Monday, November 24, 2008

‘யுத்தம் சரணம்’ தொடரின் எழுத்து அரசியல்!

கிழக்கு பதிப்பகத்தின் பா.ராகவன் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ‘யுத்தம் சரணம்’ தொடரை குமுதத்தில் துவங்கியுள்ளார். எல்லா பக்கமும் இந்தியா போன்ற உலக நாடுகளின் ஆதரவுடன் ராணுவம் சூழந்து ஈழத்தமிழர்களை கொன்றழிக்கும் போர்ச்சூழலில் அவதிப்படுகிற நேரத்தில் குமுதத்தில் பா.ராகவனின் தொடர் பரபரப்பையும், எதிர்பார்ப்புகளையும் உருவாக்குவது இயல்பு. இத்தொடரின் முதல் பகுதியை படிக்கும் போதே வாசகர்களுக்கு ஈழத்தின் அரசியல் பற்றிய நேர்மையான பார்வை கிடைக்குமா என்ற கேள்வி எழுகிறது.

‘யுத்தம் சரணம்’ தொடரின் முதல் பகுதி திகில், பரபரப்பு, விறுவிறுப்பு என்று வார்த்தை அலங்காரங்களால் ‘பாக்கட் நாவல்கள்’ படிப்பது போன்று வாசகனை பரபரப்பாக்க உதவும். அதற்காக நிச்சயம் எழுத்தாளரின் மொழி நடையை பாராட்ட தான் வேண்டும். தொடரின் துவக்கம் மனித வெடிகுண்டு தாக்குதலில் சிதைந்த வாகனம் ஒன்றை காட்சிப்படுத்துவதிலிருந்து துவங்குகிறது.

//முதலில் படத்தைப் பாருங்கள். நன்றாக, உற்றுப் பாருங்கள். நசுங்கிய நிலையில் இருக்கும் டயர்களைப் பாருங்கள். பிறகு, நூற்றுக்கணக்கான பொத்தல்களுக்கும் சிராய்ப்புகளுக்கும் உள்ளாகியிருக்கும் அதன் உடல் பகுதி. எந்தக் கணமும் உதிரலாம் என்னும்படியாக, கசக்கி, விரித்து உதறிய பாலிதீன் தாள் போலிருக்கும் முன்புறக் கண்ணாடி வரை பார்த்துவிட்டீர்களா? மிகவும் கவனம். காரின் முன் சீட்டின் ஓரத்தில் ரத்தம் தெரிகிறதா? புகைப்படத்தில் தெரியவில்லை என்றாலும் பின் சீட்டில் இதனைக் காட்டிலும் ஏராளமான ரத்தம்.

இது மட்டும் புல்லட் ப்ரூஃப் செய்யப்பட்ட லிமோஸினாக இல்லாமல், வேறு ஏதேனுமொரு சாதாரண காராக இருந்திருக்கும் பட்சத்தில், புகைப்படத்தில் கார் நிற்கும் இடத்தில் நீங்கள் ஒரு தகரக் குவியலைத்தான் பார்த்திருப்பீர்கள்.

இது ஒரு மனித வெடிகுண்டுத் தாக்குதலின் எச்சம். லெஃப்டினண்ட் ஜெனரல் சரத் ஃபொன்சேகா (Sarath Fonseka) தப்பித்தது தற்செயல். கண்டிப்பாக உயிர் போய்விடும் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள்.// யுத்தம் சரணம், முதல் பகுதியிலிருந்து.

சிதைந்த வாகனத்துக்கும், தாக்கப்பட்ட ராணுவ தளபதிக்கும் எவ்வளவு வலித்திருக்கும்? ராஜபக்சேவும், சரத்பொன்சேகாவும், கோத்தபாய ராஜபக்சேவும் வன்னியிலும், கிளிநொச்சியிலும் தமிழர்கள் மீது குண்டுமழை பொழிந்து குழந்தைகள் முதல் முதியவர் வரையில் கொல்வதற்கு சரத்பொன்சேகா மீதான தாக்குதலை பிரதான ஏதுவாக்குகிறார் ராகவன்.

இலங்கையின் சுதந்திரத்திற்கு முன்னரே துவங்கி விட்ட தமிழர்களின் போராட்டத்தை இலங்கை இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீதான தாக்குதலில் துவங்குவது கதையாசிரியனின் அரசியலை உடைக்கிறது. எங்கிருந்து கதை சொல்லத் துவங்குவது என்பது எழுத்தாளனின் சுதந்திரம். ஆனால் ஈழத்தின் இனப் பிரச்சனையை சொல்லத் துவங்கும் கதையாசிரியர் 2002 நார்வே தலைமையிலான சமாதான பேச்சுவார்த்தைகளின் போது முதலில் ஆயுதங்களை தூக்கியது புலிகள் என்று கட்டமைக்க முனைவது பின்வரும் பத்திகளில் பல்லிழிக்கிறது.

//2002-ல் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. 2004 ஜூலைக்குப் பிறகு நார்வே சமாதானக் குழுவின் நடவடிக்கைகள் சூடு பிடிக்க, இடைப்பட்ட காலத்தில் இதனைக் காட்டிலும் பெரிய சம்பவம் ஏதும் அங்கே நடக்கவில்லை. இதுதான். இது மட்டும்தான். போதாதா?//

நார்வே தலைமையில் போர்நிறுத்தம் ஏற்பட்டு பல சுற்று பேச்சுக்கள் நடந்த சூழலில், அமெரிக்காவும், ஜப்பானும் இந்த பேச்சுக்களில் நுழைந்ததும், இந்தியா மறைமுகமாக இலங்கையை இயக்கி விடுதலைப்புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்தி கருணாவை பயன்படுத்தி தொடர்ந்த படுகொலைகளை நாமும் ‘வசதியாக’ மறந்துவிடலாம். போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலத்தில் புதிய இடங்களில் இலங்கை இராணுவம் முகாம்களை போர்நிறுத்த உடன்படிக்கைக்கு எதிராக உருவாக்கியதையும் மறந்துவிடுவோம். சுனாமி மீள்கட்டமைப்பிற்கான இடைக்கால அதிகார சபை ஒன்று பேசப்பட்டு வந்த நிலையில் இலங்கை அரசு நடத்திய இப்படுகொலைகளையும் வாசித்து மறந்துவிடுவோம். 2002 போர் நிறுத்தத்திற்கு பின்னர் சரத் பொன்சேகா மீதான தாக்குதலுக்கும் “இடைப்பட்ட காலத்தில் இதனைக் காட்டிலும் பெரிய சம்பவம் ஏதும் அங்கே நடக்கவில்லை என்கிறார் பா.ராகவன். ஈழம் பற்றிய அறிவில் உண்மையா இவ்வளவு அப்பாவியா இவர்? சரத் பொன்சேகா தாக்கப்பட்ட நாள் 25 ஏப்பிரல் 2006. ஆனால் அதற்கும் முன்னர் இலங்கை இராணுவம் பல தமிழ் அரசியல் தலைவர்களை, போராளி தலைவர்களை, ஊடகவியலாளர்களை, பொதுமக்களை படுகொலை செய்தது. ஆனால் அத்தனை படுகொலைகளையையும் கதை சொல்லும் நடையில் மறைத்து புலிகளும், தமிழர் தரப்பையும் கொலைகாரர்களாக, வன்முறையாளர்களாக சித்தரிக்கும் கேவலமான, நேர்மையற்ற அரசியலை தொடரின் முதல் பகுதியில் துவங்கி வைத்திருக்கிறார் பா.ராகவன். பா.ராகவனுக்கு இல்லாவிட்டாலும், வாசகர்களுக்காக இடைப்பட்ட காலத்தில் இலங்கை அரசு செய்த படுகொலைகள் சிலவற்றை சொல்வது நமது கடமை.

மட்டு-அம்பாறையில் புலிகளின் அரசியல் பிரிவின் தலைவராக செயலாற்றிய கௌசல்யன் அவர்களையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அரியநாயகம் மற்றும் சில புலிகளையும் கிளிநொச்சியில் சுனாமி புனரமைப்பு பற்றிய கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பும் போது கண்ணிவெடி வைத்து 8 பெப்ருவரி 2005 இரவு 7.15 மணியளவில் கொன்றது இலங்கை இராணுவ உடையணிந்த சிப்பாய்கள்.

2005 டிசம்பர் திங்கள் 25ம் நாள் நள்ளிரவில் மட்டகளப்பில் ஜோசப் பரராஜசிங்கம் (நாடாளுமன்ற உறுப்பினர், மனித உரிமைப் போராளி) புனித மரியாள் தேவாலயத்தில் ஆயர் தலைமையில் நடைபெற்ற வழிபாட்டில் நற்கருணை பெற்று திரும்பும் போது, வழிபாட்டில் வைத்து மனைவிக்கு அருகில் வைத்து இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினர், கருணா, ஈ.பி.டி.பி குழுக்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த பாதக படுகொலை நடந்த போது தேவாலயம் முழுவதும் பீதியும் பதட்டமும் நிறைந்திருந்தது. ஜோசப் பரராஜசிங்கம் ஆயுதம் தூக்கியவரா? அது யுத்த காலமா? ஏன் இந்த படுகொலை? தமிழர்களின் உரிமைகளுக்காக தேசங்களெல்லாம் பறந்தும், இலங்கை நாடாளுமன்றத்திலும் குரல் கொடுத்த அமைதியானவரை கொன்று அவரது குரலை அடக்கியது இலங்கை அரசு.

//ராஜபக்ஷேவின் அன்றைய தொலைக்காட்சி உரையில் வேறெது குறித்தும் அவர் பேசவில்லை. இதுதான். இது ஒன்றுதான். கண் துடைப்புப் போர் நிறுத்தம் பற்றிய எரிச்சல் கலந்த ஏமாற்றம். `இனி நான் சும்மா இருக்க மாட்டேன்' என்கிற எச்சரிக்கை. அந்த ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி ஜெனிவாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு புலிகள் தரப்பில் இருபது குண்டு வெடிப்புச் சம்பவங்களை நடத்தியிருக்கிறார்கள், நாற்பத்தேழு ராணுவ அதிகாரிகளையும் இருபத்தெட்டு அப்பாவி மக்களையும் கொன்றிருக்கிறார்கள், நூற்று முப்பத்தொன்பது பேருக்குப் படுகாயம் ஏற்பட்டிருக்கிறது என்பது போன்ற சில புள்ளிவிவரங்களையும் சொன்னார்.

யாரும் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. மக்களும் ராணுவத்தினரும் மிரண்டிருந்தார்கள். ராணுவத் தலைமையகத்துக்கு உள்ளேயே, ராணுவத் தளபதி மீது ஒரு தாக்குதல். எப்படி இது சாத்தியம்?//

கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடான ‘விடுதலைப் புலிகள்’ கதையும் திருப்பெரும்புதூரில் இராஜீவ் கொலலயிலிருந்து துவங்குகிறது. செய்தியை எங்கிருந்து சொல்லத் துவங்குவது என்பதிலும் ஒரு அரசியல் இருக்கிறது. காங்கிரஸ்காரர்களுக்கும், தமிழின எதிர்ப்பாளர்களுக்கும் தமிழர் இனப்பிரச்சனையின் துவக்கம் ராஜீவ் மரணத்தில் துவங்கி அங்கேயே முடிந்துவிடுகிறது. காங்கிரஸ்காரர்களது ஈழப் பார்வையும், தற்போதைய ஈழப் போர் நிலவரத்திற்கு சரத் பொன்சேகா மீதான தாக்குதலை முன்னிறுத்தும் பா.ராகவன் எழுத்தரசியலும் ஒரே நேர்கோட்டில் இருக்கிறது. ஈழத்தமிழர்களின் போராட்டத்தை வன்முறை, படுகொலைகள், சகோதர யுத்தம் என்று காட்சிப்படுத்தி, அரசியல் அதிகாரத்திற்கான போராட்ட நியாயங்களை மறைக்கும் இவ்வகை எழுத்துக்களின் அரசியல் இனங்காணப்படவேண்டும்.

6 பின்னூட்டங்கள்:

Anonymous said...

http://blog.tamilsasi.com/2008/11/kumudam-reporter-eelam-history.html
http://rosemayr.blogspot.com/2008/11/derby-does-dallas.html

thiru said...

ஆறூரான்,

சுட்டிகளுக்கு நன்றி! இரு பதிவுகளையும் உங்களது பின்னூட்டம் வழியாக படித்தேன்.

நன்றி!

சுந்தரவடிவேல் said...

கேனத்தனமான எழுத்து! For Dummies ரக புத்தகங்களிலிருக்கும் செய்தியறிவுகூட (அப்படியெல்லாம் அந்தப் புத்தகங்களை ஒப்பிட்டுவிட முடியாது!) இவரது எழுத்தில் இல்லை. கொஞ்சம் வலைப்பதிவுகளையாவது படிக்கலாம். அவருக்கு ஈழத்தின் வரைபடமும், ஐரோப்பிய யூனியன் உறுப்புநாடுகளைப் பற்றிய செய்திகளும் கூகுளாண்டவர் கொடுத்தருளட்டும்!
மற்றபடி, சும்மா விறுவிறுப்புக்குக் கண்ட கண்ட வார்த்தைகளைப் போடும் தெறமையை பாவண்ணா ராவண்ணா ரகத் தமிழ் எழுத்தாளர்கள் கைவிட்டுத் தொலைக்கும்போது மட்டுமே அவர்களிடமிருந்து எதையாவது உண்மையில் எதிர்பார்க்கலாம்! விளங்காமண்டை டூ விளாங்காமண்டை என்று தொடருக்குப் பெயர் வைத்திருக்கலாம்! (பேருக்குக் காப்பிரைட்(c))!

சசியின் பதிவில் யாரோ சொல்லியிருந்ததுபோல, சசி, உங்களை மாதிரி ஆட்களெல்லாம் புத்தகம் எழுதாமல் என்ன செய்கிறீர்கள்?!!

Anonymous said...

துரோகி கதிர்காமரை அதுவும் இலங்கை சிங்கள அமைச்சரவைவில் பெரிய ஆளாக இருந்த தமிழரை புலிகள் போட்டு தள்ளியதை சொல்லவில்லை. புலிகள் போன்ற வீராதி வீரர்களை பாராட்டி எழுதவில்லை அதுவும் பங்கர் ராசா பிரபாகரன் புகழ்பாடவில்லை.

போய்யா நீயும் உன் பதிவும்

thiru said...

//சுந்தரவடிவேல் said...

சசியின் பதிவில் யாரோ சொல்லியிருந்ததுபோல, சசி, உங்களை மாதிரி ஆட்களெல்லாம் புத்தகம் எழுதாமல் என்ன செய்கிறீர்கள்?!!//

நன்றி சுந்தரவடிவேல்!

உண்மை தான். எழுத வேண்டிய அவசியம் வருகிறது. இனப் பிரச்சனை பற்றி அவ்வப்போது எழுதி வருவதுண்டு. ஈழம் பற்றிய தொடர் அல்லது புத்தகம் விரைவில் செயல் வடிவம் பெறும்.

Vinitha said...

good post.

see my take here..

http://vinthawords.blogspot.com/2008/11/blog-post_6450.html

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com