொலவடையை பழந்தமிழர்களின் வாணிப வரலாற்றை விளக்க பயன்படுத்துவது உண்டு. தற்போது கிராமப்புறங்களில் இந்த சொலவடையை புலம்பெயர் தொழிலாளர்களை பற்றிக் குறிப்பிடுகின்றனர். அயல்நாட்டு வேலைகளுக்காக செல்லும் அவர்கள் அனைவரும் ‘திரவியத்துடன்’ வருகிறார்களா? இதற்கு இந்நூல் விடைகாண முயல்கிறது.

பிரச்சனைகளுக்கான தீர்வுகளை ஏற்படுத்த அரசுகளும், தொழிற்சங்கங்களும், மனித உரிமை அமைப்புகளும், புலம்பெயரும் தொழிலாளர்களும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய ஆய்வு மற்றும் சில ஆலோசனைகளை இந்நூலில் காணலாம்.

'திரைகடல் ஓடியும் துயரம் தேடு' நூல் கவிஞர்.இன்குலாப் வெளியிட, கவிஞர்.சுகிர்தராணி பெற்றுக்கொள்கிறார். இந்நூலுடன், பல எழுத்தாளர்கள் எழுதிய 20 நூல்களின் அறிமுக விழாவை ஆழி பதிப்பகத்தார் ஏற்பாடு செய்துள்ளனர். சென்னையிலுள்ள நண்பர்கள் கலந்து கொள்ள அழைக்கிறேன்.

நூல் அறிமுக விழா

ஜனவரி 10, 2009 சனிக்கிழமை, பிற்பகல் 3.30 மணி

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, 604, அண்ணா சாலை, டி.ஆர். சுந்தரம் அவென்யூ

நூல் வாங்க கிடைக்குமிடம்:

ஆழி பதிப்பகம்

12, பிரதான சாலை

யுனைட்டட் இந்தியா காலனி,

கோடம்பாக்கம்

சென்னை- 600024

தொலைபேசி: 91-44-4358 7585

மின்னஞ்சல்: aazhisales(at)gmail(dot)com

Saturday, December 06, 2008

அறிவுமேதை அம்பேத்கார்!


தந்தையை பார்க்க சென்ற இரண்டு சிறுவர்கள் மராத்திய மாநிலத்தின் மசூர் புகைவண்டி நிலையத்தில் வந்து இறங்குகிறார்கள். இன்னும் பயணம் தொலைவு. வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்துகிறார்கள். பயணத்தில் வண்டிக்காரனுக்கு சிறுவர்களது சாதியை அறிந்து கொண்டான். வண்டியை உடனே நிறுத்துகிறான். வண்டியின் ஒரு பக்கத்தை தூக்கி மகர் சாதியில் பிறந்த இரு சகோதர்களையும் தரையில் தள்ளிப்போடுகிறான் வண்டிக்காரன். சிறுவர்களை பார்த்து சத்தம் போட்டு வாயில் வந்தபடியெல்லாம் அசிங்கமாக திட்டுகிறான்.

அந்த நண்பகல் வேளை வீதியில் விழுந்த சிறுவர்களுக்கு தண்ணீர் தாகமெடுக்கிறது. அருகிலிருந்த வீடுகளில் தண்ணீர் கேட்டு கெஞ்சுகிறார்கள். ஒருவரும் தண்ணீர் கொடுக்கவில்லை. பல மணி நேரம் கழிந்தும் கூட தண்ணீர் கொடுக்க ஆளில்லை. ஆதிக்க சாதியினரின் தண்ணீர் தொட்டிகள், கிணற்றடி அருகே செல்ல அந்த சிறுவர்களுக்கு அனுமதியில்லை. காரணம், அவர்கள் மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தவர்கள். அவர்களில் இளையவனின் பெயர் பீம்ராவ் ராம்ஜி அம்பவடேகர்.


ஒருமுறை, கிணற்றிலிருந்து பீம்ராவ் தண்ணீர் குடித்த போது ஆதிக்க சாதியினர் அடித்து துன்புறுத்தினார்கள். எருமை மாட்டை சிரைப்பவர் கூட பீம்ராவுக்கு தலைமயிர் வெட்ட தயாராக இல்லை. சிறுவனாக இருந்த போது ஆதிக்க சாதியினரின் அனைத்து கொடுமைகளையும் அனுபவித்து வளர்ந்த பீம்ராவ் பின்னாளில் பாரிஸ்டர் பட்டம் பெற்றார். இளம் வயதில் ‘சாதியை ஒழிப்பது எப்படி?’ (Annihilation of Caste) என்னும் அவரது பேசப்படாத உரை இந்திய சாதி ஆதிக்கத்தின் அடிப்படையை, பார்ப்பனீய ஆதிக்கத்தை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான இந்து மதத்தின் கோட்பாடுகளை தோலுரித்துள்ளது. சாதி எதிர்ப்பு போராளிகளும், பார்ப்பனீய பயங்கரவாதத்தை புரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும் அவர் வழங்கியுள்ள மிக சிறந்த ஆய்வு நூல்களில் ‘சாதியை ஒழிப்பது எப்படி?’ மிகசிறப்பானது. இந்தியாவின் அரசியல் சட்டத்தை உருவாக்கிய குழுவை தலைமையேற்று நடத்திய சிறப்பான பணியை நிறைவேற்றினார் அவர். அவர் தான் பாபாசாகேப் டாக்டர்.அம்பேத்கார். இந்தியாவின் மிகச்சிறந்த அறிவுமேதை. இன்று டிசம்பர் 6 அவரது நினைவு தினம்.

பின்குறிப்பு: பாபர் மசூதியை இடிக்க இந்த நாளை தேர்ந்தெடுத்து அம்பேத்காரை இழிவுபடுத்தியது அத்வானி, பா.ஜ.க, சங்க்பரிவார கும்பல்.