Monday, November 03, 2008

ஈழப்பிரச்சனையில் தமிழக/இந்திய முரண்கள்-4

ந்தியா கடந்த 20 ஆண்டுகளாக இலங்கை அரசியல் சட்டத்தின் 13வது திருத்தத்தை அடிப்படையாக கொண்டு, அதிகாரங்களில்லாத மாகாண கவுன்சில்களை தமிழர் இனப்பிரச்சனைக்கு தீர்வாக முன்வைக்கிறது. தற்போதைய இந்திய-இலங்கை கூட்டறிக்கையும் இதனையே தீர்வாக வலியுறுத்தியுள்ளது. தமிழர்களின் உரிமைகளுக்கு பதிலாக உணவு பண்டங்களை மட்டும் திரட்டும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ள தமிழக முதல்வர் கலைஞரும் இலங்கையின் இறையாண்மைக்குள் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்ற இந்தியாவின் கருத்த ஆதரிக்க ஆரம்பித்திருக்கிறார். இலங்கையின் 13வது அரசியல் சட்டத்திருத்தத்திற்கு அடிப்படையாக அமைந்தது இராஜீவ் அரசு அரங்கேற்றிய இந்திய-இலங்கை ஒப்பந்தமாதலால் இந்தியாவின் சுயநலத்தில் தமிழர்களின் உரிமைகள் காவுகொடுக்கப்படுகின்றன. திம்புவில் துவங்கிய பேச்சுவார்த்தை முதல் இன்று வரையில் இந்தியா வலியுறுத்தும் தீர்வுகள் தமிழர்களுக்கு சிங்கள பேரினவாத அடக்குமுறையிலிருந்து எந்த அரசியல் உரிமையையும் பெற்றுத் தருவதாக அமையவில்லை.


இந்திய அரசின் ஏற்பாடுகளுடன் திம்புவில் 1985ல் அனைத்து ஆயுத போராளி குழுக்களும், மிதவாத அரசியல் எண்ணம் கொண்டிருந்த தமிழர் விடுதலை கூட்டணியும் கூட்டாக கலந்துகொண்டனர். இப்பேச்சுவார்த்தையில், “தமிழர்கள் தனித்துவமான தேசிய இனம், வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு வரலாற்று ரீதியான தாயக நிலம் மற்றும் தமிழர்களுக்கு அதன் மீதான உரிமையுண்டு, தனித்துவமான தேசிய இனமென்ற அடிப்படையில் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையுண்டு, அனைத்து மனித உரிமைகள் மற்றும் குடியியல் உரிமைகள் தமிழர்களுண்டு.’ ஆகிய நான்கு அடிப்படை அம்சங்களை உறுதி செய்ய வலியுறுத்தினர். முதல் மூன்று அம்சங்களையும் இலங்கையின் இறையாண்மையை மீறுவதாக இலங்கை அரசின் பிரதிநிதிகள் நிராகரித்தனர். பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போதே, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி 17 ஆகஸ்ட் 1985ல் வன்னியில் தமிழ்மக்களை இராணுவம் வெட்டி படுகொலை செய்தது. அதை தொடர்ந்து தமிழர் தரப்பு கூட்டாக பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறியது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டமுடியாததால் இராஜீவ் அரசின் அதிகாரிகள் மற்றும் உளவு நிறுவனங்களது கோபம் விடுதலைப்புலிகள் மீது பரவியது.


தெற்காசிய பிராந்தியத்தில் பூகோள, இராணுவ, அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் இந்தியா கவனமாக இருக்கிறது. இலங்கையில் அன்னிய நாடுகளின் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நிலைகள் உருவாவதை இந்திரா காந்தியின் ஆட்சி காலம் முதல் இந்தியா தனது பாதுகாப்பிற்கு எதிரானதாக கருதுகிறது. இதையுணர்ந்து சிங்கள இனவெறிக்கு சாதகமாக பயன்படுத்திய இலங்கையின் சூழ்ச்சிமிக்க ஆட்சியாளர்கள் ஜெயவர்த்தனே முதல் இராஜபக்சே வரையில் இந்தியாவின் இராணுவ, பொருளாதார பலன்களை பெற்று வருகின்றனர். இலங்கை விசயத்தில் கவனமான, கடுமையான அணுகுமுறையை கொண்டிருந்த இந்திராவின் படுகொலைக்கு பின்னர் புதுடில்லியின் அணுகுமுறை திசைமாறியது. இந்திராவுக்கு இருந்த உலக அரசியல் அனுபவமும், அதிகாரிகளுக்கு கட்டளைகள் பிறப்பித்து செயல்படும் தலைமைத்துவமும் வசீகரம்மிக்க இராஜீவிடம் இருக்கவில்லை. அதிகாரிகளின் இழுப்புக்கு அசையும் நிலையில் இருந்தது இராஜீவின் நிர்வாகம். இலங்கை விசயத்தில் இனப்பிரச்சனையிலிருந்து நழுவிடும் போக்கை கடைபிடிக்க துவங்கினார் இராஜீவ். அதற்காக எப்படியாவது உடன்பாடு ஒன்றை எட்டும் அவசரம் ராஜீவை ஆட்கொண்டது.


இந்த நிலையில், ஏப்பிரல் 16, 1987 சுவீடன் ரேடியோ அறிவிப்பு செய்தது முதல் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் ராஜீவ் அரசை உலுக்க ஆரம்பித்திருந்தது. இந்து நாளிதழிற்காக ஜெனிவாவிலிருந்து பணியாற்றிய சித்ரா சுப்ரமணியம் நடத்திய புலனாய்வு கட்டுரைகள் (அரசியல் அழுத்தம் காரணமாக ‘நேர்மையான’ இந்து பத்திரிக்கை இக்கட்டுரைகளை பிரசுரம் செய்யவில்லை.) இராஜீவை அசைத்து போட்டிருந்தது. இராஜீவிற்கு அரசியல் நெருக்கடிகளிலிருந்து மக்களை திசைதிருப்ப வாய்ப்பு தேவையானது. தனது அன்னையாரை போன்ற அனுபவமில்லாததால் அதிகாரவர்க்கத்தின் பிடிகளுக்குள் சிக்கிய இராஜீவ் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் தஞ்சமடைந்தார். இலங்கை இனப்பிரச்சனையில் தீர்வை உருவாக்கியதாக தனது ஆளுமையை உருவாக்கி போபர்ஸ் குற்றச்சாட்டுகளின் அரசியல் நெருக்கடிகளிலிருந்து தப்பிக்க விரும்பினார் இராஜீவ். இராஜீவ்-ஜெயவர்த்தனேயின் இந்திய-இலங்கை ஒப்பந்தம் ‘இந்தியாவின் பிராந்திய நலனையும்’, இலங்கையின் சிங்கள பேரினவாத நலன்களையும் அடிப்படையாக கொண்டு முரண்பாடுகளுடன் உருவாக துவங்கியது.

ஒப்பந்தம் உருவாகும் நிலையில் விடுதலைப்புலிகளின் நிலைபாடு பற்றிய சந்தேகம் புதுடில்லியின் ‘சவுத் பிளாக்’ அதிகாரிகளையும், உளவுத்துறை அலுவலகங்களையும் படர்ந்தது. அவசரமாக இந்திய பிரதமர் பிரபாகரனை சந்திக்க விரும்புவதாக புதுடில்லிக்கு புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனை அழைத்து உத்தரவு பறந்தது. அவசரமாக அழைக்கப்பட்டு புதுடில்லியில் வந்து சேரும் வரையில் பிரபாகரனுக்கு ஒப்பந்தம் பற்றிய தகவலை தெரிவிக்கவில்லை. வரைவு ஒப்பந்தத்தின் நகல்கள் கூட வழங்காமல் ஜே.என்.தீட்சித் விடுதலைப்புலிகள் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனுக்கும், அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கத்திற்கும் புதுடில்லியில் வைத்து படித்து காட்டினார். ஜே.என்.தீட்சித், ஜி.பார்த்தசாரதி ஆகிய அதிகாரிகளும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவுமாக பின்னிய தந்திரவலை ஒப்பந்தத்திற்கு உடன்பட பிரபாகரன் மறுக்கவே புதுடில்லியில் அசோகா விடுதியின் அறையில் சிறைவைக்கப்பட்டார். பிரபாகரன் சம்மதம் இல்லாமல் ஒப்பந்தத்தை வலுகட்டாயமாக திணிக்க ஆரம்பித்தது இராஜீவ் அரசு. இராஜீவே நேரடியாக பிரபாகரனை சந்தித்து வாக்குறுதிகள் வழங்கினார்.


இவ்வொப்பந்தம் பற்றிய தங்களது நிலைபாட்டை ஏற்கனவே இந்திய வெளியுறவுத்துறை செயலாளருக்கு தெரிவித்திருந்தது TULF (Tamil United Lieration Front). பிரதமர் இராஜீவ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட கொழும்பு புறப்பட தயாரான சூழலில் 28 ஜூலை 1987ல் தமிழர்களது நலனுக்கு எதிரானது என்பதை TULF இராஜீவுக்கு கடிதம் வழியும் தெரிவித்தது. அக்கடிதத்தில் கீழ்காணும் அம்சங்கள் வலியுறுத்தப்பட்டன:

  1. மத்திய அரசில் தமிழர்களது உரிமை பற்றியும் பேசப்பட வேண்டும். இதற்காக இந்திய அரசியலமைச்சு சட்ட நிபுணர்கள் பேச்சுவார்த்தைகளில் உதவ கலந்துகொள்ளல்.
  2. பயங்கரவாத தடுப்பு சட்டம் மற்றும் அவசரகால ஒழுங்குமுறைகளில் குற்றப்படுத்தப்பட்ட அல்லது தண்டிக்கப்பட்ட அனைவருக்கும் பொது மன்னிப்பு.
  3. இராணுவ, துணை இராணுவ படைகளின் வன்முறைகளுக்கு ஆளானவர்களுக்கும், இனக்கலவரத்தில் பாதிப்படைந்தவர்களுக்கும் முறையான நிவாரணங்கள் வழங்குதல்.
  4. 1982ல் உருவாக்கிய வாக்காளர் பட்டியல் இடப்பெயர்வால் தமிழர்களது பங்கேற்பில்லாமல் உருவாக்கப்பட்டது. எந்த தேர்தலும் 1982ன் பதிவு ஆவணங்களை அடிப்படையாக வைத்து நடைபெறல்.
  5. திரிகோணமலை துறைமுக நிர்வாகம் மற்றும் அதற்கான பயன்பாட்டிற்கான நிலத்தின் அளவு பற்றி பேசி முடிவு எடுத்தல்.


ஆனால் எவரது ஆலோசனைகளையும் கேட்கும் மனநிலையில் இராஜீவ் அரசு இருக்கவில்லை.


இரு தரப்பினருக்குள் ஏற்பட்ட இனப்பிரச்சனையை தீர்க்க தலையிடும் மூன்றாவது நாடு; இருதரப்பினரது கருத்துக்களின் அடிப்படையில் ஒப்பந்தம் உருவாகவும், இறுதி தீர்வை எட்டவும் நெறிப்படுத்தும் பணியில் மட்டுமே ஈடுபடுவது வழக்கம் (உதாரணமாக, இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையில் ஏற்பட்ட 2002 ஒப்பந்தம் நார்வே நாட்டின் பங்களிப்புடன் இந்த அடிப்படையில் ஏற்பட்டிருந்தது.) ஆனால் இனப்பிரச்சனையை தீர்க்க உதவுவதாக வந்த இந்தியா ஒரு தரப்பான சிங்கள அரசுடன் ஒப்பந்தம் செய்தது அடிப்படையில் தவறானது. ஒப்பந்தத்தை உருவாக்கும் போது பாதிக்கப்பட்ட தரப்பான ஈழத்தமிழர்கள் மற்றும் போராளிகளது கருத்துகளுக்கு சிறிதும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ‘இந்தியாவின் பிராந்திய நலனுக்காகவும்’, அரசியல் சுயலாபத்திற்காகவும் ஈழத்தமிழர்களது உரிமையை இவ்வொப்பந்தம் வழியாக சிங்கள பேரினவாதிகளிடம் அடமானம் வைக்க துணிந்தார் இராஜீவ். இந்திய இராணுவத்தின் மோசமான மனித உரிமை மீறல்களை உருவாக்க காரணமான இந்திய-இலங்கை ஒப்பந்தம் கொழும்புவில் 29 ஜூலை 1987ல் ராஜீவ் மற்றும் ஜெயவர்த்தனே கையெழுத்துடன் நிறைவேற்றப்பட்டது.


ஒப்பந்தம் கையெழுத்தான 1987 முதல் இலங்கையின் தமிழர் இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக இவ்வொப்பந்தத்தை சுற்றி ஆப்பம் பங்கு வைத்த குரங்கு போல வருகிறது இந்தியா.


இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டுள்ள அரசியல் தீர்வுகள் என்ன? அதனால் தமிழர்களுக்கு ஏற்பட்ட/ஏற்படுகிற விளைவுகள் என்ன?


அடுத்த பதிவில்…

3 பின்னூட்டங்கள்:

ஆட்காட்டி said...

எதுக்கு இப்ப?

Great said...

இன்றைய தலைமுறை இவற்றை அறிந்துகொள்ள வேண்டும். தொடர்ந்து பதியுங்கள்.
நன்றி.

தங்க முகுந்தன் said...

பதிவுக்கு நன்றி தங்களுடன் தொடர்பு கொள்ள பதிவில் பார்வையிட்டேன்! எந்தத் தகவலையும் காணவில்லை. வரலாறுகள் மறைக்கப் படுகின்றன. தங்கள் பதிவு ஒரு ஆவணமாகத் திகழும். ஆனாலும் சில தவிர்க்கப்பட வேண்டிய விடயங்களும் இருக்கின்றன. முயற்சிக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com