Monday, March 25, 2013

நீதிபதி ஜெ.எஸ்.வர்மா குழு அறிக்கை: அரசு மழுங்கடித்த ஆயுதம்!


    டில்லியில் மருத்துவ மாணவி ஜோதி சிங்கை கூட்டுப்பாலியல் பலாத்காரம் மற்றும் படுகொலை செய்த கொடூரம் அதிர்ச்சியையும், மத்திய அரசுக்கு அழுத்தத்தை உருவாக்கியது. அதனால் பெண்களுக்கு இழைக்கப்படுகிற குற்றங்களுக்கு எதிராக சட்டரீதியான பரிந்துரைகளை வழங்க முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜெ.எஸ்.வர்மா தலைமையில் மூவர் குழுவை மத்திய அரசு நியமித்தது. அக்குழு பொதுமக்கள், அரசுசாரா அமைப்புகள், சட்ட வல்லுநர்கள், பெண்கள் அமைப்புகளின் கருத்துக்களை கேட்டறிந்து பரிந்துரைகளை வழங்கியுள்ளது. சமநீதியையும், உரிமையையும் பெண்களுக்கு வழங்குவதில் இந்தப் பரிந்துரைகள் முதல் படிக்கல்.


பாலியல் பலாத்காரத்தோடு நடத்துகிற கொலைகள், செயலிழக்க வைத்தல், கூட்டு பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்றங்களுக்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் அல்லது ஆயுள் முழுவதும் கடுங்காவல் சிறைத்தண்டனை. பெண்கள் ஆடை மாற்றுதல், உடலுறவு உள்ளிட்ட அந்தரங்க செயல்களை படம்பிடிப்பது அல்லது மறைந்திருந்து கண்காணிப்பது, பெண்களை கேலி செய்தல், பெண்கள் மீது ஆசிட் வீசுதல் உள்ளிட்ட பல பாலியல் குற்றங்களுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையை வர்மா குழு பரிந்துரைத்துள்ளது. இந்தியாவில் பெண்களின் தனிப்பட்ட வாழ்வின் காட்சிகளை மொபைல் போன்களில் பதிவுசெய்து பரப்புவது அதிர்ச்சியூட்டுகிற வகையில் அதிகரித்து வருகிறது. இத்தகைய பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான சட்டங்கள் அவசியம். அதோடு மொபைல் தொலைபேசிகள், நிழற்பட கருவிகளை பொறுப்பாக பயன்படுத்துவது குறித்த கல்வியும் தேவைப்படுகிறது.

இந்திய ஆண்கள் பலசாலியாக வெளிகாட்டிக்கொள்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் அவர்கள் மனதளவில் பெண்ணிடம் தனது காதலையும், நட்பையும் முறையாக வெளிப்படுத்த தெரியாத பலவீனமும், வன்முறையும் நிறைந்தவர்கள். நிலக்கிழாரின் மனநிலையும், சாதித் திமிரும் சேர்ந்த கலவையே இந்திய ஆண்மனம். பெண்களை தங்கள் பயன்பாட்டிற்குரிய உடமைகளாக, பொருளாக கருதுகிற ஆதிக்க மனநிலை அவர்களிடம் அதிகமாகவுள்ளது. வன்முறை அதிகாரத்தினால் பெண்களின் காதலையும், உறவையும், நட்பையும் பெறலாமென்று நம்புகிறார்கள். இதையே ஆணின் குணங்களாகவும், சிறப்பியல்பாகவும் கருதப்படுகிறது. பெண்ணின் சுதந்திரம், விருப்பம், சம்மதத்தை கேட்கபதும், பொருட்படுவதும் இல்லை. காதலிக்க மறுக்கிற அல்லது காதலிலிருந்து விடுபடுகிற பெண்கள் மீது ஆசிட் வீசுவது, கொலை செய்வது, அவதூறு பரப்புவது ஆகிய குற்றங்கள் பெருகுகின்றன.

தான் விரும்பாத எதையும் மறுக்க பெண்ணுக்கும் உரிமை உண்டு என்பதை ஆண்மனம் ஏற்க மறுக்கிறது. கணவனோடு உறவு வைத்துக்கொள்ள முடியாத அல்லது விருப்பமில்லாத நேரத்தில் மறுப்பதற்கு மனைவிக்கு முழுவுரிமையுண்டு. அத்தகைய நேரத்தில் கணவன் அத்துமீறி உறவில் ஈடுபடுவது பாலியல் பலாத்காரம். ஒருவரது சம்மதமில்லாமல் அவரது உடல் மீது செய்கிற மிகப்பெரிய வன்முறையிது. பல்வேறு மேற்குலக நாடுகளில் “பாலியல் தன்னாட்சி உரிமை” பெண்களுக்கு சட்ட ரீதியாக இதிலிருந்து முழு பாதுகாப்பளிக்கிறது. அத்துமீறுகிறவர்கள் எவராக இருந்தாலும் சட்டரீதியாக தண்டிக்கப்படுவார்கள். பெண்களின் உரிமைகளுக்கான தனிச்சட்டம் இயற்றி பெண்களுக்கு முழுமையான பாலியல் தன்னாட்சி உரிமையை உறுதிப்படுத்த வர்மா குழு முன்மொழிந்திருக்கிறது. இந்தியச் சட்டவியலில் மிக முற்போக்கான மாற்றமிது. பெண்களின் வாழ்வில் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவும் வலியுறுத்துகிறது. இந்தியாவில் அனைத்து திருமணங்களையும் நீதிபதியின் பார்வையில் பதிவு செய்தல். வரதட்சணை கோராமல், இருவரின் சுதந்திரமான முழு சம்மதத்துடன் திருமணம் நடைபெறுவதை நீதிபதி உறுதிப்படுத்த வேண்டும் போன்ற பரிந்துரைகள் பெண்களின் உரிமையை வலுப்படுத்துகின்றன.

பாலியல் பலாத்கார வழக்குகளை பதிவு செய்வதில் காவல்துறை நிலபிரபுத்துவ மனநிலையில் இருப்பதாக சாடுகிறது வர்மா குழு. காவல்த்துறையிடம் வருகிற ஒவ்வொரு பாலியல் பலாத்கார குற்றங்களையும் கண்டிப்பாக வழக்குகளாக பதிவு செய்தல். பாலியல் பலாத்கார வழக்கை பதிவு செய்ய மறுக்கிற அல்லது புலன்விசாரணையை முடக்க முயற்சிக்கிற அதிகாரிகளை தண்டித்தல் ஆகியவை காவல்துறையை செயல்பட தூண்ட தேவையான பரிந்துரைகள். பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முறையான நீதியை வழங்குவற்கு தற்போதைய மருத்துவ பரிசோதனை முறை எதிராகவுள்ளது. அதனால் பாலியல் பலாத்கார வழக்குகளுக்கு உலகின் சிறந்த வல்லுநர்கள் அறிவுறுத்துகிற முறைகளை மருத்துவ பரிசோதனைக்கு நடைமுறைப்படுத்த வலியுத்துகிறது.

ஆயுதப்படைகளின் பாலியல் வன்முறை குற்றங்களை தண்டிப்பதிலிருந்து ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் விலக்களிப்பதை வர்மா குழு சுட்டிக்காட்டியுள்ளது. காஷ்மீர், அஸ்ஸாம் உள்ளிட்ட மோதல் பகுதிகளில் இந்திய ஆயுதப்படைகளும், ராணுவத்தினரும் பாலியல் பலாத்காரம், பாலியல் சித்திரவதை உள்ளிட்ட பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை விரைவாக மீளாய்வு செய்யவும், பெண்கள் பாதுகாப்பிற்கான சிறப்பு ஆணையர்களை மோதல் பகுதிகளில் நியமிக்கவும் வர்மா குழு பரிந்துரைத்துள்ளது.  சிறார் உரிமை மற்றும் பாதுகாப்பில் நீதித்துறையின் கவனம், காவல்த்துறை சீர்திருத்தம் ஆகியவற்றையும் வலியுறுத்துகிறது. அரசியலில் குற்றவாளிகளின் ஆக்கிரமிப்பை தடுக்க வழிகளையும் குறிப்பிடுகிறது. நீதிபதி வர்மா குழு வழங்கிய பரிந்துரைகள் மிகச்சிறப்பானவை. ஆனால் அவற்றிலிருந்து சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து குற்றவியல் சட்டத்தில் சில கண்துடைப்பு திருத்தங்களை செய்தது மத்திய அரசு. நீதிபதி வர்மா குழு பரிந்துரைத்த பெண்களுக்கான அடிப்படை உரிமைகளை கண்டுகொள்ளவேயில்லை. இது ஆட்சியாளர்களின் பொறுப்பற்றதன்மையை வெளிப்படுத்துகிறது.

இதை எழுதுகிற நேரத்தில் மராட்டிய மாநிலத்தில் ஒரே குடும்பத்தில் 11 வயதுக்கு குறைவான மூன்று பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட துயரம் வெளியாகியுள்ளது. குழந்தைகளை காணாத நிலையில் காவல்துறையிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கையில்லை. இந்தியாவில் 2011ல் பதிவான பாலியல் பலாத்கார வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 24,206 என்கிற தேசிய குற்றவியல் ஆவண நிறுவனம். பெரும்பாலான பாலியல் பலாத்கார குற்றங்கள் பதிவாவதில்லை. நான்கு சுவர்களுக்குள் கணவனால் நிகழ்த்தப்படுகிற பாலியல் பலாத்காரமும் இவற்றில் சேர்க்கப்படவில்லை. அவற்றையும் சேர்த்தால் ஆண்டு தோறும் பல லட்சம் பெண்கள் பாலியல் சித்திரவதைக்கும், பலாத்காரத்திற்கும் ஆளாகிறார்கள். பெண்களை தெய்வங்களாக வழிபடுகிற இந்தியாவில் தான் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு மிக வேதனையான நிலையில் இருக்கிறது.

சிறுவயதிலிருந்தே ஒரு பாலினத்தவர் மற்ற பாலினத்தவர்களோடு பழகவும், புரிந்துகொள்ளவும் வாய்ப்பு வழங்காமல் தடுக்கப்படுகிறார்கள். பெண்களுக்கு தனிக்கல்வி நிலையங்கள், தனி போக்குவரத்து போன்ற தனிமைப்படுத்துகிற இறுநிலை அதிகரித்துள்ளது. பொற்றோர், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் பாலின அடிப்படையில் பிரிக்கிற கண்காணிப்பு வேலைகளில் ஈடுபடுகிறார்கள். தங்களது பாலினத்தையும், எதிர்பாலினத்தவரையும் புரிந்து, செயல்பட எந்த கல்வியும் இங்கில்லை. ஆரோக்கியமான நட்பை உருவாக்கவும், உறவுகளை வளர்க்கவும் வழிகாட்டுதல்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே தேவைப்படுகிறது. இறுக்கமான கட்டுப்பாடுகளாலும், தடைகளாலும், கண்காணிப்புகளாலும் நேர்மையான வழிகளில் உறவுகளும், நட்புகளும் உருவாக சாத்தியமில்லை. அவை எதிர்மறை விளைவுகளையே உருவாக்கும். குற்றங்களை தடுக்கவும், முறையான நீதியை உரிய நேரத்தில் வழங்கவும் சட்டரீதியான நடவடிக்கைகள் மிகவும் அவசியம். அவற்றிற்கு சமமாக குடும்பங்கள், சமூக அமைப்புகள், கல்வி நிலையங்களின் மூலம் உரிமைகள் மற்றும் உறவு பற்றிய கல்வியையும் உருவாக்குதல் அவசியம். 

---(மார்ச் 2013, தமிழ் ஆழி)---

உங்கள் கருத்து என்ன?

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com